நடமாடும்
அபாய அறிவிப்பு
அறிஞர் அண்ணா
என்ன அக்ரமம்! திருப்பதி மலைக்குச் சென்று வினைதீர்ப்பானுடைய
வைரமுடியைத் தூக்கிக்கொண்டு, திருவாபரணங்களைச் சூறையாடித் தடுக்க
அந்த பட்டர் கூட்டத்தைச் சிண்டு பிடித்தாட்டி, மலை மீதிருநது கீழே
உருட்டி, அட்டகாசம் செய்ததாம் ஒரு கொள்ளைக் கூட்டம். இப்படிப்பட்ட
பாவம் செய்தவர்கள் ரௌரவாதி நரகத்தில் வீழ்வார்களே என்று கூறினவர்களைப்
பார்த்து இப்போது நாங்கள் படும்பாடு, நரகவேதனையைவிட என்ன குறைந்துவிட்டது.
வநுமையெனும் அக்கினிக்குண்டத்திலே தள்ளினீர்கள், மடைமை எனும் க்கிலிட்டு
ஆட்டினீர்கள்; பஞ்சமெனும் பாம்புப் புற்றிலே புகுத்தினீர்கள்,
நோயெனும் நட்டுவக்காலி கொட்டிடச் செய்துர்கள், வேலையில்லாக் கொடுமை
எனும் இருப்புலக்கையால் நொறுக்கினீர்கள், இதைவிடக் கொடுமை நரகலோகத்தில்
இருப்பதாக நீங்கள் கூறும் கருட புராணத்தில் கூடக் காணோமே. இவ்வளவு
கொடுமைகளை அனுபவித்து, அங்கம் துடித்து, ஆவி சோர்ந்தோம், அபயமளிக்க
யார் முன் வந்தனர். எங்களுக்கும் அப்பனாமே இவர், இவருக்கு முறையிட்டோம்,
வீதியில் புரண்டோம், கோவிந்தா என்ற கூறினோம், மஞ்சளுடை தரித்தோம்,
தலையை மழுங்க மொட்டையடித்தோம்; பலன் என்ன கண்டோம். இங்கே புகுந்தோம்,
கிடைத்ததை எடுத்தோம் என்று பதில் கூறினார்களாம். இப்படியும் காலம்
வருமா?
வழிவிடு! ஓரமாக நில்! ஏ! வரட்டுத் தலைப்பயலே! சத்தம் கேட்கவில்லையா
உன் செவிட்டுக் காதிலே! ஜகத்குரு சங்கராச்சாரியார் வருகிறார் பல்லக்கிலே,
ஓரமாக நின்று சேவித்துக்கொள்.
பல்லக்கில் வருவது யாரப்பா? ஜகத்குருவா? என்ந ஜகத்துக்கு? என்
ஜகம் எது தெரியுமா? உழைத்து அலுத்து உண்ண உணவின்றி வாடிடும் மக்களின்
ஜகம். அதற்கா இவன் குரு? என்று ஆர்ப்பரித்து, எவனோ ஒரு வெறியன்,
தடுத்த பக்தனைத் தலையில் தள்ளிவிட்டு, பல்லக்கைப் பிடித்துக் குலுக்கி,
இறங்கு கீழே! நடந்துபார் உலகத்தை! வாடும் மக்களைப் பார்! உன் வேதாந்த
விசாரணையை நிறத்து, மக்களின் விசாரத்தைக் கவனி! மனிதத்தன்மை பெறு!
என்று ஜகத்குருவை ஏசி, அக்ரமம் செய்தானாம். ஜகத்குரு பயந்தோடினாராம்.
இறக்கடா தலைமீதிருக்கும் மூட்டையை. இகத்திலிருநது பரத்துக்குச்
சேதிவிடும் தூனா நீ - இந்தப் பண்டங்களைத் தின்றுதான் ங்கே உள்ள
என் மூதாதையர் வாழ வேண்டுமென்றால், அவர்கள் இறந்து அங்கு போவானேன்.
நீ உடனே அங்கு போய் அவர்களை இங்கேயே வரச் சொன்னதாகக் கூறு என்று
எவனோ ஓர் போக்கிரி புரோகிதரின் மூட்டையை அபகரித்துக் கொண்டு ஆர்ப்பரித்தானாம்.
ஏனய்யா! இது என்ன ஆபிசா, அக்கிரகாரமா? இங்கே, சர்வம் பிர்ம்மமயமாகத்தான்
இருக்கவேண்டுமா? தமிழரின் பணத்தைக் கொண்டு நடக்கும் நிலையத்திலே,
தமிழன் பங்கா இழுக்கவும், பில்லை துடைக்கவுந்தான் இடம் பெற்றானா?
ஓடுங்கள் வெளியே! காலி செய்யுங்கள் இடத்தை! என்று ஓர் பேர்வழி,
சீற்றத்தோடு கூவிக்கொண்டே ஆபீசுகளில் நுழைந்து, பிராமண உத்யோகத்ஸ்தர்களை
அடித்துத துரத்தினானாம்.
இன்னோரன்ன பிற காட்சிகள் நேரிடுமானால், சமுதாயம் எப்படி இருக்கும்,
சர்க்காரின் சுழல் துப்பாக்கிக்கு ஓய்வு கிடைக்குமா, நாட்டிலே
நிம்மதி இருக்குமா, களமாகி விடாதா, கண்றாவியும் கோரமும் தாண்டவமாடாதா?
பார்ப்பனியமெனும் பாம்பு நெளியும் பழமை எனும் படுகுழியில் வீழ்ந்து,
தத்தளிக்கம் தமிழர், தமது துன்பம் மலைபோல் இருக்கக் கண்டு, மனங்
கொதித்து, இனிப்பட முடியாது இத்துயரை என்று கருதிப் பதைத்தெழுந்து,
வந்தது வரட்டுமூ என்று துணிந்து சட்டம் சமாதானம் சாந்தி முதலியன
பற்றி மறந்து, ஆத்திரத்துக்குச் சாத்திரமேது என்று கூவிப் பசிப்புலியுடன்
போராடுவதைவிட, தண்டனையைத் தழுவிக் கொள்வோம் என்று திகைப்பால் துணிந்து,
நமது இந்நிலைக்குக் காரணமென்னவென்று கேட்டு, நாம் இவ்வளவு நொந்து
கிடக்கும்போது நோகாமல் பிழைக்க ஒரு கூட்டம் இருப்பதா என்று பதைத்துக
கனல் கக்கும் கண்ணினராய், துடிக்கம் தோளினராய், நிமிர்த்திய மார்பினராய்,
ஆத்திரத்தின் உருவங்களாகி, அழிவெனும் ஆயுதமேந்தி ஆர்ப்பரிக்க நேரிட்டால்,
நிலைமை என்னவாகும்? நினைத்தாலே பயப்படக்கூடியதாக இருக்கும், பிணங்கள்
கீழே உருளும். இரத்தம் ஆறென ஓடும. சமுதாயப்பற்றும், நாட்டு நலனுங்
கொண்ட விவேகிகள், இத்தகைய பயங்கர நாட்கள் வராதபடி, பாதுகாப்புமுறை
அமைத்து, பதைப்புக்குப் பரிகாரம் தேடிக், கொதிப்பை அடக்கத் திட்டங்களிட்டுக்,
குறை களைவர். ஆர்ப்பாட்டக் காரரோடு அந்தப் பஞ்சைகளால் என்ன முடியும்?
பயல்களை ஒடோட விரட்டமாட்டோமா? சவுக்கை எடு? தடியினல் குத்து? குதிரைப்படையை
ஏவு என்று கூவுவர். புண்பட்ட மனிதரின் பெருங்கடல், கோப அலையைக்
கிளப்பிக் கரைபுரண்டோடும்போது, இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், அலைமீது
பொத்தல் இலைகளாகிவிடுவர். கருத்தழிந்தோரோ அந்த முட்டார்களுக்கு
என்ன தெரியும்? ஏதோ இரண்டொருவர் குத்திவிடுகிறார்கள், அதுகள் கூவுகின்றன.
அவர்களின் சத்தத்தைக் காதிலே போட்டுக்கொள்ளாமல் இருந்துவிட்டால்
சந்தடி தானாக அடங்கிவிடும என்று கூறுவர், பின்னர் புலம்புவர்.
தலைமுறை தலைமுறையாகச் சமுதாயத்திலே கடைசிப் படியில் நின்றுகொண்டு
மதத்துறையிலே மடைமையைக் கட்டிப்புரண்டு அரசியலிலே அடிமையாகித்
தவித்துப் பொருளாதாரத்திலே உழைத்து அலுத்து, உணவின்றித் தவிக்கும்
கூட்டமாகிக் கஷ்டமனுபவித்துத் தற்குறிகளாய் தாசர்களாய்த் தரித்திரர்களாய்த்
திகைத்துக் கிடக்கும் தமிழரின் குறைபாடுகளை முறையீடுகளைக் கோரிக்கைகளை,
கிளர்ச்சிகளை, எச்சரிக்கைகளை, ஆரிய இனம் மதத்துறையிலும் கல்வித்
துறையிலும் அரசியல் துறையில் தனக்கிருக்கும் செல்வாக்கை நம்பிச்
செவிமடுக்க மறுத்து, உண்மையைத் திரித்து உரைப்பதுடன், உதாசீனம்
செய்வதை உண்மையில் விவேகமென்று யாரும் கூற முடியாது. நாம் மேலே
தீட்டிய பயங்கர நிகழ்ச்கிகள், என்றேனும் ஓர் நாள் எதிர்காலத்தில்,
இன்று நியாயமான முறையில் சட்ட வரம்புக்கு உட்பட்டு சமாதான நோக்குடன்
கிளர்ச்சி செய்வோரின் கல்லறைகள் மீது புல் முளைத்த பிறகோ ஏற்படின்
என் செய்வது என்ற நினைப்புடன், நாட்டுத் தலைவர்கள் நடந்து கொள்ளவேண்டுமென்பதே
நமது வோ. நமது கிளர்ச்சியின் நோக்கம் இதுவென்பதை உணராதார், நாம்
வீணாக வகுப்புவாதம் பேசுகிறோம் என்றும், விஷமம் செய்கிறோமென்றும்
கூறுவது, தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொண்வதோடு, தாங்க முடியாத
தொல்லைகளை, வருங்காலம் அடைய இப்போதே அச்சாரம் வாங்குவதாக முடியும்
என்போம். உடலுருக்கிக்கு மருந்திடாது வளர்ப்பவரும், அஸ்திவாரம்
ஆடிடக் கண்டும், மேலே மாடி கட்டுவோரும், புற்றருகே குடியிருந்துகொண்டு
நமக்குத்தான் புன்னாகவராளி தெரியுமே, பாம்பு என்ன செய்யும் என்று
எண்ணுபவரும், பாதையிலிருக்கும் பள்ளம் பச்சைக் கொடி படர்ந்திருப்பதால்
கண்ணுக்குத் தென்படாததால், பாதையில் பயமில்லை என்று கருதிப் பட்டத்தரசனின்
நடை பயில்வோரும், என்ன கதிக்கு ஆளாவரோ, அக்கதிக்கச் சமுதாயத்தைக்
கொண்டுவரும் சழக்கர்கள் இன்ற தலைவர்களென்றும், தம்பட்டமடிப்போரென்றம்
உலவுங்காரணத்தால், பிறகோர் நாள், என்னென்ன பயங்கரங்கள் நேரிடுமோ
என்று அஞ்சியே, இன்றே, இருதயத்திலே சமரச நோக்கமிருக்கும்போதே,
பேதத்தை ஒழித்துப. பிளவுகளை அடைத்துப் புண்ணையாற்றிப், புலம்புவோதைத்
தேற்றிப், பொல்லாங்கைப் போக்குவோம் வாரீர் என்று, பெரியார் ஈ.வெ.இராமசாமி
பன்னெடுங்காலமாகத் தமிழகமெங்கணும் தடிதாங்கிச் சுற்றிக் கூறிவருகிறார்.
அவர் சொல் கேட்க மறக்கம் பிரம்ம சொரூபங்கள் அவர் போன்ற தலைவர்கள்
மக்களைக் கட்டுக்குள் நிறுத்தும் நிலைமையும் மாறி, குறைதீர்த்துக்
கொள்ளக் குறுந்தடி எடுத்தலே வழி என்று கூவுவோர் கிளம்புங்காலம்
ஏற்பட்டால் என் செய்வது என்ற கவலைகொள்ள வேண்டாமா என்று கேட்கிறோம்.
பயங்கரச் சம்பவங்கள், பதைத்தெழும் பாமரரால் நடைபெற்ற சரிதத்தை
அவர்கள் மறந்தனரா? அமைதி குடிகொண்ட ஆலயமென்ற புகழ்பெற்ற ஆங்கில
நாட்டிலுங் கூட, எத்தனை எத்தனை புரட்சிகள் நடைபெற்றன. இறைவனுக்கும்
அரசனுக்கும் பேதமேது என்று கூறின நாட்டினரே, தமது மன்னனை மாளிகைக்கெதிரே
தூக்கில் மாட்டினது பொய்யா! சிறைக் கூடத்தைத் தூளாக்கி, மாளிகைகளை
மண்மேடாக்கி, மன்னரையும் தர்பார் தளுக்கரையும் கொன்று குவித்த
பிரான்சுப் புரட்சி, கற்பனைக் கதையா? உலகமே உறமியபோதும், இரத்தவெள்ளம்
பெருகியபோதும், படைகள் நடமாடிய போதும், முதலாளித்தனத்தை முறியடித்தே
தீருவோம் என்று சூள் உரைத்துச் சளையாது சமரிட்ட சமதர்மச் சிங்கம்
லெனின் தோற்றுவித்த சோவியத் நாடு, கற்பனாலோகமா? இத்தகைய சம்பவங்களைத்
தெரிந்திருந்தும், தமிழர் கிளர்ச்சியை அலட்சியமாகக் கருதித் தம்மிடம்
சிக்கிய தலையாட்டிகளைத் தட்டிக் கொடுத்துத் தமது தர்பாரை நடத்தமுடியும்
என்று தர்ப்பா சூரர்கள் இன்னமும் நினைப்பது கண்ணீரும் புன்னகையுங்
கொண்ட முகத்தினராக்குகிறது நம் போன்றவர்களை.
எனபே ஒருவரிருவராவது, உண்மை நிலைமையை உணரக் காணும்போது நமக்கு
உவகை பிறக்கிறது.
சென்னைக் கிருஸ்தவக் கல்லூரி மாணவரிடையே சொற்பொழிவாற்றிய தோழர்
டி.டி.கிருஷ்ணமாச்சாரியார், ஈ.வெ.இராமசாமி போன்றாரைக் குறித்து
அலட்சியமாக, ஏனோ தானோவென்று இருத்தல் ஆபத்தானது. ஏனெனில், கவனித்துத்
தீர்க்கப்படவேண்டிய மக்களின் மனக்குறையின் சின்னமாக ஈ.வெ.இராமசாமி
விளங்குகிறார் என்ற 19-ந் தேதி மாலை கூறினார். அவரது கூர்ந்த மதியை
நாம் போற்றுகிறோம்.
அதோ பாறை, அவ்வழி சென்றால் கப்பல் சுக்கு நூறாகும். இவ்வழி வாரீர்.
என்று கலங்கரை விளக்குக் கூவுவதில்லை. ஆனால், கடலிற்கலஞ் செலுத்துவோர்,
அவ்வொளி கண்டே தம்வழி வகுப்பர். ஆம்! அவர் சீறிக் கிடக்கும் தமிழரின்
சின்னம்! பயங்கர நாட்கள் பிறக்குமுன், ஒரு சிலரின் ஒய்யார வாழ்வுக்காக
ஒரு இனத்தை அழிக்காதீர் என்ற சீலத்தின் சின்னம்! அதை உணராதார்,
சமுதாயமெனம் மரக்கலத்தைச் சுழலிடை செலுத்திப், புயலிடை விடுத்துப்,
பாறையில் மோதவிடும காரியத்தைச் செய்யும் கயவர் என்போம். அபாய எச்சரிக்கை,
பெரியார் இராமசாமி, அதை அலட்சியமாகக் கருதுவோரிடம் அடைக்கலம் புகுவது,
ஆபத்துக்கு அச்சாரம் பெறுவதாகவே முடியும். இதனை உணர்ந்து, நல்லுரையாற்றிய
தோழரை நாம் மனமாரப் பாராட்டுகிறோம்.
(திராவிடநாடு - 24.01.1943)