முடியும்,
முயன்றால்!
1
வாட்டம்
போக்கிடும் வழியைக் காணோம்!
விலை பேசும் வித்தையை அறிவார்கள்!
சிண்டு முடிஞ்சு பார்த்தாச்சு! பங்குச் சண்டை கிளப்புகிறார்கள்!
மும்முனைப் போட்டியை முடுக்கிவிடாதீர்!
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறார்கள்!
வெண்ணெய் திரண்டு வருகிறது! பக்குவம் தேவை!
முள் நீக்கி மலர் பறித்திடுக!
தம்பி!
பஞ்சமும் பட்டினிச்சாவும், பற்றாக்குறையும்
அக விலையும், கிளர்ச்சியும் கலவரமும், அடக்குமுறையும் வன்முறைச்
செயல்களும், மிரட்டிக்கொண்டிருக்கக் காண்கின்றோம். சமூகம் முழுவதிலும்
ஓர் சலிப்புணர்ச்சி கப்பிக்கொண்டிருப்பது விளக்கமாகத் தெரிகிறது.
இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் ஆளவந்தார்களின் திறமைக் குறைவும் ஆணவப்
போக்குமே காரணம் என்று நடுநிலையாளர் பலர் கருத்தறிவித்துள்ளனர்.
மோசமாகிக்கொண்டு வரும் நிலைமையைக்
கண்டு திகைத்துப்போன நிலையில் காங்கிரசின் பெருந்தலைவர்கள், நடைமுறைக்கு
ஒத்துவரவே முடியாத யோசனைகளை வழங்கிக் கொண்டு, செயல் மறந்துகிடந்திடக்
காண்கின்றோம். எங்கே பார்ப்பினும் ஓர் ஏமாற்றம், எரிச்சல்! விட்டேனா
பார்! என்ற விராவேசம்! வீழ்ந்துபடுவதாயினும் நான் எண்ணியதைச் சாதித்தே
தீருவேன் என்ற சூளுரை! கடை அடைப்புகள்! ரயில் நிறுத்தங்கள்! தீயிடல்!
இடித்திடல்! தகர்த்திடல்! இவைகளைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடுகள்!!
- எந்த ஒரு நாகரிக அரசும் சகித்துக்கொள்ள முடியாதன நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
பொறுப்புள்ள எந்த அரசியல் கட்சியாயினும்
இந்த நிலைமையை, வன்முறையை ஆதரிக்கலாமா? கண்டித்திட வேண்டாமா? என்று
ஆளுங்கட்சி பிற கட்சிகளைக் கேட்கிறது.
கிளர்ச்சிக்காரர்களோ, "இவ்வளவு
மோசமான நிர்வாகத்தை, பொறுப்புள்ள எந்தக் கட்சியேனும் ஆதரிக்க முடியுமா?
கண்டித்திட வேண்டாமா?'' என்று கேட்கின்றனர்.
சட்டமும் சமாதானமும் நிலவிட வேண்டும்;
ஒழுங்கு முறை காப்பாற்றப்பட வேண்டும், எக்காரணத்தைக் கொண்டும்,
எத்தனை சிக்கலுள்ள பிரச்சினையாக இருப்பினும், வன்முறை மூலம் தீர்வு
காணலாம் என்ற நினைப்பே எழலாகாது என்பதிலே தளராத நம்பிக்கைக்கொண்டுள்ள
நம் போன்றவர்களின் நிலைமை, தம்பி! மிகவும் சங்கடத்துக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது.
கட்டடங்கள் தகர்க்கப்படுவதையும்,
ரயில்கள் கவிழ்க்கப் படுவதையும் காணும்போது எப்படி நமது மனம் பதறுகிறதோ
அதுபோலவே, மக்கள் விரட்டி விரட்டி அடிக்கப்படுவதையும், சுட்டுக்
கொல்லப்படுவதையும் காணும்போதும் மனம் பதறத்தானே செய்கிறது! இதிலே
எதைத் தொடர்ந்து எது நடைபெறுகிறது? எதன் விளைவாக எது நடைபெறுகிறது
என்று கண்டறியத்தான் முடிகிறதா? கண்டறிவதுதான் எளிதா? இல்லையே!
கிளர்ச்சி நடாத்துவோர் கூறுகின்றனர், பொதுச் சொத்துக்களுக்கு நாசம்
விளைவிப்பது நமக்கு நாமே கேடு தேடிக்கொள்வது என்ற சாதாரண உண்மைகூடவா
எமக்குத் தெரியாது - நாங்கள் என்ன அந்த அளவுக்குக்கூடவா அறிவுத்
தெளிவு பெற்றில்லை! நாங்கள் மிக நியாயமான காரணத்துக்காக நடத்தும்
கிளர்ச்சிகளை வேண்டுமென்றே ஒடுக்குவதற்காக, கடுமையான அடக்குமுறையைக்
கட்டவிழ்த்து விடுகிறது இந்த அரசு! அந்தக் கொடுமையைக் காணும் மக்கள்
எமது கட்டு திட்டங்களையும் மீறி வன்முறையிலே ஈடுபடுகின்றனர்; நாங்கள்
என்ன செய்ய? என்று செப்புகின்றனர்.
நியாயம் எங்கே என்று தேடிக் கண்டுபிடிப்பதற்குள்
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருள் சாம்பலாகி விடுகிறது;
விலை மதிக்கொணாத உயிர் பல பறிக்கப்பட்டுப் போய்விடுகின்றன; நாட்டிலே
மறைக்கப்பட முடியாத விதமான வடுக்கள் ஏற்பட்டு விடுகின்றன.
தம்பி! இவைபற்றி நான் இப்போது குறிப்பிடுவதற்குக்
காரணம், இந்தப் பிரச்சினையை அலசிப் பார்த்திட வேண்டும் என்பதற்காக
அல்ல; இத்தகைய மோசமான, வேதனை தரத்தக்க சூழ்நிலையின் பின்னணியில்,
பொதுத் தேர்தல் நடத்தப்பட இருக்கிறதே அதனைக் கவனித்தனையா என்று
உன்னைக் கேட்பதற்காகத்தான்.
சட்டம், சமாதானம், ஒழுங்கு இவைகள்
செம்மையான முறையிலே காப்பாற்றப்பட முடியாத சூழ்நிலையில்,
உணவு நெருக்கடி பஞ்சம், பட்டினிச்சாவு
என்ற அளவு முற்றிவிட்டிருக்கிற சூழ்நிலையில்,
சமூகத்தின் எந்த ஒரு முனையிலும்,
மனநிறைவு இல்லாமல், பிரச்சினைகள் குமுறிக் கொந்தளித்துக்கொண்டிருக்கும்
சூழ்நிலையில், பொதுத் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
புண்ணுக்கு மருந்திட்டு புன்னகையை
வரவழைத்து, மக்களை ஓரளவு மனநிறைவு கொண்டிடச் செய்து பிறகே, பொதுத்
தேர்தலில் தமக்கு ஆதரவு அளித்திடவேண்டுமெனக் கேட்டுக்கொள்ள வேண்டும்
என்றுதான் எந்த ஆளுங்கட்சியும் எண்ணம் கொண்டிடும். ஆனால் காங்கிரஸ்
கட்சியோ, மூட்டிவிட்ட தீ அடங்கா முன்பு மூண்டுவிட்ட வேதனை விரிவாகியுள்ள
வேளையில், ஆத்திரம் பொங்கிடும் நிலையிலே உள்ள மக்களிடம் ஆதரவு
பெற்று பொதுத் தேர்தலிலே வெற்றியைப் பெற்றிட முடியும் என்று நம்புகிறது.
பஞ்சமும் பட்டினியும் கொட்டும் நிலையில்,
பட்டினிச் சாவு கண்களை உறுத்தும் நிலையில், அகவிலை தாக்கிடும்
நிலையில் எப்படி மக்களை அணுகுவது என்ற அச்சமோ, இந்த நிலையில் உள்ள
மக்களிடம் ஆதரவு திரட்டிட முடியுமா என்பதிலே ஐயப்பாடோ, துளியும்,
காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு இருப்பதாகத் தெரியக் காணோம்.
இதனை என்னென்பது? துணிச்சல் என்பதா? அல்லது மக்கள் வேதனையிலே தத்தளிக்கும்
வேளைதான் அவர்களின் ஓட்டுகளைப் பறித்திடுவதற்கு ஏற்ற வேளை என்ற
திட்டம் என்பதா? புரியவில்லை.
பஞ்சத்தைப் போக்க, பற்றாக்குறையை
நீக்க, உணவு நெருக்கடியை நீக்க, அகவிலையைக் குறைக்க, எடுத்துக்
கொள்ளப்படவேண்டிய முயற்சிகளிலே காட்டவேண்டிய தீவிரமோ அக்கறையோ
தென்படுவதைக் காட்டிலும், தேர்தல் பற்றிய தீவிரமும் அக்கறையுமே
அதிகமாகக் காங்கிரஸ் வட்டாரத்திலே தெரிந்திடுவது காண்கிறோம்.
ஆகவே, காங்கிரஸ் கட்சி துணிச்சல்
பெற்றிருப்பது மட்டுமல்லாமல் மக்களின் வாழ்வு பற்றிய அக்கறையுமற்று
இருப்பது நன்றாகத் தெரிகிறது.
இந்தப் போக்கு இவ்வளவு வெளிப்படையாகத்
தெரியும்போது, எதைக்கொண்டு அல்லது எதைக் காட்டி, மக்களுடைய ஆதரவைப்
பெற முடியும் என்று காங்கிரஸ் கட்சி நம்பிக் கொண்டிருக்கிறது என்பது,
உள்ளபடியே புதிராகத்தான் இருக்கிறது.
மக்களைக் கண்டால், வெட்கித் தலைகுனியவேண்டிய
பல செயல்கள், காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புபடுத்திப் பேசப் படுகின்றன.
பாராளுமன்றத்திலே எழுப்பப்படும் புகார்கள், பத்திரிகைகளிலே விவாதிக்கப்படும்
பிரச்சினைகள் ஆகியவற்றைக் கவனிக்கும்போது, காங்கிரஸ் கட்சி மக்களைச்
சந்தித்து தனக்கு ஆதரவு அளிக்கும்படி எந்த முகத்தை வைத்துக்கொண்டு
கேட்க முடியும் என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுகிறது. ஆனால்,
பார்க்கின்றாயே தம்பி! புதிய புதிய படகு மோட்டார்கள் பறக்கின்றன!
புதுப்புது கதர்ச் சட்டைகள் தைக்கப்படுகின்றன! அவர் காங்கிரசில்
சேர்ந்தார்! இவரை இழுத்துக்கொண்டார்கள்! - என்ற பேச்சு பலமாக அடிபடுகிறது.
தேர்தல் வேலையிலே காங்கிரஸ் கட்சி மும்முரமாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுவிட்டிருக்கிறது.
போதுமான அளவு உணவு கிடைக்கவில்லையே!
பசியும் பட்டினியும் கொட்டுகிறதே என்று பதறுகிறார்கள் மக்கள்;
அவர்களைப் பார்த்துக் காங்கிரஸ் தலைவர்கள், "சரி! சரி! இதுவரையில்
திங்கட்கிழமை மட்டும் சாப்பிடாமல் இருந்து வந்தீர்கள் அல்லவா?
இனி வியாழக்கிழமைகளிலும் சாப்பிடாதீர்கள்!'' - என்று யோசனை கூறுவதோடு
தமது பொறுப்பு முடிந்து விட்டதாகக் கருதிக்கொள்கிறார்கள்.
வாரத்துக்கு இரண்டு நாட்கள், கட்டாயப்
பட்டினி கிடக்கவேண்டிய நிலைமைக்கு நாட்டு நிர்வாகத்தை மோசமாக்கிவிட்டதற்காக
வெட்கப்படாமல், வருத்தப்படாமல், அதே காங்கிரஸ் கட்சி, எந்த மக்களைப்
பட்டினிபோடுகிறதோ அதே மக்களிடம் "ஓட்டு'ப் போடும்படியும் வற்புறுத்துகிறது.
போடுவார்கள் என்றும் நம்பிக்கொண்டிருக்கிறது.
தம்பி! படக்காட்சிகளிலே பார்த்திருக்கலாம்.
பாதகன் ஒருவன், ஒரு நல்ல குடும்பத்தை நாசமாக்கி, அக்குடும்பத்துப்
பாவையைச் சிறைப்பிடித்து, அம்மங்கையை அழுத கண்களுடன் இருந்திடும்
போது, சவுக்காலடித்து "ஆடு! ஆடடி அணங்கே! ஆடு! ஐயாவின் மனம் மகிழும்படி
ஆடு!'' என்று கட்டளையிடுவதுபோன்ற சம்பவத்தை. அதுபோல, மக்களைப்
பட்டினிக் கொடுமைக்கு ஆளாக்கிவிட்டு, அதிகாரத்தைக் காட்டி அதே
மக்களை, "போடு ஓட்டு!'' என்று மிரட்டிப் பறித்திடவும் காங்கிரஸ்
திட்டமிடுகிறது.
எதிர்பார்த்ததைவிட மிக அதிகமான
அளவு உணவு நெருக்கடி முற்றிவிட்டிருக்கிறது.
நாலு நாட்கள் தொடர்ந்து மழை பெய்கிறது
என்றால், உணவு அமைச்சர் சுப்பிரமணியம் துள்ளிக் குதிக்கிறார் மகிழ்ச்சியால்,
"பெய்துவிட்டது பெருமழை! பொய்த்துவிட்டது எதிர்க்கட்சியின் ஆரூடம்!
விளைச்சல் அமோகமாக இருக்கப் போகிறது! உணவு நெருக்கடி இனி இராது!''
என்றெல்லாம் சிந்து பாடுகிறார். ஆனால், மழை பெருமழையாவதும், வெள்ளமாகி
விடுவதும், விளைந்ததை அழிப்பதும் நடைபெற்றுவிடுவது காண்கின்றோம்.
மகிழ்ச்சி மடிந்துபடுகிறது; திகைப்பு மேலிடுகிறது; பயிர் மட்டுமல்ல!
அமைச்சர் தயாரித்த புள்ளி விவரங்கள் தீய்ந்துபோய்விடுகின்றன. உணவு
நெருக்கடி பயங்கரமான வடிவம் எடுக்கிறது.
தேவைப்படும் அளவுக்கு உணவுப் பொருள்
கொடுத்துக்கொண்டு வருவோம் என்று அமெரிக்கா கூறிவிட்டது. ஆகவே,
உணவு நெருக்கடி பற்றிய பயம் வேண்டாம், போதுமான உணவுப் பொருள் கப்பல்
கப்பலாக வந்துகொண்டிருக்கும் என்று அமைச்சர் பெருமிதத்துடன் பேசி
வந்தார்.
இப்போது அமைச்சரின் குரலிலே வருத்தம்
தோய்ந்திருக்கக் காண்கின்றோம்.
ஆகஸ்ட்டு மாதமே கேட்டோம், உடனடியாக
உணவுப் பொருள் அனுப்பிக் கொடுக்கும்படி, வரக் காணோம் என்று வருத்தம்
தெரிவிக்கிறார்.
அமெரிக்காவின் போக்கிலேயே ஒரு தீடீர்
மாறுதல் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உணவுப் பொருள் அனுப்பிக் கொடுக்கும்
திட்டம் முடக்கப்பட்டுவிட்டிருப்பதாகத் தெரிகிறது.
இதற்கான காரணம் என்ன என்று ஆராய்ந்துகொண்டிருப்பதன்
மூலம் அருவருப்பு தரத்தக்க சில அரசியல் பிரச்சினைகளைக் கிளறிக்கொள்ள
முடியும்! வேறு உருப்படியான பலன் ஏற்பட வழி இல்லை. ஆகவே, அமெரிக்காவின்
போக்கிலே ஒரு மாறுதல் ஏற்படக் காரணம் என்ன என்று ஆராய்வதைக் காட்டிலும்,
ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடியைத் தீர்க்க வேறு எங்கிருந்து உணவுப்
பொருள் தருவிக்கலாம்? எந்த முறையில் என்பது பற்றிய ஏற்பாட்டினைக்
கவனிப்பதே முக்கியமானதாகும்.
ஆனால் காங்கிரசின் பெரிய தலைவர்கள்
இதிலே கவனம் செலுத்துவதைவிட, யாரைப் பிடித்திழுத்து எந்தத் தொகுதியிலே
நிற்க வைக்கலாம் என்பதிலேதான் மிகுந்த அக்கறை காட்டிக்கொண்டுள்ளனர்!
தம்பி! காங்கிரசின் பெரிய தலைவர்கள்,
தமது கட்சியிலே கொள்கைத் தூய்மை மாய்ந்துபோய்விட்டதனாலேயும், தமது
ஆட்சியினாலே மனம் குமுறிப்போயுள்ள நிலைக்கு மக்கள் சென்றுவிட்டதனாலேயும்,
இனி அந்த மக்களுடைய அன்பான ஆதரவைப் பெற முடியாது என்ற முடிவுக்கு
வந்துவிட்டனர். ஆதரவை இனிப் பெற்றுக்கொள்ள, அச்சமூட்டும் முறையையே
மேற்கொள்வது என்று திட்டமிட்டுவிட்டனர். அதற்காக, எவராக இருப்பினும்,
அவருடைய முன்தொடர்புகள் யாதாக இருப்பினும் கவலையில்லை. அவர் பெரிய
புள்ளியா?ஆள் கட்டு உள்ளவரா? ஜாதி உணர்ச்சியைத் தூண்டி பலம் பெறத்
தக்கவரா? பணத்தாலே மக்களை விலைக்கு வாங்கக்கூடியவரா என்ற இவைகளை
மட்டுமே கணக்கில் கொண்டு, புதியவர்களைப் பிடித்திழுத்துக் காங்கிரசுக்குப்
பலம் சேர்க்கின்றனர்.
தம்பி! இரண்டொரு திங்களுக்கு முன்பு
ஒரு நகரத்தில், நமது கழகக் கூட்டம். நான் பேசினேன். அன்று அக்கூட்டத்திற்குத்
தலைமை வகித்தவர், நமது கழகத்தவர், ஆண்டு பலவாக எனக்கு நண்பர்,
காங்கிரசு தோற்கடிக்கப் படவேண்டும் என்பதிலே ஆர்வம் கொண்டவர்.
அவர், அன்றைய கூட்டத்திலே காட்டிய
ஆர்வம், அனைவரும் பாராட்டத்தக்கதாக இருந்தது.
நாலைந்து நாட்களுக்குள், திடீரென
அவரை, அந்தப் பக்கத்துக் காங்கிரஸ் தலைவர்கள் மொய்த்துக்கொண்டு,
அவரை நம்மிடமிருந்து பிரித்து, காங்கிரசில் சேர்த்து, அவரையே அந்தத்
தொகுதியில் நமது கழகத்தை எதிர்த்து நிற்க - காங்கிரஸ் வேட்பாளராக
நிற்க - ஏற்பாடு செய்துவிட்டனர் என்று அறிகிறேன்.
இஃது, மனித இயல்பு எந்தெந்த வகையாகவெல்லாம்
மாறக் கூடியது கெடக்கூடியது என்பதை மட்டுமல்லாமல், ஓட்டு வேட்டையிலே
மட்டும் குறியாக உள்ள காங்கிரஸ் கட்சி எத்தனை விதமான தரக் குறைவான
செயலுக்குத் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் என்பதையும் நாம் உணரும்படி
செய்கிறது.
இந்தப் புதிய வலிவினைத்தான் அவர்கள்
பெரிதும் இன்று நம்பிக்கொண்டுள்ளனர். கொள்கை வலிவையும் அல்ல, சாதனைகளையும்
அல்ல.
அவர்கள் மற்றும் ஓர் விஷயத்தில்
மிக அதிகமான அளவு நம்பிக்கை கொண்டுள்ளனர். மும்முனைப் போட்டியைத்
தவிர்க்க வேண்டும், காங்கிரசை எதிர்க்கும் கட்சிகளுக்குள் ஒரு
தோழமைத் தொடர்பும் தொகுதி உடன்பாடும் ஏற்பட வேண்டும். காங்கிரசல்லாத
ஓட்டுகள் சிதறிவிடும்படி விட்டு விடக்கூடாது என்பதனை நமது கழகம்
வலியுறுத்திக்கொண்டு வருகிறது.
கூட்டு என்றும் எதிர்ப்பு அணி என்றும்
உடன்பாடு என்றும் பல்வேறு விதமாகப் பெயரிட்டு அழைக்கப்படும் இந்த
ஏற்பாட்டுக்கு, நமது கழகம் முதலிடம் கொடுத்திருக்கிறது.
இதற்கான பேச்சு வார்த்தைகள் வளர
வளர, கனிவுக்குப் பதிலாகக் கசப்பு வளரும், தோழமைக்குப் பதிலாகப்
பகைமை எழும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
கூடுமானவரையில், இந்தப் பேச்சு வார்த்தைகள்
வெற்றி தராத நிலையை உண்டாக்க வேண்டுமென் பதற்காகக் காங்கிரசுக்
கட்சி தன்னாலான முறைகளைக் கையாண்டு வருகிறது.