சிறப்புக் கட்டுரை

இந்துமதமும் தமிழரும்!
(அறிஞர் அண்ணா நக்கீரன் என்ற புனை பெயரில் திராவிடநாடு இதழில் எழுதி வெளிவந்தது)
பகுதி:1 பகுதி:2 பகுதி:3 பகுதி:4

. . . . . . . . . . . . . . . .

ஆரியர்களால் உண்டாக்கப்பட்ட சைவ மதமானது பார்ப்பனரின் பிழைப்புக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு பொய் மதமென்று உணர்ந்த திருநாவுக்கரசர், அதனை வெறுத்துச் சமணமதத்தைத் தழுவி அம்மத நூல்களிலே பெரும் புலமை வாய்ந்து, தருமசேனர் என்ற சிறப்புப் பெயருடன் சமணர்களிற்றலைசிறந்து விளங்கினார். திருநாவுக்கரசரின் அறிவு நுட்பத்தையும், அவர் சைவமதத்தை வெறுத்துச் சமண மதத்தைத் தழுவியதையுங்கண்ட இந்துமதப் பார்ப்பனர்கள், தங்கள் பிழைப்புக்கு மண்போட ஒரு தமிழன் தோன்றிவிட்டானே; இவனை எப்படியாவது நம் வயப்படுத்த வேண்டும், இல்லையேல் இவனைத் தொலைத்துவிட வேண்டும் என்று கருதியவர்களாய்ப் பல சூழ்ச்சிகள் செய்து, மீண்டும் அவர் சைவமதத்தைத் தழுவும்படி செய்தார்கள். ஆயினும், நமது தமிழ் வீரனாகிய திருநாவுக்கரசர் ஆரியர்களின் கொடுமைக்கஞ்சிச் சைவ மதத்தில் இருப்பதாகக் காட்டிக்கொண்டாரேயன்றி உண்மையான சைவப்பற்று அவருக்கு உண்டாகவில்லை. பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் ஏவப்பட்ட திருநாவுக்கரசரின் தமக்கையராகிய திலகவதியாரை மகிழ்விக்கும் பொருட்டாகவே அவர் தம்மை ஒரு சைவனாகக் காட்டிக்கொண்டார். திருநாவுக்கரசரின் தாய் தந்தையர் இறந்தபின், அவருடைய உறவினர் ஒருவரும் இன்மையால், அவரைத் திடீரென்று வெறுப்பது தகாதென்று கருதிய திருநாவுக்கரசர், தமது தமக்கையார் சொற்படி, தாம் ஒரு சைவனென்று பிறர் கருதும்படி தம்முடைய வெளிநடத்தையாற் காண்பித்தார். சூழ்ச்சியிற் கைதேர்ந்த பார்ப்பனர் திருநாவுக்கரசரின் உளப்பான்மையை எப்படியோ அறிந்து, அவருக்கு எந்தவகையிலாவது சைவத்தில் உண்மையான பற்றுதலும் நம்பிக்கையும் உண்டாக்குதல் வேண்டுமென்று கருதி, தங்கள் மரபிற் பிறந்த பார்ப்பனச் சிறுவனாகிய திருஞானசம்பந்தர் என்பார் சீர்காழியில் இருக்கிறார் என்றும், அவர் தமது மூன்றாம் ஆண்டிலேயே சிவ பெருமானை நேரிற்கண்டு, அவர் மனைவியராகிய உமையம்மையின் முலைப்பாலை உண்டு அருள் விளையாட்டுப் புரிந்துகொண்டிருக்கிறார் என்றும், அவரைப் பற்றி வானமளாவப் புகழ்ந்து கூறினார்கள். இதனைக் கேட்ட திருநாவுக்கரசருக்கு அச்சிறுவனைப் போய்ப் பார்க்க வேண்டுமென்ற விருப்பமுண்டாகிச் சீர்காழிக்குச் சென்று அவரைக் கண்டார். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்றபடி, பார்ப்பனச் சிறுவனாகிய அந்தத் திருஞானசம்பந்தர், தம்மையும் தம்மினத்தவரையும் தமிழ் மக்களினின்றும் வேறுபிரித்துக் காண்பிக்கும் முறையில், திருநாவுக்கரசரைக் கண்டவுடனே, அப்பரே உம்முடைய கடவுளைப் பாடும் என்று கூறினாராம். தமிழ் மக்களே, பாருங்கள் பார்ப்பனக் குறும்பை! மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா? என்பார்களே; அதுபோலச் சம்பந்தர் ஒரு சிறுவனாய் இருந்தபோதிலும், தான் ஒரு பார்ப்பனன் என்பதும், அதற்கேற்பத் தான் வழிபடும் கடவுளும் வேறென்பதையுங் காட்டவே, நாவுக்கரசரை நோக்கி, உம்முடைய கடவுளைப் பாடும் என்று கேட்டார். அற்றேல் உம்முடைய கடவுள் நம்முடைய கடவுள் என்ற பிரிவினை எதற்காக அந்த இடத்தில் எழுந்த தென்பதனைத் தமிழ் மக்கள் ஊன்றிப்பார்த்தல் வேண்டும். சிவன் ஒரு பார்ப்பனக் கடவுள் என்பதற்கறிகுறியாகவே, இஞ்ஞான்றுங்கூடச் சிவன்கோயில்களில் நடைபெறும் வழிபாட்டு விழாக்காலங்களில் வடமொழிச் சொற்களாலேயே சிவவழிபாடு செயதலும், வாழ்த்தொலிகள் கூறுதலும் நடைபெற்று வருகின்றன. தமிழ்மறை என்று சில போலித் தமிழரால் பறைசாற்றப்படும் தேவார - திருவாசகங்கட்குத் தினைத் துணையேனும் மதிப்போ செல்வாக்கோ அந்தச் சிவன் கோயில்களிற் கிடையாது. பார்ப்பனர் வடமொழி மந்திரங்களால் வழிபாடு செய்து திருநீறு பெற்று வெளியே சென்ற பின்னர்தான், எச்சிற்சோற்றைக் காத்திருந்து உண்பார் போலத், தமிழ்மறையாகிய தேவாரம் ஓதப்படுகின்றது. இந்த அழகோவிய அமைப்பில், தேவார - திருவாசகங்களெல்லாம் சிவனால் அடியெடுத்துக் கொடுத்துப பாடப்பட்டனவாம் என்றும் சில தமிழ் மக்கள் வெட்கமின்றுக் கூறித்திரிகின்றனர். உண்மையாகவே, சிவன் ஒரு தமிழ்க் கடவுளாயும், தேவார, திருவாசகங்களெல்லாம் அந்தக் கடவுளாலேயே அடியெடுத்துக் கொடுக்கப் பட்டனவாயும் இருந்தால், தமக்கும் தம்மை வழிபடும் தமிழ் மக்களுக்கும் விளங்காத வடமொழி மந்திரங்கட்கு முதலிடம் அளிப்பாரா என்பதனைத் தமிழ்மக்கள் இனிமேலாவது எண்ணிப்பார்த்து இவ்விந்துச் சூழலினின்றும் தப்பித்துத் தன்மானத்தோடுவாழ முயலவேண்டாமா?

இனித், திருநாவுக்கரசர் பல நாட்கள்வரை திருஞான சம்பந்தர் கூடவே இருந்து, அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் அவருடன் சென்று இருந்ததுமாகிய சைவமதத்தில் ஏதாவது உண்மை இருக்கிறதா வென்று அறிய முயன்றார். ஆனால், அவர் திருஞானசம்பந்தரின் பல்லக்கைச் சுமந்ததைத் தவிர வேறுபயன் ஒன்றும் அடையவில்லை. பார்ப்பனக் கும்பலிற் சேர்ந்து சென்ற தமிழனாகிய திருநாவுக்கரசர், அவர்கள் இட்டபணியன்றி வேறென்ன எதிர்பார்க்க முடியும்! அறிவிலும் ஆண்டிலும் முதிர்ந்த ஒரு தமிழன், மூன்றாண்டு நிரம்பப் பெறாத ஒரு பார்ப்பனச் சிறுவனுக்குப் பல்லக்குச் சுமந்தான் என்று எழுதியிருக்கும் புராணத்தைப் படிக்கும் எந்த உண்மைத் தமிழனுக்காவது குருதி கொதியாதிருக்குமா?

பார்ப்பனர்களின் தூண்டுதலின் பேரில் திருஞான சமப்ந்தரைப் பார்க்கச் சென்ற திருநாவுக்கரசர் அவரை விட்டுப் பிரிந்து தனியாகப் பல போயில்கட்குச் சென்று, இந்துமத்தின் போரால் அங்கங்கே நிகழுஞ் செயல்களைப் பார்த்து வந்தார். தமிழ்நாட்டிலே இந்துமதக் கொள்கைகளை நிலைநாட்டுவதன் வாயிலாகத் தமிழ் மக்களை இழிவுபடுத்துவதையே குறிக்கோலாகக் கொண்டு, பார்ப்பனர்களால் நடத்தப்பட்டு வரும் சிவன் கோயில்களில் நிகழும் கொடுமைகளைக் கண்ட திருநாவுக்கரசர், தமிழ் மக்களின் மானத்தைக் காப்பாற்றும் முறையில் பல சீர்திருத்தங்களைச் செய்ய முயன்றார். ஆனால், அவர் அடைந்த பயன் என்ன? திருத்தூங்கானை மாடம் என்னும் சிவன் கோயிலுக்கு அவர் சென்றிருந்தபோது, அங்கு தமிழ் மக்களை மிகவும் இழிவாக நடத்துவதைக் கண்டு, பார்ப்பனர்களின் அறியாமைக்காகப் பெரிதும் வருந்தி அவர்களைத் தம் அறிவுச் சுடர் கொண்டு திருத்த முயன்றார். அவர் இங்ஙனம் கூறியதைக் கண்ட அக்கோயிற் பார்ப்பனர்கள் வெகுண்டு ஒரு தமிழனாகிய சூத்திரப் பயலா எமக்கு அறிவு புகட்ட வருவது என்று சீற்றங்கொண்டவர்களாய், அக்கோயிலிற் கிடந்த ஒரு கலத்தை எடுத்து நெருப்பில் நன்றாகப் பழுக்கக் காய்ச்சித் திருநாவுக்கரசருடைய தோளிலே சுட்டார்கள். இந்நிகழ்சசி பெரிய புராணத்தில் உள்ளது. ஆனால், புராணப் புளுகர்கள் வழக்கமாகக் கையாளும் சூழ்ச்சி இந்நிகழ்ச்சியிலும் புகுந்துவிட்டது. பார்ப்பனர்களால் திருநாவுக்கரசருக்கு ஏற்பட்ட இழிவை மறைத்து அதற்கு ஒரு கடவுட்டன்மை கற்பிக்கும் முறையில், திருநாவுக்கரசர் சமணம் புக்கு மீண்ட தீட்டைப் போக்குவதற்காகச் சிவனே தமது சூலத்தினால் திருநாவுக்கரசருடைய தோளில் ஒரு அடையாளத்தைப் பொறித்தார் என்ற புனைவுரையை மிகவும் திறமையாகப் புகுத்தி அதனை எல்லாரும் நம்பும்படியுஞ் செய்துவிட்டனர். இன்றும் பகுத்தறிவுக் கொவ்வா அந்நிகழ்ச்சியை நம்பும் பேதைமையினோர் பலர் உளர். சிவன் என்ற பெயரால் வழங்கப்படும் அந்தப் பெருங்கடவுள், திருநாவுக்கரசருக்கு ஏற்பட்ட தீட்டை போக்குவதற்காகத் தம்முடைய சூலத்தால் அவருடைய தோளிலே ஒரு சூடு போட்டார் என்றால், அவரிடம் மதப்பித்தர்கள் கூறும் கடவுட்டன்மை சிறிதளவாவது இருக்கிறதாகக் கருத முடியுமா? மதநூல் இலக்கணப்படி, கடவுள் தமது திருநோக்கு ஒன்றினாலேயே அனைவருடைய மாசுகளையும் போக்கவல்ல ஆற்றல் படைத்தவர் என்றும், அவர் நினைத்த அளவிலேயே எல்லாக் காரியங்களையும் பிறருடையவும் பிறபொருள்களுடையவும் உதவி எதுவுமின்றித் தாமாகவே செய்து முடிக்கும் வன்மைப் பெற்றவர் என்றும் சொல்லப்படும் போது, ஈண்டுப் பேசப்படும் திருநாவுக்கரசரின் தீட்டைப் போக்குவதற்காகச் சிவன் தமது சூலத்தை எடுத்து அதனை நெருப்பிலே காய்ச்சித் திருநாவுக்கரசருமடய தோளிலே சுட்டார் என்பதை அறிவைப் பயன்படுத்திப் படிக்கும் எவரும் ஒப்புக்கொள்வரா? பெண்களுக்குத் திங்களுக்கோல் முறை ஏற்படும் குருதிப் பெருக்கையும் தீட்டென்றே சொல்லுகிறார்கள். ஒரு மதத்தை ஒழித்துப் பிறிதொரு மதம் புகும் மக்களுக்கும் இத்தகைய தோற்றங்கள் யாதாயினும் உண்டாகின்றனவா என்று பார்த்தால், அப்படி எதுவும் ஏற்படுவதாகத் தெரியவில்லை. யாழ்ப்பாணம், திருநெல்வேலி முதலான ஊர்களிலுள்ள சைவர்கள் பலர் கிறித்துவ மதத்தைத் தழுவியிருக்கின்றனர். இவர்கள் இங்ஙனம் மதம் விட்டு மதம் புகுந்த காரணத்தால் அவர்களுக்கு ஏற்பட்ட தீட்டைப் போக்குவதற்காகக் கிறித்துவர் கடவுளான இயேசுவோ அல்லது பரமண்டலங்களில் இருப்பதாகச் சொல்லப்படும் அவருடைய தந்தையோ (பிதாவோ) சிலுவை முதலான மத அடையாளங்களால் யாதாயினும் சூடு போடுகின்றனரா? இல்லையே! ஆரியர்கள் தீங்கைச் செய்வதன் வாயிலாக இந்துக்களைத் தூய்மைப் படுத்தும் ஒரு பாசாங்கு போலவே, கிறித்தவக் குருமாரும் ஞானஸ்நானம் என்ற பெயரால் ஏதோ செய்கின்றனர். இங்ஙனம் செய்வதால் முக்கிய மதத்தீட்டு நீங்கிவிட்டதாக அவர்கள் கருதிக் களிப்புறுகின்றனர். என்னே மடமை! தீக்கை - ஞானஸ்நானம் முதலான மினுக்கு வேலைகள் எல்லாம் மத ஆரியர்கள் தங்கள் மத வாணிகத்தை ஒழுங்காக நடத்துவதற்காகக் கையாளும் சூழ்ச்சிகளே, தீட்டென்று சொல்லப்படும் இக்கொடுமையான திட்டம் ஆரியமக்களால் கொண்டுவரப்பட்டுத் தமிழ் நாட்டிலே புகுத்தப்பட்ட ஒரு பொருளற்ற திட்டமென்பதே தமிழர் கொள்கையாகும். பிறப்பினால் உயர்வு தாழ்வு இல்லை என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டுள்ள தமிழ் மக்கள் முன்னிலையில், ஒருவன் ஒரு மதத்தை விட்டு இன்னொரு மதம் புகுவதால் தீட்டேற்படுகிறதென்றும், அதனைப் போக்குவதற்குத் தீக்கை - சூடு ஞானஸ்தானம் முதலான சடங்குகள் செய்ய வேண்டுமென்று கூறுவது எள்ளி நகையாடற்குரிய செய்தியேயாம். தீட்டு என்ற தமிழ்ச்சொல் துப்புரவின்மையைக் குறிக்கும் ஒரு சொல்லேயன்றி, மதாசிரியர்கள் கூற்றுப்படி மத மாறுதல்கள் முதலான காரியங்களைச் செய்வோர் தீட்டுப் பட்டவர்கள் என்பனவற்றிற்குப் பயன்படுத்தக் கூடிய சொல்லாக ஒருபோதும் ஆகாது. தீட்டென்று சொல்லப்படும் அழுக்கு அல்லது துப்புரவின்மையை குளித்தல் - முழுகுதல் - கழுவுதல் முதலானவற்றால் போக்க முடியுமேயன்றி நெருப்பிற் காச்சிய சூலத்தால் சுட்டு நீக்க முடியாது.

ஒன்றன் உண்மையை ஐயந்திரிபற அறிந்து கொள்ள வேண்டுமானால், அதற்குக் கருவியாகப் பொறுமை என்னுஞ் சிறந்த கொள்கையைக் கடைப்பிடித்தாலன்றி முடியாதென்பதனை நன்குணர்ந்த நாவுக்கரசர், இந்து மதத்தின் பேரால் தாம் அடைந்த இன்னலைப் பொறுத்துக்கொண்டு, இன்னும் பார்ப்பனர் செய்யுங் கொடுமைகளைப் பார்த்தறிய விரும்பிப் பின்னும் பல சிவன்கோவில்களுக்குச் சென்றார். திருச்சத்திமுற்றம் என்னும் கோயிலை அவர் அடைந்து பார்த்த போது, அங்கும் பார்ப்பனர் பல அடாத செயல்கள் செய்வதைக் கண்டு அவர்களைத் திருத்த முயன்றார். அதனைக் கண்ட அவ்வூர்ப் பார்ப்பனர்கள் அவருக்கு நல்ல பாடம் கற்பிக்க எண்ணினார்காளாயினும், அவர்களுக்கு அவ்வூரிற் போதிய செல்வாக்கு இல்லாமையினாலோ அல்லது வேறு காரணத்தாலோ அவரை ஒன்றுஞ் செய்யாது, நீ நல்லூருக்கு வா, பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு விட்டார்கள். பின் அவர் திருநல்லூர் என்னும் ஊரை அடைந்ததும், அங்கே அவரை நன்றாக நையப் புடைத்துத், தலையிலும் பிற இடங்களிலும் உதைத்து விரட்டிவிட்டார்கள். இக் கொடுமைகளைக் கண்டு மனம் பொறாத நமது நாவுக்கரசர், நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார் . . . என்ற சொற்றொடர்கள் அமைந்த தேவாரத்தால் விளக்கியுள்ளார்.

ஆனால், நாம் மேலே எடுத்துக் காட்டிய நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார் என்ற சொற்றொடருக்குச் சைவ அன்பர்கள் கூறும் பொருள் ஒரு சிறிதும் அறிவுக்குப் பொருந்துவதாயில்லை. அதற்கவர்கள் கூறும் பொருள் இது: கடவுளை நினைந்து உருகி வழிபடும் அடியார்களைத் துன்பங்களுக்கு ஆளாக்குவது சிவனுடைய இயல்பு என்பதாகும். இக்கூற்றுக் கடவுள் நூலார் கொள்கையின்படியும், கடவுள் எட்டுவிதமான குணங்கள் உண்டென்றும், அவ்வெட்டனுள், தாமாகவே எல்லாவற்றையும் உணரும் ஆற்றலுண்டு என்பதும் ஒன்றென்றும், கிடந்து கூறியுள்ளன. எனவே, கடவுள் தமது அடியார்களின் உளத்தூய்மையை அறிவதற்காகவும், அவர்கள், துன்பம் இன்பம் ஆகிய இருநிலைகளிலும் தங்கள் கொள்கையினின்றும் ஒரு சிறிதும் மாறுபடார் என்பதற்காகவும் அவ்வடியவர்கட்குத் துன்பத்தை நல்கி அதன் பின்னரே இன்பப்பேற்றை அளிக்கிறார் ஒரு கடவுள் என்றால், அந்தக் கடவுள் சிற்றறிவுடையவர்கள் என்று சொல்லப்படும் மக்களைக் காட்டிலும் எந்த வகையில் உயர்ந்தவர் என்பது எமக்கு விளங்கவில்லை. இயற்கை அறிவும், எல்லா வல்லமையும் அமைந்துள்ளதாகச் சொல்லப்படும் ஒரு கடவுள், தம்மை மெய்யன்போடு வழிபடும் அடியார் குழாங்களின் உண்மை நிலையை அறிவதன் பொருட்டாக அவர்களுக்கு மேலும் மேலும் துன்பத்தையே கொடுக்கிறார் என்பது ஒரு கேலிக் கூத்தேயாம். அற்றன்று, நீர் கூறுவது பொருந்தாது; கடவுள் தமது அடியவர்களைச் சோதிப்பதெல்லாம் தம்பொருட்டன்று; அடியவர்களின் அன்புப் பெருக்கையும் உறுதிப்பாட்டையும் உலகினர்க்குக் காட்டி அவர்களையும் உறுதிப்பாட்டையும் உலகினர்க்குக் காட்டி அவர்களையும் அவ்வழிப்படுத்துதற் பொருட்டே இவ்வாறு திருவிளையாடல் புரிகின்றார் என்று கூறுவார் சிலர்க்கும் தக்க விடையிறுப்பாம். கடவுளைப் பார்க்கிலும் எல்லா வகையிலும் கீழ்நிலையிலுள்ள மக்கள், தங்களையொத்த ஒருவன் ஒரு குற்றத்தைச்செய்து விட்டால், அவனைத் திருத்தி நல்வழிப் படுத்துதற் பொருட்டு, அவன் புரிந்த குற்றத்தைப் பிறரும் செய்யாதிருக்கப் பலர் முன்னிலையில் அவனைத் தண்டித்து நல்வழிப்படுத்த முயல்கிறார்கள். இந்த முறையையே பேரறிவுப் பெரும் பொருளான கடவுளும் கையாளுகிறார் என்றால், அவருக்கும் பிற உயிர்களுக்கும் உள்ள வேறுபாடுதான் யாதோ? யாம் அறிகிலேம். கடவுளை அறிந்த அல்லது கடவுள் என்ற ஒன்று உண்டென்ற கூற்றுக்கு நில்லா உரையை நம்பும் அன்பர்கள் தாம் இவ்வையப்பாடுகளை நீக்குதல் வேண்டும். கடவுட்டன்மை இது, மக்கட்டன்மை இது என்று பிரித்துக் காட்டிக் கடவுளுக்கும் பிற உயிர்களுக்கும் உள்ள வேறுபாட்டையும் - உயர்வு தாழ்வையும் விளக்கவேண்டும். அங்ஙனமன்றி, மக்கள் செய்கின்ற சிறுசிறு காரிங்களையே எந்தவகையில் உயர்ந்தவராவார் என்று கேட்கும் பகுத்தறிவாளன் மீது சீறி விழுவதும், கடவுள், எது வேண்டுமானாலும் செய்வார்; அவர் செயல்களில் தலையிடுவது மக்களாய்ப் பிறந்தோர்க்கு அடாது என்று தணிவு கூறுவதும் ஆகிய ஏமாற்றுதல்கள், கடவுட்டன்மை என்ற கண்மூடி வழக்கத்தை மண்மூடச் செய்து, கருத்தோடு வாழும் மக்கள் முன்னிலையில் செல்லாதென்பதை இனிமேலாவது உணர்ந்து மக்கட் பண்போடு வாழ முயல்வதே, மதமெனும் பேயால் பீடிக்கப்பட்டு மயங்கிக் கிடக்கும் மாந்தர்தம் செயலாம்.

பகுதி:1 பகுதி:2 பகுதி:3 பகுதி:4

வளரும். . .

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai