அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும்
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பாகம் -24

அவருக்கும் எனக்கும் நேரடித் தொடர்பு மறக்க முடியுமா!
(பா. வாணன்)

ஒரு நாட்டின் வளம் எதில் மிளிர்கிறது?

அதன் அபரிமிதமான செல்வத்திலா? அல்லது பகைவர்கள் நடுங்கும் படைபலத்திலா? இல்லை, நாடெங்கிலும் வானளாவ நிற்கும் கூட கோபுரங்களிலா?

இல்லை! இவைகள் எதிலும் ஒரு நாட்டின் வளம் பிரகாசிப்பது இல்லை என்கிறார், மக்களை இருட்டறையிலிருந்து வெளிச்சத்துக்கு அழைத்து வந்த மகான்களில் ஒருவரான மார்ட்டின் லூதர்.

ஒரு நாட்டினுடைய வளம் அந்த நாட்டிலே இருக்கும், பண்புள்ள மக்களின் எண்ணிக்கையைப் பொருத்துத்தான் இருக்கும். அறிவாற்றல் பெற்று, தன்னலம் கருதாது மக்களுக்கு உழைக்கும் பண்பாளர்கள்தான் அந்த நாட்டின் செல்வம், படை, பலம் எல்லாம். எந்த நாட்டிலே பண்பும் படிப்பும் நிறைந்த மக்கள் வாழ்கின்றனரோ, அந்த நாடே முன்னேறும்! என்கிறார், மார்ட்டின் லூதர்.

வரலாற்றின் ஆரம்ப காலம் முதற்கொண்டே பல்வேறு நாடுகள் வளர்ந்து புகழோடு விளங்கிய நாட்களையும், பின் அவைகள் அழிந்து வரலாற்றுப் பாதையிலிருந்து ஒதுங்கிப் போனதையும் ஆராயும்போது, மார்ட்டின் லூதரின் வாக்கியங்கள் எவ்வளவு அர்த்தம் செறிந்தவை என்பது விளங்கும்.

வரலாற்றின் ஆரம்பப் பக்கங்களிலே ஜெகஜ்ஜோதியாக விளங்கும் எகிப்து நாடு பிற்காலத்தில் வெறும் பாலைவனமாக நிற்பது ஏன்?

கணிதத்திற்கே இலக்கணமான பெரும் பெரும் ஸ்தூபிகளையும், கட்டடங்களையும் எழுப்பி எகிப்திய மக்கள், கடைசியில் பாலைவனத்தில் பராரிகளாய் வீடு, வாசல் இன்றிச் சுற்றித்திரியும் பரிதாபத்துக்குரியவர்களானார்கள்.

எல்லா வளங்களும் கொழித்து, இன்றைய நாகரீக வாழ்விற்கே அடிகோல் நாட்டிய கிரேக்கத்தின் கதி என்னவாகியது? மனிதனின் அறிவு முதிர்ச்சி பெற்ற நிலையில், எவைகளைக் கண்டு பிடித்தானோ, அவ்வளவுக்கும் அஸ்திவாரமிட்டனர் கிரேக்க அறிஞர்கள், அந்த நாட்களில்.

தத்துவத்தை வாரி வழக்கிய சாக்ரடீஸும் பிளேட்டடோவும் இருந்த நாடு, அது.

சூரியனுக்கும், பூமிக்கும் உள்ள தூரத்தை கணக்கிட்டவர்கள் கிரேக்க விஞ்ஞானிகள்.

சந்திரனின் தட்பவெட்ப நிலை எப்படியெப்படி இருக்கும் என்று அநுமானம் செய்தவர்கள்.

நட்சத்திரங்களின் நிலையைத் தெளிவாகத் தெரிந்து கொண்டவர்கள்.

மருத்துவத்தை அறிந்து இருந்தார்கள், அவர்கள் இன்றைக்கும் நமது டாக்டர்கள் ஹிப்போக்கிரடிக் பிரமாணம் தானே எடுக்கிறார்கள்!

இருந்தும் கிரேக்க நாகரீகமும், நாடும் தாழ்வடையக் காரணம் என்ன?

கிரேக்கருக்குப் பின்னால் வந்த ரோமானியர்களின் திறமையும் சிறப்பானதே. அவர்களுடைய கப்பற்படை, கடலைப் பற்றிய அறிவு, எதுவும் இன்றும் போற்றுதற்குரியதே. அவர்கள் அரசியல் முறைதான் இன்று ஜனநாயகமாக மிளிர்கிறது. ரோமாபுரியின் அழகை முன் மாதிரியாக வைத்துத் தான் உலகத்தின் பல நாடுகளிலும் நகரங்கள் எழுப்பப்பட்டன. நாகரீகத்தின் உச்சக் கட்டத்திலே வாழ்ந்த ரோமாபுரி வீழ்ந்து போனதின் காரணம் என்ன?

இதைத் தொடர்ந்து வரலாற்றில் வரிசையாக வெவ்வேறு நாடுகளும் ஒரு சில நூற்றாண்டுகள் பிரகாசமாக இருந்து திடீரென்று மறைந்துபோக காரணமென்ன?

மார்ட்டின் லூதர் கூறியது போல, ஒரு நாட்டிலே பண்பும், தியாக உணர்வும் கொண்டவர்கள் குறையும் போது அந்த நாடு தாழ்ந்து போகிறது! வரலாற்றைத் திரும்ப திரும்பப் படிக்கும்போது, நமக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிவது இதுதான். இதையேதான் வரலாற்று ஆசிரியர் டாயின்பி அவர்களும் தன்னுடைய ஆராய்ச்சி நூலில் எழுதியிருக்கிறார்.

அந்தக் காலத்தில், அதாவது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் அவரோடு நெருங்கிப் பழக ஆரம்பித்த அந்தக் காலத்தில், இந்தக் கருத்துக்களை அடிக்கடி, அழகாகக் கூறுவார்கள், அறிஞர் அண்ணா அவர்கள்.

நம்முடைய நாடும் வளமாக வேண்டுமென்றால், இங்கும் பண்பும் அறிவும் கொண்ட மக்கள் வளர வேண்டும். அப்பொழுதுதான் நாட்டில் சுபிட்சம் ஏற்படும். அப்படி ஏற்பட்ட பிறகுதான் நல்வாழ்வு நிலைக்கும் என்று அடிக்கடி கூறுவார்கள்.

பிரெஞ்சு நாட்டில், இன்று தேவை, கருத்தாழம் கொண்ட தாய்மார்கள்! என்று கதறினானாம் நெப்போலியன்; அதுபோல நம் நாட்டிலே இன்று அறியாமை இருளில் தள்ளப்பட்டிருக்கும் மக்களைத் தட்டியெழுப்பத் தொண்டர்கள் தேவை என்றுதான் அவர் கூறினார்.

அறியாமை இருளிலிருந்து விடுபட்டு, தன்னலம் கருதாது உழைக்கும் சமுதாயம் உருவானால் இந்த நாடு முன்னேறத் தொடங்கிவிடும். நல்வாழ்வு தோன்றும், அதற்கு பிறகு உலகில் எந்த நாடும் இதற்கு இணையாக இருக்காது என்று எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பார்.

அந்த நாட்களிலே நானும் செழியனும், கருப்பண்ண முதலித் தெரு வீட்டின் மாடியிலே விடிய விடிய, அவரோடு விவாதித்து, தெளிவு பெற்றது இந்த பிரச்னையைப் பற்றிதான்.

கண்ணியத்தோடு மக்கள் வாழ வேண்டும். கடமையைச் செய்ய வேண்டும். கட்டுப்பாடு குலையாமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். இக்கருத்துக்களை அடிக்கடி கூறுவார். அதையே வாழ்க்கை மந்திரமாகவும் கொண்டார்.

கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்று, ஒரு சில பொது நலமேடையிலே பேசிவிட்டு, தேர்தலில் நின்று ஜாதி, குலம், மதம் எதையாவது கூறி வோட்டுக்கேட்டு, சட்டசபைக்குள் நுழைந்து ராஜ தத்திரங்கள் செய்து, மந்திரி சபையில் இடம் பிடித்து, முடிந்தால், பிரதம மந்திரியுமாகலாம் என்று வாழ்க்கையிலே திட்டம் தீட்டிக் கொண்டு அரசியலில் நுழைந்தவரல்ல அவர்.

பதவியில் தான் அமருவேன் என்று ஒரு நாள் கூட எண்ணிப் பார்த்தவலல்ல. அந்த நாட்களில், சென்னை சர்க்கார் அலுவலகங்களிலிருந்து சிலர், தங்கள் பைல்களைக் கொண்டுவந்து காட்டி சில விஷயங்களைப்பற்றி விவாதிப்பார்கள். அப்பொழுது கூட நாம் யாராவதுதான் அந்த பைல் பார்க்க வேண்டுமே தவிர அவர்கள் அவைகளை திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்.

இந்த நாட்டு மக்கள் நீண்ட உறக்கத்திலிருக்கிறார்கள், அவர்களைத் தட்டியெழுப்புவதில் நாமும் நமது பங்கைச் செய்ய வேண்டுமென்ற ஒரே எண்ணம்தான் கடைசிவரை மக்களைச் சிந்திக்க வைக்கும் எழுத்தோவியங்களைத் தீட்ட முடிந்தது. உணர்ச்சி பொங்க வைக்கும் அளவில் தொடர்ச்சியாகப் பேச முடிந்தது.

அவர் எழுதிய எழுத்துக்களுக்கும் எனக்கும் நேரடியான தொடர்புகள் சில உண்டு. அவைகளை நினைக்கும்போது எல்லையில்லாத பெருமையும், அவர் இன்று இல்லையே என்ற துக்கமும் வருகிறது.

கௌதம புத்தரைப் பற்றி விரிவாக எழுதிக்கொண்டே வரும் பிரிட்டிஷ் பேராசிரியன் வெல்ஸ், கடைசியாக இந்திய மக்கள் புத்தரைக் கடவுளாக்கி, சிலைவைத்து, கோவில்கட்டி விட்டு, அவர் கூறிய அறவுரைகளை மறந்துவிட்டார்கள்! என்ற முடிக்கிறார், இதைப்பற்றி ஒரு நாள் விவாதித்துக் கொண்டிருந்தோம், விடிந்துவிட்டது. மாலை மறுபடியும் அவரைப்போய்ப் பார்க்கப் போனால், காந்தியார் மகாத்மாவாகாமலிருந்தால்...! என்ற அருமையான கட்டுரையை எழுதியிருந்தார்கள், மிகப் பெரிய தத்துவத்தை மிக அழுகாக எடுத்துக் காட்டிய கட்டுரை அது.

இதைப் போலவே, பிவர்லி நிக்கோலஸ் எழுதிய இந்தியாவின் மீது தீர்ப்பு என்ற நூலை வாசித்து விட்டு விவாதித்துக் கொண்டிருந்தோம். என்னதான் இருந்தாலும், இவ்வளவு கேவலமாக, ஒரு வெள்ளையன் நம்மைப் பற்றி எழுதுவது, பண்பாகாது என்பது என் வாதம், அவர் அது சரி என்று ஒத்துக்கொண்டார். ஆனால் அதே நேரத்தில் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவல்லவா என்றார்.

நம்முடைய வீட்டினுள்ளே சாக்கடை நாற்றமெடுக்கிறது என்றால், அதைக் கழுவ முயற்சிப்பதா, நீயார் அதைச் சொல்ல என்று கூறிக் கொண்டிருந்தால் என்ன பலன்? பண்பைக் காட்டி பழைமையைப் பாதுகாக்க நினைக்கிறார்கள், சனாதனிகள் என்று விளக்கிக் காட்டினார்கள், அண்ணா. அதன் விளைவே அவர் நிக்கோலாஸ் தீர்ப்பு என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகள்.

ஒரு சமயம் காங்சிபுரம் செல்வதற்கு பீச்சு ஸ்டேஷனில் நின்றுக் கொண்டிருக்கிறோம். தெரிந்த நண்பர் ஒருவர் தன் திருமணப் பத்திரிகையை எனக்குக் கொடுத்துப் போனார். அதில் விவாத சுபமுகூர்த்தப் பத்திரிகை! என்று போடப்பட்டிருந்தது. இதை அண்ணாவிடம் வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருந்தோம். பிறகு அவர் காஞ்சிபுரம் போய் விட்டார். நான் அறைக்கு வந்துவிட்டேன். அந்த வாரம் திராவிட நாட்டில் வேலை போச்சு என்ற கதை மிக அழகாகவும், அருமையான கருத்துக்களோடும் வந்திருந்தது, அச்சுக்கோப்பவன் செய்த பிழைகளுக்காக அவன் வேலையிலிருந்து நீக்கப்பட்டதும், அவன் செய்த சிறு பிழைகளில் ஏற்பட்ட கருத்து மாற்றங்கள் படியே சம்பந்தப்பட்டவர்கள் இருந்ததை அவனே கண்டுபிடிப்பதையும் மையமாகக் கொண்டு எழுதப் பெற்ற கதை அது. இப்படி எந்தச் சிறு சம்பவத்தையும் மக்களுடைய அறிவை வளர்க்க எப்படி பயன்படுத்தலாம் என்ற சிந்தனையோடு இருந்தவர் அவர்.

லெனினைப் பற்றிக் கூறும்போது, அவருக்கு சோஷலிசத்திலிருந்த அளவற்ற பற்றைப் பெருமையாகக் கூறுவர், வரலாற்று ஆசிரியர்கள். அந்தத் தனிப்பட்ட ஒரு மனிதனின் வெறியால்தான் ரஷ்யப் புரட்சி வெற்றி பெற்று, நிலைபெற்றது என்று எல்லா நாட்டு வரலாற்று ஆசிரியர்களும் ஒத்துக் கொள்கிறார்கள். அதுபோல், இந்த நாட்டிலே மக்கள் விழிப்புணர்ச்சி பெற்று புதுவாழ்வு பெறவேண்டுமென்பதில் இரவும் பகலும் குறிக்கோள் நிறைவேற யார் யார் நம்மோடு வருவார்கள் என்று பார்ப்பாரே தவிர யார் நமக்கு விரோதிகள் என்ற ஒரு நிமிஷம் கூட யோசிக்கமாட்டார்.

தமிழகத்தில் இருக்கும் பெரும் குறைபாடே, அரசியல் தலைவர்கள் ஒருவருக்கொருவர் தூற்றிக் கொண்டு எல்லோரும் மக்கள் முன்னிலையில் தாழ்வாகிறார்கள் என்பதுதான், என்று அடிக்கடி கூறுவார். முடிந்தவரையில் எல்லோரையும் அணைத்துப்போக வேண்டுமென்பார். அதையே அவர் கடைசி வரை கடைபிடித்தார்.

பொது வாழ்க்கைக்கு வந்தவர்களே மிகக் குறைந்தவர்கள் அவர்களை நாம் குற்றம் கண்டு பிடித்துக்கொண்டிருந்தால், கடைசியில் பொதுத் தொண்டு புரிய ஆட்கள் வரமாட்டார்கள் என்பார்.

பெரும்படியாக தவறுகள் செய்யும் தொண்டனை, மக்களே மறுதலித்துவிடுகிறார்கள்
என்பது அவர் சித்தாந்தம்

பாரதிதாசனுக்கு பணமுடிப்பு கொடுக்கும் விழா நடக்கும் போதுதான் இந்தப் பிரச்னை மிகவும் விவாதிக்கப்பட்டது. அந்த நேரத்திலே பெரியார் அவர்கள் இந்த விழா நடத்துவதை விரும்பவில்லை. வேறுயாராவது தமிழகத் தலைவரைக் கூப்பிட்டுத் தலைமை வகிக்கச் சொல்லலாம் என்றால், எல்லோரையும் ஏதாவது ஒரு குறைபாடு உள்ளவர்கள் என்ற நாமே கூறி வந்திருக்கிறோம்.

 

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai