உன்னைத்தான் நம்பியிருக்கிறேன்!
1

 

காங்கிரஸ் பேசும் சோஷியலிசம் போலிப் பேச்சு !
உழுபவனுக்கு நிலமா என்றவர் காமராசர் !
எதேச்சாதிகாரத்தை வீழ்த்த உன்னையே நம்பியுள்ளேன்!
நான் எதிர்பார்ப்பது ஒன்றே !
உன் இதயத்தில் இடம் !

தம்பி,

எனக்காக அல்ல - என் இலாபத்துக்காக அல்ல - ஏழை எளியவர்களுக்காக - இல்லாது இடர்ப்படுவோர் களுக்காக - சாவடி கட்ட - ஆகவே, விலை குறைவு என்று தயங்காதே - நல்ல காரியத்துக்காக - தர்மத்துக்காக - புண்ணிய காரியத்துக்காகக் கொடு!

உருக்கமாகப் பேசுகிறார்; மறுக்கமுடியாத "நியாயம்' எடுத்துக் காட்டுகிறார் தண்டாயுதபாணி கோவில் தர்மகர்த்தா - ஆறு ஆயிரம் மதிப்புள்ள "சதுரத்தை' இரண்டாயிரத்துக்குத் தந்து விடும்படி விளங்கானூராரிடம்.

விலை மிகவும் குறைத்துக் கேட்கிறார். நாலு ஆயிரத்துக்கு முன்பு ஒருவர் கேட்டார், ஆறுக்கு அரை பைசா குறையாது என்று அடித்துப் பேசினோம். வேறு ஒருவரும் இவ்வளவு குறைவாக விலை கூறமாட்டார்கள். ஆனால்... தர்மகாரியம் என்கிறார்; புண்ணியம் கிடைக்கும் என்கிறார்; சாவடி கட்ட என்கிறார்; எப்படி மறுக்க முடியும் - ஒரே குழப்பமாக இருக்கிறதே என்று எண்ணி ஏக்கப்படுகிறார் விளங்கானூரார்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்தால், அந்தச் சதுரத்தில் "தண்டாயுதபாணி மாளிகை' தெரிகிறது; ஒரு நாள் தங்க வாடகை இருபத்து ஐந்து ரூபாய் என்று குறிப்புப் பலகை தொங்குகிறது. "அறை காலி இல்லை' என்ற அறிவிப்புப் பலகையும் தொங்கவிடப் பட்டிருக்கிறது. சாவடி கட்ட! ஏழைகளுக்காக! தர்மகாரியத்துக் காக! என்று மயக்கி, சதுரத்தை மிகக் குறைந்த விலைக்கு வாங்கியவர் உயர்தரமான உணவு விடுதி கட்டிக் கொழுத்த இலாபம் அடைகிறார்.

"மாளிகை'யிலே பெரிய பெரிய புள்ளிகள் வந்து தங்குகிறார்கள் : கும்பாபிஷேகம் காண வந்தவர்கள் அல்ல! கள்ளச்சரக்கு வியாபாரம் செய்வோர்! ஊருக்குத் தெரிகிறது. ஆனால், அதிகாரிகளிடம் தருவதற்கான ஆதாரங்கள் மட்டும் எவர் கரமும் சிக்குவதில்லை; அவ்வளவு திறமையாக நடத்தப் படுகிறது திருட்டு வேலை.

தர்மகாரியம் - புண்ணிய காரியம் - என்று மயக்க மூட்டும் பேச்சுப் பேசி, விவரமறியாதானை வலையிலே விழச் செய்து, இலாப வேட்டையாடிடும் வஞ்சகத்துக்கும் நாங்கள் ஜனநாயக சோஷியலிசத்தைத் தந்திடப்போகிறோம்; ஏழையை வாழ வைக்கப் போகிறோம் என்ற ஆசை வார்த்தையை ஊட்டி, ஓட்டுகளைத் தட்டிப் பறித்துக்கொண்டு; ஏழையைக் கசக்கிப் பிழிந்து கொழுத்திடும் செல்வவான்களுக்குத் தங்கள் "முதுகை'க் கொடுத்து அவர்கள் வீசிடுவதை வழித்தெடுத்து சுவைத்திடும் போக்குக்கும் அதிக வித்தியாசமில்லை. அளவிலே அவை வேறு வேறு; தரத்திலே இரண்டும் ஒன்றுதான்.

களவு என்று எண்ணாதே குழந்தாய்! உனக்கு நற்கதி தந்திடவே நாம் இதனைச் செய்தோம். செல்வம், மனத்தை மயக்கும்; பண்பை அழிக்கும் : கடவுளிடம் கொண்டிட வேண்டிய பக்தியினை அழித்தொழிக்கும்.

பணம், பாபத்தின் சின்னம்! அதிலே பற்றும் பாசமும் மிகுந்திடின் பாபத்தின் பிடியிலே சிக்கிக் கொள்வாய்;

மகனே! உன்னைப் பாபத்தின் பிடியிலிருந்து விடுவிக்கவே நாம் உன் பொருளைப் பறித்துக் கொண்டோம். சென்று சிவனருளை நாடு;

என்று வழிப்பறி நடத்தியவன் பேசிடின் அதற்குப் பெயர் "உபதேசம்' என்றாகுமா! சூது! வஞ்சகம்! சூழ்ச்சி!

ஆனால், பாப புணிணியம் பற்றிய உருக்கத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ஏய்த்திடுவோர் போல, ஆட்சியில் அமர்ந்திடுவோர் மயக்கமூட்டும் பேச்சினை வீசி மக்களைத் தம் பக்கம் ஈர்த்துக்கொண்டு, பிறகு அந்த மக்களுக்கே கேடு செய்திடத் துணிகின்றனர்.

காங்கிரசாட்சியினர் பேசிடும் ஜனநாயக சோஷியலிசம், இதுபோன்றதோர் சூழ்ச்சியாகவே இருந்து வருகிறது.

போலிப் பேச்சு - அல்லது மயக்கமூட்டும் பேச்சு அல்லது சூழ்ச்சிப் பேச்சு காங்கிரசாட்சி பேசிடும் சோஷியலிசம் என்பதை நன்கு உணர்ந்து கொண்டிருப்பதால்தான், சீமான்கள் காங்கிரஸ் கட்சியில் அச்சமின்றி இருந்து வருகிறார்கள்.

உண்மையிலேயே காங்கிரசாட்சி சோஷியலிசத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்துவிடும் என்ற நிலைமை இருந்திடின் இத்தனை முதலாளிகள் காங்கிரஸ் முகாமிலே இருந்து வருவார்களா? தற்கொலை செய்துகொள்ளச் சம்மதிப்பார்களா!

ஒரு புதுவரி தமக்குப் பாதகமான முறையிலே போடப் பட்டுவிட்டால் காட்டுக் கூச்சலிட்டு, எதிர்ப்புக் கிளப்பி, அந்த வரி எடுபடுகிற வரையில் புயலைக் கிளப்பியபடி இருக்கும் இயல்பு படைத்த முதலாளிகள், தங்கள் வாழ்க்கை முறைக்கே உலைவைக்கக் கூடிய திட்டமான சோஷியலிசத்தைக் காங்கிரசாட்சி மேற்கொள்வதாக அறிவித்தது கேட்டு வாளாவா இருப்பார்கள்! தேளாகிக் கொட்டுவார்களே! ஆனால், அவர்கள் ஒரு துளியும் கவலைப்படாமல்லவா இருக்கிறார்கள்! ஏன்? அவர்களுக்கு நன்றாகத் தெரியும் காங்கிரசாட்சி பேசிடும் சோஷியலிசம், மக்களை மயக்கவே தவிர, தங்கள் ஆதிக்கத்தை மாய்க்க அல்ல என்ற உண்மை.

நிலத்துக்கு உச்சவரம்பு கட்ட சட்டம் வரும் என்று தெரிவித்ததும், எவ்வளவு எதிர்ப்பு, ஆர்ப்பரிப்பு செய்தனர் இந்தப் பிரபுக்கள்! இன்று சோஷியலிசம் பேசப்படுகிறது. கவலையற்று இருக்கிறார்கள் என்றால் காரணமற்றா?

ஆதரித்தே கூடப் பேசுகிறார்கள் சீமான்கள்; வரட்டுமே சோஷியலிசம் என்று! ஏன்? அவர்கள் மிக நன்றாக அறிவார்கள், காங்கிரசாட்சி சோஷியலிசத்தை நடைமுறைக்குக் கொண்டு வராது என்பதனை.

அமெரிக்கத் தலைவரொருவரைக் கேட்டனர் அந்நாட்டு முதலாளிகள், இந்தியாவுக்குக் கடன் கொடுங்கள் தாராளமாக; ஏராளமான "முதல்' போட்டுத் தொழில் நடத்துங்கள் என்று கூறுகிறீர்களே, இந்தியாவிலே காங்கிரஸ் அரசு, சோஷியலிசத் திட்டத்தினை மேற்கொண்டிருக்கிறதே, அந்த நிலையில் நாங்கள் எப்படி முதல் போட முடியும் என்று.

அமெரிக்கத் தலைவர் சொன்னார், இந்தியாவில் காங்கிரசாட்சியினர் பேசிடும் சோஷியலிசத்தைக் கண்டு பயப்படாதீர்கள்; அந்தச் சோஷியலிசம் நம்மை ஒன்றும் செய்துவிடாது என்று.

விவரம் தெரிந்தவர்கள், காங்கிரஸ் கட்சியின் அமைப்பை அறிந்தவர்கள், நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள், பேசப்படும் சோஷியலிசம் போலி என்று... ஆனால், பாமரருக்கு அந்தப் பேச்சு தித்திப்புத் தரும் என்பதைத் தெரிந்துகொண்டுதான் காங்கிரஸ் தலைவர்கள் ஓயாமல் சோஷியலிசம் பற்றிப் பேசுகிறார்கள். காங்கிரஸ் ஆதிக்கத்தை எதிர்ப்பவர்களெல்லாம் சோஷலிச விரோதிகள் என்று பழியும் சுமத்துகிறார்கள்.

எவரெவர் சோஷியலிசம் ஏற்பட்டால் ஆதிக்கத்தை, உடைமைகளை, சுகபோகத்தை இழந்தாக வேண்டி நேரிட்டு விடுமோ அவர்களெல்லாம் வாய் மூடிக் கொண்டிருக் கிறார்கள் - சோஷியலிசத் திட்டத்தை எதிர்க்காமல்.

சோஷியலிசம் ஏற்படின், அதனால் நிரம்பப் பயன் அடையக்கூடிய ஏழை எளியோர் நடுத்தரக் குடும்பத்தினர் மிகப்பெரும் அளவு இடம் பெற்றுள்ள கழகம், நம்முடையது. உள்ளபடி சோஷியலிசம் நடை முறைக்கு வரும் என்றால், நாமல்லவா மகிழ்ச்சியால் துள்ளுவோம்; திட்டத்தை வரவேற்போம்.

நாம் அவர்கள் சோஷியலிசம் பேசுவதையும் பார்க்கிறோம்; அதேபோது சோஷியலிசப் பகைவர்கள் அந்த முகாமிலே மூலவர்களாக இருப்பதையும் காண்கின்றோம். எனவேதான், வெறும் மயக்கமூட்டும் பேச்சு இது என்று கூறுகிறோம்.

சோஷியலிசம் பேசி மக்களை ஏய்ப்பதனை எதிர்க்கிறோம், சோஷலிசத் திட்டத்தை அல்ல.

ஆரோக்கியசாமி என்ற பெயருள்ள ஒருவர் அக்கிரமம் செய்திடக் கண்டு கண்டித்தால், உடனே ஆரோக்கியத்தைக் கண்டிக்கிறோம், வெறுக்கிறோம் என்றா பொருள்? பித்தரும் கூறமாட்டார் இதுபோல. ஆனால், பெரிய தலைவர்கள் பேசுகிறார்கள், கழகம் சோஷியலிசத்தை எதிர்க்கிறது என்று.

ஆறாயிரம் மதிப்புள்ள சதுரத்தை இரண்டு ஆயிரம் கொடுத்துத் தட்டிக் கொண்டு போகத் தந்திரம் செய்ப வனைக் கண்டித்தால், உடனே அவன், நாம் "சாவடி' கட்டும் புண்ணிய காரியத்தைத் தடுக்கிறோம், எதிர்க்கிறோம் என்றா பேசப் புறப்படுவது ?

ஆனால் காமராஜர், இந்த அபத்தப் பேச்சைத்தான் அள்ளி அள்ளி வீசுகிறார், ஊரூருக்கும்.

நான் ஏழை பணக்காரன் வித்தியாசத்தைப் போக்கப் பாடுபடுகிறேன், அதனை இந்தக் கழகத்தான் எதிர்க்கிறான் என்றாராம், பெரியவர்!

ஏழை பணக்காரன் என்ற வித்தியாசத்தைப் போக்க இவர் வைத்துக் கொண்டுள்ள திட்டம் என்ன? சொல்லட்டுமே பார்ப்போம்,

திட்டவட்டமாக அவர் தமது ஏற்பாட்டினைக் கூறட்டும், அது போலியாகிப் போய்விடாது என்பதை விளக்கட்டும், பிறகு அந்தத் திட்டத்தைக் கழகத்தினர் எதிர்க்கிறார்களா என்று பார்க்கட்டும்.

நான் ஏழை பணக்காரன் பேதத்தைப் போக்க இன்ன திட்டம் தீட்டினேன். அதனை இந்தக் கழகத்தான் எதிர்த்தான் என்று எடுத்துக்காட்டி மெய்ப்பிக்கட்டும், பார்ப்போம்.

ஓட்டை ஒடிசல் உள்ள முறையிலே தயாரிக்கப்பட்டது என்ற போதிலும் நிலத்துக்கு உச்சவரம்பு கட்ட சட்டம் வந்தபோது கழகம் வரவேற்றது; நாடு அறியாதா இந்த உண்மையினை.

நிலப்பிரபுக்கள் தப்பித்துக் கொள்வதற்கான ஓட்டைகள் சட்டத்திலே இருக்கின்றன என்பதை எடுத்துக் காட்டிற்று, கழகம்.

உச்சவரம்புச் சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ள, நிலப்பிரபுக்கள் செய்திடும் சூழ்ச்சிகளை விளக்கிக் காட்டிற்று.

உச்சவரம்புச் சட்டத்தை ஏய்க்க, நிலப்பிரபுக்கள் செய்துகொண்ட நிலப் பிரிவினைகள், சூதானவை, புரட்டானவை என்பதனைக் கழகம் அம்பலப்படுத்திற்று.

இந்த முறையிலே கழகம் நடந்து கொண்டதே தவிர நிலத்துக்கு உச்சவரம்பு கட்டவே கூடாது. அப்படிப் பட்ட சட்டம் தவறானது, என்று கூறிற்றா? எதிர்த்தா? எடுத்துக்கூறச் சொல்லட்டுமே பார்க்கலாம்.

நில உச்சவரம்புச் சட்டத்தை வரவேற்று அந்தச் சட்டம் மேலும் செம்மையானதாக்கப்பட வேண்டும்; அதில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்பட வேண்டும் என்று வாதாடிய நமது கழகமா சோஷியலிசத்தை எதிர்க்கும் கழகம். பேதையும் இதனை நம்பமாட்டானே! ஆனால், பெரிய இடத்தைப் பிடித்துக் கொண்டவர் பேசுகிறார் இப்படி ஒரு அபத்தத்தை.

இவர் போன்றாரே, சோஷியலிசப் பகைவர்கள் என்று பகிரங்க மாகக் குற்றம் சாட்டுகிறோம்.

இவர் போன்றார்க் கூடிக் குலாவுவதும் தேடிப் பெற்று மகிழ்வதும் முதலாளிகளை என்று மெய்ப்பித்துக் காட்டிக்கொண்டு வருகிறோம்.

கபிஸ்தலமும், வாண்டையாரும், வடபாதியும், நெடும்பலமும், செய்யூரும் பிறவும், காங்கிரசின் கொலுமண்டபத்திலே நாயகர்களாக இருந்து வருவதைக் காட்டுகிறோம்.

சீமான்களுக்காக இந்த ஆட்சியிலே தொடர்ந்து செய்யப்பட்டுவரும் வசதிகள் எவை எவை என்பதனை எடுத்துக்காட்டி வருகிறோம்.

இந்த ஆட்சியின் துணைபெற்று எவ்வளவு வேகமாக முதலாளித்தனம் வளர்ந்து கொண்டு வருகிறது என்பதனை விளக்கிக் காட்டுகிறோம்.

இந்த ஆட்சியின் தயவினால் இலாபவேட்டை நடத்துபவர்கள், இந்த ஆட்சியை நடத்திடும் கட்சிக்கு கோடிக்கணக்கிலே "நிதி' தந்து வருவதற்கான புள்ளி விவரத்தைக் காட்டுகிறோம்.

இவ்விதமாக காங்கிரஸ் நடத்திடும்ட கபடத்தை உடைத்தெறியும் கழகமா சோஷியலிசம் வேண்டாம் என்று கூறிடும், மந்த மதி படைத்தவனும் ஏற்கமாட்டானே! ஆனால், பேசுகிறாரே, பெரியவர்!! ஏன்! எதையும் பேசலாம், என்ற நிலை தமக்கு இருக்கிறது என்ற நினைப்பினால்.

சோஷியலிச தத்துவத்துக்கு முரணாக முதலாளித்து வத்துக்கு அரணாக இருந்து வரும் மோட்டார் பஸ் தொழி லைத் தனிப்பட்ட முதலாளிகளிடம் விட்டு வைக்காமல், சர்க்கார் ஏற்று நடத்தவேண்டும் என்ற மசோதாவைக் கழகம் கொண்டு வந்தபோது எதிர்த்து மாய்த்தவர்கள் யார்? இதே காமராஜர் கட்சி அல்லவா? அன்று சோஷியலிசத் திட்டத்தைப் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்துவிட்டு இன்று சோஷியலிசம் பேசினால், யார் நம்புவார்கள்?

கூட்டிவைத்துக் கேட்கவில்லையா இந்த மகானுபாவர்கள், பஸ் முதலாளிகளை.

பிழைக்கப் போகிறீர்களா?

சாகப்போகிறீர்களா?

காங்கிரசாட்சி ஏற்பட்டால், பிழைத்திருக்க முடியும்!

எதிர்க்கட்சி வெற்றி பெற்றால், செத்தீர்கள். என்ன சொல்லுகிறீர்கள்?

என்ன செய்யப்போகிறீர்கள்?

சாகப்போகிறீர்களா, அல்லது பிழைக்கப் போகிறீர்களா?

பிழைக்க விரும்பினால் காங்கிரசுக்கு நிதி கொடுங்கள்! கழகத்தைத் தோற்கடியுங்கள். என்றெல்லாம். இது உலகறிந்த இரகசியமல்லவா!

அமைச்சர் பிரான்களின் ஊர்வலங்கள், பெரியவரின் பவனி இவற்றின்போது ஊரூருக்கும் ஆயிரக்கணக்கான ரூபாய்களைச் செலவிட்டு அமைக்கப்பட்ட அலங்கார வளைவுகளிலேயே, இது இன்ன பஸ் முதலாளியின் உபயம் - அன்பளிப்பு - என்று பொறிக்கப்பட்டதில்லையா! அதை மக்கள் காணவில்லையா! மக்கள் இவைகளை அடியோடு மறந்தா போய்விடுவார்கள்!

மக்கள் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்கள், புதிய புதிய தொழிற்சாலைகள் கிளம்புவதை; பொட்டலெட்டாம் புது நகர்களாக மாறுவதை; அவ்வளவும் முதலாளிகளின் பாசறையாக இருப்பதனை.

இந்தப் புதிய வளர்ச்சி முதலாளிகளுக்கு ஏற்பட்டிருப்பது காங்கிரசாட்சியினால்தான் என்பது மக்களுக்குத் தெரியாதா!

இரத்தக் கறை படிந்த கரமுடையான் அகிம்சை பற்றிய புதிய அகவலை அரங்கேற்றுவதுபோல, திட்ட மிட்டு முதலாளித்துவத்தை வளர்த்துக் கொண்டு வரும் இவர்களா பேசுவது சோஷியலிசம் பற்றி! அந்தப் புனிதமான கோட்பாட்டைப் பற்றிப் பேச இவர்களுக்கு அருகதை ஏது?

ஆனால், பேசுகிறார்கள்; ஏமாளிகள் நம்பட்டுமே; நம்பாதவர்கூட நம்மை எதிர்த்தா கேட்கமுடியும்! நமது செல்வாக்கென்ன, அதிகார பலம் என்ன, பளபளப்பு என்ன!! இவற்றினைக் கண்டதும் அவர்களுக்குத் தன்னாலே வாயடைத்துப் போய்விடாதா, என்ற நினைப்பு.

தம்பி! காங்கிரசினால் சோஷியலிசத்தை நடைமுறை ஆக்க முடியாது; அந்த உறுதியோ விருப்பமோ அவர்களுக்குக் கிடையாது என்பதற்கு விளக்கமளித்திட ஒன்று கூறுகிறேன்.

இரண்டு திங்களுக்கு முன்பு கோடீஸ்வரரான பிர்லா தம்மையொத்த பெருவணிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார்!

நமக்கு (முதலாளிகள் - தொழில் அதிபர்கள்) ஏற்ற சர்க்கார் காங்கிரஸ் சர்க்கார்தான்.

நாம் காங்கிரஸ் சர்க்கார் அமைவதற்குப் பாடுபட வேண்டும்; ஆதரவு அளிக்க வேண்டும் என்று.

காங்கிரஸ் சோஷியலிசம் ஏற்படுத்தும் என்று தெரிந்தால் பிர்லா இவ்விதம் பேசியிருப்பாரா?

பிர்லா விரும்பி வரவேற்கும் ஆட்சி சோஷியலிச ஆட்சியாகவா இருக்க முடியும்!

என்ன விளக்கமளிக்கிறார்கள் இந்த விந்தைக்கு - பிர்லாவின் ஆதரவுக்கு!

சிந்தையில் கள் விரும்பி சிவ சிவா என்பது போல, முதலாளித்தனத்தை வளர்த்துக்கொண்டே, சோஷியலிசம் பேசுகிறார்கள். இதனைப் பண்டித நேருவின் உடன் பிறந்தார் விஜயலட்சுமி அவர்களே உடைத்து காட்டினார்களே,

காங்கிரஸ் பேசும் சோஷியலிசம் உதட்டளவுதான் என்று.

உதட்டளவுதான் இவர்கள் பேசும் சமதர்மம் என்று நாம் கூறினால், கூரைக்குத் தாவிக் கொக்கரிக்கிறாரே காமராஜர்; வாய் திறக்கிறாரா, அம்மையார் பேசியது கேட்டு, கிலி! சுடச்சுட ஏதாவது கொடுத்துவிடப் போகிறார்கள், செம்மையாக என்ற பயம். ஓடோடி வருகிறார், இங்கு! நம்மை ஏச!! உதட்டளவுதான் நமது சோஷியலிசம் என்று அங்கே உலகப் புகழ் ஈட்டிய அம்மையார் குட்டுகிறார்; அது மோதிரக் கை என்பதாலே இவர் பட்டுக்கொள்கிறார், துடைத்துக் கொள்ளக்கூடத் துணிவற்று. பேசச் சொல்லுங்கள் கழகத்தைப் பற்றி, ஏ! அப்பா! வாய் எத்தனை அகலமாகி விடுகிறது! வார்த்தை எவ்வளவு நாராசத்தில் தோய்த்து எடுத்து வீசப்படுகிறது!

தம்பி! காங்கிரஸ் கட்சி பேசிடும் சோஷியலிசம் போலி என்பதை உணர்ந்து, காங்கிரசிலேயே ஒரு பகுதியினர்.

காங்கிரஸ் சோஷியலிச அணி என்று ஒரு உள் அமைப்பே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

வெட்கம் துளி இருந்தால், ஏ! போக்கிரிகளே! காங்கிரசே சோஷியலிசத்தைத் தன் திட்டமாக, கொள்கையாகக் கொண்டு நடந்துகொள்கிறபோது, காங்கிரசிலேயே இருந்துகொண்டு சோஷியலிச அணி என்ற உள் அமைப்பை நடத்தலாமா; ஊர் என்ன சொல்லும், உலகம் என்ன சொல்லும்; காங்கிரசிலே மிகப் பெரும்பகுதியினர் உண்மையான சோஷியலிஸ்டுகள் அல்ல என்றல்லவா பேசும்; இப்படி கட்சிக்கே ஒரு இழுக்கைத் தேடிக்கொடுக்கிறீர்களே; இது கட்டுப்பாட்டையே குலைத்து விடுவதாகுமே; மரியாதையாக சோஷியலிச உள் அமைப்பைக் கலைத்துவிடுங்கள்; இல்லையென்றால் கட்சியை விட்டு வெளியே செல்லுங்கள் என்றல்லவா காங்கிரசின் தலைவர் கட்டளை பிறப்பிப்பார்! செய்யச் சொல்லுங்கள், பார்ப்போம்! பீடமே ஆடிப்போகும்! ஆகவே, உள்ளே இருந்து கொண்டு அவர்கள் குட்டுகிறார்கள்; இவர் அந்த எரிச்சலை இங்கே கொண்டுவந்து கொட்டுகிறார், கொடி பிடித்தானூரிலும் கொடுத்தானூரிலும்.

இவர்கள் பேசுவது போலி சோஷியலிசம், நாங்கள்தான் உண்மையான சோஷியலிசத்தைக் கொண்டு வரப்போகிறோம் என்று சொல்லுவதாகத்தானே பொருள் - காங்கிரசுக்குள்ளேயே ஒரு சோஷியலிச அணி செயல்படும் விந்தை. ஆஹா நம்மோடு இருப்பவர்களே நம்மைப் பற்றிச் சந்தேகப்படுகிறார்களே என்று பதறுகிறாரா? எப்படிப் பதறுவார்! அவர்கள்தான் தயாராக இருக்கிறார்களே, வெளியே சென்று இவர்களின் ன்பர்சோஷியலி சத்தை வெளுத்துக் கட்ட - அந்தப் பயத்தால், பெட்டிப் பாம்பாகி விடுகிறார்! இங்கு வந்து சீறுகிறார்!!

சோஷியலிசம் என்றால் என்ன என்று புரிந்து கொள்ளாமல், வாயால் சோஷியலிசம் பேசிக் கொண்டிருக்காதீர்கள்.

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Chennai, Tamil Nadu.