இளங்கோ அடிகள்
பேரறிஞர் அண்ணா
இல்லற இன்பம் மாண்புடையது என்பதைச் சுவைபட எடுத்துக்காட்டும்
விழாவாக, பொங்கற் புதுநாள் இருப்பதனால்தான், தமிழகத்தில் புதியதோர்
எழில் அந்நாளில் பூத்திருந்தது.
வேட்டுச் சத்தம், கொட்டு முழக்கு இல்லை!
தமிழர் திருநாள் அந்த ஊருக்கே மகிழ்ச்சி தரும்
நாள்! எனவே, ஊர் மக்கள் அனைவரும் விழாக்கோலம் பூண்டிருக்கும் அந்நாள்,
உழைப்புக்கும் அறிவுக்கும், எழிலுக்கும், ஏற்றத்துக்கும், ஊர்
மன்றம் புகழ்மாலை சூட்டிப் பெருமைப்படுத்த வேண்டும்.
களம் சென்று மட்டுமே, உள்ள உரம் காட்ட வேண்டும்
என்று தமிழர் இருந்தார் இல்லை. ஊரார் கண்டு மகிழ, தம்மையொத்தவர்
வியந்திட, வீர விளையாட்டுகளில் ஈடுபட்டு, வெற்றி பெற்று விருது
பெற்றனர். விழாக்களிலே இவை தனிச் சிறப்பான இடம் பெற்றன.
விழாக்களில் ஈடுபடும்போது புது எழிலைப் பெற்றனர்
- அணிமணியாலும், ஆடை வகையாலும் ஆடவரும் ஆரணங்குகளும்.
வாழ்க்கைக் கலையை வடித்தவர்
கசங்கிய கண்ணினராக, கூப்பிய கரத்தினராக, வாழ்வைச் சுமையாகக் கருதிக்
காதலை வெறுத்து மாதரை மாயப் பிசாசு என்று இழித்துக் கூறி, தமிழர்
வாழ்ந்தார் இல்லை.
வாழ்க்கையும் ஒரு கலை என்று அவர்கள் அறிந்திருந்தனர்.
வாழ்க்கைக் கலையினை விளக்கத் தனியாக நூலென்று
தந்தாரோ எனில் இல்லை. ஆனால், அறநெறி உரைத்திட தமிழ்ப் புலவோர்
ஆக்கி அளித்த காப்பியங்களிலேயே, மக்கள் வாழ்ந்த வகையினை அழகுற
எடுத்துக் கூறம்போது, கலை அறிவுடன் அவர்தம் வாழ்க்கை அமைந்து இருந்ததை
எடுத்துக் காட்டினர்.
பூம்புகார், மதுரை மாநகர் இரண்டிலேயும், மாந்தர் வாழ்க்கை - சிறப்பாக
மகளிர் வாழ்ககை - இருந்த விதத்தை, படம் பிடித்துக் காட்டும் பான்மையிலே
தந்தவர் துறவி இளங்கோவடிகள்.
இளங்கோவடிகள், மதுரை மகளிர் மலர் அணிந்து மகிழ்ந்தனர்
என்று மட்டும் அல்ல; மலர்கள் பல வண்ணங்களாக உள்ளன அல்லவா? அவற்றினை
ஒன்றாகத் தொடுத்து அணிந்தனர் என்பதையும் கூறுகிறார்.
செல்வம், சீர், கலை உணர்வு, வாழ்க்கையை வெறுத்திடாத
தன்மை, இவ்வளவும் விளங்கும் வகையில், மதுரை மகளிர் - முல்லை, குவளை,
நெய்தல், மல்லிகை, செங்கழுநீர்ப்பூ முதலியவற்றை முத்தாரங்களுடன்
தொடுத்து அணிந்தார்கள் என்று இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் கூறுகிறது.
வாழ்க்கை இவ்விதம் இருத்தல்தான் முறை; மதுரை மகளிர்
இப்படி இன்பமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இதனை அடிகள் எப்போது
காட்டுகிறார்? கண்ணகி, புதுவாழ்வு தொடங்க, பொருள் தேட முயலும்
நோக்குடன் கோவலனுடன் (மதுரை) வருகிறபோது!
காலத்துககு ஏற்றபடி தம்மை அழுகுபடுத்திக் கொள்வது,
நுண்ணிய கலை உணர்வைக் காட்டுவது ஆகும்.
இப்போது ஜப்பான் நாட்டுப் பெண்கள் தமது இல்லத்தையும்,
தம்மையும், வண்ணங்களின் வகை அறிந்து, அழுகுபடுத்தும் நுண்களை மிகுதியாகப்
பெற்றவர்கள் என்று கண்டறிந்தோர் கூறுகின்றனர்.
அத்தகைய கலையுணர்வு மதுரை மகளிருக்கு இருந்திருக்கிறது
என்பது வாடைக் காலத்துக்கு ஏற்ப, அரத்தப் பூம்பட்டையை மகளிர் அணிந்திருந்தனர்
என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறுவதிலிருந்து தெரிகிறது.
இலக்கியம் படைத்த துறவி
நாடாளும் உரிமை பெற்ற இளங்கோ, துறவி ஆனார்.
நான், துறவிகளைச் சமுதாயத்தின் தொல்லைகள் என்று
கருதுபவன்.
எனினும் இளங்கோவின் துறவு, காவி உடுத்திக் கானகம்
சென்ற கதையாக முடியவில்லை; கவர்ச்சி மிகுந்த காவியத்தை இயற்றித்
தரும் கனிவாக இருந்தது.
காவி அணிவது காற்பலம் கஞ்சாவுக்கு என்ற முறையிலே
உள்ள துறவறத்தையே நாங்கள் கண்டிப்பவர்கள் ஆகையால், இளங்கோ போன்ற
இலக்கியக் கருத்தாக்கள் துறவியாக இருந்தனர் என்பதற்காக அவர்தம்
அருமை பெருமையினை மறக்கமாட்டோம்
(திராவிட நாடு - 08.07.1945 - தொகுப்பு:
இளஞ்செழியன்)