அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும்
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பாகம் -37

பத்திரிகையாளர்களைக் கவர்ந்த பேரறிஞர்
தொகுப்பு: த.பி.
ஆதாரம்: திருவிளக்கு, தினமணிகதிர், ஆனந்தவிகடன்
நன்றி: தமிழரசு 16.09.1984 பேரறிஞர் அண்ணா தன்னை ஒரு பத்திரிகையாளர் என்று சொல்லிக்கொள்வதில் மிகுந்த பெருமை அடைந்து வந்தார். பல்வேறு பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்த அவர், பத்திரிகையாளர்களிடம் மிகுந்த அன்பு கெண்டிருந்தார். சில பத்திரிகை நிருபர்களின் பார்வையில் அண்ணா எப்படிக் காட்சி தந்தார் என்ற செய்தி சில நிகழ்ச்சிகளில் வாயிலாகத் தொகுக்கப் பெற்றுள்ளது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழின் நிருபர் திரு. என்.எஸ்.ஜகந்நாதன் ஒரு முறை அண்ணாவைக் குறித்து எழுதியது வருமாறு:

சென்னையில் ஒரு முறை அவரை சந்தித்தேன் காத்திருந்து காத்திருந்து கடைசியில் இரவு பதினொன்றரை மணிக்குத்தான் பார்த்தேன். இப்படி ஓய்வில்லாமல் வேலை செய்தால் எப்படி? ஓர் ஒழுங்கு முறையுடன் வேலைகளைப் பார்க்கக் கூடாதா? என்று கேட்டேன். அதெல்லாம் முடிகிற காரியமில்லை, பொது வாழ்வில் வந்துவிட்ட பிறகு, எப்படி முடியும் என்றார். மாணவர் கிளர்ச்சி, தொழிற்சாலைகள் வேலை நிறுத்தம் ஆகியவைகளைப் பற்றிக் கேட்டேன். மாணவர்களில் சிலர் இப்போது உங்களைத் தாக்கிப் பேசுகிறார்களே . . . இதெல்லாம் சகஜம், அரசியலில் அப்படித்தான், இன்றைக்கு இகழ்வார்கள்; நாளைக்கு ஓகோ என்று புகழ்வார்கள் என்றார். ஸின்ஸியர்டி என்பதற்கு தமிழ் வார்த்தை எனக்குத் தெரியாது, ஆனால் அவ்வார்த்தை யாருக்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தும் என்று தெரியும் அவர், அண்ணா. ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழின் மற்றொரு நிருபரான திரு. கே.எஸ்.ராமாநுஜம் குறிப்பிடுகிறார்:

ஜனவரி 25, 1968, இரவு 11 மணி இருக்கும், சென்னை வந்திருந்த பிரபல சினிமா பத்திரிகை பிலிம்பேர் ஆசிரியர் திரு.பி.கே.கரஞ்சியா அண்ணாவைச் சந்திக்க விரும்பினார். மறுநாள் காலை 8.30க்கு அண்ணா இல்லத்திற்குப் போனோம். அப்போது குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு விட்டுக் களைப்புடன் இருந்தார். இருந்தும் எங்களுக்குத் தயங்காமல் பேட்டி கொடுத்தார், பத்திரிகையாளரிடம் அவருக்கு அவ்வளவு பரிவு. பதட்டப் படாத குணம்; பண்பு மிகுந்த உபசரிப்பு; அவசரப்படாத சூழ்நிலை, ஒளிவு மறைவு இல்லாத பதில்கள் . . பொது வாழ்வில் முழுமையாக ஈடுபட்டிருக்கும் பெரும் பதவியிலிருக்கும் அரசியல் தலைவரிடம் இவை அமைவது எளிதல்ல. அண்ணா இரண்டு ஆண்டுகள் கூட முதல்வராகப் பணியாற்றவில்லை. முடிந்த வரை மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து, பணியாற்ற முற்பட்டாரென்றே நான் உறுதியாகக் கூறுவேன். அரசாங்கத்தில் பணியாற்றும் பல பெரிய அதிகாரிகளும் அண்ணாவைப் பற்றிய இந்த அபிப்பிராயமே கொண்டிருந்தனர், நிறைகுடம் தளும்பாது என்கிற வாக்குப்படி நடந்த தலைவர் அண்ணா.

மெயில் ஏட்டின் நிருபர் திரு பெர்னாண்டிக்ஸ் அண்ணாவைக் குறித்து எழுதியுள்ளது வருமாறு:

அண்ணாவுடன் பல சமயங்களில் தனித்து உரையாடியிருக்கிறேன்; பத்திரிகையாளர்களுடன் அவர் பேசும்போதும் இருந்திருக்கிறேன். அவரிடம் உள்ள சிறப்பான திறமை இதுதான்: எந்தக் கருத்தையும் பத்திரிகையாளரிடம் திணிக்கமாட்டார்; மாறாக எண்ணங்களை அவர்கள் முன் எடுத்துக்கூறி விவாதிப்பார், இது பத்திரிகையாளர்களைக் கவர்ந்த ஒரு முறையாகும். இந்தி எதிர்ப்புப் பிரச்சனை பற்றியும், பிரிவினைக் கொள்கை பற்றியும் அவரை கேள்விகள் கேட்டுத் திணற அடிக்கும் வேலையில் இறங்கினர் வட இந்தியப் பத்திரிகையாளர்கள். ஆனால், அவரோ முதன் முதலாகப் புதுடில்லியில் நடத்திய அந்தப் பத்திரிகையாளர் கூட்டத்தில் இருந்த வடக்கத்திய நிருபர்களை வாய்பேசவிடாமல் செய்துவிட்டார், நான் பிரிவினைவாதி அல்ல; இந்தி எதிர்ப்புவாதியுமல்ல; எதற்குமே நான் எதிரியுமல்ல; ஓன்றுபட்ட பலம் வாய்ந்த இந்தியா என்பதுதான் எனது குறிக்கோள். எல்லா தேசியமொழிகளும் வேண்டும். ஒன்று மற்றொன்றுக்குப் போட்டியாக இருக்கக்கூடாதென்பதுதான் எனது கருதது. எல்லாத் தேசிய மொழிகளும் வளர விடப்ட்டும அதில் மக்களாகப் பார்த்துத் தங்கள் விருப்பத்தைத் தெளிவு செய்து கொள்ளட்டும் என்றார் அவர். கடைசியாக ஒன்று; வடக்கே உள்ளவர்கள் அண்ணா சொல்வதை விரும்பவில்லை என்பது உண்மையாக இருக்கலாம்; ஆனால் உணத் தலைப்படடுவிட்டார்கள் என்பது உண்மையே! கலைமகள் இதழில் டெல்லி கடிதம் எழுதுபவரும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபருமான திரு. தெ.சீனிவாசன் எழுதியுள்ளார்.

அண்ணா தமிழில் மடை திறந்தது போலப் பேசும் ஆற்றல் உள்ளவர் என்பதும் இதனால்தான் அவருக்கு அடுக்குச் சொல் அண்ணா என்ற பெயரும் கிடைத்தது என்பதும் எனக்குத் தெரியும், ஆனால் அவர் ஆங்கிலத்தில் பேசும் அருமையை இங்கு வந்த பிறகுதான் தெரிந்துகொண்டோம். அவர் முதலில் ராஜ்ய சபையில் பேசியபோது ஊசி விழுந்தால்கூட சப்தம் கேட்கும் அளவுக்கு சபையில் நிலைமை, நிசப்தம், ஆனால் இந்தி ஆட்சி மொயியாவதைப் பற்றி அவர் பேசிய பேச்சுக்கு நிகராக அதைத்தான் சொல்லலாம். எங்களுக்கு எந்த மொழி மேலும் துவேஷம் கிடையாது. ஆனால் எங்கள் பிள்ளைகளுக்குத் தடையாக எதிர்ப்படும் ஒரு மொழி எப்படிப் பரவ முடியும்? நாங்கள் வேண்டுவதெல்லாம் இந்தி மொழியும் அபிவிருத்தி அடைந்து ஆங்கிலத்துக்குச் சமானமாக உயரவேண்டும் என்பதே என்றதை இந்தி வெறியர்கள் கூட ஆரவாரிக்காமல் இருக்க முடியவில்லை.

டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் சிறப்பு நிருபர் திரு. சி.வி.விஸ்வநாத்தின் கருத்து வருமாறு: மாநிலங்கள் அவையில் தங்குதடை இல்லாமல் அருவி போல் இழைந்து காரண காரிய விளக்கங்களுடன் - அறிவுத் திட்பத்துடன் - அமைதியைக் காட்டி - சாந்தம் தவழ அண்ணாதுரை அவர்கள் முதன் முதலாகப் பேசியபோது எப்படி எப்படியெல்லாமோ நினைத்துக் கொண்டிருந்தவர்கள் எப்படிப்பட்ட ஆச்சரியத்தைப் பெற்றிருப்பார்கள் என்பதைக் கற்பனை செய்தும் பார்க்க முடியாது. அப்போது பிரதமராக இருந்த காலஞ்சென்ற நேரு, அண்ணாதுரையின் அந்தப் பேச்சை அமைதியும் மதிப்பும் காட்டி அக்கறையுடன் கேட்டார். அந்த உரையின் மூலம் அண்ணாதுரை அவர்கள் மாநிலங்கள் அவையில் ஒரு முத்திரையைப் பதித்துவிட்டார். வழவழப்பு இருக்காது ஆனால் பண்பு இருக்கும், ஆரவாரம் கிடையாது - ஆனால் அமைதி இருக்கும், ஆரவாரம் கிடையாது - ஆனால் அமைதி இருக்கும், குழப்பம் தெரியாது ஆனால் தெளிவு இருக்கும் என்ற ஒரு நிலையை அவரது பேச்சு ஏற்படுத்தியது முக்கிய சாதனையாகும். இனி அவரும் அவரது இயக்கமும் கவனிக்கப்பட வேண்டியவை அலட்சியப் படுத்திவிட முடியாதவை என்பதை அவரது அந்த ஒரே உரை உலகத்தவர்களுக்கு உணர்த்திவிட்டது.

 

 

 

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai