அறுவடையும் - அணிவகுப்பும் (1)
1

தேர்தலின் முடிவுகள்-
காஞ்சீபுரம் தேர்தல்.

தம்பி!

அறுவடை முடிந்து, கட்டுகளைத் தலைமீது வைத்துக் கொண்டு, ஒற்றையடிப் பாதையிலே, ஒயிலாக நடந்துசெல்லும் காட்சி காணக்காணக் களிப்பூட்டுகிறதல்லவா. காண்போர்க்கு மட்டுமல்ல, கனமான கட்டுகளைச் சுமந்து செல்பவர்களுக்குங் கூடக் களிப்புத்தான். பாரம் தெரியாது, பாதையின் இடர்ப்பாடு பற்றிக் கவலை எழாது. வேலை முடிந்தது. பலனை எடுத்துச் செல்கிறோம் என்ற எண்ணம் செந்தேனாகும். வேறு வேலை களிலே, இத்தனை கனமானதை எப்படித் தூக்கிச் செல்வது என்ற எண்ணம் எழக்கூடும்; அறுவடை செய்து எடுத்துச் செல்லும் கட்டுகளின் கனம் தூக்கக்கூடியதுதானா என்ற எண்ணமே எழாது. பாடுபட்டோம், பலன் கண்டோம். உழுது பயிரிட்டோம். அறுவடையை எடுத்துச் செல்கிறோம் என்ற நினைப்பு, பாரத்தை கவனிக்க விடாது. அதிலும் வயலையும், அதிலே உழைத்திடு வோரையும், விதையையும் அதனின்றும் கிளம்பிய முளையையும் பக்கத்து வயலுடையார் பழித்துப் பேசக்கேட்டு, மனம் பதறிய நிலையும் இருந்திருப்பின், அறுவடை கணிசமான அளவும், தரமான வகையும் கொண்டதாக இருந்திடின், கட்டுகளைச் சுமந்து செல்வோர் கண்கள், முன்பு பழித்துப் பேசினோர் எங்கே என்றல்லவா தேடும்! ஆகாது என்றனையே! ஐயயே என்றனையே! வீண்பாடு என்றனையே! விளையாது என்றனையே! விழலுக்கு நீர் இறைக்கும் வீணன் என்று ஏசினையே! பதரப்பா, விதையல்ல என்று பரிகாசம் பேசினையே! பாரப்பா, கட்டுகளை! பாடுதந்த பலன்களை! அவ்வளவும் மணியப்பா! ஆள்தூக்க ஒண்ணாத கனமப்பா! என்றெல்லாம், பழித்தவர்களைக் கண்டு கூறலாமா என்று தோன்றுமல்லவா!! கூறும் உரிமையும் ஏற்படுகிறதல்லவா!!

புல் பூண்டு முளைக்காது, புறம்போக்கு, நந்தம் பாழ் என்று கூறினர், முப்போகம் விளைந்திடும் கழனி உடையோர்கள் எனத் தம்மைக் கருதினவர். பாழ்வெளியேயானாலும், பாடுபட்டால் பலன் உண்டு; பாழ்வெளியும் ஈதல்ல, பாங்கான வயலேதான்; பலகாலும் வளம்காண முயலாது விட்டதனால், பாழ்வெளி போல் தோற்றம் கொண்டதிது என்றுகூறி, கிளறிச் சமனாக்கி, கீழ்மண்ணை மேலாக்கி, வளமூட்ட எருவிட்டு, வகையாக நீர்பாய்ச்சி, வயல் உயிர்பெறச் செய்ததனால், வளமாகப் பயிர் ஏறி, அறுவடைக்கு வழி கண்டார். அவரெல்லாம் கட்டுகளைத் தலைமீது கனம்கூடக் கவனியாமல், கொண்டு செல்லும் போதினிலே, குறைகூறியோர் போக்கை எண்ணிச் சிரித்திடாரோ!

ஆனால், அறுவடையைச் சுமந்து செல்பவர்கள், சிரித்திடக் காணோம்! கலகலப்பான பேச்சுமில்லை!! கவலைக் கோடுகள் முகத்தில் காணப்படுகின்றன. உழைத்த அலுப்போ? அதுமட்டும் தான் என்று கூறுவதற்கு இல்லை. வேறு ஏதோ ஓர் எண்ணம், மனதிலே குடைகிறது. கடமையைச் செய்கிறார்கள், கட்டுகளைச் சுமந்து செல்கிறார்கள்; குறுநகை இல்லை, குதூகலம் இல்லை; ஏன்?

காரணம் தெரிந்துகொள்ளவேண்டுமா, தம்பி! அதோ, பார்த்தனையா, புங்கமரம்! அதன் நிழலிலே? யாரோ, படுத்துக் கிடக்கிறார்கள். வா! அருகே சென்று பார்ப்போம்!

கரத்திலே அரிவாள்! காலிலே வெட்டு! இரத்தம் கசிந்து இருக்கிறது! கட்டுப்போட்டுக்கொண்டிருக்கிறான்!

விவரம் தெரிகிறதல்லவா? அவனும் அறுவடையில் ஈடுபட்டான், ஆனால் அரிவாள் வெட்டு காலிலே வீழ்ந்தது. மேலால் வேலையில் மும்முரமாக ஈடுபட முடியவில்லை! கீழே கிடத்தப்பட்டிருக்கிறான்.

ஏன், காலிலே வெட்டு விழுந்தது? அறுவடை வேலை அறியானோ? என்றுதானே கேட்கத் தோன்றுகிறது? தம்பி! அதற்கான பதில் தெரிய, அவனுடைய மற்றொரு காலை உற்றுப் பார்! பச்சிலைக்கட்டுத் தெரிகிறதா? கேள், விவரத்தை! பலரும் அறுவடையில் ஈடுபட்டதுபோலத்தான் இவனும் ஈடுபட்டான். வேலை செய்துகொண்டிருக்கும் வேளையில் விஷப்பூச்சி ஒன்று அவன் காலைக் கடித்தது; துடித்தான்; நிலைகுலைந்தது; அரிவாள் வெட்டு காலில் விழுந்தது; மேலால், வேலையில் வெற்றியுடன் ஈடுபட இயலவில்லை. எனவேதான், மற்றவர்போல், அவன் கட்டு எடுத்துக்கொண்டு செல்லவில்லை; புங்க மரத்தடியிலே இருக்கிறான்.

ஆனால், தம்பி! கட்டு எடுத்துச் செல்பவர்கள் முகத்தில் களிப்பு இல்லை; காலில் வெட்டுப்பட்டுக்கிடப்பவன் களிப்புடன் இருக்கிறான்!!

இந்த விசித்திரத்துக்குக் காரணம் புரிகிறதா?

தம்பி! கட்டுக் கலம் காணும்; பட்டபாட்டுக்கேற்ற பலன் கிட்டும் என்ற நிலை இருந்திடினும்; ஈட்டிய வெற்றியினை எடுத்துச் செல்பவர்கள், வேலையிலே ஈடுபட்டு வெட்டுப் பெற்றுக்கிடப்பவனைக் காண்கிறார்கள்; கலக்கமும் கவலையும் குடைகிறது.

வெட்டுப்பெற்றுக் கிடப்பவனோ, வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்புவோர், வெற்றியை எடுத்துச் சென்றிடும் காட்சியைக் காண்கிறான்; எனவே அவன் மகிழ்ச்சிக் கொள்கிறான். உடன் பணியாற்றியோர் வெற்றியை எடுத்துச் செல்கிறார்கள்; பழித்தோர் வெட்கிடும் விதமாக பலனை எடுத்துச் செல்கிறார்கள்; அறுவடை வேலை அரிய வெற்றியாக அமைந்துவிட்டது; விளையாது என்றார்கள். அறுவடை கிடைத்தது! அதோ கொண்டு செல்கிறார்கள்!! - என்று எண்ணுகிறான்; எண்ணிடும்போதே, காலில் வீழ்ந்த அரிவாள் வெட்டு, அதற்குக் காரணமாக அமைந்த நச்சுப்பூச்சி எனும் எதனையும் மறந்துவிடுகிறான். வலி தெரியவில்லை. வருத்தம் எழவில்லை. வேலை முடிந்தது, வீடு திரும்புகிறார்கள். வெற்றியுடன் என்று எண்ணிப் பெருமகிழ்வு பெறுகிறான். எமது வயலையும் உழவு முறையும் வேலைத் திறனையும் கேவலப் படுத்திப் பேசினரே சிலர், அவர் காணட்டும் அறுவடையை எடுத்துச்செல்லும் அணிவகுப்பை என்று அறைகூவி அழைப்பது போலிருக்கிறது அவன் பார்வை, புன்னகை!

யாவர்க்கும் முன்னதாக அறுத்தெடுத்துக் கட்டு ஆக்கித் தலைமீது வைத்து வழி நடந்து காட்டவல்ல தோழன், காலில் வெட்டப்பட்டுக் காரியத்தை முடிக்காமல் இருந்திடும் இந்நிலையைக் காணக் கூடவில்லை, கண் கசிவு நிற்கவில்லை. வேலை ஓடவில்லை, வெற்றிக் களிப்பு இல்லை, வேதனை வேலாகி வாட்டி வதைக்குது. ஐயோ! வீடு நாம் செல்கிறோம் வெற்றிக் கட்டுடனே, உடனிருந்தவன் எங்கே என ஊரார் கேட்டிடின், உரைத்திடுவது எதனை நாம்? உள்ளம் பதைத் திடுதே, வெட்டு அவன் காலில், வேலை முடியவில்லை, கட்டுக் கொண்டுவர இயலவில்லை அவனாலே; களத்துமேட்டருகே இருக்கின்றான் களைப்புடனே என்றன்றோ கூறவேண்டும், எப்படிக் கூறுவது? எண்ணும்போதே எனக்கு வெற்றிக் கட்டுகள் யாவும் வீண் என்று தோன்றிடுதே; அவனும் கட்டெடுத்து அணிவகுப்பிலே நடந்தால், அறுவடை விழாவாகும், அக மகிழ்வுக்கு எல்லையில்லை; இன்று அந்த நிலை இல்லை, என் செய்வோம், ஏங்குகிறோம் என்றெண்ணி நடக்கின்றார், அறுவடையில் வெற்றிபெற்றார். அதனாலேதான் அவர்க்கு மகிழ்ச்சி துளியும் இல்லை. மரத்தடிக் கிடப்போனோ மகிழ்ச்சி யினால் துள்ளுகிறான்; அணிவகுத்து செல்வது பார், அறுவடை யினை எடுத்து; அவர் எந்தன் உடன்பிறந்தார், அவருடன் நானுந்தான், இந்த வயலுக்கு உரியவன்! ஆம்! அவர் கொண்டு செல்லும் அந்த அறுவடை, எமது உடைமை!! கட்டு எந்தன் தலைமீது இல்லை, கவலை இல்லை. கொண்டுசெல்லும் கட்டெல்லாம், என் கட்டு! என்று கூறும் உரிமை எனக்கும் உண்டு! என்று கூறிக் களிப்புடன் இருக்கின்றான், புங்க மரத்தடியில்.

என்ன தம்பி, யோசனை? எந்த இடத்து வயலைப்பற்றி அண்ணன் இப்படி ஒரு படப்பிடிப்புக் காட்டுகிறான் என்று தானே யோசிக்கிறாய்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் இப்படி ஒரு காட்சியைப் பார்த்திருக்கிறேன். நான் இப்போது எடுத்துக் காட்டியுள்ளபடி யான எண்ணம், அவர்கள் கொண்டிருந்தனரோ இல்லையோ, நானறியேன், ஆனால், அந்தக் காட்சியைக் கண்டபோது என் மனதிலே இப்படியெல்லாம் தோன்றிற்று. அது பல ஆண்டுகளுக்கு முன்பு!

பத்து நாட்களுக்கு முன்பு, பல ஆண்டுகளுக்கு முன்பு நான் கண்ட காட்சி என் மனதிலே கிளறிய எண்ணங்களை, மறுபடியும் நான் கொள்ளத்தக்க நிகழ்ச்சியைச் சந்தித்தேன். அந்த நிகழ்ச்சிதான் என் தோல்வியும். நமது தோழர்களிலே ஐம்பது பேர் பெற்ற வெற்றியும்.

எனக்கு களிப்பு, வெற்றி அணிவகுப்புக் கண்டு.

வெற்றி அணிவகுப்புக்கோ என் நிலைகண்டு வேதனை.

அவர்கள் எனக்குக் களிப்பூட்டினர். நானோ அவர்களுக்கு கண் கசியும் நிலையைத்தான் தந்தேன்.

என் செய்வது தம்பி! நான் என் தம்பிகளிடமிருந்து பெறுவது அதிகம்; நான் அவர்களுக்குக் கொடுப்பது குறைவு! அதிலும் இம்முறை, நான் பெருமைப்படத்தக்க பெரு வெற்றி களைப் பெற்றுக் காட்டி, ஐம்பதின்மர் என்னை மகிழ்வித் தார்கள்; அரசியல் வட்டாரங்கள் பலவற்றையும் நான் பெருமிதம் நிரம்பிய பார்வையுடன் கண்டிட வழிசெய்து கொடுத்தனர்; ஆனால் நானோ, அவர்களும் எண்ணற்ற மற்றவர்களும், கண் கலங்கும் நிலையைத்தான் பெற்றுக் கொடுத்தேன். அதை எண்ணும்போதுதான், நான் வருத்தப்படுகிறேன், வெற்றி பெறவில்லை என்பதனால் அல்ல!! எல்லாக் கிளைகளிலும் மலர் குலுங்கத்தான்வேண்டும் என்பதில்லை, பூத்திருந்தால் போதும். எல்லோருமே வெற்றிபெற்றே தீரவேண்டும் என்பதில்லை. சிலருக்குத் தோல்லி ஏற்படக்கூடும். எதிர்பார்க்கவேண்டியது தான். ஆனால், என்முன் தாம் ஈட்டிய வெற்றிகளைக் கொண்டு வந்து காட்டிடும் எனதரும் தோழர்களுக்கு, நான் எதனையும் தர இயலாது போயினும்; என் தோல்வியின்மூலம் வேதனையை யாவது ஏற்படுத்தித் தராமல் இருந்திடக்கூடாதா என்று எண்ணுகிறேன்.

இதனை எழுதிக்கொண்டிருக்கும்போது, கீழே செங்கற் பட்டுத் தொகுதியிலே வெற்றிபெற்ற நமது கழகத் தோழர் விசுவநாதன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். கவலை நிரம்பிய நிலையில்! வெற்றிபெற்ற இளைஞர்; பணபலம் மிகுந்த ஒருவருடன் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்; ஆயினும் விசாரத் துடன்தான் இருக்கிறார். என்னைக் கண்டதும், என்ன பேசுவது என்று புரியவில்லை; நான் பேசவைத்தேன்; அந்தப் பகுதி ஓட்டுகள் எப்படி, இந்தப் பகுதியில் வாய்ப்பு எப்படி என்று கிளறிக் கிளறிப் பேசவைத்தேன். மகிழ்ந்து உரையாட அவரால் முடியவில்லை. அவருக்கு உள்ள சங்கடத்தைக் கண்ட பிறகு தான், இதனை எழுத வந்தேன்.

தம்பி! இந்த நிலை, கடந்த ஒரு கிழமையாக இருக்கிறது. இனியும் இதுபோல் இருக்கக்கூடாது என்பதற்காகவே இதனை எழுதுகிறேன். அறுவடை வெற்றியுடன் முடிவுற்றதை எண்ணி அகமகிழ்ச்சி கொள்ளவேண்டிய நேரத்தில், அண்ணன் தோற்றுபோனானே என்பதனையே எண்ணி எண்ணி ஏங்கிக் கிடப்பது சரியல்ல, முறையல்ல, தேவையில்லை, எனக்குப் பிடித்தமானதுமல்ல.

நச்சுப்பூச்சி தீண்டியதனால் நிலைகுலைந்து, அரிவாள் காலிலே வீழ்ந்து வெட்டு ஏற்பட்டுவிட்டதால், அறுவடையே கெட்டுவிட்டது என்றா பொருள்!

பெற்ற வெற்றிகளை எண்ணிப் பெருமிதம்கொண்டு, மாற்றார் கண்டு கலங்கிடும் விதமான வீரப் புன்னகையுடன் ஏறுநடைபோட்டு, அரிமா நோக்குடன் இருந்திடவேண்டிய வேளையில், என் தோல்வியையும், அதுபோன்றே அதிர்ச்சி தரத்தக்க வேறு பல தோல்விகளையும் எண்ணி ஏங்கிக் கிடப்பது நல்லதுமல்ல, என்னை மகிழச் செய்யும் வழியும் அதுவல்ல.

நான் எங்கு இருந்துவிட்டு வருகிறேன் தெரியுமா, தம்பி! அதைச் சொல்கிறேன். பிறகேனும் என் மனப் போக்கின் முழுத் தன்மையை அறிந்துகொண்டு, அமைதிபெறும் முயற்சியில் ஈடுபடவேண்டுகிறேன்.

அரசியல் உலகு, அற்புதங்கள், உற்பாதங்கள், அதிர்ச்சிகள், ஆக மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள், எக்களிப்புக்கள் எரிச்சலூட்டும் சம்பவங்கள், வெற்றிகள் தோல்விகள் யாவும் நிரம்பிய இடம்.

எல்லாத் துறைகளும் அவ்விதம்தான், என்பாய். ஒரு மாறுபாடு உண்டு. மற்ற எந்தத் துறையினையும்விட அரசியல் துறையிலே எதிர்பாராத நிகழ்ச்சிகள், ஏமாற்றங்கள், எரிச்சல்கள் நிரம்ப ஏற்படும்; விசித்திரமான உலகு.

விசித்திரமானது அரசியல் உலகு என்பதற்கு வேறெந்த எடுத்துக்காட்டும் வேண்டாம். நான் இப்போது எங்கு சென்று விட்டு வந்திருக்கிறேன் என்பதைக் கூறுகிறேன், கேளேன், அது போதும்.

பெங்களூர், நகரில் ஜெய்நகர் என்ற பகுதியில், ஜெய விலாஸ் என்ற இல்லத்தில் தங்கியிருந்துவிட்டு வருகிறேன்!! வேடிக்கை அல்ல, தம்பி! விசித்திரம், ஆனால் உண்மை!

தோல்வி கிடைத்ததும் நான் சென்று தங்கியிருந்த இடம் ஜெயவிலாஸ் - ஜெய்நகர்!! போதுமா விசித்திரம்.

என்ன செய்துகொண்டிருந்தேன்? பலரும் வந்திருந்து எனக்கு ஆறுதல் கூற, அதைக்கேட்டுத் துயரத்தைத் துடைத்துக் கொண்டு மன அமைதி பெற்றுக்கொண்டிருந்தேன்போலும் என்று எண்ணுகிறாய். அதுதான் இல்லை!! பலருக்கும் ஆறுதல் கூறிக்கொண்டிருந்தேன். வெற்றிபெற்று, வீடுகூட செல்லாமல் என்னோடு வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் தருமலிங்கம் மகிழ்ச்சியாக இருக்கும்படி செய்வதிலும், என்னைப்போலவே காலில் வெட்டுப்பட்டுக் கிடக்கும் திருவண்ணாமலைத் தோழர் ப. உ. சண்முகத்துக்கும், வேலூர் சாரதிக்கும் ஆறுதல் கூறுவதிலும் ஈடுபட்டிருந்தேன். அவர்களுக்கு ஆறுதல் எதற்காகக் கூறினேன்? அவர்கள் தமது தோல்வியைப்பற்றித் துக்கம் துளைத்த நிலையில் இருந்ததால் என்கிறாயா? அதுதான் இல்லை! என்பொருட்டு அவர்கள் கொண்டிருந்த வேதனையைத் துடைத்து ஆறுதல் அளித்துக்கொண்டிருந்தேன்.

பல ஆண்டுகளாகவே எனக்கு, பேசாமலே பல கூறும் பேருருவாக அமைந்திருக்கும் சிற்பக்கலைச் சிறப்புக்கு ஈடற்ற எடுத்துக்காட்டாக விளங்கிடும் கோமடீஸ்வரர் சிலையினைக் காணவேண்டும் என்ற ஆவல் உண்டு. அந்த இடத்துக்கு அருகே கூடச் சென்றிருப்பேன்; காண வாய்ப்பும் ஓய்வும் கிடைத்த தில்லை. அழகிய சிறு குன்றின்மீது அமைந்திருக்கும் பேசாப் பேருருவை இம்முறைதான், கண்குளிரக் காண முடிந்தது.

பெங்களூர் நகரிலிருந்து நூறுகல் தொலைவில் உள்ள சீரூர் சிரவணபெலகோலா என்பது. அங்குதான், வெளிநாட்டு விற்பன்னர்களும் கண்டு வியந்திடும் அந்தச் சிற்பம் இருக்கிறது, குன்றின்மீது. அறுபது அடி உயரம் அந்தப் பேருரு! பிறந்த மேனி! திறவாக் கண்கள், எனினும் கனிவு வழிகிறது! நின்ற நிலை! காண்போரை நின்ற நிலையினராக்கிவிடும் கவர்ச்சி!!

அந்தப் பேருருவுக்குப் பின்னணியாக, நீலநிற வானம்!

தன்னை மறந்த நிலையில் பிறந்த மேனியாய் நிற்கும் அந்தப் பேருரு, மனதினை ஓரிடத்தில் பதியவைத்து, மற்ற எதனையும் எண்ணிடமுடியாத நிலைபெற்று இருக்கும், காட்சி கண்டாரே கருத்தறிவார்; கண்டதனை விளக்கிட இயலாது; உண்மை.

காலடியில், புற்றுகள்! செடி கொடிகள்! செடி கொடிகள் கோமடீஸ்வரரின் காலிலும் கரத்திலும் மார்பிலும் படருகின்றன! அசையா நிலை! உணரா நிலை! மனம் ஓரிடத்திலே முழுக்க முழுக்க ஒன்றிவிட்டதனால், செடி கொடி படருவதுபற்றிய உணர்ச்சியே எழவில்லை. செடி கொடிகள் மட்டும் அல்ல, தம்பி! சீறிடும் பாம்புகள்! உடலைச் சுற்றிக்கொண்டுள்ளன! உணர்வு இல்லை! கனிவும் கவர்ச்சியும் மிக்கதோர் நிலையில் பேருரு!!

இவ்வளவையும், இதற்கு மேலாகவும், கல்லுரு காட்டி நிற்கிறது. கண்டு கருத்துப் பெறாதார், நடமாடும் கல்லுரு என்றே கூறலாம்.

உற்று உற்றுப் பார்த்தேன், அப்பேருருவினை! நெருங்கி நின்று பார்த்தேன்! தொலைவிலிருந்து பார்த்தேன். பார்க்கப் பார்க்க மேலும் பார்த்துக்கொண்டிருக்கும் எண்ணம் எழுகிறது.

உறுதி ஒன்றில் இலயித்துவிட்டால் வேறு எந்த உணர்வும் தீண்டமுடியாத நிலை பெறும் இயல்பு, பேருரு காட்டிடும் அரும்பெரும் பாடம். ஆமாம், தம்பி! தேர்தலிலே தோல்வி என்றால், நெஞ்சிலே துக்கம் துளைக்கிறது என்கிறோமே, பாம்பு சுருட்டிக்கொள்கிறது உடலில், மனம் ஒன்றினிலே இலயித்துப் போனதால், அரவம் தீண்டுவதுபற்றி உணர்வே இல்லை; கண்ட நான், எண்ணிக்கொண்டேன், அந்த உறுதிவேண்டும் ஒன்றின் மனதைப் பதியவைத்துவிட்டால், வேறு உணர்வுகள் நம்மைத் தீண்டிடும் வலிவற்றுப்போகும்நிலை ஏற்பட வேண்டும் என்று விரும்பினேன்.

எனக்காக மட்டுமல்ல, தம்பி! உனக்கும் அந்த நிலை, உறுதி, இருந்திட வேண்டும் என்று விரும்பினேன். அந்த எண்ணத்துடன்தான் சிரவணபெலகோலாவை விட்டுத் திரும்பினேன்.

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai