அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும்
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பாகம் - 3

அறிஞர் அண்ணா சில நினைவுகள் - பி.ஜி.சுந்தரராஜன்(சிட்டி)
அந்தக் கூட்டத்தினிடையே முறையாகப் பேசுவதற்கு முன்பு அண்ணா என்னை முதலில்
பல காலம் பிரிந்திருந்த கல்லூரித் தோழரை இன்றுசந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்
என்று அறிமுகப்படுத்தினார்.

தமிழக அரசியல் வரலாற்றைத் திருத்தி எழுதிய 1967-ம் ஆண்டு பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நாளன்னு நானும் மற்ற பத்திரிகை நிருபர்களும் தலைவர்கள் வாக்குப் பதிவு செய்வதை கவனிப்பதில் ஈடுபட்டிருந்தோம். நுங்கம்பாக்கத்தில் அறிஞர் அண்ணா வோட்டளித்துவிட்டு வரும்பொழுது வாக்குச் சாவடிக்கு வெளியில் நின்றுகொண்டிருந்தோம். எங்களைப் பார்த்து புன்முறுவலுடன் கையாட்டி விட்டு, காரில் ஏறிச் சென்ற அண்ணா சட்டெனத் திரும்பி, என்னருகே வந்து, ஹசந லடிர டிவ ஞ.ழு.? என்று கேட்டார். சற்று அசந்துபோன நான், ஆம் என்றதும், எத்தனை வருஷங்களாய்விட்டன, என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டார். நான் வானொலியின் மூத்த நிருபராகப் பணியாற்றிக் கொண்டிருந்ததைப் பற்றிச் சொன்னேன். மகிழ்ச்சியுடன் கை குலுக்கினார். உங்களுக்கு வெற்றி கிடைக்கட்டும் என்றேன். உண்மையாகவா என்று கேட்டார். உங்களுக்கு என்று மீண்டும் வலியுறுத்திச் சொன்னேன். சிரித்துக்கொண்டே விடை பெற்றார். என்னைப் போலவே மற்ற நிருபர்களும் வியப்பில் ஆழ்ந்திருந்தனர்.

அன்றைக்கு முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன், பச்சையப்பன் கல்லூரியில் சி.என்.அண்ணாதுரை பி.ஏ. ஆனர்ஸ் படித்துக்கொண்டிருந்தார். நான் பி.ஏ. மாணவன். பொருளாதாரத்தைச் சிறப்புப் பாடமாக எடுத்துக் கொண்டிருந்த அண்ணாதுரைக்கும், என்னைப் போன்ற வரலாற்றைப் பாடமாகக்கொண்ட சில மாணவர்களுக்கும் பொதுவாக சில வகுப்புகள் நடைபெறும். அந்த நேரங்களில் அடிக்கடி சந்தித்துப் பழகி நானும், அண்ணாதுரையும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம். பெரும்பாலும் நாங்கள் இருவரும் கல்லூரி நூலகத்திலேயே புத்தகங்களைப் படித்துக் கொண்டு பொழுதைக் கழிப்போம். வகுப்பில் எங்களைக் காணாதபோது பேராசிரியர் அவர்கள் இருவரும் நூலகத்தில் இருப்பார்கள் என்று சொல்லிக்கொள்வார்.

அன்றைய அரசியல் சூழ்நிலையில் பிராமணர் அல்லாதவர் நலனுக்காகத் தோன்றிய நீதிக் கட்சியின்பால்(ஜஸ்டிஸ் பார்ட்டி) அண்ணாதுரை அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். விடுதலைப் போராட்டத்தை நடத்திய காங்கிரசை ஆதரித்தவன் நான். அரசியல் பிரச்னைகளைப் பற்றி அடிக்கடி நாங்கள் இருவரும் காரசாரமாக விவாதிப்போம். கல்லூரிகளுக்கிடையே நடக்கும் விவாதங்களில் பச்சையப்பன் கல்லூரியின் சார்பாகக் கலந்துகொண்டு எதிர்க் கட்சிகளாக விவாதிப்போம். நீதிக் கட்சியின் தலைவர் சர்.ஏ.ராமசாமி முதலியாரின் மகன் கிருஷ்ணசாமியும், எங்களுடன் விவாதங்களில் கலந்துகொள்வார். பின்னர் டாக்டர் ஏ.கிருஷ்ணசாமி சென்னை மாநகராட்சி மேயராகவும் பதவி வகித்தார்.

பச்சையப்பன் கல்லூரி வரலாற்றிப் பேரவைக்கு அண்ணா தலைவராகவும், நான் செயலாளராகவும் இருந்தோம். குறிப்பிடத்தக்க பேச்சாற்றல் கொண்டிருந்த அண்ணா அடிக்கடி தாம் ஒரு தலைவராக வளரப் பொவதாக சொல்லிக் கொண்டிருப்பார். ராமசாமி முதலியார் போன்ற பெருந்தலைவர்கள் நிறைந்த தமிழ்நாட்டில் முடியுமா என்று நான் கேட்டதற்கு, அண்ணா சொன்னார்,

இன்றைய தலைவர்கள் மேல்மட்ட மக்களையே நம்பியிருக்கிறார்கள் சேரி மக்களைப் போன்ற எளியவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகைளைப் பற்றி அவர்களிடையே போய் அடிக்கடி பேசி, அவர்களுடைய ஆதரவைப் பெறுவேன். அந்த மக்களிடையே இன்று ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. என்று தீர்க்க தரிசனமாய் விளக்கினார். அவருடைய நம்பிக்கை வீண்போகவில்லை. 1931-ல் என்னுடைய கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டோம். கல்லூரித் தோழர்சி.என்.அண்ணாதுரை தலைவராக வளர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவி, தமிழக முதலமைச்சராகவும் பதவி வகித்தது வரலாறு. முப்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு என்னைப் பார்த்தபோது, பழைய நட்பை மறக்காது என்னுடன் அளவளாவியது எங்களுடைய கல்லூரி வாழ்க்கை நட்பின் விளைவு.

தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று அண்ணா சட்டப் பேரவை கட்சித் தலைவராகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராகப் பதவி ஏற்பதற்கு முன்பு நிருபர்களைச் சந்தித்தார். உலகின் பல நாடுகளிலிருந்து சிறப்பு நிருபர்கள் வந்திருந்தார்கள். நானும் வானொலிக்காக அங்கே இருந்தேன். அந்தப் பெரும் கூட்டத்தினிடையே முறையாகப் பேசுவதற்கு முன்பு அண்ணா என்னை முதலில் பலகாலம் பிரிந்திருந்த கல்லூரித் தோழரை இன்று சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அறிமுகப்படுத்தினார். அண்ணாவின் இந்தச் செய்கையை முரசொலி கட்டமிட்ட செய்தியாக வெளியிட்டது.

அந்தத் தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் காமராஜரைத் தோற்கடித்த வி.சீனிவாசனை உடனே பேட்டி கண்டு, டெல்லியிலிருந்து ஒலிபரப்புவதற்காக ஒலிப்பதிவை அனுப்புமாறு நான் பணிக்கப்பட்டேன். அப்பொழுது சீனிவாசன் ஒரு மாபெரும் வெற்றி வீரர் என்ற முறையில் பல பத்திரிகைகள் எழுதி வந்தன. தி.மு.க.தலைவர் அறிஞர் அண்ணாவை விட்டுவிட்டு சீனிவாசனை மட்டும் பேட்டி காண்பது முறையல்ல என்று டெல்லிக் சொல்லி அண்ணாவையும் பேட்டி காண அனுமதி பெற்றேன்.

பேட்டிக்காக சீனிவாசனை அண்ணாவின் வீட்டிற்கே வரச் சொல்லிக் கேட்டுக்கொண்டேன். அண்ணாவின் பேட்டிக்காக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறையின் திரைப்படப் பிரிவு செய்தி ஆசிரியரும், கேமராக்காரரும் பம்பாயிலிருந்து வந்துவிட்டனர். ஆனால் அண்ணா சென்னையில் இல்லை. எங்கிருக்கிறார் என்றும் ஒருவருக்கம் தெரியவில்லை. உளவுத் துறையை விசாரித்ததில் அண்ணா திருச்சியில் பெரியாரைப் பார்த்துவிட்டு காரில் வந்துகொண்டிருக்கிறார் என்று தெரிந்தது. எல்லோரும் போய் அவர் வீட்டில் காத்துக் கொண்டிருந்தோம். இரண்டரை மணி நேரம் கழித்து அண்ணா வந்தவுடன் என்னையும் கூட இருந்தவர்களையும் பார்த்து வியப்படைந்து என்னவென்று விசாரித்தார். விஷயத்தை விளக்கியவுடன் பேட்டிக்கு ஒப்புக்கொண்டு சிறிது அவகாசம் கேட்டார்.

பேட்டிக்கு அண்ணா தயாரானவுடன் சீனிவாசனைப் பேட்டி காணப்போவதைப் பற்றியும் சொன்னேன். உடனே அண்ணா சீனிவாசனை அழைத்து கேள்விகளுக்கு உணர்சி வசப்படாமல் பதிலளிக்குமாறு சொன்னார். அண்ணாவை நான் கேள்விகளில் ஒன்று, தேர்தல் நியாயமாக முடிந்ததா? என்பது. அதற்கு அவர் அளித்த பதில்: சென்னைவாசிகள் எப்பொழுதுமே நிதானமாக சிந்தித்து செல்படக் கூடியவர்கள்; ஆளுங்கட்சியினர் சில சமயங்களில் முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபட்டபோதுகூட, சென்னை வாக்காளர்கள் நேர்மையாகவே நடந்து கொண்டார்கள்.

சீனிவாசன் பேட்டியும் சரியாக அமைந்தது. இரண்டு பேட்டிகளும் அன்றிரவே டெல்லியிலிருந்து ஒலிபரப்பாயின.

அண்ணா முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, நிருபர்களிடம் மிகவும் எளிய முறையில் பழகினார். நிருபர்களுக்கிடையே சில சமயங்களில் என்னை பார்த்து, பி.ஜி.! என்ன சொல்றீங்க? என்று கேட்பார். எனக்கு சிறிது சங்கடமாகவே இருக்கும்.

வரிவிதிப்பு, அரசாங்கத்துக்கு வேறுவிதங்களில் கட்டணம் செலுத்துவது போன்ற விஷயங்களில் ஏழைகள் பாதிக்கப்படாமல் இருக்கவேண்டுமேன்று அண்ணா பார்த்துக் கொள்வார். இதற்காக, ஏழைகளைத் தவிர்த்து பணக்காரர்களிடமே வசூல் செய்ய வேண்டுபென்பதை அடிக்கடி ஆங்கிலத்தில் கூயயீ வாந சஉ; யீயவ வாந யீடிடிச என்று கவிதைபோல சொல்லுவார்.

அவருடைய ஆட்சிக் காலத்தில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றது. அதற்கான சிறப்பு மலர் தயாரிக்கும குழுவில் பி.ஜி.யைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்ற சொல்லிவிட்டார். அண்ணா குறிப்பிட்டது யார் என்ற பலரிடம் விசாரித்தபோது அன்றைய பள்ளிக் கல்வி இயக்குனர் இன்றைய மத்திய திட்டக்குழு உறுப்பினர்) கி.வெங்கடசுப்ரமணியம், அண்ணா குறிப்பிட்டது என்னைத்தான் என்று விளக்கினார். சிறப்பு மலர் குழுவில் விளம்பரக் கமிட்டித் தலைவர் எம்.ஜி.ஆருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அவரும், முப்பதாண்டுகளுக்கு முன், திரைப்படத்துறையில் நுழைந்தபோது, என்னுடன் பழகியதை நினைவுகூர்ந்து, மிகவும் மகிழ்ச்சியுடன் ஒத்துழைப்பு தந்தார்.

அண்ணா மறைந்தபோது, வானொலி நிருபர் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தேன். கின்னஸ் புத்தகத்தில் பதிவான பிரம்மாண்டமான ஊர்வலத்தில் அவருடைய சடலம் எடுத்துச் செல்லப்பட்டபோது, தனிப்பட்ட முறையில் கலந்து கொண்டு ஊர்வலத்தின் முகப்பில் கடைசிவரை நடந்து சென்று நட்பின் சிகரமான அறிஞர் அண்ணாவுக்கு நான் அஞ்சலி செலுத்தினேன்.

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai