அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும்
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பாகம் -25

அண்ணா வளர்த்த அரசியல் கண்ணியம்!
(இரா.செழியன் - சங்கொலி)


அறிஞர் அண்ணா அவர்கள் சொல்லிய கண்ணியம் கட்டுபாடு, கடமை, ஆகியவை வெறும் சிறப்பான சொல்கள் மட்டும் அல்ல. பொதுவாழ்வில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய அடிப்படையான பண்படுகள் அவை. கட்டுப்பாடு, கடமை ஆகியவை தனிப்பட்டு ஓர் அமைப்புக்குள் இருப்பவர் கடைப்பிடிக்க வேண்டிய குணநலன்கள்.

கண்ணியம் என்பது பொதுவாக மற்றவர்களுடனும், அதிலும் சமுதாயத்தில் - அரசியலில் கலந்து கொள்ளும் அனைவருடனும் ஒருவருக்கொருவர் காட்டிடும் மதிப்பு, மரியாதை என்பனவற்றைக் குறிக்கும். வேறுபட்ட கட்சிகள், மாறுபட்ட வெறுப்போ, விரோதமோ இல்லாமல், எதிர் நிற்பவர்களையும் நண்பர்களாகப் பாராட்டும் தன்மை பொதுவாழ்வில் மிகவும் தேவையான ஒரு பண்பாடு ஆகும்.

எதிர்த்து நிற்பவர்கள் நண்பர்களாக மாறலாம்; நண்பர்களாக நீண்ட காலம் இருந்தவர்கள் கடும் எதிர்ப்பாளர்களாகவும் மாறக்கூடும். தனிப்பட்ட எதிர்ப்பு - நட்பு ஆகியவற்றைக் கடந்து சமுதாயத்தில் ஒரு வகை நிலையான பண்பாடு நீடித்து இருக்கவேண்டும் அதுதான் கண்ணியம்.
வெறுப்பும், வேதனையும் இழிவுபடுத்துவதும் பழி தூற்றுவதும் கட்டுப்பாடான பிரச்சார சாதனைகளாகக் கருதப்படும் அரசியலில், ஒவ்வொரு கட்டத்திலும் தமது கண்ணியத்தையும், மாற்றானின் கண்ணியத்தையும் மறவாத பெருந்தன்மை படைத்தவர் அண்ணா அவர்கள். மாற்றான் தோட்டத்து மலருக்கும் மணம் உண்டு என்று புதிய கருத்தோட்டத்தை அவர் வகுத்தார். தோட்டங்களில் மலர் பூத்துக் குலுங்கும் செடி கொடிகள் பல இருக்கின்றன. ஆனால், செடி, கொடிகளில் மலர்கள் மட்டும் முளைப்பதில்லை; மலர்கள் எடுக்க வருபவனின் கரத்தில் முள்தான் முதலில் வரவு கூறும். முட்களை நீக்கி வைத்துதான் மலர்களை எடுக்க வேண்டும். அதிலும், மலர்களைக் கொய்வதிலும் ஒரு வழிமுறை தேவை. மெதுவாகத் தொட்டால் மலர் கைக்குள் வராது; அழுத்திப் பிடித்தால் மலர் கசங்கிவிடும். மலர் ஒரு வெண்புறா போன்றது. புறாவை மெதுவாகப் பிடித்தால் பறந்துவிடும்; கடுமையாக அழுத்திப் பிடித்தால் புறா இறந்துவிடும். முள்ளை நீக்கி மலர் எடுக்கும் முறையைப் போல, மாற்றாரையும் தம் வயப்படுதத ஏற்பட்ட மென்மையான அணுகுமுறைதான் கண்ணியம்.

குற்றங்களை நீக்கி, குண நலக்களைப் பாராட்டும் உள்ளம் அண்ணாவிடம் இருந்தது. எளிதான, அதே சமயம் உறுதியான முறையில் அவர் கையாண்ட பேச்சும், எழுத்தும், குடும்பப் பாசத்துடன் கழகத்தை வளர்த்த விதமும், மலர்ந்த முகத்துடன் நகைச்சுவைப் பேச்சுடன் தனிப்பட்ட ஒவ்வொருவரிடமும் அவர் காட்டிய நேசமும், அவரை கழகத்தில் இருந்த ஒவ்வொருவருடைய அண்ணனாக மட்டுமல்ல, தமிழகத்தின் ஒப்பற்ற அண்ணலாக, இறுதியில் தமிழக அரசியலில் புதியதொரு சகாப்தத்தை உருவாக்கிய ஆற்றல் மிகு தலைவராக முதல்வராக, ஆக்கின.

மூடத்தனத்தில் முடைநாற்றம் வீசும் சமுதாயக் காட்டில், ஆட்டிவைத்த மூடநம்பிக்கைகளை, படிந்துவிட்ட சமுதாய அநீதிகளை நீக்குவதற்கும், அண்ணா கையாண்ட முறை நயமான முறையில் மக்களைத் தம் பக்கம் ஈர்த்த வகைதான். மதங்களில் விதிக்கப்பட்ட சம்பிரதாயங்களும், சடங்குகளும் சாதி வேற்றுமைகளும் தலைவிதிக் கட்டாயங்களும், வெறும் தத்துவ விசாரணை மூலம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. புராணங்கள், இதிகாசங்கள், கதைகள், நாடகங்கள், தெருக்கூத்துகள், காலட்சேபங்கள், பாடல்கள், சிற்பங்கள், கோயில்கள், தேர் திருவிழாக்கள் என கவர்ச்சியான முறைகள் மூலம் மதங்களின் நம்பிக்கை மக்களிடம் வேரூன்றிவிட்டன.

மூட நம்பிக்கைகளில் இருந்து மக்களை மீட்கவும், அதே வகையில் நாடகம், கதை, இசை, இலக்கியம் ஆகியவற்றுக்கு அண்ணா முக்கியத்துவம் தந்தார். புராணக் கதைகளில் உள்ள சீர்கேடுகளை - அவமானங்களை வெளிப்படுத்தவும், மதங்களின் பெயரால் நடைபெறும் அநீதிகளை அம்பலப்படுத்தவும் அவர் எழுதிய கதைகள், நாடகங்கள் தமிழ் இலக்கியத்தில் புதிய போக்கை உருவாக்கின. ஒவ்வொரு சடங்கிலும் சம்பிரதாயத்திலும் உள்ள அலங்கோலங்களை கேட்போர் அவற்றை எள்ளி நாகையாடும் வகையில், சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கும் ஆற்றலை அண்ணா அவர்கள் மிகவாகக் கையாண்டார். தாம் எழுதிய நாடகங்களில் அவரே பங்கேற்று நடிக்கவும் அண்ணா தலைப்பட்டார்.

நோய் நடி, நோயின் முதல் நாடி, அது தணிக்கும் வாய்நாடி, சமுதாய நலிவைப் போக்கும் மருந்தை பெரியார் தயாரித்தார். அது நல்ல மருந்துதான். ஆனால், கசப்பான மருந்து. அண்ணா அந்த மருந்தைத் தேனில் கலந்து இனிக்கும்படி செய்தார்!

ஒரு சமயம் சந்திரோதயம் நாடகத்தை முடித்துக்கொண்டு காஞ்சிக்கு அண்ணாவும் நாங்களும் திரும்பிய பொழுது, தொத்தா - அவரின் சிற்றன்னை - அவர்கள், என்ன இது? அரிதாரம் பூசிக்கொண்டு நடிக்கவா உன்னை எம்.ஏ. வரை படிக்க வைத்தோம். நீ கெட்டது மாத்திரமல்ல. படித்த இந்தப் பிள்ளைகளையும் கெடுத்துக் கீரை வழியாக்கிவிட்டாயே? என்ற கண்டித்தார். அண்ணா சிரித்துககொண்டே, கடைந்த கீரை உடம்புக்கு நல்லது என்ற டாக்டர் சொல்கிறாரே, தெரியுமா? என்று சமாளித்தார்.

ஒவ்வொரு கட்டத்திலும் சோதனைதரும் கடினமான சூழ்நிலையிலும், அண்ணா காட்டிய பொறுமை, ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டால் அதனால் ஏற்படக் கூடிய சாதக - பாதங்களில் எல்லைகளை ஆராய்ந்து பார்த்து, அனைவரின் கருத்துகளையும் மிக நுணுக்கமாகக் கேட்டு, கடைசியில் ஒரு முடிவை எடுப்பார். முடிவை எடுக்கும் வரை அவர் படும்பாடு அருகில் இருப்பவர்களுக்கு அதிகமாகத் தோன்றும். கடுமையான சர்ச்சைக்குப் பிறகு எடுத்த முடிவை அவர் விளக்க ஆரம்பிக்கும்பொழுது, அவர் கூறுவது மிகத் தெளிவாக அனைவரையும் ஒத்துக்கொள்ள வைக்கும் முறையில் எளிதாக இருக்கும். அவருடைய பொறுமையும், முடிவெடுக்கும் முன் அனைத்துக் கோணங்களையும் ஆராயும் தன்மையும், அடிப்படையான கண்ணியம் காக்கும் முறைமையும் அளவிடற்கரியவை என்று கூறவேண்டும். பெரியார் அமைப்பைவிட்டு வெளியேறவேண்டி வந்த சமயம். அது அண்ணாவிற்குத் தனிப்பட்டு மிகுந்த வேதனையையும் அவரைச் சார்ந்தவர்களுக்கு பெரிய அரசியல் சோதனையையும் தந்தது. பெரியாருக்கு எதிராக அல்லது எதிர்ப்பாக எதையும் செய்ய அண்ணா விரும்பவில்லை. கழகத் தோழர்களிடம் மூன்று மாதங்களுக்கு மேலாக அடுத்து அடுத்து பேசி, அவர்களின் ஒவ்வொருவரின் கருத்துகளையும் உன்னிப்பாகக் கேட்டு, அவர்கள் அனைவரின் ஆதரவையும் பெற்ற பின்புதான் திராவிட முன்னேற்றக் கழகம் உதயமாவதை அண்ணா அறிவித்தார். அந்த சமயத்திலும், கண்ணியம் சிறிதும் குறையாத வகையில், புதிய கட்சியின் நிலைமையை அண்ணா விளக்கினார்.

ராபின்சன் பூங்காவில் 17 செப்டம்பர் 1949 புதிய கழகம் குறித்து அவர் வைத்த கருத்துகள் காலப்போக்கில் மணம் குறையாத வாடா மல்லிகளாக இன்றும் விளங்குகின்றன. அவர் கூறியவற்றில் முக்கியமானவை:-
பெரியாருடனும், திராவிடர் கழகத்தவருடனும் பேதம், பிளவு, மனத்தாங்கல், சண்டை, சச்சரவு, வம்பு, வழக்கு கூடாது என்பது எங்கள் கொள்கை. அதன் விளைவுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோற்றமாகும். திராவிடர் கழகம் எதற்காகப் பாடுபட்டு வந்ததோ, எவருடைய நன்மைக்காக - எந்தச் சமுதாயத்தின் ஏற்றத்துக்காக - எந்த ஏழை எளியவர்களை வாழவைக்கப் பணிபுரிய வந்ததோ, அவற்றை எல்லாம் முரண்பாடின்றி முறைப்படி நிறைவேற்ற திராவிட முன்னேற்றக் கழகம் பாடுபடும்.

1935-ஆம் ஆண்டிலிருந்து நான் அறிந்த தலைவரும் எனக்குத் தெரிந்த தலைவரும் பெரியார் ஒருவரேதான். என் வாழ்நாளில் நான் கண்ட தலைவரும் நான் மேற்கொண்ட தலைவரும் ஒருவர்தான் - அவர்தான் பெரியார். அந்தக் காரணம் பற்றித்தான், திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தலைவர் என ஒருவரை ஏற்படுத்தவில்லை. நான் மிக மிகத் தெளிவாகவே கூறிவிடுகிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் எந்த விதத்திலும் திராவிடர் கழகத்துக்கு எதிரானது அல்ல, எதிர் நோக்கம் கொண்டதும் அல்ல. கொள்கை ஒன்றே; கோட்பாடும் ஒன்றே.

இரண்டு பூங்காக்களில் பூக்கும் பூக்கள் - காய்கள் - கனிகள் திராவிடத்தின் ஒட்டு மொத்த எழுச்சியையும், மலர்ச்சியையும்தான் குறிக்கும். இரண்டு பூங்காக்களும் தேவை. ஒன்றோடொன்று பகைக்கத் தேவையில்லை. அதற்கான அவசியமும் இல்லை. எந்தப் பூங்காவில் பூக்கள் பூத்தாலும், இறுதியாக அவை மாலை ஆகப்போவது திராவிடத்துக்குத்தான் என்ற நல்ல எண்ணம் எல்லோருக்கும் ஏற்படவேண்டும்.

இரண்டு கழகங்களும் இரட்டைக்குழல் துப்பாக்கியைப்போல் இருந்து பணியாற்ற வேண்டும்.

நமது கையில் காசில்லை; அதே நேரத்தில் நமது மனத்தில் மாசில்லை. எனவே, நமது தூய கொள்கைகள் வளரும், வெற்றி பெறும் என்ற உறுதிப்பாடு எனக்கு உண்டு.

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai