சிறப்புக் கட்டுரைகள்

வால்டேர் வீசிய வெடிகுண்டு
பேரறிஞர் அண்ணா
(திராவிடநாடு)

இலண்டனும், மாஸ்கோவும், பாரிசும், வியன்னாவும் அந்தத் திருநாளை எழுச்சியுடன் கொண்டாடின. பெர்லின் நகரிலே வெற்றி விளைவு கோபுர உச்சியிலே, கெம்பீரமாகப் பறக்கவிடப்பட்டது, அந்தத் திருநாளின் கொடி பர்வேறு நாட்டவரும், தத்தமது நாட்டின் நன்னாளெனக் கொண்டாடும் விதமாக அமைந்தது, ஜூலை 14! உலக வரலாற்று ஏட்டிலே உன்னதமான இடத்தைப் பெற்றுவிட்டது. அந்நாளே, வீர பிரான்சு மக்களின் வெற்றி நாள்! எதிரி நாட்டின் மீது போரிட்டுப் பெற்ற வெற்றியா? இல்லை! கொடுமையை எதிர்த்து கொடுங்கோலை எதிர்த்து, அன்றவரை குமுறிக்கிடந்த கூட்டம், அந்நாள் வரை, அடக்குமுடிறயினால் தாக்கப்பட்டு, அடிமப்பட்டு, 'இம் 'என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம் என்ற நிலையிலே சிக்கிச் சிதைந்த நசுக்கப்பட்டு,
voltaire


நாதியற்றுக் கிடந்த மக்கள், நிமிர்ந்து நின்று, புனல் சொரிந்த கண்களினின்றும் கனலைக் கக்கி, பெருமூச்சை நிறுத்திப் பெருமுழக்கம் கிளப்பி, தருக்கரின் தாளைத் தொட்டுக் கிடந்த கரங்களிலே வாள் ஏந்தி, விடுதலை! விடுதலை! என்ற புரட்சிக் கீதம் பாடிக்கொண்டு படைபோல் திரண்டு, இடிபோல் ஆர்ப்பரித்து புயலெனக் கோபத்தை வீசி, போக போகத்திலே புரண்டு பொது மக்களைப் பொதிமாடுகளாக்கி அரசியலைக் கொடுமைக் கருவியாகக் கொண்டு, மக்களைக் கசக்கிப் பிழிந்து, அவர் தம் மானத்தை மண்ணெனக் கருதி மிதித்து, செருக்கு நிறைந்த சீமான்கள், எதேச்சாதிகாரம் செய்து வந்ததை ஒரே அடியில், ஒரே நாளில், ஒரே பெரும் புரட்சியிலே, அடித்து நொறுக்கி உருத் தெரியாதபடி அழித்த நாள் அந்த ஜூலை 14!

எல்லோரும் இந்நாட்டு மன்னர்! வலியோர் சிலர் எளியோர்தமை வரையே புரிகுவதா? மகராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா? என்ற முழக்கம், கிளம்பின நாள்! முகாரி முடிந்து அடாணா ஆரம்பபமான நாள்! மாடப்புறா வல்லூறைத் துரத்திய நாள்! மன்னர் மதுக்கிண்ணமேந்திய மனோகரிகளின் இதழ் தரும் சுவையிலே இகத்தின் ரசத்தைக் கண்டு பரலோகரசம் பாதிமாரின் கைவசம் இருக்கிறது. கேட்டால் கிடைக்கும். அதற்காகத் தேடி அலைவானேன் என்ற மதோன்மத்தர்கள், அரண்மனைச் செல்லப்பிள்ளைகள், ஆணவ சொரூபங்கள் ஆடிப்பாடிக் கிடந்த கோலாகலத்தை வேரறுத்த நாள்! ஓடப்பரெல்லாம் உதையப்பரான நாள்! விலங்க பூட்டப்பட்டு வேதனை அடைந்த கரங்களிலே வீரவாள் ஜொலித்த நாள்! விடுதலை நாள்! வீரனின் வெற்றித் திருநாள்! வெறியரின் வீழ்ச்சி நாள்! ஊரெங்கும், உலகெங்கும்! உணர்ச்சியுள்ள வருக்கெல்லாம் உத்தம நாள், அந்த ஜூலை14ந் தேதி! வீதிகளிலே களம்! வீடுகளே பாசறை! கையில் கிடைத்ததெல்லாம் ஆயுதம்! காணும் கொடுமைகளெல்லாம் தவிடு பொடி! திட்டம் உண்டா? தீட்ட நேரமில்லை! மந்திராலோசனை உண்டா? அதற்கான மனப்பான்மை இல்லை. சமயமறிந்து நடக்க வேண்டும என்ற எண்ணமாவது உண்டா? இத்தருணம் தவறினால் மறு தருணம் வாய்ப்பதரிது என்று யாவரும் கூறின நேரம் அது! அணிவகுப்பு! இல்லை! அவனைக்கேள், இவனைப்பார், அவனைக் கூப்பிடு என்ற பேச்சு இல்லை! எவறு என்ன உண்டு? வெட்டு! குத்து! இடி! கொளுத்து! கொல்! இந்தச் சத்தமே எங்கும்! மாளிகைகள் இடிந்து சரசரவெனச் சரியும் சத்தம்! கட்டிடங்களிலே தீ மூட்டிவிட்டதால் கிளம்பும் சத்தம்! இவைகளை மீறிக்கொண்டு பாஸ்டிலி, பாஸ்டிலி என்ற பெருஞ்சத்தம்! ஆம்

ஜூலை 14, பாஸ்டிலி, தினம்! பயங்கர பாஸ்டிலி படுசூரணமான தினம்! பதைத்தெழுந்த பாமர மக்கள் தங்களை அன்று வரை பயங்கரமான கொடுமைகளுக்கு ஆளாக்கிவைத்த பாதகச் சிறைக்கூடமான பாஸ்டிலியை, இடித்துத் தூளாக்கி, மண்மேடாக்கிய நாள்! அந்தச் சிறைச்சாலையைச் சீற்றம் கொண்ட மக்கள், சிதறடித்த நாளையே இன்று பாரிசில் மட்டுமல்ல, பெர்லினில், மாஸ்கோவில், இலண்டனில், பல்வேறு நகர்களிலே கொண்டாடினர். ஜூலை 14ந் தேதி பிரன்ஸ் நாட்டு மக்கள், தங்கள் நட்டிலே இருந்த பயங்கரச் சிறைச்சாலையான பாஸ்டிலியைத் தகர்த்தனர். என்ற போதிலும், அந்நாளைக் கொண்டாடும் உரிமை, எனக்குமுண்டு! என்று கூறிக்கொள்ளாத நாடு இல்லை! ஒரு நாட்டின் நாள், உலகப் பொது நாள் ஆகிவிட்டது! பாஸ்டிலி பிரான்சிலே வீழ்ந்தது என்ற உடனே, ஒவ்வோர் நாட்டிலேயும் உணர்ச்சி பொங்கி எழுந்தது. ஏன்?

பாஸ்டிலி, பிரான்சு நாட்டுச் சிறைக்கூமடம்! பாரிசில் கட்டப்பட்டிருந்த பாதகப் படுகுழி! பாமரரைச் சித்திரவதை செய்யும் கொலைக்களம்! அது அன்று அழிந்தது. அந்தச் செய்தி, உலகெங்கணும் கொடுமைக்கு ஆளாகி இருந்த மக்களுக்கெல்லாம், தத்தமது நாட்டிலே உள்ள பாஸ்டிலிகளும் தொலையும் நாள் வந்துவிட்டது என்ற ஆவேசத்தை ஊட்டிற்று. அக்கிரமக்காரரை, விழித்தெழுந்த மக்கள், வீரத்தால் வீழ்த்தினர் என்ற செய்தி கேட்டதும், நாட்டுக்கருகே உலவிய புலி கொல்லப்பட்ட செய்தி கேள்விப்பட்டதும், நாட்டிலே ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சி உண்டாவதுபோல, உலகிலே நாகரிக உணர்ச்சி படைத்தவர் அனைவருக்கும் ஓர் மகிழ்ச்சி எழுச்சி! ஒழிந்தது பாஸ்டிலி! ஒழிந்தது கொடுமை! என்று, பல்வேறு நாட்டு வீரரும் கூவினர்! பாஸ்டிலியின் அழிவு, பிரான்சிலே மட்டுமல்ல, பல்வேறு நாடுகளிலேயும் நாசத்தைக் கக்கிக் கொண்டு கிடந்த நயவஞ்சகனின் ஆட்சி வீ்ழ்ந்துவிடும், வீழும் நாள் விரைவிலே உண்டு என்ற எண்ணத்தை ஊட்டும் இலட்சிய வாடையாகிவிட்டது! அந்தப் பிரான்சுப் புரட்சி, பிரபஞ்சுப் புரட்சிக்குப் பேராசிரியராக வரவேற்கப்பட்டது. ஜூலை 14, ஒரு நாட்டிலே இருந்த ஒரு சிறைக் கூடத்தின் வீழ்ச்சி நாள் அல்ல, செல்வச் செருக்கு எனும் சிறைக்கூடம் எங்கெங்கு காணப்பட்டதோ அங்கெல்லாம், வீழ்ச்சி, இறுமாப்புக்கு இறுதி எச்சரிக்கை விடுத்திடும் வீரர் விழிப்புற்ற நாளாயிற்று!

"ஏ, மனிதப்பதரே! மண்டியிட்டு வாழ வேண்டிய மாமிசப் பிண்டமே! அடிமையே! கட்டளையிடுகிறேன். யோசிக்கிறாயே என்ன? நட என்று கூறுகிறேன். நிற்கிறாயா இன்னமும்?" என்று எக்காளம் மிகுந்திருந்த காலம்! மாளிகைகள் பிறப்பித்த கட்டளைகளை மண்குடிசைகள், சிறமேற்கொண்ட காலம்! மன்னனே சீமான்களின் சதுரங்கக்காய் மீான்களோ சிருங்காரிகளின் சிறு விரலிலே, பெருநெறியைக் கண்டவர்கள்! சிருங்காரிகளின் ஆயுதங்களோ சிற்றிடை, சிவந்த அதரம், கடை சிவந்த கண்கள், கனிரசக் கலசங்கள், கீதக் குரல், நடன நடை இந்த நிலையிலே கிடந்த நாட்டிலே பஞ்சம் பசி தீர்த்துக்கொள்ளும் பாமரரின் உயிர் குடித்து பாவையர் வாழுவர், பாதி ராத்திரிப் பசியை அடக்கும் பாதகத் தொழிலுககுத் தங்களைத் தத்தம் செய்து! வரி கொடுப்பவர் ஏழை மக்கள், வாங்கி குவிப்பர் அரசியலார்! வேலை செய்வர் கூலி மக்கள், கேளிக்கை தேடி அலைவர் சீமான்கள்! ஒய்யாரியின் ஓயாச் சிரிப்பு! உல்லாசியின் சல்லாபம்! இவையே கலை! கட்டழகியின் கண்ணைக் கண்டே காவியம் தீட்டப்படும்.

சீமான்களிடம் வரி கேட்கும் "சிறுமதி" மன்னருக்குக் கிடையாது! பமன்களின் புன்னகை போதாதா பூபதியின் அரண்மனைக்கு ஒளிதர! பஞ்சைப் பயல்களால் வரி தருவது தவிர வேறென்ன தரமுடியும், நாட்டை ஆளும் பாரத்தை நாதன் துணை கொண்டு தாங்கும் மன்னருக்கும்! எனவே ஏழை பராரியாவான், பராரி பட்டினியால் சாவான்! இலட்சாதிகாரி கோடீஸ்வரனாவான். கோடீஸ்வரன் கோமளவல்லிகளின் கொவ்வை இதழுக்காக, எதையும் தருவான்! இதுவே பிரான்ஸ் பாஸ்டிலி வீழ்ச்சிக்கு முன்பு!

"இப்படியும் வதைவதா?" என்று கேட்கும் துணிவு எவனுக்கேனும் பிறந்தால், பாஸ்டிலி! அரண்மனையிலே செல்வாக்குள்ள யாருடைய கோபமானது எவன் மீதேனும் பாய்ந்தால், பாஸ்டிலி! வரிக் கொடுமைபற்றிப் பேசினானா? பாஸ்டிலி! வனிதாமணியைக் கேலி செய்தானா? பாஸ்டிலி! சீமான்களின் சீற்றம், அந்தச் சிறைச்சாலைக்குத்தான் பாமரரைத் துரத்திற்று. அங்கே இருந்தது என்ன? இரும்புக் கம்பியும் கம்பளிப் போர்வையும் மட்டுந்தானா? இல்லை! பகலிலே இரவு! பாதாளத்திலே அறைகள்! காற்று வெளிச்சம், தண்ணீர், உணவு, தாராளமாக உண்டா? இல்லை! சிறை அதிகாரிகளின் கடமை என்ன? சித்திரவதை எவ்வளவு அதிக நாட்களுக்குச் செய்ய முடியுமோ, அவ்வளவு காலம் கைதியின் உயிர் ஊசலாடிக் கொண்டு இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்!

பாஸ்டிலி என்ற பெயரைக் கேட்ட உடனே, பயத்தால் அலறுவர்! அங்கே போனவன், திரும்பி வருவது உண்டா? அக்கினிக் குழம்பிலே போட்டாலாவது அரை நொடியிலே, ஆயுள் பூராவுமல்லவா அக்கினிக் குழம்பு, அங்கமெல்லாம் ஊற்றப்படும் என்று கூறிக் கதறுவர். விசாரணையின்றி, மன்பிப்பு இன்றி, நோய் வந்தால் கவனிப்பு இன்றி, அங்கம் பழுதானால் கேட்பாரின்றி, உடல் அழுகித்தானாக உலர்ந்து, உயிர் ஒவ்வோர் துளியாகப் பிரியத் தொடங்கி, அவன் எலும்புக் கூடாகி, கண்பார்வை இழந்து, கைகால் முடக்கப்பட்டு, உடலிலே கடித்துக் கொண்டிருக்கும் உணியை ஒட்டபும் சக்தியற்று, அவனைக் கண்ணால் பார்ப்பதே பார்ப்பவனுக்குத் தண்டனை என்று கூறத்தக்க உருவமாக மாறி, மரணத்துக்குத் தவம் கிடந்து, பிறகு மண்ணிலே புதைவான்! அந்தப் பயங்கர பாஸ்டிலியிலே வாலிபன் வயோதிகனானான். வீரன் வெறியனானான், புத்திமான் பித்தனானான், வடிவழகன் அழுகி நோயானான்! அடக்குமுறையின் முழு மூளைத்திறமும் உபபோயோகிக்கப் பட்டு, நிர்மாணிக்கப்பட்ட இடம் அந்த பாஸ்டிலி! கனத்த சுவர்கள், அவைகளை அணைத்துக கொண்டு ஆழமான அகழிகள், இருப்புப் பலகைகளாலான கதவுகள், இமை கொட்டாது காவல் புரியும் கொடியவர், இது பாஸ்டிலி! எவ்வளவு அநீதி இழைக்கப்பட்டாலும் ஏன் என்று கேட்க எவரும் துணியார், அவர்களின் செவியிலே பாஸ்டிலி என்ற சத்தம் வீழ்ந்ததும்!

அந்தப் பாஸ்டிலி வீழ்ந்தது ஜூலை 14ல்! அவனி களிப்படையாது இருக்குமா? பதினாறாம் லூயி, பிரான்சை ஆண்டு வருகிறான். பட்டத்தரசியின் சுட்டுவிரலுக்குக் கிட்டே வருபவருக்கே அரண்மனைத் தயவு! மக்கள் உள்ளமோ கொதித்தது. ஆனால் எரிமலை கக்கத் தொடங்கவில்லை. பாஸ்டிலி என்ற பயம், எரிமலைக்கு மேல் மூடியாகக் கிடந்தது. கர்த்தனின் கருணையைக் காசுக்கு விற்கும் தரகர்கள், காமத்தால் கருததழிந்த சீமான்கள், கவலையால் கருததுக் குழம்பிய மக்கள்! சீமான்களோ வரி செலுத்தவில்லை. வரி கேட்கும் நெறியே தவறு!! சீமான் என்ற பட்டத்துக்குத்தான் வேறு என்ன அர்த்தம்? சாதாரணமானவனும் வரி கட்டுவது, சீமானும் கட்டுவதா? பண்ணை உண்டு, பாடுபடக் கூலிகள் உண்டு, அவர்கள் தேடிக் குவித்த பொருளை ஆடிப்பாடிச் செலவிடப் பாரிஸ் உண்டு. பாரிசில் பாகுமொழிப் பாவையர் உண்டு, செல்வவான்கள் உண்டு, அன்னக் காவடிகளுக்கு பட்டினி உண்டு! ஏழு லட்சத்து ஐம்பதினாயிரம் மக்கள் கொண்ட பாரிசில், பசியோ பசி என்ற பதறிய மக்களே பெரும்பான்மையினர். 1774-ல், ந்தப் பிரான்சுக்கு மன்னனானான் பதினாறாவது லூயி. நல்லவன், யோக்யன், பக்திமானுங்கூட. ஆனால், ஆளத் தெரியாத ஆணழகன் அந்த லூயி. பட்டத்தரசி மேனா மினுக்கி! அவளைச் சுற்றி ஜொலித்த மாதர்கள், உடல் குலுக்கி, ஊரை அழிக்கும் உல்லாசிகள்! அரண்மனையிலே, சுரண்டிப் பிழைக்கும் சுந்தரிகளும் சோம்பித் திரியும் சொகுசுக்காரரும் நடமாடினர். பராரி தரும் வரிப்பணம், பரிபாலனச் செலவுக்கு - அதிலும் பளிங்குக் கிண்ணத்திலே பலவித மது ஊற்றி, வைர மோதிரக் கையினள் பொன்னாடையைப் பூமானுக்குப் பூரிப்புடன் தரும் விருந்து வைபவங்கள் நடைபெற வேண்டுமே, அத்தகைய பரிபாலனச் செலவுக்குப் போதுமா? பாவையர் மீது நீமான்கள் கொண்ட மோகத்தைப் போலப் பணம் வளருமா? பணம் இருக்கும் இடம், மாளிகைகளில் பண்ணைகளில். அவர்களோ மன்னரின் அன்புக்குப் பாத்திரமானவர்கள். வரி தரும் வேலை கிடையாது. ஏழை மட்டுமே தந்து எந்த அரசாங்கந்தான் நடத்த முடியும்? பணம் இல்லை, பரிபாலனச் செலவுக்கு!

சர்க்கரைச் சீர்திருத்த முய்னறவர்களிலே ஒருவர், பிரான்சைப் படம் பிடித்தார்! "பிரான்ஸ் ஒரு ராஜ்யம் அல்ல! பலப்பல தனித்தனி ராஜ்யங்களின் கதம்பம்! ஒன்றுக்கொண்று தொடர்பு இல்லை. எல்லாவற்றுக்கும் பொதுவான நிர்வாக யந்திரம் இல்லை! பல வட்டாரங்கள் வரி செலுத்துவதே இல்லை; சில இடங்கள் வரி செலுத்திச் செலுத்தி வறண்டுவிட்டன; பணக்காரர்களுக்கு, வரிச்சுமை மிக மிக இலேசாக இருக்கிறது. ஏழையின் இடுப்பே முறிகிறது; சீமான்கள் அனுபவிக்கும் அதிகார பாத்யதையால், சமூதாய அமைப்பிலே சமஎடை கெட்டுவிட்டது; மிக மிக மோசமான ராஜ்யம். ஊழல் அமோகம்" "சரி! படம் பிடித்தது சரிதான். ராஜ்யம் மோசமாக இருககிற காரணத்தால்தானே உம்மை அமர்த்தினோம் ஒழுங்கு படுத்த" என்று யாரேனும் கூறிவிட்டால் என்ன செய்வது என்று அஞ்சிப்போலும், அந்த ஆசாமி பிரான்சின் நிலைமையைக் கூறிவிட்டு, "இன்றுள்ள நிலையிலே இந்த ராஜ்யத்திலே ஆட்சி செய்வது ஆகாத காரியம்" என்று தீர்மானமாகக் கூறிவட்டார். ஐரோப்பாவின் பூந்தோட்டம் பிரான்ஸ்! அங்கு பணம் இல்லை, துரைத்தனம் நடத்த! பணம் படைத்த நீமானுக்கோ மனம் இல்லை வரி செலுத்த! அந்த சிறு கூட்டத்தை அடக்கவோ திறனில்லை மன்னனுக்கு! மதியுரைக்க மந்திரி இல்லை! மக்களுக்கோ பாஸ்டிலி இருந்தது!

பிரான்ஸ் நாட்டு ராஜரீகத்தை நடத்த முடியாது என்று கூறியும்விட்டார், ஒரு பிரமுகர். மன்னர் ஏதேதோ செய்து பார்த்தார். மந்திரிகளைப் புதிது பிதிதாக நியமித்தார். அவர்கள் புதுப் புதுத் திட்டங்கள் தீட்டினர். பலன் இல்லை! கடைசியிலே, கதிகலங்கிய காவலன் புயலைத் துணைக்கு அழைத்தான்! மக்கள் மன்னத்தைக் கூட்டினான்! மக்கள் - மன்னரால் கைவிட்பிபட்டுக் கிடந்த மக்கள் - கூடினர்! கவலை தோய்ந்த முகத்தினருக்கும் கொஞ்சம் களிப்பு பிறந்தது, மக்களை மன்னர் நாடுகிறார்! ஏன்? நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்! என்ற தத்துவம் கோழை நெஞ்சிலே குடைந்து சென்றது. நிமிர்ந்து நின்றான்! தூங்கினகோதும் தோள்தட்டு என்ற உணர்ச்சி உரைத்தது! குகையைவிட்டுப் புலி கிளம்புவதுபோல், கிளம்பினர்! எரிமலை குமுறத் தொடங்கிற்று! மக்கள் மன்றத்தினர், துரைத்தனம் நடத்தும் தி்ட்டம் தயாரித்தனர்; விடுதலை என்ற மையிலே புரட்சி என்ற பேனாவைத் தோய்த்து எடுத்து, சீறிடும் சீமான்களைக் கண்டு சிரித்தனர், மன்னனை மறந்தனர்! அரசாளப் பிரந்தவர் என்று ஆர்ப்பரித்தனர்! 1789- ஆம் ஆண்டு ஜூன் பத்தாம் தேதி, மக்கள் மன்றம் தேசீய மகா சபை இது, இந்நாட்டுக்குத் தக்கதோர் ஆட்சிமுறைத் திட்டம் வகுத்து அமுலுக்குக் கொண்டுவரா முன்பு, இந்தச் சபை கலையாது என்று கூறிவிட்டது! அரண்மனையிலே மன்னன்; அன்னக் காவடிகள் அரசாள நாங்கள் வழி அமைத்துத் தருகிறோம் என்று கூறுகின்றனர் வெளியே!

அரண்மனைக்குள்ளே ஆர்ப்பாட்டக்காரர் கூடினர். அரசனுக்குத் தூபமிட்டனர். அதிகார வெறியரை ஏவிவிட்டனர். துருப்புகள் பவனிவரத் தொடங்கின. புயல் வலுத்தது.

"போக்கிரிகளைச் சுட்டுத் தள்ள வேண்டும்"

"காலாடிகளிடம் நாட்டை விட்டு விடுவதா?"

"பிடித்துத் தள்ள வேண்டும் பாஸ்டிலியில்"

"துருப்புகளுக்கு உத்தரவு பிறப்பித்தால் இந்த மக்களைக் கண்டும் நாம் சும்மா இருப்பதா?"

"மானம் போகிறதே"

"பரம்பரைக் கௌரவம் பாழாகிறதே"

"கிளம்புவோம், சிதறடிப்போம்."

சீமான்கள் சிலர் கூடினர் அரண்மனையில், ஆணவத்தை இதுபோல் கக்கினர் - கடைசி முறையாக! ஆளத்தெரியாத மன்னன், மக்களின் ஆத்திரக் கடலைக் கடக்க இந்த மண் குதிரை மீது ஏறிக் கொண்டான். மக்களைக் கூட்டிய மன்னன், பிறகு, அவர்களைக் கடுமையான முறையினாலே, அடக்குவது என்ற விபரீத எண்ணம் கொண்டான். புயலை எதிர்த்தான்! சீறும் நாகத்தின் முன்பு சிறு பிள்ளையாட்டமாடினான்!

மக்கள், மன்னரின் படை கிளம்புவது கண்டனர் கையில் கிடை்த்ததை எல்லாம் தூக்கினர். 1789 ஜூலை 14ந் தேதி போர்க்கோலம் பூண்ட மக்கள் எங்கே பாய்ந்தனர்? பாஸ்டிலி! மன்னன் அடக்குமுறையைத் துவக்கத் துணிந்தான் என்ற தெரிந்ததும் மக்கள் மனதிலே தோன்றிய முதல் எண்ணம், பாஸ்டிலி. "பாஸ்டிலிதானே, நம்மைப் போன்ற ஏழைகளைச் சீமான்களின் எதேச்சாதிகாரத்தை எதிர்க்கத் துணிந்தவர்களைக் கொடுமை செய்யும் இடம்! நானும் சிக்கிக் கொண்டால், அந்தப் பாழும் சிறைச்சாலைக்குத் தானே இழுத்துச் செல்லப்படுவோம். யாரால் சகிக்க முடியும் அந்த இம்சையை? அந்தோ! எவ்வளவு பேரை இம்சித்த இடம் அந்த பாஸ்டிலி! பாஸ்டிலி ஒழிக! ஒழிக கொடுமை!" என்று புரட்சி முழக்கமிட்டது. கிளம்பினர் மக்கள்! பாஸ்டிலியை நோக்கிப் பாய்ந்தனர். அந்தப் புரட்சிப் படையின் முழக்கமென்ன? 'வாழ்க வால்டேர்!' என்பதுதான்! பாஸ்டிலியைத் தாக்கப் போனவர்கள், வால்டேர் வாழ்க! என்று முழக்கமிடுவானேன்? புரட்சிப் படைக்கு அந்தச் சமயத்தி்லே புத்தகம் எழுதியவனின் பெயர் ஏன் நினைவிற்கு வந்தது? வால்டேர், அந்தப் படைக்குத் தலைவனல்ல! ஆனால் 1789 ஜூலை 14ந் தேதி கிளம்பிய புரட்சிப் படையின் முழக்கம், 'வாழ்க வால்டேர் 'என்பதுதான்!! புரட்சிப் படையிலே வால்டேர் இல்லை பிரான்சிலேயே இல்லை! அந்த மாவீரன் இறந்து பதினோரு வருஷங்களாய் விட்டன! 1778 இல் வால்டேர் இறந்துவிட்டார். ஆனால் 1789 ஜூலை 14-ல் நடந்த புரட்சியின் போது, பாஸ்டில் சிறைக்கூடத்தை, மக்கள் தாக்கியபோது வாழ்க வால்டேர் என்று முழக்கமிட்டனர்.

வால்டேர் - போர் வீரரல்ல. ஆனால், பொறுத்துப் பொறுத்து, தன்மான உணர்வு மரத்துப்போகும் நிலையிலே இருந்து மக்களைத் தட்டி எழுப்பிய புரட்சிக்காரன். பகுத்தறிவுத் தந்தை! பாமரரின் சக்தியை அவர்கள் உணரும்படி செய்த சிந்தனைச் சிற்பு. பேனா முனைகொண்டு அரண்மனைகளை, அஞ்ஞானிகளின் இருப்பிடங்களை, பழமையின் கோட்டைகளைத் தாக்கிய வீரன். கேலியால், கண்டனத்தால், ஆராய்ச்சியால் அறிவுரையால், வைதீக மூடுபனியைச் சிதறடித்த புது உலகத் தூதன்! ீகூரரின் வாளை விலைக்கு வாங்க முடிந்தது எதிர்த்து ஒடிக்க முடிந்தது, வஞ்சித்து வளைக்க முடிந்தது! வால்டேரின் பேனாவை அடக்குமுறை, சிறை, நாடுகடத்தல் எனும் எவையினாலும், வளைக்கவும் முடியவில்லை. வால்டேர் தயாரித்த புரட்சிக் கருத்துக்கள் பொதுமக்கள் உள்ளத்திலே குடியேறி, ஒன்று பத்து நூறாக வளர்ந்தன. அந்தப் புரட்சிக் கருத்து வளர்ந்து வருவரை மக்களே அறிந்து கொள்ளவில்லை! மன்னன் எப்படி அறிவான்? கக்கும் விநாடிக்கு முன்புவரை, கந்தகக் குழம்பு உள்ளே கொதித்துககொண்டிருப்பது வெளியே தெரியாதபடி இருக்கும் எரிமலை போன்றிருந்தது மக்களின் மனம். புரட்சி வீறிட்டெழுந்ததும், தங்களுக்குத் தலைவன், எதிர்க்கும் சக்தியை இரத்தத்தி்லே கலக்கவைத்த காவலன், 'எதற்கும் எஞ்சாதே. பழைய ஏடு என்பதற்காகத் தலைபணியாதே, மானத்தை மறவாதே' என்ற தத்துவங்களைத் தந்த தீரன், வால்டேரை, மக்கள் வாழ்த்தினர். மேலும், எந்தப் பாஸ்டிலியைத் தாக்கக் கிளம்பினரோ, அதே பாஸ்டிலியிலே அநியாயமாகத் தள்ளப்பட்டு அவதிப்பட்ட பலரை, அதே வால்டேர், அரும்பாடுபட்டு விடுவித்தவர் என்பதை மக்கள் அறிவர். அது மட்டுமா? அதே பயங்கரப் பாஸ்டிலியில் வால்டேரே அடைபட்டுக் கிடந்ததையும் அறிவர். பாரிஸ் நகர மக்கள் பதைத்தெழுந்து அந்தப் பயங்கர பாஸ்டிலி மீது பாயந்த அன்று பெற்ற தைரியம், கொண்ட எழுச்சி, காட்டிய வீரம் வால்டேர் அளித்த அறிவுரையின் விளைவு! உண்மையிலே அவர்கள், அன்று பாஸ்டிலியைத் தகர்த்தது, வால்டேர் தயாரித்துக கொடுத்த வெடிகுண்டின் துணையினால்தான்! ஆகவேதான் வாழ்க வால்டேர்! என்ற முழக்கம், பாஸ்டிலி பொடிப் பொடியான அன்ற பாரிசில் கிளம்பிற்று! பாரிசில் மட்டுமா, பார் முழுவதுமே!அந்த ஜூலை 14ந் தேதி மட்டுமா? ஜூலை 14ந் தேதியிலே பாஸ்டிலி தினம் கொண்டாடப்படும் ஒவ்வொரு ஆண்டிலேயும், அறிவுச் சுடரை ஆண்மையுடன் ஏந்திச் சென்ற அந்த அஞ்சா நெஞ்சன் காட்டிய பாதையிலோன், பாஸ்டிலியைத் தகர்த்த புரட்சி வீரர்கள் அன்று சென்றனர். வால்டேர் தயாரித்துக் கொடுத்த வெடிகுண்டை வீசினர்; வென்றனர். வாழ்க வால்டேர்!

(அறிஞர் அண்ணா - 29.07.1945)முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.