அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும்
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பாகம் -36

ஆளுகின்றார் அருளாளர்
பேராசிரியர். மா.கி.தசரதன்

ஆயிரக்கணக்கான தம்பியர், ஆயிரக்கணக்கான அண்ணன்மார் அவர்களுக்கு. வீடு தோறும் அண்ணன் - தம்பி உள்ளனர். ஆனால், அண்ணா என்று சொன்னால் அச்சொல் அந்த அண்ணன்மாரையெல்லாம் குறிக்காது. அவர்கள் அத்தனை பேரையும விட்டுவிட்டு ஒரே ஒருவரை - ஒப்பற்ற ஒருவரை மட்டுமே குறிக்கின்றது இன்றைக்கு. அறிஞர் பெருந்தகை பண்பாளர் அண்ணாவையே குறிக்கும் அது

ஏன்?

மொழி நூல் வகுப்பாக இருக்குமானால் இதற்குக் கூறப்படும் காரணம் வேறு. சொற்கள் பல்வேறு காரணங்களால் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையான பொருளை உணர்த்தும். சில சொற்கள் பருப்பொருளை உணர்த்தும் நிலைமாறி நுண்பொருளை உணர்த்தும். வேறு சில . . . என்று உணர்ச்சியற்றுப் பல காரணங்களைத் தேடித் தெரிந்துகொண்டு பின் மறந்துவிட நேரும். ஆனால், அண்ணா எனும் சொல் பிறரை நீக்கி ஏன் அறிஞர் அண்ணா அவர்களை மட்டுமே குறிக்கிறது என்பதற்கான உண்மையான காரணத்தை மொழி நூல் வகுப்பறையில் கண்டு கொள்ள இயலாது. இதனை இலக்கணம் அதனை அறியுமாறில்லை. ஏனெனில் அதற்கான காரணம் இவற்றிற்கெல்லாம் அப்பால் இருக்கிறது. அந்தக் காரணம் தெரிய வேண்டின் அதனை ஏடுகளில் தேடிடக் கூடாது. நாட்டின் இதயங்களில் காணவேண்டும்.

அறிஞர் அண்ணா ஒருவரே அண்ணா ஆனதற்குக் காரணம் தமிழ் நாட்டின் நிகழ்கால வரலாற்றில் ஒன்றிப் போய்விட்டது.

அந்தக் காரணம் தமிழர் தம் நெஞ்சங்களில் நிலைத்துவிட்டது.

அந்தக் காரணம் தமிழ் மொழியினோடு பின்னிப் பிணைந்துவிட்டது.

அந்தக் காரணம் தமிழே ஆகிவிட்டது.

அவர் கற்றறிந்த மேதை, ஆம் அதனை மறுப்பார் இல்லை.

அவர் பேச்சாற்றல் பெற்ற வீரர்; ஆம், ஏற்பர் எவரும்.

அவர் திறமை சான்ற நடிகர்; ஆம், ஆம் என்பர் அரங்கில் அவரைக் கண்டோர்.

வேறு பல துறைகளில் வீறு பெற்றவர் அவர். இதனால் எல்லாம் அவர் புகழ் நாளும் வளருகின்றது; ஐயமில்லை.

எத்துணையோ பேர் இதுபோல் எல்லாம் பெற்றவர் என்று வரலாற்று ஏடுகளை வறட்சி மிக்க அந்த ஏடுகளை அலசுவோர் கூறிடக் கூடும் இல்லை எனினும் இட்டுகட்டியேனும் உரைத்திடத் துடிப்பர்.

ஆனால், எழுத்தாற்றல் மிக்க ஒருவருக்கு பேச்சாற்றல் பெற்ற ஒருவருக்கு ஆட்சித்திறல் அமைந்த ஒருவருக்கு
நல்ல மனமும் இருந்தது இருக்கிறது என்பத எந்த வரலாற்று ஏடும் கூறிடவில்லை.

கற்பனைக் கதைகள் எழுதிடுவோர் படைத்திடும் பாத்திரங்களில் வேண்டுமானால் எழுதி மகிழலாம்.

ஆனால் அத்தகைய நல்ல மனத்தையுடைய எழுத்தாளரை
பேச்சாளரை
தலைவரை
இன்று தமிழகம் காணுகின்றது! கண்டு களிப்பெய்துகின்றது! பெருமையால் பூரிப்பு அடைகின்றது!

ஆம் நாட்டினைக் கணிப்புக் கடலில் மிதக்கச் செய்திடும் அந்தப் பெருந்தகை வான்புகழ் வள்ளுவர் வியந்து பாராட்டிய தக்கார் அறிஞர் அண்ணா அவர்களே ஆவார்!

என்றோ ஒரு தமிழ்ப் புலவன் கூறிச் சென்றானே பொன்மலர் நாற்றமுடைத்து என்று இன்று அறிஞர் அண்ணா எனும் பொன்மலர் மணம் வீசுகின்றது. தமிழ் நாட்டு மக்கள் மணம் இனி உலகு எங்கும் வீச இருக்கிறது. மெத்த வணர்ந்துள்ள அறிவின் ஆற்றலை அறிந்திடத் தொடங்கிவிட்டன.

கதிரவன் ஒளி காரிருளை விரட்டிடும் வேளை வந்துவிட்டது!

முன் ஒரு நாள் வள்ளுவன் தன்னை உலகினுக்கு தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு, இன்று மீண்டும் வான்புகழ் கொள்ளுகின்றது உலகினுக்கு அறிஞர் அண்ணாவைத் தந்து!

அந்தக் காந்தத்தால் ஈர்க்கப்பட்ட மாணவர் மனங்கள் ஆயிரம் ஆயிரம் - அவரே எம் குடும்பத்தின் தலைவர் என்ற நடைமுறையில் ஏற்றுச் செயல்படுத்துவோர் எண்ணற்றவர்.

அந்தச் சுட்டுவிரல் அசைவில் எம் வாழ்வு இருந்திடுகின்றது என்று இருந்திருவோர் இங்குப் பலர்.

பகைவர்க்கும் அவர் மீது பாசம் சுரந்திடுகின்றது!

இதுவே அவர் அனைவர்க்கும் அண்ணாவாக விளங்குவதற்குக் காரணம்!

மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒப்பற்ற தலைவராக இன்று அவர் விளங்குகின்றார். எந்தப் பிரச்சினையும் அவரால்தான் தீரும் - அவரே எதனையும் தீர்க்க வல்லவர், அவரை விட்டால் வேறு புகல் இல்லை என்பதைத் தமிழகம் உணர்ந்துவிட்டது.

முதல் நாள் முன்னேரத்தில் மாணவர் சிலர் அவரை வந்து காண்கின்றனர். பேச்சுத் தொடங்குகின்றது. தலைவர் தொண்டர் என்ற நிலையில் பேச்சு வளரவில்லை; அண்ணன் தம்பியர்க்கு இடையே நடைபெறும் உரையாடல் போல் அறை நண்பர்கள் விவாதம் போல் பேச்சு தொடர்கதையாகிறது.

நள்ளிரவு . . .

பின்னும் பேச்சுக்கள் . . .

எங்கோ ஒரு கோழி குரல் கொடுக்கிறது; இன்னும் சற்று நேறத்தில் கீழ்வாளில் எழு ஞாயிறு தோன்றிவிடும்!
நேற்று அதற்கு முன் நாள் அரசியல் கட்சியின் தலைவராக இருந்தபோது அல்ல, இது! இன்று! செங்கோல் ஏந்தி நாடு காத்திடும் நாளில்! எத்தனை பொறுமை!

கார் புறப்படத் தயாரானது. பின் வரிகையில் ஏறிவிட்டனர். பின் தொடரும் காவலர் ஊர்தி தயார் நிலையில் இருக்கிறது. கண்களில் நீரும் கையில் குழந்தையுமாகக் கவலை தோய்ந்த நிலையில் கணவனுடன் ஒரு காரிகை வந்து நின்று அழுது புலம்புகின்றார். முதலமைச்சர் கேட்டுத் துடைக்கத்தக்க பெரிய துயரம் அல்ல அது. எனினும் என்னிடமா?

இந்நேரத்திலா?
என்று கேட்டு எரிந்து விழவில்லை! இருந்து கேட்டு, இயன்றது செய்ய ஆணையிட்டுப் பின் புறப்பாடு!

எளிய நண்பர் ஒருவர் வீட்டில் அன்பு அமுதுக்கு அழைத்திருக்கிறார். புல்லிய உணவு. நாட்டின் நாயகன் அவ் விருந்துக்கு வருகிறார். மணி இரவு பதினொன்றரை இருக்கும். வந்ததும் எளிய நண்பனைக் கேட்கிறார். கார்வண்ணன் எங்கே தூங்கிவிட்டானா! ஆம் சொல்லும்போதே அந்த நண்பனுக்குக் கண்கள் பனிக்கின்றன. நாட்டின் முதலமைச்சர் ஆன பிறகும் எத்துணை நினைவு பரிவு பாசம்! உடன் இருந்தவர்களுக்கு வியப்பு இவ்வளவு நினைவாற்றலா என்று! அது மட்டும்தானே அவர்கள் அறிந்தது!

பாசத்தை ஒரு கொள்கையாக்கி அரசியல் வளர்த்ததாலே இன்றும் இந்த நிலை இருந்திடக் காண்கின்றோம். பதவி பெற்றதும் பலர் பாசம் கொண்டோர் போலும் நெடுநாள் நேசம் கொண்டோர் போலும் நடிப்பர். ஆனால் நமது அண்ணனிடம் பாசம் இன்றல்ல, என்றோ தோன்றித் தொடர்ந்து வரும் பண்பாகி விளங்குகின்றது.

ஒரு சின்ன மகிழ்ச்சி! விலைவாசிப் போராட்டத்தில் ஈடுபட்டு அவர் வேலூர்ச் சிறையிலிருக்கின்றார் அண்ணா! செப்டம்பர் 15! ஆம் பிறந்த நாள்! சிறையில்! காஞ்சிபுரத்திலிருந்து குடும்பத்தினரும் கூடஇருக்கும் சிலரும் வேலூர் சென்று வாழ்த்துப் பெறப் புறப்படுகின்றனர்.

ஐந்து வயதுச் சிறுவன் ஒருவன் கூடஇருக்கும் குழுவில் ஒருவரின் மகன் - அரசியல் தெரியாதவன், நானும் வருவேன் அண்ணாவைப் பார்க்க என்று அடம் பிடித்துப் புறப்பட்டு வந்துவிடுகின்றார்.

இதுதான் அண்ணாவிடம் உள்ள பாசம்! அவருடைய உள்ளத்தில் நிறைந்திருக்கிறது. தொட்டால் மணக்கும் சவ்வாது போல் அவர் தொடர்பு கொண்டோர்க்கும் கிடைக்கிறது. அவர் அருளை ஆள்கின்றார். அருளாளன்கள் உருவாகிறார்கள்.

இப்படி எத்தயோ!

கட்டுக் கதைகள் அல்ல! கற்பனையில் உருவான ஓவியங்கள் அல்ல! இட்டுக் கட்டி இன்பமூட்ட எழுதப்பட்டவை அல்ல!

அத்தனையும் உண்மை நிகழ்ச்சிகள். பெயரும் இடமும் வேண்டுமாயின் இலைமறை காய்போல் இருக்கும்!

இவையெல்லாம்தான் அண்ணா!

ஊழிதோறும் உருவாகும் உயர்ந்தோரில் அவர் ஒருவர்!

நாம் அவரைக் காணும் பேறுபெற்றோம், பெருமையுற்றோம்!

அந்த இனிய நிளைவு நம்மை நம் மொழியை, நாட்டை வாழ வைக்கத் துணை நிற்குமாக!




முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai