நம்மை நம்பி டாட்டாக்கள்
நோட்டு நோட்டாய் தந்துவிட்டார்.
வீட்டு விளக்கு அணையாமுன்
விரும்பும் செயல் செய வழி எது?
நாட்டைக் காத்திடத் துடிதுடிக்கும்
தி. மு. க.வை நசுக்கிவிட்டால்
நாடு நமது வேட்டைக்காடு!
நமக்கு ஏது பாரினில் ஈடு!
காங்கிரஸ் கருதுகிறது! இதுபோல!
இதற்காகத் தம்பி! காங்கிரஸ்காரர்கள்
கட்டிவிடும் புகார்கள், இட்டுக் கட்டிடும் பேச்சுக்கள், உலவவிடும்
வதந்திகள் கொஞ்ச நஞ்சமல்ல.
ஏற்கனவே தோற்றுப்போன இடங்களிலே,
காங்கிரசார் செய்துவரும் பிரசாரம்!
தொகுதிகள் சீர்படவேண்டுமானால்,
காங்கிரசுக்கு ஓட்டுப் போடவேண்டும்.
காங்கிரஸ் வெற்றிபெற்ற தொகுதிகளிலேதான்
வசதிகள் பெருகி உள்ளன.
என்கிற முறையிலே இருக்கிறது. இது
மேடைப் பேச்சாக அல்ல, திண்ணைப் பேச்சாக நடக்கிறது.
மக்கள் இதைக் கேட்டு மிரளுவார்கள்
- ஐயய்யோ! நமது தொகுதி பாழாகிவிடுமாமே - காங்கிரசுக்கு ஓட்டுப்
போடா விட்டால், என்று பீதி அடைவார்கள். அந்தச் சமயமாகப் பார்த்து,
ஓட்டுகளைப் பறித்துக்கொள்ளலாம் என்ற நப்பாசை கொள்கிறது, நாடாளும்
காங்கிரஸ் கட்சி.
அதிலும், இந்தப் பிரசாரத்தைக்
கிராமத்து மக்கள் எளிதாக நம்பிவிடுவார்கள்; நமக்கு எதற்கு அரசியலும்
கட்சிகளும்; ஏரி சீர்படவேண்டும், எரு எருது கிடைக்கவேண்டும்,
உரம் உப்பு கிடைக்கவேண்டும். வீடுவயல் தழைக்கவேண்டும், பாதை
பாலம் இருக்கவேண்டும், இவைகளை நாம் அடையாமலிருப்பது காங்கிரசை
ஆதரிக்காததால்தானாம், ஏன் நாம், எதிர்க் கட்சிக்கு ஓட்டுப்போட்டு,
நமக்கு வரக்கூடியதை இழக்கவேண்டும்; காங்கிரசுக்கு ஓட்டுப்போட்டு
வசதிகளைப் பெற்றுக்கொள்ள லாம் என்று கிராமத்தார்கள் நினைப்பார்கள்
என்று நம்புகிறது காங்கிரஸ் கட்சி. தம்பி! இந்த எண்ணம் தவறு
என்பதைக் கிராமத்து மக்களுக்கு மட்டுமல்ல, நகரத்து மக்களுக்கும்,
நாம் விளக்கியாகவேண்டும். ஒரு விளக்கம் தருகிறேன். அதனை மேலும்
விரிவுபடுத்தி நாட்டினருக்கு எடுத்துக் கூறும் பொறுப்பு, உன்னுடையது.
"நான் வாழும் பிரதேசம் மலைப்பிரதேசம்.
அந்த மலைப் பிரதேசம் நாலாயிரம், ஐயாயிரம் அடிக்கு மேல் உள்ளது.
அங்கு தேயிலைத் தொழில் சிறந்த தொழிலாக இருக்கிறது, . . . .
இரண்டு இலட்சத்துப் பதினையாயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.
தொண்ணூற் றையாயிரம் குடும்பங்கள் ஈடுபட்டிருக்கின்றன. 1951-ல்
பிளான்டேஷன் ஆக்ட் (தோட்டத் தொழிலாளர்க்கான சட்டம்) வந்திருந்தும்,
1955-ல் அதற்கான விதிகளை ஏற்படுத்தியிருந்தும், தொழிலாளர்களுக்கு
மிகவும் அடிப்படையாகக் கொடுக்கவேண்டிய சலுகைகளைக்கூடப் பிளான்டேஷன்
ஆக்டிலிருந்து (தோட்டத் தொழிலாளர்க்கான சட்டத்திலிருந்து)
எக்ஸம்ஷன் (விதி விலக்கு) வாங்கிக் கொண்டு, முதலாளிகள் கொடுக்க
மறுக்கிறார்கள். உதாரணமாக! சிறுநீர் கழிக்கும் இடம், கான்டின்
(உணவு விடுதி), கல்வி முதலியவற்றில் இருக்கக்கூடிய சாதாரண உரிமைகளைக்கூட
வழங்குவது இல்லை என்றால், இது சுதந்திர நாட்டில் சொல்லவும்
வெட்கக்கேட்க இருக்கிறது.''
திரு. பொன்னையன் இதைக் கூறுகிறார்.
பொன்னும் பொருளும் கொழித்திடும்,
பாலும் தேனும் பெருகிவரும் என்று வாக்களித்து, மக்களை மயக்கி
ஓட்டுப் பெற்று நடத்தும் காங்கிரசாட்சியில்தான், இந்த நிலைமை!
"சொல்லவும் வெட்கக்கேடாக இருக்கிறது'
என்று திரு. பொன்னையன்
கூறும் நிலைமை.
வெட்கக்கேடு மட்டுமல்ல இது, இதிலே
ஒரு வேதனையும் இருக்கிறது.
திரு. பொன்னையன், காங்கிரஸ் எதிரி
அல்ல; கழகம் அல்ல. காங்கிரஸ்காரர்.
ஆமாம், ஐயா! ஆமாம்! காங்கிரசாட்சி
தொழிலாளர்கள் வாழ்வைச் செம்மைப்படுத்துவதில்லை என்று கழகத்தோழர்கள்
கூறினால், காங்கிரஸ் பேச்சாளர்களுக்கும், காங்கிரஸ் ஆதரவுப்
பிரசார குத்தகைதாரர்களுக்கும் கோபம் கோபமாக வருகிறது. மேடையைத்
தட்டித் தட்டிப் பேசுகிறார்கள். என்ன தெரியும் இந்த அண்ணாத்துரைக்கு!
என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.
ஆனால், பாடுபடும் தொழிலாளிக்கு
உள்ள கஷ்டம் தீர்க்கப்படவில்லை; காங்கிரசாட்சி இதைக் கவனிக்கவில்லை;
சட்டம் இருந்தும், அது சரிவர நிறைவேற்றப்படவில்லை; என்று திரு.
பொன்னையன் கூறுகிறார்; அவர் ஒரு காங்கிரஸ்காரர். எம். எல்.
ஏ.
சொல்லவும் வெட்கக்கேடாக இருக்கிறது
என்று பேசினாரே திரு. பொன்னையன், காங்கிரஸ், எம். எல். ஏ. எங்கே
பேசினார் தெரியுமா? சட்டசபையில் எட்டுக் காங்கிரஸ் மந்திரிகள்
கொலுவீற்றிருக்கும் சபையில்.
கழகத் தோழர்கள், காங்கிரசாட்சியின்
கேடுபாடுபற்றிப் பேசினால், காங்கிரஸ் மந்திரிகளுக்கு எவ்வளவு
கோபம் வருகிறது!! என்னென்ன ஏசுகிறார்கள்! மிரட்டுகிறார்கள்!
சவால் விடுகிறார்கள்! பார்த்துக்கொண்டுதானே இருக்கிறீர்கள்.
காங்கிரசாட்சி தொழிலாளர்கள் வாழ்வைச்
சீராக்கவில்லை என்று காங்கிரஸ் எம். எல். ஏ. பொன்னையன் என்பவர்
சட்டசபையில் பேசுகிறார் - எட்டு மந்திரிகள் கேட்டுக்கொண் டிருக்கிறார்கள்
- ஒருவராவது எழுந்து மறுத்தார்களா? இல்லை!!
கழகத்தார்மீது பாய்கிற மந்திரிகள்,
காங்கிரஸ் எம். எல். ஏ. சீர்கேடுகளை அம்பலப்படுத்தும்போது,
பல்லைக் கடித்துக் கொண்டு இருக்கிறார்கள், மெல்லவும் முடியாமல்
விழுங்கவும் முடியாமல்.
ஆகவே, இதிலிருந்து மூன்று உண்மைகளைத்
தெரிந்து கொள்ளலாம்.
ஒன்று: காங்கிரசாட்சியிலே தொழிலாளர்
நிலை உயரவில்லை; செம்மைப்படவில்லை என்று கழகம் கூறுவது, மறுக்க
முடியாத உண்மை.
இரண்டாவது: காங்கிரஸ் எம். எல்.
ஏ.யே இதைக் கூறுகிறார். சட்டசபையில் மறுத்துப் பேச மந்திரிகளாலும்
முடியவில்லை.
மூன்றாவதாக: எதிர்க்கட்சி, அதிலும்
குறிப்பாகக் கழகம், எந்தத் தொகுதியில் வெற்றிபெறுகிறதோ, அந்தத்
தொகுதிக்கு நன்மை கிடைக்காது என்று பேசுகிறார்களே, அது எவ்வளவு
தவறு என்பதும் தெரிகிறதல்லவா?
அண்ணாத்துரை வெற்றி பெற்றதாக இந்தத்
தொகுதி இருக்கிறது; காங்கிரசுக்கு மட்டும் ஓட்டுப் போட்டிருந்தால்,
என்னென்ன நடக்கும் தெரியுமா? எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
என்று பேசுகிறார்களே ஓட்டுக் கேட்க வரும் காங்கிரஸ் பேச்சாளர்கள்.
அந்தப் பேச்சு பச்சைப் புளுகு என்பது விளங்குகிறதல்லவா?
காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி
பற்றித்தான், திரு. பொன்னையன் பேசுகிறார்.
காங்கிரஸ் எம். எல். ஏ. தன் தொகுதியில்
தொழிலாளர் நிலைமை இப்படி இப்படி இருக்கிறது என்று கூறித் தருகிறார்.
சட்டசபையில், மந்திரிகள் எதிரில் என்றால் காங்கிரசுக்கு ஓட்டுப்
போட்டால், வண்டி வண்டியாக நன்மைகள் வந்துவிடும் என்று பேசுகிறார்களே,
இது பச்சைப் புளுகு அல்லவா?
தொழிலாளர்களுக்கு வசதி செய்து
தருவதற்காகச் சட்டம் இருக்கிறது.
முதலாளிகள் அந்த வசதிகளைச் செய்துகொடுக்க
முடியாது என்று கூறினால், காங்கிரஸ் சர்க்கார் ஏன் ஒத்துக் கொள்கிறது?
தொழிலாளிகளைக் காட்டிக் கொடுக்கலாமா?
காட்டிக் கொடுக்கிறதே! திரு. பொன்னையன், சட்டசபையில் பேசியது
சட்டசபைக் குறிப்பேட்டில் இருக்கிறது.
காங்கிரஸ் எம். எல். ஏ.யே, காங்கிரசாட்சியில்,
காங்கிரஸ் சர்க்கார், முதலாளிகள் சார்பாக நின்று, தொழிலாளர்களுக்குச்
சலுகை செய்யாமல், அவர்களை வெட்கக்கேடான நிலைமையில் வைத்துக்கொண்டிருப்பதை
எடுத்துச் சொல்லியிருக்கிறாரே, இதைக் கேட்ட பிறகு, என்ன சொல்லுகிறீர்கள்?
யோசித்துப் பாருங்கள்!
வைத்திய வசதி இல்லாமல் இருப்பவர்கள்
தொழிலாளர்கள் மட்டும் அல்ல. பொதுவாகவே, வைத்திய வசதி போதுமான
அளவு இல்லை. கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டுகிறோம் என்று
கூறுகிறார்கள் காங்கிரஸ் பேச்சாளர்கள். எங்கே போகிறதோ தெரியவில்லை
- வைத்திய வசதி கிராமங்களில் இல்லை!
இதை எதிர்க்கட்சிக்காரர் கூறும்போது,
காங்கிரஸ்காரர்கள் கடுங்கோபம் கொள்கிறார்கள். உள்ளதைச் சொன்னால்
எரிச்சல் ஏற்படுகிறது. வேண்டுமென்றே எதிர்க் கட்சிக்காரர்கள்
காங்கிரஸ் ஆட்சிமீது குறை கூறுகிறார்கள்; நாங்கள் எல்லா ஏற்பாடு
களையும் சீராகத்தான் செய்திருக்கிறோம் என்று பேசுகிறார்கள்.
சென்னை சட்டசபையில், காங்கிரஸ்
எம். எல். ஏ.க்களே, காங்கிரசாட்சியிலே, வைத்திய வசதி சரியான
முறையில் இல்லை என்பதை எடுத்துக்காட்டி, வருத்தத்தையும் கண்டனத்தையும்
தெரிவித்திருக்கிறார்கள்.
"சாதாரணமாக 500 கைதிகள் உள்ள ஜெயில்களில்
கூட இரண்டு டாக்டர்கள் இருக்கிறார்கள். அப்படி யிருக்கும் போது,
5,000, 10,000 ஜனத்தொகை கொண்ட இடங்களில், ஆஸ்பத்திரி இல்லாமல்
இருப்பது மிகவும் வருந்தத்தக்கது.''
இப்படிச் சட்டசபையில் பேசியிருக்கிறார்
என். ஆர். தியாக ராசன் என்ற காங்கிரஸ் எம். எல். ஏ. மந்திரிகள்
கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்; மறுப்புக் கூறவில்லை.
ஜெயில்களைவிடக் கிராமங்களின் நிலைமை
மோசமாக இருக்கிறது!
அதுவும், காங்கிரசுக்கு ஓட்டுப்போட்டு,
காங்கிரஸ்காரரை எம். எல். ஏ. - யாக அனுப்பிக் கொடுத்த தொகுதியில்!
காங்கிரசுக்கு ஓட்டுப்போடாததால்தான்,
நமது தொகுதிக் கஷ்டம் நீடிக்கிறது, முன்னேற்றம் கிடைக்கவில்லை
என்று பேசி, காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டால் கஷ்டம் யாவும்
தீர்ந்து போகும் என்று பேசுகிறார்களே சிலர், அந்த வாதம் எவ்வளவு
உப்புச்சப்பற்றது என்பது புரிகிறதல்லவா? ஜெயில்களைவிட மோசமான
நிலைமையில் உள்ள கிராமங்கள் உள்ள தொகுதி, அண்ணாத்துரை தொகுதி
அல்ல, கருணாநிதி தொகுதி அல்ல, கோவிந்தசாமி தொகுதி அல்ல, காங்கிரசை
ஆதரித்துத் தீப்பொறி பறக்கப் பேசுவர் என்று கூறப்படும் தேனி
எம். எல். ஏ. தியாகராசன் தொகுதியாகும் - காங்கிரஸ் எம். எல்.
ஏ. - யின் தொகுதி.
காங்கிரஸ் தோற்றுப்போன கோபத்தால்,
சில தொகுதி களில் நன்மை கிடைக்கவில்லை என்கிறார்களே, தேனி தொகுதியில்
காங்கிரஸ்தானே வெற்றிபெற்றது! ஏன் அங்கு உள்ள கிராமங்களின் நிலைமை
ஜெயில்களைவிட மோசமாக இருக்கிறது? கேட்டுப்பாருங்கள்! பதில்
கிடைக்காது. கோபம் தான் கிளம்பும் காங்கிரசாருக்கு.
கிராமங்களைக் கவனிக்கச் சொல்லி
எந்த எம். எல். ஏ. முறையிட்டாலும், அவர் காங்கிரசுக்கு வெற்றி
தேடியவராக இருந்தாலும் சரி, காங்கிரசைத் தோற்கடித்தவராக இருந்தாலும்
சரி, அவர் பேச்சைத் துச்சமென்று எண்ணுகிறது இந்தக் காங்கிரஸ்
சர்க்கார். காங்கிரசை எதிர்ப்பவர்கள் இப்படித்தான் பேசுவார்கள்
என்று எண்ணிக்கொள்ளாதீர்கள். தேனி தொகுதி எம். எல். ஏ. தியாகராசன்,
காங்கிரஸ்காரர், அவர் கூறுவது என்ன?
என்னுடைய தொகுதியான தேனியில்,
மேஜர் பஞ்சாயத்து போர்டுள்ள இடத்தில், 25,000 மக்கள் இருந்தாலுங்கூட,
பத்து ஆண்டுகளாக முயற்சி செய்தும், அங்கு ஒரு ஆஸ்பத்திரி ஏற்படுத்தப்படவில்லை.
இப்படிச் சட்டசபையில் இடித்துப்
பேசுகிறார் ஒரு காங்கிரஸ் எம். எல். ஏ. எட்டு மந்திரிகளும் பிடித்துவைத்த
பிள்ளையார் போல் பேசாமல் உட்கார்ந்திருக்கிறார்களே ஒழிய, ஒரு
வார்த்தை மறுத்துப் பேசவில்லை. முடியவில்லை.
பத்து வருஷம் முயற்சி செய்கிறார்
ஒரு கிராம ஆஸ்பத்திரிக்கு, ஒரு காங்கிரஸ் எம். எல். ஏ. முடியவில்லை.
இந்தக் காங்கிரஸ் எம். எல். ஏ.
மதுரை ஜில்லா போர்டு தலைவராகக்கூட இருந்தவர்.
அப்படிப்பட்டவருக்கே இந்தக் கதி!
என்ன தெரிகிறது இதிலிருந்து? காங்கிரஸ் சர்க்கார், யார் முறையிட்டாலும்
கவனிப்பதில்லை; கிராமங்களைத் திருத்துவதில்லை என்பதுதான்!
விவரம் அறியாதவர்களை ஏமாற்ற, காங்கிரசுக்கு
ஓட்டுப் போட்டால், எல்லாம் கிடைத்துவிடும் என்று தேர்தல் தரகர்கள்
பேசுகிறார்கள். காங்கிரசுக்கு ஓட்டுப்போட்ட தேனி தொகுதியில்
ஜெயிலைவிட மோசமாக கிராமநிலை இருக்கிறது; பத்து வருஷமாகக் காங்கிரஸ்
எம். எல். ஏ. முயற்சி செய்தும் பலிக்கவில்லை.
உண்மை இப்படி இருக்க, காங்கிரசுக்கு
ஓட்டுப்போட்டால் ஊர் சீர்படும் என்று சிலர் பேசுவதிலே, பொருள்
இருக்கிறதா? யோசித்துப் பாருங்கள்!
இந்தக் குறைகளைப் போக்கத்தான்,
சமுதாயநல திட்டம் தீட்டியிருக்கிறோம் என்று பளிச்சென்று பதில்
சொல்வார்கள் காங்கிரஸ் பேச்சாளர்கள். எதிர்க்கட்சிக்காரர்கள்
குறை சொன்னார்கள்; எங்கள் காங்கிரஸ் பேச்சாளர் பளார்! பளார்!
என்று கன்னத்தில் அறைவதுபோலப் பதிலளித்தார் என்று பேசி மகிழ்ச்சி
அடைவார்கள்.
ஆனால், அந்தச் சமுதாயநலத் திட்டத்தின்
இலட்சண மாவது சரியாக இருக்கிறதா என்று பார்ப்போம்.
"கிராமங்களில் தேசிய விஸ்தரிப்புத்
திட்டம், சமுதாயநலத் திட்டங்கள் இருக்கக்கூடிய இடங்களில் தன்ழ்ஹப்
உண்ள்ல்ங்ய்ள்ஹழ்ண்ங்ள் (கிராம ஆஸ்பத்திரிகள்) அமைக்க ஏற்பாடு
செய்துகொண்டு வருகிறோம். ஏற்பாடு செய்கிறோமே தவிர, நடைமுறையில்
அவைகள் சரியானபடி நடக்கவில்லை.''
இப்படிக் கூறுகிறவர், கழகத் தோழர்
அல்ல; காங்கிரசைக் குறை கூறுவதே வேலையாகக் கொண்டவர் அல்ல; காங்கிரஸ்காரர்
பேச்சு இது; காங்கிரஸ் எம். எல். ஏ. சட்டசபையில் சொன்னது.
சமுதாயநலத் திட்டத்தின்கீழ் கட்டப்படும்
கிராம ஆஸ்பத்திரிகள் சரியானபடி நடக்கவில்லை.
என்று கண்டித்துப் பேசினவர், காங்கிரஸ்
எம். எல். ஏ. யான முனுசாமிக் கவுண்டர்.
கிராம ஆஸ்பத்திரிகள் சரியானபடி
நடக்கவில்லை என்று பொதுப்படையாகப் பேசிவிட்டால் போதுமா? விவரம்
தர வேண்டாமா? காரணம் காட்டவேண்டாமா? என்று குறுக்குக் கேள்வி
கேட்டு, தமது காங்கிரஸ் பக்தியைக் காட்டிக்கொள்ள வேண்டுமென்று
சிலருக்கு ஆவலாக இருக்கும். காங்கிரஸ் எம். எல். ஏ. முனுசாமிக்
கவுண்டர், காரணமும் காட்டிவிட்டார்.
நர்சுகள் கிடையாது.
டாக்டர் கிடையாது.
கம்பவுண்டர்கள் கிடையாது.
எப்படி நிலைமை, கவனித்தீர்களா?
காங்கிரஸ் ஆட்சியின் இலட்சணம் தெரிகிறதா? கிராமத்தில் ஆஸ்பத்திரிகள்
கட்டு கிறார்கள், ஆனால் அங்கு,
டாக்டர் இல்லை
நர்சு இல்லை
கம்பவுண்டர் இல்லை
வேறு என்ன இருக்கிறது? கட்டிடம்!
போர்ட்! விளம்பரம்!
பார்! பார்! ஆஸ்பத்திரி பார்!
எத்தனை பெரிய கட்டிடம் பார்! எங்க காங்கிரஸ் கட்டியது பார்!
எடு ஓட்டுகளை! கொடு எங்களிடம்! என்று காங்கிரஸ் பேச்சாளர்கள்,
முழக்கமிட இந்தக் கட்டடங்கள; நோய் போக்க அல்ல! கிராமத்தாரை
வாழவைக்க அல்ல! கிராமத்தாரின் நோய்போக்க ஆஸ்பத்திரி கட்டினால்,
டாக்டர் இல்லை
நர்சு இல்லை
கம்பவுண்டர் இல்லை.
என்றா நிலைமை இருக்கும்!!
நிலைமை இப்படி இருக்கிறது. இதை
ஒரு காங்கிரஸ் எம். எல். ஏ. - யே சட்டசபையில் இடித்துப்பேசுகிறார்
- எட்டு மந்திரிகள் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
மாலையிலே பாருங்களேன், மேடை ஏறியதும், இதே மந்திரிகள், மார்தட்டிப்
பேசுவதை,
ஆளத்தெரிந்தவர்கள் நாங்களே!
நாங்கள்தான் ஆளுவோம்!
வேறு எவருக்கும் நாட்டை ஆளும் யோக்யதை இல்லை.
என்று பேசுகிறார்கள்.
டாக்டர் இல்லாத
நர்சு இல்லாத
கம்பவுண்டர் இல்லாத
ஆஸ்பத்திரிகளைக் கிராமங்களில் கட்டிவிட்டு, இந்தத் தாவு தாவுகிறார்களே,
என்னென்பது!
கிராம ஆஸ்பத்திரிக் கட்டிடம் கட்டி
முடித்ததும் ஒரு கோலாகலத் திறப்பு விழா நடக்கிறது! முதல் மந்திரி
வருகிறார்! முன்னாலே பின்னாலே போலீஸ்! பக்கத்திலே சீமான்! கொடி
ஏற்றுகிறார்! வெடி கிளம்புகிறது! மாலை சூட்டுகிறார்கள், வாழ்த்துப்
பத்திரம் படிக்கிறார்கள்! மந்திரி கட்டிடத்தைத் திறக்கிறார்.
போட்டோ எடுக்கிறார்கள்! பாட்டுப் பாடுகிறார்கள்! மந்திரி பேசுகிறார்:
காங்கிரஸ் சர்க்கார்தான் கிராமத்தை
முன்னேற்றம் அடையச் செய்யும்
என்றெல்லாம்.
ஆனால் ஆஸ்பத்திரியின் நிலைமை என்ன?
டாக்டர் இல்லை
நர்சு இல்லை
கம்பவுண்டர் இல்லை
இப்படிச் சொல்பவர் யார்? ஒரு
காங்கிரஸ் எம். எல். ஏ. அவர் இன்னமும் விளக்கமாகக்கூடப் பேசியிருக்கிறார்.
"இன்றைய தினம் ஆஸ்பத்திரியைத்
திறந்தார்கள், நாளைய தினம் டாக்டர்கள் இல்லை என்று சொல்லு கிறார்கள்
என்ற நிலைமைதான் இருக்கிறது.''
திராவிட முன்னேற்றக் கழகம் இவ்வளவு
பலமாக எதிர்த்துக் கொண்டிருக்கும்போதே, காங்கிரசாட்சியின்
போக்கு டாக்டரும், நர்சும், கம்பவுண்டரும் இல்லாத ஆஸ்பத்திரி
காட்டுகிற நிலையிலே இருக்கிறது என்றால், இந்த எதிர்ப்பே இல்லை
என்றால், நிலைமை இன்னும் எவ்வளவு மோசமாகிவிடும் என்பதை எண்ணிப்
பாருங்கள். டாக்டர் இல்லை, நர்சு இல்லை, கம்பவுண்டர் இல்லை என்று
ஒரு காங்கிரஸ் எம். எல். ஏ. முனுசாமிக் கவுண்டர் சொன்னார் -
மருந்து விஷயம் எப்படி? அதையும் கேளுங்கள்.
"நம் மாநிலத்தில் 80 சதவிகித மக்கள்
கிராமங்களில் வசிக்கிறார்கள். ஆனால், இப்போது, நகரங்களில்தான்
பெரிய பெரிய ஆஸ்பத்திரிகள் இருக்கின்றன. ஆகவே, வைத்திய சுகாதாரத்திற்குக்
கிராமங்களில் அதிக பணம் செலவழிக்கப்படவில்லை.''
அநேக கிராம ஆஸ்பத்திரிகளில் வைத்தியர்களே
கிடையாது.