அறுவடையும் - அணிவகுப்பும் (4)
1

வீடு கட்டிய கதை -
தி. மு. க. பற்றி அமைச்சர் கருத்துரைகள் -
முன்னும் பின்னும்.

தம்பி!

வானவெளியிலே! "வாயுவேக மனோவேகத்திலே' பயணம் செய்யும் ஏற்பாடு உருவாகிக்கொண்டு வருகிறது என்பதுபற்றி, மெத்த ஆர்வத்தோடு, விளக்கமாக, விவரம் அறிந்த ஒருவர் எடுத்துக் கூறுகிறார் என்று வைத்துக்கொள் - இதனைக் கேட்டு, இதனால் விளையக் கூடிய நன்மைகள் யாவை என்பன பற்றி விவரம் கேட்டறியவும், இது எப்படி நடைபெற முடிகிறது என்று விளக்கம் கேட்டுத் தெளிவுபெறவும் சிலருக்குத் தோன்றும். சிலர் வியப்பிலே மூழ்கி விவரம் விளக்கம் கேட்காமலேயே இருந்துவிடுவர்;சிலர் இதனைப் புரிந்துகொள்ளாமலேயே, என்னமோ சொன்னார்கள் கேட்டோம்; எத்தனையோ பேர் எதை எதையோ சொன்னார்கள் கேட்டோம்; அதுபோல இது ஒன்று என்று இருந்துவிடுவர்; மேற்கொண்டு விவரம் விளக்கம் கேட்டறிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம்கூடத் தோன்றாது; வேறு சிலர், வியப்புக்குரியது இதுமட்டும் அல்ல; இதனைவிட வியப்புமிக்கது உண்டு என்று கூறித் தமக்குத் தெரிந்த தகவல்களைக் கூறுவர்; இன்னும் சிலர் இது வியப்புக் குரியதே அல்ல, மிக அற்பமானது என்று கூறிவிடுவர்.

எது கூறினும், எது நேரிடினும், பலர் பலவிதமான போக்கிலே, தமது கருத்தினைக் கூறுவர்; அவரவர்களின் நினைப்பு, நிலை, தரம், தன்மை ஆகியவைகளைப் பொறுத்து, போக்கு அமையும்.

ஒரு சிலர், அலாதியான போக்குடன் இருப்பர். எதனைக் குறித்தும் அக்கரையற்றும், எவரைக் குறித்தும் அலட்சியமாகவும் தமது போக்கு இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டிக் கொள்வதிலே இச்சையும், துடிப்பும் அவர்களுக்கு மிகுதியாக இருக்கும்.

வானவெளிப் பயணம்பற்றிப் பலர் பல்வேறுவிதமான கருத்துக் கூறுவர்; இவர்களோ, அலட்சியப் போக்குடன்,

"வானவெளியில் சுற்றிவிட்டு வரத்தானே ஏற்பாடு செய்கிறார்கள்; அங்கேயே இருந்துவிடுவதற்கு அல்லவே!''

என்று கேட்டு, வானவெளி சுற்றிவர ஏற்பாடு செய்தது மிகப்பெரிய அதிசயம் அல்ல என்று, விவரம் தெரியாதவர்கள் எண்ணிச் சிரித்திடச் செய்வார்கள்.

வானவெளிப் பயணம்பற்றித் தகவல்களைத் திரட்டி வந்து ஆர்வத்தோடு கூறிக்கொண்டிருந்தவருக்கு, எரிச்சல் ஏற்படும். அதைக் கண்டு, அலட்சியப் போக்கிலே பேசியவர், மகிழ்ச்சி கொள்வார்.

இப்படிப்பட்டவர்களை, தம்பி! பார்த்திருக்கலாம்; எங்கும் இருக்கிறார்கள்; எதற்கும் இந்தப் போக்கிலே பேசுவார்கள்.

சந்திரமண்டலம் செல்கிறார்கள் என்று கூறிப் பாரேன், சூரியமண்டலம் போகவில்லையே! என்று கேட்டு, கூறியவரின் ஆர்வத்தைக் கேலிக்குரியதாக்குவார்கள். வியப்புக்குரியவைகள்பற்றியே இவர்கள் போக்கு இவ்விதம் இருக்குமென்றால், சாதாரண நிகழ்ச்சிகள் குறித்து இவர்கள் கொள்ளும் நினைப்புப்பற்றியும், வெளியிடும் கருத்துப்பற்றியும் அதிகம் விளக்கவேண்டுமா!

எதைக்கண்டும், கொண்டும் எவரும் மகிழ்ச்சி அடையவோ பெருமைப்படவோ விடமாட்டார்கள். பிறர் மகிழ்ச்சியும் பெருமையும் அடையமுடியாமல் போவதிலேதான், இவர் களுக்கு மகிழ்ச்சி, பெருமை!

நல்ல பாலிலே விழுகிறதே ஈ, இரண்டு சொட்டுகளாவது குடித்து மகிழ்கிறதா இல்லை! செத்து மிதக்கிறது!! பால் கெட்டுச் சாக்கடையில் ஊற்றப்படுகிறது. இதனால் ஈக்கு என்ன இலாபம்!

பால் சாப்பிட எண்ணியவன் சாப்பிடவில்லை அல்லவா? அதுதான்!

இந்த மனப்போக்கிலுள்ளவர்கள், தமக்கென்று ஒருவித மான பலனும் கிடைக்காவிட்டாலும், மற்றவர்கள் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறபோது, பாலில் விழும் ஈபோலாகி, அந்த மகிழ்ச்சியை மாய்க்கவும், பெருமையைக் குலைக்கவும் முற்படுவர்.

திருமணம், புதுமனை புகுவிழாப்போன்ற நிகழ்ச்சிகளிலே, மகிழ்ச்சி பெறுவோர் பலர் இருப்பர்; அந்த இடங்களிலே, இப்படிப்பட்டவர்கள் சிலர் இருந்துகொண்டு, மற்றவர்களுக்கு எரிச்சலூட்டித் தமக்கு மகிழ்ச்சி தேடிக்கொள்வர்.

குட்டநோய் கொண்ட ஒருவர், அவர்பால் அனுதாபம் காட்டுபவரிடமே இதுபோல நடந்துகொண்டது, எனக்குத் தெரியும்.

உங்களைப்போன்ற நல்லவர்களுக்கா இதுபோன்ற கொடிய நோய் வருவது, என்னமோ போங்கள், பார்க்கும்போதே வயிறு பகீர் என்கிறது; துவக்கத்திலேயே கவனித்திருக்க வேண்டும்; தக்க மருந்து எடுத்துக்கொண்டிருக்கவேண்டும்; அப்போது கவனிக்காமல் விட்டுவிட்டீர்கள்; இப்போது இந்த அளவுக்கு வளர்ந்துவிட்டது - என்றெல்லாம் நண்பர், பரிவுடன் பேசி, நோய்கொண்டவருக்கு ஆறுதலளிக்க முற்பட்டார்.

உடல் மட்டுமல்ல, உள்ளமே நோய்கொண்டவராகிப் போயிருந்த அந்த ஆசாமி, இவ்வளவு பரிவுடன் ஆறுதலளித்த வருக்கு நன்றி கூறவில்லை. மாறாக, ஆறுதல் கூறியவரை உற்றுப் பார்த்துக்கொண்டு,

"என் விஷயம் இருக்கட்டும். உனக்கு, நெற்றியிலே என்னமோபோல இருக்கிறதப்பா. சும்மா, "தேமல், படை' என்று இருந்துவிடாதே.''

என்று பேசி, ஆறுதல் பேசியவர் அச்சப்படும்படி செய்து விட்டார்.

இந்தப் போக்குடையோர், ஒருவன் புதுவீடு கட்டி, அதிலே குடிபோவதுபற்றி, என்னென்ன பேசுவார்கள் என்பதை எண்ணிப்பார், தம்பி! வேடிக்கை வேடிக்கையாக இருக்கும்; இப்படிப்பட்டவர்களின் மனப்போக்கு எத்தகையது என்பது விளங்கும்.

***

வீடு கட்டிவிட்டானாம் வீடு. ஊரிலே உலகிலே யாருமே கட்டாத விதமான வீடு! பெரிய அரண்மனை கட்டிவிட்டதாக நினைப்பு!

தஞ்சாவூர் அரண்மனையே கலனாகிப் போய்விட்டதாம். இவன் கட்டிவிட்ட வீடு காலமெல்லாம் நிலைத்தா இருக்கப்போகிறது?

அட! என்ன இதைப்போய் இவ்வளவு பிரதாபப்படுத்திப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள், வேறு வேலையில்லாமல். என்னமோ, ஒரு வீடு கட்டிவிட்டான், வாயைக் கட்டி வயிற்றைக் கட்டிப் பணம் சேர்த்து. . . . .

அவ்வளவுதான் உனக்குத் தெரியுமா! அட, பைத்தியக் காரா! சேட்டிடம் வாங்கியிருப்பது, ஐந்து ஆயிரம்! தெரியுமா! பாங்கியிலேகூடப் பத்தோ எட்டோ. . . . '

கடன் வாங்கித்தானா இந்தப் பகட்டு. . . . .

வீட்டிலே ஒரு நகை கிடையாது, எல்லாம் விற்றுத் தீர்த்து விட்டான். . . . . .

கிடக்கட்டும், கையிலே உள்ள பணம், நகைவிற்ற பணம், இதனைக்கொண்டு வீடுகட்டிவிட்டால் பரவாயில்லை, கடன் வேறு பட்டிருக்கிறானே. . . . . . அதை எப்படித் தீர்க்கப் போகிறான்?

அது கிடக்கட்டும். . . . கடன்பட்டு ஏன் இவ்வளவு பெரிய வீடு கட்டவேண்டும். . . . . ஊர் மெச்சிக்கொள்ளவா?

பெரிய புள்ளி என்று எண்ணிக்கொள்வார்கள் - கடன் கொடுத்தவனும் திருப்பித்தரச் சொல்லித் தொல்லை தர மாட்டான் - புதிதாகக் கடன் கேட்டாலும், வீட்டைப் பார்த்து மலைத்துப்போய், தட்டாமல் தயங்காமல் கொடுப்பான் என்ற நப்பாசை காரணமாகத்தான், இவ்வளவு பெரிய வீடு கட்டிக் கொண்டான். . . . .

எல்லோருமே பெரிய வீடு, பெரிய வீடு என்று பேசிக் கொண்டு இருக்கிறீர்களே, என்ன பெரிய வீடு இது. . . .?

அட, அவன் நிலைக்கு அது பெரிய வீடுதானே. . . .

முன்பு அவன் புறாக்கூண்டுபோன்ற வீட்டில்தானே இருந்துவந்தான். . . . இது பெரிது அல்லவா!

பார்வைக்குத்தான் பெரிது. . . . . அதிலே போட்டுக் கட்டப் பட்டிருக்கும் சாமான்கள் மட்டம், தெரியுமா? தேக்கு மரமா, கதவு, பலகணி எல்லாம்? மாம்பலகை. . . கள்ளி இப்படிப் பட்டவை. . .

ஆமாமாம்! சுவரிலே வெடிப்பு இருக்கிறது. . . . .

சுண்ணாம்பு அரைத்த இலட்சணம் அப்படி. . . . . வேகாத செங்கல்லை வைத்துச் சுவரை எழுப்பிவிட்டால், வெடிப்பு இருக்காதா. . . . .

ஆனால், ஊரார் பார்க்கிறபோது, கண்ணுக்கப் பெரிய வீடு தெரிகிறதல்லவா. . . . . உடனே ஆசாமி வளமாக இருக்கிறான் என்று எண்ணிக்கொள்கிறார்கள். . . .

உள்ளே புகுந்து பார்ப்பவர்களுக்குத்தானே உண்மை தெரியும். . . .

கொஞ்ச நாள் போகட்டுமே. . . . . தானாக எல்லா விஷயமும் வெளியே வந்துவிடும், பாரேன். கடன் கொடுத்தவர்கள் வரிசையாக வந்து நிற்பார்கள். . . . வீடு, மூலைக்கு மூலை ஒழுகும், வெடிக்கும். . . . . கலனாகிப் போகும் . . . .

பழுது பார்க்கக்கூடப் பணம் கிடைக்காமல் பயல் திண்டாடப்போகிறான். . . . .

இப்போது புதுவீடு கட்டிவிட்டோம். . . . . பெரிய வீடு கட்டிவிட்டோம் என்று பூரித்துக்கொண்டிருக்கிறான். . . . .

ஊராரும் அவன் கட்டியுள்ள வீட்டைப் பார்த்து, அவனைப் பெரிய புள்ளி என்று எண்ணிக்கொள்கிறார்கள். . . . மரியாதை காட்டுகிறார்கள். . . . .

ஆனால் ஒரு விஷயம் நாமே ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்; கடன்பட்டானோ, கைப்பொருளைச் செலவிட் டானோ, தரமான சாமானோ மட்டமானவையோ, எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், இவன் இப்படி ஒரு வீடு கட்டுவான் என்று மட்டும் யாரும் எதிர்பார்த்ததில்லை. நாமே நினைத்ததில்லை.

அது உண்மைதான்; வீடு கட்டப்போகிறான் என்று செய்தி வந்தபோதுகூட நம்பவில்லை. . . . .

நம்பவில்லையா. . . அட, கேலியே செய்தோம். இவனாவது பெரிய வீடு கட்டுவதாவது என்று. . .

இருக்கிற வீடே பறிபோகப்போகிறது என்றுகூடத்தான் சொன்னோம். . . . . நம்மை எல்லாம் ஏமாற்றிவிட்டான். . . . நம்முடைய பேச்சையெல்லாம் பொய்யாக்கிவிட்டான். . . .

இது உண்மைதான். . . . அதை எண்ணிக்கொண்டால் நமக்கே வெட்கமாகத்தான் இருக்கிறது.

கேட்பானல்லவா, என்ன ஐயா! என்னை அவ்வளவு கேபேசினீர்களே. . . . எதுவும் என்னால் ஆகாது என்று ஏசினீர்களே . . . . . இப்போது பார்க்கிறீர்களே பெரிய வீடு. . . . . என்ன சொல்கிறீர்கள் என்று கேட்பானல்லவா. . . . .?

இவனை நம்பி எவன் பணம் கொடுப்பான் என்றுகூடத் தான் பேசியிருக்கிறேன். . . . .

பணத்தைக் கொடுத்து ஏமாந்து போகாதீர்கள் என்று நான் எச்சரிக்கை செய்தேன். . . .

பணத்தைக் கொடுக்காதபடி நான் சில இடங்களைத் தடுத்தும் இருக்கிறேன். . . .

அப்படி எல்லாம் இருந்தும், பணமும் கிடைத்தது, வீட்டையும் பெரிதாகக் கட்டிக்கொண்டான் என்பதை எண்ணும்போதுதான், வெட்கமும் கோபமும் பீறிட்டுக்கொண்டு வருகிறது.

எனக்கும் அப்படித்தான். ஆனால், நாமும், அவனைப் பார்த்து பெரிய வீடு கட்டிவிட்டாய், பரவாயில்லை என்று சொன்னால் பயலுக்குச் சந்தோஷம் அல்லவா ஏற்படும்.

ஆமாமாம்! துள்ளுவான்!

"போடா, மகா பெரிய வீடு கட்டிவிட்டாய் வீடு' என்று தான் நாம் சொல்லவேண்டும்.

ஏன், இன்னும்கூடச் சொல்லலாமே, அடா அப்பா! வீடு கட்டிவிட்டால் மட்டும் போதது; பட்ட கடனைத் தீர்க்க வேண்டும் என்று சொல்லலாம். . . .

ஆமாய்யா. . . அதுதான் சரி. . . அதுவும், பத்துப்பேர் எதிரில் சொல்லவேண்டும்.

வீடு நன்றாக அமைந்திருக்கிறது என்று சில பைத்தியங்கள் பேசும்; இவன் பல் இளித்தபடி நிற்பான்; அந்தச் சமயமாகப் பார்த்து இதைச் சொல்லவேண்டும்.

பயல் திருதிருவென்று விழிப்பான். பாராட்ட வந்தவர் களும் செச்சே! இவ்வளவுதானா விஷயம், கடன் பட்டுத்தான் கட்டினானா இந்த வீட்டை என்று பேசிக்கொள்வார்கள்.

"பழைய கடனுக்குப் புதிய வீடு ஏலம் போடப்பட்டது என்று பத்திரிகைத் தலைப்புப் பார்த்தேன், நீ பார்த்தாயோ' என்று, நான் கேட்கப்போகிறேன், அந்தப் பயல், சந்தனம் கொடுத்து, வெற்றிலைப் பாக்கு எடுத்துக்கொள்ளுங்கள் என்று எனக்கு உபசாரம் செய்வானல்லவா, அப்போது!!

***

சரி அண்ணா! புதுமனை புகுவிழாபற்றியும், பிறர் மகிழ்ச்சி கண்டு பொறாதார் போக்குப்பற்றியும், இப்போது எதற்காக இவ்வளவு கூறுகிறாய்; அறுவடையும் அணிவகுப்பும் கண்டு, அதன் பொருள்பற்றி விளக்கம் அறியும் வேளையில் என்று கேட்கிறாய்; தம்பி! காரணமாகத்தான் இதனைக் கூறுகிறேன்; பிறர் வாழக்கண்டு மனம்பொறாத போக்கினரின் பேச்சிப் போலவே, நமது கழகம்பெற்றுள்ள வெற்றிகண்டு, காங்கிரஸ் வட்டாரத்தினர் மனம் வெதும்பி, நாம் நமது வெற்றியால் ஏற்படும் மகிழ்ச்சியைச் சுவைக்க முடியாதபடி செய்துவிட, என்ன செய்யலாம், என்ன சொல்லலாம் என்று துடியாய்த் துடித்துக் கிடக்கிறார்களே, அந்தப் போக்கு எப்படிப்பட்டது என்பதை விளக்குவதற்காகத்தான், இதனைச் சிறிதளவு விவரமாக்கினேன்.

திராவிட முன்னேற்றக் கழகம், 34 இலட்சம் மக்களின் நல்லெண்ணத்தைப்பெறும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒடுக்கிவிட்டோம், பிளந்துவிட்டோம், செயலற்றதாக்கிவிட்டோம், எனவே தேர்தலிலே ஈடுபடக்கூட அதற்குப் போதுமான வலிவு கிடையாது. தேர்தல் வேலையின் பாரமே கழகத்தை மேலும் முறித்துவிடும், தகர்த்துவிடும் என்று அவர்கள் நம்பிக் கிடந்தனர்.

அதனாலேதான், கழகம் வெற்றிபெற்றது கண்டு, அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிர்ச்சி காரணமாக அலறுகிறார்கள். அலறுவதுடன், நான் துவக்கத்திலே காட்டியுள்ளபடி, நாம் பெறக்கூடிய மகிழ்ச்சியையாவது, எரிச்சலூட்டும் பேச்சுப் பேசி மாய்க்கலாம் என்று முனைகிறார்கள்.

பணபலம், பத்திரிகை பலம், பதவி பலம், ஆதிக்கக்காரர் பலம் ஆகியவைகளை நிரம்பப்பெற்று, அவைகளைத் தக்க விதத்தில் தருணமறிந்து பயன்படுத்தினால் மட்டுமே தேர்தலில் வெற்றிபெற முடியும். அத்தகைய "பலம்' கழகத்திடம் ஏது? எங்கிருந்து கிடைக்கும்? ஆகவே தேர்தலிலே வெற்றி கிட்டப் போவதில்லை என்று காங்கிரசின் பெருந்தலைவர்கள் நம்பினார்கள்; மற்றவர்களை நம்பும்படி செய்தார்கள்.

இந்தத் தேர்தலிலே தி. மு. க. எப்படி. . . .? என்று "அகில இந்திய' காங்கிரசுத் தலைவர்கள் கேட்டபோதெல்லாம் இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் குறும்புப் புன்னகையுடன்.

"தி. மு. கழகமா? அது தேர்தல் வரையிலே இருந்தால் தானே. . . . . அதற்குள்ளாகவே தி. மு. க. தீர்ந்துவிடுமே! அங்கு இப்போது ஒரே குழப்பம், குளறுபடி, குத்து, வெட்டு. . . . .''

என்று மகிழ்ச்சி பொங்கப் பொங்கக் கூறிவந்தனர்.

"கட்சிக்கு உள்ளே பூசல்கள் எழுவது எங்கும் உண்டல்லவா?''

என்று கேட்டவர்களுக்குக்கூட, இவர்கள்.

இந்தக் கழகத்திலே ஏற்பட்டுவிட்ட குழப்பம் சாதாரணமானதல்ல. கழகத்தின் தூண்களே சாய்கின்றன! தூண்கள் சாய்ந்த பிறகு, கட்டிடம் நிலைக்குமா?

என்று கூறிக் கைகொட்டிச் சிரித்தனர்,

குழப்பம் செய்கிறவர்கள் உள்ளபடி, கழகத்திலே மிக வலிவு உள்ளவர்களா?

என்று கேட்ட கேள்விக்கு இவர்கள்,

ஆமாம்! உள்ளபடி கழகத்துக்கு ஓரளவு வலிவு, செல்வாக்கு, வளர்ச்சி இருப்பதே இவர்களாலேதான். இவர்கள் இல்லை என்றால் கழகமே கலகலத்துப் போகும். இவர்கள் இப்போது, கழகப் போக்குச் சரியில்லை, கொள்கை நியாயமில்லை, திட்டம் தவறானது, தீதானது என்று வெளிப் படையாகப் பேசவும், கழகப் போக்கை எதிர்க்கவும் முற்பட்டு விட்டார்கள்.

என்று இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் விளக்கம் அளித்தனர். அதுகேட்டு, "அகில இந்திய' காங்கிரசுத் தலைவர்கள் அகமகிழ்ந்ததுடன் இருந்துவிட்டனர்; எண்ணிப் பார்க்கவில்லை; ஆய்ந்து பார்க்கவில்லை. ஆய்ந்து பார்த்திருப்பார்களானால்,

ஒரு இடத்திலே மிக முக்கியமானவர்கள், தூண்கள், வலிவும் வளர்ச்சியும் தருகிறவர்கள் இருப்பார்களானால், அவர்கள், அந்த இடம் கெட்டுவிட்டது என்று கூறுவதிலே பொருள் இல்லை; கெட்டுவிட்டது என்று கூறி அவர்கள் அந்த இடத்தைவிட்டு வெளியேறத் தேவையில்லை; யாரார் இடத்தைக் கெடுத்துவிடுகிறார்களோ அவர்களை இந்தத் தூண்போன்றவர்கள் விரட்டியிருக்கவேண்டும்; அது முடியவில்லை என்பதிலிருந்து, இவர்கள் தூண்களும் அல்ல; தூய்மையாளரும் அல்ல; வல்லமை மிக்கோரும் அல்ல; வளர்ச்சிக்குப் பொறுப்பாளியும் அல்ல; என்பதனைப் புரிந்து கொண்டிருக்க முடியும்.

ஆனால், அகில இந்திய நிலையினருக்கு, தமது "தளபதிகளிடம்' அவ்வளவு நம்பிக்கை! முதுகைத் தட்டிக்கொடுத்தனர்!

முதல் மந்திரிகள், மந்திரிகள் என்ற நிலையினர் கூறும் போது, எப்படி நம்பிக்கை ஏற்படாமலிருக்கும்.

அவர்களின் பேச்சுக்குப் பொருளும் வலிவும் ஏற்றிவைக்கும் விதமாக, "ஏடுகள்' கழகத்திலே தலைதூக்கிய "எதிர்ப்பாளர் களை'த் தமது "செல்லப்பிள்ளைகள்' ஆக்கிக்கொண்டு, அவர் களின் பேச்சிலே பேரறிவையும், போக்கிலே பெருந்தன்மை யையும், கனைப்பிலே இடிமுழக்கத்தையும், கண் வீச்சிலே மின்னலையும் கண்டனர்!! பத்தி பத்தியாக "புகழ்' கொட்டினர்; அவசர அவசரமாக ஆரூடம் கணித்தனர். இதனை நம்பி, அகில இந்தியத் தலைவர்கள் மெத்தவும் ஏமாந்துபோயினர்!

தம்பி! நமது கழகத்துக்குள்ளே ஏற்பட்ட கலாம், காங்கிரசுப் பெரும் தலைவர்களுக்கு, இனிக் கழகம் தலை தூக்காது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியதிலே ஆச்சரியமில்லை. ஏனெனில், நம்மிலேயே பலருக்கு அந்தப் பீதி இருந்தது.

என்னைப் பொறுத்தமட்டில் எதிர்ப்பாளர்களாகி, நம்மை விட்டுச் சென்றுவிட்டார்களே, அவர்களின் அளவிடற்கரிய ஆற்றலால், நாம் அழிக்கப்பட்டுப் போய்விடுவோம்; அவர்கள் தமது கோபப் பார்வையாலேயே நம்மைச் சுட்டுச் சாம்பலாக்கி விடுவார்கள் என்ற கவலை எழுந்ததே இல்லை; எனக்கிருந்தது எல்லாம், மன உளைச்சல். பாசப்பிணைப்பினாலே ஏற்பட்ட உணர்ச்சிகள் என் கண்களைக் குளமாக்கின, கருத்தைக் குழப்பின, செயலற்றவனாகிவிட்டேன்.

நல்ல வேளையாக, எனக்கிருந்த அந்த மன உளைச்சலைப் போக்கும் விதமாக, விலகியவர்கள் தாங்கள் எவ்வளவு பெருந் தலைவர்கள் என்பதை மட்டுமல்ல, நான் எவ்வளவு அற்பன், இலாயக்கற்றவன் என்பதுபற்றிய தமது எண்ணங்களைப் பேச்சாலும், எழுத்தாலும் எடுத்துச் சொல்லி ஏசி ஏசி, என் மனதிலே அலைமோதிக்கொண்டிருந்த பாச உணர்ச்சி அவ்வளவையும் உலர்ந்துபோகச் செய்தனர். அதனால், நான், வறண்ட கண்ணினனானேன், குழப்பம் நீங்கப்பட்ட மனதின னானேன், செயலற்ற நிலை நீங்கிக் கடமையைச் செய்வோனானேன்!

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai