அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும்
( டாக்டர். அண்ணா பரிமளம் )

பாகம் -20

அண்ணா - ஒரு தடாகம்
(நாரண துரைக்கண்ணன்)

1934-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். சென்னை ஜார்ஜ்டவுன், ஏழுகிணறு வட்டத்தில் உள்ள ஒரு வீட்டு மேல் மாடியில் பாம்வேட் லிட்டரரி பார்லிமென்ட் சார்பில் ஒரு பொதுக்கூட்டம், ஏதோ ஒரு விஷயம் பற்றி (அக்காலத்திய அரசியல் நிலை குறித்துத்தான் எனக் கருதுகிறேன்) உரையாடல் நடந்துகொண்டிருக்கிறது. கோபாலரத்னம் பேசினார்; செங்கல்வராயன் சொற்பொழிவு ஆற்றினார்; பாலசுப்பிரமணியம், இன்னும் யார்யாரெல்லாமோ பேசினார்கள். கடைசியாக வந்தார் ஐயா, ஆசாமி ஒருத்தர். ஐந்தடி ஒரு அங்குலம் உயரம் இருக்கும். சம்புஷ்டியான சரீரம்; அறிவுத் தீட்சண்யத்தை வெளிப்படுத்தும் அகன்ற நெற்றி; ஆழ்ந்த சிந்தனையில் மிதக்கும் பெரிய கண்கள்; ஆட்களைக் கவரும் எடுப்பான மூக்கு; மீசை சரியாகக்கூட அரும்பவில்லை. தோழர்களே! என்றால் கூட்டத்தினரைப் பார்த்து, அவ்வளவுதான்; அவர் உள்ளத்திலிருந்து எழும் சந்தர்ப்ப உணர்ச்சிக்கேற்பச் சொற்கள் சரளமாக வெளிவந்துகொண்டிருந்தன. பொருள் பதிந்த அவர் பேச்சில் தெளிவு இருந்தது. அவர் எடுத்துக்கொண்ட கட்சியை நிலைநாட்டத் தர்க்கரீதியாகப் பேசினார். அவர் பேச்சில் இன்னொரு விசேஷமிருந்தது. அதாவது, பிறரை இமிடேட் பண்ணாமல் சொந்த பாணியிலேயே பேசியதுதான். அக்காலத்தில் மேடையில் பேச விரும்பும் இளைஞர்கள் அதிலும் கல்லூரி மாணவர்கள் மகாகனம் ஸ்ரீநிவாஸ சாஸ்திரியார், ஆற்காடு இராமசாமி முதலியார், சத்தியமூர்த்தி முதலிய பிரபல பேச்சாளர்கள் பாணியில் பேசிப் பழகுவது வழக்கம், பேச்சை மட்டுமல்ல; பிரபல பேச்சாளர்கள் பேசும்போது செய்யும் அங்க சேஷ்டைகள் நடையுடை பாவனைகளையும் இமிடேட் செய்பவர்கள்கூட இருந்தனர். ஆனால் அந்த ஆள் அவ்வாறு செய்தவரல்ல. அவர்தான் நம் அண்ணா. அண்ணா எடுத்துப் பேசிய கட்சி எனக்குப் பிடிக்காவிட்டாலும் அவருடைய பேச்சு வன்மை, பேசிய முறை, தர்க்க வாதம் எல்லாம் என்னை முற்றும் கவர்ந்தன. கல்லூரி விவாத சபைகளில் கலந்து பேசத் தொடங்கியபோதே அண்ணா ஆங்கிலத்தில்தான் பேசிவரலானார். பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபடத்தொடங்கியபின்னர்தான் தமிழிலேயே பேசக்கூடிய நிலை அவருக்கு வந்துவிட்டது. தமிழ்நாட்டில் ஆங்கிலத்திலும் தமிழிலும் அழகாகப் பேசக் கூடிய மிகச் சிலரில் அண்ணா குறிப்பிடத்தக்கவரானார். தமிழில்பேசக்கூடிய நிர்ப்பந்தம் அண்ணாவுக்கு ஏற்பட்டது 1936-ஆம் ஆண்டில், அவர் நகர சபைத் தேர்தலில் பெத்துநாய்க்கன் பேட்டைத் தொகுதிக்கு நின்ற போதுதான். காங்கிரஸ், சட்டசபைகளை மட்டுமல்லாமல் ஸ்தல ஸ்தாபனங்களையும் கைப்பற்ற வேண்டுமென்று தீவிரமாகத் தேர்தலில் ஈடுபட்ட காலம் அது. அண்ணா அத்தேர்தலில் தோற்றுப்போனார். அதுவும் ஒருவிதத்தில் நல்லதாயிற்று. அவ்விதம் நேரவில்லையானால் அவர் நகரசபை வேலைக்கிடையேதான் உழன்றுகொண்டிருந்திருப்பார். அவருடைய நுண்ணறியும் பேராற்றலும வியர்த்தமாயிருக்கும். அண்ணா அவர்களின் அறிவும் ஆற்றலும் நாட்டு மக்கள் அனைவருக்கும் பயன்படவேண்டும் என்பது என் அவா. அவர் தம் அறிவாற்றலைத் தமிழகத்தின் உயர்வுக்காகவும், தமிழ் மக்களின் உயர்வுக்காகவும் பயன்படுத்தவேண்டும் என்று இச்சமயத்தில் நான் வற்புறுத்த விரும்புகிறேன். அண்ணா நாட்டின் முன்னேற்றத்துககாகவும், சமுதாயத்தின் உயர்வுக்காகவுமான ஆக்கவேலையில் ஈடுபட்டுள்ளார். அவர் தமிழ் மக்கள் அனைவர் உள்ளங்களிலும வீற்றிருக்கிறார். அண்ணா தமிழகத்தின் பொதுச் சொத்து; அவர் கஞ்சனொருவரின் மாளிகைத் தோட்டதில் காய்க்கும் எட்டி மரமல்ல; நகரின் நடுவேயுள்ள சோலையில் வளர்ந்திருக்கும் மாம்பழமரம்! ஈரநெஞ்சமில்லாதவனொருவன் வீட்டுச் சிறு கிணறல்ல; ஊர் மத்தியில் பளிங்குபோல் விளங்கும் தடாகம்!

அண்ணா ஒரு தளபதி
(நாவலர் ச.சோமசுந்தர பாரதியார்)

திருவாளர் சி.என்.அண்ணாதுரை அவர்களை அறியாத தமிழர் இரார். தென்னாட்டிலும் அவர்களைத் தெரியாதார் இரார். இவர் அங்கிலத்தில் பண்டிதர். பட்டத்தால் மட்டும் பண்டிதராய்த் திரிபவர் பலர் உளர் எனில், எழுத்திலும், பேச்சிலும், பழுத்த மொழி ஆட்சியிலும் திறனுடையார் மிகச் சிலரே. அத்தகைய நல்ல நடை வல்லார்தம் வரிசையிலே முன் அணியில் இடம் உடையார் இவர். தமிழினிலே, அமிழ்துமிழும் சொல் வளமும், உணர்வொப்பும் தொடர்ச் செறிவும், குறவரிடம் கல்லாமல் தான் பயின்று திறம் பெற்ற சொல்லின் செல்வர். தமிழ் இளைஞர் புத்துலகு விரைந்து தொழில் கேட்க, நிரந்தினிது சொல்லுதல் வல்ல நாவலர். கிண்டலொடு நகைச்சுவையும் கொண்டுருளும் நடையுடையார். இன்னும் இவர் முதிராத இளமையோடு மூதறிவு மிக்குடையார்; அதிமதுரச் சொல்லுடையார். தளராத உள உரமும், வளரறிவும், வளமலியும் உரைத்திறமும் தனதுடைமையாகக் கொண்டதோர் இளம் தமிழர் தளபதி. தமிழ் உயர்வும், தமிழர் தமது உரிமையையும் பெற உஞற்றும் (உழைக்கும்) மறுமலர்ச்சி இயக்கத்தின் தலைவராவார். முடிசூடா மன்னனென ஔந்தமிழர், எழுத்தாளர் புகழ் புலவர். இவர் பணியின் பயனாகத் தமிழ் ஓங்க, தமிழ் நிலை உயர்வதாக.

அண்ணா ஒரு அறிவு விளக்கு
ஆ.இராமாமிர்தத்தம்மாள்

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தலரிது! என்பதுபோல் அரிது அரிது அறிஞன் ஆதல் அரிது. அத்தகைய அறிஞன் யார்? என்பதை என் அறிவுக்கு எட்டியவரையில் சிறிது கூறுகிறேன். ஒருவருக்கு அறிவு இருக்கும்; ஆனால் ஆற்றல் இராது. அறிவும் ஆற்றலும் உடையவரே அறிஞர். பல நூல்களைப் படித்திருப்பர்; ஆனால் பகுத்தறிவாம் பெரும் அறிவை உபயோகித்து, ஆராய்ந்து நற்கருத்துக்களை மனத்தே பதியவைத்து, தீய கருத்துக்களை நீக்கி, கற்றதனால் ஆய பயனைப் பெற்றிருக்கமாட்டார்கள், ஏட்டில் பதிந்துள்ள பாட்டை, நன்கு ஆராயாமல் பாராயணம் செய்து, கேட்போருக்கும் புரியாது, தனக்கும் விளங்காது, தத்துவார்த்தம் சொல்லி, வம்புக்கிழுப்பவர் அறிஞரா?

கற்றிலாய், கலைகற்று உணரார்முகம் உற்று நோக்கில் மயானத் தொக்குமானால் என்பதுபோல், பாட்டைப் படித்து உண்மையான கருத்துக்களை நல்குவார் அறிஞராவர். பெரும் பேச்சாளராய் இருப்பர்; ஆனால் எழுத்தாளராய் இரார். இவ்விரண்டும் கொண்டவரே அறிஞர். நாடகாசிரியனாய் இருப்பர்; ஆனால் நடிப்புத் திறன் இராது. இரண்டும் உடையாரே அறிஞர். உலகத்தைச் சுற்றிப் பார்த்து, பல அதிசயங்களைக் கண்டு, ஆயிரம் நாவைப் படைத்த ஆதிசேஷனைலும் ஓதற்கரிய உலகமே என்று வருணித்துப் புராணம் எழுதுபவன் அறிஞனா, இருந்த இடத்திலிருந்து கலையுலகத்தைச் சுற்றிப் பார்த்து மக்களுக்குப் பகுத்தறிவைப் புகட்டி மாக்களை மக்களாக சீர்திருத்துபவன் அறிஞனா! என்பதைச் சற்றுச் சிந்தியுங்கள். இவ்விதத் தன்மைகள் உடையவர் இருத்தல் முடியுமா என்று கேட்கிறீர்களா? இருக்கிறார், நானே சொல்லிவிடுகிறேன். இன்னும் கொஞ்சம் எழுதி, பிறகு சொல்லலாமென்றால், சொல்லிவிடும்படித் தோன்றுகிறது.யார் தெரியுமா? நம் திராவிடத் தளபதி, சி.என்.அண்ணாதுரை அவர்களேதான். இவ்வறிஞரைப் போன்று பல அறிஞர்கள் நம் நாட்டிற்குத் தேவை, நம் அண்ணாவின் அறிவுத் திறனை என்னென்று புகழ்வது! அண்ணலே! தானே தனக்கு உவமை என்பதுபோல உம்முடைய அறிவுத் திறனுக்கு, நீர்தான் இணை என்று கூறின், அது மிகையுமன்று.
(சமநீதி- அண்ணா மலர், 1966)

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai