சிறப்புக் கட்டுரை


இந்துமதமும் தமிழரும்!
(அறிஞர் அண்ணா நக்கீரன் என்ற புனை பெயரில் திராவிடநாடு இதழில் எழுதி வெளிவந்தது)
பகுதி:1 பகுதி:2 பகுதி:3 பகுதி:4

. . . . . . . . . . . . . . . .

ஒரு தேசத்தை மற்றொரு தேசத்தார் ஆளுவதற்குக் கூறப்படும் வித்திரமான காரணம். கடவுளின் சார்பாகத் தர்மகர்த்தாவாக இருந்து அந்தத் தேசத்தை ஆளுகிறார்களாம். கடவுளை எந்த இடத்தில் இவர்கள் சந்தித்தார்கள்; கடவுள் வாயினால் அதிகாரம் கொடுத்தாரா; அல்லது எழுத்து மூலமாகக் கொடுத்தாரா? என்ற விஷயங்கள் யாருக்கும் தெரியாது. இது இப்பொழுது நடைபெற்றுவரும் ஏமாற்று.

என்று படித்ததும் அந்தக் காங்கிரசன்பர் ஒன்றும் பேசாமல் நடையைக் கட்டிவிட்டார். இதுவும் கால வேற்றுமைதான் என்று மற்றம் அங்கு நின்றவர்கள் சொல்லிக்கொண்டே போனார்கள். இந்தத் தினமணிக்கு இப்படியுமா புத்தி தடுமாறும் என்று இயம்பிய வண்ணம் போயினர் ஒரு சிலர்.

அன்பர்களே! தினமணி என்ற செய்தித்தாள் ஆரிய ஆதிக்கம் ஒன்றையே தனது குறிக்கொளாகக் கொண்டு வேலை செய்துவந்த போதிலும், அதன் ஆசிரியர் ஒரு தமிழனாய் இருப்பதால், தமிழ் மக்கள் செய்துவரும பகுத்தறிவுக் கிளர்ச்சியின் வேகம் எந்தக் தமிழனையும் தட்டி எழுப்பிவிடும்; அதனால், தமிழர்கள் என்றைக்காவது ஒருநாள் ஒன்றுபட்டுத தன் மதிப்பியக்கத் தோழரகளாவார்கள் என்பதை அறிவுறுத்தவே, இந்து மதுமுந் தமிழரும் என்ற தலைப்பில் இச்செய்தியையும் நுழைத்தேன்.

திருநாவுக்கரசர், நினைத்துருகும் அடியாரை நையவைத்தார் என்ற சொற்றொடரை முதலடியாகக் கொண்டு பாடிய தேவாரத்தைத் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்லவாறே என்று முடித்திருக்கிறார். இதில், பேரன்பும் பேரிரக்கமும் வாய்ந்ததாகப் பேசப்படும் ஒரு கடவுள், தன்னை மெய்யன்போடு வழிபடும அடியர்களை நையப்புடைத்தல், கடவுள் இலக்கணத்திற்கே மாறுபட்டதென்பதை இதற்கு முன்னர் எழுதிய கட்டுரைகளில் நன்கு தெளிவுபடுத்தியுள்ளேன் எனவே, திருவடி என் தலைமேல் வைத்தார் என்ற சொற்றொடருக்கும் நேரானபொருள என்னவென்றால், திருநாவுக்கரசருடைய தலையில் கடவுள் தனது காலால் உதைத்தார் என்பதேயாகும். ஆனால், கடவுள் திருநாவுக்கரசரை உதைத்தார் என்ற உண்மையை வெளிப்படையாகச் சொல்லாமல், திருவடி தலைமேல் வைத்தார் என்று கூறியது மத்தலைவர்கள் கையாளும் சூழ்ச்சிகளில் ஒன்று. இல்லாத ஒன்றை இருபபதாகச் சொல்லித் தங்கள் விழைப்புக்கு ஆதரவு தேடிக்கொள்பவர்கள் எல்லாரும் இத்தகைய நயவஞ்சக முறையையே கையாள்வது வழக்கம். கடவுள், திருநாவுக்கரசரை உதைத்தார் என்ற சொல்லுவதற்கும், கடவுள் தனது திருவடியை அவர் தலை மேல் வைத்தார் என்று சொல்லுவதற்கும் உள்ள வேறுபாடு, ஒருவனைப் பார்த்து இவன் மாடுபோல் இருக்கிறான் என்பதற்கும், இவன் பசுப்போல் இருக்கிறன் என்பதற்கும் உள்ள வேறுபாட்டையே ஒத்திருக்கிறது. எங்ஙனம், பசு என்றாலும் மாடு என்றாலும் ஒரு பொருளையே குறிக்குமோ, அங்ஙனமே, திருவடி தலைமேல் வைப்பதும், உதைத்பபதும் ஒரு பொருளையே குறிக்கும் என்க.

இனித், திருநாவுக்கரசர் தாம் பார்ப்பனரால் அடைந்த துனபங்களை வெளிப்படையாகச் சொல்லாமல் இங்ஙனம் மறைபொருளாக வைத்துக் கூறியதற்கு செய்த துன்பத்தைப் பொறுத்து அவனுக்கு நன்மையையே செய்வதும், ஒருக்கால் அவன் செய்த துன்பத்தைப் பிறர்க்கெடுத்துச் சொல்ல வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டால், கேட்போர் உள்ளம் கொதிப்படையாமல் இருக்கும் முறையில் அந்நிகழ்ச்சியை அமைதிதரும் சொற்களால் அழுகாகக் கூறி அதன் அடிப்படைப் பொருளை விளங்கவைப்பதும் தமிழ் மக்களுக்கு இயற்கையாகப் படிந்த குணங்களில் ஒன்றாகும். எனவே, திருநாவுக்கரசர் ஒரு உண்மைத் தமிழனாய் இருந்தமையால், தான் பார்ப்பனரால் அடைந்த துன்பங்கள் தன்னை மட்டும் பொறுத்ததாய் இல்லாமல், தன்னையொத்த தமிழ் மக்களையும் அத்துன்பங்கள் வருத்தி வதைக்கும் என்பதை நன்கறிந்தவராகையால், அவற்றைத் தன்னைமட்டும குறித்தவை என்றெண்ணிப் பொறுத்துக் கொள்ளாமல், எல்லாத் தமிழ் மக்களும் பார்ப்பனக் கொடுமைகளை உணர்தல் பெரிதும் இன்றியமையாததென்று கருதிய நிலையில் இங்ஙனம் மறைபொருளாக வைத்துக் கூறியுள்ளார்.

ஆரியன் கண்டாய் என்று ஆயிரம் ஆணடுகளுக்கு முன்னரே நமது நாவுக்கரசர் கூறியுள்ளார். ஆரியன் வேறு; தமிழன் வேறு என்ற கொள்கை தோன்றி ஆயிரமாண்டுகள் கழிந்தும், இன்றும் அதன் உண்மையை நம்மவர் உணரமுடியவில்லை என்றால், அதற்குக் காரணம்: நம்மையும் ஆரியரையும் ஒன்றாய்ப் பிணைத்துக் கொண்டிருக்கும் இவ்விந்து மதமே என்பதை எவர்தான் மறுக்கமுடியும்? இந்துமத்தின் பேரால் எழுதப்பட்ட புராண இதிகாசங்களன்றோ ஆரியர்களைப் பூசுரராக்கித் தமிழ் மக்களை அவர்களுக்க அடிமைகளாக்கிவிட்டன! இந்துமத்தின் பேரால் உண்டாக்கப்பட்ட சட்டமன்றோ, ஒரு பார்பபனன் ஒருவனைக் கொலை செய்தால் அர்பார்ப்பனனுடைய தலையை பொட்டையடித்தால் போதுமென்றும், ஒரு தமிழன் ஒருவனைக் கொன்விட்டால் அத்தமிழனைக் கொன்றுவிட வேண்டுமென்றும் கூறிக் குலத்துக்கொடு நீதி வகுத்துள்ளது! இந்து மதமன்றோ, தமிழனான திருநாவுக்கரகரை ஒரு கூலிக்காரன் நிலையில் வைத்து அவர் கையில் புற்பூண்டுகள் செதுக்கும் ஒரு உழவாரத்தைத் தாங்கும்படி செய்தது! இந்துமதமன்றோ, பார்ப்பனனான திருஞானசம்பந்தரை ஒரு சிற்றரசன் நிலையில் வைத்து அவன் பல்லக்கேறும்படி செய்தது? எனவே, ஆண்டிலும் அறிவிலும் முதிர்ந்த நாவுக்கரசர் பார்ப்பனரால் உதையுண்டதற்குக் காரணம், அவர் இந்து மதமாகிய சைவசமயத்தைத் தழுவியிருந்தமையே என்பதை ஈண்டுக் கூறாமல் இருக்க முடியமில்லை. இன்றும்கூட, அறிவாற்றலிற் சிறந்துவிளங்கும் தமிழ் மக்களிற் பலர், ஆரியர்களின் அடிமைகளாக இருப்பதோடு, தாங்கள் சற்சூத்திரர் என்ற ஆரியக் கூற்றையும் ஒப்புக்கொண்டிருப்பது கண்கூடு.

இனித், திருநாவுக்கரசர் தாம் பார்ப்பனரால் அடைந்த துன்பங்களை வெளிப்படையாகக் கூற முடியாமற் போனதற்கு இன்னொரு காரணம் என்னவென்றால், அந்தக் காலத்தில் அன்பையும் அறிவையும் வளர்த்த சமணம், புத்தம் ஆகிய மதங்களை ஆரியர்கள் தங்கள் சூழ்ச்சியால் ஒழித்துக், கொலையும் பொடுமையும் நிறைந்த இந்துமத்தைத் தமிழ் நாட்டில் பரப்பி அம்மதத்தையே அக்காலத் தமிழ் வேந்தரும் பின்பற்றும்படி செய்தமையேயாகும். அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்றபடி, அக்கால அரசரின் ஆதரவையும் செல்வாக்கையும் பெற்றிருந்த ஆரியப்பார்பனர்; தங்கள் இந்துமதக் கொள்கைக்கு மாறாக நடப்பவர்களைத் தண்டிப்பதில் முழு உரிமைபெற்றவர்களாய் இருந்தார்கள். எனவே, ஆரியப் பார்ப்பனரின் கொடுமைகளைக் கண்டு அவர்களைத் திருதத முயன்ற திருநாவுக்கரசரைப் பார்ப்பனர் தங்கள் மனம்போல் உதைக்கவும் அடிக்கவும் ஏற்பட்டது ஒரு வியப்பல்ல.

இனித், திருநாவுக்கரசருகக ஏற்பட்ட துன்பங்கள் பார்ப்பனரால் ஏற்பட்டதல்ல வென்றும், சிவனே திருநாவுக்கரசரைத் தூய்மையாக்குவதன் பொருட்டுத் தம்முடைய திருவடியை அவர் தலைமேல் வைத்தார் என்றம் மக்கள் நம்பவேண்டுமென்பதற்காகவே கதையை இங்ஙனம் மாற்றி எழுதிவைத்தார்கள். அதோடு, திருநாவுக்கரசரைக் கொண்டே அதுகுறித்த பதிகமும் பாடும்படி செய்துவிட்டனர். அந்தப் பார்ப்பனர். என்றாலும், உண்மை நிகழ்ச்சி இதுவென்பதைக் காட்டாதொழிதல் ஒரு உண்மைத் தமிழனுக்கு முறையாகாதென்று எண்ணிய நாவுக்கரசர், பார்ப்பனர் தமக்குச் செய்த கொடுமைகளை இலைமறை காயாக அத்தேவாரப் பதிகத்தில் புகுத்தியுள்ளார். அரசன் ஆணைக்கும், ஆரியரின் கொடுமைக்கும் அஞ்சிய ஒரு தமிழன், தனது கொள்கைக்கு மாறாக நடக்குமாறு கட்டாயப்படுத்திய போதிலும், உண்மைக்கு அழிவு உண்டாகாத முறையில் நடந்துகொண்டதற்காக நாவுக்கரசரை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.


பகுதி:1 பகுதி:2 பகுதி:3 பகுதி:4

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai