அண்ணா நூற்றாண்டு விழா செய்திகள்
:::
அண்ணா பேரவை, காஞ்சிபுரம் :::

20.09.2009 காஞ்சிபுரம், அண்ணா பேரவை

காஞ்சிபுரம் அண்ணா பேரவை சார்பில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. 20.09.2009 அண்டு காலை 10.00 மணியளவில் காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு காஞ்சி நகர தி.மு.க. அவைத்தலைவர் திரு.வ.கந்தசாமி தலைம தாங்கினார். திரு.வி.எஸ்இராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். திரு.தே.தயாளன் வந்திருந்தோரை வரவேற்றார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட 'இலட்சிய நடிகர்' எஸ்.எஸ்.இராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். அப்போது அண்ணாவோடு தனக்கு ஏற்பட்ட அறிமுகம் பற்றியும், அரசியல் அனுபவங்கள் பற்றியும், கலைத்துறை அனுபவங்கள் பற்றியும் அண்ணாவின் அரிய பண்புகள் பற்றியும் சிறப்பாக சொற்பொழிவாற்றினார். அண்ணாவின் குடும்பத்தினர் அண்ணா மவர்வண்ணன், இளவரசி முத்துகுமார், அ.ப.சௌமியன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவில், இளவரசி முத்துக்குமார், பாண்டிச்சேரி அண்ணா பேரவை தலைவர் சிவ இளங்கோ அவர்கள் வாழ்த்துரை வழங்கினர். விழாவை முன்னின்று எல்லா ஏற்பாடுகளையும் சிறப்பாக நடத்திய காஞ்சி மாவட்ட அண்ணா பேரவை அமைப்பாளர் திரு.வி.முனுசாமி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.


29.03.2009 அண்ணா நூற்றாண்டு விழா - அண்ணா பேரவை, காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அண்ணா பேரவையின் சார்பில் அண்ணா நூற்றாண்டு விழா மற்றும் அண்ணா பேரவையின் நிறுவனர் டாக்டர் அண்ணா பரிமளம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் கூட்டம் நடைபெற்றது. டாக்டர் அண்ணா பரிமளம் அவர்களின் மகள் இளவரசி முத்துக்குமார் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் பேசும்போது, டாக்டர் அண்ணா பரிமளம் அவர்கள் அண்ணா நூற்றாண்டு விழாவை மிகவும் சிறப்பாக கொண்டாட மிகவும் ஆவலாக இருந்தார். இவ்வளவு சிறப்பாக இங்கு நடக்கும் அண்ணா நூற்றாண்டு விழாவைக் காண அவர் இல்லாதது மிகவும் வறுத்தமாக உள்ளது என்று தெரிவித்தார்.

திரு.தே.தயாளன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவில், அறிஞர் அண்ணா நடத்திய திராவிடநாடு, காஞ்சி, ஹோம் லேண்ட், ஹோம் ரூல் ஆகிய இதழ்களில் அண்ணாவோடு பணியாற்றியவர்களுக்கு விழாவின் சிறப்பு விருந்தினர் இந்தியநாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு.இரா.செழியன் அவர்களால் சிறப்பு செய்யப்பட்டது சிறந்த நிகழ்வாக அமைந்தது. மேலும் சிறப்பாக அண்ணாவின் குடும்பத்தார்கள், மலர்வண்ணன், சௌமியன், இளவரசிமுத்துக்குமார் ஆகியோருக்கு சிறப்பு செய்யப்பட்டது.

மேலும் ஒரு முக்கிய நிகழ்வாக பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்க மாநாட்டைக் காஞ்சியில் நடத்தி அண்ணா-வாழ்வும் பணிகளும்(4 தொகுதிகள்) என்ற நூல் வெளியிட்ட மயிலம் பரிமளவேல் தமிழ் உயராய்வு மையம், முனைவர். வேல்.கார்த்திகேயன், பொறிஞர் தி.அ.விமலநாதன், திரு.கு.சுப்புராயன், திரு.க.சிவகுமான், திரு.வி.எஸ்.இராமசிருட்டிணன் ஆகியோர் பாராட்டப்பட்டனர்.

அன்று, காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா குடிலில் டாக்டர் அண்ணா பரிமளம், சரோஜா பரிமளம் வைவினைப் பொருட்கள் பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. அங்கு தயாரிக்கப்பட்ட அண்ணா உருவச் சிலைகள் அன்பளிப்பாகத் தரப்பட்டது.

விழாவின் இன்னொரு முக்கிய நிகழ்வாக, ஆசிரியர் பூவை திரு.சுகுமாரன் எழுதிய ‘காலத்தை வென்றவர்‘(அண்ணாவின் வாழ்க்கை வரலாறு) என்ற நூல் வெளியிடப்பட்டது. திரு.சுகுமாரன் ஏற்புரை வழங்கும்போது, "இந்தப் புத்தகம் எழுதுவதற்கு டாக்டர் அண்ணா பரிமளம் எழுதிய அண்ணா தன்வரலாறு என்ற புத்தகம்தான் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது" என்று நன்றியுடன் தெரிவித்தார்.

அண்ணாவின் கெழுதகை நண்பரும், இந்திய நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான திரு.இரா.செழியன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். அவர் பேசும்போது, "எனக்கு இந்த வரவேற்பும், புகழும் எனக்குக் கிடைத்ததாக நான் கருதவில்லை. இவையெல்லாம் எனக்கு அறிஞர் அண்ணாவால் கிடைத்தது. நான் ஒரு சாதாரண மனிதன் என்னை உயர்த்தியவர் அண்ணா. நீங்கள் கைதட்டுவதைக்கூட என்னால் பெருமையாக நான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எல்லாம் அண்ணாவுக்கு கிடைக்கின்ற பெருமை. நாம் அண்ணாவைக் கொண்டாடுவதால் அண்ணாவுக்கு புகழ் என்பதைவிட நாம் நம் வாழ்க்கைக்கு தேவையானவற்றைப் பெறுகிறோம் என்று பொருள்" என்றும், "இந்த விழாவில் அண்ணாவோடு பணியாற்றியவர்களைப் பார்க்கும்போது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றும், வருங்காலத்தில் அண்ணாவின் கொள்கைகளை மட்டும் பின்பற்றி நடத்தப்படும் ஒரு கட்சி நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்பதை உறுதியாகக் கூறுகிறேன்" என்றும் கூறியது மிகவும் சிறப்பாக அமைந்தது.

இவ்வளவு சிறப்பானதொரு விழாவை முன்னின்று ஏற்பாடு செய்து நடத்திய அண்ணா பேரவையின் காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் திரு.வி.முனுசாமி அவர்கள் விழாவுக்கு வந்திருந்த அண்ணா பற்றாளர்களுக்கும், பொதுமக்களுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.


அக்டோபர் 05, 2008 - அண்ணா பேரவை, காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அண்ணா பேரவை சார்பில் அண்ணா நூற்றாண்டு விழா 05.10.2008 அன்று இனிதே தொடங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் திரு. வி.முனுசாமி அவர்கள் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். டாக்டர் அண்ணா பரிமளம்-சரோஜா பரிமளம் அரங்கில் நடைபெற்ற விழாவில் ஆசிரியர் திரு. தே.தயாளன் அவர்கள் தலைமையில் இசையரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம் நடைபெற்றது. டாக்டர் அண்ணா பரிமளம் அவர்களின் மகன்கள் திரு.அண்ணா மலர்வண்ணன் மற்றும் திரு.சௌமியன் ஆகியோர் வரவேற்புரை வழங்கினார்கள்.
கருத்தரங்கத்தில் திரு.டி.எஸ்.அபுபக்கர், திரு. நாத்திகம் நாகராசன், திரு.கே.கே.பொன்னம்பலம், திரு.எ.நீலகேசி ஆகியோர் அண்ணாவைப்பற்றிய நினைவுகளையும் கருத்துக்களையும் பேசினார்கள். திராவிட இயக்க வரலாற்று ஆசிரியர் திரு.க.திருநாவுக்கரசு மற்றும் கண்ணியம் திங்களிதழ் ஆசிரியர் முனைவர்.ஆ.கோ.குலோத்துங்கள் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
கூட்டத்திற்கு அண்ணாவோடு பழகியவர்களும், அண்ணா காலத்தில் வாழ்ந்தவர்களும், கட்சிப் பிரமுகர்களும், அண்ணாபற்றாளர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
திரு.வி.முனுசாமி அவர்கள் நன்றியுரையாற்ற விழா சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்த வருடம் முழுதும் மாதம்தோரும் சிறப்புக்கூட்டங்கள் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.