அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும்
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பாகம் -19

அண்ணாவை அறிஞர் அண்ணா என்று சொல்லக் காரணம் அவரது அறிவின் திறம்தான். அவரது ஆட்சிக்காலத்தில் எந்த தமிழனுடைய உரிமையையும் அவர் புறக்கணிக்கவில்லை. அதனாலேயே தமிழர் சமுதாயத்தினருடைய அன்பை இதுவரை யாரும் பெற்றிராத அளவுக்கு அண்ணா பெற்றிருக்கிறார் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருக்கிறது. நாட்டில் எல்லா கட்சியாருடனும் எல்லா மக்களுடனும் மிக்க அன்புக்குரியவராகவும் நேசமாகவும் இருந்து வந்தார். அண்ணாவின் குணம் மிக தாட்சண்ய சுபாவமுடையது. யாரையும் கடிந்து பேசமாட்டார். தன்னால் முடியாத காரியமாய் இருந்தாலும் முடியாது என்று சொல்லத் தயங்குவார்.
(தந்தை பெரியார்)

தேனில் எந்த ஒரு துளியை எடுத்துச் சுவைத்தாலும் அதன் சுவை சற்றும் குறையாது; மாறாமல் சுவையாகவே இருக்கும். பாலில் எந்த ஒரு துளியை எடுத்துச் சுவைத்துப் பார்த்தாலும், அதன் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும். பலாப் பழத்தை எடுத்து அதன் எந்தச் சுளையை சுவைத்தாலும் ஒரே மாதிரியானச் சுவையாகத்தான் இருக்கும். அவ்வாறேதான் அண்ணாவின் எந்த ஒரு சொற்பொழிவும், சுவும், பயனும் உடையதாக இருக்குமேயன்றி பயனற்றது என்ற ஒதுக்கித் தள்ளிட இயலாது.
(தோப்பூர் திருவேங்கிடம், எம்.ஏ. - ஆசிரியர், தென்புலம்)

அண்ணாவிடம் பலவிதமான சிறப்புக் கூறுகள் இருந்தது என்றும் அவரது சொல்லாற்றலே அனைவரையும் ஈர்த்த முதன்மையான ஆற்றலாகும். எனவே அண்ணா சொல்லுக்கு நாயகனாக விளங்கி சொற்பொழிவு கலைக்கு அருந்தொண்டாற்றியுள்ளார். அவரது வருகை தமிழக்தில் பல துறைகளில் திருப்பு முனை ஏற்படுத்தியதை போன்றே சொற்பொழிவுக் கலையிலும் ஒரு நல்ல திருப்பு முனையை ஏற்படுத்திவிட்டது.
.... அவரது மாலை நேரச் சொற்பொழிவு மேடையை மாலை நேரக்கல்லூரி என்று பலரும் கூறுவதுண்டு.
(முனைவர் பொன். செல்வகணபதி, எம்.ஏ., பி.எச்.டி.)

இங்கிலாந்துக்கு ஒரு எச்.சி.வேல்ஸ் அயர்லாந்துக்கு ஒரு பெர்னாட்சா, அமெரிக்காவுக்கு ஒரு இங்கர்சால் சோவியத் ருசியாவுக்கு ஒரு மார்க்சிம் கார்க்கி, பிரெஞ்சு நாட்டுக்கு ஒரு வால்டேர், ஜெர்மானியர்களுக்கு ஒரு காரல் மார்க்ஸ். ஆம்! அதுபோல தமிகத்திற்கு கிடைத்திருக்கும் ஓர் ஒப்பற்ற அறிஞரேறு, அண்ணாதுரை.

. . . . . பேச்சு மேடையா, அங்கே அண்ணாவின் பாணியில் பேசாதவர்கட்கு இடம் கிடையாது. பத்திரிக்கை உலகமா அங்கே அண்ணா கையாளும் தமிழ் நடையைக் கையாண்டால்தான் தனிமதிப்பு. சிறுகதை வட்டாரமா, அங்கேயும் அண்ணாவின் முத்திரை மோதிரம்தான் பொறிக்கப்பட்டிருந்தது. திரைப்படக் காட்சிதானே, அங்கே நடப்பது இப்போது அண்ணா சகாப்தம்தானே!

. . . . ஜஸ்டிஸ் கட்சியைத் திராவிடர் கழகமாக மாற்றியது மட்டுமல்ல, மாற்றப்பட்ட கட்சிக்கு திராவிடர் கழகம் எனும் தெனினுமினிய பெயரைச் சூட்டியதேகூட அண்ணாத்துரைதான் என்பது பலருக்குத் தெரியாது. அதை தெரிவித்துக்கொள்ளவேண்டும் என்று எண்ணியதுமில்லை அண்ணா.

திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் ஒரு முறை தெளிவாக எடுத்துக்காட்டியதுபோல, திரவிடநாடு பிரிவினைப்பற்றி பிரச்சாரமே நடைபெற்று வந்த காலத்தில், அந்தப் பிரிவினையின் பேரால் ஒரு கழகம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் முதன் முதல் அறிஞர் அண்ணாத்துரைக்கே ஏற்பட்டது.
(திரு.ம.இளஞ்செழியன் - திரு.காஞ்சி மணிமொழியார் அவர்கள் மகன் - 13.01.1951 - போர் வாள் - பொங்கல் மலர்)

அப்ரகாம் லிங்கனும் அறிஞர் அண்ணாவும்
நெய்வேலி சுப்பிரமணியன் துப்பாக்கி ரவையைவிட ஓட்டுச் சீட்டுதான் வலிமையானது என்று முழங்கியவர் ஆப்ரகாம் லிங்கன். மக்கள் குரலே மகேசன் குரல் என்று முழங்கியவர் அண்ணா

ஆப்ரகாம் லிங்கன் ஏழை குடிசையில் பிறந்தவர்

ஆண்ணாவும் எளிய குடும்பத்தில் பிறந்தவர்.

ஆப்ரகாம் லிங்கன் இரவு முழுவதும் புத்தகங்கள் படிக்கும் குணமுள்ளவர்.

அண்ணா விடியவிடிய புத்தகங்களைப் படிப்பவர். ஐம்பது மைல் சுற்று வட்டாரத்தில் படிக்காத புத்தகங்களே இல்லை என்று பெருமை பெற்றவர் ஆப்ரகாம் லிங்கன். மிகப்பெரிய பல்லாயிரக் கணக்கான நூல்களைக் கொண்ட கன்னிமாரா நூலகத்தையே கரைத்துக் குடித்தவர் என்று பெயர் பெற்றவர் அண்ணா. ஆடம்பரம் என்பது துளியும் இல்லாதவர் ஆப்ரகாம் லிங்கன்.

ஆடம்பரமற்ற முறையில் அடக்கத்தின் சின்னமாகத் திகழ்ந்தவர் அண்ணா.

சினம் என்பதே சிறிதும் தீண்டாதவர் ஆப்ரகாம் லிங்கன்.

ஆத்திரம் வந்து பார்த்ததே இல்லை என்று மனைவி முதல் கட்சித் தொண்டர் வரை பாராட்டும் அளவுக்கு பொறுமைக் கடலாய் விளங்கியவர் அண்ணா.

நகைச்சுவைச் சொட்டச் சொட்டப் பேசி எதிரிகளின் வாயை அடக்குவதில் வல்லவர் ஆப்ரகாம் லிங்கன்.

நகைச்சுவை மணம் வீச மாற்றுக் கட்சியினரும் போற்றும் அளவுக்கு மேடைப் பேச்சுக்கே இலக்கணம் வகுத்தவர் அண்ணா.

மற்றவரோடு எப்போதும் நன்கு பழுகுவார் லிங்கன்.

தனிமையை விரும்பாமல் எப்போதும் தம்மைச் சுற்றி நண்பர் குழாம் சுழ்ந்திருக்க - உரையாடி களித்தவர் அண்ணா.

ஒடுக்கப்பட்ட நீக்ரோ இன மக்களின் விடுதலைக்கு பாடுபட்டவர் லிங்கன்.

தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சிக்காக உரக்க குரல் கொடுததவர் அண்ணா.

வாக்குச் சீட்டில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட லிங்கன், முதன் முதலில் இல்லியனாஸ் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றியைத் தழுவ முடியவில்லை.

வாக்குச் சீட்டின் வரிசையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட அண்ணா அவர்கள் முதன் முதலில் சென்னை மாநகராட்சித் தேரிதலில் பெத்துநாயக்கன்பேட்டையில் வெற்றியைத் தழுவமுடியவில்லை.

ஆப்ரகாம் லிங்கனின் சுருக்கமான வீட்ஸ்பர்க் பேச்சும், அறிஞர் அண்ணா 1956 திருச்சி மாநில மாநாட்டு சுருக்கமான பேச்சும் ஒப்பிட்டுப் பார்த்து மகிழக் கூடியவை.

ஆப்ரகாம்லிங்கன் பிறந்தது - 1809! அண்ணா பிறந்தது 1909!

(நெய்வேலி சுப்பிரமணியன் - கழகக்குரல் இதழ் - 29.09.1974)

அண்ணா!
அழுகின்றபோதும்
மேகம் போல் அழுதவன் நீ!
விழுகின்றபோதும்
விதையைப்போல் விழுந்தவன் நீ!

அண்ணா! உன் பெயரிலேயே நீ உறவு கொண்டு வந்தாய்!

பெரியாரோ, காட்டுத் தீ
நீயோ அந்தத் தீயிலே ஏற்றிய
ஒரு திருவிளக்கு

வெறும் தலைகளை எண்ணிய தலைவர்களிடையே
இதயங்களை எண்ணியவன் நீ

உன் எழுதுகோல்
தலை குனியும்போதெல்லாம்
தமிழ் தலை நிமிர்ந்தது.

தொண்டை புரிவதற்கே
தோன்றியவன் என்பதற்கோ
தொண்டை நாடு உன்னுடைய தொட்டில் நாடு ஆக்கி வந்தாய்?

(அண்ணாவின் மரணம்)
அன்று இறந்ததோ நாம்;
புதைத்ததோ உன்னை!

நம்மைப்போல்
பைத்தியக்காரர்கள் யார்?
உடல்களைப் புதைக்கும்
உலகத்தில்
அன்று நாம் ஓர்
உயிரைப் புதைத்தோம்!

கடற்கரையில் பேசுவாய்
கடலலையில் மீனாவோம்
கடற்கறையில் தூங்கிவிட்டாய்
கடற்கரையில் மீனானோம்.

இங்கே புதைக்கப்பட்டது
பெறும் மனித உடலல்ல;
எங்கள்
வரலாற்றுப் போழை.

நீ மண்ணுக்குள் சென்றாலும்
வேராகத்தான் சென்றாய்.
அதனால்தான்
எங்கள் கிளைகளில்
இன்னும் பூக்கள்
மலர்கின்றன.
(கவிக்கோ அப்துல் ரகுமான்)

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai