அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும்
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பாகம் -31

அண்ணாவின் மெய்ஞானம்
(டாக்டர் கு.விவேகானந்தன், எம்.ஏ. பிஎச்.டி, தமிழ் பேராசிரியர், அரசு ஆடவர் கல்லூரி, நந்தனம், சென்னை-35)

இன்றைய உலக நிலைமைகள், நாட்டு நடப்புகள் சமூக உணர்வுள்ள ஒவ்வொருவருக்கும் கவலையை உண்டாக்கும் என்பதில் ஐயம் இல்லை. ஈராக் - குவைத் நிலைமைகள், அயோத்தியில் இராமர் கோவில் பாபர் மசூதி பிரச்சினைகள் காதுகளைக் குடைந்த வண்ணமிருக்கின்றன. விளைவுகள் விபரீதமாகக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக எதிர்நோக்குவது ஒவ்வொருவரின் ஆர்வமாக உள்ளது. இந்தச் சூழலில் பேரறிஞர் அண்ணா வழங்கிய சிந்தனைகள் எவ்வளவு மெய்ஞானம் பொருந்தியவை என்பதும், பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் என்பதும் எண்ணத் தக்கவை.

முன்பெல்லாம் வாழ்நாளில் மிகப்பெரும் பகுதி அமைதியற்றுப் போராட்டமாகவே இருந்து வந்தது. ஆனால் இன்றோ, வாழ்நாளில் ஒரு போராட்டத்துக்கும் மற்றொரு போராட்டத்துக்கும் இடையில் மட்டுமே, அமைதி நாள்கள் நிலவுகின்றன. இந்த அளவுக்குத்தான் மனித குலம் முன்னேற்றம் காண முடிந்திருக்கிறது.

அரசு இருந்தும் அமைதி இல்லை; மார்க்கம் இருந்தும் ஒழுக்கம் இல்லை. அறநெறி காட்டப்பட்டும் அறம் நிலைத்து நிற்கவில்லை. அறிவாளர் முயன்றும் அறிவுத் தெளிவு ஏற்படவில்லை. அநீதிகளை ஒழிப்பதிலே வெற்றி பெற்ற இயக்கங்கள் மீண்டும் அது போன்ற அநீதிகள் எழ முடியாத நிலைமையை நிலைத்திடச் செய்யவில்லை, தூய்மை படுத்தப்பட்ட இடம் மீண்டும் பாழ்படுகிறது.
(காஞ்சி இதழ் - 16.05.1965 - தம்பிக்குக் கடிதம் மனிதனும் மிருகமும்

(மார்க்கம் - சமயம் எனப்பொருள் கொள்கிறார் அண்ணா) நிலைமைகளை யாரும் கண்டு விளக்க முடியும். மாற்று என்ன? அதாவது, ஆக்கபூர்வமான வழிமுறைகள் யாவை? எனக் கேள்வி எழுவது உண்டு. பேரறிஞர் அண்ணா அளிக்கும் அருமருந்து வருமாறு:
சாதாரண மக்களை யார் வேண்டுமானாலும் ஏய்த்துவிட முடியும் என்று நினைக்காதீர்கள். சாமான்யன் நிரம்பப் படித்தவனாக இல்லாது இருக்கலாம். ஆனால் வளமான பொதுஅறிவு பெற்றிருக்கின்றான். வெண்ணெய் எது? சுண்ணாம்பு எது? என்று வித்தியாசம் கண்டறிய அவனுக்குத் தெரியும். (காஞ்சி இதழ் - 03.02.1963 - தம்பிக்குக் கடிதம், இராச்சிய சபையில்.

கூடி வாழ்தல், கேடு செய்யாதிருத்தல், உழைத்துப் பிழைத்தல், பகிர்ந்து அளித்தல் என்பவை பாராட்டத்தக்க பண்புகள் என்ற நிலை மாறி இவையே மனித குலத்தின் வாழ்வு முறைகள் என்றாக வேண்டும்
(காஞ்சி இதழ் - 16.05.1965 - தம்பிக்குக் கடிதம், மனிதனும் மிருகமும்.

ஒருவரை நம்பி ஒருவர் வாழக் கற்றுக்கொண்டோம். தனி மனிதர்களைவிட ஓர் அமைப்பே முக்கியம் என்ற தத்துவம் நடைமுறைக்கு வந்துவிட்டது
(திராவிடநாடு)

தெளிவும் துணிவும் பொறுப்பும் பொறுமையும் மிகுதியாக இருக்கவேண்டும்; தன் சொந்தக் கருததைத் திணிக்கவேண்டும் என்ற நினைப்பு எழலாகாது. பிரச்சினையை எந்த விதமான விருப்பு வெறுப்புகளுடனும் பிணைத்துவிடலாகாது. தவறான கருத்தைத் தந்திரமாகப் புகுத்தும் முயற்சியை மேற்கொள்ளக்கூடாது. என் யோசனைதான்! என் திட்டம்தான் என்ற எக்களிப்பைக் கொட்டிக் காட்டக்கூடாது. கேட்பவர் கருத்தற்றவர்; அறிவுப் பஞ்சத்தால் நம்மை வந்து நாடுகிறார் என்று தப்புக்கணக்குப் போடக்கூடாது. பிரச்சினையை அணுகும்போது, தனது நிலையை அளவுகோலாக்கிக் கொள்ளாமல், பொறுப்பினை மேற்கொண்டுள்ளவரின் நிலையினை அளவு கோலாகக் கொள்ளவேண்டும். கேட்பவர் மனம் மகிழவேண்டும் என்பதற்காகத் தித்திப்பு கூட்டக்கூடாது. பிரச்சினையை விட்டுவிடட்டும் என்பதற்காகக் கசப்பினைனயும் கலக்கக் கூடாது.
(காஞ்சி இதழ் - 27.03.1966 - தம்பிக்குக் கடிதம், வெற்றைமாளிகையில் . . . சதிக்குள் சதி.

நாம் வாழும் நாட்டில் நாம் காணும் கொடுமைகளில், அநீதிகளில் ஒரு சிறு அளவினையாகிலும் நாம் நமது அறிவாற்றலால் உழைப்பால், தன்னலமறுப்பால் போக்கிடுவதுதான், நாம் முதல் கடமையாகக் கொண்டிடுவது என்ற நெறி நடைமுறையாகிடுமானால், தம்பி! உலகு புன்னகைப் பூங்காவாக அல்லவா வடிவங்கொள்ளும்!

ஒரு தலைமுறை மற்றொரு தலைமுறைக்காக, தனித்தனி இல்லங்கள், செல்வம் என்ற இன்றைய முறையைக் காட்டிலும் ஒரு தலைமுறை தன்காலத்தில் காணப்படும் கேட்டினைக் களைத்துதெறிந்து தன் நாட்டைத் தான் காண்பதைக் காட்டிலும் சிறிதளவேனும் நல்ல நாடாக்கி அளித்து விட்டுச் சென்றிட வேண்டும் என்ற முறை எத்துணை நேர்மையானது!
(காஞ்சி இதழ் - 17.04.1966 - தம்பிக்குக் கடிதம், வெள்ளை மாளிகையில் . . மனிதன் மிருகமல்ல.

ஓர் அரசியல்வாதிக்கும், ஓர் அரசியல் மெய்ஞானிக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை விளக்குவோர், இன்றைய தலைமுறை குறித்துச் சிந்திப்பவர் அரசியல்வாதி என்றும், அடுத்த தலைமுறை பற்றிச் சிந்திப்பவர் அரசியல் மெய்ஞானி(ளுவயவநள அய) என்றும் கருத்தளிப்பது கவனிக்கத் தக்கது.

(20.10.91 ஆம் ஆண்டு நடைபெற்ற பேரறிஞர் அண்ணா இலக்கியப் பேரவை முதலாண்டு விழாவின் போது நடைபெற்ற ஆய்வாளர் கருத்தரங்கில் வழங்கிய கட்டுரை. டாக்டர் விவேகானந்தன் அண்ணாவின் கடிதங்கள் ஆய்வுசெய்து டாக்டர் பட்டம் பெற்றவர். அவை அண்ணாயிஸம் எனும் புத்தகமாக வெளிவந்திருக்கிறது.)

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai