எல்லோராலும் முடிகிறதா இப்படித்
தெளிவுபெற; பொருள் என்ன இந்த நிலைமைக்கு என்று புரிந்துகொள்ள
முடிவதில்லை. எனவேதான், அவர்களிடம் போய்க் கலகம் மூட்டிப் பார்க்கிறார்கள்.
காங்கிரஸ் மட்டும் இந்தத் தொகுதியில் வெற்றிபெற்றால், என்னென்ன
வேண்டுமோ அவ்வளவும், கண்மூடிக் கண் திறப்பதற்குள் சாதித்துக்கொள்ளலாம்
என்று நாக்கில் தேன் தடவுகிறார்கள்.
ஓட்டு வாங்குவதற்காக மட்டுமே,
வெளியே இப்படிக் காங்கிரஸ் தலைவர்கள் பேசுகிறார்கள்; சட்டசபைக்கு
உள்ளேயோ, சஞ்சலத்தோடு பேசுகிறார்கள்; காங்கிரசாட்சியின் சீர்கேடுகளை
இடித்துக் கூறுகிறார்கள். காங்கிரசின்மீது ஒரு தூசு விழுந்தால்
தம் கண்ணில் விழுந்ததுபோலக் கருதிக் குமுறுவார், கிருஷ்ணசாமி
நாயுடு எனும் காங்கிரஸ் எம். எல். ஏ. அவராலேயே தாளமுடியாமல்,
"கிராம அபிவிருத்தி வேலைகளைப்
பொறுத்த மட்டில் பொது மக்களுக்கு அதிர்ப்தி வளர்ந்து கொண்டு
வருகிறது.''
என்று மந்திரிகளைப் பார்த்துக்
கூறினார், சட்டசபையில்,
குற்றம் குறைகளை எடுத்துக் காட்டுவதும்
கண்டிப்பதும், மந்தமாக உள்ள சர்க்காரின் போக்கை மாற்றும். அதற்காகத்தான்
காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் அவ்விதம் பேசுகிறார்கள் என்று
சமாதானம் தேடிக்கொள்ளக்கூடும். உண்மையில் குறைகளைக் கூறக்கேட்கும்
மந்திரிகள், துடித்தெழுந்து காரியமாற்றி நிலைமைகளைச் சரிசெய்கிறார்களா
என்றால், அதுதான் இல்லை. உள்ள குறைகளை, ஊழல்களை, சீர்கேடுகளை,
முறைகேடுகளை எடுத்துச் சொன்னபடி இருக்கிறார்கள். மந்திரிகளோ,
அவைகளைக் காதில் வாங்குவதாக இல்லை.
"நாங்கள் தொகுதியிலே இருக்கும்
குறைபாடு களைப் பற்றிக் குறிப்புகள் அனுப்புகிறோம். பல விண்ணப்பங்களை
அனுப்புகிறோம். ஆனால் அவை களுக்கெல்லாம் பதில் அனுப்புவதில்லை.''
என்று சட்டசபையில், காங்கிரஸ்
எம். எல். ஏ. ஜி. பி. மாணிக்கம் என்பவர், குறைபட்டுக்கொண்டார்.
காங்கிரஸ் வெற்றி பெறாத தொகுதிகளிலே
இருந்து அனுப்பப்படும் மனுக்களைக் கவனிக்கமாட்டார்கள் என்று
சில குறைகுடங்கள் கூறுகின்றன. மாணிக்கம், காங்கிரஸ்காரர். அவர்
அனுப்பிய மனுக்களும் விண்ணப்பங்களும். காங்கிரஸ் மந்திரிகளால்
கவனிக்கப்படவில்லை என்பதை அவரே எடுத்துக் கூறுகிறாரே, இதற்கென்ன
சொல்வது!
அண்ணாத்துரை போன்ற காங்கிரஸ்
எதிர்ப்பாளர்கள் அனுப்பும் மனுக்களை, காங்கிரஸ் மந்திரிகள்,
குப்பைக் கூடைக்குத்தான் அனுப்புவார்கள்; காரியம் நடக்காது என்று
தரக்குறைவாக, அரசியல் அநாகரிகப் பேச்சுப் பேசுகிறார்கள் அரைவேக்காடுகள்!
காங்கிரஸ் எம். எல். ஏ. அனுப்பிய மனுக்கள் எந்தக் கூடைக்குப்
போயின என்பதைச் சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
"இதில் எங்களுக்குத்தான் கஷ்டம்
அதிகமாக இருக்கிறது. என்ன வேலை செய்யவேண்டுமென்று தெரிவதில்லை.
போட்ட விண்ணப்பத்திற்குப் பதில் இல்லையென்றால் நாங்கள் என்ன
செய்வது.''
என்று கேட்கிறார், மாணிக்கம்,
காங்கிரஸ் எம். எல். ஏ.
காங்கிரஸ்காரர், எம். எல். ஏ.
யாகத் தேர்ந்தெடுக்கப் பட்டால், என்னென்ன நன்மைகளோ கிடைக்கும்
என்று பேசுகிறார்களே, என்ன பலன் கண்டார்? மாணிக்கம் எனும் காங்கிரஸ்
எம். எல். ஏ. காங்கிரசுக்கு எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கும்
எம். எல். ஏ. க்களின் எதிரிலேயே, காங்கிரஸ் அமைச்சர்களின் அலட்சியப்
போக்கைக் கண்டிக்கிறார்கள், எங்கள் விண்ணப்பங்களைக் குப்பைக்
கூடைக்கு அனுப்பி விடுகிறார்களே என்று பேசி ஆயாசப்படுகிறார்கள்.
நிர்வாகத்திலே ஒழுங்கு இல்லை,
சுறுசுறுப்பு இல்லை, பொறுப்பு இல்லை என்று எதிர்க்கட்சிக்காரர்கள்
கூறும்போது, மீசை படபடக்கிறது, கோபம் கொந்தளிக்கிறது, காங்கிரஸ்
தலைவர்களுக்கு. அதிலும் கழகத்தார் பேசிவிட்டாலோ, வெந்த புண்ணிலே
வேல் சொருகுவதுபோல் இருக்கிறதே என்று கூறுகிறார்கள்.
இல்லாததையா எதிர்க்கட்சியினர்
கூறுகிறார்கள்? வேண்டு மென்றே, பழி சுமத்தவேண்டும் என்ற கெட்ட
எண்ணத்துடன் பேசுவதுதான் எதிர்க்கட்சிக்காரர்களின் போக்கு என்று
அங்கலாய்த்துக்கொள்ளும் அன்பர்கள், இதற்கு என்ன பதில் கூறுகிறார்கள்
என்பது தெரியவேண்டும்.
"நம்முடைய அரசாங்கத்திலிருந்து
இலட்சக்கணக் கான பண உதவி ஏழை விவசாயிகளுக்கும், பிற்பட்ட வகுப்பாளர்களுக்கும்
அளிக்கப்படுகிறது. ஆனால் அவற்றை அப்படியே நேரிடையாக விவசாயிகள்
பெறமுடியாதபடி இலஞ்சம் நடமாடுகிறது. அதிகாரி களை அணுகி அந்தப்
பண உதவி முழுவதையும் பெறுவதற்குள் விவசாயிகள் பாதிப் பணத்தை
இழந்துவிடக்கூடிய நிலைமையில் இருக்கிறார்கள்.''
என்று முதியவர் கோமதி சங்கர தீட்சதர்
எனும் காங்கிரசு எம். எல். ஏ. சட்டசபையில் பேசியுள்ளார்.
இலஞ்சம் நடமாடுகிறது என்று காங்கிரஸ்
எம். எல். ஏ. யே கூறுகிறார்! கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்
காங்கிரஸ் மந்திரிகள்!!
எதிர்க்கட்சிக்காரர்கள் என்னென்ன
குறைபாடுகள் இந்த ஆட்சியிலே இருப்பதாகச் சொல்லுகிறார்களோ,
அவைகளையே, காங்கிரஸ் எம். எல். ஏ. க்களும் கூறுகிறார்கள். வெட்கம்,
துக்கம், கோபம், எதுவுமின்றிக் காணப்படுகிறார்கள் மந்திரிமார்!
எதிர்க் கட்சிக்காரர் இதுபோலப் பேசினாலோ, ஏசுகிறார்கள். இது
எந்தவகையான நியாயமோ தெரியவில்லை.
இடையிடையே இரண்டொரு புகழுரைகளை
வீசிவிட்டு, கழகத்தைத் தாக்கி நாலு வார்த்தை பேசிவிட்டு, காங்கிரஸ்
எம். எல். ஏ. க்கள் ஆட்சியின் போக்கைக் கண்டிக்கிறார்கள்.
ஆயிரம் திட்டட்டும், நம்மைக் கைவிட்டுவிடாமல்
இருக்கிறார்கள் அல்லவா, நமது கட்சியில் இருக்கிறார்கள் அல்லவா,
அது போதும் என்பது மந்திரிகளின் எண்ணம்.
அதிகமாகக் கண்டித்துப் பேசிவிட்டால்,
அடுத்த முறை கட்சியின் தயவு கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பயம்,
சட்டசபையில் இடம்பெற்ற காங்கிரஸ்காரர்களுக்கு.
இரு சாராரும், ஒருவர்மீது ஒருவர்
ஓராயிரம் குறைகள் கூறிக்கொண்டே, "குடும்பம்' நடத்துகிறார்கள்.
அதிகாரம் காங்கிரசிடம் இருப்பதால்
மட்டுமே, பிய்த்துக் கொண்டுவராமல், ஒட்டிக்கொண்டு, கிடைத்ததைச்
சுவைத்துக் கொண்டு பலர் இருக்கிறார்கள்.
அதுபோலவே, பண பலம், ஆள்கட்டு,
ஜாதி பலம் போன்றவைகள் உள்ளவர்களை இழுத்துப்போட்டு வைத்தால்,
அவர்கள் எப்பாடுபட்டாகிலும் "ஓட்டு' வாங்குவார்கள், கட்சி வெற்றி
அடையும், அதிகாரத்தைக் கைப்பற்றலாம் என்பது காங்கிரஸ் தலைவர்களின்
எண்ணம்.
அதனால்தான், காங்கிரசுக்கு எந்தவிதத்திலும்
முன் தொடர்பு இல்லாதவர்கள், ஊர் மக்களுக்கு ஒரு துளி உதவியும்
செய்தறியாதவர்கள், சொந்த இலாபத்துக்காகக் காலமெல்லாம் பல தொழில்களிலே
ஈடுபட்டு உழல்பவர்கள், இன்று காங்கிரசில் சேர்ந்துகொண்டு, தங்கள்
இலாப வேட்டைக்குக் குந்தகம் வராமல் பார்த்துக்கொள்கிறார்கள்.
இந்த இடுக்கித் தாக்குதலில் சிக்கி,
ஏழை எளியோர் தொல்லைப்படுகிறார்கள்.
இந்த இடுக்கி இருக்கிறமட்டும்,
மக்களாட்சி முறை வெறும் கேலிக்கூத்தாகத்தான் ஆக்கப்பட்டுவிடும்.
மக்களுக்கு "ஓட்டு' இருக்கும்; ஆனால், அது அச்சம், தயை, தாட்சணியத்துக்குப்
பறிகொடுக்கப்படும் பரிதாபநிலை இருக்கும்.
காங்கிரஸ்காரர் வெற்றிபெறாத தொகுதிகளில்
காரியம் சரிவர நடைபெறாது என்று பயமூட்டுவார்கள் - பயமூட்டுகிறார்கள்.
காங்கிரஸ் எம். எல். ஏ.-க்களே
காங்கிரசாட்சியின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிப் பேசியிருப்பதிலிருந்து,
காங்கிரஸ் வெற்றிபெற்ற இடங்கள். பொன்பூத்த இடங்களாகி விடவில்லை;
அங்கு ஆஸ்பத்திரிகளில்,
டாக்டர் இல்லை!
நர்சு இல்லை!
கம்பவுண்டர் இல்லை!
மருந்து இல்லை!
இலஞ்சம் தாண்டவமாடுகிறது!
நிர்வாகம் சுறுசுறுப்பாக இல்லை!
என்பது விளக்கமாகத் தெரிகிறது.
கிராமங்களையும், பழங்குடி மக்களையும், பாட்டாளி களையும், காங்கிரசாட்சி
புறக்கணித்தும், கேவலப்படுத்தியும், கொடுமைப்படுத்தியும் வருகிறது
சலுகைகள், வசதிகள், அந்தஸ்துகள்,
இலாபம் தரும் தொழில்கள் யாவும், முதலாளிகளுக்குத் தரப்படுகின்றன.
காங்கிரசுக்கட்சி அது யாருக்காக?
கனதனவான், முதலாளிக்காக!
என்ற நிலைமைதான் இருக்கிறது.
காங்கிரஸ் தலைவர்களோ, பொது மக்கள்
இந்தச் சூது சூழ்ச்சியைத் தெரிந்துகொள்ளவில்லை என்ற எண்ணத்தில்,
சமதர்மம் பேசுகிறார்கள். இவர்கள் பேசும் சமதர்மத்துக்கும் உண்மையான
சமதர்மத்துக்கும் சம்பந்தமே கிடையாது. இவர்களுக்குச் சமதர்மத்
திட்டத்தை நிறைவேற்றும் ஆர்வமும் கிடையாது; நம்பிக்கையும் நிச்சயம்
இல்லை.
காங்கிரசாட்சி ஏற்பட்ட பிறகு -
இந்தப் பதினான்கு ஆண்டுகளில் முதலாளிகளின் ஆதிக்கம் மலைபோல
வளர்ந் திருக்கிறது. ஆனால், மக்களை மயக்க, ஊர் மெச்ச, உலகம்
மெச்ச, உதட்டளவில் சமதர்மம் பேசுகிறார்கள்.
காட்டிலுள்ள புலிகள் எல்லாம்
கடும் தவம் செய்த கதைபோல.
காங்கிரஸ் கனவான் பேசுகிறார்
கதை கதையாக, சமதர்மம்!
★
தம்பி! இதனை எல்லாம் நாட்டினருக்கு
எடுத்துக்கூற வேண்டுமே! நானே ஒவ்வொரு இடத்துக்கும் வந்திருந்து
இவைகளைக் கூறமுடியுமா - நேரம்தான் கிடைக்குமா - உடல் நிலைதான்
இடம் கொடுக்குமா!
எனவேதான், உன் மூலம் ஊராருக்கு
இவைகளை அறிவிக்க எண்ணுகிறேன். நாட்கள் அதிகம் இல்லை! கூற வேண்டியவைகளோ
அடுக்கடுக்காக!!
பெரியாரின் தூற்றலைக் கேட்டோ,
காங்கிரசாரின் கபடப் பேச்சினைக் கேட்டோ, பொது மக்கள் ஏமாந்துபோய்விடவில்லை
என்பதை, ஊரார் உரையாடல் காட்சிகளைக் கண்டால், உணர்ந்துகொள்வாய்.
ஒரு காட்சி காட்டட்டுமா? நடந்தது
எவ்விடத்தில் என்று தானே கேட்கிறாய்? நாட்டில், ஓரிடத்தில்!
இரு தாய்மார்கள்! காங்கிரசுக்காக ஓட்டுக் கேட்டுவிட்டு, "தரகர்'
போனபிறகு, உரையாடுகிறார்கள் பெயர் கேட்கிறாயா? வைத்துக் கொள்ளேன்,
கன்னி - பொன்னி - என்று.
கன்னி:
வந்தவர் யார்? பொன்னம்மா?
வளைந்து நெளிந்து நின்றாரே!
பேச்சில் வெல்லம் கலந்தாரே
பேந்தப் பேந்த விழித்தாரே!
பொன்னி:
வாழவிடாமல் வரி போட்டு
வாட்டிய காங்கிரஸ்காரரடி
கேட்டுவிட்டேன் துணிவாக
"ஓட்டு' இல்லை, "போ' என்றேன்.
கன்னி:
காதில் இருந்தது காணோமே
காரணம் என்ன? பொன்னம்மா?
பொன்னி:
காங்கிரசாட்சியில் போட்ட வரி
கட்ட, கம்மலை விற்றுவிட்டேன்.
கன்னி:
வீட்டுக்காரர், சௌக்கியமா?
வேலை கிடைத்துவிட்டதுவா?
பொன்னி:
வேதனை கேளடி, பொன்னம்மா!
வேலை இல்லை! எனும் பலகை
எழுதும் வேலை அவருக்கு!
நாள் முழுதும் பாடுபட்டால்
கிடைப்பது ஒண்ணரை ரூபாய்தான்!
கன்னி:
ஏழைகள் வாழச் சுயராஜ்யம்
என்று பேசினார் இனிப்பாக,
ஏமாந்து போனோம் பொன்னம்மா!
வருகுது தேர்தல் விரைவாக
வாட்டிய காங்கிரசை ஓட்டிடலாம்
ஓட்டுகள் நம்மிடம், பொன்னம்மா!
"உதயசூரியன்' ஒளிவிடவே
உழைப்பவர் வாழ்வு தழைத்திடவே
பாடுபடுவது, தி. மு. க.
பொன்னி:
அண்ணன் அதைத்தான்
சொல்லுகிறார், இருவண்ணக்கொடியை
ஏந்துகிறார், திண்ணம் வெற்றி என்று கூறிநித்தம் வாழ்த்துகிறார்.
கன்னி:
உண்மை அதுதான், பொன்னம்மா!
"உதயசூரியன்' நம் சின்னம்
"ஓட்டுகள்' அதற்கே, போட்டிடுவோம்.
தாய்மார்கள் தெளிவாகப் புரிந்துகொண்டுவிட்டார்கள்.
தம்பி! காங்கிரசாட்சி, ஏழை எளியோருக்கு இல்லை என்கிற உண்மையை.
அவர்களுக்கு ஏற்பட்டுள்ள தெளிவைத் திகிலூட்டிப் போக்கிவிட,
காங்கிரஸ் பலமான முயற்சியில் ஈடுபடுகிறது. ஆனால் அரிசிப்பானை
அரசியல் பேசுகிறது! காங்கிரஸ் சாயம் வெளுத்துப்போகிறது. தாய்மார்கள்
அதிக விலைகொடுத்து வாங்கிடும் சேலையின் சாயம் போவது காணும்போதே,
தொட்டதற்கெல்லாம் வரி போடுவது கண்டு, அவர்கள் வாட்ட மடைந்துள்ளனர்.
நாட்டை மீட்டவர்கள் என்கிறார்களே! நல்லவர்கள், நம்மவர்கள், என்கிறார்களே!
என்று கனிவுகாட்டி ஓட்டுப் போட்டார்கள் - ஆனால் வீடு வாழவில்லை,
வேதனை குறையவில்லை, காண்கிறார்கள். எனவே, காங்கிரசாட்சியை நீடிக்கவிடக்கூடாது
என்று எண்ணுகிறார்கள். ஆடவர் பேசுவது, அந்த உறுதியை அதிகப்படுத்துகிறது.
ஒரு தாய் வயிற்றில் பிறந்தோமா; ஒட்டு உறவு கொண்டோமா என்று
கொட்டும் பேச்சுப் பேசாத, குணமுடையார் இருவர், அண்ணன் - தம்பி
முறையுடன் பேசுகின்றனர்; எங்கோ ஓரிடத்தில். பெயரா? வைத்துக்கொள்ளேன்,
காசி, மாசி என்று.
காசி:
வளருவது காங்கிரசு ஆட்சியிலே
என்ன அண்ணேன்?
வகையாக எனக்கதனைச் சொல்லு
அண்ணேன்!
மாசி:
எதை என்று நான் உனக்குக்
கூறுவேன், தம்பி!
என் இதயம், குமுறுதே, எண்ணிக்
கொண்டால்;
கள்ள மார்க்கட்டு வளருதப்பா!
கனதனவான் இலாபம் பெருகுதப்பா!
வரிகள் சரமாரி ஏறுதப்பா!
வறுமை பிணிபலவும் ஓங்குதப்பா!
பெர்மிட்டு லைசென்சு பெருத்துப்போச்சு!
பெற்றுத்தரக் கங்காணிக் கூட்டமாச்சு!
ஓட்டுக்குத் தர காசு குவிந்துபோச்சு!
உண்மை, அன்பு, அறம், பண்பு இளைத்துப்போச்சு
ஆட்சியில் ஆணவம் அதிகமப்பா!
அச்சம்கொண்ட மக்கள் தொகை கொஞ்சமல்ல!
அடுத்துவரும் தேர்தலிலே காங்கிரஸ் கெலித்தால்
அடிமைநிலை, தமிழருக்கு,
முற்றுமப்பா!!
காசி:
ஐயய்யே! அண்ணேன்! இதற்கு
என்ன செய்யலாம்? அநியாயம் ஒழிய
வழி ஒண்ணுமில்லையா?
மாசி:
கண்ணான என் தம்பி! வழி இருக்குது!
பொன்னான வாய்ப்பும் கிடைத்திருக்குது,
பொதுத் தேர்தல் சமயத்தில் பொறுப்பை
உணர்ந்து,
பொல்லாங்கை ஒழித்திட நாம் எல்லாம்கூடி,
போட்டிடலாம் "ஓட்டுகளை'
கழகச் சின்னம் அதற்கே!!
திக்கற்றோம் என்றே நாம் தேம்ப வேண்டாம்!
தி. மு. க. துணை இருக்கு, பயமே வேண்டாம்!
தி. மு. க. சின்னம்தான், "உதய சூரியன்'
தீமைகளை ஒழித்துக்கட்ட "உதய சூரியன்'
***
இதைத்தான் தம்பி! நாடு அறிய வேண்டும்.
ஒவ்வொரு வீடும் அறிய வேண்டும். அதனை அறியச் செய்வதற்காகத்தான்,
நமது கழகக் காவலர்கள் காஞ்சியில் முகாமிட்டிருக்கிறார்கள். அவர்களைக்
கண்டதால் ஏற்பட்ட களிப்பு, என் களைப்பை யெல்லாம் போக்கி, இவ்வளவு
நேரம் எழுத வைத்தது. மணி தெரியுமா, தம்பி! நாலு!! விடியப்போகிறது!
உதயசூரியன் எழக் காத்திருக்கிறான்! உனக்கு நான் கூறுகிறேன்,
ஊராருக்கு, நீ, சொல்லு.
அண்ணன்,
3-12-61