சிறப்புக் கட்டுரைகள்

எனது சட்டசபை அனுபவங்கள்
சி.என்.அண்ணாதுரை, எம்.எல்.ஏ.

03.03.2010 தேதியிட்ட ஆனந்த விகடன் பத்திரிகையில் இடம்பெற்ற
'பொக்கிஷம்' பகுதி
1958 ஆம் ஆண்டில் வெளிவந்தது.

----------------------------------------------------------------------------------------

சென்ற ஆண்டு புதிதாகப் பதவியேற்றுக்கொண்ட தமிழக எம்.எல்.ஏக்கள் தங்கள் சட்டசபை அனுபவங்களை 'எனது சட்டசபை அனுபவங்கள்' என்னும் தலைப்பில், வாரம் ஒருவர் பகிர்ந்துகொண்டு இருக்கிறார்கள். சி.என்.அண்ணாத்துரை, எம்.எல்.ஏ-வின் கட்டுரை இதோ!

எனது சட்டசபை அனுபவங்கள்
சி.என்.அண்ணாதுரை, எம்.எல்.ஏ.

சட்ட சபையிலே நான் இடம் பெற்றதும், என்னைப்பற்றி அங்கு பலருக்கு ஐயப்பாடு ஏற்பட்டிருந்தது என்பதை நான் உணர்ந்து கொண்டேன்; எனக்கும் அஃதேபோலத்தான்!

உள்ளே நுழைந்து ஏதேது எபசுவானோ, என்னென்ன கூறி ஏசுவானோ என்று என்னைக் குறித்து அருவருப்புக் கலந்ததோர் அச்சத்துடன் கருதினர் பலர். நானும் அலட்சியப்படுத்துவார்கள், பகை பொழிவார்கள், ஒவ்வொரு வேளையும் அமளி மூட்டுவார்கள் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். இரு பிரிவினரும் இப்போது பெருமளவுக்கு அந்த ஐயப்பாட்டினின்றும் விடுபட்டிருக்கிறோம் என்று நம்புகிறேன்.

கருத்துகளிலே மாறுபாடுகள் இருப்பினும், காட்டுணர்ச்சியின்றி, கனிவுடன் பழக, பேச, வாதிட முயற்சித்தால் முடியும் என்பதுதான் பெற்ற முதல் அனுபவமாகும். அங்கு ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொள்ளாமலில்லை; கருத்து மோதுதல்கள் ஏற்படாமலில்லை; எனினும் இவற்றினுக்கூடே, ஓர் கனிவு இருநதிடக் காண்கிறேன்; களிப்படைகிறேன்.

கனிவு என் கண்களுக்கு முதலில் சட்டமன்றத் தலைவர் உருவில்தான்!

டாக்டர் யூ.கிருஷ்ணா ராவ் அவர்கள், பார்ப்பனர்; கன்னடக்காரர். நான், தமிழக மக்களிடம் பார்ப்பனர்களுக்குப் பகைவன் என்று பல காலமாகச் சிததிரிக்கப்பட்டுள்ளவன். தமிழர்கள் பிற மொழியினரைத் தாழ்த்த வேண்டும் என்ற கொள்கை கொண்டவன் நான் என்று பல காலமாகக் கூறி வைத்திருக்கிறார்கள். இந்த எண்ணத்துடன்தான், டாக்டர் அவர்கள் என்னை நோக்குவார் என்ற அச்சம் எனக்கு இருந்தது.

"உன்னுடைய அச்சம் கிடக்கட்டும்; டாக்டர் ஒரு பார்ப்பனர் என்பதற்காகவே நீ என்னென்ன பழி பேசுவாயோ என்று அவருக்குச் சிலராவது அச்சமூ்ட்டி இருக்கமாட்டார்களா?" என்று கேட்பீர்கள். உண்மைதான். அப்படி ஒரு எண்ணம் ஏற்பட்டிருக்கக்கூடும்.

ஆனால், டாக்டர் அவர்கள் கனிவான உள்ளம் படைத்தவர் மட்டுமல்ல; அவரிடம் தொடர்பு கொள்வோர் அனைவருமே அவ்விதமான 'கனிவு' பெறத்தக்க வகையினைத் தமது பேச்சாலும் போக்காலும் வழங்கிடுபவர்.

மழலை ஓசையுடன் அவர் தமிழ் பேசுவது கேட்கவே ஓர் இனிமையாக இருக்கிறது. நல்ல தமிழ் பேச இயலுமோ என்று அவர் எண்ணுகிறார். அவர் நல்ல தமிழைத் தேடிப்பிடித்து இழுத்துவரத் தேவையில்லை; உள்ளத்திலே அதற்கான 'ஒளி' அவரிடம் நிரம்ப இருக்கிறது. அவருடைய சீரிய மயற்சி, ஆட்சிமொழியாகியுள்ள தமிழின் பொலிவினை வளப்படுத்தி வருகிறது.

பொதுவாகவே, சட்ட மன்றத்திலே தமிழ் மணம் கமழ்கிறது. திருக்குறளும் சிலப்பதிகாமும் மன்றத்திலே பலராலும் எடுத்துரைக்கப்பட்டு வருகின்றன. ஓர் இரகசியம் - வெளியே சொல்லிவிடாதீர்! சட்ட மன்றத்திலே உள்ள ஆரணங்ககுகள் அவ்வளவு பேருமே பேச்சுத் திறனிலும், தமிழார்வதிலும், வேண்டுமென்றே ஆடவர்களை முன்னணியில் விட்டு வைத்திருக்கிறார்களே தவிர, அவர்கள் விரும்பினால், ஆடவர்கள் ஆயாசமடையத்தக்க வகையில் முன்னணியில் அம்மயரே இருந்திடுவர். எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி இதிலே! ஆமாம்; என்னையும், நான் போற்றுகின்ற கொள்கைகளையும், அம்மையர் சிலர் கடிந்துரைக்கும்போதுகூட, நான் அவர்களிடம் உள்ள பேச்சுத் திறனில் லயித்துவிடுகிறேன். தமிழார்வத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். என்னதான் நாம் போற்றினாலும், பாராட்டினாலும், தாய் மொழிதானே தமிழ்! அவர்கள் பக்கம்தான் சேரும்!

இன்று ஆளும் கட்சியினருக்கு மிகப்பெரிய எண்ணிக்கைப் பலம் இருக்கிறது. நான் சார்ந்துள்ள கட்சிக்கு உள்ள எண்ணிக்கை மிகக் குறைவு.

பிரச்னைகளின் நியாய அநியாயம், அவை குறித்துக் கூறப்படும் வாதங்களில் உள்ள தரம், திறம் இவை எப்படி இருந்தபோதிலும், அவை குறித்து எவ்வளவு வியந்து பேசினாலும், பாராட்டினும் இறுதியில், 'எண்ணிக்கை'தானே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது? வெளிப்படையாகக் கூறுவதென்றால் பிரச்சினைகள் விளக்கப்பட்டு, கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு, முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்று கூறுவது 'சம்பிரதாயம்'. பொதுவாகவே சம்பிரதாயங்களுக்கு இப்போது வலிவு குறைந்துவிட்டதல்லவா? அதுபோலத்தான் இந்தச் சம்பிரதாயமும்!

என் அனுபவத்தில், ஆளும் கட்சியினரில் பலர் எங்கள் வாதங்களில் உள்ள உண்மைகளை ஒப்புக்கொள்பவர்களாகவே இருந்திடத் தெரிகிறது - ஆனால் சட்டசபைக்கு உள்ளே அல்ல; வெளியே! அமைச்சர்கள் பார்வை படாத இடத்திலே! முடிவுகள் எடுக்கப்பட்டான பிறகு!

சட்ட சபையிலே நாங்கள் இடம் பெற்ற துவக்கத்தில், 'அடுக்கு மொழி' என்பது குறித்து ஆளும் கட்சியினர் பலர் கேலி பேசினர். இப்போது, அவர்கள் அதே முடிறயில் பேச முற்படுகின்றனர்.

என் நண்பர் ஆசைத்தம்பி இம்முறை நமது வாக்கியங்களை முடிக்கும்போது, 'ஆசைப்படுகிறேன், ஆசைப்படுகிறேன்! என்று கூறிவந்தார். நிதி அமைச்சர் என்னைப் பார்த்து, 'ஆசைத்தம்பி ஆசைப்படுகிறார்' என்று கூறியபோது, நானாக எண்ணிக்கொண்டேன், 'சரி சரி, இவருக்கும் அடுக்குமொழி இனிக்கிறது!' என்று!

முதுகுளத்தூர் சம்பவம், சட்டப் புத்தக எரிப்பு தடுப்புச் சட்டம் பற்றிய பேச்சு, நேருவுக்குக் கறுப்புக் கொடி காட்டியதைத் தொடர்ந்து ஏற்பட்ட அடக்குமுறை பற்றிய கண்டனம் என்பவை, பண்பு குறைந்தவர்கள் சட்ட மன்றத்திலே அதிகமாக இருந்திருந்தால், அமளியை மூட்டி விட்டிருக்கக் கூடியவை.

ஆனால், நாம் பெருமையுடன் கூறிக்கொள்ளலாம்; மன எழுச்சியும் நெகிழ்ச்சியும், ஆத்திரமும் கோபமும் பொங்கிடத்தக்க நிலையினை மூட்டும் அந்தச் சம்பவம் குறித்து விவாதம் கடுமையாக நடைபெற்றபோதும், கட்டுப்பாடு மீறவில்லை; விதிகள் பாழ்படவில்லை; கலகம் விளையவில்லை.
அவ்வளவு பண்பான முறையிலே சட்டசபை நடவடிக்கைகளை நடத்திச் செல்ல முடிகிறது. இதற்குக் காரணம், பொதுவாகவே அனைவருக்கும் நல்ல முறையில் சட்டமன்றம் நடைபெற வேண்டும் என்பதில் உள்ள அக்கறைதான்.

நன்றி
ஆனந்த விகடன்
03.03.2010

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.