அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும்
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பாகம் -12

அண்ணாவின் மனிதநேயம்
தவத்திரு குன்றக்குடி அடிகளார்

பேரறிஞர் அண்ணா அவர்கள் மனிதநேயத்தைத் தமது பிறவிக் குணமாகக் கொண்டவர். மனித நேயம் என்பது யார் மாட்டும் அன்பு காட்டுதல்; எல்லாரையும் மதித்தல்; கண்ணியப்படுத்துதல்; அனைவருடைய உரிமைகளையும் பேணிப் பாதுகாத்தல். இந்த இனிய பண்புகள் அறிஞர் அண்ணா அவர்களிடம் இயல்பாவே அமைந்தன.

அறிஞர் அண்ணா அவர்கள் கடவுள் உண்டு என்ற அணியைச் சேர்ந்தவருமல்லர்; கடவுள் இல்லை என்ற அணியைச் சேர்ந்தவருமல்லர். அறிஞர் அண்ணா அவர்களே இதுபற்றிக் கூறியதாவது.

இவ்விரு கொள்கைகளைப் பற்றி நான் அலட்டிக் கொள்ளாமல் மனித சமுதாயத்தைப் பற்றியே நினைக்கிறேன். அவர்களுக்குச் சேவை செய்யவே விரும்புகிறேன்; ஏழைகளின் சிரிப்பிலே இலைவனைக் காண முயல்கிறேன்.

இந்தச் சொற்றொடர் அறிஞர் அவர்கள் மனிதநேயத்தின்பால் கொண்டிருந்த விருப்பத்தைத் தெளிவாக நமக்குக் காட்டுகிறது.

அறிஞர் அண்ணா அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த காலம். மருத்துவர்கள் அவரை ஓய்வெடுத்துக்கொள்ளும்படி வற்புறுத்திய காலம். அறிஞர் அண்ணா அவர்கள் ஓய்வெடுத்துக்கொள்ள விரும்பாமல் தொண்டு செய்யவே விரும்புகிறார். தொண்டுக் களத்திலேயே சாவை அணைத்துக்கொள்ள விரும்புகிறார். தொண்டுசெய்ய அனுமதிக்காது ஓய்வு எடுத்துக்கொள்ள வற்புறுத்தியவர்களை நோக்கி அறிஞர் அண்ணா அவர்கள் தமக்கேயுரிய நிறைந்த உவமை மூலம் கேட்ட வினா காஞ்சீபுரம் வரதராசப் பெருமாள் திருவுலாவின் முன்பு கையில் நாதசுரம் ஏந்திக்கொண்டு ஊதாமலே வரும் நாதசுரக்கார்களைப் போல வாழச் சொல்கிறீர்களா? - என்பது, இந்த வினா. தமது நோயையும் பொருட்படுத்தாமல் மனிதகுலத்திற்குச் சேவை செய்யவேண்டும் என்ற ஆர்வம் அறிஞர் அண்ணா அவர்களிடம் இருந்ததைப் புலப்படுத்துகிறது.

அடுத்து, மனித உறவுகள் என்றால் கருத்து வேற்றுமைகள் வாராதிருக்காது. ஆனால் அவ்வழி பகைகொள்ளவேண்டும் என்பது அவசியமில்லை. மனித நேயமில்லாதவர் பகை கொள்வர், தமக்கு மாற்றாராக இருப்பவர்களை அடுதலிலும் அழித்தலிலும் முனைந்திடுவர், ஆனால் அறிஞர் அண்ணா அவர்களுக்குக் கோபம் வந்தால் மௌனமே சாதனம். பிறர் சொல்லும் பழிகளைத் தாங்கி நிற்போர் துறவிகளிலும் தூயவர் என்பார் திருவள்ளுவர். அறிஞர் அண்ணா அவர்கள் தாங்கிகொண்ட இழிசொற்களம் பழிச் சொற்களும் அளப்பில.

தம்மைச் சார்ந்தவர் யாராவது மற்றவர்களைப் பழித்துக் கூறிவிட்டால் அண்ணா பதறிப்போவார். உடனே அவர் பழித்துக் கூறப்பட்டவர்களிடம் தாம் மன்னிப்புக் கோருவார். இது அறிஞர் அண்ணா அவர்களிடமிருந்த உயரிய பண்பு. ஏன்? தம்மை முற்றாகப் பகைமையாக எண்ணிய தலைவர் பெரியார் அவர்களிடத்திற்கூட அறிஞர் அண்ணா அவர்கள் பகை கொள்ளாதது மட்டுமல்ல, பெருகிய அன்பை என்றும் கொண்டிருந்தார். அண்ணா அவர்களின் மனித நேயத்திலிருந்து பிறந்த உயரிய பழமொழி மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்பது, மனிதநேயம் உள்ள அளவும் இந்தப் பழமொழி நிலவும்; அண்ணா அவர்களின் புகழும் நிலவும்.

அறிஞர் அண்ணா அவர்களிடமிருந்து சொல்லின் செல்வர் ஈ.வி.கி. சம்பத் பிரியும் காலம். பிரிவதற்கு முன்னோடியாக திரு.சம்பத் உண்ணா நோன்பிருந்த இடத்திற்கு அறிஞர் அண்ணா அவர்கள் நேரில் சென்று சம்பத் அவர்களைச் சமாதானப்படுத்த முயல்கிறார். திரு.சம்பத் உடன்பாட்டுக்கு வரவில்லை.

தமிழ்நாட்டின் தென்கோடியிலிருந்து அன்று இரவு 11 மணிக்கு காங்சீபுரத்திலுள்ள அறிஞர் அண்ணா வீட்டிற்குத் தொலைபேசியில் அழைப்பு! ஆம் அறிஞர் அண்ணா அவர்களுக்கே அழைப்பு; அழைத்தவர் கேட்கிறார் - சம்பத்துடன் பேசிய சமாதான முயற்சி என்ன ஆயிற்று என்று! அறிஞர் அண்ணா அவர்களின் பதில்; தம்பி சம்பத் ஒத்துவரவில்லை என்பது. இரவு 11-மணி! இருபாலும் வேறு யாருமில்லை! தனிமையில் தொலைபேசியில் உரையாடல் கேட்கிறது! அந்த நேரத்திலும் கூட தம்பி சம்பத் என்ற இனிய பண்பு நிறைந்த தொற்களையே கூறினார். இதுவன்றோ மனித நேயம்!

மேலும் திரு.சம்பத் பிரிந்து சென்றது தொடர்பாகப் பத்திரிகைகளுக்குக் கொடுத்த செய்தியில் எங்கிருந்தாலும் வாழ்க! என்றே கூறினார். மனித நேயம் மிக்கவர்கள் எந்த சூழ்நிலையிலும் வாழ்த்துவார்கள்.

அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுவிட்டார். ஏற்றுக்கொண்ட நாளன்று கோட்டையில் அரசின் அனைத்து அலுவலர்களையும் கூட்டி, ஓர் அறிய உரை நிகழ்த்தினார்.

இந்த உரை வரலாற்றுச் சிறப்புமிக்க உரை. அந்த உரையில் அரசு அலுவர்களை அண்ணா அவர்கள் கேட்டுக்கொண்டார். கோப்புகளைத் தேக்கி வைக்காதீர்கள்! கோப்புகளைத் தேங்க அனுமதிக்காதீர்கள்! நீங்கள் கையாண்டு இயக்குவது வெறும் கோப்புகள் மட்டுமல்ல. ஒவ்வொரு கோப்பிலும் மனித உயிர்களின் வாழ்க்கை ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருக்கிறது. என்பதை அன்பு கூர்ந்து மறந்துவிடாதீர்கள். ஒவ்வொரு கோப்பின் பின்னணியிலும் ஓர் உயிரின் வாழ்க்கை இருக்கிறது என்பதைத மறந்து விடாதீர்கள்! என்று கூறினார்.

ஆளும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட தலைவரின் உரை இது. அறிஞர் அண்ணா அவர்களின் மனித நேயத்திற்கு இதனினும் சான்று வேண்டுமோ?

தலைவர் அண்ணா
சர்.ஏ.ராமசாமி முதலியார்

எனது வாழ்நாளிலேயே மிகவும் மகிழ்ச்சி தரத்தக்க ஒரு நிகழ்ச்சியை இதுபோது நடத்திவைக்கிறேன்.

மக்களுக்காக வாதாடுகின்ற மக்கள் தொண்டன் இம்மாநிலத்தையிம் இதனை அடுத்துள்ள(தென்னக) மாநிலங்களிலும் விறர்கண்டு மதிக்கும்படி அவற்றைத் தலை நிமிரச் செய்த ஒருவரது சிலையை இப்போது நான் திறந்து வைக்கிறேன்.
தமிழ்ப் பேச்சாற்றலில் அவர் எல்லோரையும் மீறியவர்; ஆங்கிலத்திலும் அவருக்கிணையானவர் உலகில் இல்லை. நாநலம் வாய்ந்த பேச்சாளர் அவர். நாநலம் மட்டும்சிலரிடம் இருக்கக்கூடும. ஆனால் கருத்தாழத்தோடு கூடிய நாநலம் காண்பதரிது. அண்ணாவின் சொற்பொழிவிலெல்லாம் கருத்துக்கள் குவிந்திருக்கும். இதுவே ஒருவரை மற்ற மனிதர்க்கெல்லாம் தலைவராக்குகின்றது.

இன்று அவர் எல்லா மக்களின் உற்சாகமிக்க நல்லாதசினையும் பெருமதிப்பினையும் பெற்ற திகழ்கிறார். அண்ணா என்ற அழைக்கப்படுகின்ற அவர் ஓர் சர்வாதிகாரியல்ல என்பதால் எல்லோரும் அவரை அண்ணா என்றழைக்கும்போது அவர்கள் உள்ளத்திலெல்லாம் இழையோடுவது பிரிக்க முடியாத சகோதரப் பாசம்.

அண்ணாவின் பாதை கடுமையானதாக இருந்தது. சோதனைமிக்க நாட்களை அவர் கடந்து வந்தார். எல்லாவற்றையும் விட்டுத் தனிமையின் ஒதுங்கிவிட அவர் எண்ணியதுண்டு. ஆனாலும் தனது விடாமுயற்சி காரணமாக இன்றைய உயர்நிலையை அவர் அடைந்துள்ளார். ஆபிரகாம் லிங்கன் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும்போது மரக்குடியிலிருந்து வெள்ளை மாளிகைக்குச் சென்றார் என்பார்கள். அதுபோல அண்ணா வாழ்க்கையும் அமைந்துள்ளது.
மொழி குறித்து அண்ணாவும் அவரது அமைச்சரவையினரும் காட்டிவருகிற உறுதிக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். சர்வாதிகாரியாக அல்லாமல் அன்பு அண்ணனாக இருக்கும் முதலமைச்சருக்கு ஆதரவாக அவர் பக்கம் நின்று அவர் காட்டும் வழியில் தமிழ் மொழியின் புகழுக்கு தமிழ்ச் சமுதாயத்தின் புகழுக்கு உழைத்திடுவோம்.

இயற்கையின் அருளால் அண்ணா தலைமையில் இயங்குகிற ஒரு நல்ல அரசாங்கத்தை இங்கே பெற்றிருக்கிறோம். இல்லாவிட்டால் நம்மால் அழிவைத் தவிர்க்க முடியாது. அவர் எது சொன்னபோதிலும் அது குறித்தெல்லாம் கவலைப்படாது மேல்நோக்கிச் செல்வோம். காலத்தின் தேவையை நிறைவி செய்ய வந்த தலைவர் அண்ணா.

நம் தலைவர் - ஆமாம் அண்ணா உங்களுக்கு மட்டுமில்லை எனக்கும் தலைவரே - அவருக்கு விதிக்கப்பட்டுள்ள அந்த உயர்நிலையை அடைந்திடவேண்டும். இந்தியா முழுவதற்கும் தலைமைப் பொறப்பை அண்ணா ஏற்றிடும் அந்நாளைக் காண நான் ஆவலுள்ளவனாக இருக்கிறேன்.
(இரண்டாம் ஆண்டு தமிழ் மாநாட்டையொட்டி (01.01.1968) சென்னை அண்ணா சாலையில் பேரறிஞர் அண்ணாவின் சிலையைத் திறந்துவைத்து ஆற்றிய உரையிலிருந்து)

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai