அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும்
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பாகம் -27

அண்ணாவின் சொல்லாற்றல்
டாக்டர் பொற்கோ

அண்ணா என்றும் அறிஞர் அண்ணா என்றும் பேரறிஞர் அண்ணா என்றும் தமிழக மக்கள் அன்புப் பெருக்கோடு அழைக்கும் அந்தப் பெருமகனால் நம்மைவிட்டுப் பிரிந்து இருபத்து நான்கு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.

இந்த இருபத்து நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் எத்துணையோ மாற்றங்கள் நடந்து முடிந்துவிட்டன. இன்னும் மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. வேகமாக வந்து குவிந்து கொண்டிருக்கிற சமுதாய நிகழ்ச்சிகளில் எத்துணையோ நினைவுகள் புதைந்து போய்விட்டன. ஆனால், ஏ தாழ்ந்த தமிழகமே! என்று உரக்கக் குரல் பொடுத்துத் தமிழகத்தையே எழுப்பி விழிப்புணர்வு ஊட்டிய பேரறிஞர் அண்ணாவின் நினைவுகளும் அவரது பரந்த உள்ளத்தில் நிரந்தரத் தலைவராக நிலைத்து நின்ற தந்தை பெரியாரின் நினைவுகளும் மங்கவில்லை. மறையவில்லை. மற்ற நினைவுகளைப் போல புதைந்து போய்விடவில்லை. நேரம் வரும்போதெல்லாம் பொங்கிப்பொங்கி, கனன்றுகனன்ற, கிளர்ந்துகிளர்ந்து மேலே எழுந்து வருகிறது. அவர்கள் இருநதபோது அவர்களை நினைத்ததை விட இல்லாதபோது அதிகமாக நினைக்க வேண்டியிருக்கிறது.

அண்ணா பிறந்த காலத்தில் இருந்த தமிழகம் தொட்டதற்கெல்லாம் அஞ்சி அஞ்சித் துவண்டது; சாதி உயர்வு தாழ்வில் சிக்கித் தவித்தது. சமயவாதகங்களிலும் புராண இதிகாசப் போதனைகளிலும் சிந்தனை முடம்பட்டுக் கிடந்து திக்குமுக்காடித் தணறியது. இந்தத் தமிழ் மண்ணில் பலபேர் குட்டக்குட்ட குனியக்குனிய குட்டிக்குட்டிக் கொட்டமடத்தார்கள். இந்தச் சாதிக்கு இந்தச் சாதி அடிமை, அவனுக்கு இவன் அடிமை, ஆணுக்குப்பெண் அடிமை என்று இப்படி அடிமைப் பண்பாட்டுக்குக் கேவல நிலை நாடுமுழுவதும் நீக்கமற நிறைந்திருந்தது.

மனித நேயத் தூண்டுதலால் மனித சமத்துவ நோக்கோடு இந்த சூழ்நிலையை மூர்க்கமாக எதிர்த்துப போராட முன்னமே புறப்பட்டுவிட்டார் தந்தை பெரியார். அவரால் ஈர்க்கப்பெற்று அவரால் உரமேற்றப்பெற்று அவரையே தலைவராகவும் அவரையே தமிழ்ச் சமுதாயப் பெரும் பேராசிரியராகவும் ஏற்றுக்கொண்டு பொதுவாழ்வில் புகுந்தார் பேரறிஞர் அண்ணா அவர்கள் இங்கே நடக்காத விந்தைகளை நடத்திக் காட்டினார்; நிமிராத தலைகளை நிமிர வைத்தார் ; விழிக்காத கண்களை விழிக்க வைத்தார்.

தன் இன மேம்பாட்டுக்காக, தன் மொழி உயர்வுக்காக யாரும் பேசத் துணியாத பேச்சுகளைப் பேசினார்; யாரும் எழுதத்துணியாத கருத்துக்களை எழுதினார்.

சமுதாய நலத்துக்காகவும் சாமான்யர் மானத்தைக் காக்கவும் இவர் போர்முரசு கொட்டிப் புறப்பட்டபோது எதிரில் நின்ற எதிரிகள் ஏராளம்; எதிரிகளின் கைவசம் இருந்த பாரம்பரிய மரவுவழி ஆயுதங்களும் ஏராளம் இந்த புதுயுகப் பாரதப்போர்களத்தில் பாரதம் கண்டறியாத அபிமன்னனாக அறிஞர் அண்ணா போர் தொடுததார். இவரை எதிர்த்தவர் யாரும வென்றதில்லை. எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் என்ற பாடலுக்குப் பொருள் விளைந்தது. இறுதிக் காலத்தில் பகைவர்கள் எல்லோரும் மறைந்து போனார்கள்.

இலக்கியப் புலவராக, அரசியல் மேதையாக, நடிகராக, கவிஞராக, எழுத்தாளராக, பேச்சாளராக இப்படி எத்துணையோ நிலையில் இவர் தமது எதிரிகளைச் சின்னாவின்னப் படுத்தினார். இவர் பொது வாழ்வைத் தொடங்கிய காலத்தில் அரசியல், சமுதாயம், கலை இலக்கியம், சமயம், முதலான பல துறைகளிலிருந்து இவர் தாக்குதலைச் சமாளிக்க வேண்டியிருந்தது.

இப்படிப்பட்ட பல முனைத் தாக்குதல்களையும் எதிர்த்து இவர் போராடிய விதமே தனி எதையும் எதிர்க்கொள்ளும் துணிச்சலோடு எதையும் தாங்கும் இதயத்தோடு, புன்முருவல் குறையாமல், போர் குணம் மாநாமல், கண் சிவக்காமல் உமதட்டைக் கடிக்காமல், எதிரிகளைச் சபிக்காமல், இளைக்காமல் சளைக்காமல் எதிரிகளோடு இவர் நித்தியபோர் வியக்க தக்க ஒரு வீர விளையாட்டாக இருந்தது பாராட்டிப் போற்றத் தக்க ஒரு பண்பாடு முன்னோட்டமாக இருந்தது.

இப்படி ஒரு வீர விளையாட்ட நிகழ்த்தித் தமிழகத்தில் வியக்கத்தக்க விளைவுகளைக் காண இவரால் எப்படி முந்தது?

அறிஞர் அண்ணா அவர்கள் சலிக்காத படிப்பாளர், அதனால் அவரிடம் அறிஞர்கள் போற்றத்தக்க அறிவுவளம் இருந்தது. அறிஞர் அண்ணாவின் மனம் கருத்து வேறுபாடுகளுக்காக எங்கும் பகைமை பாராட்டியதில்லை. அதனால், எதிரிகளும் அவருக்க நண்பர்களானார்கள். போற்றுதல் கண்டு மயங்கவில்லை; தூற்றுதல் கண்டும் துவளவில்லை. அதனால் எதிரிகளால் அவரை ஏமாற்றவும் முடியவில்லை; அச்சுறுத்தவும் முடியவில்லை. இவற்றோடு நெகிழாத கொள்கைப் பிடிப்பும் அசையாத குறிக்கோளும் பகுத்தறிவுத் தொலைநோக்கும் இயல்பாகவே அமைந்திருந்தது. அதனால், யாராலும இவரை வழிமாற்றித் திசைதிருப்ப முடியவில்லை.

இனிமையான இந்தப் பண்புகள் யாவும் துணை நிற்க அவருக்குத் தப்பாமல் பயன்பட்ட போர்படை அவருடைய சொல்லாற்றல்.

இனிமையான இந்தப் பண்புகள் யாவும் துணைநிற்க அவருக்குத் தப்பாமல் பயன்பட்ட போர்படை அவருடைய கொல்லாற்றல்.

சொல்லாற்றல் பெற்ற எல்லோரும் சாதிக்காததை அவர் சாதித்தால். அவரிடமிருந்த அறிவு வளமும் பண்ப நலமும் தலைமைக் குணமும் அவருடைய எழுத்துக்கும் பேச்சுக்கும் எல்லையற்ற ஆற்றலை கொடுத்தன.

சொல்லாற்றல் என்றால் தத்தித் தாதூதுதி தாதூதித் தத்துதி என்றெல்லாம் ஓசை விளையாட்டு விளையாடுவதல்ல. சங்கரற்கு மாறுதலை சண்முகற்கு மாறுதலை என்று பாடுகிற சொல் விளையாட்டும் அல்ல. உரைப்பவன் ஒன்றைச் சொல்ல அந்தச் சொற்கள் கேட்பவர்களை ஊடுருவி உள்ளே சென்று மனதைத் தொட்டு அங்கே கிளர்ச்சி நிலையிலும் அறிவு நிலையிலும் ஒருவித இரசாயன மாற்றத்தை உண்டாக்கவேண்டும். அப்படிச் சொல்லை ஆளுகிற ஆற்றல் சொல்லாற்றல். அப்படிப்பட்ட சொல்லாற்றல்தான் அண்ணா தந்த சொல்லாற்றல்.

அந்தச் சொல்லாற்றதான் வரலாற்றை மாற்றியது. எதிரிகளின் கைப் பிறழவிடாமல் கட்டியது. சொற்போருக்கு வந்தவர்களை இருந்த இடத்தில் இருக்கவிடாமல் துரத்தியது. கருத்துக் குருடர்களுக்கு கண்ணொளி தந்தது. மீளாத துயிலில் இருந்த மடியாளர்களை மக்களாக்கியது. இந்த நாட்டில் வாழும் சாமான்யர்கள் மீது சுமத்திய இழிவுச் சுமையைத் தூக்கி எறிந்தது. சம்பிரதாயம் என்றம் எங்கம் எளியவர் மீது பூட்டப்பட்டிருந்த விலங்குகளையெல்லாம் உடைத்து நொறுக்கும் உரத்தைக் கொடுத்ததெல்லாம் அண்ணாவின் அந்த சொல்லாற்றல்தான்.

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் சொல்லார்ப்பெறின்

சொலல்வெல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது

குறள்களைப் பார்க்கும் போதெல்லாம் அண்ணாவின் முகந்தான் கண்முன் தோன்றுகிறது.

அண்ணாவின் சொல் வெல்லுஞ்சொல்லானதற்கு எத்துணையோ காரணங்கள் இருக்கின்றன. அவர் தன்னையும் தன் புலமை வளத்தையுமே நினைத்துக்கொண்டு பேசாமல், யாருக்காகப் பேசுகிறோம் என்ற உணர்வோடு பேசினார் - எழுதினார். என்ன பேசுகிறோம், எவ்வளவு பேசவெண்டும் என்ற உணர்வோடு பேசினார்.

இடத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப அவர் எழுத்திலும் பேச்சிலும பழங்கதைகள் பளிச்சிட்டன. புதிய புனைக்கதைகள் முளைத்தன. நகைச்சுவை உறையாடின. உவமையும் உருவகமும் குறிப்புப் பேச்சும் பின்னிப் பிணைந்து மின்னின. சொல்லும் தொடரும மாலைகளாய் ஆடுக்குகளாய், வண்ணவண்ணச் சரங்களாய் கேட்போரைக் கவர்ந்து இழுத்தன. கருத்துப் பிழம்புகளம் கற்பனைக் கோலங்களும் கேட்போருக்கு ஒரு புதிய அனுபவத்தையே உண்டாக்கின.

அவர் எழுத்திலும் பேச்சிலும் எத்துணையோ பகுதிகள் கல்வெட்டுகளாக நிலைபெற்று விட்டது. நெஞ்சைவிட்டகலாத நிகழ்ச்சிகளை அவை நிலையிறுத்தி வைக்கின்றன.

(இவர்) என்னைப் புரட்சியின் சிகரம் என்றார். புரட்சி இவ்வளவு குள்ளமாயிராது. புரட்சியின் சிகரம் என்றால் அது இங்கே அமர்ந்திருக்கும் டாக்டர் சிதம்பரநாதன் அவர்களுக்குப் பொருந்தும் என்று 1944 இல் பேசி இப்போதும் நம்மை அவர் சிரிக்கச் செய்கிறார்.

ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின் நான் மூன்று முறை மகிழ்ச்சி அடைந்தேன்.

தமிழ் நாடு என்றம் பெயரிடுவதை எல்லாக் கட்சியினரும் ஏற்கச் செய்து ஒருசேர, தமிழ் தமிழ் நாடு வாழ்க் என்று முழக்கமிட்ட நேரத்தில் மகிழ்ச்சி அடைந்தேன் அது என்னடைய 58 ஆண்டு வாழ்வில் நான் கேட்டிராத கீதம், அது பார்த்திராத காட்சி. என் செவியில் விழுந்திராத செந்தேன். இரண்டாவதாக நான் மகிழ்ச்சி அடைந்தது சுயமரியாதைத் திருமணச் சட்டம் சிறைவேறியபோது ஆகும். எங்கே ஒழுக்கம் கெட்டுவிடும் என்ற பேச்செல்லாம் எழுமோ என்று அஞ்சி நான் அந்தச் சட்டம் நிறைவேறியபோது மகிழ்ச்சி அடைந்தேன். மூன்றாவதாக நான் மகிழ்ச்சி அடைந்தது இந்தி இனி இல்லை என்று சொன்னபோது அடைந்த மகிழ்ச்சி ஆகும்

பேரறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லும் இந்த மூன்று மகிழ்ச்சியிலும் நாம் மிகுந்த நன்றி உணர்ச்சியோடு பங்கு கொள்கிறோம். ஆற்றல் மிகுந்த அந்தப் பெருமகனாரை உரிமையோடும் நன்றி உணர்வோடும் நாம் மீண்டும் மீண்டும். நினைவுகூறவேண்டும். அவர் ஊட்டிய இனிய பண்பாடு உணர்வு போற்றப்டவேண்டும்; மேலும் மேலும் வளர்க்கப்படவேண்டும்.

குறிப்பு: இந்தியா வானொலியில் ஒலிபரப்பப்பெற்றது.

 

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai