மேலும் கிராம ஆஸ்பத்திரிகளில்
தகுந்த மருந்து களோ, போதிய மருந்துகளோ கொடுக்கப்படுவதில்லை.
இதுபற்றி ஆஸ்பத்திரி வைத்தியர்களிடம்
கேட்டால். அவர்கள் ஆஸ்பத்திரியில் மருந்து இல்லை, நாங்கள் என்ன
பண்ணுவோம்? என்று சொல்கிறார்கள்.
ஆஸ்பத்திரியில் ஊசி மருந்து இல்லாத
நிலையில், நோயாளிகளுக்கு ஊசி போடவேண்டியிருந்தால், அப்போது
வைத்தியர்கள், நீங்கள் 3 ரூபாய் கொடுத்தால் உங்களுக்கு பிரைவேட்டாக
(தனியாக) ஊசிபோடுகிறோம் என்று. நோயாளிகளிடம் சொல்கிறார்கள்.
இந்த நிலைமையை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.''
டாக்டர் இல்லை! நர்சு இல்லை! கம்பவுண்டர்
இல்லை என்று சொன்னார் முனுசாமிக் கவுண்டர், காங்கிரஸ் எம்.
எல். ஏ. அங்கு மருந்தே இல்லை என்று கூறுகிறார் மற்றொரு காங்கிரஸ்
எம். எல். ஏ. எஸ். இராமலிங்கப் படையாச்சி!!
காங்கிரஸ் ஆட்சி நல்லபடி காரியங்களைச்
செய்யவில்லை என்று கழகத் தோழர்கள் சொன்னால், கண், கோவைப்பழம்
போலச் சிவந்துவிடுகிறது, புலிபோலச் சீறுகிறார்கள் காங்கிரஸ்
மந்திரிகள், தலைவர்கள்!! டாக்டர் இல்லாத, மருந்து இல்லாத ஆஸ்பத்திரி
கட்டுகிற காங்கிரஸ் சர்க்காரை வாழ்த்தவா முடியும்! கண்டிக்காமலிருக்க
முடியுமா! எதிர்க்கட்சி கண்டனம் கூறினால், எத்தனை இலட்சம் செலவானாலும்,
எதிர்க் கட்சியை, கழகத்தை ஒழித்துக்கட்டிவிடுவேன் என்று மிரட்டுகிறார்கள்.
பொது மக்களுக்காக, ஆட்சியில்
உள்ள குறைகளை எடுத்துக்காட்ட எதிர்க்கட்சி இல்லை என்றால், ஆட்சி
இன்னும் எவ்வளவு மோசமானதாகிவிடும், நாடு மேலும் எவ்வளவு வேகமாக
நாசமாகிவிடும் என்பதை எண்ணிப் பாருங்கள்.
"பல கிராமங்களில் குடி தண்ணீர்
வசதி இல்லை. பல கிராமங்களில் குடி தண்ணீர் மிகவும் மோசமான தாக
இருக்கிறது. குறிப்பாகத் திருச்சி ஜில்லாவில் உடையார்பாளையம்
தாலுகாவில் குடி தண்ணீர் மிகமிக மோசமான தாக இருக்கிறது. அங்கே
பூமியை 100 அடி ஆழம் வெட்டினாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. ஆகவே
குட்டை குளங்களில் உள்ள குடி தண்ணீரை அங்குள்ள மக்கள் குடித்து
வருகிறார்கள்.''
என்றும் கூறுகிறார் இராமலிங்கப்
படையாச்சி. காங்கிரஸ் வெற்றிபெற்ற தொகுதியிலே உள்ள நிலைமை இது!
காங்கிரஸ் வெற்றிபெறாத தொகுதிகளில்தான் நிலைமை மோசமாக இருக்கிறது!
ஆகவே காங்கிரசுக்கு ஓட்டுப்போட்டுத் தொகுதியைச் செம்மையானதாக்கிக்
கொள்ளுங்கள் என்று பேசுகிறார்களே, சில பேச்சாளர்! காங்கிரஸ்
வெற்றிபெற்ற தொகுதியில் உள்ள நிலைமையைக் காங்கிரஸ் எம். எல்.
ஏ. யே, காங்கிரஸ் அமைச்சர்கள் முன்னிலையில் எடுத்துக்காட்டிக்
கண்டிக்கிறாரே, இதற்கு என்ன பதில் கூறுகிறார்கள்? வெட்கமாக இல்லையா
காங்கிரஸ் ஆட்சியின் இலட்சணத்தைக் கண்டித்துக் காங்கிரஸ் எம்.
எல். ஏ. யே பேசும்போது.
ஏன், காங்கிரஸ் எம். எல். ஏ. இராமலிங்கப்
படையாச்சி அப்படிப் பேசுகிறார்?
காங்கிரசுக்கு ஓட்டுப்போடுங்கள்,
கஷ்டமெல்லாம் போய்விடும், வசதிகள் கிடைக்கும், வாழ்க்கை மேம்பாடு
அடையும்
என்றெல்லாம் சொல்லித்தான் அவர்
"ஓட்டு' வாங்கினார்.
அவர் சொன்னது எதுவும் நடக்கவில்லை.
குடிதண்ணீர் வசதிகூடக் கிடைக்கவில்லை. மக்கள் இராமலிங்கப் படையாச்சியை
- "ஐயா! காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டால், பாலும் தேனும் கலந்து
ஆறாக ஓடும் என்று சொன்னீர்களே! குடிக்கத் தண்ணீர்கூடக் கிடைக்கவில்லையே!
இப்படி இருக்கிறதே உங்கள் ஆட்சியின் இலட்சணம்?'' என்றெல்லாம்
கேட்கமாட்டார்களா! அந்த இடி பொறுக்கமாட்டாமல்! அவர், பாவம்,
சட்டசபையில் பேசுகிறார், மக்கள் படுகிற கஷ்டம் அவ்வளவு இருக்கிறது!!
அசுத்தத் தண்ணீரைக் குடிப்பதால்
அங்குள்ள மக்களுக்கு நரம்புச் சிலந்தி என்ற வியாதி வருகிறது.
அது அங்கே மிகவும் அதிகமாக இருக்கிறது. அங்கே 80 சதவிகித மக்களுக்கு
நரம்புச் சிலந்தி வந்திருக்கிறது.
அங்குள்ள மக்கள் எல்லோரும் மிகவும்
கஷ்டப் படுகிறார்கள். மக்கள் கைகால்களில் கட்டுகள் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களிடம் அது என்ன கட்டு? என்று கேட்டால், நரம்புச் சிலந்திக்
கட்டு என்கிறார்கள். பெருவாரியான மக்களுக்கு இந்த வியாதி வந்திருப்ப
தால் அங்குள்ள மக்கள் மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களுடைய கவலையைப் போக்க அரசாங்கம் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை.''
எவ்வளவு பொறுப்பற்ற முறையிலே,
காங்கிரஸ் சர்க்கார் நடந்துகொண்டு வருகிறது என்பது புரிகிறதல்லவா?
சட்டசபை சென்று, ஒரு காங்கிரஸ்
எம். எல். ஏ. வாதாடினால்தான் தொகுதிக்கு நன்மை கிடைக்கும்;
எதிர்க் கட்சி வெற்றி பெற்றுப்போனால், தொகுதிக்கு நன்மை கிடைக்காது
என்று சொல்கிறார்களே சிலர், இதோ, காங்கிரஸ் எம். எல். ஏ. தான்
முறையிடுகிறார், அரசாங்கம் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
என்று. இதற்கென்ன சொல்கிறார்கள்?
குடி தண்ணீர் வசதிகூட இல்லை, காங்கிரஸ்காரர்
வெற்றி பெற்ற தொகுதியில்!
திருச்சி ஜில்லாவில் மட்டுந்தான்
இந்த நிலைமை என்று எண்ணிவிடாதீர்கள்.
மதுரை மாவட்டத்தில் பழனி தொகுதி
இருக்கிறது. அந்தத் தொகுதி எம். எல். ஏ. இலட்சுமிபதி ராஜு -
காங்கிரஸ்காரர் - கடுங்கோபம் வரும் காங்கிரசைத் தாக்கினால்.
. . அவர் பேசுகிறார், கேளுங்கள், தமது தொகுதி நிலைமைபற்றி.
"பல இடங்களில் குடி தண்ணீர் வசதி
இல்லாமல் அங்குள்ள கிணறுகளிலுள்ள தண்ணீரைக் குடித்துக் கொண்டு
பல வியாதிகளால் அங்குள்ள மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நரம்புச் சிலந்தி என்று சொல்லக்கூடிய
ஒரு பெரிய வியாதியால் கஷ்டப்பட்டுக்கொண்டிருக் கிறார்கள்.
அதனால் அவர்கள் படும் கஷ்டம் கொஞ்ச
நஞ்சமல்ல.
ஒரு குடும்பத்தைப் பார்த்தால்
அதில் நாலைந்து பேர் கட்டுகளைக் கட்டிக்கொண்டிருப்பார்கள்.
அவர்கள் கட்டிக்கொண்டிருக்கும் கட்டுகளை அவிழ்த்துப் பார்த்தால்,
உள்ளே ஒரு சிறிய நரம்பு கம்பிபோல் தெரியும். அதை இழுத்துக்
கட்டிக்கொண்டிருப்பார்கள். அதனால் அவர்கள் படும் கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல.
அதற்கு எண்ணெய் தடவிக் கட்டிக்கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்ட
வியாதிக்குக் காரணம், அங்குள்ள கிணறுகளிலுள்ள தண்ணீரை எடுத்துக்
குடித்ததால். அப்படிப்பட்ட வியாதிகளால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.''
பதினான்கு ஆண்டுகளுக்கு மேலாகக்
காங்கிரசாட்சி நடத்தும் கிராமங்களில்,
குடி தண்ணீர் வசதி இல்லை.
நரம்புச் சிலந்திபோன்ற நோய்
வாட்டுகிறது.
ஆஸ்பத்திரிகளில் டாக்டர் இல்லை,
கம்பவுண்டர் இல்லை, மருந்து இல்லை!
இவைகளை எடுத்துக்காட்டிக் கண்டித்தாலோ,
காங்கிரஸ் தலைவர்களுக்கு பொறுமை இருப்பதில்லை; ஆத்திரம் பீறிட்டுக்
கொண்டு வருகிறது.
காங்கிரஸ் எம். எல். ஏ. க்களாலேயே
சகித்துக்கொள்ள முடியவில்லை காங்கிரஸ் ஆட்சியின் அவலட்சணங்களை!
கிராமங்களிலே, குடி தண்ணீர் வசதியில்லாமல்,
நரம்புச் சிலந்திபோன்ற கொடிய நோய்களால் பீடிக்கப்பட்டுக்
கஷ்டப்படும் மக்கள் யார்?
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்.
ஆதிதிராவிட சமுதாயத்தினர்.
இவர்களின் எண்ணிக்கை பல கோடி!
இவர்களிடம் தந்திரமாகப் பேசி, "ஓட்டுகளை' வாங்கிக்கொண்டு, இவர்களைக்
காங்கிரசாட்சி இந்தக் கதியிலே வைத்திருக்கிறது. கேட்டால் கோபம்
வருகிறது கோலேந்திகளுக்கு! ஒரு கோடி செலவானாலும் சரி, எதிர்க்
கட்சிகளை ஒழித்துக்கட்டிவிடுகிறோம் என்கிறார்கள்.
எதிர்க் கட்சிகளை ஒழித்துக்கட்டுவது,
காங்கிரசாட்சியிலே உள்ள குறைபாடுகளைக் கண்டிக்கும் காங்கிரஸ்காரர்களை
சட்டசபைக்குப் போக ஒட்டாமல் தடுப்பது என்ற திட்டமிட்டுத் தான்
காங்கிரஸ் கட்சியை ஆட்டிப்படைக்கும் பெரியவர்கள் நடந்துகொள்கிறார்கள்
ஐயோ! பாவம் நரம்புச் சிலந்தி கொடுமையான வியாதியாயிற்றே, அதனால்
அவதிப்படுவர் நமக்கு ஓட்டு அளித்த ஏழை எளியோர்களாயிற்றே, அவர்களைக்
காப்பாற்றுவோம் என்று துடித்தெழுந்து காரியமாற்றுகிறதா காங்கிரஸ்
அரசு? இல்லை! மாறாக, இதையெல்லாம் அம்பலப் படுத்துகிறவர்களை அழித்துவிடவேண்டும்
என்ற ஆத்திரம்தான் அவர்களுக்கு ஏற்படுகிறது.
"அரிஜனங்கள் இரண்டு மூன்று மைல்கள்
சென்று, தலையில் குடத்தை வைத்துக்கொண்டு போய் தண்ணீர் கொண்டுவர
வேண்டியதாக இருக்கிறது. அதனால் அரிஜனங்கள் படும் கஷ்டம் கொஞ்ச
நஞ்சமல்ல.''
இதனையும் பழனி தொகுதி எம். எல்.
ஏ.தான் கூறுகிறார்.
பழனி தொகுதி மக்கள் காங்கிரசுக்கு
ஓட்டு போட்டுக் கண்ட பலன் என்ன? நரம்புச் சிலந்தி!!
காங்கிரஸ் வெற்றிபெறாத இடங்களிலே,
காங்கிரஸ் தலைவர்கள் சென்று, காங்கிரசை வெற்றிபெறச் செய்யாத
தாலேயே, இந்தத் தொகுதி சீர்படவில்லை என்று செப்பு கிறார்கள்.
பழனி தொகுதிக்கு என்ன? காங்கிரஸ் கட்சிக்குத்தானே மக்கள் ஓட்டுகளைத்
தந்தனர்? பிறகு எதற்காக, பழனி தொகுதிக்கு இந்தக் கதி?
காங்கிரஸ் எம். எல். ஏ. இருக்கும்
தொகுதியிலே, இத்தனை அவதி ஏன் காணப்படுகிறது?
"கிராமத்திலுள்ள ஒரு தாய் பிரசவிக்கவேண்டு
மானால் அவள் தலைநகர ஆஸ்பத்திரிக்கு வர வேண்டியதாக இருக்கிறது.
அப்படி வருவதற்குள், அவள் பெரிய மரண வேதனையை அடைய வேண்டியதாக
இருக்கிறது.''
என்று கூறுகிறார் காங்கிரஸ் எம்.
எல். ஏ.
எதிர்க்கட்சிகள், எங்கள் காங்கிரஸ்
கட்சியை வேண்டு மென்றே கண்டிக்கின்றன என்று பேசுகிறவர்கள், காங்கிரஸ்
எம். எல். ஏ. க்களே கண்டித்துத் தீரவேண்டிய நிலைமை ஏற்பட்டு
விட்டிருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். எடுத்தேன் கவிழ்த்தேன்
என்று பேசி, எதிர்க்கட்சிகளையும் ஒழித்துவிட முடியாது. காங்கிரஸ்
கட்சியிலேயே, உண்மையை மறைக்க முடியாதவர்கள் இருக்கிறார்களே,
அவர்களையும் அழித்துவிட முடியாது.
குறைகளைக் கண்டிக்க இவ்வளவு விழிப்புணர்ச்சியுடன்
இவ்வளவு பேர் இருக்கும்போதே, இந்த இலட்சணத்தில் இருக்கிறதே
காங்கிரஸ் ஆட்சி, எதிர்க்கட்சியும் இல்லாது போனால், மோசமான
நிலைமை இன்னுமல்லவா மோசமாகி விடும்!!
கிராமத்தார்கள், வைத்திய வசதியில்லாததால்,
நகரத்துக்கு வருகிறார்கள் - பெரிய ஆஸ்பத்திரிகளுக்கு. அங்கு
மட்டும், அவர்கள் சீராக நடத்தப்படுகிறார்களா? போதுமான கவனிப்பு
இருக்கிறதா? பெரிய ஆஸ்பத்திரிகளிலே மட்டும் நிலைமை, முதல் தரமாக
இருக்கிறதா? இல்லை!
இல்லை! என்று சொல்பவர் யார்?
எதிர்க்கட்சிக்காரர் தானே என்று கேட்பார்கள் காங்கிரஸ்காரர்கள்.
எதிர்க்கட்சி மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களே சொல்கிறார்கள்.
"தாராபுரம் டவுனில் ஒரு ஆஸ்பத்திரி
இருக்கிறது, சர்க்கார் ஆஸ்பத்திரி என்ற பெயரால். அது 20 வருஷமாக
நடந்துவருகிறது. ஆனால், அதைப் பார்த்தால் ஒரு திருவிழாவிற்குச்
சத்திரத்தில் கூட்டம் வந்து தங்கியிருப்பது போல் உள்ள நிலையில்தான்,
அங்கு ஆஸ்பத்திரிகளில் நோயாளி மக்கள் அவஸ்தைப் பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.''
என்று சேனாதிபதிக் கவுண்டர் கூறுகிறார்.
காங்கிரஸ் எம். எல். ஏ. ஆமாம், அவருடைய பேச்சுத்தான் இது - சட்ட
சபையில்.
காங்கிரஸ் எம். எல். ஏ. இலட்சுமிபதி
ராஜு, இன்னும் விளக்கமாகக் கூறுகிறார்.
"ஆஸ்பத்திரிக்கு வந்தால் அங்குள்ள
படுக்கைகள் ஒரே அழுக்காக இருக்கின்றன. கிட்டப்போனால் துர்நாற்றம்
அடிக்கிறது. யுத்தகாலத்தில் அடிபட்டுக் கீழே விழுந்தவர்களுக்குப்
போட்ட படுக்கைகளோ என்றுகூடத் தோன்றுகிறது. அவ்வளவு மோசமான
நிலைமையில் இருக்கிறது அங்குள்ள படுக்கைகள்.''
ஆக மொத்தத்தில் பார்த்தால், கிராமங்களில்
வைத்திய வசதி இல்லை; நகரங்களில் உள்ளது போதுமானதாகவும் இல்லை;
திருப்திகரமாகவும் இல்லை; நகர பெரிய ஆஸ்பத்திரிகளின் நிர்வாகமும்
சரியாக இல்லை.
இதனைவிடக் கொடுமை ஒன்றும் இருக்கிறது.
சர்க்காரை நடத்தும் எந்தக் கட்சியும் வெட்கித் தலைகுனியவேண்டிய,
கொடுமையான நிலைமை. எதிர்க்கட்சியிலுள்ளவர்கள் சொன்னால்கூட,
எதிர்ப்பு உணர்ச்சியால் பேசுகிறார்கள் என்று சாக்குப்போக்குச்
சொல்லித் தப்பித்துக்கொள்ள முயற்சிக்கலாம்; சொந்தக் கட்சியில்
உள்ளவரே சொல்லும்போது என்ன செய்வது?
என்ன அந்தக் கொடுமை என்பதை காங்கிரஸ்
எம். எல். ஏ. இலட்சுமிபதி ராஜு சொல்கிறார்.
"ஆஸ்பத்திரிகளில்கூட இலஞ்சம்
தாண்டவமாடுகிறது; பணம் கொடுத்தால்தான் காரியங்கள் நடைபெறுகின்றன.''
காங்கிரசாட்சியிலே இப்படிப்பட்ட
நிலைமை இருக்கிறது.
இவைகளை அன்றாடம் எடுத்துக்கூறி,
இடித்துக்காட்டி, குட்டுகளை உடைத்து, ஊழல்களை அம்பலப்படுத்துகிறதே
தி. மு. கழகம் என்ற எரிச்சல், காங்கிரஸ் கட்சிக்கு. அதனால் இம்முறை
எப்படியாவது தி. மு. கழகத்தைத் தோற்கடித்துவிட வேண்டும்; அப்போதுதான்,
நிம்மதியாக நமது இஷ்டப்படி ஆட்சியை நடத்திக்கொண்டு போகலாம்,
கேள்வி இருக்காது, எதிர்ப்பு எழாது, தொல்லை வராது என்று எண்ணமிட்டுத்,
திட்டமிட்டு வருகிறது காங்கிரஸ் கட்சி.
பொது மக்களுக்கு அமையும் சர்க்கார்,
பொறுப்புணர்ச்சி மறந்து, காட்டுப்போக்கிலே காரியமாற்றி, மக்களின்
வாழ்வினைக் குலைக்கும்போது, தடுத்திட, திருத்திட, உள்ள ஒரே
கருவி, எதிர்க்கட்சி! அதனை ஒழித்துவிட எண்ணுவது பொது மக்களுக்கு
இருக்கும் ஒரே ஒரு பாதுகாப்பையும் போக்கிவிட்டு, கண்மூடி தர்பார்
நடத்துவதற்குத்தான்.
செய்யப்படுகிற காரியங்கள் செம்மையாக
இருக்கவேண்டு மானால், எதிர்க்கட்சிமீது எரிந்துவிழுகிற இயல்பும்,
எதிர்க் கட்சி இருப்பதே நமக்கு இடையூறு என்ற எண்ணமும், ஆளும்
கட்சிக்கு ஏற்படக்கூடாது.
எதிர்க்கட்சிகள், இன்றுள்ள ஆட்சியிலே
நடைபெறும் பல காரியங்களிலே குற்றம் குறை காணுவதும், கண்டிப்பதும்,
எவ்வளவு தூரம் நியாயமானது என்பது, ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களே,
காங்கிரஸ் எம். எல். ஏ. க்களே, தமது கண்டனத்தைத் தெரிவித்திருப்பதிலிருந்து
விளங்கும்.
மற்றோர் எம். எல். ஏ. இன்றுள்ள
ஆட்சியிலே உள்ள முறைகேடு, சீர்கேடு ஆகியவைபற்றிச் சட்டசபையிலே
பேசியிருப்பதைப் பார்க்கலாம்;
கிராமங்களில் மராமத்து இலாகா சரியானபடி
வேலை செய்வது இல்லை. கிராமங்களிலுள்ள ரோடுகள் ரொம்பவும் மோசமான
நிலையில் இருக்கின்றன. அங்குள்ள ரோடுகளில் மனிதன்கூட நடந்துபோக
முடியாமல் இருக்கிறது. ரோடுகளுக்கு மராமத்து இலாகா சரியானபடி
"மெட்டல்கள்' (கப்பி) போடுவதில்லை. அது எதனால் ஏற்படுகிறது
என்றால், ரோடுகளைப் போடுவதற்குக் காண்ட்ராக்டுக்கு விடும்
கண்ட்ராக்டர் களிடம்தான் குறைபாடு இருக்கிறது. அவர்கள் அதிகப்
படியாக இலஞ்சம் கொடுத்து வருவதால், அவர்கள் சரியாக ரோடுகளைப்
போடாமல் விட்டுவிடுகிறார்கள். அதனால் ரோடுகளைப் போடும் வேலையைக்
கண்ட்ராக்டர்களுக்கு கொடுக்காமல், அந்த முறையையே எடுத்துவிடவேண்டு
மென்று கேட்டுக்கொள்கிறேன். அவர்களால்தான் இலஞ்சம் அதிகரிக்கிறது.
எந்த டிபார்ட்மெண்டில் (இலாகாவில்) அதிகப்படியான இலஞ்சம் இருக்கிறது
என்றால், இப்படிப்பட்ட கண்ட்ராக்டர்கள் இருக்கக் கூடிய மராமத்து
ஹைவேஸ் (நெடுஞ்சாலை இலாகா) டிபார்ட்மெண்டில்தான் அப்படி இருக்கிறது.
அவர்களால் தான் அரசாங்கத்தின் கோடிக் கணக்கான ரூபாய், கிராமங்களுக்குச்
செலவு செய்யப்படாமல் விரயமாகிறது.
காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள்
மனதிலும், இந்த ஆட்சிமுறையிலே காணப்படும் குறைபாடுகள்பற்றி,
எவ்வளவு குமுறல் இருக்கிறது என்பது விளக்கமாகத் தெரிகிறது.
மற்றொருவர் சட்டசபையில், இதே
முறையில்,
கிராம நிர்வாகம் முதற்கொண்டு
ஜில்லா நிர்வாகம் வரையிலும் செக்ரடேரியட் நிர்வாகம் வரையிலும்
வேலைகள் ரொம்பவும் தாமதமாக நடந்துவருகிறது. அவைகளைத் துரிதப்படுத்தவேண்டும்.
அப்படித் துரிதப் படுத்தினாலொழிய, வேலை சரிவர நடைபெறாது. சிறு
பள்ளிக்கூடத்தை ஆரம்பிக்கவேண்டும் என்றாலும், அது சாங்ஷன் ஆவதற்கு
அநேக நாட்கள் ஆகிறது. சாங்ஷன் வாங்குவதற்குள் பல சங்கடங்கள்
ஏற்படுவதோடு, கால தாமதமும் ஏற்படுகிறது. அதனால் கிராமவாசிகளுக்கு
இருக்கும் கஷ்டம் சொல்லி முடியாது
என்று பேசியிருக்கிறார்.
காங்கிரஸ்காரர் வெற்றிபெற்ற தொகுதிகளிலே,
காரியங்களை அப்படி அப்படியே முடித்துவிடலாம், சர்க்கார் உத்தரவு
விரைவில் எளிதாகக் கிடைக்கும். கழகத்துக்காரன் வெற்றிபெற்ற இடமாக
இருந்தால் ஒரு வேலையும் நடக்காது என்று சிலர் பேசுகிறார்கள்;
விவரம் தெரியாமல் சிலரும்,வேண்டுமென்றே
சிலரும்.
நிர்வாகம் எவ்வளவு தாமதமாக இருக்கிறது
என்று திருமதி சௌந்தரம் இராமச்சந்திரன்
பேசியிருப்பதைக் கவனித்துப் பார்ப்பவர்கள், சர்க்காரிலே பிடித்திருக்கிற
"நோய்'தான், காலதாமதம் ஏற்படக் காரணமேயொழியக் கட்சிப் பிரச்சினை
காரணமல்ல என்பதைத் தெரிந்து கொள்வார்கள்.