அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும்
( டாக்டர். அண்ணா பரிமளம் )

பாகம் -18

லெராய்மெக்பீஸ் பாராட்டு
(லெராய்மெக்பீஸ் சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தைச் சேர்ந்தவர்; சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் அனைத்துக் கல்லூரி மாணவர்கள் சார்பில் - அறிஞர் அண்ணா அவர்களின் 61-வது பிறந்த நாள் விழாவையொட்டி நடைபெற்ற கருத்தரங்கில் (15.09.69) உரையாற்றுகையில், (29.09.74 - கழகக்குரல்)

மாபெரும் தலைவர் - அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் மறைந்துவிட்டார்; அவரைப் போன்ற ஒருவரை இனி என்றும் காண முடியாது!

ஆனால் அவர், தாமே எடுத்துக்காட்டாக வாழ்ந்து கற்பித்தாரே - மனித மாண்பு, மனித சமத்துவம் என்னும் கொள்கை - அது என்றும் நிலைத்து வாழ்ந்து வரும்! அவரது பிறந்த நாளில் மட்டுமன்றி - ஆண்டு முழுவதும் ஒவ்வொரு நாளும் - அதனைப் போற்றிக் காத்தல் வேண்டும்!

வரப்போகும் பல தலைமுறைகள், அவரது பிறந்த நாளைக் கொண்டாடும்; அவரது அருஞ்செயல்களை அகிலமெல்லாம் போற்றிப் புகழும்; நெடுங்காலத்துக்கு அவரது அருஞ்செயல்கள் நினைவுகூரப்படுமாயினும், அண்ணாத்துரையின் பண்புகளும் - மனிதர் என்னும் முறையில் அவர் பற்றி நின்ற கொள்கைகளும் பன்னெடுங்காலம் நிலைத்து வாழும்!
அறிவு அடிப்படையில் செயல்கள் புரிந்த பெரியோர்கள் பெரும்பாலோரைப் பொறுத்தவரை, இதுவே உண்மை என்று வரலாறு நமக்குப் புலப்படுத்துகிறது; இவ்வகைப் பெருந்தலைவர்கள், எப்போதோ ஓரிருவர் தோன்றுகின்றனர் என்று சொல்லத் தேவையில்லை!

அவரை நான் சந்தித்தது - அவரது வாழ்வின் இறுதி நாட்களில்தான்; எனினும், அவரது உள்ளம் ஓர் இளைஞனின் மனதைப் போலக் கூர்மையாகவும், உடனே உணர்ந்தறிவதாகவும் விளங்கியது.

அவரது பொறுமைக்கும் - நகைச்சுவைக்கும் எல்லையே இல்லை!

மக்கள் அனைவரும் சமமானவர்கள் என்பதில் அவருக்குள்ள நம்பிக்கை, அவரது சின்னஞ்சிறு செயல்களிலும், சொற்களிலும் ஒளிபட மிளிர்ந்தது.

எனவே 1968 இளவேனில் காலத்தில் அவர், யேல் பல்கலைக் கழகத்துக்குச் சென்றார். பெரும் வெற்றி கண்டார் என்பதில் வியப்பேதுமில்லை!

ஈடு இணையற்ற வெற்றி
மாணவர்களையும் - பேராசிரியர்களையும் யாரும் எளிதில் கவர்ந்துவிட முடியாதென்பது உங்களுக்குத் தெரியும்; ஏனெனில், அவர்கள் நூல்களின் வாயிலாக எந்நாட்டையும் - எக்காலத்தையும் சேர்ந்த பெரியோர்களுடன் உறவாடும் வாய்ப்புப் பெற்றவர்கள்;
ஆனால், யேல் பல்கலைக் கழகத்தில் அண்ணா அடைந்த வெற்றி ஈடு இணையற்றது; இது எனக்கு நேரடியாகத் தெரிந்த ஒன்று; ஏனெனில், நான் படித்ததும், யேல் பல்கலைக்கழகத்தில்தான்!

இங்கு நான் மற்றொன்றும் கூற விரும்புகிறேன்; இந்திய நாட்டுக்கு அமெரிக்கா அனுப்பித் தந்த தலைசிறந்த அமெரிக்கப் பிரதிநிதிகள் - தூதர் செஸ்டர் போல்ஸ், தூதர் எல்ஸ்வர்த் பங்கர்; இருவரும் படித்த பல்கலைக்கழகமும் யேல் தான்; எனவே, என் வாழ்க்கையில் பெரிதும் இடைவெளியுள்ள இருவேறான காலங்கள் - அன்று யேல் வாழ்க்கை; இன்று சென்னை வாழ்க்கை - அன்புக்குரிய அண்ணாவின் பிறந்த நாளன்று, என்றும் நினைவில் நிலைபெற்று விளங்கும் இனிய நாளன்று மீண்டும் ஒன்று சேருவது குறித்துப் பெருமைப்படுகிறேன்.

வைரம் போன்ற நம்பிக்கை
மனித உயிரின் மாண்பில் வைரம் போன்ற நம்பிக்கை வைத்திருந்தவர் முதலமைச்சர் அண்ணாத்துரை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்; எனவே, இறுதியாக அவர் நோய்வாய்ப்பட்டிருந்தபோது கூட, முடிவே இல்லாமல் மக்கள் சாரிசாரியாக அவரை வந்து பார்த்த வண்ணமிருந்தார்கள்.

அவர், ஒருபோதும் முகம் சுளித்தவலல்லர்! ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவருக்கு டாக்டர்கள் யோசனை கூறியிருந்தும், அவர் யாரையும் பார்க்க மறுக்கவில்லை; அவரது இனிய புன்னகையும் அன்பு மணக்கும் தோற்றமும் - மின் விசை போன்ற அவரது அன்பர்கள் அனைவருக்கும் நம்பிக்கையும், ஆறுதலும் நல்கின!

எவரால் மறக்க இயலும்?
அவரது உடல்நிலை மோசமானபோது, கிடைத்தற்கரிய அரிய மருந்துகள் சிலவற்றைப் பெற்றுத் தருவதில் துணை செய்யும் பேறு, அமெரிக்க அரசுக்குக் கிடைத்தது; ஆண்டுக் கணக்காக, மறைந்த தலைவரிடமிருந்து தாம் பெற்ற வரம்பில்லாத நன்மைகளுக்காகத் தங்களிடமுள்ள எதையும் அவருக்குக் கொடுக்க இலட்சக்கணக்கான மக்கள் தவித்துக் கொண்டிருப்பதாகவே, அந்நாள், எனக்குத் தொன்றியது!

என் தலைவன்
எஸ்.எஸ்.தென்னரசு

உலகத்தின் கண் தோன்றி இயங்கிவரும் அரசுக்கட்சிகளில் பலரகக் குணம் பெற்ற தலைவர்கள் இருக்கிறார்கள், நானே தலைவன்; என்னைத் தலைவர் என்று நீங்களெல்லாம் கருதவேண்டும் என்று சொல்லி வருவோரும் இருக்கிறார்கள். தலைவர்! சக்தி மிகுந்த இந்தச் சொல்லை சிலர் பட்டமாகவே கருதிவிடுகிறார்கள். தூய்மையான இலட்சியப் பணிக்காக, துணைநின்று பணியாற்றும் தொண்டர்கள் ஏற்றி வைக்கும் பொறுப்பு - ஆனால் சுற்றிலும் பயங்கரம் நிரம்பிய ஆசனம் அது. என்றென்றும் அந்த ஆசனம் என்னுடையதே என்று சொல்லக்கூடிய காலம் எப்போதோ செத்துப் போய்விட்டது!

இந்தக் காலம் ஜனநாயகத்தின் பொற்காலம் .. காங்கிரஸ் கட்சிக்கு அல்ல) இவரே என் தலைவர்! அவர்தான் என் தலைவர் என்று தனக்குப் பதமானவர்களாகத் தோன்றுபவர்களை உணர்ந்து கௌரவிக்கப்படும் காலமிது, இப்படிப்பட்ட தலைவர்களில் காரணகாரியங்களோடு மதிக்கப்பட்டு உலக அறிஞர்களில் ஒருவராக எண்ணத் தகுந்தவர் திராவிடர் தலைவர் அறிஞர் அண்ணா அவர்கள். வெகு தூரத்தினின்று நோக்குபவருக்கும், விழிகளிலே கருப்புக் கண்ணாடி போட்டுக்கொண்டு கழுத்தைச் சாய்த்தபடி பார்ப்பதற்கும், ஒரே மாதிரித் தொற்றமளிக்கும் ஒரு நூற்றாண்டின் பேரறிஞர் அவர். அண்மைக் காலத்து அரசியல் வரலாற்றில் எவரும் தாங்கிக் கொள்ள அஞ்சும் அடைமொழியை - மக்கள் தந்த புகழ்த் தழும்பைச் சூட்டி நிற்கும் சுய சிந்தனையாளர். அடைமொழிகளைத் தாங்கிக் கொள்வது என்பது இலகுவான காரியமன்று! தொழில் பற்றிய பட்டப் பெயரைத் தாங்குவதைக் காட்டிலும், பணம் போடுத்து விலைக்கு வாங்கிய கொளரவச் செல்லப் பெயர்களைத் தாங்குவதைக் காட்டிலும், மூளை குறித்துத் தரப்படும் அடைமொழி இருக்கிறதே அதைத் தாங்குவதற்குத்தான் உள்ள உரமும், தன் சிந்தனையில் திடமான நம்பிக்கையும் அதிகம் வேண்டும்.

இந்த நூற்றாண்டில், நாடு தந்த அடைமொழியும், அபரிமிதமான கௌரவத்தையும் காத்துக் கொள்ளத் தக்க உள்ள உரம் பெற்றவர் என் தலைவர், அறிஞர் அண்ணாதான் என்று என்னால் துணிந்து கூறமுடியும்.

நான் இவ்வளவு நம்பிக்கையோடு எழுதுவதற்குக் காரணம், அவர் எழுத்தில் வல்லவர், எழுச்சியூட்டும் போச்சளர் என்பதற்காகவோ அல்லது இந்த இரண்டு வகைத் திறமைகளைப் பெற்றிருக்கும் வேறு சிலரிடம் இல்லாத கசப்புத் திறமை, அடக்கமுடமை, தலைவர் அறிஞர் அண்ணா அவர்களிடம் இருப்பதற்காகவோ அல்லது பண்டித நேருவிடம் இல்லாத பெருந்தன்மையும், ஆச்சாரியாரிடமில்லாத நேர்மையான யூகமும், காமராசரிடம் இருப்பதைப் போல் பதின் மடங்கு உதிரிகளை ஒதுக்கிடும் நெஞ்சுறிதியும் தலைவர் அறிஞர் அண்ணா அவர்களிடம் இருக்கிறது என்பதற்காகவோ அல்ல. ஒரு அரசியல் கட்சி ஏன் உதயமாகிறது என்பதை உணர்ந்த தலைவன் - அறிஞன் - அண்ணா அவர்கள்தான். எப்போதும் யாரிடமும், இதுபற்றி என்னால் வாதிக்க முடியும்.

உலக வரலாற்றில் மக்களைத் தன் வயப்படுத்திய தலைவனும், தன் கருத்தை மக்களை கற்றுக்கொள்ளவைத்த தலைவனும் இரண்டே இரண்டு பேர்கள்தான். ஒருவர் காலஞ்சென்ற பெருந்தகை லெனின்; மற்றொருவர் மதிப்பிற்குரிய தலைவர் அண்ணா அவர்கள்.

இந்தியத் துணைக்கண்டத்தில் எத்தனையோ அரசியல் கட்சித் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். எந்தெந்த வகைகளிலேயோ அவர்களுக்கெல்லாம் புகழ் வந்து கொணடிருக்கிறது. ஆனால் அத்தனை பேரும், தாங்கள் எந்தெந்தக் கட்சிகளுக்கு முன்னோடிகளாக இருக்கிறார்களோ அந்தக் கட்சியின் மக்களையே அவர்கள் கடைசிவரை சரிவரப் புரிந்து கொள்ளாதவர்களாகவே இருக்கிறார்கள். அதனாலேதான் சில கட்சிகளின் போராட்டங்கள் பெரும்பெருந் தோல்விகளைக் கண்டு பிடிக்கின்றன! தலைவர் அறிஞர் அண்ணா அவர்கள் மக்களின் மனோபாவம் அறிந்தவர். அவர்களின் மனப்பக்குவத்தை உணர்ந்து நடக்கும் வல்லமை பெற்றவர், மற்ற கட்சிக்காரர்களின் போராட்டங்கள் தோல்வி காண்பதற்கும், அண்ணா அவர்களின் அறிக்கைகண்டு களம் புகுந்த மும்முனைப் படைகள் பெருமித வெற்றி காண்பதற்கும் இதுதான் மூலக்காரணம், மக்கள் சக்தியை உணர முடியாத தலைவர்களிடம் அகில இந்தியக் கட்சிகள் அடங்கிக் கிடக்கின்றன. தான் நினைக்கும் கருத்துத்தான் சரி என தொண்டர்கள் நம்ப வேண்டும் என்று காட்டளையிடும் சுபாவமோ வலியுறுத்தும் எண்ணமோ அண்ணா அவர்களிடம் அணுவளவும் இல்லை. ஆனால் நான் சொல்வது சரிதான் என்பதைத் தொண்டர்கள் உணர்ந்துகொள்ள அவர்களுக்குப் பல சந்தர்ப்பங்களை அவர் அளிப்பதுண்டு. அந்த நுண்ணறிவு - ஆராய்ச்சித் திறன் இருப்பதாலேதான் அண்ணா அவர்களால் ஒரு பெரும் சாதனையைச் சாதிக்க முடிந்தது.
என்ன அந்த சாதனை?

காங்கிரஸ் மகா சபையிலிருந்து சக்தி மிகுந்த தலைவர்களெல்லாம் வெளியேறி இருக்கிறார்கள். ஆச்சாரியா கிருபளானி, ஜெயப்பிரகாஷ், ஆசப் அலி, முத்துராமலிங்கத் தேவர் - இப்படி பேச்சாற்றல் மிக்க தலைவர்களெல்லாம் விலகியிருக்கிறார்கள். இவர்களில் ஒருசில தலைவர்களைப் பின்பற்றி ஒருசில தொண்டர்கள் வந்திருக்கிறார்கள். வேறு பல தலைவர்களோடு அந்தச் சிலரும் இல்லாமல் மேல் துண்டொடு அவர்கள் வெளியேறி இருக்கிறார்கள். அண்ணா அவர்களுக்கும் மற்றவர்களுக்முள்ள உயர்வு தாழ்வு இங்கேதான் உள்ளங்கை நெல்லிக் கனியாகிறது, திராவிட கழகச் செயல் முறைகளினின்றும் அண்ணா அவர்கள் ஒதுங்கி நிற்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது, அவர்கள் மட்டும்தான் ஒதுங்கி நின்றார்களே தவிர தனக்கென ஒரு கும்பலைச் சேர்த்துக்கொண்டு அவர்களையும் ஒதுங்கி நிற்கும்படி அண்ணா அவர்கள் வற்புறுத்தவில்லை. தானும் கட்சியைவிட்டு தூரப்போய்விடவில்லை. அவ்வாறு அண்ணா செய்திருக்கமுடியும். ஆனால் அந்தத் தனி முகாமை, தூரத்தே நின்று இயக்கதிற்கு சக்தி சேர்த்துக் கொண்டிருக்கும் தொண்டர்கள் ஆதரிக்கமாட்டார்கள் என்பதே அண்ணா அவர்கள் யூகித்துக்கொண்டார்கள்.

அப்படித் தனி முகாமைத் தயாரித்துக் கொள்ளவே தயங்கியவர், எப்படி, தான் விலகும்போது, தான் சார்ந்திருந்த தாய்க் கட்சியின் பலத்தை நிர்மூலமாக்கிவிட்டு பெரிய சக்தியையே தன் பின்னால் இழுத்து வரமுடிந்தது? எந்த செய்தியை எப்போது பிறயோகப் படுத்தலாம். அப்படிப் பிரயோகப்படுத்தப்படும் சக்திக்கு மக்கள் சக்தி துணை நிற்குமா? என்பதைத் தெளிவாக அறிந்திருந்தமையே அண்ணாவுக்கு அந்தப் பெருங்குடியேற்றம் பலத்த வெற்றியைத் தந்தது.
பெரியார் ராமசாமி அவர்களிடம் சர்வாதிகாரத் தன்மை இருக்கிறது என்பதை வெளிப்படையாகச் சொல்லிக் காட்ட அண்ணா அவர்களுக்கு பல ஆயிரம் சந்தர்பங்கள் கிடைத்தன. ஆனால் புகைந்ததே தவிர வெடிக்கவில்லை.

வெடித்து ஓசை கிளம்பிய பிறகு வீறிட்டு எழுந்த எதிர் சக்தியைத் தன் வயப்படுத்தும் கரத்தன்மை அண்ணா அவர்களிடம் இருந்தது.

வேறு எந்தக் கட்சியிலாவது இப்படிப்பட்ட மனநிலைகள், மனக்கிலேசங்கள் ஏற்பட்டிருக்குமானால் ஆத்திரப்பட்டு வெளியேறியவர்களெல்லாம் செல்லாக் காசுகளாகியிருப்பார்கள் - எதிர் பார்ப்பதும் அந்த முடிவாகத்தானிருக்க முடியும். அவ்வழக்கமான முடிவை, திசை மாற்றிவிட்ட படியால் விவேகம் நிரம்பப் பெற்ற உலக அறிஞர் அண்ணா அவர்களே ஆவார்கள், அவரை என் தலைவன் என்று சொல்லிக் கொள்வதற்கும் அவர் வாழும் இந்த நூற்றாண்டில் வாழ்வதற்கும் பெருமைப்படாத, ஜனநாயகத்தை விரும்பும் திராவிட இனப் பற்று வாலிபன் தென்னாட்டில் இருக்கமாட்டான்.
(1956 - திராவிடன் பொங்கல் மலர்)


புலவர் அண்ணா!

பூம்புகார் நகரில் தமிழ்ப் புலவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டபோது. பேரறிஞர் அண்ணா ஒரு தமிழ்ப் புலவரா என்ற கேள்வி எழுந்தது.

பாமரனாகிய நான் புலவனல்ல; தமிழ்ப் புலவர்களின் நண்பன் - அவ்வளவே! என்று அதற்குப் பதில் கூறினார் பேரறிஞர் அண்ணா.

அதற்குப் பிறகு பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள், அண்ணா ஒரு தமிழ்ப் புலவரே என்று அடித்துச் சொல்லி, மேலும் தொடர்ந்தார்.

அவையடக்கம்தான் புலவர்களுக்குள்ள முதல் தகுதி; நான் புலவனல்ல - பாமரன் என்ற அவையடக்கத்தோடு கூறி, தானும் ஒரு புலவரே என்று அண்ணா நிரூபித்துவிட்டார். அவரை மறுத்து, இன்று நான் வென்றுவிட்டேன்
- என்றார் கலைஞர்; மகிழ்ச்சி ஆரவாரம் விண்ணை எட்டியது!
(1968 - சமநீதி பொங்கல் மலர்)

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai