அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும்
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பாகம் -13

அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்களில் சமுதாயச் சீர்திருத்தக்கருத்துகள்!
(ஆய்வுக் கட்டுரை - டாக்டர்(திருமதி) அம்புயம் யுவச்சந்திரா, எம்.ஏ., பி.டி., எம்.ஃபில்., பிஎச்டி.
தேர்வுநிலை விரிவுரையாளர், தமிழ்த் துறை, இராணிமேரி கல்லூரி, சென்னை - 4)

ஒரு கவிஞனின் படைப்பு சக்தி - ஒரு சிறந்த மேதையின் காந்த சக்தி - ஓர் அரசியல்வாதியின் அறிவு நுட்பம் - சாதாரண மக்களாலும் நேசிக்கப்பட்டும், அவர்களை நேசித்தும் வாழும் எளிமை, அடக்கம், அன்பு அனைத்தும் ஒரே மனிதனில் இணைந்திருப்பது மனிதகுல வரலாற்றிலேயே அபூர்வமாக நிகழ்வதாகும். அப்படிப்பட்ட அபூர்வ மனிதர் அண்ணா - என திருத்தமுறைக் கிறித்துவர் சபையின் முன்னால் பேராயராக இருந்த வெஸ்லி நியூபிகின் என்னும் ஐரோப்பியக் குரு அண்ணாவைப் பற்றிய ஓர் அருமையான மதிப்பீட்டைக் கொடுத்துள்ளார்.

அண்ணாவை நினைக்கும்போது எது நினைவுக்கு வருகிறது? பேச்சா? எழுத்தா? நாடகமா? உரையாடலா? அன்பா? பணமா? அருளா? எல்லாத்துறைகளிலும் ஒரு மனிதனை வினைக்கிற நேரத்தில் இப்படி ஞாபகம் வருகிறதென்றால் இதற்குப் பெயர்தான் எனன? - இது கவிஞர் என்.வி.கலைமணி என்பாரின் அண்ணாவைப் பற்றிய கணிப்பு.

இவ்வாறு அண்ணாவைப் புகழ்வோர் அனைவரும் அவரிடத்து இயல்பாகவே அமைந்திருந்த உயர்ந்த மனிதப் பண்பைப் புகழ்வதுடன், அவருடைய படைப்பிலக்கியத் திறத்தைவும் சேர்த்தே புகழ்கின்றனர். இதற்குக் காரணம், இருபதாம் நூற்றாண்டில் மறுமலர்ச்சி பெற்ற இலக்கிய வகைகளாகிய சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை கடிதம் ஆகியவற்றை தமது ஒப்பற்ற எழுத்தாற்றலால் அணிசெய்த பெருஞ் சிறப்புக்கு அவர் உரியவரானதே.

அறிஞர் அண்ணா இலக்கியப் பணிபுரிந்த காலம் பல்வேறு முரண்பாடுகள் மிக்க அவலம் நிறைந்த காலம். ஆதிக்கக் கொடுங்கோன்மை மேலேலங்கி, மக்கள் தங்களைத் தாங்களே புரிந்துகொள்ளாத காலம். சமுதாயச் சீர்கேட்டுக்கு ஆணிவேராக விளங்கிய சாதி சமய வேறுபாடுகள், மூட நம்பிக்கைகள், போலியுணர்வுகள் நிறைந்து தமிழ்ச் சமுதாயம் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த காலம். ஏ! தாழ்ந்த தமிழகமே! என விழித்துத் தமிழ் மக்களது உயர்ந்த பண்பாட்டை அவர்கட்கு எடுத்துக் கூறி விழித்தெழச் செய்யவேண்டிய அவசியம் மிக்கிருந்த காலம். இலக்கியத் துறையிலும் பண்டைப் புராணங்களை ஆராய்ச்சி செய்வதுதான் பெரும் புலமை என்று பழமை விரும்பிகளாக மயங்கி நின்ற காலம். இந்நிலையைக் மாற்றியமைக்க அண்ணா தமது நாவன்மையால் மேடைப் பேச்சுகளாலும், எழுத்தாற்றலால், புதினம் ஆகியவற்றின் வாயிலாகப் பெரும் புரட்சி செய்யவேண்டியதிருந்தது.

அண்ணா வரலாற்று அடிப்படையிலே சில தொடர் கட்டுரைகள் எழுதினார். மக்கள் கருத்திலே தெளிவும் துணிவும் ஏற்படுத்துவதற்காகவும், வெளியுலகத் தொடர்புகள் மிக விரைவாகவும் மிகுதியாகவும் வளர்ந்துகொண்டு வருவதால் பல்வேறு நாட்டு நிலைமைகளையும், நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சிகள் பற்றியும் மக்கள் அறிந்துகொள்ளவேண்டுமென்றும் ஆர்வத்தை தூண்டுவதற்காகவும் அவை எழுதப்பட்டதாகவும் அண்ணா குறிப்பிட்டுள்ளார். ரோமாபுரி ராணிகளின் லீலா விநோதம், வீனஸ் என்ற புனைபெயரால் திராவிட நாட்டில் தொடர் கட்டுரைகளாக வெளி வந்தது. மக்கள் கரமும் மன்னன் சிரமும், அரசாண்ட ஆண்டி, இதயம் இரும்பானால் என்பன போன்ற வரலாற்று ஓவியங்களையும், ஆங்கில எழுத்தாளர் இர்விங் வாலஸ் எழுதிய மனிதன் என்னும் கற்பனை எழுத்தோவியத்தையும் தொடர்ச்சியாக திராவிட நாடு, காஞ்சி ஆகிய இதழ்களில் எழுதி வந்தார்.

அண்ணா உளங்கொண்ட சமுதாயச் சீர்திருத்தம் யாது என்பதை நாம் அறிந்துகொண்டால்தான் அவர் தம் குறும்புதினங்களின் உயிர்ப்பை உணர முடியும். அண்ணாமலைப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் அவர் ஆற்றிய பேருரை இதனை நமக்குத் தெளிவாக விளக்குகிறது.

சாதி பேதங்களைச் சாடுங்கள் - அவை ஜனநாயக மரபுக்குச் சற்றேனும் பொருத்தமற்றவை என்பதால். மூட நம்பிக்கைகளை அனைத்தையும் மண்மூடிப் போகச் செய்யுங்கள் - அவை விஞ்ஞான புகத்திற்குக் கிஞ்சித்தும் ஒவ்வாதன என்பதால் ஆணவம், அகங்காரம் ஆதிக்கச் செல்வாக்கு ஆகியவை எந்த உருவத்தில் ஆதிக்கஞ்செலுத்த தலை தூக்கினாலும் அந்த ஆதிக்கக் கொடுமையை அடக்குமுறைப் பிடியினை அடியோடு முறித்தெரியுங்கள் - சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய சமரசக் கருத்தூட்ட வாழ்விற்கு ஆதிக்கவுணர்வு பேரெதிரி என்பதால் என முழங்கி பட்டதாரி இளைஞரைச் சாதிபேதம், மூடநம்பிக்கை, ஆதிக்கக் கொடுங்கோண்மை ஆகியவற்றிற்கெதிரான அறிவுப்போர் - பொதுநலப் போர் - சமுதாயத்தைச் செம்மைபடுத்திடும் புனிதப்போர் நடத்திட விடுக்கும் அறைகூவல், சமுதாய விடுதலையில் அண்ணாவுக்கு இருந்த அளவற்றஆர்வத்தைப் புலப்படுத்துகின்றது. இப்பேருரையில் பகுத்தறிவு என்பதற்கு விளக்கம் தருகிறார். நம்பகமற்ற, ஊசலாட்டமான, நம்பிடும் தகுதியுமற்ற முறைகள் - நெறிகள், செயல்கள் விளக்கங்கள், செயற்படுமுறைகள், ஐயுறவுக்குரிய சிந்தனைகள் தெளிவற்ற எண்ணங்கள் - ஏற்பாடுகள் எனப்படுவனவெல்லாம் உடலூட்டமும் உயிரூட்டமும் அற்றுப் பூண்டோடு அழிக்கப்படவேண்டும் என்பதே. பகுத்தறிவு பயிரைவிடக் களைகள் மலிந்திடின் என்ன பலன் கிட்டிடும்! நல்லெண்ணப் பயிர் தழைத்துச் செழித்திட வேண்டின் நச்சரவுக் கருத்தினைக் களைதல் மெத்தவும் தேவையனறோ?

மேலே கூறப்பட்ட பகுத்தறிவின் அடிப்படையில் எழுந்த சமுதாய சீர்திருததக் கருத்துகளின் பிரதிபலிப்பாகவே அண்ணாவின் குறும்புதினங்கள் அமைந்திருக்கக் காணலாம். சிற்சில இடங்களில் கலையுணர்வு அடங்கி, கொள்கை பரப்பும் நோக்கம் மேலோங்கி நிற்கின்ற திறத்தையுணர்ந்த புணித இலக்கியத் திறனாய்வாளர்கள் இக்குறையைச் சுட்டிக்காட்டுகின்றனர். எனினும் நேரடிப் பிரச்சாரத்திற்கு ஏற்ற பாத்திரப் படைப்புகள் இவர்தம் குறும்புதினங்களில் அமைந்துள்ளமையால் இக்குறை கூறுவதற்கில்லை. இப்புதினங்களுக்கு மக்கள் அளித்த வரவேற்பே இதனை உறுதிப்படுத்தும். காலச் சுருக்கங் கருதி, குமரிக்கோட்டம், கபோதிபுரக் காதல், குமாஸ்தாவின் பெண், என்னும் இம்மூன்று குறும்புதினங்களில் வெளிப்படுத்தப்படும் அண்ணாவின் சமுதாயப் பார்வையை ஈண்டு எடுத்துக்காட்டுவது பொருந்தும். இம்மூன்று குறும்புதினங்களிலும் படைக்கப்பட்டுள்ள பெண் பாத்திரங்கள் சமுதாய சீர்கேடுகளான சாதி மத பேதங்கள் பொருந்தா மணம், பெண்ணடிமைத்தனம், மூடநம்பிக்கைள் ஆகியவற்றால் நிலைகுலைந்து நிற்கும் அவலம் சுட்டப்பட்டு அவற்றிற்கு நல்ல தீர்வு காட்டப்படுகின்றது.

இங்கிலாந்தில் டிக்கன்சின் புதினங்களும், ரஷ்யாவின் டால்ஸ்டாய், டாட்டாய்வ்ஸ்கி, செக்காவ் முதலியோரின் படைப்புக்களும் குறிப்பிடத்தக்க சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளமையைக் காலம் நமக்கு அறிவுறுத்தியுள்ளது. நம் தமிழ்ச் சமுதாயத்திலும் குறிப்பிடத்தக்க, வியக்கத்தக்க வகையில் அண்ணாவின் இலக்கியப் படைப்புகள் சமுதாய விழிப்புணர்ச்சியைத் தோற்றுவித்தன.அண்ணாவின் புதினங்களைப் பேரார்வத்துடனும் பெருமகிழ்ச்சியுடனும் அனுபவித்துப் படித்துவந்த இளைஞர் கூட்டம், சாதிபேரமற்ற ஒரு சமுதாயம் உருவாகவேண்டுமென்ற துடிப்புடையோராய்த திகழ்ந்தனர். இளைஞர்கள் பேரெதிர்ப்புக்கிடையில் கலப்புத் திருமணம் செய்து தம்மைப் புதிய சமுதாயச் சிற்பிகளாக்கிக்கொண்டனர்.

திராவிடர் இயக்கதில் சமுதாயச் சீர்திருத்தக் கொள்கைக்கு நல்ல எதிர்காலம் உருவாகியது. பெண்கள் உரிமை, சாதியொழிப்பு, பிரோகிதம் நீங்கிய திருமணம், கலப்பு மணம் ஏராளமான நிகழுங்காலம் வந்துவிட்டது. படித்தவர்களின் வீட்டிலும், பெரிய பணக்காரர்களின் வீட்டிலும், உயர்ந்ந சாதியினர் என்று ஒரு காலத்தில் கூறி வந்தவர்கள் வீட்டிலும் ஏராளமான இளைஞர் சமுதாயக் கருத்தின் தூதுவர்களாக அமைந்தனர். அண்ணாவின் நாவன்மையாலும் பேனா நர்த்தனத்தாலும் நமது இயக்கம் வலுப்பெற்றது என்பார் கூற்று இதனை உறுதிப்படுத்துகின்றது.

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai