சிறப்புக் கட்டுரைகள்

பிராங்கலின் டிலானோ ரூஸ்வெல்டின் வீரவாழ்வு
பேரறிஞர் அண்ணா
(திராவிடநாடு - 06.05.1945)

 

முதலாளிகளை முறியடிக்க முகாம்.
ஒப்பில்லா மணியின் ஓய்விலா உழைப்பு
எதிர்ப்பு முறிந்தது சதி சாய்ந்தது
மலர் பறிக்கையில் மாண்ட மாவீரர்
ரூஸ்வெல்டின் வீரவாழ்வு.
F.D.Roosevelt

“கதை முடிந்துவிட்டது!” என்று கூறி விட்டு வெள்ளை மாளிகையை விட்டு வெளி ஏறினார், ரூஸ்வெல்டின் துணைவியார். துக்கம் தோய்ந்த அந்த இருதயத்திலே இருந்து பீறிட்டுக் கொண்டுவந்த பதங்கள், கதை முடிந்துவிட்டது! என்பது. ஆம்! முடிந்துதான் விட்டது. கலங்கா உள்ளம் படைத்த மாவீரனின் கதை, அமெரிக்க வரலாற்றிலே வசீகரமான கதை; உலக மக்களின் உள்ளத்தை உருக்கும் கதை; முந்துதான் விட்டது! ஆனால் முடிந்தஅக்கதை; எவ்வளவு அபூர்வமான கதை!

1982-ல் பிறந்தார்.
1903-ல் படித்துப் பட்டம் பெற்றார்.
1905-ல் திருமணம்
1905-ல் வக்கீல் தொழில் ஆரம்பம்
1910-ல் செனட் தேர்தலில் வெற்றி
1913-ல் கடற்படை உதவிக் காரியதரிசியானார்.
1921-ல் கடலில் வீழ்ந்து வாதநோய் கண்டது.
1928-ல் நியூயார்க் கவர்னரானார்.
1930-ல் மீண்டும் நியூயார்க் கவர்னரானார்
1933-ல் குடியரசுத் தலைவரானார்.
1936-ல் மீண்டும் வெற்றி
1940-ல் மறுபடியும் வெற்றி!
1940-ல் நான்காம் முறை வெற்றி!
1945-ல் மரணம்.

இவை, ரூஸ்வெல்டின் வாழ்க்கைக் கதையைக் காட்டும் புள்ளி விவரங்கள். ஆனால் அந்தப் புள்ளிகளிலே புதைந்துள்ள அற்புதம் சாமான்யமா? இல்லை! அதிக முக்கியத்துவம் வாய்ந்த பல விஷயங்கள் புதைந்துள்ளன அந்தப் புள்ளி விவரங்களிலே.

எதிர்பாரா நிகழ்ச்சிகள் நிரம்பிய வாழ்ககை ரூஸ்வெல்ட்டுடையது! தேய்ந்த பாதையல்ல! திட்டமிட்ட கட்டுக் கோப்புமல்ல! எதிர்பாராத பாய்ச்சல்கள், நீர் வீழ்ச்சி வேகத்திலே பல நிகழ்ச்சிகள். அவர் ஒரு ஜெமீன்தாரர் வீட்டுப் பிள்ளை, ஆனால் வாலிபப்பருவத்திலே, பணம் கிடையாது கையிலே! தகப்பனாரின் கட்டளை அது.

கடற்படையிலே சேரவிருப்பம், தகப்பனார் அதனையும் தடுத்துவிட்டார்.

"பிரபலமடை, ஆனால் குடியரசுத் தலைவராக மட்டும் வராதே!" என்று குடும்பப் பெரியார் ஆசீர்வதித்தார். ஆனால் நாலுமுறை அவர் குடியரசுத் தலைவரானார்.

சீமான் வீட்டில் பிறந்தார் சீமான்களின் கொட்டத்தை அடக்க முனைந்தார்.

வாத நோயால் ஏழாண்டு வருந்தினார், பிறகோ நோய் தீர்க்கப்பட்டு, மரணமடையும் வரை ஓயாது உழைத்தார்.
கொலையாளிடம் சிக்கினார், ஆனால் ஒரு பெண்மணியால் காப்பாற்றப்பட்டார்.

சான்பிரான்சிஸ்கோ மாநாட்டுககுச் சகல ஏற்பாடுகளும் செய்துவைத்தார். ஆனால் அதிலே கலந்துகொள்ளுவதற்கின்றித் திடீரென்று இறந்துவிட்டார். ரூஸ்வெல்ட்டின் கதையே இப்படித்தான் யாரும் எதிர்பாராத நிகழ்ச்சிகள் கொண்டு இருந்தது. அவருக்கு முன்பு அமெரிக்கக் குடிஅரசுக்குத் தலைவராக 31 பேர் இருந்தனர். ஆனால் அவர்களில் யாரும் நாலு முறை தொடர்ந்து தலைவராக இருந்ததில்லை. இனி எவரேனும் அவ்விதம் வாய்ப்புப் பெறுவர் என்றும் கூற முடியாது. அமெரிக்க வரலாற்றிலேயே, ரூஸ்வெல்ட் ஒருவருக்குத்தான் அவ்விதமான 'வாய்ப்பு' கிடைத்தது. அதனை அவர் பரிசாகப் பெற்வில்லை; தயவால் கிடைத்ததல்ல; போரிட்டு உழைத்துப் பெற்றார். அந்த உயரிய நிலையை!

12 வருஷங்கள் ஒரு பெரிய அரசுக்குத் தலைவராக வீற்றிருப்பது என்றால் சாமான்யமல்ல! ஆயுள் பூராவும் வாழையடி வாழையாகப் பட்டம் பெறும் உரிமை பெற்ற மன்னர்களிலேயே கூடப் பலருக்குப் பனிரண்டு வருஷகால வாழ்வு, அமைதியும் ஆனந்தமும் தழுவியதாக இருப்பதி்லை. ரூஸ்வெல்ட், பிறப்புரிமை பெற்றவரல்ல, பெரும் படைக்குத் தலைவருமல்ல! பொதுமக்கள் தந்த 'ஓட்' பலம், பனிரண்டு ஆண்டுகள் அவருக்கு, அமெரிக்க அரசபீடத்தில் அமர்ந்திருக்கும் உரிமையைத் தந்தது. இந்தப் பனிரண்டு வருஷ வாழ்வுக்குச் சர்வாதிகாரிகள், எவ்வளவு படுகொலைகள், சதிச்செயல்கள் அடக்குமுறைகள், நடத்தியிருக்கவேண்டும்! எதிர்க்கட்சியின் பூண்டே இல்லாதபடி ஒழித்துவிட்டு, மாறுபாடு கொண்டவர்களின் மார்பிலே குண்டு பாயச் செய்து, பத்திரிகைகளைக் கட்டுப்படுத்திப் பள்ளி ஆசிரியர்களைச் சரிப்படுத்தி மாணவர்களை மயக்கி, தொழிலாளரை அடக்சி மெய்ப்பாதுகாவலுக்குப் படை நிறுவி, உளவு கூறவும், மறைந்திருந்து மாற்றாரைத் தாக்கவும் கூலிப் படையை வைத்துக் கொண்டு வெறியே போகுமுன்னம் விருது கூறுவேராரையும், வேட்டுவிடுவோரையும் முன்னோடச் செய்து, இவ்வளவு ஆர்ப்பாட்டம் முன்னேற்பாட்டுடன் அச்சம் நிறைந்த வாழ்வுதான் நடத்தமுடியும்! ஆனால் ரூஸ்வெல்ட் நாலுமுறை நாட்டுக்கு நடுநாயகமாக இருந்தார். தன் சொந்தத் திறமையைக் காட்டிச் சோர்விலாது உழைத்து இந்தப் பன்னிரண்டு வருஷத்திலே, வான்முட்டப் புகழ்பெற்ற ஹிட்லர் என்ன கதியானார்? முடிசூடிய மன்னனைத் தன் பிடியிலே வைத்திருந்த முசோலினியின் மூச்சு அடங்கிற்று! பிரிட்டனிலே, மாக்டனால்டின் புகழ் மங்கிற்று! சேம்பாலெனின் செல்வாக்குச் சிதைந்தது! இப்போது சர்ச்சிலுக்குப் பெவின் போட்டி என்று கூறக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பன்னிரண்டு வருஷங்களிலே முடிதுறந்தவர், முடி இழந்தவர், நாடு கடந்தவர், நாடு இழந்தவர், எவ்வளவோ? அமானுல்லா அரசு இழந்தார். ஆல்பன்கோ அரசுபோயிற்று! ருமேனிய மன்னரின் வாழ்வு 'ரகளை' நிரம்பியதாகிவிட்டது. அபிசீனிய மன்னர், நாடு இழந்தார், மீண்டும் பெற்றார். பெல்ஜிய மன்னர் சிறைப்பட்டார்! ஹாலந்து ராணி, பிரிட்டனிலே அடைக்கலம் புகுந்தார். கிரீஸ்மன்னருக்கு இலண்டன் வாசம்! இப்படிப் பன்னிரண்டு ஆண்டுகளிலே பலப்பல நெருக்கடிகள் அரசுகளில். இருதலைவர்கள் மட்டுமே, தமது செல்வாக்குக் குன்றாமல் இருந்து வருகின்றனர். ஒருவர ்ஸ்டாலின், மற்றவர் மறைந்துபோன ரூஸ்வெல்ட்! ஒருவர் வெள்ளை சஷியாவைச் சிகப்பு ரஷியாவாக்கிய வீரத் தலைவர்! மற்றவர், மறைந்தவர், வெள்ளை மாளிகயில் சிகப்புக் கொடியேற்றிய வெற்றிவீரர்!

அமெரிக்கக் குடி அரசுக் காரியாலதித்தின் பெயர் வெள்ளை மாளிகை. அங்கு ரூஸ்வெல்ட் சிக்ப்பு கொடி ஏற்றினார் என்றால் அதன் பொருள், சமதர்மத்தைத் தழுவி திட்டத்தை அவர் தயாரித்து அமுலுக்குக் கொண்டுவந்தார் என்பதாகும். பொருளாதாரத் துறையிலே புரட்சித் திட்டத்தைப் புகுத்தினார், முதலாளிகளின் நாடாகிய அமெரிக்காவிலே, அஞ்சா நெஞ்சும், மக்களிடம் அசையாத நம்பிக்கையும் இருப்பவராலன்றி இக்காரியத்தை வேரொருவரால் செய்ய முடியாது. ரூஸ்வெல்ட், முதலாளிகளை முறியடிக்க முகாம் அமைத்தபோது, "முடிந்துவிட்டது இந்தஆசாமியின் அரசியல் வாழ்வு" என்று கூறினவர் பலர்! ஆனால் அவருடைய அரசியல் வாழ்வு, அதிக ஒளியுடன் விளங்கிற்று, குறையவில்லை. திடீரென்று அணைந்துவிட்டது, அணைவதற்கு அரைவிநாடிக்கு முன்வரை அமெரிக்காவின் அணிவிளக்காக மட்டுமல்ல, தரணிக்கே திருவிளக்காக இருந்தது தலைவர் ரூஸ்வெல்ட்டின் வாழ்க்கை.

அவருடைய சிறுபிராயத்திலே, இப்படிப்பட்ட நிலை இவருக்கு வருமென்று எதிர்பார்த்தவர் யாருமில்லை. சொத்து இருக்கிறது, செல்லப்பிள்ளை, அதைச் சேதமாக்காமல் பார்த்துக் கொண்டால் அதுபோதும் என்று மட்டுமே ரூஸ்வெல்ட்டின் தகப்பனார் எண்ணினார். தாம் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த சிறு ஜெமீனை நிர்வகித்தால் போதும் என்று எண்ணினார். ஆனால் மகனோ, அமெரிக்காவின் நிர்வாகத்தோடு நிற்கவில்லை. ஐரோப்பிய அமளி, ஜப்பானியப்போர், பசிபிக் போர், பர்மாப் போர் என்று உலக முழுவதும் குமுரிய நிகழ்ச்சிகளை நிர்வகிக்கும் பொறுப்பைப் பெற்றார். அதனைச் செம்மையாகவும் நிர்வகித்தார்.

1882-ல் நியூயார்க் நகருக்கருகே உள்ள ஹைட்பார்க் என்ற இடத்திலே பிறந்த குழந்தை உலகையே பிரம்மிக்கச் செய்யும் தலைவராகப் போகிறதென்று, பெற்றோர் கருதவில்லை. ரூஸ்வெல்டின் தந்தை, பையன் வக்கிலானால் போதும் என்ற எண்ணினார். தாய், பிள்ளை படிக்கும்போதே கலியாணம் செய்துவைத்துக் கண்குளிரக் கண்டார். அன்னையின் சொற்படி ரூஸ்வெல்ட் எலினார், ரூஸ்வெல்டின் வாழ்க்கைக்கு உற்ற துணைவியாக இருந்து வந்தார்.

1910-ஆம் ஆண்டு, திடீரென்று ஒரு நண்பர், ரூஸ்வெல்ட்டைத் தேர்தலிலே இழுத்து விட்டுவிட்டார். ரூஸ்வெல்ட்டுக்குப் பழக்கமோ பாசமோ கிடையாது. ஆயினும், இறங்கியபிறகு என்ன செய்வது? மும்முரமாக வேலை செய்தார். அதுவரை தேர்தலில் நிற்பவர்கள், கிராமப் பிரச்சாரமே செய்வதில்லை, சாதாரண மக்களைப் பற்றிக் கவனிப்பதில்லை. ஒரு ஓட்டை மோட்டாரில் ஏறிக்கொண்டு ரூஸ்வெல்ட் கிராமப் பிரச்சாரம் நடத்திச் சாதாரண மக்களின் அன்பைப் பெற்றார். பாதை ஓரத்திலே, காட்டு மார்க்கத்திலே, கிராமத் தோட்டத்திலே எல்லாம் பேசலானார். தங்களைத் தேடிவந்த தோழரைத் தமக்குத் தலைவராக மக்கள் கொண்டதிலே ஆச்சரியமில்லை. ஒரு சீமான், வக்கீல், ஜெமீன் வீட்டுப் பிள்ளை, ஓட்டுக்காகத் தங்கள் கிராமம் தேடிவந்தது, கிராம மக்களுக்கு எவ்வளவோ உற்சபாகமூட்டிற்று. அன்று முதல் அவருக்கு அரசியல் தோழர்களாக இலட்சக்கணக்கான அந்தக் கிராம மக்கள் இருந்துவந்தனர். தேர்தலில் வெற்றி கிடைத்தது.

1913-ல் ரூஸ்வெல்ட்டின் திறமையைக் கண்டு அவருக்குக் கடற்படையில் உதவிக் காரியதரிசி வேலை தரப்பட்டது. அந்தப் பணியைத் திறம்பட நடத்தினார். கடற்படையிலே சேரவேண்டுமென்று வாலிபத்திலே ரூஸ்வெல்ட் விரும்பியபோது, தந்தை தடுத்துவிட்டார். ஆனால் அதே கடற்படைக்கு ரூஸ்வெல்ட் துணைச் செயலாளரானார், மகிழ்ச்சி மட்டாகவா இருக்கும்?

1921-ல் ஒரு விபத்து அவருக்கு, படகில் பிரயாணம் செய்கையில் பனி நிரம்பிய கடலில் வீழ்ந்துவிட்டார். அதனால் அவருக்கு வாதநோய் கண்டது. கைகால்கள் பயனற்றுப் போயின. இனி அவர் ஒரு வேலைக்கும் இலாயக்கில்லை, அரசியல் வாழ்வு இனிக் கிடையாது என்று பலரும் எண்ணிவிட்டனர், ரூஸ்வெல்ட்டும் ஏழு வருஷங்கள் வரையிலே அந்த நோயுடன் போராடினார். கைகால் செயலற்றதாகிவிடுமளவு வாதநோய் ஏற்பட்டுவிட்டால், குணமாவதோ, மறுபடி செயலாற்ற முடிவதோ, சாதாரணமாக நடைபெறக் கூடிய காரியமல்ல. அத்தகைய நோய்கண்டதும், கொஞ்சம் திடமனம் இல்லாதவர்கள், சோகத்தாலேயே சுருண்டு போயிருப்பர். நடைப்பிணமானோமே என்று வாடியிருப்பர். ஆனால் ரூஸ்வெல்ட் போராடி வெற்றிபெற்று, 1928-ல் நியூயார்க் கவர்னரானார். 1933-ல்தான், அவருக்குக் குடி அரசுத் தலைவராகும், வாய்ப்புக் கிடைத்தது. அதுபோது மெரிக்காவிலே பெரிய நெருக்கடி-பொருளாதாரத் துறையிலே. ஹுவர் ஆட்சியிலே மக்கள் பலன் பெறவில்லை. ரூஸ்வெல்ட், ஹுவருக்குப் போட்டியாகத் தேர்தலில் நின்றார். நாட்டுப் பொருளாதார நலிவைத் தீர்க்கும் திட்டம் தம்மிடம் இருப்பதாகக் கூறினார். பொதுமக்களின் அன்புக்குப் பாத்திரமான ரூஸ்வெல்ட்டின் செல்வாக்கின் முன்பு, ஹுவர் பணிய நேரிட்டது. தேர்தலில் ரூஸ்வெல்ட்டுக்கு, ஹுவருக்குத் கிடைத்தததைவிட எழுபது இலட்சம் ஓட்டுகள் அதிகம் கிடைத்தன.

தலைவராக அமர்ந்ததும் ரூஸ்வெல்ட் அமேரிக்காவில் பொருளாதாரப் புரட்சி என்ற குறிப்பிடத்தக்க, பொருளாதாரச் சமதர்மத் திட்டத்தை நிறைவேற்றினார். அந்தத் திட்டத்தின் சுருக்கம் இங்கு தரப்பட்டிருக்கிறது.
நாட்டின் பண முதலைச் சரியானபடி உபயோகிப்பதே ரூஸ்வெல்ட் எற்படுத்திய பொருளாதரச் சீர்த்திருத்தத் திட்டத்தின் முக்கிய கொள்கையாகும். அது மிகவும் விஸ்தாரமான பண நிர்வாக ஏற்பாடு.

1. அடமானம் செய்யப்பட்டிருக்கிற வீடுகளையும், நிலங்களையும் கடன் கொடுத்தவர்கள் கைப்பற்றிக் கொள்ளாதபடி அவற்றைக் காப்பாற்றுதல். அவைகளைக் காப்பாற்றுவதற்காகக் கவர்மெண்டார் பண உதவி செய்கிறார்கள்.
2. கைத்தொழிலுக்கும், பண ஸ்தாபனங்களுக்கும் பெருந்தொகைப் பணங்கள் கடன் கொடுத்தல்.
3. பொதுவேலைகளுக்காகப் பலநூறு கோடி டாலர்கள் ஒதுக்கி வைத்தல்.
4. வேலையில்லாதவர்களுக்கு உதவி செய்தல்.
5. மூடப்பட்டுப்போன பாங்கிகளில் பணம் போட்டிருந்தவர்களுக்கு நூறு கோடி டாலர் கொடுத்தல்.
6. பாங்கியிலுள்ள பண முதலுக்குப் பாதுகாப்பு
7. பணக் கஷ்டத்தினால் குடியானவர்கள் தங்கள் விளை பொருட்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்யாதிருக்கும்படி அவர்களுக்கு கடன்கொடுத்தல்.

இந்த ஏற்பாடுகளுக்கெல்லாம் கவர்ன்மெண்டாரே பணம் கொடுக்கிறார்கள். கவர்ன்மெண்டார் இதற்கு வேண்டிய பணங்களையெல்லாம் கடன் வாங்கிக் கொள்கிறார்கள்.

பொதுமக்களும் பணமுதலீடு செய்கிறவர்களும் பண செலவு செய்யாததால் ஏற்பட்டுள்ள வியாபாராம் மந்தத்தை நீக்குவதற்கு கவர்ன்மெண்டார் போதிய பணம் கடன் வாங்கி செலவு செய்யவேண்டும். அப்படி செலவு செய்யக் கூடும் என்பது பிரசிடென்ட் ரூஸ்வெல்ட்டின் கருத்தாகும். வேலையில்லாதவர்களுக்குச் செலவு செய்ய பணம் கிடையாது. அவர்களுக்கு வேண்டியப் பணம் கொடுக்கப்படவேண்டும். விவசாயி, அல்லது கைத்தொழில் ஸ்தாபனம் பணமுடையினால் பாங்கியிலோ, வர்த்தகரிடமோ, ஒரு அடமானத்தை மீட்க முடியாமல் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படிப்பட்ட சந்தர்பத்தில் கவர்மென்டார் வேண்டிய உதவி செய்ய வேண்டும். நிர்மாண வேலைகள் குறைந்துவிட்டதென்றும் பணம் கடன் வாங்கி அவ்வேலைகளைச் செய்ய முடியவில்லை என்று வைத்துக்கொள்வோம்.

அப்போது கவர்மென்டார் தங்கள் செலவில் அவ்வித நிர்மாண வேலைகளை நடத்த வேண்டும் இவ்விதமாக இந்த திட்டத்தினால் முந்தய முதலாளித்துவ ஏதேச்சதிகாரம் அடியோடு மாற்றப்பட்டு ஒரு புதிய பொருளாதார நிலமை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பிரசிடென்ட் பெற்ற முதலாளித்துவ பேராசையும் சுயநலத்தையும் பலமாகத் தாக்கி பொதுமக்களின் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு வழிகோலினார்.

தனிமனித முயற்சிக்குப் பதிலாக, கவர்மென்டார் நடத்ததப்படுகிற, ஜனநாயக பொது முயற்சி ஏற்பட்டு வருகிறது.

இந்த பெரிய இயக்கம் சமூக நீதியை அடிப்படையாக கொண்டது. இந்தப் பெரிய திட்டத்தினால் கைத் தொழில்கள் முன்னேறும்போது இவ்விதமாக ஒழுங்குபடுத்தப்பட்டது. தொழிலாளர்களுக்குப் புதிய பாதுகாப்புகளும், புதிய உரிமைகளும் ஏற்பட்டிருக்கின்றன.

பிரசிடென்ட் ரூஸ்வெல்டின் பொருளாதார சீர்திருத்தம் இரத்தம் சிந்துதல் இல்லாத ஒரு பெரும் புரட்சியாகும். அதனால் ஏற்படும் பலன்களைக் கவனித்தால் அது பதினெட்டாம் நூற்றாண்டில், பிரான்சிலும், அமெரிக்காவிலும் நடைபெற்ற அரசியல் புரட்சிகளுக்குச் சமமானது எனலாம்.

பிரசிடென்ட் ரூஸ்வெல்ட்டின் புதிய திட்டம் நாட்டின் பொருளாதார சமூக அரசியல் நிலைமைகளிலே பின்வரும் மாறுதல்களை உண்டாக்கியிருக்கிறது.

1. ஏராளமான இலாபம் சம்பாதிப்பதே இனிமேல் வியாபாரத்தின் முக்கிய நோக்கமாக இருக்கக் கூடாது. எந்த வியாபார கைத்தொழில் முயற்சியும் நியாயமான லாபத்தை மாத்திரம எதிர்பார்க்கலாம்.

2. தொழிலாளிகளுக்கு அதிக நியாயமான பாகம் கிடைக்கும்படி நாட்டின் வருமானம். புது முறையில் பகிரிந்து கொடுக்கப்படுகிறது.

3. சொத்துரிமை கொடுக்கப்பட்டிருந்த பழைய, முட்டாள் தனமான முக்கியம் அழித்து மாற்றப்பட்டு வருகிறது. மனித உயிர் சொத்துரிமையிலும் அதிக முக்கியமாகக் கருதப்படுகிறது.

4. கைத்தொழில்களை ஜனநாயக முறையில், நடத்துவதால் இப்போது வேலைச் செய்ய பிரியமுள்ள ஒவ்வொருவருக்கும் பிழைப்புக்கு இடமிருக்கிறது. யாரும் இனி பசியோடு இருக்கவேண்டிய அவசியமில்லை.

இவ்வளவு தீவிரமான திட்டத்தை, ரஷ்ய தோழமை இல்லாத போதே, தயாரித்த ரூஸ்வெல்ட் மட்டும், போருக்குப் பிறகு ஆட்சி செய்திருப்பாரே ஆனாலும் அமெரிக்காவிலே, மாஸ்கோ மணம் வேகமாகப் பரவியிருக்கும். இப்போதோ போர் காரணமாக புது முதலாளிகள் கிளம்பியுள்ளனர். ரூஸ்வெல்ட் பொருளாதாரப் புரட்சி ஏற்படுத்தியபோது பெரிய முதலாளிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பு முடிந்தது. சதி செய்தனர், சாயவில்லை. ரூஸ்வெல்டின் புகழ் ஓங்கி வளரலாயிற்று. 1936-ல் மீண்டும் லாண்டன் என்பவர் போட்டியிட்டு தோற்றார். இம்முறை ரூஸ்வெல்ட்டுக்கு 110 லட்சம் ஓட்டுகள் அதிகம் கிடைத்தன. உலகப் புகழை மிக விரைவிலே பெற்ற, வெண்டல் வில்கி, 1940-ல் ரூஸ்வெல்டுடன் போட்டியிட்டு தோற்றார். பெரு முதலாளிகளின் பெரு நண்பரான டூவி 1944-ல் போட்டியிட்டு தோற்றார். தங்க தடையின்றி மங்காது ரூஸ்வெல்டின் வெற்றிப் பாதை விளங்கிற்று. இப்போரிலே உலகெங்கும் அமெரிக்க ஆயுதங்கள் குவியும்படி செய்தார். வெற்றி நிச்சயம் என்பது ஏற்பட்ட நேரத்தில்தான் பயிரிட்ட அருமையான பூந்தோட்டத்திலே அழகுடன் பூத்திருக்கும் மலரை பறிக்கப்போகும் நேரத்திலே பூங்காவிலே இறந்துவிட்ட பூமான் போல ரூஸ்வெல்ட், தமது உழைப்பின் உச்ச நிலையை உலகு உணர்ந்த நேரத்தில், வெற்றி காணவேண்டிய நேரத்தில், வாகை சூடவேண்டிய வேளையிலே திடீரென எவரும் எதிர்பாராத நேரத்திலே இறந்துவிட்டார். கடைசி நிமிடம் வரையில் பணியாற்றிய, இந்த கலங்கா வீரனின் கதை முடிந்துவிட்டது. ஆனால் எப்படிப்பட்ட கதை.

முன்னெல்லாம் நமது நாட்டின் நன்மையை அனுசரித்து 'பிராங்கலின் டிலானோ ரூஸ்வெல்ட்' வகுத்த கொள்கைகளை நான் ஆதரித்து வந்திருக்கிறேன். இனியும் அந்தக் கொள்கைகள் துரிதமாகவும், செம்மையாகவும் நிறைவேறும்படி செய்வதற்கும் நான் முயச்சி செய்தே வருவேன்.

"நமது சுதந்திரங்களையும், நமது வாழ்க்கை முறையையும் காப்பாற்றுவதற்காக நாம், வெகுநாளாய் பிரமாண்டமானதொரு போரிலே ஈடுபட்டிருக்கிறோம். வெற்றியின் சின்னங்களை இன்று காண்கிறோம். கண்ட இடத்திலெல்லாம் நமது வீரர்கள் எதிரியை முறியடித்து வருகிறார்கள். வெற்றி கிடைத்துவிட்டால் போர்க்களத்திலிருந்து திரும்புபவர்களுக்கும், உழைக்கும் தொழிலாளர்களுக்கும் சர்க்கார் ஓர் உறுதி அளிக்கவேண்டும். அவர்களுடைய தியாகங்களெல்லாம் வீணாகவில்லை. அவர்களுடைய போராட்டமத்தனைக்கும், இந்த நாடு அருகதையுடையதுதான். நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு அவர்களுக்கு சந்தர்பமிருக்கும். இந்த 12 வருட காலமாக சாதாரண மக்களை காப்பாற்றுவதற்காக ரூஸ்வெல்டின் தலைமையில் பின்பற்றப்பட்ட கொள்கைகளே இனியும் பின்பற்றப்படும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட வேண்டும். உலகமெங்கம் சரியான, நியாயமான சமாதானத்தை ஏற்படுத்தி அதைப் பாதுகாத்து வருவதைத்தான் பொருத்திருக்கிறது, நாம் இருப்பதா மாய்வதா என்பது.

உலக ஜனத்தொகையிலே நாம் ஒரு சிறு பகுதிதான். நல்ல சமாதானம் நிரந்தரமாய் ஏற்படும் விஷயத்தில் நாமும் பங்கெடுத்துக் கொள்ளவேண்டுமென்றால் சரியான ஆலோசனைகளை நாம் கூறி வழிகாட்ட வேண்டும். போராட்டம் திடீரென்று நின்றுவிடக்கூடும். பல தலைமுறைகளுக்கு நம்முடைய நிலைமையைத் தீர்மானிக்கும் முடிவுகளைத் துரிதமாய்ச் செய்தாக வேண்டும். இந்த யுத்தத்தில் அழிவுச் சாதனங்களை உற்பத்தி செய்யும் விஷயத்தில் நாம் காட்டிய அதே திறமையை, சமாதனத்தை உருவாக்கும் விஷயத்தில் காட்டினோமானால் நமது எதிர்காலத்தைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. இதற்கெல்லாம் துணிவு வேண்டும் தீவிர உழைப்பு வேண்டும். எத்தகைய மாறுதலையும் எதிர்த்து நிற்கும் பிற்போக்காளர்களையும் சுயநலக் காரர்களையும் சமாளித்தாக வேண்டும்" என்று இப்போது அமெரிக்கக் குடி அரசுக்குத் தலைவரான ஹாரி எஸ்.ட்ரூமன், தலைராவதற்கு முன்னம், 'சண்டே டெஸ்பாட்ச்' எனும் இதழில் தீட்டிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். "இதற்கெல்லாம் துணிவு வேண்டும் தீவிர உழைப்பு வேண்டும் எத்தகைய மாறுதலையும் எதிர்த்து நிற்கும் பிற்போக்காளர்களையும் சுயநலக்காரர்களையும் சமாளித்தாகவேண்டும்" என்று ட்ரூமன் கூறினது, மறைந்த தலைவர் ரூஸ்வெல்ட்டின் மனதைப் படம் பிடித்துக் காட்டுவதற்கொப்பாகும். துணிவு! உழைப்பு! எதிர்ப்புக்கு அஞ்சாத உள்ளம் இவைகளே ரூஸ்வெல்ட்டை உலகத் தலைவர்களுள் உருவாக்கிற்று.
(அறிஞர் அண்ணா – 06.05.1945)முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.