சிறப்புக் கட்டுரைகள்

அண்ணாதுரையின் துணிவு
பெரியார் ஈ.வெ.ரா.

"நமக்குள் இந்து மதம் சகலத்திலும் பரவி சதா பிரசாரத்தினால் நம்மை அடிமைகொண்டுவிட்டது. கண்ணிலும், கருத்திலும், செவியிலும், வாக்கிலும், நாக்கிலும், எல்லாவற்றிலும் இடையறாமல் லீலை செய்துகொண்டே இருக்கிறது. இவற்றால்தான் இந்து மதத்திற்கு அவ்வளவு பலமிருந்து வருகிறது. அந்த பலத்தை மாற்றவேண்டுமானால் அதற்கேற்ற எதிர்ப்பிரசாரம்தான் தக்க மருந்தாகும்.

அப்படிப்பட்ட பிரசாரங்கள் நடத்துவதில் 'சந்திரோதயம்' போன்ற நாடகம் நடத்துவது மிக முதன்மையானதாகும். இதை நான் பத்து பன்னிரண்டு ஆண்டு காலமாகவே சிந்தித்து சிந்தித்து ஒன்றும் சரியாய் கை கூடாமல், இப்போது தோழர் அண்ணாதுரை அவர்கள் துணிவோடு கிளம்பி, முகத்திற்குச் சாயம் பூசிக்கொண்டு, மேடையேறிப் பாவலாப் போடவும், அதை ஒரே சமயத்தில் 5,000 மக்கள் பார்த்துக் களிக்கும்படியான நிலை ஏற்பட்டிருக்கிறதையும் பார்த்து நான் பெருமை அடையாமல் இருக்க முடியவில்லை.

உண்மையைச் சொல்வதானால், அண்ணாத்துரையின் சந்திரோதய நாடகம், அதைப் பார்த்த மக்களுக்கு வெகு உணர்ச்சியாகவும் அறிவுக்கு நல் விருந்தாகவும், மானத்திற்கு உயர்தர வழிகாட்டியாகவும் தொடக்கம் முதல் முடிவு வரை விளங்குகிறது என்பது சிறிதும் மிகைப்படக் கூறியதாக ஆகாது"


தமிழ்க் கனல்

சுத்தானந்த பாரதி

தோழர்.அண்ணாத்துரையைக் கண்டதில்லை. கற்றதுண்டு. அவர் தனித் தமிழ்க் கனல்; திட்ப நுட்பமான கொல்லாளர்; றுமிக்கச் செயலாளர். அவர் உள்ளம் தமிழர் உள்ளம், உணர்ச்சி வெள்ளம். அவர் உரைகள் தமிழர் மதிப்பைபும், அம்மதிப்பைக் காக்கும் கொதிப்பையும் உண்டாக்கும் தீப்பொறிகள். விரையில் அவர் தமிழ் உரிமையைக் காக்கும் அண்ணாவாக விளங்குவார்.

இன்று தமிழுலகம் தமிழ் உணர்ச்சி நிரம்பியுள்ளது; தனித் தமிழ் மலர்கள் தோன்றுகின்றன. ஒவ்வொரு தமிழனும், இளஞ்செழியனும், திருமாவளவனும் ஆகவேண்டும். தமிழன் தலை நிமிர்ந்து, தன் உறுதியுடன் இந்நாட்டில் தன்னுரிமை நாட்ட முந்துக; இதன்பால் அண்ணாத்துரையின் சொற்கனல் தமிழரை உந்துக!

என் தாய் வாழ்க!

திராவிடர் பொக்கிஷம்
கைவல்யம்

அண்ணாதுரையின் பேச்சை என்னால் கேட்க முடியவில்லை. எனக்குக் காது செவிடு. அவர் எழுத்தைப் படிக்கிறேன். ஊன், உயிர் கலந்து உவட்டாமலே இருக்கிறது. அண்ணாதுரையின் கண், மூக்கு, காவிப்பல், குட்டை, நெட்டையைப்பற்றி வருணிப்பதில் கஷ்டமில்லை. அவர் புத்தியின் விலாசமும், அறிவின் சக்தியும் என் கூட்டத்தில் யாருக்கும் இருந்ததில்லை. அவர் நமக்கு ஓர் பொக்கிஷம்தான். இது வரையிலும் கிடைக்காததுமாகும்.

இப்பொழுதுள்ளக் கூட்டுறவின் சந்தோஷத்திலேயே அவர் திருப்திப் படுவதாயிருந்தால் அது விசனிக்கக் கூடியதே. மேலே சஞ்சரிக்கவேண்டியவன் மேலே சஞ்சரிக்கவேண்டும். காலமும், சமயமும் வீணே போகிறது. புது உலகத்தில் அவருடைய பிரதிமை பதிய வேண்டிய காலமிது.

அவருடைய வளர்ச்சி அவரிடமிருந்தே வளரவேண்டும். அதைக் கேட்டும், கண்டும், நான் திருப்தியடைய வேண்டும்.

அண்ணாதுரையை நான் திட்டிக்கொண்டேயிருக்கிறேன். ரஸ்கின் என்று ஒரு மேதாவி மேனாட்டிலிருந்தார். அநேக பெரிய மனிதர்கள் அவரிடம் வந்து புத்திமதி கேட்டுக்கொண்டு போவார்களாம். திண்ணையிலமர்ந்திருக்கும் அவர் தகப்பன் வருகிறவர்கள், போகிறவர்களிடம் "என் பிள்ளைக்குக் கொஞ்சம் புத்தி சொல்லிப் போங்கள்" என்பாராம். அதுபோல என்னிடம் வருகிறவர்கள், போகிறவர்களிடம்"அண்ணாதுரைக்குக் கொஞ்சம் புத்தி சொல்லுங்கள்" என்று சொல்லுகின்ற எண்ணத்தில் உடையவன் நான்.

என் காலத்தில், இக்காலத்தே போன்ற உணர்ச்சி மிக்க இளைஞர்கள் மிகக் குறைவு. புரோகிதன், சாஸ்திரி, புலவன், மதவாதி ஆகியவர்களோடு நாற்பத்தைந்து வருடகாலம் ஒருவித உதவியுமில்லாமல் போரிட்டேன். உடல் சோர்ந்தது. இனி எல்லாம் இளைஞர்கள் பார்த்துக்கொள்ளவேண்டியது. இளைஞர்களுக்கு உற்ற வழிகாட்டியாய் அண்ணாதுரை விளங்குவார் என்பது என் ஆசை. வாழ்க தமிழ்! வாழ்க அண்ணாதுரை!

நன்றி: திராவிடப் பாரறை 1948-ல் வெளியிட்ட அறிஞர் அண்ணவைப் பற்றி அறிஞர்களின் பாராட்டுக் கட்டுரைகளின் தொகுப்பு நூலிலிருந்து(அறிஞர் அண்ணாதுரை)


முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Chennai, Tamil Nadu.