சிறப்புக் கட்டுரை

முதல்வர் அண்ணா உரை
அறிஞர் அண்ணா
(அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சரான பிறகு வானொலி மூலம் மக்களுக்கு ஆற்றிய உரை)

நண்பர்களே! உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இன்று சட்டமன்றத்திலே உறுதிமொழி தெரிவித்து பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்நாட்டு மன்னர்களாகிய நீங்கள் பிறப்பித்த ஆணையினை ஏற்றுக்கொண்டு அவர்கள் சட்டமன்றத்தில் அமர்ந்துள்ளனர். அவர்களின் துணையுடன், நானும் என்னுடன் உள்ள மற்ற அமைச்சர்களும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளோம். மன்னர்களாகிய உங்களிடம் எமது வணக்கத்தையும் நன்றியறிதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

பல ஆண்டுகளாக தொடர்ந்து என்னிடமும், தோழர்களிடமும் பாசம் கலந்த பறிவு காட்டிவருகின்றீர்கள். இந்த ஆண்டு நடைபெற்றப் பொதுத்தேர்தலில் நாடாளும் பொறுப்பினையும் தந்துள்ளீர்கள். தங்கள் அன்பினையும் ஆதரவினையும் மிகப் பெரிய அளவுக்கு பெற்றிருக்கும் நான் நெஞ்சு நெகிழ்ந்திடும் நிலையிலேயே பேசுகிறேன். தங்களின் மேலான நம்பிக்கைக்கு முழுவதும் ஏற்றவனாக நடந்துகொள்ளவேண்டும் என்றப் பொறுப்புணர்ச்சியின் துணை கொண்டு கடமையைச் செய்திடுவதில் ஈடுபடுகிறேன்.

என்னைச் சுற்றிலும் கனிவு நிறம்பியக் கண்கள்; என்னைச் சுற்றிலும் கை கொடுக்கும் கரங்கள்; என்னை ஊக்குவிக்க எந்தப் பக்கமிருந்தும் அன்பு மொழிகள். துணை நிற்கிறோம், வழி காட்டுகிறோம், முறை அறிவிக்கிறோம், குறை களைகிறோம், தயக்கம் வேண்டாம், பொறுப்பினை நிறைவேற்றிடுக என்று தகுதிமிக்கத் தமிழகத்தார் கூறிடுவது செவிக்கு செந்தேனாக இருக்கிறது. பொறுப்பினை ஏற்றுக்கொண்டேன்; ஒரு புதிய கடமையில் ஈடுபடுகின்றேன் என்ற உணர்ச்சியுடன் பொறுப்பினை ஏற்றுக்கொண்டிருக்கிறேன்.

பொறுப்பேற்றுக்கொண்டிருப்பது தமிழ்நாட்டில். வழி வழி வந்த மன்னவர்கள், வித்தகர்கள் நிறம்பிய தமிழ்நாட்டில். காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை போன்ற ஆறுகளும், அருவிகளும் பண்பாடி வளமெடுத்திடும் தமிழ்நாட்டில். ஆயிரமாயிரம் தொழில்களில் ஈடுபட்டு நாட்டுக்குச் செல்வத்தை ஈட்டித் தரும் பாட்டாளிகள் நிறம்பியத் தமிழ்நாட்டில். பாட்டுமொழியாம் தமிழ் மொழியுடன் இணைந்துள்ளப் பண்பாடு சிறந்திடும் தமிழ்நாட்டில். பாருக்குள்ளே நல்ல நாடு என்று பாவலர் கொண்டாடிடும் தமிழ்நாட்டில். அதனை எண்ண எண்ண இனிக்கிறது. ஆனால் - 'ஆனால்' என்னும் கவலைகொண்டிடும் சொல் வரத்தான் செய்கிறது. ஆனால் எத்தனை எத்தனை சிக்கலுள்ளப் பிரச்சினைகள் நெளிந்துகொண்டுள்ள தமிழ்நாடு என்பதனை எண்ணும்போது கவலை ஏற்படத்தான் செய்கிறது. இந்தப் பிரச்சினைகளை சந்திக்கவும், சிக்கல்களைத் தீர்க்கவும் போதுமான உறுதியும் திறமையும், துணையும், தோழமையும் தொடர்ந்து கிடைத்திட வேண்டுமே என்பதனை எண்ணும்போது நீங்கள் உடனிருக்கிறீர்கள் என்ற நினைவுதான் கவலையை ஓட்டுகிறது; கடமையைச் செய்வோம் என்ற உறுதியைத் தருகிறது.

'உங்களுக்காக நான்' என்பது மட்டுமல்ல நண்பர்களே, உண்மையைச் சொல்வதானால் 'உங்களால் நான்'. அதனை உணர்கிறேன்; மறந்திடுபவனும் நானல்ல. ஆனால் என்னிடம் நீங்கள் ஒப்படைத்திடும் வேலையின் கடினத்தையும், ஆண்டு பலவாக குவிந்து குவிந்து கெட்டிப் பட்டுவிட்டுள்ளச் சீர்கேடுகளையும் சிக்கல்களையும் மறந்துவிடாதீர்கள்.

கடமையை நான் செய்து முடித்திட உங்கள் ஒவ்வொருவருடைய முழு ஒத்துழைப்பும் தேவையென்பதை மறந்துவிடாதீர்கள். ஆட்சி நடத்திட ஆணை பிறப்பித்துவிட்டோம்; இனி நாமில்லாமலே கூட ஆட்சி செம்மையாக நடந்திடும் என்று இருந்துவிடமாட்டீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் அவரவரர் துறையிலிருந்து நற்பணியாற்றினால் மட்டுமே என்வேலை நடந்திடும்; நாடு சீர்படும். நாட்டாட்சி செம்மையானதாகிட நானும் எனது நண்பர்களும் அமைச்சரகத்தில் அமர்ந்து பணியாற்றினால் மட்டும் போதாது. அரசு நடந்திட ஆயிரமாயிரம் திறமைமிகு அலுவலாளர்கள் பணியாற்றினால் மட்டும் போதாது. ஆட்சி உண்மையில் செம்மையானதாக அமைந்துவிட வேண்டுமென்றால் வயலில், தொழிற்சாலையில், அங்காடியில் பணிபுறிந்திடும் உழைப்பாளர்கள், உற்பத்தியாளர்கள் அனைவரும் ஆட்சி நடத்திடுபவன் நாமே என்ற உணர்வுடன் தத்தமது கடமையினைச் செய்யவேண்டும். கற்றறிவாளர் எம்மை நல்வழி நடந்திடச் செய்யவேண்டும். இதை நடாத்துவோன் உடனிருந்து முறை கூறிடவேண்டும். இவர் யாவரும் சேர்ந்து நடத்துவதே அரசு. நாங்கள் உங்களாலே அமர்த்தப்பட்டவர்கள். வயல்களிலே கதிர் துளிர்ந்திடும் - சர்க்கார் அலுவலகங்களில் மகிழ்ச்சித் துள்ளும். தொழிற்சாலைகளிலே தோழமை மலர்ந்து நீதியும் நிம்மதியும் கிடைத்து உற்பத்திப் பெருகிடும்-நாட்டு நிலை உயர்ந்திடும். அங்காடியிலுள்ளோர், கொள்வன கொடுப்பன என்பதை நேர்மையின் அடிப்படையில் அமைந்திருத்தல் வேண்டும் என்று இருந்திடும் - அகவிலையும் பதுக்கலும் அழிந்துபடும். பொதுமக்களின் வாழ்வு சீர்படும். நாட்டின் நிலை உயர்ந்திட பணியாற்றிடவே 'நாம்' என்ற உணர்வுடன் மாணவ மணிகள் கல்விக் கூடங்களிலே பயிற்சி பெற்றிடும் - நாடு மேம்பாடடையும். இவை எல்லாவற்றின் கூட்டே ஆட்சி. சில மண்டபங்களிலே மட்டும் செய்யப்படுகிறக் காரியமல்ல ஆட்சி என்பது. நாட்டு ஆட்சி வீட்டுக்கு வீடு காணப்படும் பண்பைப் பொறுத்திருக்கிறது. இல்லாமை போதாமை நீக்கப்பட்டு, வலியோர் எளியோரை வாட்டிடும் கொடுமைகள் நீக்கப்பட்டு, எல்லோருக்கும் ஏற்றம் இன்பம் உறுதி அளிக்கப்பட்டு, நாடு பூக்காடாகத் திகழ்ந்திட வேண்டும் என்று ஆசையில் உந்தப்பட்டு, இந்த நிலைப் பெறுவதற்கானப் பணியில் ஒரு சிறு பகுதியையேனும் நாம் செய்து முடிக்கவேண்டும் என்ற ஆவலுடன் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளேன்.

எல்லா முனைகளிலும் பற்றாக்குறை மிரட்டியபடி இருப்பதைக் காண்கிறேன். பல்வேறு முனைகளில் தவறான நோக்கம், தனக்குத்தான் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கக் காண்கிறேன். பொது நன்மையில் மட்டுமே தனி மனிதன் நலன் காண முடியும் என்பது ஏட்டுக்கு; நாட்டுக்கு அல்ல என்ற எண்ணம் கொண்டோர் உலவிடக் காண்கிறேன். பிளவுகள் ஏற்படுவதற்கான முறைகள் எண்ணங்கள் இவைகளை விட்டொழிக்க மனமற்று இருப்பவர்களைக் காண்கிறேன். கூட்டு முயற்சிக்கு பல தடைக்கற்கள் போடப்பட்டிருப்பதைக் காண்கிறேன். இவைகளை நீக்கிடும்-நாடு நிச்சயம் எழில்பெறும் என்பதனை எண்ணுகிறேன். உங்களை அழைக்கின்றேன் நண்பர்களே, நம்பிக்கையுடன் அழைக்கின்றேன், இந்தத் தூயத் தொண்டாற்ற வாரீர் என்றழைக்கின்றேன்.

ஒவ்வொருவரிடமும் உள்ள அறிவும் ஆற்றலும், கிடைத்திடும் வசதியும் வாய்ப்பும், பெற்றிடும் நேரமும் நினைப்பும் இதற்காகவே பயன் படுத்தப்படவேண்டும். உங்களோடு சேர்ந்து இதற்காக உழைத்திட நானும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள என் நண்பர்களும் காத்திருக்கிறோம்.

உணவுக்கே உழல்கிறோம் அறிவீர்கள். அறிந்தபின் செய்திடவேண்டியது என்ன? இந்த நிலைமைக்கானக் காரணம் காண்கின்றோம்; குறை களைகின்றோம்; முறை வகுக்கின்றோம்-அரசாள்பவன் என்ற நிலையில். ஆனால் வகுத்திடும் முறைகள் வெற்றிபெற உங்களைத்தான் நம்பியிருக்கின்றோம்.


நாமாகத் தேடிப்பெற்றுக்கொண்ட அரசு இது; நம்முடையத் துணையை நம்பியே ஏற்கும் அரசு இது; எனவே இது செம்மையாக நடந்திட நாம்தான் துணையிருக்க வேண்டும் என்று ஒத்துழைத்திட முனைந்து நின்றிட வேண்டுகிறேன். உணவு உற்பத்திப் பெறுகிடவும், உற்பத்தியாவது உண்போருக்கு முறையாகக் கிடைத்திடவும், கிடைப்பது அடக்கமான விலையில் நின்றிடவும் முறைகள் யாவை என்பதறிந்திட விற்பன்னர்களிடம் கருத்தறிந்து வருகின்றேன். செயலில் ஈடுபடும்முன்னர் சிந்தித்திடல் தேவையல்லவா? அதிலே இப்போது கவனம் செலுத்தி வருகின்றோம். உழைப்பவன் வாழ்வு உயர்ந்திட வழி யாது என்பதனை ஆராய்ந்து வருகின்றோம். மக்களுடன் மிக நெருங்கியத் தோழமைத் தொடர்பு கொண்டதாக நிர்வாகம் இருந்திட என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் யோசித்து வருகின்றோம். ஊழலும் ஊதாரித்தனமும் போக்கப்பட என்ன நடவடிக்கை மேற்கொள்வது என்பது பற்றி கலந்து பேசி வருகின்றோம். எங்கள் துறையிலிருந்து என்னென்ன செய்ய இயலுமோ அவற்றைச் செய்திடத் தயங்கிடோம். உடனிருந்து எமது முயற்சிக்கு வெற்றி கிடைத்திடச் செய்வது உமது கடமை.

புதிய அரசு அமைந்திருக்கிறது இங்கு. புதிய அரசு மட்டுமல்ல, அரசியலிலே புதியப் பிரச்சினையை எழுப்பிவிடும் நிலையில் உள்ள அரசு. இங்கும், கேரளத்திலும், வங்கத்திலும், பீகாரிலும், பஞ்சாபிலும், ஒரிசாவிலும் ஆட்சிப்பொறுப்பில் காங்கிரஸ் அல்லாதக் கட்சியினர் உள்ளனர். வேறு சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அரசு அமைத்திருக்கிறது. மத்திய சர்க்காரில் காங்கிரஸ் கட்சி அரசோச்சுகிறது. இந்த நிலை கடந்த 20 ஆண்டுகளாக நாடு காணாத நிலைமை. இந்த நிலை காரணமாக சிக்கல்கள், எரிச்சல்கள், மோதுதல் ஏற்பட்டுவிடுமோ ஒற்றுமைக்கு ஊறு நேரிடுமோ குழப்ப நிலை வளர்ந்திடுமோ என்று அச்சமும் ஐயப்பாடும் கொண்டிடுவோர் உள்ளனர். தமிழகத்தில் அரசோச்சும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கூறிக்கொள்கிறேன், இங்கு அமைந்துள்ள அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை அந்த நிலைமையை நிச்சயமாக உண்டாக்காது. மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் உள்ள உறவு முறைகள் அந்த முறைகள் செயல்படுத்தப்படும் வகைகள் என்பன பற்றிய புதிய சிந்தனையைக் கிளரவும், செம்மையானதாக்கப்படவும் இன்று பல இடங்களில் காங்கிரஸ் அல்லாத அரசு அமைந்திருப்பதை ஒரு நல்ல தேவையான மெச்சத்தக்க வாய்ப்பாக கருதவேண்டுமே தவிர கைபிசைந்துகொண்டு கலக்கமடைவது தேவையற்றதாகும். என்றென்றும் எல்லா மாநில அரசுகளும் மத்திய அரசும் ஒரே கட்சி ஆட்சியில்தான் இருக்குமென்று அரசியல் நுட்பமறிந்த யாரும் கூறமாட்டார்கள் கருதிடமாட்டார்கள், எதிர்பார்த்திடமாட்டார்கள்.

ஆகவே இங்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியும் வேறு இடங்களில் பல கட்சிகள் கொண்ட கூட்டாட்சிகள் ஏற்பட்டிருப்பது கண்டு திகைப்புக் கொள்ளாமல் எரிச்சல் அடையாமல் கசப்புக் கொள்ளாமல் மத்திய சர்க்கார் நடாத்திடும் காங்கிரஸ் அரசு நடந்துகொள்ளுமானால் எரிச்சலும் மோதலும் எழவேண்டிய நிலையே வராது.

மிகச் சிறந்த பண்புமிக்க ஆட்சி முறை நுண்ணறிவு இதற்கு தேவை. மற்றவர்களின் கருத்தறிவதிலே ஒரு அக்கரை, அவர்களின் முறையீட்டைக் கேட்பதிலே ஒரு கனிவு, அவர்களுக்கானக் காரியமாற்றுவதிலேயும் துணை நிற்பதிலேயும் ஒரு ஆர்வம் இவை எல்லாவற்றையும் விட ஒருவர் மனதை மற்றவர் புரிந்துகொள்வதிலே தனித் திறமை, இன்சொல், நட்பு, பரிவு ஆகிய இவை மிகமிகத் தேவை. இந்தியப் பிரதமராக வந்திருக்கும் திருமதி.இந்திரா காந்தி அவர்கள் இந்தப் பண்புடன் நடந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கைக் கொண்டிருப்பவர்களில் நான் ஒருவன். சின்னாட்களுக்கு முன்புகூட அவர்கள் இந்திப் பேசாதப் பகுதியினரின் உரிமைக்கான உத்தரவாதத்தை சட்டவடிவமாக்கித் தந்திட உறுதி கொண்டிருப்பதாகக் கூறி நம்மை மகிழ்வித்தார்கள்.

மாநிலங்களின் தேவைகள் நாளுக்கு நாள் வளர்கின்றன. அடிப்படைத் தேவைகளை மட்டுமே கூறுகிறேன். இவைகளை மக்கள் பெறுவதற்கான முறையில் மாநில அரசு செயல்பட இயலாது தடுத்திடும் குறைபாடுகள் நீக்கப்பட்டாக வேண்டும். நிதி நிலை, வருவாய்ப் பெருக்கம், உதவி, கடன் என்பவைகளை மட்டுமல்ல நான் குறிப்பிடுவது; செயலாற்றுவதற்குத் தேவைப்படும் அதிகாரம் பற்றியும் குறிப்பிடுகிறேன். அரசியல் சட்டத்தில் தரப்பட்டுள்ள அதிகார வரம்பும் வகையும் மாற்றியமைக்கப்பட்டால்தான் மாநில அரசு முழு வளர்ச்சிப்பெற முடியும், மக்களின் வாழ்வைச் செம்மைப்படுத்த முடியும் என்றால் அந்த நோக்கத்துடன் அரசியல் சட்டத்தைத் திருத்தத் தயக்கம் காட்டக் கூடாது.

அணைத்தல், பிணைத்தல், கட்டுண்டு கிடத்தல் இவை வெவ்வேறு. மாநில மத்திய சர்க்கார் உறவு எம்முறையில் இருந்தாலும் பொது நன்மையைக் கெடுக்காத வகையில் மாநிலத்தின் மாண்பும் வளமும் ஏற்றம் பெற முடியும் என்பதை அக்கறையுடன் கவனித்தாகவேண்டிய அவசரப் பிரச்சினையாகும். எனது நண்பரும் கேரளத்து முதலமைச்சருமான நம்பூதிரிபாத் அவர்கள் இதே கருத்தைக் கொண்டவர்கள். அவருடைய சீரிய முயற்சி இந்தப் பிரச்சினைக்கு பெரிதும் வலிவளிக்கும் என்று நம்புகிறேன். வங்கத்து முதல்வர் அஜாய் குமார் முகர்ஜி அவர்கள் காங்கிரஸ் அல்லாதார் நடத்திடும் அரசுகளின் கூட்டு மாநாடு நடத்திட விரும்புகிறார். அத்தகைய மாநாடும், இந்தப் பிரச்சனையை ஆராய உதவும் என்பதால் அந்த முயற்சியை வரவேற்கிறேன்.

அதுபோலவே தென் மாநிலங்களான தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகியவை தோழமைத் தொடர்பை வலுவாக்கிக்கொள்வது தேவை. எத்தனையோத் துறைகளில் இந்த மாநிலங்கள் தமக்குள்ள இயற்கை வளங்களை இணைப்பதன் மூலம் புதியப் பொலிவும் வலிவும் பெற்றிட முடியும். அதற்கான முயற்சிக்கு ஆக்கம் தரவேண்டுமென அந்த அரசுத் தலைவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

உள்ளத்திலே தோன்றிடும் யோசனைகள் பலப்பல. சில மட்டுமே இங்கு கூறுகின்றேன். ஆனால் எல்லா எண்ணங்களும் ஒரு அடிப்படையான லட்சியத்தைச் சுற்றியே வட்டமிடுகின்றன. மக்களுக்கு நல்வாழ்வு தரவேண்டும் என்ற லட்சியம்.லட்சியம் தூய்மையானது. அந்த லட்சியம் வெற்றி பெற்றால் மட்டுமே அறநெறி அரசு அமைந்ததாகப் பொருள்படும். அந்த லட்சியத்திற்காகப் பணியாற்றப் புறப்படுகிறேன், உமது நல்லெண்ணத்தின் துணை கொண்டு. லட்சியம் மிகப் பெரியது; நான் மிகச் சாமான்யன். ஆனால் உங்கள் தோழன். ஆகவே என்னுடைய திறமையை நம்பியல்ல. உங்கள் எல்லோருடையத் திறமையையும் நம்பி இந்தப் பணியில் ஈடுபடுகிறேன்.

கேடு களைந்திட, நாடு வாழ்ந்திட, சுயநலம் அழிந்திட, பொதுநலம் மலர்ந்திட தொண்டாற்றுவோம்.

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai