அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும்
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பாகம் -8

அண்ணாவின் கட்டுரைகள்
டாக்டர் சு.செல்லப்பன், இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம்.

விண்ணிடையே பன்னூறாயிரம் மீன்களிலிருப்பினும் . . . ஒரு வெண்மதிதான் ஒளி வீசித் திகழ முடிகிறது. உலகில் எண்ணற்ற மலைகளிலிருப்பினும் உயர்ந்த மலை என்ற பெருமை இமயத்துக்கு மட்டுமே உண்டு. ஒரே பிரிவில் அடங்கும் பலரிடையேயும் ஒரு சிலர் மட்டுமே உயர்வு பெறமுடிகிறது. காலந்தோறும் தோன்றும் எண்ணற்ற எழுத்தாளர்களில் ஒரு சிலரே ஏற்றம் பெற்றவர்களில் முன்னணியில் நிற்கும் பெருமை. பேரறிஞர் அண்ணாவுக்கு உண்டு.

இலக்கியத்தில் இரு முக்கிய பிரிவுகளில் ஒன்று கவிதை; மற்றொன்று உரைநடை, கட்டுரை, உரைநடை இலக்கியம், ஒரு நாட்டின் கட்டுரைச் செல்வம் அந்நாட்டுக் கவிதைகளைவிட முக்கியத்துவம் பெறுகிறது என்கிறார் ஆங்கில ஆராய்ச்சியாளரான ஐபர்எவான்ஸ். கவிதைகள் அளக்கும் அளவுகோல்களாகவே பெரும்பாலும் அமைகின்றன. நாட்டு நடப்பை, அரசியலை, பொருளாதாரத்தைப் பற்றிப் பேசுவன கட்டுரைகளே. அறியாதனவற்றை அறிய நாம் கட்டுரையைத் தேடுகின்றோம்; ஏற்கெனவே தெரிந்துள்ளவற்றை எழில் வளத்தோடு காணக் கவிதைகளை நாடுகின்றோம் என்பர் அறிஞர்.

உரைநடையில் கட்டுரைகள் மட்டுமின்றி சிறுகதைகளும், புதினங்களும் அடங்குவன. கதைகளிலும், புதினங்களிலும் உள்ள பல்வேறு பாத்திரப் படைப்புகள், வாழ்க்கை நிகழ்ச்சிகள், கற்பனைகள் படிப்பதற்குச் சுவை கூட்டுகின்றன. கட்டுரையோ, செய்திக் கோவையாய் இருப்பதால் அவைபோலச் சுவை தரமுடிவதில்லை. மேலும் கவிதை, கதைகளில் ஆசிரியன் தன்னை மறைத்துக்கொள்ள முடியும். கட்டுரையில் ஆசிரியன் தன்னை அவ்வாறு கட்டுப்படுத்திக்கொள்ள முடியாது; ஆசிரியனின் கொள்கைகள், விருப்பு வெறுப்புகள் வெளிப்பட்டே தீரும். எனவே கட்டுரை வரைதல் இலக்கியக் கூறுகளில் கடினமான ஒன்றாம். அறிஞர் அண்ணா அவர்கள் அத்துறையில் வேறு யாரும் பெறமுடியாத வெற்றியைப் பெற்றுள்ளார்கள்.

சங்க காலத்தில் உரைநடை இருந்ததாயினும் இலக்கியங்களில் நாம் காண இயலவில்லை. சங்க காலத்தை அடுத்துத் தோன்றிய சிவப்பதிகாரத்தை உரைநடையிட்ட பாட்டுடைச் செய்ள் என்று பதிகம்பகர்கிறது. அதிலும் உரைநடை நெடுக இன்றி ஒரே வழிக் காணப்படுகிறது. இக்காப்பியத்தையடுத்து உரையாசிரியர்கள் எழுதிய உரைப்பகுதிகள் தென்படுகின்றன. ஐரோப்பியர்கள் தொடர்பால், குறிப்பாக ஆங்கில மொழி இங்கு வளர்ச்சியுற்றபின், தமிழ் உரைநடை பெருமளவு வளர்ந்குள்ளது. 18-ஆம் நூற்றாண்டில் மேல்நாட்டு ஆசிரியர்களான தத்துவ போதக சுவாமிகள், வீரமாமுனிவர் போன்றோர் உரைநடை வளர்ச்சிக்கு உதவினர். 19-ம் நூற்றாண்டில் இராமலிங்க அடிகள், போப்பையர், யாழ்ப்பாணத்து ஆறுமுக நாலவர் போன்றோர் வளம் மிக்க உரைநடை எழுதினர்.

20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வேதநாயகம் பிள்ளை, தமிழ்த்தாத்தா உ.வே.சா., கா.சு.பிள்ளை, பாரதியார் நாவலர் பாரதியார், போன்றவர்களின் உரைநடைகள் பாராட்டத்தக்க வகையில் அமைந்தன. இந்நூற்றாண்டின் இடைப்பகுதியில் பேரறிஞர் அண்ணாவுக்குச் சற்று முன்வரை மறைமலையடிகளார், திரு.வி.க., ரா.பி.சேதுப்பிள்ளை போன்றோரின் கட்டுரைகள் மக்கள் மன்றத்தில் சிறப்பான இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் எழுத்துலகில் தோன்றிய அண்ணா வெய்யோன் ஒளி தன் மேனியின் விரிசோதியில் மறையஞ என்று கம்பர் இராமனின் மேனி ஒறியில் சூரிய உளியும் அடங்கி ஒன்றியது என்று குறிப்பிடுவதுபோல் எழுத்துலகப் புகழுள் ஐக்கியமாகும் வண்ணம் வளர்ச்சிபெற்றார்.

மறைமலையடிகளாரின் கட்டுரைகள் நீண்ட, பெருமிதம் நிறைந்த சொற்றொடர்களைக் கொண்டவை. திரு.வி.க.வின் நூல்களில் எளிய, இனிய, சிறிய சொற்றொடர்கள் இடம்பெற்றன. ரா.வி.சேதுப்பிள்ளை அவர்களின் எழுத்தில் இலக்கியச் சொற்கள் கோவையாக இணைந்து ஏற்றம் தந்தன. இவர்கள் நடையைப் பன்பற்றிப் பலர் எழுதினர். ஓரளவு வெற்றியும் கண்டனர். அண்ணா அவர்களின் நடையோ தனித் தன்மை வாய்ந்தது. அதைப் பின்பற்றி எழுதவேண்டுமென்று மிகப் பலர் முயன்றனர். ஆனால் அந்நடையோ அண்ணாவைத் தவிர வேறு யாருக்கும் உரிமையாக மறுத்துவிட்டது.

அண்ணாவின் எழுத்தோ சமுதாய சீர்திருத்தத்தை மையமாகக் கொண்டு வட்டமிட்டுச் சென்றது. அண்ணா ஓயாது படிக்கம் இயல்புடையவர். கன்னிமாரா நூல் நிலையத்தையே கரைத்துக் குடித்தவர் என்று பாராட்டப்பட்டவர். கலைபயில் தெளிவு இருந்தமையால் கட்டுரை வன்மை அவரிடம் செம்மையுற அமைந்தது.

சிறுகதை எழுதுவோர் சிலர் இருப்பர். அவர்களால் புதினம் எழுத முடியாது. புதினம் எழுதுவோரிலும் சிலர் வரலாற்றுப் புதினங்களை வன்மையுடன படைப்பர். இவ்விரு சாராரும் ஆராய்ச்சிக் கட்டுரைகள், அரசியல் கட்டுரைகள் பக்கம் அடியெடுத்தே வைப்பதில்லை. ஒரு துறையில் மட்டும் பனைமரம்போல் உயர்ந்து கிளகைளின்றிப் பலர் இருக்க, அண்ணா அவர்களோ கிளைகள் அடர்ந்த கிளைகள்தோறும் விழுதுகள் படர்ந்த ஆலாக விளங்கிடக் காண்கிறோம். சிறுகதைச் சிற்பியாக, வரலாறு, சமூகம் ஆகீய இரு துறைப் புதினங்களிலும் வல்லவராக, அரசியல் அறிவு செறிந்த கட்டுரையாளராக, சீர்திருத்தச் சிந்தனை படர்ந்த சொல்வலராக அவர் விளங்கிடக் காண்கிறோம்.

அண்ணாவின் கட்டுரைகள் உணர்ச்சி நிறைந்தவை. படிப்போரையும் அந்த உணர்ச்சிகொள்ளச் செய்பவை. சிந்தனையைத் தூண்டுபவை. உழைப்பவன் ஒருவன், அதன் பலனை அனுபவிப்பவன் வேறொருவன் என்ற கருத்தை அவர் கூறும் பாங்கினை அறிவோம்! காடு நிலமானதும், வனம் தோட்டமானதும், மேடு மாளிகையானதும், பள்ளம் பாதையானதும், பாட்டாளியின் உழைப்பால்!

ஆனால் உழைப்பிற்குப் பிறகு அவன் அதனாலான உல்லாசங்களை அனுபவிக்கிறானா? இல்லை. அவன் வாழ்க்கையோ கசப்பு; அவன் பயிரிட்டுப் பிறருக்குத் தரும் கனி சுவையுள்ளது. பூமிக்கு அடியில் இருந்து அவன் செல்வத்தைச் செலுத்தி எடுத்துத் தருகிறான். ஆனால் அவன் செல்வனாவதில்லை; குனிந்தும, குப்பிறப்படுத்தும், எரியும் வெயிலில் உழைத்தும் அவன் அண்டத்தை முட்டும் மாளிகை அமைத்துத் தருகிறான். பிறகோ அதன் மீது பணம் படைத்த பிரதாபன் உலவுவதைக் காண அண்ணாந்து பார்த்துவிட்டு, தனது குடிசையில் கூரியின் ஒழுகலைக் கண்டு மனம் கசிகிறான். கடலில் குளித்து, சுறாவுக்கும் பிறவுக்கும் இரையாகாது தப்பி முத்தெடுக்கிறான். பின்னர் அது யாருடைய கழுத்திலோ மாலையாகிறது; கை வளையாகிறது; காதுகளில் நடனமாடுகிறது. அந்த முத்தெடுத்த தொழிலாளி வறுமைக் கடலில் நீந்தி நீந்திக் கரைகாணாது கலங்குகிறான். அழைப்பின் உறுபயனை அனுபவிக்க முடியாது அல்லற்படுகிறான். உழைப்பாளி உழைப்பின் பயனை அனுபவிக்க முடியாது அல்லற்படுகிறான் என்பதுதான் இப்பகுதியில் கூறியுள்ள கருத்து. அதை மட்டும் கூறினால் படிப்பவர் உள்ளங்களில் அது ஆழப்பதிய முடியாது. பல நிகழ்ச்சிகளைச் சுட்டுக்காட்டி, சொல்லுகின்ற கருத்துக்கு வலிமையூட்டும் போக்கு அண்ணாவின் கட்டுரைகளில் காணப்படும் தனிச் சிறப்பாகும்.

இவ்வாறு பிறர் மனங்கொள எழுதுவதால் அவருடைய கட்டுரைகளைப் பிரச்சார பஹஎழுத்துக்கள் என்ற சொல்வோருண்டு. அவருடைய அரசியல் எதிரிகள் அவரடைய எழுத்துகள் கலையழகைவிடப் பிரச்சார நோக்கம் கொண்டவை என்று கூறுவது கேட்டு அண்ணா அத்தகையோர்க்கு மறுமொழி கூறியுள்ளார்.

பிரச்சாரம் என்பதன் உட்பொருளே, தான் விரும்புகின்ற கருத்தை, தான் நம்புகின்ற கருத்தை, மற்றவர்கள் விரும்புகின்ற வகையிலேயும், நம்புகின்ற முறையிலேயும் பல்வேறு வகைகளில் எடுத்துச் சொல்வதுதான்! பிரச்சாரம் என்பது கொலை, களவு இவைகளைப்போல் ஒரு தீதான் காரியம், அந்தத் தீதான காரியத்தில் யாரும் ஈடுபடக் கூடாது என்று எண்ணிக்கொண்டிருப்பது மிக மிகத் தவறானதாகும். தன்னுடைய குழந்தை மிக அழகான குழந்தை என்பதை அடுத்த வீட்டிலே எடுத்துச்சொல்லுகின்ற தாய்இ தன்னுடைய குழந்தைக்குத்தான் பிரச்சாரம் செய்கிறாள். நம்முடைய நாட்டுக் கோயில்களெல்லாம் மதக் கருத்துகளுக்குப் பிரச்சாரங்கள். நம்முடைய நாட்ச சட்டமன்றப் பேருரைகள் எல்லாம் அரசியலுக்குப் பிரச்சாரங்கள் என்று அண்ணா கூறுகிறார். இந்த அடிப்படையை வைத்து நோக்கும்போது அண்ணாவின் கட்டுரைகள் தமிழினத்தின் நல்வாழ்வுக்கான பிரச்சாரங்கள் ஆகும். கட்டுரையில் சிறந்த மேற்கோள்களை, சிறு கதைகளை, அழகிய உவமைகளை இடையிடையே புகுத்திக் கருத்தை விளக்கம் போக்கு அண்ணாவுக்குரியது. அவருடைய கட்டுரையைப் படிக்கும்போது, இந்த இடம் விளக்கமின்றி இருக்கின்றது என எதையும் குறிப்பிடமுடியாது.

அடுக்குமொழி, இரட்டைக் கிளவி, எதுகை, மோனை ஆகியன எழிலுறப் பயன்விளைக்கம் வகையில் அவருடைய கட்டுரைகளில் அமைந்திருக்கக் காணலாம். அதனால் அவருடைய அரைநடை கவிதைபோல ஓசை நயம் கொண்டு அமைந்திருக்கிறது. அவ்வாறு எழுத முடியாதவர் அது ஒரு நடையா என்று பேசுவதுண்டு. அதற்கு அவரே மறுமொழி கூறுகிறார்; ஓசை நயம், அடுக்குத் தொடர், இரட்டைக் கிளவி போன்றவை பூங்காவில் உள்ள கவின் மலர்கள் போன்றவை. தாமாக மலர வேண்டும். மணமுள்ளவைகளைப் பதமாகப் பறித்துப் பக்குவமாக மாலைதொடுக்கவேண்டும். ஓசை நயத்தை எப்படியும் பெற்றுத் தீரவேண்டும என்று முயற்சித்தாலோ காது குடைச்சல் ஏற்படுவது மட்டுமல்ல; மொழிக்கு ஏற்பட்டுள்ள பெருமதிப்பும் குன்றும், மறையும். ஓசை நயத்தில் இயல்பாகவே அமைந்து, பொருள் செறிந்து, பொருள் தருபவையே தேவை. பொருளற்று, போலிவற்று, கொண்டுவருவது மொழிக்கு நாமே நம்மையறியாமல் செய்துவரும் தீங்காகும் . . . அளவும், முறையும், தேவையும் அறிந்து பயன்படுத்தியதனால் எழிலும் சுவையும் நிரம்பக் கிடைத்தன. இவ்வாறு செய்ய முடியாதோர் வீணாக அவர் மீது எரிச்சல் கொண்டனர். அதனால் ஏளனத்துக்கு ஆளாயினர்.முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai