அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும்
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பாகம் - 5

மார்க்ஸுக்கு லெனின்! பெரியாருக்கு அண்ணா!
'சசி'

பிப்ரவரி 3 - அறிஞர் அண்ணாவின் நினைவைப் போற்றும் நாள். இந்நாளில், அவரது சாதனைகளில் சிலவற்றை நினைவுகூர்வது, இளம் தலைமுறையினருக்கு சிறந்த வழிகாட்டியாக அமையக்கூடும்.

மார்க்ஸின் தத்துவத்தை அரசாங்கம் மூலமாக நடைமுறைப்படுத்துவதில் லெனின் எவ்வாறு தன்னை அர்ப்பணித்துக்கொண்டாரோ அதேபோல் தந்தை பெரியார் அவர்களின் கருத்துகளை அரசாங்கம் மூலமாக செயல்வடிவம் கொடுக்க தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் அறிஞர் அண்ணாவாகும்.

கார்ல் மார்க்ஸுக்கு எப்படி ஒரு லெனின் அமைந்தாரோ அவ்வாறே தந்தை பெரியாருக்கு அண்ணா அமைந்தார்.

தமிழ்நாடு பெயர் மாற்றம்
அண்ணா தமிழக முதல்வராக இருந்த குறுகிய காலத்தின் செயலாக்கம் தந்தை பெரியார் அவர்களின் கருத்துகளை நடைமுறைப்படுத்துவதிலேயே இருந்தது. அவற்றில் தலையாயது - தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம்.

மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் அந்தந்த பகுதியை குறிக்கும் வகையில் பெயர்கள் அமைந்திருக்கும்பொழுது நமது மாநிலத்திற்கு மட்டும் மாநில தலைநகரின் பெயரைக்கொண்டே ஸ்டேட் ஆஃப் மதராஸ் எனப் பெயர் அமைந்திருந்ததை மாற்றி தமிழ் நாடு எனப் பெயர் மாற்றம் செய்தார்.

இது குறித்து சட்டசபையில் பேசும்பொழுது, இத்தீர்மானம் ஒப்புக்கொள்ளப்பட்டது தமிழருக்கு, தமிழர் வரலாற்றுக்கு, தமிழ் நாட்டுக்கு கிடைத்த வெற்றியாகும். தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்காக உயிர்நீத்த சங்கரலிங்கனாருக்கு நினைவுச் சின்னம் எழுப்பியதுபோல அவர் எண்ணம் ஈடேறும் நிலை ஏற்பட்டுவிட்டது! என்றார்.

சுயமரியாதை திருமணங்கள் சட்டமாதல்:
சுயமரியாதை திருமணங்களைச் சட்டமாக்கும் மசோதாவை சட்டமசபையில் தாக்கல் செய்தபொழுது அதை எதிர்த்து சுதந்திரா கட்சியின் உறுப்பினர் டாக்டர் ஹண்டே பேசும்பொழுது இந்து மதம் புனிதமானது என இந்துக்கள் கருதுவதால் இந்து திருமணச் சட்டத்தில் இம்மசோதாவை இதன்படி சேர்க்க இந்துக்கள் விரும்பமாட்டார்கள் எனவும், முஸ்லீம்கள், கிறிஸ்துவர்களின் சட்டத்தில் இப்படிப்பட்ட திருத்தம் இணைக்கப்பட்டால், அதனைக் கட்டாயம் அச்சமூக மக்கள் எதிர்ப்பார்கள் என்பதால் இதன் விஷயத்தில் அவசரம் காட்டக்கூடாது என்றார்.

இதற்கு அண்ணா நாம் இந்துக்கள், எனவே தான், இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்துகிறோம். அதேபோல் முஸ்லீம்களும் முயற்சி எடுத்துக்கொண்டால் வரவேற்க தயாராக இருக்கிறோம் என்ற ஆணித்தரமான பதிலைக் கொடுத்தார்.

பி.யு.சி. வரை இலவசக் கல்வி:
பள்ளி இறுதி வகுப்பு வரை இலவசக் கல்வி என்று இருந்த நிலையில் ஏழைகளும் கல்லூரிக்குள் நுழைய வேண்டும் என்று முதல் முயற்சியாக, பி.யு.சி. வரை இலவசக் கல்வி என்ற திட்டத்தைக் கொண்டு வந்து செயல்படுத்தியது அண்ணாதான். எல்லோரும் படிக்கவேண்டும் என்பதே ஆட்சியின் குறிக்கோள் என்றார்.

தந்தை பெரியார்தான் தமிழகத்தின் முதல் பேராசிரியர். அவரது அறிவுரைகளால்தான் சமூகம் பகுத்தறிவு வழியில் முன்னேறி வருகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக அடக்கிவைக்கப்பட்ட இனம் தலையெடுத்து வருகிறது. பெரியாரின் பகுத்தறிவு புரட்சி நீடிக்கவேண்டும். அவருடன் சேர்ந்து உழைக்க கட்டளையிட்டால் பதவியையும் விடத் தயார் என்று கூறியவர் பேரறிஞர் அண்ணா.

உலகத்தில் எந்த நாட்டிலேயும் சர்க்காரால் சாதித்ததைவிட தனிப்பட்ட சீர்திருத்தவாதிகளாலேயே சமூகம் திருத்தப்பட்டிருக்கிறது. அந்த முறையில் பெரியார் அவர்களின் கருத்துகளால் நம் சமூகம் மிக நல்ல அளவிலே முன்னேறிக்கொண்டு வருகிறது என்று சொன்னவர் அண்ணா.

ஆலயங்களின் வருவாயிலிருந்து உபரியாகும் பணத்தை கல்வி, மருத்துவம் முதலிய சமுதாய நலவசதிகளை செய்து தரக்கூடிய வகையில் அறநிலைய பாதுகாப்புச் சட்டத்தை சீர்திருத்தி அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை அறநிலைய ஆணையரைக் கொண்டு ஆராயச் செய்ய வேண்டும் என்ற அவரது கனவு இன்று வரை நிறைவேற்றப்படாமலேயே உள்ளது.

விவசாய மக்கள் சேற்றிலே உழைக்கின்றார்கள்; அதனால் மற்றவர்கட்கு மார்பிலே சச்தனம். கள்ளிக் காரைகளை அவர்கள் விலக்குகிறார்கள். அதனால் மற்றவர்களுக்கு பூச்செண்டு. ஏழை விசாயிகளுக்கு குடியிருக்க நிலம் மட்டும் வழங்கினால் போதாது உழுவதற்கு அவர்கட்கு நிலம் கொடுக்கவேண்டும் என்ற அவரது கனவும் முழு அளவில் நிறைவேற்றப்படாமலே இன்று வரை உள்ளது.

அவர் இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் தந்தை பெரியார் அவர்களின் கருத்துகள் அனைத்தையும் நடைமுறைக்குக் கொண்டு வந்திருப்பார்.

நானிருக்கிற இடத்தில் அவருடைய (தந்தை பெரியார்) கருத்திருக்கும்; அவர் இருக்கிற இடத்தில் நானிருப்பேன் என்று கூறினார் அண்ணா. அந்த வழியில் இன்னொரு அண்ணா தோன்றுவது எப்போது?முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai