அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பகுதி: 59

அறிஞர் அண்ணாவுடன் அமைந்த அரும்பெரும் நட்பு

1933 ஆம் ஆண்டு முற்பகுதி வரையில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்து வந்த என் தந்தையார், அதன் பிற்பகுதியிலிருந்து, தன் இருப்பிடத்தைச் சென்னைக்கு மாற்றிக்கொண்டார். ஏறத்தாழ அதே சமயத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ.(ஆனர்ஸ்) வகுப்பின் இறதியாண்டில் பயின்றுகொண்டிருந்தார்.

நீதிக் கட்சிக் கருத்துக்களைப் பரப்புவதில் இருவருக்கும் ஒரே வகை ஆர்வம் இருந்த காரணத்தால், அப்போது இருவருக்குமிடையே ஏற்பட்ட தொடர்பு, மிக விரைவில் தோழமையாக மலர்ந்து, ஆழமான நட்பாக வேரூன்றிவிட்டது 1933 இல் துளிர்விட்ட அந்த நட்பு 1969 ல் அண்ணா அவர்கள் இயற்கை எய்திய நாள் வரை, துளி அளவும் விரிசல் இன்றி ஓங்கி உயர்ந்து, சிறந்து பொலிந்தது என்பது, மட்டற்ற மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். 1937 இல் நவயுகம் ஆசிரியராக அண்ணா

1937 வரை அறிஞர் அண்ணா அவர்களை ஒரு தலை சிறந்து சொற்பொழிவாளர் என்று மட்டுமே அறிந்து மகிழ்ந்திருந்த தமிழகம், அவர் ஆற்றல் மிக்க ஓர் எழுத்தாளரும் ஆவார் என்பதை உணர்ந்து களிப்பதற்குறிய வாய்ப்கை முதன் முதலில் அளித்தது நவயுகம் என்னும் வார இதழாகும். அளித்தவர் என் தந்தையார் காஞ்சி மணிமோழியார் ஆவார். 1932 இல் அண்ணா அவர்களை ஆசிரியராகவும் தன்னை வெளியிடுபவராகவும் கொண்டு, என் தந்தையார் தொடங்கி நடத்திய நவயுகம் என்னும் இதழ் பற்றி 1960 இல் நடைபெற்ற என் தந்தையாரின் மணி விழாவின் போது அண்ணா அவர்கள் ஆற்றிய சிறந்த சொற்பொழிவில் தெரிவித்த சில கருத்துக்கள் இவை:

அப்போது தான் நான் கல்லூரியிலிருந்து வெளி வந்த காலம். மணிமொழியார் அவர்களும் அப்போதுதான புதிதாக அச்சகம் ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்த நேரம். அந்தக் காலம் என்னிடம் எழுதும் ஆற்றல் இருக்கிறதா என்பது தெளிவாகத் தெரியாத காலம். அவரிடமோ பண வசதி இல்லாத நேரம். அதுவும் நாங்கள் அந்தக் கிழமை இதழைத் தொடங்கிய நேரம், நாங்கள் சேர்ந்திருந்த நீதிக் கட்சியோ பிழைத்திருக்கிறதா இல்லையா என்று ஐயுறத் தக்க நிலைக்கு ஆட்பட்டுத தத்தளித்த நேரம். இத்தகைய நிலையில்தான் நம் இயக்கக் கருத்துக்களைப் பரப்புவதற்காகக் கிழமை இதா ஒன்று தொடங்கவேண்டும் என்றும் அதற்கு நான் ஆசிரியராக இருக்கவேண்டும் என்றும் அவர் கூறினார். நானும் இணங்கினேன். பண நெருக்கடி பல முறை பத்திரிகையைத் தாக்கியது என்றாலும் அதனை அவர் என்னிடம் கூறியதில்லை. கூறாததற்குக் காரணம் அதனைத் தெரிவித்தால் இளைஞனாகிய நான் பதிரிகையை நடத்தும் ஆர்வத்தை இழந்து விடுவேனோ என்கிற அச்சம் அவருக்கு இருந்ததுதான். அப்போதுதான் கல்லூரியை விட்டு வெளிவந்த என்னை பத்திரிகைத் துறையிலும் பொது வாழ்விலும் ஈடுபடுததி முன்னேற்றம் அடைச் செய்வதில் அவர் எவ்வளவு ஆர்வம் கொண்டிருந்தார் என்பதை எடுத்துக் காட்டதான் இந்த உண்மையைக் கூறினேன்

அண்ணா அவர்களுடைய இந்த உரையிலிருந்து அப்பெருமகனாருக்கும் என் தந்தையாருக்குமிடையே எவ்வளவு நெருக்கமான தொடர்பு இருந்தது என்பது தெளிவாக விளங்கும்.
(இளந்தமிழன் - இதழ் மே, 2006)

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai