அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும்
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பாகம் -28

என் அண்ணன்
மாண்புமிகு கே.ஏ.மதியழகன்

கடந்த பத்து நாட்களில் என்னைக் களிப்புக் கடலில் ஆழ்த்தும் இரு பெரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. ஒன்று எனது திருமணவிழா. மற்றது அறிஞர் அண்ணா அவர்களின் ஐம்பத்தொன்றாவது பிறந்த தினவிழா. அண்ணனின் பிறந்ததின விழா என்ற தித்திக்கும் சேதி எனது திருமண மகிழ்ச்சியையும் தோற்கடித்துள்ளது. அந்த பெருமிதத்திலே மிதந்து கொண்டுள்ளேன். எவருக்குக் கிடைக்கும் ஒரே சேர இப்படிப்பட்ட இன்ப நினைவுகள்!

நாடு முழுதும் விழாக்கோலம், கவிஞர்கள் பாமாலை புனைகின்றனர். அவர்தம் கவிதையில் மெருகுக்கு மெருகு தெரிகிறது உன் புகழ் பாடுவதால், கலைஞர்கள் எழுத்தோவியம் வரைகின்றனர், கம்பீரம் கோலோச்சுகிறது. பாடகர்கள் கீதம் இசைக்கின்றனர். இனிமைக்கு இனிமை கூட்டுகிறது.

சிறப்பு மலர்கள், சிறந்த சொற்பொழிவுகள், கொடியேற்று விழாக்கள், கோடிக்கணக்கானோர் உள்ளங்களில் உவகைப் பெருக்கு, அலைகடலுக்கப்பால் சிங்களக்கரையிலும், சிங்கப்பூர் மைதானத்திலும் இதுபற்றியே ஆர்ப்பரிப்பு.

எங்கிருந்தோ வந்தான், எங்கள் இதயந்தன்னில் இடம் பொண்டான் என்று பண்பாடுகின்றனர். ஊரும், உலகமும், உத்தமரும் உங்களைப் புகழ்வது கண்டு என் உள்ளம் கள்வெறி கொள்கிறது. அண்ணனே! எங்களை ஆட்கொண்டவனே! எங்கெங்கு காணினும் உன் சக்தி!

அன்னமூட்டிய தெய்வமணிக்கைகளின் ஆணைக்கும் தங்கள் சுட்டுவிரலின் ஆற்றல் இல்லை! கன்னத்தே கொண்டு முத்தங்களளிப்பினும் வேடிக்கைக்காக முகத்தைத் தள்ளும் மாதரசியின் வேல் விழிகளுக்கு, தங்கள் கண்ணொளி உமிழும் கண்களுக்கு இருக்கும் கட்டளைத்திறன் ஏது?

நாடு நானிலமும் எத்தனையோ மேதைகளை, அறிஞர் பெருமக்களை நாயகர்களைச் சந்தித்துள்ளது. அவர்களுக்கெல்லாம் எங்கே இருந்தது அந்த காந்த கவர்ச்சி. சிலர் நோட்டுகள் மட்டும் அளிப்பர், வேறு சிலரிடம் ஓட்டுக்கள் மட்டும், தங்களிடமோ பல்லாயிரம் ஆற்றல் நிறை இளைஞர்கள் உயிர்ச் சீட்டுக்களையே அளித்துள்ளனர்.

மரணம் நீங்கள் காட்டும் வழியானால் அதை திரணமாக மதிக்கும் ஆயிரம் ஆயிரம்பேர் சூழ்ந்து நிற்கின்றோம். துப்பாக்கிக் குண்டுகளுக்கு எங்கள் மார்புகளை விதிதுள்ளோம். தடியடித் தழும்புகள் பெறற்கரிய பூச்செண்டு; கண்ணீர்ப்புகை - அது எங்களுக்கு பன்னீர்த்துளி; வறுமை - அது எங்கள் பொறுமையை ஒரு நாளும் குலைக்காது. எண்ணற்றோர் தங்கள் சுகதுக்கங்களை, உடலை உயிரை உடைமையை; உங்கள் கருத்துப்படி காணிக்கையாக்கக் காத்து நிற்கின்றனர்.

உடன் பிறப்பே! தங்கள் சொந்தத் தாயின் வயிற்றில் பிறந்த சகோதரர்களையும் இரண்டாந்தரமாக்கி என் அண்ணன் என்ற முதலிடத்தை என்போன்ற எத்தனையோ தம்பிமார்கள் தங்களுக்கு அளித்துள்ளனர். அண்ணா என்று அகங்குழைய, அத்தனையும் குழைய அழைக்கும் அன்புப் பெருக்குக்கு அவனியிலே ஈடு எது இணை எது என்று சொல்ல முடியாது தவிக்கிறேன். அண்ணா என்று முதன் முதல் தங்களுக்கு எந்தத் தாய் திருநாமம் இட்டு அழைத்தார்களோ, அந்த அன்னையின் வாய்க்கு ஆயிரம் மடங்கு சர்க்கரை கொட்டவேண்டும், அண்ணா என்ற சொல்லுக்குப் பொருளேற்றிய சுந்தரனே! சொல்லி முடிவதுண்டோ உன்சோபிதம்! நாடகவேந்தன் க்ஷேக்ஸ்பியர் சொன்னானே கிளியோபத்ராவின் அழகின் வகை காண முடியாத வர்ண ஜாலத்தை காலமோ வயதோ மாற்ற முடியாது என்று அவன் மட்டும் எங்கள் தலைமுறைக்காரனாய் இருந்தால் உங்கள் தமிழுக்கல்லவா அந்த புகழ் மாலையைத் தொடுத்திருப்பான்!

உங்கள் போனாவிலிருந்து உருண்டோடி வரும் எழுத்தோவியங்கள் காலமெனும் பருவக்காற்றால் உலர்ந்துவிடும் சிறகுகளல்ல. ஊழி உள்ளவும் மின்னிடும் பொன்!

உங்கள் எழுச்சிமிக்க பேச்சின் நடையை, இங்கர்சால் உயிரோடிருந்தால், பயில தென்னகம் வந்திருப்பான்.

பர்க் மயான பூமியிலிருந்து எழுந்து சட்ட மன்றத்திற்கு வந்து தங்கள் அறிவாற்றல் மிக்க உரையைச் செவிமடுக்கும் வாய்ப்புக் கிடைக்குமானால் ஊமையாவான். மணி கணக்கில் வாய் பொத்தி, கை கட்டிச் செவிமடுப்பான். இந்த நளினத்தை, லளிதத்தை, லாவண்த்தை, என் நாட்களில் கையாண்டதில்லையே என்று வருந்துவான்.

தங்கள் நாடக ஆற்றலைக் கண்டு இங்கோர் இப்சன், இங்கோர் கால்ஸ்வொர்த்தி, இங்கோர் பெர்னாட்ஷா என மாற்றாரும் புகழ்ந்தனர். எம்.ஏ.படித்த அண்ணாதுரை அரிதாரம் பூசி நடிக்கிறார் என்று தவறாக நினைக்காத அந்த நல்ல நாட்களில் புளகாங்கிதம் மேலிட பாராட்டினார். பரம்பரை நடிகரும் தங்களிடம் கலைப் பயின்றனர். திரை உலகம் திருப்பு முனையைக் கண்டது.

ஜொலி ஜொலிப்பும் தகதகப்பும் என்றும் தங்களை அடிமை கொண்டதில்லை. மின்னலை நம்பி காரியங்களை துவக்குவதில் பலன் கிடைக்காது என்ற அனுபவமொழிக்கு இலக்கியமானீர்! உங்கள் மூதாதையரின் மகோன்னதமான பொற்காலத்தைப் பாரீர் என்ற காலத்தால் புழுதி படிந்த ஏடுகளை எடுத்து இளைஞரை முன் வைத்தீர்! மின்சாரமெனப் பாய்ந்து முன்னவர் கீர்த்தி கூறும் தங்கள் வசீகரச் சொற்கள்! மறக்கொணா இளைஞர் கூட்டம் எழுந்தது.

எங்கெங்கோ இருப்பவரெல்லாம் இந்த விந்தை மனிதர் யார்? என்று வினயத்துடன் வினாதொடுப்பது கேட்டுச் சொந்தம் என்ற முறையில் எத்தனையோ முறை அமைப்பதில், கிளர்ச்சிகளை உருவாக்குவதில் அகில உலகப் புகழ் வாய்ந்தவர் என்று போற்றப்படும் டாக்டர் லோஹியா அவர்கள் அண்ணாதுரை அமைத்துள்ளதைப் போல் வலுவான அரசியல் கட்சியை அமைக்க முடியவில்லை என்று பாராட்டுவதை என் காதாரக் கேட்டேன்.

மூன்று திங்களுக்கு முன் பெங்களூர் சென்றிருந்த போது மைசூர் முன்னாள் அமைச்சர் அனுமந்தைய்யா அவர்கள் தென்னகத்தில் அண்ணா அவர்கள் பெரும் அரசியல் சக்தி என்று கூறினார். காலஞ்சென்ற திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்கள மறைவதற்குப் பத்து நாட்களுக்கு முன்பு அவர் இல்லம் சென்றிருந்தேன். மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த தமிழ்த் தென்றல் தம்பி! முன்பெல்லாம் பள்ளி மாணவர்கள் திரு.வி.க. நடை என்று என் தமிழை அழைப்பார்கள். இப்போது அண்ணாதுரை நடையைப் பின் பற்றுவதாகக் கூறுகிறார்கள். எனக்கு மிக்க மகிழ்ச்சி என்று கூறி அணையும் அந்த தீபத்தின் முகத்தில் தோன்றிய சுடரொளி என் கண் முன்னாலே தெரிகிறது.

அண்ணனே! எங்கள் ஆருயிர் தலைவனே! மணி மாளிகைகளும் அவை தரும் சுகபோகங்களும் உங்களுக்கு கால்தூசு. ஆர்பாட்டம் ஆடம்பரம் அவை உங்களை அண்ட நடுங்கும். அதிகாரம் கோடிக்கணக்கானவர் இதங்களில் கோலோச்சும். எனக்கேன் வன்முறை தரும் ஆயுதம் என்பதையெல்லாம் சொல்லாமல் சொல்லிக் கொண்டுள்ளவனே! சோர்வில்லாதவனே!

புகழ் உங்களுக்கு என்றும் போதையைத் தந்ததில்லை. இழிமொழிகள், ஏளனம், பழிச்சொல், நயவஞ்சகர் நாசக்காரச் செயல்கள் அத்தனையையும் தாங்கினீர்கள். சமப்படுத்தினீர் பொது வாழ்வுக் காரனுக்கு பொன்னான உதாரணமான பொறுமையின் பூஷணமே! எதையும் தாங்கும்இதயங்கொண்டவரல்லவோ தாங்கள்! உங்களைப் போன்றதோர் தலைவரை இது நாள்வரை தமிழர் சமுதாயம் கண்டதில்லை. இனி காணப்போவதுமில்லை. உங்கள் தலைமுறையில் தமிழகத்தில் பிறந்ததை விடப் பெறற்கரிய பேறு திராவிட இளைஞருக்கு வேறு என்ன இருக்கிறது? அந்தப் பேற்றினைவிடப் பெரியதாக, உங்கள் காலடியில் என்றும் சேவகனாக, பணியாளாக தோழனாக, அன்புத் தம்பியாக வாழும் வாய்ப்புப் பெற்றேன். அதைவிட வேறு சிறப்பு நமது தலைமுறை திராவிட வாலிபனுக்கு வேறு எது உண்டு! ஆருயிர் அண்ணனே! அன்பு நிறைந்தவனே! ஒரே ஒரு சிறப்பு உங்களைவிட எனக்கு உண்டு. என்னால் உரிமை பாராட்டும் அண்ணனை விடச் சிறந்த அண்ணனைக் காட்டி என் அண்ணன் என்று உங்களால் கூற முடியாது. அந்த பெருஞ்சிறப்பு, உங்களுக்கு கிடைக்காத, கிடைக்க முடியாத, எனக்கு மட்டுமே கிடைத்த பெரும் பாக்கியம். அந்த கர்வ வாடை என்னைச்சுற்றிக் கமழ்கிறது! வாழ்த்தும் வயதுடையவனல்ல, முறையும் அல்ல! உங்கள் வழி நடக்கக் காத்திருக்கிறேன். பசி, பட்டினி, சிறை, வறுமை, பொடுமை, இழிவு, மரணம் எதுவும் என்னை ஒன்றும் செய்ய இயலாது என்று இலட்சக்கணக்கான திராவிட வாலிபர்போல் நானும் உறுதி கூறுகிறேன்!

தங்கள் தம்பி,
கே.ஏ.மதியழகன்
(18.09.1959 - தென்னகம்)

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai