அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


தமிழுக்கு உயிரூட்டியவர் திரு.வி.க.

திரு.வி.க. படத்திறப்பு விழாவில் அண்ணா கருத்துரை
சென்னை, மார்ச்-26, இந்தியத் துணைக்கண்டத்தின் விடுதலைக்கு உரிமை கொண்டாடுபவர்கள் அந்த விடுதலைக்கு வித்திட்டு உழைத்து உருக்குலைந்தவர்களை மறக்க முடியாத, மறுக்க முடியாத வீரத்தின் திருவுருவங்களை தியாகத்தின் சின்னங்களைப் பாராட்ட வேண்டியவர்கள், போற்ற வேண்டியவர்கள், வணங்க வேண்டியவர்கள். நன்றிக்குரிய அந்த நல்ல காரியத்தைச் செய்யத் தவறி விட்டாலும், ‘உழைப்பு எங்கிருந்தாலும் அது கட்சிக்கு அப்பாற்பட்டது’ என்ற பெருநோக்கில் மாநகராட்சியின் பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ள தி.மு.க. கழகத்தினர் கப்பலோட்டிய வ.உ.சிதம்பரனார், தமிழ்த்தென்றல் திரு.வி.க. சுப்பிரமணிய சிவா., வ.வே.சு.ஐயர் ஆகியோரது திருவுருவப்படங்கைத் தமிழகத்துத் தலைவர்களான அறிஞர் அண்ணா, இராசகோபலாச்சாரியர், ஜீவானந்தம், ம.பொ.சி.ஆகியவர்களைக் கொண்டு மாநகராட்சியில் திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.

இந்தத் திறப்பு விழா சென்னை மாநகராட்சி மன்றத்தின் சார்பில் இன்று மாலை 6 மணிக்கு மாநகராட்சியின் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

விழாவிற்கு மாநகராட்சித் தலைவர் வி.முனுசாமி அவர்கள் தலைமை தாங்கி விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்த தலைவர்களையும், சென்னை நகரப் பொதுமக்களையும் வரவேற்றுப் பேசினார். பின் மாநகராட்சியின் ஆணையாளர் தலைவர்கள் அனைவருக்கும் மலர் மாலை அணிவித்தார்.

சுப்பிரமணிய சிவா
துவக்கத்தில் சுப்பிரமணிய சிவா அவர்களின் படத்தை திறந்து வைக்கும்படி மாநகராட்சி முதல்வர் கேட்டுக் கொண்டதற்கிணங்க கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர் ப.ஜீவானந்தம் அவர்கள் படத்தைத் திறந்து வைத்து, சுப்பிரமணிய சிவா அவர்களின் விடுதலை வரலாற்று உண்மைகளை எடுத்தியம்பினார்.

வ.உ.சிதம்பரனார்
பின்னர், தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சிவஞானம் அவர்கள் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் திருவுருவப்படத்தைத் திறந்து வைத்து அவரது ஆற்றல்களை எடுத்து விளக்கி மாநகராட்சியினர் தந்த நல்லதோர் வாய்ப்புக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

திரு.வி.கல்யாணசுந்தரனார்
அடுத்து அறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார் படத்தைத் திறந்து வைத்துப் பேசுகையில் ஆங்கிலத்துக்குத்தான் பெருமை, புகழ் என்றிருந்த காலத்திலேயே தனது அழகுத் தமிழின் மூலம் அனைவருடைய உள்ளத்தையும் கவர்ந்து, தமிழுக்கு உயரிதோர் இடத்தைத் தேடித் தந்தார் என்று கூறியதோடு திரு.வி.க.அவர்களின் பொதுப்பணிகளை விளக்கியும் நீண்டதோர் சொற்பொழிவாற்றிய தோடல்லாமல், தமிழகத்துக்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயரிடவேண்டும் என்ற அறப்போராட்டத்தில் வெற்றி பெற்ற தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சிவஞானம் அவர்களை சர்க்கார் பாராட்டத் தவறினால், தான் அவரை மனப்பூர்வமாகப் பாராட்டுவதாகத் தெரிவித்தார்.

ஒன்று சேர்க்கும் விழா
மேலும் அவர் குறிப்பிட்டதாவது:
“நாங்கள் நால்வரும் எங்கே ஒன்று சேர்ந்து விட்டோமோ என்று மாற்றுக் கட்டியினர் பயந்து இருக்கலாம். ஆனால் மாநகராட்சியின் மேயர் வி.முனுசாமி அவர்கள், எனக்கும்-ராஜாஜிக்கும் இடையிலே வந்து உட்கார்ந்து விட்டார். “யார் யார் ஒருவருக்கு ஒருவர் மிகவும் கடுமையாகத் தாக்கிக்கொள்கிறார்களோ அந்த இருவரும் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த ஜீவானந்தம் அவர்களும் சுதந்திரா கட்சியைச் சேர்ந்த ராஜாஜி அவர்களும் ஒருவர் பக்கத்திலே ஒருவர் உட்கார்ந்திருக்கிறார்கள். இந்தத் திறப்பு விழா எங்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து இருக்கிறது.
“திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் அனைவராலும் பாராட்டப்பட வேண்டிய ஒரு காரியத்தை இன்றைய தினம் மாநகராட்சி நிர்வாகப் பொறுப்பிலே உள்ள தி.மு.கழகத்தினர் இந்தப் படத்திறப்பு விழாவினைச் சிறப்பாக நடத்தி அனைவருடைய பாராட்டுதலையும் பெற்றிருப்பது கண்டு நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன் பூரிப்படைகிறேன்.

எப்படிப் பாதுகாக்க முடியும்?
“தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி. அவர்கள் பேசுகையில் பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். உண்மைதான். ஆனால் அந்தச் சுதந்திரம் ‘கள்ளமார்க்கெட்’ காரர்களுக்கும், கொள்ளை இலாபம் அடிப்பவர்களுக்கும், பதவிவெறியர்களுக்கும் மட்டும் பயன்படுமானால் அப்படிப்பட்ட சுதந்திரத்தை எப்படிப் பாதுகாக்க முடியும்.

“பெற்ற விடுதலையைப் பேணி வளர்க்க முடியாத நிலையில் அவ்விடுதலை ஒருசாராருக்கு மட்டும் பயன்பட்டு ஒரு சாராருக்குப் பயன்படவில்லை என்பதனாலேயே நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டுக் கூடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.”

விழாவிற்கு மாநகராட்சி உறுப்பினர்களும் நகரப்பிரமுகர்கள் பலரும் இலட்சணக்கான பொதுமக்களும் வந்திருந்து சிறப்பித்தனர்.

(நம்நாடு - 28.3.61)