தேர்தலுக்கு முன் காங்கிரஸின்
பலம் -
தமிழகத்தில் குறைபாடுகள் -
சட்டமன்றத்தில் காங்கிரஸார்
தம்பி!
தேர்தல் மூன்று மாதங்களுக்குப்
பிறகு என்று எண்ணிக்கொள்ளாதே; இதோ இல்லத்தில் இன்னொரிடத்தில்
ஏழெட்டுத் தோழர்கள், அடிகள் வீட்டில் பத்துப்பேர், திராவிட
நாடு நிலையத்தில் பதின்மர், இதுபோல் நூற்றுக்கணக்கான தோழர்கள்,
காஞ்சிபுரம் நகரில் வீடுவீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்திக்க,
வந்து குழுமியுள்ளனர்.
ஊரெங்கும் தோரணங்கள்,
கொடிகள், வளைவுகள்! ஒரே நாளில் காஞ்சிபுரம் நகர் முழுவதும்
உலாவர ஏற்பாடாகி விட்டது.
மெத்தச் சரி அண்ணா? இப்படித்தான்,
சுறுசுறுப்பாக, முன்கூட்டிக் காரியமாற்றவேண்டும். காஞ்சிபுரம்
வழிகாட்டுகிறது. கழகம் விறுவிறுப்புடன் பணியாற்றுகிறது - என்று
மகிழ்ச்சி பொங்கப் பொங்கக் கூற எண்ணுகிறாய். ஆனால், தம்பி!
நமது தோழர்கள் 1-12-61 காலை, தி. மு. கழகத்துக்கு ஆதரவு தேடக்
காஞ்சிபுரம் நகரில் உலாவர ஏற்பாடு ஆகிவிட்டது கண்டு, களிப்பு
அதிகம் கொண்டிடாதே - காங்கிரஸ் அபேட்சகருக்கு "ஓட்டு' கேட்க,
உள்துறை அமைச்சர் பக்தவத்சலனார், தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர்
அளகேசனாருடன் 28-11-61 அன்றே, தெருத்தெருவாக உலா வந்தாகிவிட்டது.
அதுமட்டுமல்ல,, 30-11-61 அன்றே, காங்கிரஸ் அபேட்சகர், தம் குழுவினருடன்,
வீடு வீடாக ஓட்டுக் கேட்க ஆரம்பித்துவிட்டார். எனவே 1-12-61-ல்,
நமது கழகத்தவர், உலாவருதல் கண்டு, "நாம்தான் தேர்தல் வேலையை
மும்முரமாகத் துவக்கிவிட்டோம்' என்று எண்ணிக்கொள்ளாதே. பொதுவாக,
காஞ்சிபுரம் தேர்தல், "பரபரப்பூட்டும்' கட்டத்தை இப்போதே பெற்றுவிட்டது.
தோழர்களும், தொண்டர்களும்
நமக்காக!
அழைப்பாளர்களும், பிழைப்பாளர்களும்
காங்கிரசிடம்!
கொடிகள் கட்டுவதும்,
தோரணங்கள் அமைப்பதும், எந்தக் கட்சியினருக்கும் இயல்பாக ஏற்பட்டுவிடும்
அலுவல்.
ஆனால், இதோ செல்கிறார்கள்
நமது தோழர்கள் - இரவு மணி ஒன்றாகிவிட்டது - உற்சாகத்துடன்,
கொடிகளுடன், ஏறுநடை போடுகிறார்கள்! எவரும் எமக்கு நிகர் இல்லை
என்று அவர்களின் கண்கள் எக்காளமிடக் காண்கிறேன். காரணம்? கேட்டால்,
இடி இடியெனச் சிரிப்பார்கள்! வெற்றி வீரர் களல்லவா அவர்கள்!!
கோட்டை பறிபோய்விடும், கொலு மண்டபம் பிறர்கை சென்றுவிடும்,
மாநகராட்சியிலே மாற்றார் முடிசூட்டிக்கொள்வர் என்றெல்லாம் கிலிகொள்ளத்தக்க
பேச்சுகள் கிளம்பி, நமது தோழர்களின் மனதைக் குடைந்த நிலை அறிவாயல்லவா?
நீ மட்டுமென்ன, ஆவலெனும் புரவிமீதுதானே அமர்ந்திருந்தாய். வெற்றி
நமக்கு! மேயர், நம் கழகத்தவர்! துணைமேயரும், நம்மவர்! - என்ற
நிலை ஏற்பட்டுவிட்டதல்லவா? சொல்லவா வேண்டும், நம் தோழர்களின்
உற்சாகத்தின் அளவை! நான்தான் மேயர்! நானுந்தான்! நான்மட்டும்
என்னவாம்! - என்று கேட்பவர்கள்போல ஒவ்வொருவர் முகத்திலும்
ஒரு புதுப் பொலிவு; நடையிலே ஒரு கெம்பீரம்; பேச்சிலே ஒரு வீரக்களை
தெரிகிறது.
ஒவ்வொரு நாளும் இங்கு
கூட்டங்கள் நடக்கின்றன.
பெரியார் இரண்டாவது முறையாக
வந்துபோனார், மீண்டும் வருவதாகக் கூறிவிட்டு! ஆமாம்; என்னை
மறப்பாரா? எவ்வளவு வேலைகள் இருப்பினும், தள்ளாமை மேலிடினும்,
என்மீது வைத்த கண்ணை வேறுபக்கம் திருப்புவாரா!! இதனை நன்கு அறிந்த
காங்கிரஸ்காரர்கள், பெரியாரை எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாகக் கசக்கிப்
பிழியவேண்டுமோ, அவ்வளவும் செய்துவிடுவது என்று திட்டமிட்டு
வேலை செய்கிறார்கள்.
வேறு எவரும் ஏசக்கூசும்
அளவிலும், முறையிலும், பெரியார் என்னை ஏசுகிறாராம்! கூறுகிறார்கள்!
மெத்த வருத்தப் படுகிறேன்!! என்னைத் திட்டுகிறாரே, அதனால் எனக்கு
ஆதரவு கெட்டுவிடுமே என்ற அச்சத்தினால் அல்ல.
கைலையம்பதியானையும், கணபதியையும்,
வள்ளி மணாளனையும், பவளவண்ணனையும், வால்மீகியுடன் வாதவூராரையும்,
தவசிகளையும், ரிμ சிரேஷ்டர்களையும், காந்தியாரையும், நேரு குடும்பத்தாரையும்,
பாபு ராஜேந்திரரையும், கண்டித்துப் பேசும் நிலையிலிருந்து வந்த
பெரியார், என்னை ஏசிப்பேசும் நிலைக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டாரே;
அவர் மூலம், புராணப் புரட்டு, புரோகிதப் புரட்டு, இதிகாசப்
புரட்டு, காங்கிரஸ் புரட்டு என்பனவற்றுக்கெல்லாம் எதிர்ப்புரை,
மறுப்புரை கேட்டு, மக்கள் தெளிவு பெறும் நிலை எங்கே! இன்று,
என்னைப்பற்றி ஏசிப்பேசும் நிலைக்கு அவர் வந்து சேர்ந்து விட்டாரே!
அதை எண்ணி நான் துக்கப்படுகிறேன்.
காந்தியாரின் தத்துவங்களை,
தாகூரின் வேதாந்தத்தை, நேருவின் அரசியலை, அலசிக்காட்டி, அவைகளிலே
உள்ள அழுக்குகளை, அபத்தங்களை எடுத்து விளக்கிக்கொண்டு வந்தவர்,
பாவம், இன்று, என்னைப்பற்றி அல்லவா, அலச, ஆராயவேண்டிய நிலைமை
ஏற்பட்டுவிட்டது. அவருடைய பொதுத்தொண்டின் அளவு, தரம் இவைகளைக்
கவனிக்கும் போது, அவர் இப்போது, எதை எதைப் பேசவேண்டியவர்!
உலக நாடுகள் மன்றம்பற்றி! ஊராள்வோர் கூறும் தத்துவம் திட்டம்
பற்றி! அறியாமை இருளை அகற்றும் வழிவகைபற்றி! இவைகளைப் பேசவேண்டியவர்,
இன்று என்னைப்பற்றி, என் பேச்சு, எழுத்து, சொத்து, சுகம், சூது,
சூழ்ச்சி இவைபற்றி அல்லவோ ஆராய்ச்சி நடத்துகிறார்! நான்தானா
கடைசியில் அவருக்கு அகப்பட்டேன் என்று கேட்கவில்லை, தம்பி! கடைசியில்
அவர் என் நிலை அளவுக்கா தமது நிலையைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும்!
யாரோ மூட்டிவிட்ட போதனை, பரிதாபம் அவரை இந்த நிலைக்குக் கொண்டுவந்துவிட்டது.
ஏசுகிறார். ஏதேதோ புதிய போதனைகளை உலகுக்கு அளிப்பார் என்று
நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தவர்! ஏசுகிறார் - என்னென்னவிதமாக
எட்டாந்தரக் காங்கிரஸ் பேச்சாளர்கள் பேசுவார்களோ அம்முறையில்.
இவருக்கா இந்த வேலை? இந்த வேலையையா இவர் ஏற்றுக்கொள்ளவேண்டும்?
எனக்கு மக்கள் தரும் ஆதரவுதனை அழித்திட, இவர் தேவைப்படுகிறாராமே!!
காமராஜரும் சுப்ரமணியமும் போதவில்லை; காட்டுக் கூச்சலிடும்
பேச்சாளர் படை போதவில்லை; கத்திக்குத்துக்காரர்கள் போதவில்லை;
விபூதிகள், வெடிகுண்டுகள் போதவில்லை; காவி கமண்டலங்கள் போதவில்லை;
பெரியாரே தேவைப்படுகிறார்! ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக, அவர்
ஈட்டி வைத்துள்ள வலிவு - செல்வாக்கு - திறமை - இவை தேவைப்படுகிறது,
என்னைச் சமாளிக்க!! தம்பி! பார்த்தாயா, இந்த வேடிக்கையான நிலைமை!
வேடிக்கையாக இருக்கிறதே தவிர, இதுதானே உண்மை நிலையாக இருக்கிறது.
வானவெளி பறந்த காகரின்,
காற்றாடிவிடுவது என்றால் எப்படி இருக்கும்!! அப்படி அல்லவா இருக்கிறது,
மனிதகுலம் மடைமையிலிருந்து விடுபட வழி என்ன என்ற மகத்தான பணியில்
ஈடுபட்டிருந்த பெரியார், அண்ணாத்துரைக்கு "ஓட்டு' கிடைக்காதிருக்க
என்னென்ன வழிகள் என்று பேச வருவது!!
உள்ளபடி எனக்குள்ள வருத்தம்
- இதை எண்ணித்தான்.
நமது படை வீரர்களிலே ஒரு
"கத்துக்குட்டி'யை ஏவி விட்டாலே போதும், இந்த அண்ணாத்துரையை
அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்துவிடுவான் என்று கூறவேண்டிய, வயதும்
அனுபவமும், ஆற்றலும் படைத்தவர், அகில இந்திய காங்கிரசு ஆதிக்க
ஒழிப்புக்கே.
ஒரு ஜின்னா
ஒரு அம்பேத்கார்
ஒரு பெரியார்
என்றும் பலரும் வியந்து
பாராட்டத்தக்க நிலைபெற்றிருந்தவர் அல்லவா பெரியார்!!
தங்கப் பேழையிலே தவிடு
கொட்டிவைப்பதுபோல, உடைவாளை உருவி உருளைக்கிழங்கு நறுக்குவதுபோல,
செங்கோலைக்கொண்டு "சீடை'யை உடைப்பதுபோல, பெரியார், ஆண்டு
பலவாகத் தேக்கிவைத்திருக்கும் ஆற்றலை, என் செல்வாக்கை அழிக்கப்
பயன்படுத்துவது வேடிக்கை மட்டுமல்ல, வேதனை தருவதுமாகும்.
எனக்குத் தம்பி! காங்கிரசார்மீது
கோபம் எழக் காரணம் பல உண்டு; ஆனால், மிகக் கடுமையான கோபம்
எழக் காரணம், அப்படிப்பட்ட பெரியாரை, இப்படிப்பட்ட காரியத்தில்
ஈடுபட வைத்துவிட்டார்களே என்பதுதான்.
யானையை மார்மீது நிற்கவைத்து,
தன் உடல் வலிவு காட்டிய ஒரு ஆணழகன், சில ஆண்டுகளுக்குப் பிறகு,
என் மார்புமீது ஒரு மலர்க்கூடையை வைத்து என் வலிவு, திறமை, இதனைக்
காட்டுவேன், வந்து பாருங்கள், வாழ்த்துக் கூறுங்கள் என்று -
அறிவித்தால், கேட்பவர்களுக்கு எப்படி இருக்கும்! அப்படி அல்லவா
இருக்கிறது!! ஏசுவின் வாசகத்திலே இன்ன குறை இருக்கிறது, புத்தர்
பொன்மொழியில் இத்தனை மாத்துக் கம்மி, காந்திய தத்துவத்தில்
இவ்வளவு கசடு இருக்கிறது, வள்ளுவர் மொழியிலே இவ்வளவு கவைக்குதவாதன
உள்ளன என்ற, இத்தனை பெரிய தத்துவமேதையாகத் திகழ்ந்தவர், வாருங்கள்!
வாருங்கள்! வந்து சேருங்கள், நான் அண்ணாத் துரையை ஏசப்போகிறேன்!
- என்று ஊராரை அழைப்பது!!
கூண்டிலிருந்த கிளி பறந்துபோய்விட்டால்,
கூண்டினைக் காலியாகவேனும் வைத்திருக்கலாமே தவிர, ஏதாவது இருக்கட்டும்
என்று ஒரு கோட்டானைப் பிடித்தா அந்தக் கூண்டுக்குள்ளே அடைத்துவைப்பார்கள்!!
விரலிலிருந்த வைரமோதிரம்
பறிபோய்விட்டால், வெறும் விரலாகவே இருக்கட்டும் என்று விட்டுவைப்பார்களா,
ஓட்டாஞ் சல்லியில் துளைபோட்டு, விரலில் மாட்டிக்கொள்வார்களா!!
தோட்டத்து மல்லிகை பூத்திடவில்லை
என்பதற்காக, எருக்கம்பூவைப் பறித்தா, மல்லிகைக் கொடியிலே ஒட்ட
வைப்பார்கள்!!
தாம் செய்துகொண்டுவந்த
பெருந்தொண்டு, தொடர்ந்து நடத்தப்படுவதற்கு ஏற்ற சூழ்நிலை அமையவில்லை
என்பதற்காக, பெரியார், என்னை ஏசும் காரியத்திலா தம்மை ஈடுபடுத்திக்
கொள்வது! எத்துணை வேதனை நிரம்பிய நிலை!!
தம்பி! பெரியாரைவிட்டு
என்னைத் தாக்கச் செய்வதிலே காங்கிரசாருக்கு இரட்டை இலாபம் -
ஒன்று, நான் தாக்கப் படுகிறேன் - மற்றொன்று, பெரியாரின் நிலையைத்
தாழ்த்தி விடுகிறார்கள்!!
ஒருநாள் இல்லாவிட்டால்
மற்றோர்நாள், இந்த எண்ணம் அவர் மனதை உறுத்தும்; எவரும் காணாதபோது
இரண்டோர் சொட்டுக் கண்ணீர் கசியும்; எப்படிப்பட்ட உயர்ந்தநிலையில்
இருந்து, உலகத் தலைவர்கள் வரிசையில் இடம்பெற்றவர் என்ற நிலையில்
இருந்து வந்தோம்; இன்று, ஒரு அண்ணாத்துரையை ஏசுவதை, பேச்சின்
பொருள் ஆக்கிக்கொள்ளும் நிலையை நாமாகத் தேடிக்கொண்டோமே என்று
எண்ணுவார். எப்படித் தம்பி! அந்த எண்ணம் எழாமலிருக்க முடியும்?
காங்கிரசார், இந்த முறையைக்
கையாள்வதுடன், தமக்கு வெற்றி கிடைத்துவிடும் என்று நம்பிக்கொண்டு
இல்லை. தேர்தலில் வெற்றிபெற, வேறு "தளவாடங்களை'த் தேடிப் பெற்று,
மலைபோலக் குவித்துக்கொண்டிருக்கிறார்கள் - என்னை வீழ்த்த.
பெரியாரின் பேருரையை மட்டும் நம்பிக்கொண்டு இல்லை. இதுவும்
எனக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது.
பெரியாரின் பேராற்றலால்,
தி. மு. கழகத்தை அழித்து விடமுடியும் என்று, காங்கிரஸ் திடமாக
நம்பினால், வேறு வேறு வலிவுகளைத் தேடமாட்டார்கள். தி. மு. கழகத்தை
அழிக்க, பெரியாரின் பேராற்றல் பயன்படாது என்று உள்ளூர அவர்கள்
உணருவதால்தான்,
வாண்டையார்
வடபாதிமங்கலத்தார்
நெடும்பலத்தார்
கருப்பம்பலத்தார்
பாண்டேசுரத்தார்
ஓரக்காட்டுப் பேட்டையார்
மணலியார் வலிவலத்தார்
உக்கடையார்
உத்தமபாளையத்தார்
செட்டிநாட்டார்
சேதுபதியார் மூப்பனார்
பழையகோட்டையார்
பேட்டையார்
போன்ற, செல்வமும் செல்வாக்கும்
உள்ள குடும்பத்தார்களைத் தமது முகாமுக்குள் கொண்டுவந்ததுடன்,
ஆலை அரசர்கள்
பஸ் முதலாளிகள்
கள்ளமார்க்கட்காரர்
கொள்ளை இலாபமடிப்போர்
ஆகியோரையும் சேர்த்துக்கொண்டு,
பண பாணம் தயாரிக் கிறார்கள். பெரியாரின் பேச்சு போதாது, தி.
மு. கழகத்தை அழிக்க என்று எண்ணுகிறார்கள்.
நிலை குலைந்தாலும், தி.
மு. கழகத்தை அழிக்கும் அளவுக்காகிலும் பெரியாரின் பேராற்றல்
இருக்கிறது என்று திருப்தி பெறக்கூடக் காங்கிரஸ்காரர்கள் இடங்கொடுக்க
வில்லையே தம்பி! நான் என்ன செய்ய!!
பெரியாரின் பேராற்றலைத்
துணைகொண்டால், தேர்தலில் பெரிய வெற்றி பெற்றிடலாம் என்ற நம்பிக்கை,
காங்கிரசுக்கு இல்லை. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. என் மனதிலே
பட்டதைச் சொல்கிறேன்.
பெரியாரின் பேராற்றல்
தேர்தல் வெற்றியை, எப்போதுமே, எந்தக் கட்சிக்கும் தேடிக் கொடுத்தது
இல்லை!!
ஆமாம், தம்பி! தோற்கும்
கட்சிக்குத் தேர்தல் பிரச்சார வேலை செய்து செய்துதான், பெரியாருக்குப்
பழக்கம்.
நாடாண்ட ஜஸ்டிஸ் கட்சி,
பெரியாரின் பேராற்றலைத் துணைகொண்டது. காங்கிரசின் பிரசார பலத்தை
முறியடிக்கப் பெரியாரைத்தான் ஜஸ்டிஸ் கட்சி மலைபோல நம்பிக்கொண்
டிருந்தது. ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களான சர். ஏ. இராமசாமி முதலியார்,
பேசுவார் - பேருரைதான் - விவரம் விளக்கம் இருக்கும் - காரணம்,
கட்டுக்கோப்பு இருக்கும் - ஆனாலும், காங்கிரசாருக்குச் சூடு
கொடுக்க, காரசாரமாகப் பேச, "ரோய ரோய'ப் பேச, பெரியார்தான்
அழைக்கப்படுவார்! சர். ஏ. இராமசாமி, பேச்சில் பூங்காற்று வீசும்!
பூரிப்பு எழும்! பெரியார் பேச்சு, புயலைக் கிளப்பும், மரங்கள்
விழும்! சர். ஏ. இராமசாமி இலையைக் காட்டி மரத்தின் தன்மையை விளக்குவார்!
பெரியார். மரத்தையே பெயர்த்தெடுத்துக் கொண்டு வந்து கீழே போடுவார்!
சர். இராமசாமியின் பேச்சைக் கேட்பவர்கள் கனிவு காட்டுவர். கடுங்கோபம்
எழும் காங்கிரசின்மீது, பெரியார் பேசக் கேட்டால்! சம்மட்டி அடி
கொடுப்பார், பெரியார்!
எல்லாம் சரி! ஆனால் பலன்?
பெரியாரின் பேராற்றலைத் துணையாகப் பெற்ற ஜஸ்டிஸ் கட்சி, தேர்தலில்
பெற்றிபெற வில்லை - அடியற்ற நெடும்பனையென வீழ்ந்தது. எங்கும்
தோல்வி! எல்லோரும் தோற்றனர்! பெரியாரின் "ஜாதகம்' அப்படி!
அவருடைய பேச்சுக்குக் கிடைக்கும் பலன் அவ்விதம்!
அன்று பெரியாரின் பேராற்றலைத்
துணைகொண்ட ஜஸ்டிஸ் கட்சி, அதற்கு முன்பு பெற்றிருந்த இடத்தை
இழந்து, தோற்று ஒழிந்தது; இன்று பெரியாரின் பேராற்றலின் துணை
காங்கிரசுக்குக் கிடைக்கிறது!!
ஜஸ்டிஸ் கட்சி தோற்றுவிட்டபோது,
பெரியார் வருத்தப் பட்டாரா? எவ்வளவோ பெரியவர்கள், நல்லவர்களாயிற்றே,
தோற்றுவிட்டார்களே என்று துயரப்பட்டாரா? அதுதான் இல்லை!
தொலையட்டும் சனியன்கள்!
தெரியும் எனக்கு அப்போதே! மடப்பசங்க ஒழியட்டும்! நாமம் விபூதி
போட்டுக்கிட்டு ஊரை ஏய்த்தா, நடக்குமா! தோற்றான்கள். சுயமரியாதையத்த
ஆசாமிகள்!
என்றுதான் நண்பர்களுடன்
பேசினார் மகிழ்ச்சியுடன்.
என்ற எண்ணம் கொண்டவர்,
அப்படிப்பட்டவரின் "பிரசார பலத்தை'க் கொண்டு, காங்கிரஸ் எப்படித்
தேர்தல் வெற்றி தேடிக்கொள்ள முடியும்?
என்னைத் திட்டிப் பேசுகிறாரே,
அதுதான் மிச்சம்! வேறு உருப்படியான பலன், பெரியார் மூலமாகக்
கிடைக்காது; காங்கிரஸ் மூலவர்கள் அதனையும் நன்கு அறிந்துகொண்
டிருப்பதால்தான், வேறு வேறு "கருவிகளை'க் கூராக்கியபடி இருக்கிறார்கள்.
ஆனால், பெரியாரைக்கொண்டு
என்னை ஏசிப்பேசத்தான் வைக்கமுடிகிறதே தவிர, காங்கிரஸ் ஆட்சியினால்
விளைந்துள்ள கேடுகளை, கேடுகள் அல்ல என்று பேச வைக்க முடிகிறதா?
முடியவில்லை!
பக்ராநங்கலைப் பாராட்டுங்கள்,
பாரத ஒற்றுமைபற்றிப் பேசுங்கள்,
நேருவின் பெருமையைக் காட்டுங்கள்.
என்றெல்லாம் பெரியாரிடம்
சொன்னால், ஒத்துக்கொள் கிறாரா? அதுவும் இல்லை! அண்ணாத்துரையைத்
திட்டவா? காமராஜரைப் புகழவா? இந்த இரண்டும் தெரியும்; பிடிக்கும்;
பழக்கம்? சிந்திரி, சித்தரன்ஜன், பிம்ப்ரி, பிலாய், இவைபற்றி
எல்லாம் பேசச் சொன்னால், மனம் இடம் கொடுக்குமா பெரியாருக்கு!!
ஒருக்காலும் இல்லை!!
தம்பி, இன்று, பண்டித
நேரு ஐரோப்பிய பொதுச் சந்தையிலே மாக்மில்லன் பிரிட்டனைச் சேர்த்தது
சரியா தவறா என்பதிலே இருந்து, நீர்வளிக் குண்டுகளை ரμயாவும்
அமெரிக்காவும் மாறிமாறி வெடித்தபடி இருப்பதைக் கண்டிப்பது வரையில்,
காஸ்ட்டிரோவின் ஆட்சி முறையிலிருந்து காங்கோ பிரச்சினை வரையில்
பேசுகிறார். அவர் நிலைமை அவ்வளவு நேர்த்தியானதாக ஆகிவிட்டுப்
பாருக்கே பஞ்சசீலம் போதிக்கும் நிலையைத் தேடிக்கொண்டார்.
குருஷேவும் தெகாலும்,
மாக்மிலனும், அடினாரும், கென்னடியும் நடந்துகொள்ளும் முறை சரியா
என்பதுபற்றிக் கருத்துரை வழங்குகிறார் நேரு! இவர், நான் சட்டசபைக்குப்
போனது எதற்காக? என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். எனக்கே வேதனையாக
இருக்கிறது. அமெரிக்கா சென்றிருந்த நேரு பண்டிதர், உலகப் பொதுப்
பிரச்சினைகள்பற்றிக் கென்னடியுடன் பேசாமல், உருளைக்கிழங்கு "பொடிமாஸ்'
செய்வது எப்படி? என்பதுபற்றிப் பேசிவிட்டு வந்தால், உலகு அவரைப்பற்றி
என்ன நினைக்கும்! கூறும்? பெரியார் என்னைத் திட்டும்போது, அதுபோலத்தான்
கேட்பவர்களுக்குத் தோன்றும்.
ஆண்டு பல ஆகிவிட்டாலும்,
எனக்கேகூட, நேரு பண்டிதர் குருஷேவுடனும், டிட்டோவுடனும், மாக்மில்லனுடனும்,
நாசருடனும் பேசுகிறார் என்று கூறும் நிலைபெற்றிருக்கும் நேரத்தில்,
பெரியார், மண்டலக் காங்கிரஸ் தலைவர் மாரிமுத்து விடமும், இளைஞர்
காங்கிரஸ் தலைவர் ஏகாம்பரத்திடமும் பேசிக்கொண்டிருக்கும் நிலையைக்
காணும்போது, வருத்தமாகத் தான் இருக்கிறது. நேருவுக்கு நியூயார்க்கில்
வரவேற்பு என்கிறார்கள் - பாரிசில் விருந்து என்கிறார்கள் - பெரியாருக்கோ,
சாத்தூரில் சால்வை போர்க்கும் விழா, வேலூரில் எடைக்குஎடை காசு
தரும் விழா என்கிறார்கள் - நடத்துபவர்களில் நடுநாயகமாக இருப்பவர்,
காங்கிரஸ்காரர் என்கிறார்கள்! - கேட்கும்போதே கஷ்டமாகத்தான்
இருக்கிறது. ஆனால் நான் என்ன செய்யட்டும் தம்பி! யானைமீது அம்பாரி
அமைத்து ஏறிச் செல்கிற ஒருவர், திடீரென்று கீழே குதித்து, நான்
உடும்பு பிடிக்கப்போகிறேன் என்று ஓடினால், எப்படி இருக்கும்!
அப்படி இருக்கிறது பெரியாரின் இன்றைய நிலை!!
இந்த நிலைக்குப் பெரியாரைக்
கொண்டுவந்தாகிவிட்டது. இனி, தி. மு. கழகத்தை ஒழிக்கவேண்டிய
ஒன்றுதான் பாக்கி என்ற நினைப்பில், இந்தத் தேர்தலை அதற்குப்
பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டுப் பணியாற்றுகிறார்கள் காங்கிரசார்.
ஆசை காட்டினோம் மயங்கவில்லை!
அதட்டிப் பேசினோம் அஞ்சவில்லை!
அவரும் இவரும் மாறினபோதும்
அணுவளவேனும் மாறவில்லை!
எதையும் துருவி ஆராய்ந்து
ஏழைக்கேற்றது எதுவென்று
இடித்துக் கேட்கிறார் எப்போதும்.
அப்பப்பா! பெருந்தொல்லை!
பிளவு ஏற்படும், சிதறிவிடும்
கலகம் மூளும், கருகிவிடும்
எனக் காத்திருந்தும் பயனில்லை.
பட்டிதொட்டிகள் போகின்றார்
பலப்பல உண்மை கூறிடவே!
வரிகள் போட்டிட முடியவில்லை.
வருமே எதிர்ப்பு எனும் பயத்தால்!
வறட்டுப் பயல்கள் என்றிருந்தோம்
இவர் வகையாய்ப் பணிபல புரிகின்றார்!
மக்கள் மனதில் இடம் பெற்று,
மாண்புகள் மிகுந்து திகழ்கின்றார்!
எத்தனை இலட்சம் ஆனாலும்
இவர்களை ஒழித்திட வேண்டுமம்மா!
இல்லை என்றால் நமது கதி என்னாகும்? அது
அதோகதி!