அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


தாய்த்திரு நாட்டை மீட்பதே உயிர் இலட்சியம்

திராவிடநாடு இலட்சியம் எங்களுடைய உயிரோடு பிறந்தது – உடலோடு வளர்ந்தது. இதை மாற்ற நீங்களல்ல – வேறு எந்த அரசியல் கட்சியாலும் முடியாது. எவ்வளவு பெரிய தலைவர்கள் வந்தாலும், எங்கள் கொள்கையை நாங்கள் கொண்டுள்ள பிடிப்பைத் தளரவிடமாட்டோம்.

இக்கொள்கை, எங்கள் உள்ளத்திலே உறிப்போனது எங்கள் இரத்தத்துக்குச் சூடேற்றுவது. எங்கள் நாடி நரம்புகளுக்கு முறுக்கேற்றுவது. இக்கொள்கை இல்லை என்றால், நாங்கள் இல்லை! இக்கொள்கைக்காகத்தான் நாங்கள் அரசியலில் இருக்கிறோம்.

நாங்கள் சர்.ஏ. இராமசாமி (முதலியாரைப்) போல் எங்கள் அரசியல் வாதத் திறமையைக் காட்ட அரசியல் உலகத்தில் நுழையவில்லை. நிதியமைச்சரைப்போல் அரசியல் அங்காடியில் திறமை காட்ட பாராளுமன்றம் – சட்டமன்றம் செல்ல விரும்பவில்லை. எங்கள் தாய்த்திருநாட்டை மீட்பதையே பணியாகக் கொண்டு எங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறோம்.

சதுரங்கக் காயாக மாற்றாதீர்

இதற்குரிய வலிவு இல்லாமல் இருக்கலாம் அவ்வலிவு இல்லாமைக்கு ஏங்குவோம்? –அதைப்பெறவே முயல்வோம். ஆனால் அதற்காக, கொள்கையைக் குறைத்துக் கொள்ளும் கோணல் புத்திக்காரர்கள் அல்லர் நாங்கள்!

எங்கள் வாதங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம் நாங்கள் காட்டுகின்ற காரணங்களை நீங்கள் ஒப்புக்கொள்ள மறுக்கலாம். ஆனால் எங்கள் நம்பிக்கை அதிலேதான் இருக்கிறது. அந்த நம்பிக்கையை மட்டும் நீங்கள் சந்தேகிக்க வேண்டாம்! இதை அரசியல் சதுரங்கக் காயாக மாற்றிவிட நாங்கள் விரும்பவில்லை என்று அண்ணா அவர்கள் கழகக் குறிக்கோளையும், அதில் கண்டுள்ள உறுதிப்பாட்டினையும் மாற்றார் உணரும் வகையில் சென்னையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் தெள்ளத் தெளிய விளக்கினார்கள்.

இன்று மாலை 7 மணியளவில், சென்னை – திருவல்லிக்கேணி கடற்கரையில் சிம்சன் கம்பெனி குழுவைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆதரவில் தி.மு.க. தேர்தல் நிதியளிப்புக் கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் தொழிலாளர்கள் சார்பில் அளிக்கப்பட்ட தேர்தல் நிதியாக ரூ.2,222.22 காசுகளைப் பெற்றுக் கொண்டு அண்ணா அவர்கள் ஆற்றிய உரையின்சுருக்கம் இங்குத் தரப்படுகிறது.

அதிக இடங்களைப் பிடிக்க வேண்டும்

“நான் இங்கு வருகையில், இவவ்ளவு கடுங்குளிரில் அதுவும் கடற்கரையில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு மக்கள் எங்கே வரப் போகிறார்கள் என்று கருதி வந்தேன். ஆனால் இங்கு வந்து பார்க்கின்றபோது, இவவ்ளவு மக்கள் கடுங்குளிரையும் பொருட்படுத்தாது, அமைதியாக அமர்ந்து, சொற்பொழிவைக் கேட்பதைக் காணும்போது, அவர்க்ளுடைய கடமையுணர்ச்சிக்கு நான் நன்றி செலுத்திக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

நாங்கள் இங்கு மேடையில் பாதுகாப்பாக அமர்ந்திருந்தாலும், நேரம் ஆக ஆக குளிர் அதிகமாகி் கொண்டிருப்பதால், நாங்கள் அதுபற்றி மிகக் கவலை அடைகிறோம். ஆகவே, நானும் மிகச் சுருக்கமாகவே உங்களிடம் பேசி விடைபெற விரும்புகிறேன்.

இப்பொழுது, இம்மேடையில் நமது கழகத் தேர்தல் நிதிக்கென்று ஏறத்தாழ ரூ.2,500 தரப்பட்டது. இத்தேர்தல் நிதியை அளிக்கும்போது, கூட்டத்தலைவர், ‘சென்ற தடவை ரூ.600 மட்டுமே தேர்தல் நிதியாகத் திரட்டித் தந்தோம். அப்பொழுது நீங்கள் சட்டமன்றத்தில் 15 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது. இப்பொழுது ரூ.2000 தருகிறோம். எனவே, அதிக இடங்களைப் பிடித்துக்காட்ட வேண்டும்‘ என்று குறிப்பிட்டார்.

மருளுவர் – அதிர்ச்சியுறுவர்!

மாற்றார் மருளத்தக்க வகையில் – உற்றார் கண்டு மகிழத்தக்க விதத்தில் – இந்தியத் துணைக்கண்டத்தினர் கண்டு அதிர்ச்சிக் கொள்ளத்தக்க விதத்தில் நிச்சயமாக இந்தத் தடவை அதிகமான இடத்தை நம்மால் பிடிக்க முடியும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆளும் கட்சியினர், எவ்வளவுதான் உருட்டி மிரட்டிப் பார்த்தாலும், பணத்தை எடுத்துக்காட்டினாலும், இம்முறை, நாம் அதிக இடங்களைப் பெற முடியும் என்று உறுதி கூறுகிறேன்.

நான் நாட்டைச் சுற்றி வரும்பொழுது மக்களிடையே காணப்படும் உற்சாகமும், எழுச்சியும் நமக்கு இதைத்தான தெளிவுபடுத்துகின்றன.

நான் நேற்றைய திகம் இரவு தஞ்சையில் இருந்தேன். இரவு 10 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டுக் காஞ்சிக்கு வந்ததேன். காஞ்சியுரத்திலிருந்து, இப்போது சென்னைக்கு வந்திருக்கிறேன். இவ்வளவு நீண்ட பயணத்தின் விளைவாக எனக்குக் களைப்பாக இருந்தாலும், நீங்கள் அளித்த தேர்தல் நிதியும், காட்டுகின்ற உற்சாகமும், எனக்குக் களைப்பைப் போக்கி உற்சாக மூட்டுகின்றன.

நாவலர் அவர்கள் இக்கூட்டத்தில் குறிப்பிட்டதுபோல், ஆளும் கட்சியினர், தங்கள் பகுதித் தேர்தல்களை முன்னதாகவே முடித்துக் கொண்டு, சென்னை, செங்கற்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் தங்கள் வாகனங்களை படைகளைக் கொண்டுவந்து வேலை செய்யவும், நம்முடைய தோழர்களை வேறு தொகுதிகளில் கவனம் செலுத்த முடியாதபடி செய்யவும், இப்பகுதி தேர்தல்களைக் கடைசி நாளாக வைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆகவே நீங்கள், இப்பொழுதிருந்தே அந்தந்தத் தொகதிகளில் தேர்தல் வேலைகளைத் துவங்க வேண்டும். தெருவுக்கொரு தேர்தல் குழு அமைத்துத் திறம்பட வேலை செய்யவேண்டும்.

செயல்பட முனைவீர்!

சென்னை நகரில் நம் முதும்பெரும் கிழவர் சி.சி.சிற்றரசு அவர்களைத் துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைத்திருக்கிறோம். எழும்பூர்த் தொகுதியில் க.அன்பழகனையும், பெரம்பூர்த் தொகுதியில் சத்தியவாணி முத்துவையும், ஆயிரம் விளக்குத் தொகுதியில் கே.ஏ.மதியழகனையும், பேசின்பிரிட்ஜ் பகுதியில் என்.வி.நடராசனையும் உங்களையெல்லாம் நம்பித் திருவல்லிக்கேணிப் பகுதியில் நெடுஞ்செழியனையும் நிறுத்தி வைத்திருக்கிறோம்.

இது முதல் பட்டியலாகும். இத்துடன் சென்னை நகரப் பட்டியல் முடிந்துவிடவில்லை. இன்னும் பத்து நாட்கள் சென்னை, மற்றும் தமிழகம் முழுவதற்குமான பட்டியல் வெளியிடப்படும்.

ஆகவே, இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் இன்றிலிருந்தே தோழர்கள், தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுச் செயல்படவேண்டும்.

நமக்குக் கூட்டம் நடத்தத்தான் தெரியும் – மாநாடு நடத்தத் தான் தெரியும் – ஓட்டுக் கேட்கத் தெரியாது – என்ற மாற்றுக் கட்சியினர் கருதுகின்றனர். இதை நீங்கள் இன்று முதலே தெருவுக்கொரு தேர்தல் குழு அமைத்து, காங்கிரசு கட்சியின் ஊழல்களை எடுத்துக் கூறவேண்டும். இதைத்தான் எடுத்துக்கூற வேண்டும் என்பதில்லை – நம்முடைய கொள்கைகளை எடுத்துக் கூற வேண்டும்.

கோவை மாநாட்டில், நாம் உருவாக்கிய தேர்தல் அறிக்கையில், தொழிலாளர் நலன் குறித்த தீர்மானங்களும் உள்ளன. அவற்றில் ஒன்று – எல்லாத் தொழில்களிலும் ஈடுபாடு கொண்டு தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி நிர்ணயம் செய்யக் குழு ஒன்று அமைக்கவேண்டும்‘ என்று கூறப்பட்டுள்ளது. அந்த அளவுக்குத் தி.மு.கழகம் பாடுபட 15பேர் மட்டும் சட்டமன்றத்திற்குப் போனால் போதாது. அதிகமான அளவுக்குத் தி.மு.கழக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அனுப்பப்படவேண்டும்.

அந்த நீதி நமக்கில்லையா?

தி.மு.கழகம் எங்கே ஆட்சியைக் கைப்பற்றிவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக, ‘அவரோடு கூட்டுச் சேரலாமா? இவரோடு கூட்டுச் சேரலாமா? என்று கேட்கிறார்கள்.

கேரளாவில், பி.சோ.கட்சியும், காங்கிரசுக் கட்சியும் கூட்டாகச் சேர்ந்து ஆட்சி நடத்தவில்லையா? காங்கிரசு ஆட்சியை அசோக் மேத்தா நாள்தோறும் கண்டித்து வரவில்லையா? சமீபத்தில் கேரளா சென்றிருந்த காங்கிரசுத் தலைவர் சஞ்சீவி ரெட்டியார் வட பி.சோ. கட்சியைத் தாக்கிப் பேசிவிட்டுத்தான் வந்தார்.

இவ்வளவு வேற்றுமையிருந்தும், கம்யூனிஸ்டுக் கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக இவ்விரண்டும் சேர்ந்து ஆட்சியை நடத்தும்போது, தமிழ்நாட்டில் மட்டும் இப்படிப்பட்ட கூட்டாட்சி ஒன்றை அமைக்கமுடியாது என்பது எந்த வகையில் சாத்தியமாகும்? இப்படிக் கூறுவது அரசியல் அபத்தமாக இருக்கிறதே ஒழிய, அதில் சாதுர்யம் எதுவுமில்லை!

சர்ச்சிலின் கூற்றுக்கு ஒப்புமையாயினர்!

உங்களுக்கு சுதந்திரம் அளித்தால் நாட்டை நிர்வகிக்கத் தெரியாது – என்று, அன்று சர்ச்சில் தலைமகனார், தேம்ஸ் நதிக்கரையிலிருந்து கூறினார்! இன்று கூவம் நதிக்காரர்கள் – இவர்கள் ஆட்சிக்க வந்தால், திட்டத்தை நிறைவேற்ற முடியாது‘ என்று கூறுகிறார்கள்.

இப்படி அவர்கள் கூறுகின்ற காரணத்துக்காகவே, ‘ஒரு ஐந்து ஆண்டுக் காலத்துக்கு ஆட்சியை எங்களிடம் தாருங்கள்‘ என்று கேட்கிறேன். நாங்கள் திட்டத்தை நிறைவேற்றத் தவறினால் தி.மு.கழகத்தைக் கூண்டோடு அந்தமான் தீவுக்கு அனுப்பி விடுகிறோம்.

ஆளும் கட்சியினர் இப்படிப் பேசுவது, அவர்களின் அரசியல் அர்த்தத்தைக் காட்டுகிறதே தவிர, அரசியல் தெளிவை வெளிக்காட்டவில்லை.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் 1957ஆம் ஆண்டில், நாம் தேர்தலில் முதன் முறையாகப் போட்டியிட்டபோது, ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டோம். அந்தத் தேர்தல் அறிக்கையை அன்று எவரும் தொட்டுக்கூட பார்க்கவில்லை. ஆனால் இன்றைய தினம், கோவையில் கூடிய நாம் ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டோம். அந்த அறிக்கையை இன்று, இந்நாட்டிலுள்ள ஏடுகளில் இருந்து, வடக்கேயுள்ள ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ ஏடுவரை – எந்த இடத்தில் ஓட்டை இருக்கிறது. உடைசல் இருக்கிறது‘ என்று துருவிப்பார்க்கும் நிலை இருக்கிறது.

பொருள் என்ன, உண்டு?

பத்திரிகைகள் மட்டுமல்ல, அமைச்சர்கள்கூட – பகலானாலும் –இரவானாலும், தி.மு.கழகத்தை மறப்பதில்லை! அவர்கள் மட்டுமல்ல – அவர்களது தொண்டர்களும், அவர்களுக்குத் துணைபோகிற அரசயில் தரகர்களும், கூட மறப்பதில்லை! அதனாலே – தி.மு.கழகம் பெருமளவு வெற்றி பெற்றுவிடுமோ என்ற அச்ச உணர்ச்சியின் காரணமாக, இவைகள் திட்டங்களா? இவற்றை நிறைவேற்ற முடியுமா?‘ என்றெல்லாம் கேட்டுத் திரிகின்றனர்.

‘அது எப்படி முடியும்? – இது எப்படி முடியும்? உங்களாலே முடியாது என்றால், எங்களிடம் பொறுப்பைத் தாருங்கள் – நாங்கள் நடத்திக் காட்டுகின்றோம்.

இப்படிப்பட்ட திட்டங்கள் கூடாது என்றால், அதைச் சொல்லுகின்ற அரசியல்வாதிகள், ஒரே மேடைக்கு வந்து வாதிட்டுப் பேசட்டும், அதற்கு நான் தயாராக இருக்கிறேன். அப்படிக் கூறுகின்ற தலைவர் ஒருவரையும் இதுவரையில் காணோம்!

என்னை விட்டுவிடுங்கள் – நான் வலிவற்றவன் இவவ்ளவு பெரிய திட்டத்தை ஏற்று நடத்தும் அளவுக்கு எனக்கு வலிவு இல்லாமல் இருக்கலாம். ஆனால், மிகப் பெரியவர்களாகிய நீங்கள் – பலமிக்கவர்களாகிய நீங்கள், உங்கள் திட்டமாக இதை ஏற்று நடத்தலாமல்லவா? என்னுடைய சட்டை நல்லதாக இருப்பின் அது உங்களுடைய உடம்புக்கு ஏற்றதாக இருப்பின், போட்டுக் கொள்ளுங்கள், அதை வீணாக்க வேண்டாம்.

அச்சமா காட்டுவது?

மற்றும் சிலர், நம்முடைய தேர்தல் அறிக்கையைக் குறித்துக் கருத்தறிவிக்கையில், மக்களுக்கு ஆசை காட்டுவதாகக் கூறுகின்றனர். ஆசை காட்டாமல், அச்சமா காட்ட வேண்டும்? எங்களுக்கு வாக்களித்தால், எட்டு நாட்களில், வாக்களித்த கைகை வெட்டுவோம்‘ என்றா கூறவேண்டும்.

அடுத்து வீட்டுப் பெண்ணைத் திருமணம் முடிப்பதற்காக நமது பிள்ளைக்குக் கேட்பதாக இருந்தால், ’10 பவுனில் தங்கச் சங்கிலி போடுகிறேன். 6 பவுனில் வளையல் செய்து போடுகிறோம்‘ என்று தான் கூறுவோமே தவிர ‘அப்பெண்ணை மணம் முடித்தவுடன், அவள் கையில் அணிந்து வரும் வளையல்களைக் கழற்றிக் கொள்வோம் என்று யாரும் கூறமாட்டார்கள்.

‘பத்து பவுன் நகை அவன் போடுகிறானா? – நான் 20 பவுன் நகை போடுகிறேன். எனக்குப் பெண்ணைத் தாருங்கள் என்றல்லவா கேட்க வேண்டும்? அப்படி யாராவது இதுவரை தீவிரமாகக் கூறியிருக்கிறார்களா என்றால், இல்லை.

நிலமே கிடையாதா?

நம்முடைய திட்டத்தைவிட தீவிரமான திட்டம் யாரிடமாவது இருக்கிறதா என்றால் யாரிடமும் இல்லை. பெரியார் மட்டும் சொன்னார், இவர்களிடம் ஏது நிலம்? என்று!

அரசாங்கத்திடம் புறம்போக்கு நிலமே கிடையாதா? – இருப்பதைத் தருகிறேன்! நிலத்தைக் கணக்குப் பார்க்கலாம் – அதை நானும் கணக்குப் பார்க்க முடியும் – நீங்களும் பார்க்கலாம்.

அப்படி இதுவரை அரசாங்கத்திடம் இருக்கும் நிலத்தை ஏன் பிரித்துக் கொடுக்கவில்லை?

இருக்கின்ற நிலத்தை ஏழை ஆதிதிராவிட மக்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டு, மீதிக்க வேண்டுமானால் இடம் தேடலாம்!

30 ஏக்கராவில்தான் பங்களா இருக்க வேண்டுமா? அவ்வளவு பெரிய இடத்தில் பங்களா எதற்கு?

நிலைமையோ வேறு!

கடல் என்றால் ‘பாலைவனம்‘ என்று பெரியார் எண்ணிக் கொண்டிருக்கிறார் போலும்! கடலில் உள்ள செல்வம் ஏராளம்! சர்வதேசச் சட்டப்படி, ஒரு நாட்டின் தரையோரப் பகுதியினின்று 5 மைல் அளவுக்குள்ள கடல், உள்நாட்டிற்குரியதாகும். அப்பகுதிக்கு அப்பாற்பட்ட கடல் பரப்பு பொதுவானதாகும்.

சர்வதேசச் சட்டம், கடலை நிலத்துக்குச் சமமாக மதிக்கிறது!

பெரியாருக்கு என்னைப்பற்றிய சட்டம்தான் தெரியுமே தவிர, கடலைப் பற்றிய சட்டம்தெரியாது! நிலத்தையாவது உழுது பயிரிட்டு அறுவடை செய்ய வேண்டும். கடலில் ஆளுக்கொரு ஏக்கர் என்று அளந்து கொடுத்தால், உழாமல், வலைபோட்டு மீன்களை அரித்து எடுக்கலாம்.

பத்திரிகையின் தவறும் உண்மை விளக்கமும்

இதைப்போன்ற மற்றொரு தவறை பத்திரிக்கைக் காரர்கள் செய்திருக்கிறார்கள் தோல் ஏற்றுமதியை அறவே நிறுத்திவிட வேண்டும் என்று தேர்தல் அறிக்கை கூறுவதாக அவர்கள் கருதிவிட்டார்கள்.

தோலை அடியோடு ஏற்றுமதி செய்யக்கூடாது என்பதல்ல. தோல் ஏற்றுமதின் விகிதத்தைக் குறைத்து, அதை இங்கேயே செய்பொருளாக மாற்றி ஏற்றுமதி செய்யலாம் என்பதாகும்.

இலட்சம் டன் தோல் ஏற்றுமதியாகிறது என்று வைத்துக் கொண்டால், அதன் விகிதத்தைக் குறைத்து 80,000 டன் என்று ஏற்றுமதி செய்து, மீதி 20,000 டன்னை இங்கேயே செய்பொருளாக்க வேண்டும் என்பதுதான் நாங்கள் கூறியிருப்பதாகும். இதனால், இங்கு வேலை வாய்ப்பும் பெருகும்“.

இப்படிப்பட்ட விளக்கங்களை – தேர்தல் அறிக்கையைப் பற்றி விளக்க இங்கே நேரமில்லை. இவற்றைப் பற்றி விளக்கத் தனியாக ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தால், நான் விளக்கிப் பேசத் தயாராக இருக்கிறேன். அப்படி நடத்தப்பெறும் கூட்டத்திற்கு ஒரு ரூபாய்க்குக் குறையாமல் கட்டணம் வைத்துத் தேர்தல் நிதியாகத் தரவேண்டும்.

ஏன் இயலாவது?

பாங்கிகளைத் தேச உடைமையாக மாற்ற வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டிருப்பதைக் குறித்துக் கேலி செய்கிறார்கள்.

ஆயுள் இன்சூரன்சுக் கழகம் தேச உடைமை ஆக்கப்படவில்லையா? அதன் விளைவாக 14 மாடிக் கட்டிடன் எழவில்லையா? அதிலிருந்து கிடைக்கின்ற வருவாய் அரசுக்குப் பயன்படவில்லையா?

வேண்டுமானால், ‘தேர்தல் காலத்தில் பாங்கிகளிலிருந்து பணம் கிடைக்காதே‘ என்று காங்கிரசுக்காரர்கள் அச்சப்படலாம். அதற்கு வேண்டுமானாலும், காங்கிரசுக் கட்சியினருக்கு யோசனை கூறத் தயாராக இருக்கிறேன்.

வேறுபாடுகளை உணர்வீர்

இம்மேடையில் என்னிடம் இவ்வளவு பணம் கொடுத்தார்கள். ஆனால், இவ்வளவு தொகை கொடுத்ததில், முடிதிருத்தும் தொழிலாளி ஒருவர் தந்த ரூ.5 தான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. இந்தத் தொழிலாளி எவ்வளவு பேருக்கு நம்முடைய கொள்கையைச் சொல்லியிருப்பார் – இவர்களைத்தான் நாங்கள் நம்புகிறோம்? என்ற அவர் எத்தனை பேரிடம் சொல்லியிருப்பார்.

ஆனால் அதே நேரத்தில் காங்கிரசுக் கட்சிக்குப் பணம் தரும் டாட்டாவோ, பிர்லாவோ இப்படி யாரிடமாவது கூறுவார்களா? எவராவது வெளிநாட்டினரைச் சந்திக்கும் பொழுது வேண்டுமானால் இரண்டொரு வார்த்தையில் ‘திறமையற்ற ஆட்சி,‘ ஊழல் மிக்க ஆட்சி‘ என்றதான் கூறுவார்கள்!

அவர்களுக்கு பணம் அளிப்பவர்கள் ஊர்க்குடியைக் கெடுப்பவர்கள் – அடுத்த வீட்டுக்காரன் வாழ்ந்தால் பல்லை விளக்காமல் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் – பஸ் பெர்மிட்காரர்கள் – ஆலை முதலாளிகள் இப்படிப்பட்டவர்கள்தான்!

நமக்குப் பணம் கொடுப்பவர்கள் உண்மை உழைப்பாளிகள் – பாட்டாளிகள் ஆகியோராகும்.

இந்தப் பணத்துக்கும் – அந்தப் பணத்துக்கும்தான் போட்டி நடைபெற இருக்கிறது. வருகிற பிப்ரவரியில் எந்தப்பணம் வெற்றி பெறுகிறது என்று பார்ப்போம்.

(நம்நாடு - 26.12.61)