அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும்
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பாகம் -22

அண்ணா
(சி.பி.சிற்றரசு)

இந்தப் பெயர் திராவிடமெங்கும் இன்று கேட்கப்படும் பெயர். பேச்சு, கூட்டம் இவ்விரண்டுக்கும் இணைப்புப் பாலமாக அமைந்திருக்கிறது இந்தப் பெயர். அண்ணா என்று ஆசையாக அழைப்பதற்கேற்றவாறு இடுகுறிப் பெயரே அண்ணாதுரை என்றமைந்திருப்பதால் ஆசையாலும் வேகத்தாலும் சிக்கனத்தாலும் சுருங்கி அண்ணா என்ற நிலையில் அமைந்துவிட்ட பெயர்.

எல்லா கட்சிக்காரர்களும் விரும்பிக் கேட்கக்கூடிய நிலையிலே பேசக்கூடிய ஆற்றல் பெற்றவர் என்பதை அனைவருமே ஒத்துக்கொள்வார்கள். எழுத்தும் அப்படித்தான். தமிழுலக எழுத்தும் பேச்சும் இவரால் ஏற்றங்கொண்டதோடன்னியில் புதிய பொலிவையும் தங்க நிறத்தையும் பெற்றதென்றால் மிகையாகாது.

அவர் பேசத் தொடங்கிய பிறகுதான் தமிழுக்கு அடுக்கு மொழி என்று எண்ணவேண்டி வந்தது பலருக்கு. ஆங்கிலமும் அப்படியேதான் அவர் நாவில் நடமாடும். ஈட்டி கொண்டு குத்தும். எரிசொற்கள் அவர் பேச்சில் இருக்கவே இருக்காது. சிறந்த தர்க்கவாதி, எந்த மன்றத்திலும் எந்தப் பொருளைப்பற்றியும் பேசும் ஆற்றல் பெற்றிருக்கிறார்.

சட்ட மன்றத்தில் இவர் புகுந்த பிறகுதான் கழக நண்பர்களேயல்லாமல் மற்ற பொதுமக்களும் சட்டசபை நடவடிக்கையைக் கவனிக்க வேண்டுமென்ற ஆசைக்காளானார்கள். அதன் காரணமாகவே சட்டசபைக் கூட்டத்யே மாற்ற வேண்டி வந்தது என்றால் மிகையாகாது.
அவரிடத்தில் வேலையிருந்தாலும் வேலையில்லாவிட்டாலும் ஒரு தரம் பார்க்கவேண்டுமென்ற ஆசை பலருக்குத் தூண்டும். எப்போதும் அவரைச் சுற்றி நான்கைந்து பேர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள்.

திராவிடக் கழகமாக இருந்த மிகப் பலர் திராவிட முன்னேற்றக் கழகமாக மாறினார்கள் என்பதற்கு அவரே முழுதும் காரணமென்பது 1949-க்குப் பிறகு கட்சிக்கு வந்தவர்களின் நம்பிக்கை, ஆனால் அவருக்குப் பலமாக, தூண்டுகோலாக மிகப்பலரும், பெரும்பாலான பேச்சாளிகளும் காரணமாக இருந்தார்கள் என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள்.

நாம் பிரிந்தவுடனே, தன்னைக் கொல்ல அண்ணாதுரை சதி செய்கிறார் என்று பெரியார் அறிக்கைவிட்டவுடனே பெரியார் மேல் வழக்குபோடவேண்டுமென்று தூண்டியவர்கள் யார் யார் என்பது அவருக்குத் தெரியும். அவர் கொஞ்சத்தில் கூட வழக்குப்போட இணங்கவே இல்லை. பெரியார் பேரிலா வழக்குப் போடுவது என்று தயங்கிக் கொண்டிருந்தார். பெரியாரின் அறிக்கையைச் சாக்காக வைத்துக்கொண்டு எவனாவது சதி செய்துவிட்டால் பழி அண்ணாவின் மேல் வருமே என்று கருதி உடனடியாக வழக்குப் போடச் சொன்னவர்களில் நானும் ஒருவன்.
நான்தான் கட்சியிலேயே கடைசிக் கோழை என்று அடிக்கடி மேடையிலே சொல்லிக்கொள்வார். இதைக் கேட்கவே நமக்குச் சங்கடமாக இருக்கும். தமிழன் எப்போதும் கோழையாக இருந்ததில்லையே, ஏன் இப்படி தன்னடக்கம், சபையடக்கம் என்பதற்காக இப்படிச் சொல்கிறார் என்று. எதையும் தாங்கும் இதயம் உண்டு, என்பது அவர் கழகத்திற்குத் தந்த மூலமந்திரம். இதை ஒப்புக்கொள்ளுகிறவர்களில் நூற்றுக்கு நூறு அவரைத்தான் சொல்லலாம். மற்றவர்களுக்கு எப்படியிருந்தாலும் சதவிகிதங்கள் குறைந்துதானிருக்கும்.

அவருக்கு அந்த பொறுமையுண்டு. அது இயற்கையிலேயே அவரிடம் வளர்ந்திருக்கிறது. நமக்கு அந்த அளவு இல்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

அவருக்கும் அந்த எல்லையற்ற பொறுமையினாலேயே சில அசம்பாவிதங்களை முன் கூட்டித் தடுத்து நிறுத்தாமல், விளைவுக்குப் பிறகு சமாளித்துவிடுகிறார்.

தாமதம்
எப்போதும் கூட்டங்களுக்குத் தாமதமாகவே வருகிறார். வரலாற்றிலே இவர் ஒருவரைத்தான் நாம் இப்படி சந்திக்கிறோம். இந்த நிலை பலருக்கு எரிச்சலை உண்டாக்குகிறது. இவர் வந்து பேசிவிட்டுப் போனபின் தீர்ந்துவிடுகிறது. எப்போதாவது அவர் வரட்டும். வந்து பேசினால் சரி. அதுவே போதும் என்று மணிக்கணக்காக நின்று கெண்டிருக்கிறார்கள் அந்த அண்ணா என்ற பெயரின் முன்னாலே. அதுவே அந்தப் பெயருக்கு ஒரு பெருமைதரக்கூடியதுதான்.

ஏன் தாமதமாக வருகிறீர்கள்? என்று அவரை யாருமே கேட்கவில்லை என்றெண்ணாதீர்கள். கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன காரணங்கள் ஒப்புக்கொள்ளக் கூடியதாக இருக்கின்றன. அவர் எந்தக் கூட்டத்திலும் கடைசியாகப் பேசுபவர். அதனால்தான் தாமதமாக வருகிறேன் என்கிறார். இரண்டாவது அவர் முன்கூட்டியே வந்து உட்கார்ந்துவிட்டால், அவருக்கு முன் பேசவேண்டியவர்களைப் பேசவிடாமல் கைதட்டி உட்காரவைத்துவிடுவார்கள். அதனால் முன் பேச்சாளி வருத்தப்படுகிறார். அதைத் தவிர்க்கவும் அவர் காலங்கடந்து வரவேண்டியிருக்கிறது. சரி, நிகழ்ச்சிகளில் பேச்சாளராக வருகிறபோது மேலே சொன்ன காரணங்கள் பொறுத்தமாக இருக்கலாம். அவரே தலைமை வகித்து நடத்துகின்ற நிகழ்ச்சிகளுக்கும் அப்படித்தானே வருகிறார் என்றால் 98 கூட்டங்களுக்கு தாமதமாகப் போய் ஒரு இரண்டு கூட்டங்களுக்குச் சரியாகப் போகவேண்டுமானால் எப்படி முடியும். ஆகவே அவர் தாமதமாக வந்தார் என்றால் மற்றவர்கள் சரியாக வந்த மாதிரிதான். அவர் பேச்சின் திறன் எல்லாவற்றையும் மறைத்து, மக்களை மறந்துவிடச் செய்கிறது. தவறு செய்கிற யாரையும் நேரில் கண்டிக்கிற குணம் அவரிடம் அறவே இல்லை என்று சொல்லிவிடலம். இதற்குப் பல காரணங்கள் இருக்கக் கூடுமென்று நாமே யூகிக்க வேண்டியிருக்கிறது.

ஒன்று, குடும்பபப்பாசம், இரண்டு; நாளா வட்டத்தில் எல்லாம் சரியாய்ப் போய்விடும். மூன்று, அண்ணா நம் தவறை கவனிக்கவில்லை. ஆகவே அவர் கண்டிக்கவில்லை, ஆதலால் இனியும் தவறு செய்யக்கூடாது என்று அவரவர்களே நினைத்துத் திருந்திவிடுவார்கள், நமது மௌனத்தின் மூலம் என்று அவர் எதிர்பார்ப்பது. நான்கு, கண்டித்தால் அவர்கள் மனவருத்தப்படுவார்களோ என்று நினைப்பது. ஐந்து, கண்டிக்கவும், தண்டிக்கவும் கட்சியின் சட்டங்கள் இருக்கும்போது நமக்கேன் அந்தப் பொல்லாப்பு என்று நினைப்பது.

இது சில நேரங்களில் வளர்ந்துவரும் இயக்கதிற்கு கேடு பயப்பதாயிருக்கிறது. ஆகவே அவருக்கிருக்கும் அற்றலை மிகத் தைரியமாகப் பயன்படுத்துவார் என்ற நம்மைப் போன்றவர்கள் நினப்பதில் தவறில்லையல்லவா.

கட்சிக்குப் பொதுச் செயலாளர் என்ற பெயரால் ஒருவர் உண்டு என்றாலும் அண்ணாவின் ஆணைதான் முதலிடம் பெறுகிறது என்றால், அண்ணா அந்தப் பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பதில் பயனில்லை.

ஆகவேதான் கட்சியின் வளர்ச்சிக்கு மிகத் தேவைப்படுகிற அவரது பேச்சும், எழுத்தும் போலவே நிர்வாகத் துரையிலும் அதிகக் கவனம் செலுத்தவேண்டுமென்று எதிர்பார்ப்பது இயக்க வளர்ச்சிக்கு அன்றாடம் உழைத்துக்கொண்டிருக்கிற ஒவ்வொருவருடைய நீங்காத ஆசை என்பதை எடுத்துக்காட்டவேண்டியவர்களாக இருக்கிறோம்.

நமது ஆசை
வருங்கால வரலாறு அவர் பெயரை பொறித்துக்கொள்ளவேண்டும். இப்படி ஒருவர் நேற்றுவரை இருந்தார். இனி இவரைப்போன்ற வேறொருவர் எப்போ என்று வரலாறு திராவிடத்தில் தேடவேண்டும்.

அவரைக்காண வருகிறவர்கள் இன்னின்ன நாட்களில் இந்த இந்த நேரத்தில் அவரைக் கண்டிப்பாகக் காணலாம் என்ற நம்பிக்கை பெறவேண்டும்.

எதிர்கால அரசாங்கத்துக்குடைய அவர், இந்தக் காலத்திலேயே அதன் சாயலைக் காட்டுகிறார் என்ற உவகை உள்ளம் பூக்கவேண்டும். ஆம் நிச்சயமாக நாம் இந்த நாட்டை மற்றெல்லாக் கட்சிகளைவிட அழகாக, உறதியாக, கண்டிப்பாக ஆள்வோம் என்ற நம்பிக்கை நட்சத்திரம் தோன்ற வேண்டும். இன்றில்லையாயினும், நாளை, நாளை இல்லையானாலும் மற்றோம் நாளே விடுபட்ட திராவிடத்தின் காட்சிப் பொருளாக அமைந்தாலும் அல்லது கல்லறைக்குள்ளே நாம் புகுந்துவிட்டாலும் நன்றியுள்ள உலகம் நம்மை மறக்கப் போவதில்லை. அத்தகு பேராற்றல் மிக்கபடையின் தளபதி அண்ணா வாழ்க என்று பொங்கல் பெருறாளில் வாழ்த்துகிறோம்.
(1960 - இனமுழக்கம் பொங்கல் மலர்)


இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற பேச்சாளர்! எழுத்துக்களெல்லாம் உயிரோடு நடமாடின! அமைதி எனும் தாய்பெற்றெடுத்த அருமையான குழந்தை! சோர்வுற்றிருந்த மக்களைச் சொல்லால் தட்டி எழுப்பிய வீரன்! ஜனநாயகப் படையை நடத்திச்சென்ற போர்வீரன்! தக்காரும் மிக்காருமில்லா தன்னுணர்வாளன்! இவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்ற பெருமைக்கு உரியவர்களாவோம்! வாதப் போரிலே வேரை வென்றவனும் இல்லை! இலக்கியக் கர்த்தாக்கள் இவன் பிறந்த வீட்டிலேயே அடுக்கி வைத்திருந்தனர். ஆங்கிலேயன் விடுதலையைக் காந்தியாரிடம் தந்து, ஆங்கிலத்தை இவரிடம் தந்து விட்டானோ என்று நினைக்கும் அளவுக்கு ஆங்கிலத்தில் சொற்சொல்வர்!

திக்குத் திசை தெரியாத மக்களுக்குக் கலங்கரை விளக்கம் அவர்! மனித சமுதாயம் எங்கே தொலைத்துவிட்டிருந்த விடுதலை உணர்வைத் தேடித் தந்த தீரன்! பிறர் ரசிக்கப் பேசியவனும் அவனே; பிறர் பேசுவதை ரசித்தவனும் அவனே! அவனுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. அவன் கண்படாத வரலாறுகளே இல்லை; சிறந்த ஓவியன்; திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றை ஒரு காவியமாக்கித் தந்தவன்!

கோட்டையில் இருந்தவர்கள் ஒரு காலத்தில் தன்னைச் சிறைப் படுத்தியபோதும் அதே கோட்டையில் அமர்ந்து பிறரைச் செல்வாக்கு சட்டத்தின் மூலம் தான் பெற்ற போதும் ஒரே தன்மையோடு சாயாத செங்கோலோடு, ஆடம்பரமில்லாமல், ஓர் ஏழைக் குடியானவனைப் போல் இருந்தவர்!

சிறிய குகையிலிருந்து பெருங்காடை ஆளும் சிங்கம்போல் தன்னடக்கத்தில் தொடங்கி தரணியை ஆண்டவரை இப்படியும் ஓர் எளிமையா? என்று கண்டோர் வியக்கும் வண்ணம் காலத்தை ஓட்டிய கர்ம வீரர்!

அவர் மீளாச் சூழலில் ஆழ்ந்த போது கடலெனத் திரண்டனர் மக்கள்! கண்ணீரால் கழுவினர். சாலைகளை! கண் துஞ்சாது பல்லாயிரவர் இருந்தும், பல்வேறு நாடுகளிலிருந்து மருந்துகள் பறந்து வந்தும், பல மருத்துவர்கள் புடை சூழ்ந்திருந்தும், இயற்கையின் கூற்றை வெட்டிச் சாய்க்க முடியவில்லை.

சந்திரனிலும் மனிதன் இறங்கிவிட்டான்! சாகாது இருப்பது எங்ஙனம்? என்பதை இன்னும் அறிய முடியாமல் இருக்கிறோம், பிறந்தவன் இறப்பான் என்பதுதான் உண்மை! இறந்தவன் பிறப்பான் என்பதில்லை. அதைப் பகுத்தறிவு உலகம் ஏற்றுக்கொள்வதில்லை. மதவாதிகள் சொல்கிறார்கள், நமக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. அந்த உலகத்தில் வாழ வேண்டுமென்று நினைப்பவனும் இந்த உலக வாழ்வைத் துறந்து விடுவதில்லை, வாழ்பவன் மணி அளவோடு நிற்கிறான்! எனவே பிறரை வாழ வைத்துத் தானும் வாழ்கிறவன் அவனைவிட முந்திக் கொள்கிறான்! பிறர் வாழ தன்னுடைய வாழ்வைப் பலியிடுகிறவன் அவனையும் முந்திக்கொள்கிறான்!

இதை அரசியல் ரீதியில் சொல்ல வேண்டுமானால் தனி மனிதன் வாழ்வு பலரைக் கொல்வது; அதைத்தான் மன்னராட்சி என்கிறோம், பலர் வாழச் சிலர் சாவது மக்களாட்சி என்கிறோம். இந்த அரசியல் தத்துவங்களைப் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் தனது செயலாற்றலால் மக்களைத் தட்டி எழுப்பிய மிச் சில தலைவர்களில் மிகச் சிறந்த தலைவர் அறிஞர் அண்ணா!
உலகத்தில் எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் அந்த நாடுகள் தோன்றி எத்தனை நூற்றாண்டுகளானாலும் ஒரு சிலரே என்றும் மின்னிக் கொண்டிருக்கிற, இடம் விட்டுப் பெயராத துருவ நட்சத்திரமாகத் திகழ்கிறார்கள். அமெரிக்காவை எடுத்துக்கொண்டால் அதற்கு விடுதலை தேடித்தந்த ஜார்ஸ் வாஷிங்டன், அரசியல் சாசனத்தை எழுதித் தந்த ஜெபர்சன், நீக்ரோக்களுக்கு விடுதலை அளித்த ஆப்ரகாம் லிங்கன், கென்னடி போன்றவர்களே, மின்னி கொண்டிருக்கிறார்கள், பிரான்ஸ் நாட்டை எடுத்துக்கொண்டால் மன்னனுக்கு முடிசூடுவதற்காக புரவியேறி போர்க்களம் சென்ற ஜோன் அப் ஆர்க், எழுத்து வேந்தன் எமிலிஜோலா, சமுதாய ஒப்பந்தத்தை எழுதித் தந்த ரூசோ, பதினான்காம் லூயிமன்னனைக் கண்டு வழக்குரைக்க பெண்கள் படையோடு சென்ற ஜோன் மங்கை தெராயினி இவர்கள்தான் வரலாற்றை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தாலியை எடுத்துக்கொண்டால், மாஜினி, கரிபால்டி, கேவோ இவர்கள் காட்சி அளிக்கிறார்கள்! ரஷ்யாவை எடுத்துக்கொண்டால், பொதுவுடைமைத் தத்துவத்தை எழுதித் தந்த காலர்மார்க்ஸ், புரட்சி செய்து ஜாரை வீழ்த்தி புதுயுகம் கண்ட லெனின் சாகாவரம் பெற்றிருக்கிறார்கள்! வியட்நாமை எடுத்துக்கொண்டால், ஓசிமின்! அயர்லாந்தை எடுத்துக்கொண்டால் ஏமன் டிவேலராவ்! சமூக சீர்திருத்தம் பேசி, மூடப்பழக்க வழக்கங்களை முறியடிக்கக் கிளம்பிய இங்கர்சால், ஜான்ஹஸ் சவனரோலா, தென்னாட்டிலே பெரியார், ஒரு புதிய மதத்தையே உண்டாக்கிய மார்டின் லூதர், இந்தியாவை எடுத்துக்கொண்டால் காந்தியார், நேரு! தென்னகத்தில் மறுமலர்ச்சியை, அரசியல் விழிப்பை, இலக்கிய வாதாடும் திறமையை, சங்ககால மறுமலர்ச்சியை உண்டாக்கி, அதற்காக பெரும்படையைத் திரட்டி, அந்தப் படைகளின் தளபதிகளில் சிறந்தவரான கலைஞரிடன் அணையாத ஜோதியைத் தந்து, அணைந்துவிட்ட தலைவனை வாழ்த்தி, அவர் விட்டுச் சென்ற பணிகளைச் செம்மையாக செய்து முடிப்போம் என்ற உறுதியை அந்தக் கோடியில் ஒருவராய்த் திகழ்ந்த கௌரவமிக்க கெருமகனின் பிறந்தநாளில் உறுதி எடுத்துக் கொள்வோமாக!
வாழ்க, தமிழகம்!
வாழ்க, அவர் திருப்பெயர்!
(15.09.1970 - தென்னகம்)

 

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai