அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும்
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பாகம் -14

அண்ணா - ஒரு மருத்துவர்
(சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை)

இளந் தமிழுலகத்தில் - இன்று அண்ணா என்று அருமையாக அழைக்கப்படுகின்றவர் தோழர திரு.அண்ணாதுரை. அவர் ஆயிரம் மேடை ஏறிய அறிஞர். பல்லாயிரம் மக்களின் உள்ளத்தை ஒருங்கே கவரும் சீரிய கூரிய சொல்லாளர். ண்ணின்று கண்ணறச் சொல்லும் திண்ணியர்.

அண்ணாதுரை கலையறிந்தவர். தமிழ் நாட்டின் பழைய நிலையறிந்தவர். மன்னம் இமயமலை எங்கள் மலையே என்று மார்தட்டிக் கூறிய வீரர் வாழ்ந்த தமிழகத்தில் இன்று தோழைகளாய், மோழைகளாய் நாம் குன்றலாகாது; காளைகளாய்க் களிறுகளாய் வாழ்தல்வேண்டும என்று ஆசைப்படுகின்றவர் அவர்.

தமிழ்க் குலத்தை அழிக்கும் வேர்ப் புழுக்களை அழித்தாலன்றித் தமிழகம் தழைக்குமாறில்லை; ஊழ்வினையே பேசி ஆள்வினை அற்றிருக்குமளவும் நாம் உய்யுமாறில்லை என்ற உறதியாகக் கருதுகின்றவர் அவர்.

தமிழ்நாட்டைப் பிடித்த பீடைகள் ஒழிய வேண்டுமாயின் நோய் நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச்செயல் என்று வள்ளுவர் வகுத்த மருத்துவ முறையைத் தயங்காது தமிழர் கையாளுதல்வேண்டும் என்பது அவர் கொள்கை. புண்ணுற்ற மேனியைப் புறம் பொதிந்து மூடுதலால் என்ன பய்ன? என்பது அவர் கேள்வி.

மதிநலம் வாய்ந்த மருத்துவர் அழுகிய தசையைப் பார்த்து அறுத்தால் தமிழுக்குலம் தலையெடுக்கும் என்பதிவ் என்ன தடை? உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் கள்வரது நச்சுப் பகைமையை நசுக்காவிட்டால் நாடு நலம் பெறுவதெப்படி?

தமிழர வாழவேண்டும், தமிழர் பண்பாடு சிறக்கவேண்டும் என்ற அருமபெருங் குறிக்கோளுடைய அண்ணா அவர்கள் நீடூழி வாழ்க என வாழ்த்துகின்றேன்.
(அண்ணா வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்ச்சிகள் - நூல்)


அண்ணா - ஒரு புதையல் சாமிகைவல்யம்

அண்ணாவின் புத்தியின் விசாலமும, அறிவின் சக்தியும், என் கூட்டத்தில் யாருக்கும் இருந்ததில்லை. அவர் நமக்கு ஓர் புதையல்தான். இதுவரையிலும் கிக்காததுமாகும். அவருடைய வளர்ச்சி, அவரிடமிருந்தே வளரவேண்டும். அதைக் கேட்டும், கண்டும, நான் திருப்தியடையவேண்டும். அண்ணாதுரையை நான் திட்டிக்கொண்டேயிருக்கிறேன். ரஸ்கின் என்ற ஒரு மேதாவி மேனாட்டிலிருந்தார். அநேக பெரிய மனிதர்கள் அவரிடம் வந்து புத்திமதி கேட்டுக்கொண்டு போவார்களாம். திண்ணையிலமர்ந்திருக்கும் அவ்ர தகப்பன், வருகிறவர்கள், போகிறவர்களிடம் என் பிள்ளைக்குக் கொஞ்சம் புத்தி சொல்லிப் போங்கள் என்பாராம். அதுபோல என்னிடம் வருகிறவர் போகிறவர்களிடம் அண்ணாதுரைக்குக் கொஞ்சம் புத்தி சொல்லுங்கள் என்று சொல்கிற எண்ணத்தில் உடையவன் நான். என் காலத்தில் இக்காலத்தே போன்று உணர்ச்சி மிக்க இளைஞர்கள் குறைவு. இனி எல்லாம் இளைஞர்கள் பார்த்துக்கொள்ளவேண்டியது. இளைஞர்களுக்கு உற்ற வழிகாட்டியாய் அண்ணா விளங்குவார் என்பது என் ஆசை! வாழ்க தமிழ்! வாழ்க அண்ணா!
(அண்ணா வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்ச்சிகள் - நூல்)


அண்ணா தனி மனிதரல்ல - ஓர் வரலாறு!

முல்லை சக்தி

நீண்ட மலைத் தொடர்கள்; அகண்ட ஆறுகள்; விரிந்து பரந்த நிலப்பரப்பு; பூத்துக்குலுங்கும் எழிற்சோலைகள்; தித்திக்கும் கனிவகைகள்; எத்திக்கும் மணம் பரப்பும் அதில்; கத்தும் கடலில் முத்து; பூமியெல்லம் கனிவர்க்கங்கள். பூவையர் முகமெல்லாம் நிலவு. ஆடவரெல்லாம் சிங்கக்கூட்டம். பாடி வரும் தென்றல்; ஆடிவரும் மயில் இவையெல்லம் ஒரு நாட்டின் வளத்தின் விளம்பரப் பலகைகள்; பொருளாதாரப் புள்ளிகள், செல்வத்தின் சிறப்புகள், இவைகள் மட்டும் போதாது நாட்டின் புகழ்பாட ஒவ்வொரு நாட்டிலும் பிறந்து தவழ்ந்து தொண்டாற்றிய தூயவர்கள், காவியம் புனையும் கவிஞர்கள், ஓவியப் புலவர்கள், எழுத்துச் சிற்புகள், தத்துவவாதிகள், அரசிய்ல தலைவர்கள் ஆகியோரால்தான் ஒரு நாட்டின் புகழ் மணக்கிறது, நாட்டின் புகழையும் பெருமையையும் உலகிற்கு எடுத்துக் காட்டும கண்ணாடியே இந்த விற்பன்னர்கள்தான், அவர்களால்தான் ஒரு நாட்டின் வளமே பூரணத்துவம் அடைகிறது.

வால்டேல் ரூசோ இந்த இரண்டு நாமதேயங்கள் இன்றும் பிரேஞ்சு நாட்டின் பெருமையைப் பறைசாற்றுகிறது. பெர்னாட்ஷா, ஷேக்க்ஸ்பியர், இங்கிலாந்திற்கு புகழாரம் சூட்டியவர்கள், அயர்லாந்தின் மதிப்பு டிவேலராவால் உயர்ந்தது. மார்டின் லூதர், மாலினி இத்தாலியின் தேனருபிகள், உலகுக்கெல்லாம் புரியதோர் தத்துவத்தை அளித்த லெனினால் இரஷியாவின் புகழ் மணக்கிறது. ஐரோப்பாவின் நோய் என இகழப்பட்ட துருக்கி கமால் பாஷாவினால் இன்ற உலக அரங்கில் வெற்றிகொடி நாட்டியிருக்கிறது. சீர்த்திருத்தச் செம்மல் சன்-யாட்-சன்னால் சீனா பெருமை கொள்ளுகிறது. அமேரிக்காவுக்குப் புகழ்மணி சூட்டியவர் ஆபிரகாம் லிங்கன். சாந்தசொரூபியாம் காந்தியாரின் ஒளி விளக்கால் உலக அரங்கில் மங்கிப் போயிருந்த இந்திய உபகண்டம் பசும் பொன்னாகியது. இத்தகையவரின் பரம்பரையை சார்ந்தவர்தான் அறிஞர் அண்ணா. இவரால் தென்னகம் தமிழகம். புகழடைகிறது. பெருமை அடைகிறது. தலை நிமிர்ந்து நிற்கிறது! அண்ணாவைப் பெற்றதால் தமிழக அன்னையின் முகத்தில் பெருமையும் கர்வமும் ஜொலிக்கிறது; பெற்ற வயிறு பூரிப்படைகிறது. தமிழகத்திற்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. அந்த சிறப்புக்கெல்லாம் மணிமுடி சூட்டியவர் அறிஞர் அண்ணா, தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்த தலைமுறைக்கே அவர் ஒப்பற்ற மகுடம்.

அண்ணா - அறிஞர் என்ற நான்கு எழுத்துகளில் மட்டும் அடங்கிவிடுபவரல்ல. அவருடைய அறிவுக்கு எல்லைகோலுவது முட்டாள்தனம். அவருடைய திறமைகக்கு வரையறுப்பது அறிவீனம், ஆழ்கடலில் ஆழத்தைக் கணக்கிடலாம். வான மண்டலத்தின் எல்லையை வகுக்கலாம். ஆனால் அவரின் அறிவை, திறனை மதிப்பிடுவது என்பது இந்த தலைமுறையினரால் ஆகாததொன்று; ஒரு வேளை வருங்காலம், அவைகளை மதிப்பிடக் கூடும்.
(அண்ணா வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்ச்சிகள் - நூல்)

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai