அண்ணா
போற்றிய பெருமக்கள் வரிசையில் - 4
அந்த அன்னக்காவடி
பேரறிஞர்
அண்ணா
(திராவிடநாடு)
ஆறு
குழந்தைகள்! அன்பு மனைவி! ஓயாத அலைச்சல்! நிரந்தரமான தொழிலோ,
குடும்பத்துக்குப் போதுமான வருமானமோ கிடையாது. அலைந்து திரியும்
ஒரு அன்னக்காவடி. அவனுக்கு அரைப்பட்டினி நன்றாகத் தெரியும்
– கடன் வாங்கிவிட்டுக் கலங்குவது, கடனுக்காக அலைவது அவ்வளவும்
பழக்கம். அவனுடைய, குடும்பத்தின் சுகத்தை மட்டும் கவனிக்க
அவன் வேலை செய்திருந்தால், கஷ்டமே இருக்கக் காரணமில்லை.
ஒப்பற்ற புத்தி கூர்மை – இத்துடன் ஓயாத உழைப்பு – இவ்வளவி்ல்
பதினாயிரத்திலோர் பாகம், தன் குடும்பத்துக்காகப் பயன் படுத்தியிருந்தால்,
வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். அவனும் "அன்னக்காவடி"
என்று, சொர்ணமுலாம் பூசப்பட்டவர்களால் நையாண்டி செய்யப்பட்டிருக்கமாட்டான்.
அவன் வாழ்ந்திருக்க முடியும், நிம்மதியாக, ஏதாவதோர் அலுவலகத்திலே
– அன்பு மனைவு மகிழ, குழந்தைகள் சந்தோஷமாக இருக்க. |
|
மூடர்கள்கூட வாழ்ந்தனர் – அவன் பார்த்துக்
கொண்டு தான் இருந்தான். பேதைகள், மேதைகளை விலைக்கு வாங்குவதைப்
பார்த்தான். பிழைக்க மார்க்கமற்றவன் என்ற இழிசொல் தன்னைப் பற்றிக்
கூறப்படுவதையும் அறிவான். அவன் சாமான்யனுமல்லன் – எத்தனையோ அலுவலகத்துக்குப்
போதுமான நுழைவுச் சீட்டும் இருந்தது அவனிடம். பல்கலைக்கழகத்தில்
பயின்று, தத்துவ சாஸ்திரத்தில் டாக்டர் பட்டமும் பெற்றிருந்தான்.
இருந்தாலும், நிம்மதியான வாழ்வு இல்லை. நிரந்தரமான தொழில் தேடிக்
கொள்ளவில்லை. அந்த அறிவாளி அன்னக் காவடியாகவே அலைந்து வந்தான்.
ஏன்?
ஆறு குழந்தைகள் கொண்டு குடும்பத்துக்காவனமட்டும் செய்யும் நோக்கம்
கொண்டிருந்தால், அவன், அலைய நேரிட்டிராது – உலகிலே உள்ள ஏழைகளை
எல்லாம் தன் குடுமபம் என்று எண்ணினான். அவ்வளவு குடும்பங்களிலும்
'வாழ்வு' மலரச் செய்யவேண்டுமென்று கருதினான் – ஆகவேதான், அந்த
மகத்தான பொறுப்புணர்ச்சி, அவனை அன்னக்காவடியாக்கிற்று.
ஆனால் எப்படிப்பட்ட அன்னக்காவடி! சொர்ணமாளிகைகளிலே காணப்பட்ட
நாகரிக வர்ணஜாலங்களை எல்லாம், வெட்ட வெளிச்சமாக்கி, உலக ஏழை மக்களுக்கெல்லாம்,
வாழ வழி வகுத்துக் கொடுத்த அன்னக்காவடி! எந்த நாடும் போற்றிப்
புகழும், பொன்னேடாம் 'காபிடல்' (முதல்) எனும் புத்தகத்தைத் தந்து,
அதன் மூலம் புது உலகம் பிறக்க வழி செய்து தந்தான்.
ஆம்! அவன் அன்னக் காவடியாகத் தன்னை ஆக்கிக்கொண்டான், அவனியில்
அன்னக்காவடிகளாக யாரும் இருக்கக் கூடாது என்ற இலட்சியத்தைப் புகுத்துவதற்காக,
தான் மருந்துண்டு, குழந்தையின் நோய் தீர்க்கும் தாயின் தன்மை போல!
ஏழையின் கஷ்டத்தைப் பற்றி, பொருளாதார கஷ்டத்தைப் பற்றி, இரண்டு
வார்த்தை, தெரிந்தோ தெரியாமலோ கூறிப்பாருங்கள், உடனே, அக்கருத்து
பிடிக்காதவர், 'ஓ! இவர் பெரிய மார்க்ஸ்!' என்று வெடுக்கெனப் பேசுவார்.
காரல் மார்க்ஸ் – ஆம் – அந்த அன்னக்காவடியின்
பெயர்தான் காலர் மார்க்ஸ்! 'காபிடல்'
எனும் புத்தகத்தின் கர்த்தா – புதுப்பாதைக்குத் திசைக்கருவி தந்தவர்
அவருடைய வாழ்க்கைதான், அலைச்சல் நிறம்பியதாக இருந்தது.
ஆறு குழந்தைகளில் மூன்று இறந்து போயின – பாரம் ஓரளவு குறைந்தது
என்ற நிலை.
பத்திரிகை வெளியிட வேண்டும் பராரிக்கு விடுதலை வாங்கித்தர; துண்டு
வெளியீடுகள் அச்சிட வேண்டும், அவ்வப்போது பற்பல துரைத்தனத்தார்கள்
கொள்ளும் போக்கைக் கண்டிக்க – பிரயாணச் செலவுக்குப் பணம் வேண்டும்
– பெட்டி இல்லை பேழை இல்லை – பெரியவர்கள் சம்பாதித்து வைத்த சொத்து
இல்லை – சும்மா இருக்கவோ, முடியவில்லை. இலட்சியம், குத்துகிறது.
குடைகிறது – வேலை செய்! வேலை செய்! வீழ்ச்சியுற்ற மக்கள் அடியோடு
மாய்ந்திடா முன்பு வேலை செய் என்று தூண்டுகிறது. இந்நிலையில் காரல்
மார்க்ஸ் பல தடவைகளில் தத்தளித்தார். ஒரு சமயம், ஒரு பொது உடைமை
வழக்கு சம்பந்தமாகத் துண்டு வெளியீடு அச்சடிக்க வேண்டி இருந்தது
– பணம் வேண்டும் – என்ன செய்வார்! மழைக் காலத்து உபயோகத்துக்காக
உள்ள மேல் சட்டை ஒன்று இருந்தது – அடகுவைத்தார் அதை – துண்டு வெளியீட்டுச்
செலவுக்காக.
மனதை உருக்கும் மற்றோர் சம்பவம் – அவருடைய குழந்தை ஒன்று இறந்து
விட்டது – பிணத்தைப் புதைக்க வேண்டும் – செலவுக்குப் பணம் இல்லை
. இரண்டு பவுன் கடன் வாங்கினாராம்!
பத்திரிகைக்குத் தரும் கட்டுரைகளுக்குக் கொஞ்சம் பணம் கிடைக்கும்
– அதுதான் குடும்பத்துக்கு, உயிர் ஊசலாடும் அளவுக்காவது உதவி செய்தது.
வேறு வழியில்லை. ஆனால் அவருடைய சிந்தனையோ, வழியற்றவர், வகையற்றவர்,
வறுமையுற்றவர் என்று உலகிலே உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு "நல்
வாழ்வு" கிடைக்க வேண்டும், அதற்காகச் செய்ய வேண்டியது என்ன
என்பது பற்றியே இருந்தது.
அன்றைய அடுப்பறைக்குப் பொருள் இராது – அவரோ அரசாங்கங்களின் செல்வ
வளர்ச்சி, வியாபாரத்தினால் வரும் செல்வம், இவ்வளவும், உழைப்பின்
மூலம் கிடைக்கும் செல்வத்திலே, உழைத்தவனுக்கு ஒரு துளி கொடுத்துவிட்டு,
எத்தர்கள் தமதாக்கிக் கொண்டதேயாகும் – உலகிலே உள்ள முக்கிய செல்வம்
– மூலாதாரமான செல்வம் – உழைப்புதான் – அந்த உழைப்பைச் சிலர் உறுஞ்சுகிறார்கள்
அவர்கள் கொழுக்கிறார்கள் – பலர் உழைக்கிறார்கள், எனவே உருமாருகிறார்கள்,
என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.
எந்தப் பருவத்திலே, உடற்கட்டு வளரத் தக்க வாழ்க்கைச் சுகம் தேவையோ,
அந்தப் பருவத்திலே, எட்டு ஆண்டுகாலம், அவரை வறுமை கொட்டிற்று,
தாங்கிக் கொண்டார். ஆனால் உடல் நலம் தகர்ந்துவிட்டது. நாற்பதாம்
வயதிலே காரல் மார்க்ஸ் கிழவராகிவிட்டார் – உடலிலே கட்டு கிடையாது
– பட்டினி உழைப்பு – பணம் இல்லாததால் மிக மலிவான புகையிலை வாங்கிப்
புகைப்பிடித்ததால் நோய். அவர் தேய்ந்து போனார்.
வறுமையின் வேதனையைத் தாங்கித் தகர்ந்துபோன காரல் மார்க்சுக்கு,
அவருடைய நண்பன், செல்வக் குமாரன் என்ஜல்ஸ் உதவி செய்தான் – வாழ்க்கைக்கு
நிம்மதி தரும் பண உதவி தந்தான். ஆனால், எட்டாண்டுகள் பட்ட கஷ்டத்தால்,
உடல் நலம் பட்டுப் போனது, துளிர்த்துத் தழைக்க முடியவில்லை.
'காபிடல்' புத்தகம் அவருடைய சக்தி அவ்வளவையும் சூறையாடிவிட்டது.
அந்த அன்னக்காவடியின் அளவிடற்கரிய அறிவின் விளைவாக வெளிவந்த 'காபிடல்'
புத்தகத்தின் கருத்துதான், ஐரோப்பியாவிலே, பல்வேறு புரட்சிகளுக்கு
மூல சக்தி கொடுத்தது. 'காபிடல்' காட்டிய கருத்தை, மக்கள் மனதிலே
தூவித்தான், லெனின், ரஷியப் புரட்சியை நடத்த முடிந்தது. இன்றும்
முதலாளித்துவ அரசுகள் அவ்வளவும், அந்த அன்னக்காவடியின் அற்புதமான
ஏட்டை, ஆபத்தான கருவி என்றேதான் கருதுகின்றன.
(அறிஞர் அண்ணா - 17.11.1946)
|
Website
Designed by R.Sembian, Anna Peravai
|