அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும்
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பாகம் - 2

அண்ணா ஒரு நாடக அறிஞர். அவர் கலை நயமும் கருத்து வளமும் உலக நாடக இலக்கிய ஆசிரியர் வரிசையில் வைத்தெண்ணத்தகும் சீரும் சிறப்பும் உடையவர். அறிஞர் அண்ணா அவர் காலத்தின் குரலாகவும் நிழலாகவும் விளங்கினார். அவர் ஒரு பல்கலைவாணர் பல்கலைச் செல்வர். மக்களை முன்னேற்றவும், சீர்திருத்தவும் நாடகக் கலையை சீர்தூக்குவியவர், மோலியர், இப்சன், பெர்னாட்சா, மாக்சிம் கோர்க்கி, ஆண்டன் செகாவ் போல இந்திய நாட்டின் வேறு எந்த மொழியினரைக் காட்டிலும் நன்கு பயன்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா.
(அறிஞர் அண்ணாவின் நாடகங்களை ஆராய்ச்சி செய்தவர். (டாக்டர். இரா.சனார்தனம், எம்.ஏ., பி.எச்.டி)

20ம் நூற்றாண்டுச் சமுதாய மறுமலர்ச்சிக்கு அண்ணாதுரையின் சிறுகதை, புதினங்களின் கொடை 20 ம் நூற்றாண்டுத் தமிழக மறுமலர்ச்சி என்பது மிகப் பெரிய அளவில் திராவிட இயக்கத்தையே சார்ந்துள்ளது. மேடைகளில் பேசியும், ஏடுகளில் எழுதியும் மறுமலர்ச்சிப் பணி ஆற்றிய திராவிட இயக்கத் தலைவர்களுள், அண்ணாதுரையின் இடம் தலைமை சான்றது. கருத்துக்களைக் கட்டுரையாகத் தீட்டுவதோடு அமையாது எளிய மக்களும் விரும்பி ஆவலோடு படிக்கும் கதை வடிவில் இவர் தந்தார். இவரைச் சார்ந்தோரும் கதைகள் வாயிலாக மறுமலர்ச்சிக் கருத்துக்களை விதைப்பாராயினர். ஆகவே இன்றையத் தமிழக ம.றுமலர்ச்சியைத் தோற்றுவித்ததில் அண்ணாத்துரையின் கதைகள் ஆற்றிய பங்கு தனிச்சிறப்புப் பெறுகிறது. . . . 20ம் நூற்றாண்டுச் சமுதாய மறுமலர்ச்சிக்கு, அண்ணாத்துரையின் சிறுகதை புதினங்கள் கொடை குறிப்பிடத் தக்கதாக அமைந்துள்ளது. அவர் கருத்தை பின்பற்றிப் பலர் எழுதினர். தம் கதைகளில் மறுமலர்ச்சி எண்ணங்களை விதைத்த அவர், கலப்பு மணம், விதவை மணம், சுயமரியாதைத் திருமணம் ஆகியவற்றை செயல்படுத்த வழிகாட்டினார். எழுதிய வண்ணம், பேசியவண்ணம் அவற்றை நிலை நாட்டிய அப்பெருந்தகையாளரை இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் சமுதாய மறுமலர்ச்சியின் எழு ஞாயிறு எனலாம்.
(அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள், நெடுங்கதைகள் இவைகளை ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்ற டாக்டர்.இரா.சேது, எம்.ஏ., பி.எச்.டி)

அறிஞர் அண்ணாவின் தமிழ் கொடை அண்ணாவும் தமிழும்
தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ் இனம், தமிழ் நாடு, தமிழர் பண்பாடு ஆகியவற்றின் மறுமலர்ச்சிக்கு முதன்மைப் பணியாற்றிய தலைவர் அண்ணா உரை நடை இலக்கியத் தமிழ், தமிழியல் தமிழ், நாடகத் தமிழ், திரை நாடகத் தமிழ், மேடைத் தமிழ், இலக்கியத் தமிழ், நாட்குறிப்பு இலக்கியத்தமிழ் எனும் பல்வேறு தமிழ்த் துறைகளும் செம்மையும் செழிப்பும் சேற முப்பத்தைந்து ஆண்டுகள் அரசியல் உலகிலிருந்து கொண்டு அரிய இலக்கியப் பணியும் மொழிப் பணியும் நாட்டுப் பணியும் ஆற்றிய தன்னிகரற்ற மொழிப்பற்றாளர் அண்ணா. சங்க இலக்கியங்களையும் திருக்குறளையும் கருத்துக் கருவூலங்களாகக் கொண்டு இரையாற்றும் அண்ணா தன்னிகரற்ற பேச்சாளராகவும் நாடக ஆசிரியராகவும் நடிகராகவும் விளங்கியதுடன் மக்கள் அன்பைப் பெற்ற சிறந்த தலைவராகவும் காலத்தை உருவாக்கும் சிற்பியாகவும் திகழ்ந்தார். அவரது அறிவும் ஆற்றலும் மொழியும் இலக்கியமும் சிந்தனையும் செயலும் எதிர்கால மக்களுக்கு அரிய கொடையாகும். அரசியல் சமுதாய மறுமலர்ச்சிச் சிந்தனைகளை நாட்டுக்கு கிழமை தோறும் அளித்திட கடித இலக்கியத்தினை ஒப்பற்ற வடிவமாகத் தேர்ந்து வளர்த்துத் தமிழுலகுக்குப் புது வழி காட்டிய முன்னோடியாக ஒளிரும் அண்ணா.

நாடகப் படைப்பாளர், புதிய ஆசிரியர், சிறுகதைச் செல்வர், கட்டுரையாளர், சொற்போழிவாளர், சமூகச் சிந்தனையாளர், பகுத்தறிவாளர், இயக்க ஆக்கர், சட்ட மன்ற வல்லார், எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு மக்கள் தலைவர், நெஞ்சுடை மனிதர், இவ்வளவு ஆற்றலும் பண்பும் அணி செய்யப் பல துறைகளிலும் முகடு எய்தி முத்திரை பதித்த இவர் அண்ணா என்று மக்களால் அன்பொழுக அழைக்கப்பெற்றார், பின்னர் பேரறிஞர் அண்ணா என்றும் போற்றப் பெற்றார். தமிழ் உரைநடைக்குக் கவிதை வனப்பும் இசையும் சேர்த்து, சொல்லாக்கங்களையும் தொடராக்கங்களையும் செய்ததுடன் புதுப்புது இலக்கிய வடிவங்களையும் ஈந்த அண்ணா தமிழின் துறைதோறும் கொடை நல்கிய இலக்கிய மொழிக்கொடை வள்ளலாகத் திகழ்கிறார். அரசியல் உலகைப் பேரறிஞர் அண்ணா எனப்புகழ்ந்து பெருமை பெறுகிறது.

அரசியல், இயக்கம், சாதி, செல்வம், பதவித் துணை ஏதுமின்றி அன்பு அறிவு பண்பு தொண்டு ஆகியவற்றை முதலாகக் கொண்டு அண்ணா, இலக்கியம் படைத்து வெற்றி கண்டுள்ளார். தி.மு.க.வை வளர்த்து தமிழ் நாட்டாட்சியை கைப்பற்றிய ஏற்றப் படைப்புகளையும் அளித்து புதுப்பாதை வகுத்த அரசியல் தலைவராக விளங்குகின்றார். - ஆய்வாளர் டாக்டர். ப.ஆறுமுகம் அண்ணாவின் கடித இலக்கியம் அண்ணா தம் எண்ணங்களை, செயல் திட்டங்களை, நெறிமுறைகளை வேண்டுகோள்களை மடல்களில் தொடர்ந்து வெளியிட்டு தமிழர்களைப் படிக்கச் செய்தார். பொதுவாக உணர்ச்சியைத் தூண்டியவர்கள் உண்டு. ஆனால் அண்ணா உணர்ச்சியை இன உணர்ச்சியை ஊட்டினார். அறிவை, பகுத்தறிவை தூண்டினார். ஏனைய மடல் இலக்கியங்கள் கல்வியறிவு பெற்ற நடுத்தர மற்றும் உயர்தர மக்களுக்காக அற நெறிகளையும் வற்புறுத்துபவை. ஆனால் அண்ணாவின் மடல்கள், எழுதப் படிக்கத் தெரிந்த சாதாரண மக்களுக்காக எழுதப்பெற்றவை. உரிமைகளையும் சமூக நெறிகளையும் வற்புறுத்துபவை. சுருங்கச் சொன்னால் அண்ணாவுக்கு முன் எழுந்த மடல் இலக்கியங்கள் கற்றோர் இலக்கியம் அண்ணாவினுடையவை மக்கள் இலக்கியம்.

கடித இலக்கிய வரலாற்றில் அண்ணா பெறும் இடம் நிகரற்றதாகும்.

இறுதியாக அண்ணாவின் கடிதங்கள் மனிதப்பண்பை உயிர்ப் பண்பாக வலியுறுத்தும் பண்பாட்டுப் பேழைகளாகத் திகழ்கின்றன. டாக்டர் கு,விவேகானந்தன்,எம்.ஏ.டி.எச்.இடி., எம்.ஃபில், பி.எச்.டி. உலக அறிஞருள் ஒருவர் அண்ணா ஏதென்ஸ் நகரின் இதயமாக விளங்கியவர் என்று இன்று போற்றப் படுகின்ற, சாந்த சொரூபி, சாக்ரடீசு, தர்க்க வாதத்தில் சிறந்த தத்துவ ஞானியாக மட்டுமே விளங்கியிருக்கிறார். நம் அருமைத் தமிழகத்தில் தோன்றிய அறிஞர் அண்ணாவைப்போல் சகல துறைகளிலும் அவர் சிறப்புப் பெற்றாரில்லை.

அடிமை விலங்கறுத்த அமெரிக்க நாட்டின் தந்தை ஆப்பிரகாம் லிங்கன், அடிமை அகற்றிய வீரர் என்று மட்டும் தான் வரலாறு பேசுகிறது.

உலகம் போற்றும் நாடகம் பேராசிரியர் பெர்னாட்சா நாடகம் எழுதுவதில் மட்டும் மேதையாகத் திகழ்ந்திருக்கிறார்.

நாடகத் தலைவர் என்ற சிறப்புப் பெயரை பெற்ற அவர் ஏதோ ஒரே ஒரு நாடகத்தில் மட்டும் நடித்ததாகத் தெரிகிறது.

இலக்கிய மேதை சேக்ஸ்பியர் இலக்கிய வாசகத்தை மட்டுமே தனதாக்கிக்- கொண்டிருந்திருக்கிறாரே தவிர பேச்சிலும் பிறவற்றிலும் சிறப்படையவில்லை.

வால்டேர், ரூசோ போன்றவர்கள் தங்கள் எழுத்தால் மட்டும்தான் புரட்சிக்கு, வித்திட்டு இருக்கின்றனர். பிற செயல்கள் அவர்களை அண்டியதாகத் தெரியவில்லை.

எழுத்திலும் பேச்சிலும் மன்னன் என்ற பெயரைதான்இங்கர் சாலால் பெற முடிந்திருக்கிறது.

இப்படி நாம் எண்ணிப் பார்க்கின்ற போது உலக மேதைகள் ஒவ்வொரு செயல்களில் சிறப்புப் பெற்றவராகத் திகழ்வதுதான் தெரிகிறதே தவிர, நமது அறிஞர் அண்ணாவைப் போல எல்லாத் துறைகளிலும் சிறந்தவர் என்ற பட்டத்தை பெற்றவர்களாக அவர்கள் இல்லை.

எல்லா துறைகளிலும் வல்லமை பெற்ற ஒரே ஒருவர் உண்டென்றால் அவர் நமது அருமை அண்ணாதான். தமிழ்நாடு செய்த தவப்பயனாக உலகில் எந்த நாடும் பெறாத பெறமுடியாத பெருமையை அண்ணாவால் நமது அருமை தமிழகம் பெற்றிருக்கிறது.

. . . அப்படி என்றால் அண்ணாவைப் பற்றி உலகம் ஏன் அதிக அக்கறையுடன் கவனிக்கவில்லை?

ஷேக்ஸ்பியரையும், பெர்னாட்சாவையும் இன்னும் பலரையும் உலகம் பாராட்டுகிறது என்றால் அவர்கள் எந்த மொழியில் வல்லுநராக விளங்கினார்களோ அந்த மொழி உலகம் முழுவதும் பரவி இருந்தது. அந்த மொழியைக் கட்டாயமாகக் கற்றுத்தீர வேண்டிய கட்டாயத்தில் மக்களும் இருந்தனர். அந்த மொழியை படிக்கும்போது அந்தமொழிக்கு சொந்தக்காரர்களை பற்றியும் அறிந்துகொள்ளவேண்டிய கட்டாயம் பிறந்தது. அந்த நாட்டு மொழியும் அவர்களை விளம்பரம் செய்துகொண்டிருந்தது. அதேபோல் நம் தமிழ் மொழியும் உலகம் முழுவதும் பரவியிருந்தால் உலகத்தாற் கவனம் நிச்சயம் அண்ணாவின் பக்கம் திரும்பித்தான் இருக்கும். திரு. இரா. தியாகராசன். தமிழர்களின் பொதுச் சொத்து

அண்ணாவின் எழுத்து, தலைசிறந்த இலக்கியமாகவும், கலைக்கருவூலமாகவும், கற்பனைக் களஞ்சியமாகவும், வரலாற்றின் வடிகாலாகவும், அரசியல் ஆராய்ச்சியாகவும் புரட்சிப் பொறியாகவும், பகுத்தறிவுப் பட்டறையாகவும்,சீர்திருத்தச் செல்வமாகவும், பல்சுவைப் பகுதியாகவும் விளங்கும்.

அண்ணா இத்தகுதியறியாத் தமிழ்நாட்டில் பிறந்திருக்காமல் மேல்நாட்டில் பிறந்திருப்பாரேயானால் நோபல் பரிசு பெற்றுப் பல பல்கலைக் கழகங்கள் கொடுத்த பட்டங்கள் அடுக்குப் பாத்திரங்கள் போலத் தலை மேலிருந்து அழுத்திக் கொண்டிருக்கும், இன்னும் எத்தனையோ பட்டங்கள், பரிசுகள்.

அண்ணா தமிழ்நாட்டின் அண்ணா, தமிழர்களின் பொதுச் சொத்து. தமிழ் மக்களின் அறிவுக் களஞ்சியம். தமிழர்களின் முன்னேற்றப் பாதை. பதுத்தறிவுத் திறவு கோல், கலைக் கலங்கரை விளக்கம்.

இளைஞர்களைக் கவர்ந்த ஏந்தல்
சுயமரியாதை மாணவர்கள், இளைஞர்களிடையில் அண்ணாதுரைக்கு, செல்வாக்கு அதிகரித்து வந்திருக்கிறது. அண்ணாதுரையின் சொல்வன்மையும் எழுத்து வன்மையும். இளைய உள்ளங்களுக்கு ருசித்ததே. இதற்குக் காரணம். அண்ணாதுரையின் பேச்சிலும் எழுத்திலும், புத்துணர்ச்சியும், திருப்தியும் ஏற்பட்டது. அண்ணாதுரையை மாணவர்கள் விரும்பினர். வாலிபர்கள் சூழ்ந்தனர்.
புலவர் குழந்தை

அண்ணாதுரை, சமூக சீர்திருத்தத்திற்குப் புதிய மெருகு கொடுத்து. புதிய உணர்ச்சிகளை தழுவிப் போகாவிட்டால் கட்சிக்கு வளர்ச்சியில்லை எனக் கண்டார். அதனால் புதிய அமைப்புக்குப் பூர்வாங்க வேலைகளைப் பூர்த்தி செய்தார்
ப.ஜீவானந்தம்

சொற் செல்வர்
உயர்திரு அண்ணாதுரையவர்கள் என் அரிய நண்பர். அறிவுக்கடல், கற்பனைக் களஞ்சியம், கலா வல்லுநர், ஒப்புயர்வற்ற எழுத்தோவியர், இது மட்டுமா? நல்ல நடிகருங்கூட.
தமிழ்நாட்டின் முன்னேற்றம் கருதிப்பெரிதும் பாடுபட்டு வருகிறார். திரு. அண்ணா உள்ளதை உள்ளவாறே எடுத்துரைக்கும் உள்ளம் படைத்தவர். கேட்பாரைப் பிணிக்கவைக்கும் சொற்செல்வர். எப்பொருளையும் அமைதியாக, ஆனால் ஆணித்தரமாக வாதமிடுவதில் இவரை மேல்நாட்டுப் புரூடஸூக்கு ஒப்பிடலாம். அத்தகைய அறிஞருக்குத் தமிழ்நாடு என்றும் கடமைப்பட்டுள்ளது.
எம்.கே.தியாகராஜ பாகவதர்.

அவரை அடைந்தது பெரும்பேறு
அண்ணா என்ற சாதாரண வார்த்தைக்கு ஒரு மந்திர சக்தி, கவர்ச்சி, தனி அழகு, இன்பம், அன்பு ஒழுக்கம் எல்லாம் ஏற்பட்டுவிடும், வயதில் குறைந்தவர்களும், மிகுந்தவர்களும், அண்ணாவென்றே நமது அண்ணாவை அழைக்கிறார்கள், திராவிடர்களிடையே அண்ணா என்றால் அண்ணாத்துரை அவர்கள்தான். எல்லோருக்கும் அண்ணாவாகும் தகுதி அவருக்குண்டு.
சிலர் தலைவர்களாகப் பிறக்கிறார்கள். சிலர் தலைவர்களாக ஆக்கப்படுகிறார்கள் என்று ஒரு அறிஞர் கூறியிருக்கின்றார். இதையே சிலர் அண்ணாவாகப் பிறக்கிறார்கள். பலர் அண்ணாவாக ஆக்கப்படுகிறார்கள் என்று சொல்லலாமே. இந்த முறையில் தோழர் அண்ணாதுரை அண்ணாவாகவே நம்மிடையே பிறந்துவிட்டார்.
உருவத்தில் தமிழன். உயர் குணத்தில் தமிழன். அன்பு என்னும் பண்பில் தமிழன். அடக்கத்தில் தமிழன். ஆண்மையில் தமிழன். நமது அண்ணா. பரந்த நெற்றி, முறுக்கான மெல்லிய மீசை, விசாலமான முகம், கட்டு மஸ்தான உடற்கட்டு, பந்தயக் குதிரை போன்ற விறுவிறுப்பான நடை, பணிவான நடவடிக்கை, வீர உள்ளம் எல்லாம் ஒருங்கே அமையப்பெற்றவர் தோழர் அண்ணாதுரை.
தமிழர் சமூகத்திலே இடையே வந்து புகுந்து அல்லற்படுத்தும் மூடப்பழக்க வழக்கங்களை வேரோடு கிள்ளியெறியும் பாதையில் அண்ணாவின் எழுத்தும் பேச்சும் நிரம்ப உதவி புரிந்து வந்திருக்கின்றன.
அண்ணாவைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம். ஒரே வார்த்தையில் சொல்வதாயிருந்தால் தோழர் அண்ணாதுரையை நாம் அடைந்தது தனிப்பாக்கியம்தான்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.

கலையறிந்தவர்
அண்ணாதுரை கலையறிந்தவர். தமிழ்நாட்டின் பழைய நிலையந்தவர். மன்னும் இமயமலை எங்கள் மலையே என்று மார்தட்டிக் கூறிய வீரர் வாழ்ந்த தமிழகத்தில் இன்று கோழைகளாய், மோழைகளாய் நாம் குன்றலாகாது. காளைகளாய்க் களிறுகளாய் வாழ்தல் வேண்டும் என்று ஆசைப்படுகின்றவர் அவர். தமிழ்க் குலத்தை அரிக்கும் வேர் புழுக்களை அழித்தாலன்றித் தமிழகம் தழைக்குமாறில்லை. ஊழ்வினையே பேசி ஆழ்வினையற்றிருக்குமளவும் நாம் உய்யுமாறில்லை என்று உறுதியாக கருதுகின்றவர் அவர்.
ரா.பி. சேதுப்பிள்ளை.

கருத்துப்புரட்சிக்கொரு வீரர்
தோழர் அண்ணாதுரை கருத்துப்புரட்சி செய்து வரும் வீரர் அவர் எழுதும் தலையங்கங்களிலும் பேசும் பேச்சுக்களிலும் புரட்சி வித்துக்கள் நிறைத்துள்ளன. அவை படிப்பவர் உள்ளத்திலும் கேட்பவர் நெஞ்சத்திலும் கருத்துப் புரட்சி விதைத்து வளர்கின்றன. தோழர் அண்ணாதுரை கடல்போன்ற பெருங் கூட்டங்களில் பேசும் சொற்கொட்டல். அவருடைய சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டு கடல் ஒரே அமதியாக இருக்கும். ஆனால், பேசுகின்றவரிடத்திலும் இரத்தக் கொதிப்பும் துடிப்பும் குறைவு. கேட்கின்றவரிடத்திலும் இரத்தக் கொதிப்பும் துடிப்பும் குறைவு. காரணம் என்ன? அவருடைய சொற்கள் அறிவாற்றல் வாய்ந்த சொற்கள். புரட்சிக் கருத்துக்கள் பொதிந்த சொற்கள். ஆகையால் வெறும் இரத்தக்கொதிப்பையும் துடிப்பையும் உண்டாக்கி நின்றுவிடுவதில்லை, அவற்றைக் கடந்து சென்று மூளையைத் தாக்குகின்றன. அந்நிலையில் அறிவு துடிக்கின்றது, எண்ணங்கள் கொதித்து எழுகின்றன. ஆகையால் அவருடையசொற்பொழிவு கற்றோருக்கும் பகுத்தறிவுத் தூண்டுகோல் ஆகின்றது, கருத்து வேறுபாடு உடையவர்களுக்கும் ஆராய்ச்சிச் சுடர்விளக்கு ஆகின்றது.
டாக்டர் மு,வரதராசன்

தமிழ்த் தோன்றல்
சீரிய கூரிய தீஞ்சொல் என்பது கம்பன் வழங்கும் அழகிய தொடர்களுள் ஒன்று. இதனை அவன் வழங்கிய இடமும் காலமும் வேறு. ஆயினும் இதன் பொருளும் கருத்தும் அவ்விடம் கால் முதலிய இயல்பு நோக்காது, இண்மையும் அது நிறைந்த இரையும் இரண்டும் செறிந்த செயலும் ஒருங்கு நிகழும் இடங்கட்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளன. பல அறிஞர்கள்பால் உண்மை உரையும் செயலும் ஒளிருங்கால் சீர்மையும் கூர்மையும் இனிமையும் நிறைந்த சொற்கள் பிறந்து நல்ல பயனை அனுபவிக்கின்றன. அவருள் அன்பர் திரு அண்ணாதுரையும் ஒருவர். அவர்பால் சீரிய கூரிய தீஞ்சொற்கள் பெருஞ்செல்வமாக நிலவுகின்றன. செல்வத்துப்பயன் ஈதல் என்பர். திரு.அண்ணாதுரையும் பெருஞ்செல்வமாகிய இச்சொற்களை வரையாது நிறம்ப வழங்குகின்றார். தமிழினஞ் செல்வத் தோன்றல்கள் அவற்றை விரைந்து மனங்கொள்ள ஏற்றுத் தொழில் கேட்கும் தமிழ் நலம் எய்துகின்றனர். இதனைக் கண்டும் கேட்டும் மகிழ்ந்து வரும் என் போன்றோர் உள்ளத்தில், எதிர்காலத் தமிழகம் இனிய காட்சி வழங்கக் கண்டு இன்புறுகின்றனர். ஒரு நல்ல சுயமரியாதைக்காரரகக் காட்சி வழங்கி தூய சுயமரியாதைவீரராய், மான மாண்புடைய கட்டிளந் தமிழ்த் தோன்றலாய் விளங்குகின்றார் திரு. அண்ணாதுரை.
ஔவை சு. துரைசாமி.


தமிழகத்தின் நன்மைக்காக
வான்புகழும் திருக்குறளை உலகுக்கீந்து வகையறிந்த கலை பலவும் வளர்த்த தாயாம்
தேன்வடியும் தமிழ் மொழியின் திறத்தைப் கோறி
தென்னகத்தின் பழஞ்சிறப்பை மீட்போமென்று
ஊக்கமதைத் தூக்கிவிடும் இடைகளாற்றி
தான் பிறந்த தமிழ் நாட்டின் மேன்மைக்காக தவிக்கும் அண்ணாத் துரையவர்கள் வாழ்க, வாழ்க.
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்பிள்ளை

தனித் தமிழ்க்கனல் அண்ணா
அவர் தனித்தமிழ்க்கனல். திட்ப நுட்பமான சொல்லாளர், வீறுமிக்கச் செயலாளர். அவர் உள்ளம் தமிழர் உள்ளம். உணர்ச்சி வெள்ளம். அவர் உரைகள் தமிழர் மதிப்பைக் காக்கும், கொதிப்பையும் உண்டாக்கும் தீப் பொறிகள்.
யோகி சுத்தானந்த பாரதியார்.

வரலாற்றின் வடிவம்
அண்ணாவின் எழுத்து தலைசிறந்த இலக்கியமாகவும் கருத்துக் கருவூலமாகவும், கற்பனைக் களஞ்சியமாகவும், வரலாற்றின் வடிவமாகவும், அரசியல் ஆராய்ச்சியாகவும், புரட்சிப் பொறியாகவும், பகுத்தறிவுப் பட்டறையாகவும், சீர்திருத்தச் செல்வமாகவும், பல்சுவை பகுதியாகவும் விளங்கும். திராவிட நாடு ஏட்டைப் படித்து பாடம் பண்ணி பேச்சாளர் ஆனரே, தற்காலப் பேச்சாளர்களில் பெரும்பாலோர் என்பதைக் கொண்டே அண்ணாவின் எழுத்தின் பெருமையை இத்தன்மைத்தென அளவிட்டுக் கூறலாம்.
புலவர் குழந்தை (அறிஞர் அண்ணாதுரை - நூல் பக் 36)

அண்ணாதுரை தமிழ் உயர்வும் தமிழர் தமது உரிமையும் பெற உழற்றும் (உழைக்கும்) மறுமலர்ச்சி இயக்கத் தலைவராவார்.
நாவலர் கோமசுந்தர பாரதியார்.

செய்யுள் நடையிலும் சிறந்த கொடையழகு நடை. கருத்தை எளிதில் விளக்கும் சொற்றொடர்கள் புத்தம் புதிய சொல்லாட்சி அமைந்து அண்ணாவின் நடை விளங்குகிறது.
புலவர் குழந்தை

கவிதைப் பண்பை உரைநடையில் ஏற்றி வெற்றி கண்ட எழுத்தாளர்.
சுப. ஞானவடிவேலன்

மேடைத் தமிழை ஓர் அரிய கலையாக்கி தமிழகத்தில் எண்ணற்ற சிறந்த பேச்சாளர்களை உருவாக்கியவர் அண்ணா ஒருவரே.
சொர்க்கத்தில் அண்ணா - கண்ணதாசன்

அரசியல் துறையில் குடியாட்சியின் சிறப்பைக் காத்து அரசியல் நாகரீகத்தையே ஒரு பண்பாடு என விளங்கச் செய்தவர்.
மு.வ.(தமிழ்ப் பேரொலி- பக் 175)

அண்ணாத்துரை எனும் அண்ணல்
தமிழ்நாட்டு வண்ணான் அழுக்கெடுப்பதில்
வாய்மொழியில் பண்ணாவான்
சிற்பன் எழுத்தோவியத்தில்
செவ்வரசு நாவான்.
அற்புதம் சூழ் மாலுமி என்று ஆடு
திரு.வி. கல்யாணசுந்தரனார்

20 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிலும், தமிழத்திலும் உயர் தன்மை கொண்டு சிறந்தவர். வங்கத்தில் ஈடிணையில்லா ரவிந்தரநாத்தாகூரும் இடைக் காலத்திற்கு பிறகு தமிழில் ப.சம்பந்த முதலியாரும், இந்தியில் சேத்து கோவிந்ததாசும், தெலுங்கில் பி.வி.இராசமன்னாரும், மலையாத்தில் என்.கிருட்டினப்பிள்ளையும், பஞ்சாப் மொழியில் கோசராவும், கன்னட மொழியில் பத்ரேவும் உமா சங்கரும், தமிழில் சி.என்.அண்ணாதுரையும், பி.எஸ். இராமய்யாவும் குறிப்பிடத்தக்கவர்கள்.
கே.ஆர்.சீனிவாச அய்யங்கார் (தற்கால இத்தியாவில் நாடகம் - பக் 249)

வேலைக்காரி எனும் வியப்பான நாடகத்தை வேலை மறந்து விட்டு விருப்பாக பார்த்திடலாம். மாலை சந்திரோதயத்தில் மங்காத நல் ஒளியில் மலர்ச்சி பெறும் மனக்குமுத மணமாகும் எழுத்துக்கள். பால் போன்ற நகைச்சுவைக்கு பெர்னாட்ஷா என்பார்கள். மேலான அறிவியலில் எம்.என்.ராய் என்பார்கள். கோல குளிர் நடைக்கு கோல்ட்ஸிமித்தே என்பார்கள். அவரெல்லாம் உறைகல் தான். அண்ணா ஓர் அசல் தங்கம்.
கவிஞர் எஸ்.டி.சுந்தரம்

ஒரு கவிஞனின் படைப்புச்சக்தி ஒரு சிறந்த மேதையின் காந்த சக்தி, ஒரு அரசியல்வாதியின் அறிவுநுட்பம் சாதாரண மக்களாலும் நேசிக்கப்படும்.
அவர்களை நேசித்து வாழும் எளிமை, அடக்கம், அன்பு அனைத்தும் ஒரே மனிதனில் இணைந்திருப்பது மனிதகுல வரலாற்றிலேயே அபூர்வமாக நிகழ்வதாகும். அப்படிப்பட்ட அபூர்வ மனிதர் அண்ணா.
திருத்த முறை கிருத்துவ சபையின் முன்னாள் பேராயராக இருந்த வெஸ்லி நியூ பிகின்.

சமூக விடுதலை இயக்கத்திற்காக சி.என்.அண்ணாதுரை தம் சிறுகதைகளை கருத்துக் கணைகளாக்கியிருக்கிறார். சாதி ஒழிப்பு, கைம் பெண் மறுமணம், கலப்புமணம், சம்பிரதாயச் சடங்குகளின் மறுப்பு போன்றவை சி.என்.அண்ணாத்துரையின் சிறுகதைகளில் தலை தூக்கி நிற்கின்றன.
அகிலன் (கதைக் கலை - பக் 31)

இன்றைய சிறுகதை, நாவல், இலக்கியம், மணிக்கொடி மரபு, கல்வி மரபு, அண்ணாத்துரை மரபு என மூன்று பிரிவுகளில் அடங்கும்.
கஸ்தூரி ரங்கன் (தீபம் தீபாவளி மலர் - 01.09.75)

இலக்கணம் இதுதான் நாஞ்சிலார் - 1969 இல் எழுதியது தொகுத்தவர் - சின்னிக் கிருட்டிணன்

தென்னகத்தின் சுடர் விளக்கு, ஒளிக்கற்றையைச் சிதற விட்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார்.
தமிழகத்தின் வழிகாட்டி அனைத்திந்திய வழிகாட்டியாக ஆவதெப்போது எனும் கேள்வி இலட்சோபலட்சம் உதடுகளில் நெளிந்து கொண்டிருந்தபோது நம்மை விட்டு மறைந்தார்.
ஜனநாயகப் பாரம்பரியத்தின் தகுதியான பாதுகாவலன் அறிஞர் அண்ணா அவர்களே எனும் நியாயமான, தீர்க்கமான முடிவிற்கு உருவாகி வந்த அரசியல் சூழ்நிலைகள் தங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றன.
ஒப்புக் கொள்ளப்படும் தலைவன் எனும் முழுமைக்கு சில இலக்கணங்களுக்குரிய பூரண இலக்கியமாக அறிஞர் திகழ்ந்தார்.

அதை இலக்கணங்களை நான் கீழ்க்கண்டவாறு வரிசைப் படுத்துகிறேன்.

1. பேச்சால், மூச்சால், நினைவால், செயலால் எந்த நேரத்திலும் தனது நாட்டிற்கோ, மக்களுக்கோ, எந்த முகாமினின்றும் தீங்கு வரப்பொறுக்காதவன் மட்டுமல்ல, வருகின்ற தீங்குகளைச் சுட்டெரிக்கும் கனல் வெறியின் உத்வேகமாக இருப்பவன்.

2. தன்னை அழித்து நாட்டைக் காப்பாற்றும் உணர்வில் மெழுதுவர்த்தியின் பண்பு கொண்டவன்.

3. விசாலமான இதயத்திற்கு உரிமையாளன். தனது இதயக் கதவைத் திறந்து விட்டு அனைவரையும் அணைத்துக்கொள்ளும் தாயன்பு மிக்கவன்.

4. சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, இலட்சியப் பிடிப்பு, அணைத்துச் செல்லும் போக்கு, தகுந்த நேரத்தில் தலைமைக்-குரியவனாகத் தன்னை உயர்த்தி நிறுத்தல் ஆகிய பண்புகளின் கூட்டுத் தொகுப்பாக நிற்பவன்.

5. மன்னிக்கும் மாண்பு, இன்று போய் நாளை வா எனும் அறநெறி உயர்வுள்ளம் இவைகளின் மொத்தச் சேர்க்கையாக தன்னை அறிமுகம் செய்பவன்.

6. தன்னைத் தாழ்த்தி, மற்றையோரை உயத்த்துவதன் மூலம் தன்னை நிரந்தரமாக உர்த்திக் கொள்ளுகின்ற வாய்ப்பை மொத்த சமுதாயத்தின் மூலம் சரளமாகப் பெறுபவன்.

7. சுயநலத்தைச் சுட்டெரித்தவன். பொதுநலத்தைப் பிறப்புரிமையாக்கியவன். 8. இரக்கத்திற்குச் சொந்தக்காரன், இதயத்திற்கு உரிமையாளன்.

9. அறிவு, ஆற்றல், திறமை, தகுதி, தரம், தன்மை, பண்பு, பாசம், இன்னபிற பண்புகளின் பெட்டகம்,

10, நிழல் தருவதில் ஆலமரம், பரம்பரைகளை வளர்ப்பதில் வாழை.

மேற்சொன்ன இலக்கணங்களைத் தெரிந்துகொள்ள விருப்புவோர் எழுந்து நிலைத்து விட்ட அண்ணா எனும் நிறுவனத்தை அணுகலாம். அவரைப் பாராட்டாதோர் இல்லை - அவரை ஒப்புக்கொள்வதில் சிரமப்பட்டோரும் இல்லை.
சுடர் விளக்கே, சுந்தர முகமே, உன் நினைவு செஞ்சில் என்றென்றும் நினைவு பெற்றிருக்கும்.


 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai