அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும்
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பாகம் -29

நாடாளுமன்றத்தில் அண்ணா
எஸ்.எஸ்.மாரிசாமி, எம்.பி.

நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக ஆன சில நாட்களில் அண்ணா அவைக்கு வந்தார். அவர் வந்து அமர்ந்ததுமே அவையில் சிறிது பரபரப்பு இருந்தது. பலர் அவரைக் கட்சி பேதமின்றி இன்முகத்தோடு வரவேற்ற காட்சியினைக் கண்டேன். அப்போது கேள்வி நேரம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. சிறிது நேரம்தான் அண்ணா அமர்ந்து இருந்தார். பிறகு வெளியே நடந்து மத்திய மண்டபத்தில் அமர்ந்த அண்ணா, இப்பொழுது என்ன விவாதம் நடைபெறுகிறது? என்று நண்பர்களைப் பார்த்துக்கேட்டார். உபமானிய பட்ஜெட் நடைபெறுகிறது என நண்பர்கள் சொன்னார்கள். தமக்குப் பேச வாய்ப்பு கிடைக்குமா என அண்ணா கேட்டதற்கு, தங்களுக்கா! நிறைய உண்டு என்று ஓர் உறுப்பினர் உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ்காரர். அவையில் எந்த ஒரு பிரச்னை வந்தாலும் இவர் எழுந்து பேசுவார். தீவிரவாதியும்கூட. காங்கிரஸ் கம்யூனிஸ்டாக மாறிக்கொண்டு வருகிறது என்ற வாதம் எவ்வளவு உண்மையானது என்பதை உணர இவர் ஒருவரது பேச்சைக் கேட்டாலே போதும். அத்தகைய தீவிர காங்கிரஸ்காரர்தான் அண்ணாவிடம், தங்களுக்கா! பேச நிறைய இடம் உண்டு எனக் கூறினார். சிறது நேரத்தில் அண்ணா எழுந்து நூலகத்துக்குச் சென்றுவிட்டார். நாங்கள் அனைவரும் அவைக்குத் திரும்பினோம். அன்று முழுதும் அண்ணா அவைக்கு வரவில்லை. அடுத்த நாள் அவையில் சிறு நேரம்தான் இருந்தார். பிறகு நூலகத்துககுச் சென்று விட்டார் எனக் கேள்வியுற்றேன்.

அடுத்த நாள் காலை ஒன்பது மணி அளவில் நண்பர் ராஜாராம் டெலிபோன் செய்தார். அன்று அண்ணா அவையில் பேச விரும்புவதாகவும், இதை அவைத் தலைவரிடம் நான் தெரியப்படுத்த வேண்டுமென்பதாகவும் கூறினார். மெத்த மகிழ்ச்சியோடு இச்செய்தியை ஏற்றுக்கொண்டு அவைக்கு முன்கூட்டியே சென்றேன். அவைச் செயலாளரிடமும், அப்போது தலைவராக இருந்த உயர்திரு ஜாகிர் ஹுசேன் அவர்களிடமும் அண்ணா பேச நேரம் ஒதுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டேன். பிற்பகல் 12.30 மணிக்கு அண்ணா பேசலாம் என்றார்கள். இதை அண்ணா அவர்களுக்கு அறிவிக்க, அவரும் சரி என்றார். இதற்குள்ளாக இச்செய்தி அவை முழுதும் பரவியதுடன் நிருபர்கள் மத்தியிலும் பரவிவிட்டது. இந்து பத்திரிகைக்கு அப்போது நிருபராக இருந்தவர் காலஞ்சென்ற இ.கே.ராமசாமி. அண்ணா பேச்சு என்றால் அவருக்கு அலாதியான பிரியம். எனவே, அவர் வடநாட்டுப் பத்திரிகைக்காரர்களையும் மேல்நாட்டு நிருபர்களையும் அழைத்துக்கொண்டு குறித்த நேரத்தில் வந்துவிட்டார். சபையிலும் வழக்கத்துககு மாறாகப் பெருங்கூட்டம் இருந்தது. தயாபாய் எட்டேலும், ஜன சங்கத் தலைவரான வாஜ்பாயும் எதிர்க்கட்சிகளின் சார்பாகப் பேசிவிட்டார்கள். அண்ணா பேச எழுந்தபோது மணி 12.50. பத்து நிமிடம்தான் அண்ணா அவர்களுக்கு இருந்தது. ஏனெனில். ஒரு மணிக்கு அவையை இடைவேளைக்காக ஒத்தி வைத்துவிடுவார்கள். எனவே, பத்து நிமிடத்தில் அண்ணா பேச்சை முடிக்க வேண்டும் என்ற நிலை. ஆனால் இவர் பேச எழுந்ததும் இவரிடத்தில் என்றுமே அன்பும் மரியாதையும் காட்டும் உதவித் தலைவரான ஸ்ரீமதி வயலெட் ஆல்வா சபை இன்று ஒன்றரை மணி வரை நடைபெறும் என்று அறிவித்தார். இதைக் கேட்டதும் அண்ணாவுக்காக சபை நீடிக்கிறது என்ற மகிழ்ச்சி எங்களுக்கெல்லாம் ஏற்பட மேஜைகளைத் தட்டி எங்கள் சந்தோஷத்தைத் தெரிவித்துக்கொண்டோம். அண்ணா பேச ஆரம்பித்தார். புள்ளி விவரங்கள் எல்லாம் எடுத்துக்காட்டி நிதி மந்திரி கொண்டுவரக் கூடிய உபமானிய கோரிக்கை அவசியம் இல்லாதது என்று பத்து நிமிடங்கள் பேசினார்.

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai