அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும்
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பாகம் - 1

'தோண்டுகின்ற இடமெல்லாம் தங்கம் வரும் தமிழகத்தில் மீண்டும் நீ பிறந்திடவேண்டு' மென்றாள்.
'தங்கம் எடுக்கவா' என்றான்;
'தமிழர் மனம் வாழ்வெல்லாம் தங்கமாக ஆக்க' என்றாள்.
'இன்றென்ன ஆயிற்' றென்றான்
'குன்றனைய மொழிக்கு ஆபத்' தென்றான்;
'சென்றடையக் குடிலில்லை ஏழைக்' கென்றான்;
'கடிதோச்சி மெல்ல எறியத் தெரியாமல்
கொன்றெறியும் கோல் ஓங்கிற்' றென்றாள்;
'அறிவில் - கன்றனையோர் வீணில் கதைக்கின்ற கதையும் சொன்னாள்
அழுத கண்ணைத் துடைத்தவாறு
அமுத மொழி வள்ளுவனும்
'அம்மா நான் எங்கே பிறப்ப' தென்றான்.
தொழுத மகன் உச்சி மோந்து - ஆல
விழுதனைய கைகளாலே அணைத்துக்கொண்டு
உழுத வயல் நாற்றின்றிக் காயாது இனிமேலே என மகிழும்
உழவன் போல் உள்ளமேல்லாம் பூரிப்புத் துள்ளி எழ
காய்ந்த வயிற்றுக்குக் கஞ்சி வார்த்திடவே 'கற்கண்டே! தேன்பாகே! திருக்குறளே! நீ காஞ்சியிலே பிறந்திடுக' என்றாள்,
பிறந்திட்டான் நம் அண்ணனாக;
அறிவு மன்னாக - பொதிகைமலைத் தென்றலாய்
போதாகி மலர்கின்ற தமிழ் உணர்வின் புதுமணமாய்
பதிகத்துப் பொருளாய்
பழந்தமிழர் புறப்பட்டாய்
வந்துதித்தான் அண்ணன் - கீழ்
வானுதித்த கதிர்போல -
புரியாதார்க்கு ஒரு புதிர் போல!
அவன் புகழைப் பாடுதற்கு
அவன் வளர்த்த தம்பி நானும்
அவன் தந்த தமிழ் எடுத்து
இவண் வந்தேன் இதுதான் உண்மை
தலைவவென்பார், தத்துவ மேதை என்பார்
நடிகர் என்பார் நாடக வேந்தர் என்பார்,
சொல்லாற்றல் சுவைமிக்க எழுத்தாற்றல் பெற்றார் என்பார்.
மனிதரென்பார் மாணிக்கமென்பார் மாநிலத்து அமைச்சரென்பார்
அன்னையென்பார் அருள்மொழிக் காவல் என்பார்
அரசியல் வாதி என்பார் - அத்தனையும்
தனித்தனியே சொல்வதற்கு நேரமற்றோர் நெஞ்சத்து அன்பாலே
'அண்ணா' என்ற ஒரு சொல்லால்
அழைக்கட்டும் என்றே - அவர் அன்னை பெயரும் தந்தார்.
அந்த அன்னைக் குலம்
போற்றுதற்கு ஔவைக்கோர் சிலை;
அறம் வளர்த்த கண்ணகிகோர் சிலை;
வளையாத நெஞ்சப் பாரதிக்கும்
வணங்காமுடிப் பாரதிதாசருக்கம் சிலை;
வீரமா முனிவருக்கும் சிலை
கால்டுவெல்போப்புக்கும் சிலை;
கம்பர்க்கும் சிலை
தீரமாய்க் கப்பலோட்டிய தமிழர்க்கும் சிலை
திக்கெட்டும் குறள் பரப்ப திருவள்ளுவர்க்கும் சிலை
பத்து சிலை வைத்ததினால் - அண்ணன்
தமிழின் பால் வைத்துள்ள
பற்றுதலை உலகறிய;
அந்த அண்ணனுக்கோர் சிலை
சென்னையிலே வைத்த போது. . .
ஆட்காட்டி விலல் மட்டும் காட்டி நின்றார் . . .
ஆனையிடுகிறார் எம் அண்ணா என்றிருந்தோம்.
அய்யகோ; இன்னும்
ஓராண்டே வாழப் போகிறேன் என்று அவர்
ஓர்விரல் காட்டியது இன்றன்றோ புரிகிறது!
எம் அண்ணா . . . இதயமன்னா . . .
படைக்கஞ்சார் தம்பியுன்டென்று பகர்ந்தாயே;
எமை விடுத்துப் பெரும் பயணத்தை ஏன் தொடர்ந்தாய் . . . ?
உன் கண்ணொளியின் கதகதப்பிலே வளர்ந்தோமே;
எம் கண்ணெல்லாம் குளமாக ஏன் மாற்றிவிட்டாய்?
நிழல் நீ தான் என்றிருந்தோம்; நீ கடல்
நிலத்துக்குள் நிழல் தேடப் போற் விட்டாய்; நியாந்தானா?
கடலடியில் இருக்கின்ற முத்தெல்லாம் முத்தல்ல;
நான்தானடா நன்முத்து எனச் சொல்லிக் கடற்கரையில் உறங்குதியோ?
நாத இசை கொட்டுகின்ற நாவை ஏன் சுருட்டிக் கொண்டாய்?
விரல் அசைத்து எழுத்துலகில்
விந்தைகளைச் செய்தாயே; அந்த விரலை ஏன் மடக்கிக் கோண்டாய்?
கண் மூடிக்கொண்டு நீ சிந்திக்கும்
பேரழகைப் பார்த்துள்ளேன் . . .
இன்று மண் மூடிக் கொண்டு உன்னைப் பார்க்காமல்
தடுப்பாதென்ன கொடுமை
கொடுமைக்கு முடிவி கண்டாய், எமைக்
கொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்?
எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்
இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்?
கடற்கரையில் காற்று
வாங்கியது போதும் அண்ணா;
எழுந்து வா எம் அண்ணா . . .!
வரமாட்டாய்; வரமாட்டாய்;
இயற்கையின் சதி எமக்கத் தெரியும் அண்ணா . . . நீ
இருக்குமிடந்தேடி யான் வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தைத் தந்திடண்ணா . . . நான் வரும்போது கையோடு கொணர்ந்து அஃதை
உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா. . . !
(பேரரிஞர் அண்ணா அவர்கள் மறைவெய்திய போது
கலைஞர் மு.கருணாநிதி பாடிய கவிதாஞ்சலியிலிருந்து)

இலக்கியம் என்பது சமுதாயத்தில் சுரண்டலுக்கும் ஏய்ப்புக்கும் ஆட்படுகின்ற வர்கத்தினரின் குரலை எடுத்துரைப்பதாகவும் பல்வேறு கோணங்களில் தூண்டிவிடுவதாகவும் அமையவேண்டும். லெனின் - இது அண்ணாவுக்குப் பொருந்தும்

அண்ணாவின் எழுத்தோவியங்களை ஊன்றி படிக்கம்போது ஒரு வரலாற்று ஆசிரியனின் ஆற்றல், ஒரு படைப்பாசிரியனின் பண்பு, ஒரு சிறந்த விமர்சகனின் விவேகம், ஒரு விரிவுரையாளனின் நுட்பம், ஒரு வழக்கறிஞனின் வாதத்திறன், ஒரு கவித்துவம் நிறைந்த கற்பனையாளனின் நயம், நூலின் தலைப்புக்கேற்ப பளிச்சிட காணலாம்.
இளவழகன் (அறிவுப் புனல் அண்ணா)

தமிழின் கட்டுரை இலக்கியங்களை அறிவியல் நெறிபடுத்தினார் திரு.வி.கலியாணசுந்தரனார். இக் கலையினை இதழ் மூலமாக அரசியல் துரையிலும் கவினும், கருத்தும் செழிக்கச் செம்மையான் வடிவாக வளர்த்த புரட்சியாளர் அண்ணா, என்பார். (ஈ.சா.விஸ்வநாதன் - தமிழாய்வு - பக்கம் 59)

நடை என்பதே அறுதியிட்டு விளக்க முடியாத ஒன்று. அதிலும் தனித்தன்மை சான்ற நடையை விளக்கிக்காட்டுவது அரிய செயல். செவிக்கின்பம் தரும் ஒழுங்குபட்ட ஒலிநயம் கையாளும் சொற்களில் ஒரு வகையான தேர்வாற்றல், தெரியாற்றல், வேறொருவரிடமும் எளிதில் காண முடியாத அரிய தொடர் ஆக்கங்கள், நாவல் பொருளுக்கும், உணர்ச்சி நிலைக்கும் ஏற்ற வண்ணம் அமைந்த தொனி, முத்திரை பரித்தாற் போன்ற வாக்கிய அமைப்பு முதலியன தனி நடையின் பண்புகள் ஆகும். அண்ணாவும் இத்தகைய தனி நடை வாய்க்கப் பெற்றவர்.
முனைவர். மா. இராமலிங்கம் (20-ம் நூற்றாண்டில் தமிழிலக்கியம்)

டாக்டர் கைலாசபதி எழுத்தாளர்களை மூன்று நிலையினராப் பகுப்பார். முதற் பிரிவினர் கமுதாயச் சிக்கல்கள் இலக்கியத்துக்கு உகந்த பொருள் அன்று என்று கருதினர். இரண்டாவது பிரிவனர்கள் சிக்கல்களை உள்ளவாறு சித்தரிக்கம் கருத்தினர். காலப்போக்கில் கமூகம் திருந்தும் என்ற நம்பிக்கையினர். மூன்றாவது பிவினர் வாழ்க்கைப் போராட்டத்தை, எடுத்துரைத்து அவற்றிற்கு விடிவு காண முயலுநர். இவர்கள் அண்ணா மூன்றாவது பிரிவினர்.

ராண்டார்கை எனும் எழுத்தாளர் கூறுவது போன்று தெள்ளுதமிழில் உவமான, உவமேயங்களோடு வசனங்களை எழுதி மக்களைப் பரவசப் படுத்தியவர்கள் டி.வி.சாரி, இளங்கோவன் போறோர் என்றாலும், அண்ணாவின் தமிழ்முற்றிலும் வேறுபட்டதாக மக்களுக்கு இனிப்பாக இருந்தது.

அண்ணா இந்நூல் (பணத் தோட்டம்) முழுவதும் பலரின் உழைப்பு ஒரு சிலரின் மூலதனமாக எப்படி உருப்பெறுகிறது என்பதை அருமையாக விளக்கியுள்ளார். இலக்கிய நயம் நிரம்பிய ஒரு தலைப்பின் மூலம் படிப்போரின் உள்ளத்தில் உணர்ச்சி மோதல்களை எற்படுத்த அண்ணாவால்தான் முடியும், எதையும் இலக்கியமாகப் பார்க்கும் ரசனை உள்ளம் அவருடையது. ஆகவேதான் பேரிலக்கியங்களை படைக்காமலே அவர் ஓர் இலக்கியவாதியாக காட்சி அளித்துக்கொண்டிருக்கிறார்.
பி.சி.கணேசன் (அண்ணா எனும் இலக்கிய வாதி)

அண்ணா கட்டுரை என்ற வடிவத்தைத் திளனாய்வாக மடல்களாக எழுதியிருப்பது போற்றத்தக்கதாய் இருந்தது. திராவிட நாடு தொடர்பான சிந்தனைகளும், பகுத்தறிவு, சீர்திருத்தம் போன்ற சிந்தனைகளும் தலையாய இடம் பெற்றுள்ளன. வரலாற்றுச் சிந்தனைகளும், மேல் நாட்டறிஞரின் வரலாற்று அறிவுடன் சரிநிகர் சமானமாக ஒப்பிடும் தகுதி வாய்த்திருந்தது.
முனைவர்.ந.வேலுசாமி (அறிஞர் அள்ளாவின் சிந்தனைகள் ஓர் ஆராய்ச்சி)

அண்ணா அழகுணர்ச்சி கொண்ட இலக்கியவாதியாக மட்டும் இருக்கவில்லை. அவர் ஓர் சிந்தனைவாதியாக, கமூக சீர்ரிருத்தக்காரராக, அரரிசயல்வாதியாக, போராட்டக்காரராக, பிரச்சாரகாராக இருந்தார். சமுதாய மாற்றத்தைத் தன் குறிக்கோளாகக்கொண்டிருந்ததால் படைப்புகளை வெறும் கலை வடிவமாக மட்டும் பார்க்க முடியாமல் போனது. அவர் காண விரும்பிய கமூக மாற்றத்திற்கு - செய்ய விரும்பிய அரசியல் சாதனைகளுக்கு, இலக்கியத்தையும், கலைத்துறையினையும் கருவிகளாக் மட்டும் கருதினார். இந்தக் கருவிகளை எப்படி கூர்மையாக்கிக் கொண்டு பயன்படுத்த வேண்டும் என்கிற விஷயத்தில் அவர் நிகரற்ற நிபுணராக விளங்கினார். கலை வடிவங்களும், இலக்கியப் படைப்புகளும் மனித வாழ்க்கையை மேம்படுத்தும் சாதனைங்களாக் அமைய வேண்டும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவராக விளங்கினார். இவரது முயற்சியால் கலையிலும் இலக்கியத்திலும் புதிய பல பரிசோதனைகள் தோன்றலாயின.
பி.சி.கணேசன் (அண்ணா எனும் இலக்கியவாதி)

காரிருள் சூழ்ந்த இநத் வேளையில் பேறிஞர் அண்ணாவின் கதைகள் கதிரவனால் ஒளி பாய்ச்சுவதை உணர்வீர்கள். அண்ணாவின் எழுத்தோவியங்கள் சமுதாய அடித்தளத்தையே மாற்றுகின்ற குறிக்கோளுடன் எழுதப்பெற்றவை நல்ல எழுத்துக்கள் என்பவை கற்பவர்களைத் தட்டி எழுப்புவதற்கே - மக்களை நெறிப்படுத்துவதற்கே - மறுமலர்ச்சியைத் தோற்றுவிப்பதற்கே - கேடுகளை களைவதற்கே - நாட்டு பற்றை வளர்பதற்கே - நல்ல எண்ணங்களை உருபாக்குவதற்கே
புலவர் சா. மருதவாணன்

தமிழ்ப் புதின உலகில் கேட்கும் குரல்களின் தனித்துவம் வாய்ந்த குரலாக ஒலித்துக் கொண்டிருப்பது அண்ணாவின் குரல். சி.பாலசுப்பிரமணியம் (இலக்கிய இண்ணமுது)

சமுதாயத்தில் மலிந்து காணப்பெறும் மூடப்பழக்க வழக்கங்களால் குடும்பங்கள் குலைவுறும் பெண்கள் துன்ப நிலை அடைவர் என்ற சமுதாயச்செய்தியை எதிரொலிக்கும் கருத்தோவியமாக இந்நாவல் திகழ்வதால் கருத்தமைவு நாவல் (டிஎநட டிக னைநயள) கருத்து நிகழ்ச்சி அடிப்படையிலும் நோக்க சீர்திருத்த நாவல் (டிஎநட டிக அயநேசள) என்ற நிக்கு வந்துவிடுசிறது. இது இயற்கையான தன்மைக்கும் மூடப்பழக்கத்திற்கும் இடையே முரண்பாடு காட்டி பகுத்ததறிகூ கொள்கை கூறும் நாவலாகும்.
பி. தட்சிணாமூர்த்தி (நாவல் ஆய்வு நூல்)

சமூகம் வெறும் சாக்கடை சேறு நிறம்பிய இடம் எனக்காட்டி அதனைத் தூய்மைப்படுத்த பகுத்தறிவே தக்க வழியாகக் காட்டுகிறார் அண்ணா.
முனைவர் தா.வே.வீராசாமி (ரங்கோன் ராதா - புதினம்)

தேவையானபொது இச்சித், துவைத்து அனுபவித்து எச்சிலாக்கி பலியான பிறகு மட்டும்உயர் சாதித்துடக்ககை பாட்டு ஒதுக்கிவிடும் கொடுமையை இந்நாவல் கண்டிக்கும் நிலை நம்மை நெகிழ வைக்கிறது. அப்பகுதிகளை படிக்கும்போது நம் நாடி நரம்புகளும் குருதியும் கோதிப்பேறுவதை அறம் காக்க அவை துடிப்புறுவதை நம்மால் உணர முடியும் அண்ணாவின் எழுத்துதாற்றலுக்கு இதை விட என்னச் சான்று வேண்டும்.
மா.ரா.இளங்கோவன் (இலக்கிய உலகில் அண்ணா)

இருபரம்பரைகள் - இது தொடக்கக் காலச் சிறுகதை. பொருளியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற அண்ணா, பொருளாதார விடுதலையின் தேவையை உணர்ந்து தம் எழுத்துக்களில் பெறிப்படுத்தினார். முனைவர். இரா.சேது (அண்ணாவின் கதை இலக்கியம்)

இந்து மத வருணாசிரமக் போட்பாடுக்ள, கடவுள் முறை புராணக் கதைகள் இவற்றின் வழி அமைந்த வாழ்க்கை முறையை மாற்ற முனைந்தார். பகுத்தறிவுக் கொவ்வாத சமய சடங்குகள், மனிதனின் சிந்தனை சிறைப்டுத்தும் மூடநம்பிக்கைகள், மனிதர்களுக்குள் பேதத்தை உண்டாக்கும் வருணாசிரமத் தத்துவங்கள் ஆகியவையே தமின் வீழ்ச்சிக்கு காரணம் என்பதை உணர்ந்ததார். தமிழ் மக்கள் மீது திணிக்கப் பெற்ற ஆரியச் கருத்துகளில் இருந்து, விடுவித்து மறைந்து கிடக்கம் தமிழ் நாகரீகத்தை உணர்த்தி தமிழ் மக்கள் மறுமலர்ச்சி சிந்தனை பெற உழைத்தார்.
முனைவர்.இரா.சேது (அண்ணாவின் கதை இலக்கியம்)

சிறுகதையை இலக்கியத் துறையிலிருந்து பிரித்தெடுத்து ஒரு சமுதாய விமர்சன கருவியாகப் பயன்படுத்தியவர். சிறுகதையை பிசச்சார கருவியாகப் பயன்படுத்தினாலும் சிறுகதையின் வடிவத்தை சிதைக்காதவர். உத்தி, உள்ளடக்கம், நடை ஆகிய அம்சங்கள் அமைந்த சிறுகதைகளைப் படைத்த அண்ணாத்துரையை மணிக்கொடிக்கு அடுத்தகாலத்தில் சிறுகதையை வளர்க்க உதவிய ஆசிரியர்களுள் ஒருவராக் கருதலாம்.
அ.கா. பெருமாள், சீ.குமார் (தமிழ் இலக்கிய வரலாறு)

சீர்திருத்த இயக்கத்தில் பகுத்தறிவு பாதையில் பெரியாரின் வழியில் வந்தவரான அண்ணா சாதி ஒழிப்பு, பொருந்தாமணக் கொடுமை போலிச் சமய வாதிகளை தோலுரித்தல் கலப்பு மண ஆதரவு ஆகிய பொருள் பற்றி பல நாவல்கள் படைத்தார்.
அ.கா.பெருமாள், எஸ்.சீதர் (தமிழ் இலக்கிய வரலாறு)

அழிவு தரும் ஆரியம் தமிழ் மக்களை இழிவு படுத்தும் இயல்பு புராண இதிகாசங்சளுக்குக் கருவாய் அமைந்தன. இதனை எதிர்த்து புதியதோர் உலகுக்கு வழிகாட்டும் செறிகளை தரும் இலக்கியம் படைப்பதில் முனைவு கொண்டார் அறிஞர் அண்ணா.
முனைவர். பி இரத்தின சபாபதி (அண்ணாவின் கலிங்கராணி புதினத்துக்கு முன்னுரை)

விடுதலை உணர்வோடு தேசிய இயக்கத்தின் சார்பாக எண்ணற்ற எழுத்தாளர்கள் தோன்றியதைப் போலவே தமிழ் மண் மணமும், இன உணர்வும், தன்மானக் கொள்கைப் பற்றும் கொண்ட எண்ணற்ற எழுத்தாளர்கள் நீதிக்கட்சியிலும் சுயமரியாதை இயக்கத்திலும் தோன்றினார்கள். சமுதாய விழிப்புணர்ச்சியையே நோக்கமாகக் கொண்ட இவர்களுள் படைப்பிலக்கியங்கள் வாயிலாகத் தன்மானச் சிந்தனைகளை வழங்கிய முன்னோடியாகத் திகழ்ந்தவர் அண்ணா அவர்கள்.
முனைவர்.பா.உதயகுமார் (அண்ணாவின் சிறுகதைத் திறன்)

அண்ணாவின் இலக்கியப் பிரவேசத்துடன் மறுமலர்ச்சி தமிழில் ஒரு புதிய வேகம் தோன்றியதோடு, நடையில் யாப்புக்கு பொருத்தமான எதுகையும், மோனையும் சேர்ந்து மொழிக்கு ஓவியலங்காரம் கொடுத்ததும் ஒரு முக்கிய திருப்பம்.
சிட்டி.சிவபாத சுந்தரம் (தமிழில் சிறு கதைகள்)

புதுமைப்பித்தன் கதையை வாசிப்பது நமது சிந்தனையின் கவனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல். கதை முடியும் பொழுது அதைப் பற்றிய சிந்தனை முடிவடைந்துவிடாது. இப்படிப்பட்ட கதைகள் முடிந்த பிறகுதான் சிந்தனை ஆரம்பமாகிறது. அண்ணாவின் கதைகளும் இப்படித்தான்.
நாகை தருமன் (இலக்கிய உலசில் அண்ணா)

உத்தி, உள்ளடக்கம், நடை ஆகிய அம்கங்கள் முழுமையாதக அமைந்த பல சிறுகதைகளைப் படைத்தவர் அண்ணா. பேரா. டாக்டர். சு.சிதம்பரநாதன் (தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்)

நாவல் வரவாற்றில் அறிஞர் அண்ணாவுக்கும் சிறப்பான் இடம் உண்டு. அரசியல் தலைவராகபும், மேடைப் போச்ளராகம் அவருக்குக் கிடைத்தப் புகழ்ப் பேரொளியில், படைப்பாற்றல் மிக்க எழுத்தாளர் அவர் என்னம் உண்மை அதிக வெளிச்சம் தராத விளக்கொளிபோல் அடங்கிப்போய் நின்றது எனலாம்.
மு.இளமாறம் (நாவல் வளர்ச்சி)

இந்நாவல் (ரங்கோன் ராதா) இன்றய ரியலிச் படைப்பாளர்களுக்கு அண்ணாவே வழிகாட்டியாவார்.
மா.ரா.இளங்கோவன் (இலக்கிய உலகில் அண்ணா)

பழுத்த அறிவு, கூரிய அறிபு நுட்பம், அகன்ற காட்சியறிவு ஆகியவை அவர்தம் நடையினை அணி செய்கின்றன. அவர்தம் ஆளுமையிம் அதில் முனைப்பாகப் புலப்படுகிறது. கருத்து முதன்மையும், முழுமையிம் கருத்து வெளிப்பாட்டு விருப்மும் அவர்தம் நடையின் தலைசிறந்த பண்புகள் எனலாம். சுருக்கம், தெளிவு, இனிமை, ஓசை நயம், அறிவாழம் முதலியவை அவர்தம் நடையின் ஏனைய பண்புகளாம். அத்துடன் அவர்தம் நடை ஒரு தனி வீறும், தனியாண்மையும் கொண்டது.
பேராசிரியர். அ.கி.மூர்த்தி (அண்ணாவின் பட்டமப்பு விழா உரைகள்)

அவர் வாழ்ந்தது - எண்ணியது - எழுதியது அனைத்தும் ஒரு குறிக்கோளுடம்ன. மக்களின் மனப்ன்மையில் ஒரு மாற்றம், விழிப்பு - எழுச்சி - தன்னம்பிக்கை ஏற்படுத்தி பழமை பிடிப்பிலிருந்து விடுவித்து ஒரு புதிய சமுதாயமாக் மறுமலர்ச்சி காணச் செய்தலே அவரது குறிக்கோள். அந்த அடிப்படையில் மலர்ந்த மணம் பரப்பியதே அவரது எழுத்தும் அனைத்தும்.
பேராசிரியர். க. அன்பழகன்.

அண்ணா தம் எண்ணங்களை செயல் திட்டங்களை, நெறிமுறைகளை, வேண்டுகோள்களை வெளியிட்டு அறிவையும், இன உணர்ச்சியையும் ஊட்டினார்.
முனைவர். கு.விவேகானந்தன் ( அண்ணாயியம்)

நண்பர்களிடமிருந்தும், நெருங்கிய உறவினர்களிடமிருந்தும் வரும் முடங்கல்களை படிப்பதில் ஒருவன் எவ்வளவு ஆர்வமும், அக்கறையும் அக மகிழ்ச்சியும் காட்டுவானோ அவ்வளவு ஆர்வமும், அக்கறையும், அகமகிழ்ச்சியும் அறிஞர் அண்ணா அவர்களின் கடிதங்களைப் படிப்பதிலும் ஒவ்வொருவரும் காட்டுவர். அவ்வளவு கவர்ச்சியும், அறிவுத்தெளிவும், ஆராய்ச்சி திறனும் அறிஞர் அண்ணா அவர்களின் கடிதங்களில் காணப்பெறும்.
நாவலர். நெடுஞ்செழியன் (அண்ணாவின் கடிதங்கள் முன்னுரை)

அவர் (அண்ணா) சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்தார். இவற்றிகெல்லாம் மேலாக மேலாக தமிழ் நெறியில் ஆழமாக காலூன்றி நின்றார். ஆம், இருபதாம் நூற்றாண்டின் வள்ளுவராக விளங்கினார்.
திரு. அரு. சின்னச்சாமி (அண்ணா ஒரு சரித்திரம்)

அண்ணாமலைப் பல்கலைகழகந்தன்னில் ஆற்றிய பேருரை, புத்தறிவு பேருரை, ஆங்கிலத்தின் அழகும் அறிவும் ஆழ்ந்த அழுத்தந்திருத்தமான கருத்துரமும் பொதிந்த பட்டமளிப்பு விழா பேருரை. நல்லபடி வழிகாட்டித் துணையாய் தோழமையாய் ஊரும் உலகும் மெச்சிடும் வண்ணம் அமைந்த பேருண்மை உரை.
திரு. மு.நமச்சிவாயம்.

இவரது (அண்ணாவின்) ஆங்கிலப் பேச்சுக்கள் கல்லூரிகளில் பாடப்பகுதியாக வைக்கப்படவேண்டிய அளவு தரமும், தகுதியும் உள்ளவை.
க.திருநாவுக்கரசு (திராவிட இயக்க இதழ்கள்)

அண்ணாவின் நாடகங்கள், தமிழ் நாடகங்கள் ஒருபெரும் கமுதாய மாற்றத்தைச் செய்யத்தகுந்த ஆற்றலாகவும் இயக்கமாகவும் விளங்கின அவை இன்று தமிழ் இலக்கியச் செல்வங்கள். மொழிபெயர்ப்பு செயய்யப்பட்டால் உலக அரங்கில் அவை ஓர் உயர்ந்த இடத்தைப் பெறும் என்பது உறுதி, என்பார்.
டாக்டர். ஏ.என்.பெருமாள் (நாடகச் சிந்தனை ப.166)

இவரது (அண்ணாவின்) கவிதை ஆக்கம் என்பது பழைய மரபு முறையில் அமையாமல், புதிய முறையில் அமைய அண்ணாவால் முயற்சி செய்யப்பெற்றிருப்பது ஒரு புதிய அம்சமாகவே படுகிறது.
துரை.சீனிச்சாமி.

எனவே அண்ணாவின் கதைகளில் சங்கச் செய்யுள் இலக்கியச் சாயலும் இடைக்கால இலக்கியத் தாக்கமும் பிற்கால இலக்கியத் தாக்கமும்பின்னிப் பிணைந்துள்ளன. சமுதாய சீர்திருத்தமும், சமதர்மமும் இவரது கவிதைகளின் அடிநாதம். பாரதியின் பாட்டிலுள்ள அவல உணர்ச்சியும், வசனக் கவிதையும் அதன் வளர்ச்சியான புதுக்கவிதை உத்தியும் இவருக்குக் கைவந்தது.
முனைவர் ந.வேலுச்சாமி (அறிஞர் அண்ணாவின் சிந்தனைகள் - ஓர் ஆராய்ச்சி)முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள