அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும்
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பாகம் - 6

அண்ணா ஒரு கவிஞர்
(டாக்டர்.சி.பாலசுப்பிரமணியன்)


உள்ளத் துள்ளது கவிதை - இன்ப உருவெடுப்பது கவிதை; தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை தெரிந்துரைப்பது கவிதை

என்று கவிதைக்கு இலக்கணம் வடித்துள்ளார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள்.
இலக்கியம் வாழ்வியலின் வெளிப்பாடாகும். இலக்கியம் ஒரு கலை வடிவமாக அமைவது. இலக்கியம் என்பது உள்ளத்து உணர்ச்சியைச் சொற்களால் தீட்டும் ஓவியமாகின்றது. ஆகவே உள்ளத்தின் வேறுபாட்டிற்கு ஏற்ப இலக்கியமும் பல்வேறு வகையாக வேறுபட்டு நிற்கும்.

கவிதை என்பது இலக்கியத்தின் ஒரு வகை. மனித சமுதாயத்திற்குப் பயன்படும் ஒரு மாபெரும் சிந்தனையைக் கவிதையானது உருவாக்கி உலகுக்கு வழங்குகின்றது. மேலும் மனித வாழ்க்கையின் அனுபவக் கூறுகளை ஒழுங்குபடுத்தி முழுமைப்படுத்தி ஒரு வடிவம் தந்து படிப்போர் உணருமாறு கவிதை செயல்படுகின்றது.

உலக இலக்கியங்களில் இத்தகு கவிதை படைத்தவர்கள் பல்லோராவார். தமிழ் இலக்கிய வரலாற்றிலும் கவிதை படைக்கும் கவிஞர் பரம்பரையுண்டு. இலக்கிய மரபுகளைக் கவிதை வடிவில் - செந்தமிழில் படைத்தளிக்கும் புலவர்களின் வரலாறு உண்டு.

பேரறிஞர் அண்ணா அவர்களையும் இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்கள் வரிசையில் வைத்து எண்ணிப் பார்க்கும் வாய்ப்புண்டு.

பேரறிஞர் அண்ணா அவர்கள் சீரிய சிந்தனையாளர்; அரசியல் மேதை; கேட்டார் பிணிக்கும் தகையவாய் சொற்பொழிவாற்றும் சொல்வலர்; கேளாரும் வேட்ப மொழியும் நல்மொழியாளர்; தம் கூரிய பேனா முனையிலே சீரிய கருத்துக்களைச் சீர்பட ஏர் உழும் எழுத்து உழவர்; கருணை மறவர்; இவ்வகையில் எழுத்தையாளும் எழில்சால் எழுத்தாளர்; பேச்சையாளும் சிறந்த பேச்சாளர்; கருத்துக் கருவூலம்; நாடகம் எழுதியும் நடிக்கும்; புதினப் படைப்பாளர், கட்டுரை வரைவதில் கைதேர்ந்தவர். இவ்வாறெல்லாம் இயம்புதல் சாலும். ஆயின் அண்ணா ஒரு கவிஞர் எனக் காட்டுதற்குக் காலமிதுவாகும். அவர் பாங்குறக் கவிதை புனையும் பண்பாளர். அதன் திறத்தினை எடுத்துக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.


பாடுகிறான் அண்ணன் ஓர் கவிதை என்று
பரிவாலே எண்ணிடாதீர் உடன் பிறந்தாரே!
சீர் அறியேன், அணி அறியேன், சிந்தை உந்தும்
செய்கி தனைத் தெரிவித்தேன்; ஆசையாலே
(இதழ் வாழ்த்து - தென்னகம் வார இதழ் - 16.01.1969)

என்று அண்ணா அவர்கள் சொல்லியிருந்தாலும் அண்ணாவின் கவிதைகள் என்னும் தொகுப்பு நூல் அவர்தம் கவிதை திறத்தினைக் காட்டி நிற்கின்றது. முப்பத்தைந்து ஆண்டுகள் அவர்தம் எழுத்தால் இவ்வையம் மயங்கிக் கிடந்த வரலாற்றினை இதிலுள்ள கவிதைச் சிதறல்கள் பறை சாற்றுகின்றன.

எந்த இலக்கியப் படைப்பாயினும் அதற்கு ஒரு படைப்பு நோக்கமுண்டு. உள்ளத்திலிருந்து உணர்ச்சி வயப்பட்டு ஊறிக் கிடந்தது சீறிக் கிளர்ந்து உண்மை தெளிந்து உன்ப உருவெடுப்பதே கவிதையானாலும் அது வெளிவருவதற்கும் ஒரு காரணமுண்டு. பேரறிஞர் அண்ணாவின் கவிதைப் புறப்பாட்டிற்கும் ஒரு சீரிய நோக்குண்டு. மனித சமுதாயத்திற்கும் ஒரு சீரிய நோக்குண்டு. மனித சமுதாயத்திற்குப் பயன்படும் ஒரு மாபெரும் சிந்தனையை இவரது கவிதைகள் கீறிவிடுகின்றன.

தமிழ் மக்கள் நல்வாழ்விற்காகத் தமிழரசு காண 1935 ஆம் ஆண்டு முதற்கொண்டு குடி அரசு, விடுதலை, திராவிட நாடு, காஞ்சி, தென்னகம் என்னும் பற்பல இதழ்களில் எழுதித் தமிழுக்கு அணி செய்தவர்.

அண்ணாவின் மனத்திலே மண்டிக் கிடந்த எண்ணங்கள் - உணர்ச்சிப் புயல்கள் 1937 முதற்கொண்டு பெரும் புயலாகக் கவிதைக் காற்றாக வீசத் தொடங்கின. அந்தக் கருத்துக் களஞ்சியங்கள் இசைப் பாடல்கள், வாழ்த்துப்பாக்கள், இதழ் வாழ்த்து, பொங்கல் வாழ்த்து, கதைப் பாடல்கள், அட்டைப்பட விளக்க ஓவியங்கள், அரசியல் அங்கதப் பாக்கள், போற்றிப் பாக்கள், மொழிபெயர்ப்புக் கவிதைகள் என்றெல்லாம் தமிழ் இதழ்களில் காய்த்து வெளிவந்தன. அவ்வாறு கிடைத்த பாக்களின் பாங்கினை - கவிதைக் கூறுகளை இனி முறையாகக் காண்போம்.


கவிதையின் பண்புகள்
இலக்கியம் அது தோன்றிய காலத்தை காட்டும் கண்ணாடி; இலக்கியம் சிறந்த பொழுதுபோக்கு; இலக்கியம் மனித வாழ்க்கைக்கு வழிகாட்டி இலக்கியம் என்பதற்குக் கூறும் இத்தகு பண்புகளாம். இவை போன்ற இன்னும் சில இயல்புகளும் கவிதைக்கும் பொருந்தும்.

கவிதை, மனிதர்களுடைய வாழ்வில் ஏற்படும் இன்ப, துன்பங்களையும் அனுபவங்களையும் நன்கு எடுத்துக்காட்டுகின்றது; மேற்கண்ட அனுபவத்தால் ஏற்படும் சுவைகளையும் உண்மையான உணர்ச்சியோடும், இயல்பான தன்மையோடும் எடுத்து இயம்புகின்றது.

எனவே கவிதையில் கருத்து, கருத்துக்கு உயிரூட்டும் உணர்ச்சி, கற்பனைச் செழுமை, பொருள் புலப்பாடுக்குரிய ஏற்ற வடிவம் ஆகிய நான்கும் இன்றியமையாதவைகளாகும். அண்ணாவின் கவிதைகளில் இந்நான்கும் அமையுமாற்றைக் காண்போம்.

கருத்து
வாழ்க்கைக்கு விளக்கம் அளிப்பதாகவும், வாழ்வியல் பற்றிய குறைகளையும், பயன்களையும் (வேல்யூஸ்) கூறுவதாகவும் கவிதையில் கருத்து அமைகின்றது.

அண்ணாதுரை யென்னும் அண்ணல் தமிழ்நாட்டு
வண்ணான் அழுக்கெடுப்பில் வாய்மொழியில் பண்ணாவான்
சிற்பன் எழுத்தோவியத்தில் செல்வரசு நாவாயின் அற்புதஞ்சூழ் மாலுமியென் றாடு
(1965 காஞ்சி ஆண்டு மலர் - 10-16 சமதர்மமும் சர்வேஸ்வரனும் கவிதைகள்) என்னும் திரு.வி.கலியாணசுந்தரனாரது வாழ்த்து, அண்ணா அவர்களது கவிதைக் கோட்பாட்டினைக் காட்டி நிற்கின்றது.

இன்மொழித் தமிழரின் ஏற்றமும், ஊற்றமும் இவர் கவிதையின் கருத்தோட்டமென்பதை முழுமையாக உணரலாம். வாழ்த்துப் பாடல்களிலும் இவ்வழுத்தொலியைக் கேட்கலாம்.


உழைப்பின் உயர்வைப் போற்றிடும் பண்பு
உலகெலாம் பரவிடல் வேண்டு மென்றே
விழை மிகக் கொண்டோம் அதனால்!
காய்கதிர் செல்வனைப் போற்றினர், ஏனாம்?
உயிர்கட்கு ஊட்டம் அளிப்பவ னதனால்,
உழவர்கள் உயர்வினைப் போற்றிடல் எதனார்?
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோர் அதனால்!
ஆவினம் போற்றினோம், அஃது எதனால்?
பரிந்து தீஞ்சுவைப் பால்அளிப் பதனால்!
எனவே இவ்விழா,
நன்றி கூறிடும் நல்விழா வாகும்
(பொங்கல் வாழ்த்து - 1963 திராவிடன்)

பொங்கல் நாளுக்குப் புத்துணர்ச்சி ஊட்டுகின்றார். காரணமின்றிக் காரியமில்லையென்பதனைக் கவினுறக் காட்டுகின்றார். செய்ந்நன்றியை மறவாதிருக்க இப்பொங்கல் நாளினைப் போற்றிட வேண்டுமெனக் கூறி பொங்கல் நாளினைப் போற்றிட வேண்டுமெனக் கூறி

குறள் நெறி குவலயம் பரவிடல் வேண்டும்!
குறள் வழி நடந்து நாம் காட்டிடல் வேண்டும்!

என்று இலக்கியச் சுவையூட்டுகின்றார்.

இந்த வாழ்த்திலேயே உழைப்பின் உயர்வினை சாய்கதிரவனுக்குச் சான்றாகக் காட்டிப் பாடுகின்றார்.

நேற்று நேர்த்திமிகு ஒளி அளித்தேன் நானே!
இன்று ஓய்வு கொள்ளப் போகிறேன்
என்று கூறிடுவதில்லை
நாமும் அதுபோல
உழைத்தபடி இருந்திடுவோம் உலகு உய்ந்திடவே!
என்னும் அடிகளின் பொருளினை உணரலாம்
வாழ்வும் வளமும் மங்காத தமிழ் என்பதும், தமிழ் வாழ நாம் வாழ்வோம் என்பதும் இவரது கவிதைகளின் கருத்துப் பொருள்களாக நீள நெடுக இருப்பதை நோக்கலாம்.
கண்ணீரில் வளர்ந்தவர் நாம்; எனவே அந்தக் கண்ணீரில் மிதப்போரின் துயரைத் தீர்க்க
எண்ணியெண்ணிச் செயலாற்றிப் புகழைத் தேக்கு!
(சீரணி செப். 1969 (கிராம நலம்) கதிர் 14 நெல் 12 அறிஞர் இதழ்)

என்னும் கவிதைச் சொற்கள் ஒரு கணப்போதும் மறக்க இயலாத செஞ்சொற்களாகும்.

கதைப் பாடலாயினும் கருத்தினையே முன்னிறுத்திக் காட்டுவதைக் காணலாம். எட்டாம் என்றி என்றொரு மன்னனின் கதையைப் பாட்டாக வடிக்கும்போது அம்மன்னன் மார்க்கம் மாறிய காரணம் மார்க்கம் அல்ல மாது உள்ளம் என்று கூறி,

அஃதே போல, பாரினிற் சிற்சிலர்,
கொள்கை மாற்றிடல், கோலம் மாற்றிடல்,
கொள்கையால் என்று கூறிடப் போமோ!
வேறு காரணம் இருந்தி டாவோ!
என்று அங்கதமாகப் பாடுகின்றார்.
(ஈ.வெ.கி.சம்பத் தி.மு.க.விலிருந்து பிரிந்தபோது எழுதிய அங்கதப் பாடல் 04.06.1961)

இவ்வகையில் கருத்து நலமே மிகுதியும் மலிந்து அதை விளக்குதற்கே கவிதைப் படைப்பிலே கற்பனையும் உணர்ச்சியும் காட்சி நல்குகின்றன. ஆகவே இவரது படைப்பிகள் சமுதாயம், அரசியல், பொருளாதாரம் போன்ற பிற பயன்களைக் கருதி அமையும் சார்பு இலக்கியங்களாக (அப்ளைய்டு லிட்டரேச்சர்) விளங்குகின்றன.

கற்பனை
இலக்கியத்துக்குச் சுவையூட்டவும், தெளிவான பொருள் விளக்கம் தரவும், நிறைந்த நாட்டத்தை உண்டாக்கவும் கற்பனை வேண்டும். பழைய நினைவுகளுக்கு புதிய உருவம் தந்து நிகழ்ச்சிகளைக் கோர்வைப்படுத்தவும் கற்பனை வேண்டும். கற்போர் மனத்தில் கருத்தை ஆழமாகப் பதிய வைப்பதற்கும் கருத்தோடு இணைந்த தொடர்பேற்படுத்துவதற்கும் கற்பனை துணை செய்கின்றது.

காடுடையார் என்னும் கதைப் பாடல் (காஞ்சி பொங்கல் மலர் உரைநடைக் கவிதை - 1965) சிறந்த உருவகக் கவிதையாக அமைகின்றது. நாட்டிலே மனிதனிடம் வந்து சிக்கிக் கொண்டு பெருமுயற்சியுடன் மீண்டும் காடடைந்த புலிக்குட்டியொன்று மனிதர்களின் இயல்புகள் எடுத்துரைப்பதாக அமைவது இது. ஏதோ விலங்குகளாய்ப் பிறந்துவிட்டோம்
கொலைத் தொழிலில் ஈடுபட்டோம்
கையையும் காலாயக் கொண்டு
அவர்கள் தாமோ நிமிர்ந்து
நிற்கின்றார் அச்சமற்று

என்றது புலி. இப்பகுதியில் மக்கள், மாக்கள் இவ்விரண்டின் தன்மை இயற்படக் கற்பனை செய்யப்படுகின்றது.

உணர்ச்சி
உணர்ச்சி கவிதையில் உயிரூட்டுவதாகும்; கருத்துக்கும் கற்பனைக்கும் ஏற்ற பாலமமைப்பது இதுவாகும்; கவிஞனின் கலைநயத்தினைக் காட்டவல்லது. கவிதைச் சுவையை மிகுவிப்பது. அண்ணாவின் கவிதைகளில் உணர்ச்சி என்னும் இக்கூறு நிரம்பவுள. கவிதைக்கு உயிர் உணர்ச்சி என்பதுண்மை.

தேயிலைத் தோட்டத்திலே(திராவிட நாடு 05.09.1943) என்ற இசைப்பாடல், சிறையில் துடிக்கும் அரசியல்வாதிகள் அவலநிலையினை நன்கு உணர்த்துகின்றது.

சிறைக்கூடத்திலே! - அவர்
செய்வ தென்ன வென்று
தெரியாமல் வாடுகிறார்!

என்று தொடங்கி

கதவுந்திறக்கக் காணோம் - இந்தக் கஷ்டத்தை எண்ணினால்
கலந்தண்ணீர் வருகுதே
கண்கள் சிவந்திடுதே - என்
காலமும் வீணாகப் போகுதே
அடுப்பிலிட்ட கட்டைபோல் - அவர்
அனைவரும் தேய்வதா
அணைத்திட வேண்டாமா

என்று ஆகஸ்டுப் போரில் காங்கிரசார் சிறையில் துன்புறக் கண்டு ராஜாஜி வருந்துவதாக, அவருக்கு ஆறுதல் கூறும் அண்ணா இப்பாடலைப் புனைந்துள்ளார்.

வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து, செய்வதறியாது சிந்தை நொந்து தான் பெற்ற பிள்ளைகளையே கொன்றுவிட்டுத் தானும் உயிர்மாயப் புகுகின்றார் ஒரு தாய். அவள் நிலையை உணர்ச்சிபட வருணிக்கின்றார் கவிஞர்.


ஊட்டி வளர்த்தவளே உயிர் குடித்தாள்!
ஓர்மடுவில் குழந்தைகளைத் தள்ளி விட்டார்
பிணமானார் ஈரமக்கள், ஒன்று பாக்கி
தன்னுடனே மொய்த திடாமல் காத்தவள்தான்!
எடுத்தணைத்து இன்பமது கொண்டாள் முன்பு
அணைத்துவிட்டாள் ஆவிதன்னை அன்னை கையால்
இந்த அவனிக்கு வேண்டாம் ஓர் தொல்லை என்று
பூவும் பிஞ்சும் போகும் முதலில்
பின்னர்சாயும் கொடியே வேரும் அறுத்து
என்று புத்தியிலா உலகமிது எனும் கவிதையில் உணர்ச்சி பொங்க எழுதியுள்ளார்.

வடிவம்
கவிதையில் கருத்துக்கும், உணர்ச்சிக்கும், கற்பனைக்கும் ஏற்ப வடிவம் அமைகிறது. சொல்லும் பொருளும் ஒத்தமைந்து, எளிமை, அழகு, தெளிவு பொருந்த வடிவம் அமையும்.

இவரது கவிதைகள் பெரும்பான்மையும் உரைநடைக் கவிதையாக அமைந்துள்ளன. மரபு நிலையிலிருந்து மாறிச் செல்லும் அமைப்புடையனவாக உள்ளன. பல கவிதைகளில் இவரே தம் கவிதைகளின் வடிவத்தைப் பற்றி, வடிவம் புலவர்களால் திருத்தி அமைக்கப்பட-வேண்டியதாக இருப்பதை உணருகிறேன். என்று குறிப்பிட்டுள்ளார். பதிகத்தின் வடிவம் காட்ட அல்ல தம் எழுதுவதென்றும், அதிலே உள்ள பொருளுக்கும் அதற்கும் இன்றைய அரசியல் நிகழ்ச்சிகளுக்கும் உள்ள வேடிக்கையான தொடர்பினைக் காட்டுவதற்கேயாகுமென்றும் எழுதியுள்ளார். (திராவிட நாடு 05.08.1956)

ஐயா! சோறு!
என்று
ஏழை
கேட்கிறான்;
காங்கிரசார்
பதில் என்ன
தருகிறார்கள்?
(திராவிட நாடு 10.12.1961)

என்னும் வரிகளைக் காணும்போது இன்றைய புதுக் கவிதையின் வடிவச் சாயல் அமைவதை நோக்கலாம்.

உவமை, உருவகம், சொல்லாட்சி, ஆகியன சிறக்க அமைந்து கவிதைக்கு உரமூட்டி நிற்பதையும் நோக்கலாம். கவிதையின் கலைநுணுக்கத் திறன் சிறக்க எழுதியுள்ளார்.

சுருங்கச் சொன்னால், இவர் காட்டும் நடைச் சித்திரம் என்னும் கவிதையே இவரது கவிதைத் திறனுக்குக் காட்டாக அமைவதை நோக்கலாம்.

கற்கின்றேன், நான்
கற்பவை கசடறக் கற்றுக்
கருத்தன்றித் தெளிகின்றேன்!
கேள்விக் செல்வம்
பெரும் விருந்தெனக்கு!
கேட்பன யாவையும்
ஏற்றுப் போற்றி
எதிரொளிக் கதிர்கள்
வீசிப் பாய்சிடும்
நிலைக் கண்ணாடி யாவேன்
உருவும்
திறனும் மிக்க
புதுக்கருத் தொன்று
என்னுள்
பூத்து, மலர்ந்திட
வழிவகை
செய்திடுவேன்!
(அண்ணாமலைப் பேருரை 1968)

என்னும் சொற்களாய் இவர் மனத்தில் பூத்த கருத்துக்கள் பூத்து மலர்ந்து கவிதை மலர்களாகச் சொரிந்துள்ளன என்பதுணரலாம்!

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai