அறுவடையும் - அணிவகுப்பும் (3)
1

தொகுதிகளும் உறுப்பினர்களும் -
அணிவகுப்பின் வெற்றி.

தம்பி!

தொகுதிகளிலே நல்ல தொடர்பினை, தேர்ந்தெடுக்கப் பட்ட உறுப்பினர்கள் மட்டுமே கொண்டிருக்கவேண்டும் என்று இருந்துவிடாமல், அந்தத் தொகுதியிலே உள்ள கழகத் தோழர் களின் குழு ஒன்று, அத்தகைய தொடர்பினை வைத்துக் கொண்டிருக்கவேண்டும் என்று சென்றகிழமை குறிப்பிட்டிருந்தேன். இது, ஏன் அவ்விதமான தொடர்பு கழகத் தோழர்கள் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்று கேட்கவும், கடிந்துரைக்கவும் எழுதப்பட்டது அல்ல. இனி அவ்விதமான முறையிலே பணி இருக்கவேண்டும் என்பதனை எடுத்துக்காட்டுவதற்காகக் கூறினேன்.

தொகுதியின் நிலைமைகளை, நெருங்கிய, இடைவிடாத தொடர்புமூலம் நன்கு தெரிந்து வைத்துக்கொள்ளும் குழு அமைந்து, நல்ல முறையிலே வேலை செய்து வந்தால், நாளா வட்டத்தில், இந்தக் குழு அந்தத் தொகுதிக்கு ஏற்ற வேட்பாளர் எவர் என்பதை எடுத்துரைக்கும் தகுதியும் பெற்றுவிடும். அந்தத் தகுதி, மெள்ளமெள்ள உரிமையாகவும் வடிவமெடுக்கக்கூடும்.

இன்று நமது கழக அமைப்பு, சிற்றூர்க் கிளை, வட்டக் கழகம், மாவட்டக் கழகம் என்று, நிர்வாக அமைப்புகளை அடிப்படையாகக்கொண்டு இருந்து வருகிறது. இதனைக் கூடத்திருத்தி, தொகுதிகளை நமது "வட்டமாக'க் கொள்ள லாமோ என்றுகூட எண்ணம் பிறக்கிறது.

அடித்தளமாகச் சிற்றூர்க் கிளைகளும், ஒரு தொகுதியிலே எத்தனை சிற்றூர் பேரூர்க் கிளைகள் உள்ளனவோ அவை இணைக்கப்பட்டு "தொகுதி' அல்லது வட்டம் அல்லது கோட்டம் என்ற முறையிலே, அமைக்கலாமா என்பதுபற்றி, எண்ணிப் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இதிலே எழக்கூடிய நல்லவைகளைப்பற்றி மட்டுமேயல்லாமல், கெடுதல்கள் எவை யேனும் உண்டாகக்கூடும் என்று தோன்றினால் எடுத்துரைக்கத் தயங்கவேண்டாம் - கடித வாயிலாக. ஏனெனில், நான் இதுபற்றி எந்த ஒரு முடிவான கருத்துக்கும் வந்துவிடவில்லை; யோசிக்கத் தொடங்கியுள்ளேன்.

காங்கிரசல்லாதார் வெற்றிபெற்ற இடங்களை வேண்டு மென்றே புறக்கணித்து, பாழ்நிலை ஏற்படுத்தி, அதன்மூலம் கெட்டபெயரைக் காங்கிரசல்லாதாருக்கு ஏற்படுத்தி வைத்து அதனைப் பயன்படுத்தி அடுத்த தேர்தலிலே காங்கிரசு கட்சிக்கு வெற்றிதேடிக்கொள்வது என்பது "தரக்குறைவான' முறை; மக்களாட்சி முறையைப் பாழ்படச் செய்யும் சூது; மக்கள் இன்னமும் பாமரத் தன்மையிலேயே இருக்கிறார்கள், அவர்களை மிரட்டவும் மயக்கவும் முடியும் என்ற எண்ணம்கொண்டவர்களின் சூழ்ச்சித் திட்டம்.

இந்த "முறை' வளருவது, ஆட்சியில் இடம் பிடித்துக் கொள்ளும் எந்த ஒரு கட்சியும், தன் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள வழி செய்து, மக்களாட்சியின் மாண்பினை மாய்த்து விடும். இந்த ஆபத்தான முறையை எதிர்த்து செயலற்றதாக்கி விடவேண்டும்.

ஆளுங்கட்சி வெற்றிபெறாத தொகுதிகளிலே, எந்த முன்னேற்றமும் ஏற்படாது என்று கூறுவது அறியாமையும் அகந்தையும் மட்டுமல்ல, அரசியல் அறமுமாகாது; சட்டமும் அதனைஅனுமதிக்காது. எனவே, ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டுவிடும் கட்சியினர் வெளிப்படையாக அவ்விதம் பேச மாட்டார்கள். சட்டசபையில் பேசும்போதோ, கட்சிக்கு அப்பாற் பட்டவர்கள்போலவும் மக்களுடைய நலன்களுக்காகவே வந்துதித்துள்ளவர்கள்போலவும் பேசுவர். செயலோ முற்றிலும் அருவருக்கத்தக்கதாக இருக்கும்.

"ஏரி மராமத்து வேலை ஏழாண்டுகளாகச் செய்யப் படவில்லை; இந்த ஆண்டாவது அதனை மேற்கொள்ள வேண்டும்.''

என்று சட்டசபையிலே கழகத் தோழரோ, காங்கிரசல்லாதவர் எவரேனுமோ கூறும்போது, அமைச்சர்கள் ஆத்திரப்பட்டு,

"எங்களைத் தோற்கடித்த தொகுதி அது; அங்கு ஏரிமராமத்து வேலை செய்ய முடியாது''

என்று பேசமாட்டார்கள். பேசக்கூடாது. பேசினால் மக்களாட்சியின் மாண்பு அறிந்தோர் அனைவரும் கண்டிப்பார்கள். எனவே, அமைச்சர்கள் அவ்விதம் பேசாமல்,

"கனம் அங்கத்தினர் தமது தொகுதியிடம் அக்கரை காட்டுவது பாராட்டத்தக்கதுதான், என்றாலும், ஏரி மராமத்து வேலை என்ற பிரச்சினையில் உள்ள சகல தகவல்களையும் படித்துத் தெரிந்துகொண்டு, இங்கு அதுபற்றிப் பேசியிருந்தால் பொருத்தமாகவும் இருந்திருக்கும், தக்க பலனும் ஏற்படும்.''

என்று கூறுவார். தம்பி! புரிகிறதல்லவா? இந்த உறுப்பினர் விவரம் தெரியாமல் பேசுகிறார், படிக்காமல் எதையோ வாய்க்குவந்ததைப் பேசுகிறார் என்று அமைச்சர் கேசெய்கிற ôர். ஏன்? அந்த உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தவர்கள், செச்சே! விவரமறியாத, பொருத்தமாகப் பேசத்தெரியாத ஒருவரை அல்லவா, நாம் தேர்ந்தெடுத்து அனுப்பிவிட்டோம். அதனால்தான், நமது தொகுதி சீர்படவில்லை என்று எண்ணிக்கொள்ளவேண்டுமாம்! எரிச்சல் கொள்ளவேண்டுமாம்!! ஏளனம் செய்யவேண்டும், எதிர்க்கவேண்டும், இனி "ஓட்டுப் போடக்கூடாது' என்று தீர்மானிக்கவேண்டுமாம்! இதற்காகவே இப்படி, "இடுப்பொடிக்கும் பேச்சுப்' பேசுவதை வாடிக்கையாக்கிக் கொள்கிறார்கள்.

அதிலும், ஆளுங்கட்சியிலே எண்ணிக்கை மிக அதிகமாக இருந்துவிட்டால் அமைச்சர் இதுபோன்ற "இடுப்பொடிக்கும்' பேச்சுப் பேசியதும், ஆளுங்கட்சியினர் ஆரவாரம் செய்வர்;

கேலிச் சிரிப்பொலி செய்வர்! செச்சே! நாம் தேர்ந்தெடுத்து அனுப்பிய உறுப்பினருக்கு, சட்டசபையிலே மரியாதை கிடையாது; கேலிப்பொருளாக இருக்கிறார்! - என்று எண்ணி, அந்தத் தொகுதி மக்கள், தமது உறுப்பினர் குறித்துத் தாழ்வான கருத்தைக் கொள்ளவேண்டும் என்பதற்காகச் செய்யப்படும், "மட்டரகமான' முயற்சி இது. இதனை, மக்களாட்சியின் மாண்பினைப் போற்றுபவர்களும், அறநெறியில் பற்றுக்கொண்டவர்களும் மேற்கொள்ள மாட்டார்கள்; எதைச் செய்தாவது அரசியல் ஆதிக்கத்தைப் பெறவேண்டும், எந்த முறைகளைக் கையாண்டாகிலும் பெற்றதை இழந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற போக்கினர், இம்முறைகளைக் கையாள்வர்.

தொகுதி மக்களுக்கு உறுப்பினரிடம் பற்றுக் குறைவு ஏற்பட்டுவிடுவதுகூட இருக்கட்டும்,

என்ன சொன்னாலும் கவனிக்க மறுக்கிறார்கள்.

எதைக் கூறினாலும் ஏற்றுக் கொள்வதில்லை.

எத்தனைமுறை கேட்டாலும் நன்மை கிடைப்பதில்லை.

என்ற நிலையைக் காணும்போது, உறுப்பினருக்கே, மனம் உடைந்து போகிறது. சட்டசபையிலே நாம் இருப்பதனால் என்ன பலன்? என்ற சந்தேகம் அவருக்கே ஏற்பட்டுவிடுகிறது. எதையும் செய்யமுடியாமல், எதற்காகச் சட்டசபையிலே இருப்பது? என்று எண்ணுகிறார். சலிப்பு உணர்ச்சி மேலோங்கிவிடுகிறது.

இதற்கு இடையிலே, அமைச்சர்கள் அந்தத் தொகுதிகளிலே "உலா' வருவார்கள்; தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் களை உடனழைத்துக்கொண்டு அல்ல; அவரால் தோற்கடிக்கப் பட்ட காங்கிரஸ் கட்சிக்காரருடன்!!

காங்கிரஸ் ஆட்சியின் அருமை பெருமைகளை அமைச்சர் பேசுவார்.

தொகுதியின் சீர்கேடான நிலைமைகளையும், இதனைப் போக்கமுடியாமல் சட்டசபையில் வெட்டியாக உட்கார்ந்து விட்டு வரும் உறுப்பினரைக் கண்டித்தும், காங்கிரஸ் "பிரமுகர்கள்' பேசுவார்கள்.

அடுத்தமுறை எப்படியும் காங்கிரசுக்கு வெற்றி தேடிக் கொடுத்து, தொகுதியின் சீர்கேடுகளைப் போக்கிக்கொண்டு, சகலவிதமான நன்மைகளையும் பெற்றுக்கொள்ள இப்போதே உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும் என்று, ஊரின் "பெரிய புள்ளி' பேசுவார். அமைச்சர் புன்னகை புரிவார்.

தம்பி! இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் மக்களுக்கு என்ன எண்ணம் ஏற்படும்? காங்கிரசுக்கு "ஓட்டுப்' போடாததால்தான் நமது தொகுதியிலே நன்மை கிடைக்கவில்லை; அதனாலேதான், காங்கிரசு அமைச்சர்கள் நமது தொகுதியைக் கவனிக்கவில்லை; நாம் தவறு செய்துவிட்டோம்; அடுத்தமுறை காங்கிரசுக்கு "ஓட்டுப்' போட்டால்தான், தொகுதி நிலைமை சீர்படும் என்ற முடிவுதானே.

இந்த முறையை மெத்தத் திறமையுடன், கழகம் வெற்றி பெற்ற தொகுதிகளில், காங்கிரஸ் தலைவர்கள் கையாண்டனர்.

ஏரி, மராமத்து வேலைபற்றி நம்ம எம். எல். ஏ. பேசினாராமே. . . . .

ஓ! பேசினாரே! "கொல்'லென்று சிரித்தார்களே அவர் பேச்சைக் கேட்டு. . . . .

ஏன்? ஏன்? ஏன் சிரித்தார்கள்? சிரிக்காமல் என்ன செய்வார்கள்? ஏதாவது விவரம் தெரிந்து பேசினால்தானே!!

அப்படியா. . . ஆசாமி மோசம்தானா. . . .?

ஆருடக்காரனைப் போய்க்கேள்! அன்று காங்கிரசுக்கு ஓட்டுப்போட்டிருந்தால், இப்படியா நிலைமை இருந்திருக்கும்! ஏரி மராமத்து வேலைக்கு ஏழு ஆயிரம் இருந்தால் போதும். வருஷம் இரண்டு ஆகிறது, இந்த ஆள் சட்டசபைக்குப் போய்! இந்த ஒரு காரியத்தைச் செய்ய முடியவில்லை. எப்படி முடியும்! சாமர்த்தியம் வேண்டாமா? மந்திரிகளை மனம்போன போக்கிலே திட்டிவிட்டு, ஏரி மராமத்து வேலையைக் கவனிக்கச் சொன்னால் அவருக்குத் தான் எப்படி மனம் வரும்? ஏரியாவது குளமாவது என்று இருந்துவிட்டார்! நாம்தானே கஷ்டப்படுகிறோம்.

இப்படி ஊரிலே "பேச்சு' கிளம்பும்; கிளப்பி விடப்படும்!! உறுப்பினர்மீது அருவருப்பு வளராமல் இருக்குமா?

எந்தக் கட்சிக்கு மக்கள் வாக்களித்திருந்தால், ஆளுங்கட்சி எதுவரினும், கட்சிப் பாகுபாடு பார்க்காமல் எல்லாத் தொகுதி களுக்கும் நல்லவைகளைச் செய்தாகவேண்டும்; அதுதான் சட்டம், அதுதான் அறநெறி என்ற அடிப்படையை எல்லா மக்களுமா அறிந்திருக்கிறார்கள்? எடுத்துக் கூறும்போது, எல்லோருக்குமா புரிந்துவிடுகிறது? புரிந்துகொள்பவர்கள்கூட, ஆமாம்! நமது உறுப்பினர் என்ன செய்வார்? அவர், அவருடைய கடமையைச் செம்மையாகத்தான் செய்திருக்கிறார்; காங்கிரஸ் மந்திரிகள்தான் வேண்டுமென்றே, வஞ்சனை செய்கிறார்கள்; இப்படிப்பட்ட வஞ்சகம் செய்யும் கட்சியை இனி ஒருமுறை ஆட்சியிலே அமரவிடக்கூடாது? அமர்ந்தால், ஜனநாயகத்துக்கே ஆபத்து ஏற்படும் என்ற தெளிவான முடிவுக்கு எங்கே வரமுடிகிறது!

நமக்கு எதற்காகத் தத்துவ விசாரம். நமக்கு நல்லது வேண்டும். காங்கிரசுக்கு "ஓட்டு'ப் போட்டால்தான் நல்லது கிடைக்கும் என்று அமைச்சர்களே கூறிவிடுகிறார்கள். அவர்களிடம் போய், இது சரியா, முறையா, அறமா, நெறியா என்றெல்லாம் விவாதம் நடத்தவா முடியும்! நமது காரியத்தைச் சாதித்துக்கொள்ள வழிதேடவேண்டுமே தவிர, அரசியல் தத்துவம்பற்றிப் பேசிக்கொண்டிருப்பது, வீண் வேலை. ஆகவே காங்கிரசுக்கே "ஓட்டு'களைப் போட்டு விடுவோம்

என்றுதான், வாழ்க்கைத் தொல்லையிலே ஈடுபட்ட பெரும் பாலோர் எண்ணுவார்கள்.

இந்த மனப்பான்மையிலே நம்பிக்கை வைத்துத்தான், காங்கிரசுக் கட்சியினர், சென்ற முறை, கழகம் வெற்றிபெற்றத் தொகுதிகளிலே பேசும்போது, மிக உறுதியாகக் கூறிவந்தார்கள்.

அடுத்தமுறை இங்கு கழகம் வெற்றி பெறாது. என்று திட்டமிட்டு வேலையும் செய்தார்கள்; மிகப் பெரும் அளவு வெற்றியும் பெற்றார்கள். இப்போது கழகம் வெற்றிபெற்றுள்ள 50-இடங்களிலும், மறுபடியும் கழகம் வெற்றிபெற விடமாட்டோம் என்று, இப்போதே பேசுகிறார்கள்.

அக்ரமம், என்கிறாய்! அரசியல் சூழ்ச்சி என்று கண்டிக்கிறாய்! அதனால் என்ன, தம்பி! அதற்காக, ஆதிக்க வெறி பிடித்தவர்கள், அச்சமோ கூச்சமோ அடையப்போவதில்லை!

அப்படியானால், அண்ணா! இந்த ஆபத்திலிருந்து விடுபட, இந்த அநீதியை ஒழித்துக்கட்ட, வழியே கிடையாதா? இப்படியே ஒரு அக்ரமத்தை வளரவிடலாமா? என்றெல்லாம் கேட்கிறாய். தம்பி! வழி இல்லாமற் போகவில்லை. சென்ற முறையே அதனைக் குறிப்பாக நமது தோழர்களிடம் கூறி இருக்கிறேன்; ஆனால் திட்டமிட்டுச் செயலில் ஈடுபடவில்லை சென்றமுறை.

இம்முறையும் அதுபோல இருந்துவிடப்போவதில்லை.

தொகுதியில் நெருங்கிய தொடர்பினை நமது உறுப்பினர்கள் வைத்துக்கொள்ளவேண்டும்.

அவருக்குத் துணையாகவும், வழிகாட்டவும், இந்தத் தொடர்பினை ஒரு குழு கவனித்துக்கொள்ளவேண்டும்.

தொகுதிக்குத் தேவையானவைகளைக் குறித்துச் சட்டமன்றத்திலே எடுத்துரைக்கவேண்டும். எடுத்துரைத்ததுபற்றித் தொகுதியில் அவ்வப்பொழுது உறுப்பினர்களும், குழுவும் விளக்கியபடி இருக்கவேண்டும்.

முறைப்படி எடுத்துக் கூறியும், காங்கிரசு அரசு தொகுதியின் குறைபாடுகளை நீக்கத் தவறினால், அதனைத் தொகுதி மக்களிடம் எடுத்துக் காட்டவேண்டும்.

அதற்குப் பிறகும் காங்கிரஸ் அரசு வேண்டுமென்றே தொகுதியைப் புறக்கணித்து, கேடு செய்திட முனைகிறது என்றால், தொகுதியின் உறுப்பினரும், குழுவும், தொகுதியின் குறைபாடுகளை நீக்க, நேரடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இந்த நேரடி நடவடிக்கை என்பது, அமைதி கெடாதவிதமாகவும், சட்டத்துக்குக் கேடு ஏற்படாத முறையிலும் அமைதல்வேண்டும். சம்பந்தப்பட்ட அலுவல கங்கள், அலுவலாளர்கள் முன்பு, மறியல் செய்தேனும், தொகுதியின் குறைபாடுகள் நீங்கிட வழிகாணவேண்டும். அந்தக் காரியத்துக்குப் பொறுப்பாளர், அமைச்சர் இல்லம் அல்லது அலுவலகம் எனும் இடங்களும், "மறியல்' செய்வதற் கான இடங்களாகிவிடவேண்டும்.

தொகுதியின் நன்மைக்காக வாதாட மட்டுமல்ல, கிளர்ச்சியில் ஈடுபட, அதற்காகத் தடியடிபட, சிறை புக, கஷ்ட நஷ்டம் ஏற்க, உறுப்பினர்கள் துணிகிறார்கள் என்ற நிலைமை, இனி ஏற்பட்டாகவேண்டும்.

இந்த முறையின் மூலமாகத்தான், தரக்குறைவான வழிகளால் அரசியல் ஆதிக்கத்தை இழந்துவிடாமல் இருக்கும் போக்கை முறியடித்து, மக்களாட்சி முறையின் மாண்பினைப் பாதுகாத்திட இயலும்.

நமக்காக, நமது உறுப்பினர் சட்டசபையிலே வாதாடுகிறார் என்று மட்டும், இல்லங்களில் பேச்சு எழுவது போதாது; நமக்காக நமது உறுப்பினர், ஆட்சியாளர்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்து, சிறையில் தள்ளப்பட்டு, வாடிக்கொண்டிருக்கிறார் என்று, உள்ளம் நெகிழ இல்லந்தோறும் பேசிடும் நிலை எழவேண்டும். கழகத்தவர்கள், இனி இதற்குத் தம்மைத் தயாராக்கிக்கொள்ளவேண்டும்.

சென்றமுறை, நான் நேர்மையான அரசியல் முறையில் ஆட்சிக் கட்சியினருக்கு நம்பிக்கை இருக்கும் என்று எண்ணி, "தண்டலம் முறை'யைக் கடைப்பிடித்துப் பார்த்தேன்; பலன் ஏற்படவில்லை.

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai