அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும்
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பாகம் -- 7

பேரறிஞர் அண்ணாவும் ஆஸ்கார் வைல்டும்
(மு,சதாசிவம்)


பேரறிஞர் அண்ணாவின் நா அசைந்தால் நாடே அசையும். 1953 ஆம் ஆண்டில் ஒரு நாள் பேரறிஞர் அண்ணா அவர்கள் கடற்கரையில் பேசிக் கொணடிருந்தார். ஐம்பதாயிரம் பேருக்கு மேல் அமர்ந்து அவர் பேச்சைக் கேட்டனர். தமது பேச்சினூடே நான் சொல்லும் இந்தக் கருத்தை ஏற்பதாயிருந்தால் எல்லோரும் எழுந்திருங்கள் என்றார். உடனே அனைவரும் எழுந்திருந்தனர். பிறகு அமரச் சொன்னார். இதைக் கண்டு அசந்து போனேன்.

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது

என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தவர் அண்ணா. அவரது பேச்சுக்ககாகப் பல மணி நேரம் காத்திருந்து மக்கள் கேட்டு மகிழ்வர். காலத்தை வென்றவராகிய அண்ணா அவர்கள் குறித்த நேரத்தில் ஓரிடத்துக்கு வராததையே வழக்கமாகக் கொண்டிருந்தார். இதை மக்களும் அறிந்திருந்தனர். அதனால் நீண்ட நேரம் தவமிருந்த காத்திருந்து கேட்டுவிட்டுச் செல்வர். அவர்களுள் நானும் ஒருவன்.

பேரறிஞர் அண்ணாவுக்கு முன்கூட்டியே ஒரு தலைப்புக் கொடுக்க வேண்டியதில்லை. எந்தத் தலைப்பிலும் உடனே உரையாற்றும் ஒப்பற்ற திறன் படைத்திருந்தார். ஒரு முறை டீ சூடிவாபே என்ற தலைப்பில் பேசுமாறு சிலர் கேட்டுக் கொண்டனர். அண்ணா அவர்களும் தயங்காமல் அதே தலைப்பில் நீண்ட நேரம் பேசினார்.

சிலர் சிறந்த பேச்சாளர்களாயிருப்பர்; சிந்தனையாளர்களாக இருக்கமாட்டார்கள். சிந்தனை வளமில்லாதவர்களைத் திடீரென்று பேசச் சொன்னால் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். பேரறிஞர் அண்ணாவோ அறிவின் திருவுருவாயிருந்தவர். அவர் பேசத் தொடங்கினால் ஒவ்வொரு சொல்லும் தம்மைப் பயன்படுத்துமாறு அவர் வாயில் (வாயிலில்) வந்து நின்று கெஞ்சும்; அவருடைய ஏவலைக் கேட்கக் காத்திருக்கும்.

பேரறிஞர் அண்ணாவைப் போலவே 19 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் சொல்லாற்றல் மிக்க ஓர் அறிஞர் தோன்றினார். அவர் பெயர் ஆஸ்கார் வைல்டு என்பது. அவர் பேசுவதைக் கேட்டுக் கிளுகிளுத்துப் போகாதவர்களே இல்லை. ஒரு பேரழகி தன் அழகால் பிறரை மயக்குவது போலவே ஆஸ்கார் வைல்டு தன் அழகான மணி போன்ற குரலால், அழகிய சொற்களால் அனைவரையும் கவர்ந்தார். அனைவரையும் சொக்க வைத்தார்; கேட்டவர்களையெல்லாம் கிறங்க வைத்தார். ஆஸ்கார் வைல்டு சிறந்த பேச்சாளர்களாக மட்டுமன்றிச் சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார். (பொதுவாகப் பல பேச்சாளர்கள் எழுத்தாளர்களாகவும் இருப்பதில்லை. பல எழுத்தாளர்கள் பேச்சாளர்களாகவும் இருப்பதில்லை. பல சொற்பொழிவாளர்கள் பிறருடைய கருத்துகளையும் நகைச்சுவைகளையும் தங்களுடையனவாகவே ஆக்கிக் கொள்வர்.)

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோற் செயின்.

என்ற வள்ளுவ வாக்கை அப்படியே கடைப்பிடிப்பதில் வல்லவர்கள். ஆங்கில அகராதியின் தந்தை என்று உலகப் புகழ்பெற்ற அறிஞர் சான்சனும் சுவைபட உரையாடும் திறன் வாய்ந்தவராயிருந்ததார். அவருடைய வாயிலிருந்து உதிரும் வார்த்தை முத்துகளைக் கோத்து, அவருடைய வரலாற்றை எழுதிய பாஸ்வெல் என்பவர் நமக்குத் தந்திருக்கிறார். இளமையில் என்னை மிகவும் கவர்ந்த நூல் இதுவே. பிற்காலத்தில் அகராதி அறிஞனாக விளங்கப் போவதை அறியாமலேயே அகராதி அறிஞர் சான்சனின் வாழ்க்கை வரலாற்றில் ஈடுபட்டேன்.

எனினும் சான்சன் அவர்கள் ஆஸ்கார் வைல்டு போன்று சிறந்த மேடைப் பேச்சாளரல்லர். சில பேர் மணிக்கணக்காக அருமையாக உரையாடுவார்கள்; ஆனால் மேடையில் ஏறினால் அவ்வளவாகப் பேசமாட்டார்கள். ஆஸ்கார் வைல்டு மிகச்சிறந்த உரையாடல் வல்லவராயும், மேடைப் பேச்சாளராயும் எழுத்தாண்மை மிக்கவராகவும் விளங்கினார். ஆஸ்கார் வைல்டின் வாழ்கை வரலாற்றை எழுதிய ஃபிராங்க் ஹாரில் என்பவர், என்னுடைய வாழ்க்கையில் ஆஸ்கார் வைல்டை விட அறிவு மிக்கவரைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இவரைவிட மிகமிகக் கவர்க்சியாகவும், கலகலப்பாகவும் பேசக்கூடிய வேறு ஓர் அறிஞரைப் பார்த்ததில்லை. பேச்சாற்றலில் இவரைப் போல வல்லவர் ஒருவரைக் கண்டதில்லை என்று கூறினார்.

கேளாரும் வேட்ப மொழிவதாஞ்சொல்.

என்ற குறளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கியவர் ஆஸ்கார் வைல்டு அவர்களே. இவருடைய பகைவர்கள கூட மறைந்து நின்று இவர் பேச்சைக் கேட்டு மகிழ்ந்து போவார்கள். அது போலத்தான் பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளை மறுத்தவர்களும், அரசியல் எதிரிகளும் அண்ணாவின் பேச்சை மறைந்திருந்து கேட்டு மகிழ்வார்கள். இன்னும் கொஞ்ச நேரம் பேச மாட்டாரா என்று, கேட்பவர்களை ஏங்க வைக்கும் பேச்சாற்றல் வாய்ந்தவர்களே பேரறிஞர் அண்ணாவும், ஆஸ்கார் வைல்டு அவர்களும்.

ஆஸ்கார் வைல்டின் எதிரியான க்வீன்ஸ்பெரி என்பவர் ஒரு முறை ஆஸ்காருடன் சேர்ந்து பகல் விருந்து உண்ண நேரிட்டது. அவர் ஆஸ்கார் அமர்ந்திருந்த இருக்கைக்குப் பல இருக்கைகள் தள்ளி அமர்ந்திருந்தார். ஆஸ்காரைக் கண்டதிலிருந்தே அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக்கொண்டிருந்தது. ஆனால், ஆஸ்கார் பேசத் தொடங்கிய சில மணித்துளிகளுக்குள்ளேயே க்வீன்ஸ்பெரியின் சினம் எங்கேயோ போய் மறைந்துவிட்டது. தம்மை மறந்து சிரித்தார். மற்றவர்கள் எழுந்து போன பிறகும் எழுந்து போக மனமில்லாதவராய் அமைர்ந்திருந்தார். பிறகு, இவரைப் போன்ற அற்புதமான பேச்சாளரை நான் பார்த்ததில்லை என்று தன் மகனுக்குக் கடிதம் எழுதினார். இவ்வாறுதான் பேரறிஞர் அண்ணாவின் அரசியல் எதிரிகளை ம.பொ.சி., இரசாசி போன்றவர்கள் சொல்வலை வேட்டுவரான அண்ணாவின் சொல் வலையில் சிக்கினார். இதற்குக் காரணம் கேளாரும் (பகைவரும்) வேட்ப மொழியும் அண்ணாவின் திறந்தான்.

அறிஞர் அண்ணாவைப் போல ஆஸ்கார் வைல்டும் எல்லாத் தரப்பு மக்களையும் தம் பேச்சினால் கவர்ந்தார். தொழிலாளர்கள், மீனவர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர், அறிவியலறிஞர்கள், பெண்கள், குழந்தைகள் முதலிய அனைவரையும் மேற்கண்ட இருவரும் கவர்ந்தனர். பாமரராய் விலங்குகளாய்ப் பான்மைப் பட்டிருந்த தமிழறிஞர்களுக்கு அரசியல், சமுதாய, சீர்திருத்த விழிப்பிணர்வுகளை ஊட்டியர்களில் அண்ணாவே தலைசிறந்தவர். தந்தை பெரியாராகிய குருவுக்கும் மிஞ்சிய சீடராக விளங்கினார். அண்ணா இல்லாவிடில் இத்தனை அரசியல் கட்சிகள்(அவர் பெயரிலேயே) தோன்றியிருக்க முடியாது.

ஆஸ்கார் வைல்டு போன்ற அழகான தோற்றம் அண்ணாவுக்கு இல்லை. அண்ணாவின் வெற்றிலைக் காவிப் பற்கள் அவருடைய மதிப்பைக் குறைக்கவில்லை. மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போதே எவருக்கும் தெரியாமல் அவர் உறிஞ்சும் மூக்குப்பொடியே அவருடைய பேச்சைச் சொக்குப் பொடியாக்கியது. இருவரும் மனித நேயம் மிக்கவர்கள். அதனால் இன்னும் வாழ்ந்து வருகின்றனர். இருவரும் இன்னும் மக்கள் இதயங்களில் நிறைந்திருந்திருக்கின்றனர். எனினும் அரசியலில் பேரறிஞர் அண்ணாவுக்குக் கிடைத்த பெரும்புகழ் ஆஸ்கார் வைல்டுக்கு கிடைக்கவில்லை. இருவரும் தாங்கள் எழுதிய படைப்பிலக்கியங்களால் என்றென்றும் வாழ்வர் என்பது உறுதி.

உலகில் பல பேச்சாளர்கள் அவையோரைச் சிரிக்க வைப்பார்கள். ஆனால் எல்லோரும் அவையினரைச் சிந்திக்க வைக்க முடிவதில்லை. அண்ணாவும், ஆஸ்கார் வைல்டும் அனைவரையும் சிரிக்கவும் வைப்பார்கள் சிந்திக்கவும் வைப்பார்கள். இவ்விருவருடைய நகைச்சுவைகளும் அப்போதைக்கு மட்டும் சுவை பயப்பவை அல்ல; நவில்தொறும் நயம் பயப்பவை. சிந்திக்குந்தோரும் உடம்பை, உள்ளத்தைச் சிலிர்க்க வைப்பவை. காலத்தால் அழியாத நகைச்சுவையாற்றல் பெற்றவரே இருவரும்.

இருவரும் சமூகச் சீர்திருத்தவாதிகள், சமுதாயச் சீர்கேடுகளைக் கிண்டல் நடையில் சாடுவார்கள். கேட்பவர்கள் மனம் புண்ணாகாத வகையில் மூடப் பழக்கங்களைக் கேலி செய்வார்கள். இவர்கள் தாங்கள் அடுக்கடுக்காக எடுத்து வைக்கும் வாதங்களைக் கேட்பவர்களை அவற்றை உடனே ஏற்றுக்கொள்ளும்படி செய்து விடுவார்கள்

கட்டாய இந்தியைத் திணித்த குல்லுக பட்டர் இராசாசி அவர்களே பிறகு இந்தி ஒழிக! என்று முழக்கமிடும்படி செய்தவர் பேரறிஞர் அண்ணாவே. அறிஞர் இராசாசியைத் தம் அறிவுத் திறத்தால் வென்றவர் பேரறிஞர் அண்ணாவே. அண்ணாவின் பேச்சைக் கேட்டுப் பல பிராமணர்கள் பூணூலின் மீது கொண்டிருந்த பற்றினை அகற்றிவிட்டனர். குடுமி மீது வைத்திருந்த ஆசையையும் அகற்றிவிட்டனர்.

ஒரு பெரிய சிந்தனைப் புரட்சியை, அரசியல் புரட்சியை, சமுதாயப் புரட்சியைத் தோற்றுவித்தது அண்ணாவின் சொல்லாற்றலே. ஞந ளை அபைவநைச வாய ளுறடிசன என்ற பழமொழிக் அண்ணாவே உற்ற எடுத்துக்காட்டு. அண்ணா ஆணையிட்டால் எதையும் செய்யத் தயாராயிருந்தனர் தம்பிகள். தம்பி என்று அண்ணா விளிக்கும் விளியிலேயே தம்பியர்கள் சொக்கி வலையில் வீழ்ந்தனர். கட்டிவா என்றால் வெட்டி வந்தனர் பலர். அண்ணாவின் வரலாறு ஒரு புரட்சி வரலாறு. வரலாறு காணாத வரலாறு. நேருவே வியந்து போற்றிய வரலாறு.
அண்ணாவைப் போல் பெரும் புரட்சிகளைச் செய்யும் வாய்ப்பு ஆஸ்காருக்கு ஏற்படவில்லை. எனினும் அண்ணாவைப் போல் சிந்தனைப் புரட்சி செய்த பெருமை ஆஸ்காருக்கு உண்டு.

இருவரும் பேச்சால் மட்டுமன்றிப் பல நாடகங்களாலும் மக்களைக் கவர்ந்தனர். புரட்சித்தீ உமிழும் கட்டுரைகளாலும் மக்களை வயப்படுத்தினார். அண்ணாவின் பேச்சைச் கேளாதவர்கள் பேறு பெறாதவர்களே. அண்ணாவின் பேச்சு எப்படியிருக்கும்? தேன்வந்து பாயுது காதினிலே என்று ஒருவகையாகக் கூறலாம். காதல் மங்கை தந்த சுகம் இப்படிப்பட்டது என்ற எவரேனும் வாயினால் விளக்கிக் கூற முடியுமோ?

அண்ணாவின் பேச்சும் ஆஸ்காரின் பேச்சும் நினைக்க நினைக்க நெஞ்சில் தித்திப்பைக் கொடுத்துக்கொண்டேயிருக்கும். ஆனால் நேரில் அனுபவித்தவர்களின் அனுபவத்தை இப்போது முழுமையாக எவரும் பெற முடியாது. நூல்கள் மூலமாகத்தான் இப்போது நாம் அனுபவிக்க முடியும்.
(நன்றி - வளரும் தமிழ் உலகம்)


முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai