அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும்
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பாகம் -30

கலைஞர் அண்ணா
மு.கருணாநிதி, முதல் அமைச்சர், தமிழ்நாடு

கலைஞர்களைப் பற்றிப் பேரறிஞர் அண்ணா ஒரு முறை அழகாகச் சொன்னார்:

ஏதேனும் ஒரு கலைத் துறையின் சிறப்பாகச் செயலாற்றிக் கொடி நாட்டியவர்களிடம் எந்தக் காரித்தை ஒப்படைத்தாலும் அதனைத் திறம்படச் செய்து முடிப்பார்கள்; ஏனெனில் அவர்கள், தங்களைச் சுற்றிச் சூழ்ந்திருக்கிற அத்தனை பேர்களின் ஆசாபாசங்களையும் அறிந்து வைத்திருப்பவர்கள் என்றார் அவர்.

இதற்கு ஓர் உதாரணம் சொல்ல வேண்டுமானால் அண்ணாவையேகூடச் சொல்லலாம். ஏனெனில் எந்தத் துறையில்தான் அவர் ஈடுபடவில்லை! எந்தத் துறையில்தான் அவர் வெற்றிக் கொடி நாட்டவில்லை!

மேடைப் பேச்சுக்கு அவர் தந்த மெருகினை மறக்க முடியுமா? எழுத்துலகுக்கு அவர் தந்த ஏற்றமிகு உயிரோவியங்களை மறக்க முடியுமா? நாடகக் கலையை அவர் வழிநடத்திச் சென்ற நளினத்தை மறக்க முடியுமா? முடிவில், நாடாண்ட விதத்தில் அவர் காட்டிய நயங்களைத்தான் மறக்க முடியுமா?

அவரது ஒப்பற்ற சாதனைகளுக்குக் காரணம், அவரே கூறியதுபோல், என் தம்பிமார்களைவிட, ஏன், எல்லா அரசியல்வாதிகளைவிடவும் எனக்குக் கலைத் துறையில் நிறைய அநுபவம் உண்டு என்று அவர் கூறியிருக்கிறார்.

அவர் ஒரு கலைஞர், பேச்சுக் கலைஞரா? எழுத்துக் கலைஞரா? ஓவியக் கலைஞரா? அல்லது நடிப்புக் கலைஞரா? பிரித்துப் பதில் சொல்வது கடினம். அவர் எல்லாக் கலைஞருமாய், எல்லாமுமாய் இருந்தார். அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் என்பது போல், அவரது கைவண்ணமோ படாத துறையில்லை; பொருளில்லை. இருந்தாலும் நாடகம் - நடிப்புக் கலையில்தான் அவருக்கு நாட்டம் அதிகம்.

அரசியல் - கட்சிப் பிரச்னைகளில் மூழ்கி எழும் நேரம் போக எஞ்சிய நேரத்தை நடிப்புக் கலைஞர்களுடன் அளவளாவிக் கழித்தவர் அவர். ஒரு கருத்தை முதலில் பேச்சாகச் சொன்னவர் அவர். அடுத்துக் கட்டுரையாக எழுதியவர் அவர். அதுவும் போதாதென்று நாடகமாக வடித்துத் தந்தவர் அவர். முடிவாக, அந்த நாடகத்திலேயே நடித்துக் காட்டியவரும் அவர்தான்.

நாடகம் என்றதும் எனக்கு ஓர் இரவு நினைவுக்கு வருகிறது. நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி கேட்டாராம்; புதிய நாடகம் இல்லையே அண்ணா! என்று.

வரம் தந்தேன் - வாங்கிக்கொள் என்று முனிபுங்கவர்கள் சொன்னதுபோல், இரவோடு இரவாக ஒரு நாடகம் - இணையற்றதோர் நாடகம் - அமரர் கல்கியிடமிருந்து தென்னாட்டின் பெர்னாட்ஷா என்னும் பட்டத்தை வாங்கித் தந்த நாடகம் உருவாகிவிட்டது. அதுதான் ஓர் இரவு. அண்ணாவே சொன்னதுபோல், ஒப்பற்ற இரவு! ஓரிரவில் நடந்து முடிகின்ற அந்தக் கதையை ஒரே இரவில் எழுதி முடித்தார். நாடகாசிரியன் என்ற முறையில் எனக்கு மலைப்பாக இருக்கிறது. இப்படியொரு சாதனையை என்னால் நினைத்துப் பார்க்கக் கூட முடியுமா? இல்லை அது அண்ணனால் மட்டுமே முடியும்!

ராஜாஜி, இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகப் பதவியேற்றபொழுது, அவரால் அந்தப் பதவிக்குப் பெருமை ஏற்பட்டுவிட்டது என்று கல்கி எழுதினார். என் அண்ணன் அரங்கத்திலேறி - அரிதாரம் பூசி நடித்ததால் நாடக துறைக்கே - நடிப்புக் கலைக்கே மாபெரும் மதிப்பு ஏற்பட்டுவிட்டது. நடிகர்களைக் கூத்தாடிகள் என்று நையாண்டி செய்தவர்கள், வேஷதாரிகள் என்று ஏளனம் பேசியவர்கள் எல்லாம் வாயடங்கிப் போயினர். ஆய கலைகள் அறுபத்து நான்கில் நடிப்பும் ஒரு கலைதான் என்று உணர்த்தியவர் என் அண்ணன். பட்டம் காற்றில் பறக்கும்பொழுது அதோடு சேர்த்துக் கட்டியிருக்கும் வாலும் உயர உயரப் போகுமே! அப்படி அண்ணா அரசியல் உலகில் மேல்நிலைக்குப் போகப் போக, அவரது அந்தரங்கமான அன்புக்குப் பாத்திரமான நடிப்புக் கலையும் மேலே மேலே சென்றது. கூத்தாடிகள், வேஷதாரிகள் என்ற சொற்கள் மறைந்து, கலைஞர்கள் என்ற புதிய சொல் பூப்போல மலர்ந்தது.

அண்ணாவின் இதயத்தில் தனியிடம் பெற்றவர் கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களுக்கிடையில் இருந்தது வெறும் பரிச்சயமோ - பழக்கமோ அல்ல. உறவு என்ற சொல் கூடப் போதாது. ஏதோ ஒரு வகையான உயிர்ப் பிணைப்பு. கலைவாணர் காலமாவதற்கு முன் அண்ணாவின் திருவுருவப் படம். அண்ணா மறைவதற்கு முன் கடைகியாகத் திறந்து வைத்தது கலைவாணர் சிலை. எந்தக் கலைஞர்களுக்கு மத்தியில் இப்படியொரு உயிர்ப் பிணைப்பு இருந்தது?

தமிழ் நாடக உலகுக்கு ஒரு பெர்னாட்ஷா கிடைத்துவிட்டார்; ஒரு இப்ஸன் கிடைத்துவிட்டார்; ஒரு மோலியர் கிடைத்துவிட்டார் என்று கல்கி ஒரு முறை எழுதினார். கிடைத்துவிட்டார் என்று அவர் எழுதியபோது நம் அனைவருக்கும் அளவற்ற மகிழ்ச்சி. ஆனால் இன்று அவர் மறைந்துவிட்டார் என்று எண்ணும்பொழுது . . . ஐயகோ! எவ்வளவு பெரிய இழப்பு! கழகத்தினர் தங்கள் அண்ணனை இழுந்துவிட்டனர். கலைஞர்கள, தங்களுக்கு நண்பனாய் - நல்லாசிரியனாய் - பாதுகாவலனாய் இருந்த ஓர் ஒப்பற்ற கலைஞரை இழந்துவிட்டனர். கலை என்பது மக்களை மகிழ்விப்பதற்கு மட்டுமல்ல; அவர்களது மனங்களில் சிந்தனையைக் கிளறவேண்டும் என்பதுதான் அண்ணாவின் கருத்து. அவர் வகுத்துத் தந்த கலைப் பாதையும் அதுதான். அந்தப் .பாதையில் சென்று, கலையாலும் மக்களின் நிலை உயர்த்தப் பாடுபடுவதுதான் கலை உலகம் அவருக்குச் செலுத்தும் காணிக்கையாகும்!
(கல்கி இதழ் - 23.03.1969)

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai