அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


சிங்களத் தீவில் சீரழிகின்றனர் தமிழர்

“இப்பொழுது நமது எதிரி களத்திலே நிற்கின்றான். நாம் அவனைச் சந்தித்தாக வேண்டும். அரைக்கோடி ரூபாயைக் கையிலே வைத்துக் ்கொண்டு நமக்கு எதிரிலே நிற்கின்றான். நம்மை அறிந்தவர்களையும் பக்கத்திலே வைத்துக் கொண்டு இருக்கிறான்“.

“அண்ணனுக்கு துரோகமிழைத்த சுக்ரீவனைப்போல் நம்மை அடிமுதல் நுனிவரை அறிந்தவர்கைத் தம் பக்கத்திலே காமராசர் வைத்துக் கொண்டு இருக்கிறார்( இதைத் தவிர காமராசர் புதிதாக வேறு எதையும் வைத்திருக்கவில்லை! அவர் மேலும் நோட்டைக் கொடுத்து ஓட்டை வாங்கலாம் என்று எண்ணியிருக்கிறார்“.

“நானோ உங்களிடம் நோட்டையும் கொடுங்கள் அத்துடன் உங்கள் ஓட்டையும் கொடுங்கள் என்று கேட்கிறேன். இப்படித் துணிந்து கேட்பது திராவிட முன்னேற்றக் கழகம்தான்“ என்று கடந்த 17.11.61 அன்று சென்னை வண்ணையில் நடைபெற்ற தேர்தல் நிதியளிப்புப் பொதுக் கூட்டத்தில் பேசுகையில் அண்ணா குறிப்பிட்டார். அவர் ஆற்றிய உரையாவது –

“இந்தப் பகுதியில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் மொத்த உற்சாகத்தோடு கூட்டம் ஏற்பாடு செய்து, மெத்தச் சிரமப்பட்டுத் திரட்டியிருக்கிற தேர்தல் நிதியை, உற்சாகத்தோடும், அன்போடும் என்னிடம் அளித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மாற்றுக் கட்சியினர் எண்ணிப் பார்க்கட்டும்!

திராவிட முன்னேற்றக்கழகம், வடசென்னையில் துவக்கப்பட்டபோது, கழகத்திற்கு நல்ல பல வீரர்களையும் உழைப்பாளிகயைம் இப்பகுதி தந்தது.

சாமானியர்களான நம்மாலா தி.மு.க. கழகம் இப்படி வளர்ந்துள்ளது? நமக்கா பொதுமக்கள் இந்த அளவுக்கு ஆதரவு தந்திருக்கிறார்கள்? என்பதை எண்ணும்போது, மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

நாம் கொண்டிருந்த கொள்கையை மாற்றிக் கொள்ளாமல், இலட்சியத்தை மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து, பாடுபடுகிற உள்ள உறுதி பெற்று இருக்கிற காரணத்தால், இக்கழகத்திற்கு முதியோர்கள், தாய்மார்கள் உட்பட ஆதரவு காட்டுகிறார்கள். இதை நம்மை அழிக்க எண்ணும் எதிர்க்கட்சியினரும எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்தக் கழகத்திலே காணப்படும் நேச மனப்பான்மையை அன்பொழுகு தன்மையை வேறு எங்கும் காண முடியாது.

இப்படிப்பட்ட கலகலப்பான – எழுச்சி உள்ள கழகத்தைப் பல இலட்சங்களைக் கொண்டு அழித்துவிடலாம் என்று கருதினால், அது முடியாத காரியம் என்பதை அவர்கள் உணரட்டும். அவர்கள் வேண்டுமானால், தங்கள் கையிலே இருக்கிற பல இலட்சங்களை வைத்துக் கொண்டு, நம்மை அழித்துவிடுவதாக எண்ணி எண்ணி ஆறுதல் பெற்றுக் கொள்ளட்டும், இதற்குப் பதிலாக நீங்கள் நமது கழகம் வடசென்னையில் வெற்றி பெறுமாறு செய்து காட்ட வேண்டும்.

பழைய பாடமே தவிர உண்மை இல்லை

பத்திரிகையில் பலபேர் முன்னேற்றக் கழகத்தைப் பற்றி ஆரூடம் சொல்லக் கிளம்பி இருக்கிறாக்ாள். அவர்கள், ஒரு பேர் வெற்றி பெறுவர் என்றும், இரண்டு பேர்தான் வருவார்கள் என்றும் கூறுகின்றனர். இப்படி இவர்கள் கூறுவது உண்மையா என்பதைப் பார்ப்போம்.

1957ஆம் ஆண்டில், கழகம் முதல் மறையாகத் தேர்தலில் ஈடுபட்ட போது, இப்படித்தான் தப்புக்கணக்குப் போட்டார்கள். ‘அண்ணாத்துரை வெற்றிபெற்று விடுவாரா?‘ என்றும், ‘கருணாநிதி வெற்றி பெற்றுவிடுவாரா?‘ என்றும் கேட்டார்கள். நானும் வெற்றி பெற்றேன் – நண்பர் கருணாநிதியையும் வெற்றி பெறச் செய்தனர். மீண்டும் அவர்கள் இப்படிப்பட்ட பழைய பாடத்தைத்தான் படிக்கிறார்கள் என்பதைத் தவிர வேறு அதில் உண்மையென்ன இருக்கிறது, இவற்றையெல்லாம் பார்க்கும்போது, நமக்கும் அவர்களுக்கும் ஏற்பட்டுள்ள பகை, பஞ்சத்தால் ஏற்பட்ட பகை அல்ல – பரம்பரையாத்தான் இருக்கிறது.

அழிந்துவிட்டோமா நாம்?

இப்பொழுது நம்மைப் சபிப்பவர்கள் அப்பொழுதும் நம்மைச் சபித்தவர்கள்தான்( எனவே இன்றும் நம்மைச் சபிப்பவர்கள்( இவர்கள் சபிக்கின்ற காரணத்தால். நாம் அழிந்து விடமாட்டோம்.

இப்பொழுது முன்னைவிட நல்ல சூழ்நிலை கிராமப் பகுதிகளில் நமக்கு ஏற்பட்டுள்ளது. எந்தக் கிராமத்திற்கு போனாலும் அது கடலோரப் பகுதியானாலும், மலையுச்சியானாலும், நஞ்சை நிரம்பிய தஞ்சைத் தரணியானாலும், அண்ணா வாருங்கள் உங்களுக்காக நிதி திரட்டி வைத்திருக்கிறோம் – அளிக்கிறோம்‘ என்ற அழைக்கின்ற நிலையைக் காண்கின்றேன்.

பதினோரு வயது பாலப்பருவத்திலே அச்சப்படாதவனா, பதினாறு வயதில் நல்ல தயார் உணவு தின்று உரம் ஏறி இருக்கும் போது அஞ்சப்போகிறான்?

இரண்டாவது தடவையாகக் கழகத்தின் உள்ளே சிலர் குழப்பமூட்டிக் கொண்டு இருந்தார்கள். இல்லாவிட்டால், கணக்குப்போட்டு அறுதியிட்டு, ‘நம்முடைய தோழர்கள் இத்தனை இடங்களில் வெற்றி பெறுவார்கள்‘ என்பதை என்னால் கூற முடியும். அவர்கள், தங்களுடைய செய்கையினாலே என்னைக் கெடுக்கவில்லை, ஆனால் ஓராண்டுக் காலத்தைக் கெடுத்துவிட்டாக்ாள்.

ஒவ்வொரு தொகுதியிலும, சுற்றுப்பயணம் மேற்கொள்வது என்றால், ஒரு தொகுதிக்கே நூறு நாட்கள் ஆகம். ஆனால் கடைசி நேரத்தில் இப்பொழுதுவந்தேன் – பார்த்தேன் சென்றேன் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ள- இப்படி ஒரே நாளில் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டுமெனத் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

7 மணியிலிருந்து 8 மணிவரை வடசென்னை, 8 மணியிலிருந்து 9 மணிவரை மற்றொரு இடம் என்று கூட்டம் கூடிக் கொண்டே இருக்க வேண்டும். இப்படிப்பட்ட கூட்டங்களில் மாலை மரியாதை போன்றவைகளை நடத்த வேண்டாம்.

அன்பைப் புதுப்பிக்க நேரமில்ல இது(

உங்கள் ்இதயத்தில் நான் இருக்கிறேன். உங்கள் அன்பு எனக்குத் தெரியும். இதை மாலை போட்டுப் புதுப்பிக்க வேண்டாம். இவற்றையெல்லாம் பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு வைத்துக் கொள்ளலாம்.

குடும்பச் சொத்து, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கல்லாது வேறு யாருக்கு? – அதைப்போல முன்னேற்றக் கழகத்திற்கு குழி விழுந்த கண்கள், பஞ்சடைத்த தலை, ஒட்டிய வயிறு ஆகியவற்றைப் படைத்தவர்களின் வாக்குகள் கிடைக்குமேயன்றி, டாட்டா கட்சியான – பிர்லா கட்சியான காங்கிரசுக் கட்சிக்கா கிடைக்கும்? இந்தக் கட்சிதான் தேவையென்று பாட்டாளிகளா கூறுவர்? டாட்டாவும், பிர்லாவும், பஜாஜும், சிங்கானியாவும், காங்கிரசுக் கட்சிக்குக் கொடுத்த பணம் எவ்வளவு? எதற்காகக் கொடுத்தார்கள்?

கடைவீதியிலே சென்றுகொண்டிருக்கும் மங்கயைிடம், ஒரு பருவ வயதினன், மலர்ச்செண்டைக் கையிலே கொடுத்தால் – அதை அந்தப் பெண் பெற்றக் கொண்டால் – அதற்கு என்ன பொருள்? புத்திசாலியான பெண்ணாக இருந்தால் எனக்குப் பூ வாங்கித்தர கொண்டவன் இருக்கிறான்( நீ யார் – என்றுதான் கேட்பாள்.

கணக்கு கொடுக்க முடியுமா?

காங்கிரசுக் கட்சி, தனது கட்சியின் தேர்தல் நிதியைக் தனது கட்சித் தொண்டர்களிடமிருந்து திரட்ட வேண்டும் அவர்களிடமிருந்து, கால் அரையாக – ஒன்று இரண்டாக வசூல் செய்யப்பட்டதா? அப்படி வசூல் செய்யப்பட்ட தொகை பற்றிய கணக்கை அறிவிக்க முடியுமா?

முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் நிதியைக் காளிக்கோயில் பூசாரியிடமிருந்து வாங்கியதா? வடநாட்டு மார்வாடிகளிடமிருந்து வாங்கயிதா? இந்தப் பணமெல்லாம் பாட்டாளிகளிடமிருந்து தொழிலாளிகளிடமிருந்து, நடுத்தர மக்களிடமிருந்து கழக்த தொண்டர்கள் திரட்டியது.

காங்கிரசுக் கட்சிக்குத் தேர்தல் நிதி அளிக்கும் முதலாளிகள், காரணமில்லாமல் நிதி கொடுப்பார்களா? உங்களுக்கு ஒரு உதாரணம் மட்டும் சொல்லுவேன் – பிர்லாவால் நடத்தப் பெறும் இந்துஸ்தான் மோட்டார் கம்பெனி மட்டும காங்கிரசின் தேர்தல் நிதிக்கு ரூ.20 இலட்சம் நன்கொடையாக வழங்கி இருக்கிறது. அந்தக் கம்பெனியில் இந்த ஆண்டின் மொத்த வருவாய் ரூ.2 கோடியே 85 இலட்சமாகும். இலாபம் ரூ.2 கோடி, காங்கிரசுக் கட்சிக்கு நன்கொடையாகக் கிடைத்தது ரூ.20 இலட்சம்.

இப்படி காங்கிரசுக்கட்சியை ஆதரிப்பதால் – அரவணைப்பதால் அவர்க்ளுக்கு இலாபம் உண்டு! இவர்கள் இப்படிப் பெறும் கொள்ளை இலாபத்தில் சிந்தியது, சிதறியதைக் காங்கிரசுக் கட்சிக்கு விட்டுவிட்டுப் போகிறார்கள்! இவர்களும் அதை உண்டு திருப்தி அடைகிறார்கள்(

வலிவுமில்லை – பண்புமில்லை

இப்படிப் பெற்ற பணத்தைக் கொண்டுதான் நாட்டு மக்களிடமிருந்து ஓட்டுக்களைப் பெறலாம் என்று நம்புகிறார்கள். இந்தப் பணத்துக்கு நல்ல வலிவும் இல்லை நல்ல பண்பும் இல்லை.

இப்படிப்பட்ட பணத்தை மக்களும் நம்பிக்கையோடு வாங்கமாட்டாகள், இது சர்க்கார் போட்ட நோட்டா? கோவை நோட்டா? என்றுதான் யோசிப்பார்கள். இதை ஏன் நான் குறிப்பிடுகிறேன் என்றால் அந்த அளவுக்குக் கள்ள நோட்டு புழங்கியிருக்கிறது.

ஆகவே, வெள்ளிப் பணமாகக் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள்! பணத்தை வாங்க வேண்டாம் என்று நான் கூறமாட்டேன். ஏனென்றால் கொடுக்கி கைதான் அவர்க்ளுடையது! ஆனால், பணம் நம்முடையதுதான்! நம்முடைய உழைப்பை உறிஞ்சி இரும்புப் பெட்டியில் சோர்த்து வைக்கப்பட்டுத் துரப்பிடித்த பணம் தேர்ததல் காலத்தில் வெளியே வருகிறது( திருவிழாவில் காணாமற்போன குழந்தை மீண்டும்கிடைப்பதைப்போல், நம்முடைய உழைப்பினால் அவர்கள் பெற்ற பணம் தேர்தல் நேரத்தில் நம்மிடம் மீண்டும் வந்து சேருகிறது! ஆகவே, கொடுக்கிறதைப் பெற்றுக் கொண்டு நீங்கள் உங்கள் வாக்குகளைத் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அளிக்க வேண்டும்.

அதட்டிக்கேட்க ஆள் வேண்டும்

ஏனெனில், காங்கிரசுக் கட்சி, ஈடு எடுப்பற்ற முறையில், எதிர்க்கட்சியே இல்லாமல் ஆட்சியில் உட்கார எண்ணுகிறது. இவ்வாறு அவர்கள் வந்த உட்கார அனுமதித்தால், இப்பொழுது அமைச்சர்களெல்லாம், எங்களைப் பார்த்துப் பார்த்துத்தான் பேசுகிறாக்ள்( நாங்கள் சொன்னதைக் கேட்டுக் கேட்டுத்தான் பேசுகிறார்கள்.

நாங்கள் சட்டசபைக்கச் சென்று என்ன சாதித்துவிட்டோம் என்று சிலர் கேட்கறிாக்ாள். அவர்களுக்கு நாங்கள் சட்டமன்றத்திற்கு நுழைந்தவுடன், முதல் வரவு-செலவு கணக்கை நிதியமைச்சர் முன்மொழிந்தார். அப்பொழுது நாங்கள் பேசியதற்கு மறுமொழியாகப் பேசிய நிதியமைச்சர் ‘இனிமேல் நாங்கள் வரி போடமாட்டோம்‘ என்றார்.

அதைப்போலவே, கடந்த நான்கு ஆண்டுகளாக நிதியமைச்சர் நமது மாநிலத்தைப் பொறுத்தமட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்காமல் கடன் எழுப்பியே காரியங்களை நிறைவேற்றினார். இதே நேரத்தில் பிற மாநிலங்களில் ஆந்திரத்தில் – மைசூரில் – மராட்டியத்தில் – வங்காளத்தில் – பஞ்சாபில் இப்படிப் பல மாநிலங்களில் புதிய வரிகள் விதிக்கப்பட்டன.

திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்றத்தில் இல்லாமல் இருந்திருந்தால் இங்கும் புதிய வரிகள் விதிக்கப்பட்டிருக்கும்.

கருத்துடன் கேட்டுக் கவலையுடன் செயல்படுவர்!

மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் இல்லாமல், காங்கிரசுக் கட்சி மட்டுமே ஏகக்கட்சியாக ஆட்சிப்பீடத்தில் அம‘ருமானால், புதிய வரிகள் வரக்கூடும்.

‘ஐந்தாண்டு்‘த் திட்டத்தை நிறைவேற்ற ஆண்டுக்கு ஒரு ரூ.7 கோடி வீதம் ர.35 கோடிக்குப் புதிய வரிகள் விதித்துப் பணம் திரட்ட வேண்டும்‘ என்று டெல்லி அரசு சென்னை அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இப்படி விதிக்கப்பட்டிருக்கும் வரி ஏழை – எளிய பாட்டாளி மக்களையும். நடுததர மக்களையும் பாதிக்கக்கூடாது‘ என்ற நல்லெண்ணம் கொண்டவர்கள் – ‘வியாபாரக் கோமான்கள் முதலாளிகள், ஆலை முதலாளிகள், பெரும் பணக்காரர்கள் ஆகியோர் அவ்வரியைக் கட்டட்டும்‘ என்று கருதுபவர்கள் தி.மு.கழகத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று நான் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

பெருவாரியாக எங்களைத் தேர்ந்தெடுத்துஅனுப்பினால் அமைச்சர்க்ளம் எங்களுடைய குரலுக்கு மதிப்பளித்துக் கவலையோடு கேட்பார்கள். கருத்தோடு செயல்படுவார்கள்.

சுதந்திராக் கட்சியும் கம்யூனிஸ்டுக் கட்சியும் தி.மு.கழகமும் எங்க ஒன்று சேர்ந்துவிடுமோ என்ற ஐயத்தின் விளைவாக அமைச்சர்கள் பேசுகிறார்கள். இப்படிக் கூட்டு சேர்வதால் கெட்டுப்போவோம் என்று கூறுகிறார்கள். நாங்கள் கெட்டுப் போவதைக் கண்டு என் இவர்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளவேண்டும்.

நீங்கள் விறுவிறுப்போடு பேசி, சுறுசுறுப்பாகப் பணியாற்றுவீர்களானால். நல்ல பல வெற்றிகளை நாம் பெற்றக் காட்ட முடியும். அவர்கள் சேர்த்து வைத்துள்ள பணம் தண்டச்செலவு, இடைக்கொள்ளை இவற்றுக்காகவே பயன்படும். ஆகவே, அஞ்சாமல் தைரியமாகப் பணியாற்றுங்கள்.

காணும் காட்சி என்ன?

இப்பொழுது காமராசர் மாநாடுகளிலோ பொதுக் கூட்டங்களிலோ பேசுவதோடு நில்லாமல், வரப்போகும்தேர்தல் காலத்தில் வீடு வீடாக வரப்போகிறாராம். அண்ணாத்துரை என்ன செய்தார்? என்று கேட்பவர்களுக்கு இதோ அமைச்சரை வீட்டுக்கு வீடு வரச் செய்கிறேன் என்பதைக் கூறுகிறேன். அவர் பிச்சைக்காக அல்ல, ஓட்டுக்காக வரப்போகிறார். அப்படி அவர் வீட்டுக்குள் வந்து, இப்பொழுது எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்பார். அந்த வீட்டில் அம்மையார், என்ன வாழ்வு இருக்கிறது இந்தக் கட்சியில்? அரிசி ஆனை விலை விற்கிறது புளி விலையேறி விட்டது. ஆனால் வரவு மட்டும்காணோம் என்று சலிப்புடன் கூறுவார். அந்த அம்மையாருக்குப் பக்கத்திலேயே யாராவது தெரிந்தவர்கள் இருந்தால், வாயை மூடு என்று சைகை காட்டுவார். என் வாயை ஏன் மூடச் சொல்கிறாய்? என்று இந்த அம்மையார் கேட்பார். இவர்தான் அமைச்சர் என்று கூறுவார்கள். உடனே அம்மையார் இவர்தானா முதல் மந்திரி? என்று கேட்பார்.

இப்படிப்பட்ட காட்சிகளைக் காமராசர் காணத்தான் போகிறார். இதையும் வேண்டுமானால் பத்து வீடு போய்ப் பார்க்கட்டும். வீடு வீடாக நுழைய வேண்டிய அளவுக்குக் காங்கிரசு வந்துவிட்டது. முட்டுக் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் எங்கும் நிறைந்த நாதமாகிவிட்டது.

பவானிக்கு அருகில் பருகூர் என்றொரு கிராமம் உண்டு. அந்தக் கிராமம் மலையுச்சியில் இருக்கிறது. அங்குச் சென்ற அமைச்சர்கள் சுக்கன். அங்குள்ள புலி, காட்டெருமை, பன்றி, இயற்கைக் காட்சிகள் ஆகியவற்றைப் பார்த்துக் கொண்டு உல்லாசமாக இரசித்துக் கொண்டிருந்தாராம். அந்த வேளையில், தூரத்தில் முனனேற்றக் கழகக் கொடியொன்று பறந்து கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு, இங்குக் கூடவா இருக்கிறது? என்று கேட்பாராம். ஆம், அங்குக் கூடத்தான் இருக்கிறது கக்கனுக்கு ஒரு மகன் இருந்தால் இருக்கிறாரோ இல்லைாய, அவர்கூடக் கழகக் கருத்துக் கொண்டவராகத் தான் இருப்பார். அவர் படிக்கும் புத்தகத்தினுள் அவரககுப் பிடித்த கழகத் தலைவர் படம்கூடப் காணப்படும்.

செல்வாக்கு வளர்ந்தது

சென்ற மாதம் பழவேற்காட்டுக்குச் சென்றிருந்தேன். கடற்கரை ஓரம் இருக்கின்ற இப்பகுதியில், மீனவ மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள், உழைத்தும் பிழைக்க முடியாத இடம் அது. அங்குச் சென்றிருந்த என்னை ஓர் ஒடத்தில் ஏற்றிவிட்டு மற்றோர் ஓடத்தில் பல மீனவத் தோழர்கள் ஏறிக்கொண்டு எத்தனை வகையான வாத்தியங்கள் உண்டோ அத்தனையையும் முழக்கியவண்ணம், எனது ஓடத்தைச் சுற்றிச் சுற்றி ‘அண்ணா வாழ்க‘ என்று முழங்கினர்.

இவைகளெல்லாம் எங்களுக்கிருக்கும் அந்தஸ்தின் காரணமாகக் கொடுக்கப்படுபவை அல்ல. என் குடும்பப் பெருமையைக் காட்டியோ, என்னிடம்பல இலட்சங்கள் இருப்பதாகக் கணக்குக் காட்டியே இந்தச் செல்வாக்கைப் பெறவில்லை. நான் சாமான்யமானவன். உங்களில் நான் ஒருவன். உங்கள் இதயத்தை என்னிடம் தந்திருக்கிறீர்கள். என் இதயத்தை உங்களுக்குத் தந்திருக்கிறேன்.

இவ்வளவு வலிவைப் பெற்றுள்ள நம்மை, ஒழித்து விடுவோம் என்று கூறுவார்களனால், அதற்கு என்ன பொருள்? அரசனைக் கொல்வதற்காக அரசனுக்கு உணவு தயாரிக்கும் சமையல்காரனைப் பிடித்து, அவனிடம் விஷம் கொடுத்து, அதனை அரசன் உண்ணும் உணவிலே கலந்து தந்த கொல்ல ஏற்பாடு செய்ததைப்போல் நம்மிடமிருந்து சென்ற சிலரைப் பிடித்து வைத்துக்கொண்டு, பணத்தைக் காட்டியும் நம்மை ஒழித்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள்.

இதயத்தில் கொள்கை இடம்பெற்றால்...

அவர்களுக்கு நான் கூறிக்கொள்வதெல்லாம் இதுதான். ஏழைக்குக் கொள்கை விளங்காது. கொள்கை அவனுக்கு விளங்கிவிட்டால் அவற்றை அவர்கள் சுலபமாக மாற்றிக் கொள்ளமாட்டார்கள். அவர்கள் தங்கள் இதயத்திலே இடம் கொடுத்துவிட்டால், சுலபத்தில் மாற்றிக்கொள்ள மாட்டார்கள். அதற்காக எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள்.

பெரும் பெரும் கப்பல்களில் ஏற்றிவரும் சரக்குகளைக் கரைக்குக் கொண்டுவரும் தோழர்கள் பாட்டாளிகள் அவர்கள் கொண்டுவரும் அந்தச் சரக்குகள் மாடி வீடுகளுக்குத் தான் செல்கின்றன. இப்படி ஊர் வாழ உலகம் வாழ உழைப்பவர்கள் நமது கழகத் தோழர்கள்.

இப்படிப்பட்ட தோழர்களையா 8 அணாவுக்கு விலை கொடுத்து வாங்கிட முடியும்? இப்படிப் பெறுகின்ற காசுதான் காலமெல்லாம் பயன்படுமா? ஒரு போண்டா – ஒரு காப்பி இரண்டு ஏப்பம் அவ்வளவுதான்.

இப்படிப்பட்ட முயற்சிகளில் இறங்குகின்ற காங்கிரஸ் கட்சியின் பணம்தான் பாழாகுமே தவிர, பயன் ஒன்றும் விளையாது. எண்ணெய்தான் செலவாகுமேயொழிய பிள்ளை பிழைக்காது என்பதைப் போல்தான் முடியும். ஆகவே நல்ல நம்பிக்கையோடு நமது தோழர்கள் பணியாற்ற வேண்டும்.

மீண்டும் பதவிக்கு வரவேண்டுமா?

கடைகளுக்குச் சென்றால் எந்தப் பண்டத்தின் விலை குறைந்த இருக்கிறது, எல்லாப் பண்டங்களின் விலையும் ஏறித்தான் இருக்கிறது. இந்த விலை உயர்வினால் பாதிக்கப்பட்டு இந்த நாட்டு மக்கள் வாழ்க்கையில் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் வாழ்வு நாளுக்கு நாள் தேய்ந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலைக்கு நம்மை ஆளாக்கியிருக்கும் இந்தக் கட்சி மீண்டும் வரவேண்டும் என்று சொல்பவர்கள் துரோகிகளாவர். இந்த நாட்டு மக்களைக் காட்டிக் கொடுப்பவர்களாவர்.

சில்ர் இந்த ஆட்சியில் பள்ளிக்கூடம் பெருகிக் கல்வி வழங்கப்படுவதாகவும், ‘இவர் இத்தனை பள்ளிகளைத் திறந்தார் என்றும் கூறி வருகின்றனர். அவர்களிடம் நான் ஒரு உறுதிமொழியைக் கேட்கிறேன். இப்பொழுதுள்ள பள்ளிக் கூடங்களைவிட இரண்டு பங்கு பள்ளிக்கூடங்களைத் திறக்கிறோம். இப்பொழுதுள்ள பள்ளிகள் எதையும் மூடவி்ல்லை. அதுவும், நாங்கள் அமைக்குள் பள்ளிகளை இப்பொழுது இருப்பதைவிட தரமுள்ளதாகவும் அமைக்கிறோம். அவர்கள் பேசுகின்ற வாதத்தை விட்டுவிடுவார்களா?

எல்லாம் சரியாகிவிடுமா?

வெள்ளையர்கள் இந்த நாட்டை ஆண்ட காலத்தில், இங்குத் தபால் நிலையத்தை அமைத்தனர். இரயில் பாதையை அமைத்தனர். அவர்களும் கூடப் பள்ளிக்கூடம் கட்டினார்கள். ஆனால் இவற்றை யெல்லாம் செய்தார்கள் என்பதற்காக அவர்களை இங்கு விட்டுவைக்கவில்லை. அவன் நமக்கு அறிமுகப்படுத்தி வைத்த ஆகாய விமானத்திலேயே அவனை ஏற்றி அனுப்பிவிட்டோம். அதைப்போல், இந்த ஆட்சியாளர்கள், பள்ளிக்கூடம் கட்டிவிட்டால் மட்டும் போதுமா? அதனால், எல்லாம் சரியாகிவிடுமா?

ஒரு பெண்ணைப் பேய் பிடித்துக் கொண்டதாக வைத்துக் கொள்வோம். பேய் என்பதும் கிடையாது, அது பிடித்துக் கொள்வது என்பதும் கிடையாது. ஆனால், கதைக்ாக இதைச் சொல்லுகிறேன். பேய் பிடித்த பெண்ணைப் பேயை ஓட்ட மந்திரவாதி ஒருவனை ஏற்பாடு செய்வதாக வைத்துக் கொள்வோம். அவன், ‘பேயை விரட்டிவிட்டேன்‘ என்று கூறிப் ‘பேயை விரட்டிவிட்டேன்‘ இப்பொழுது நான் பிடித்துக் கொள்ளுகிறேன்‘ என்றால் சும்மாயிருப்பார்களா?

அதைப்போல், இப்பொழுதுள்ள பேயையும், அந்தப் பேயையும் சேர்த்து விரட்ட வேண்டும். இந்தப் பேய்களை ஆளுக்கொரு வேப்பிலைக் கொத்தை எடுத்துக்கொண்டு விரட்ட வேண்டும்.

இப்பொழுது நாம் விட்டுவிட்டால், இன்னும் 25 ஆண்டுகளுக்கும் நாம் நமது நாட்டைக் குத்தகைக்கு விட்டதாக முடியும். வடநாட்டுக்காரர்களின் ஆதிக்கம் மிகுந்துவிடும்.

சீரழியும் தமிழ் மக்கள்

இலங்கையில் நமது சகோதரத் தமிழர்களின் கடைகள் சூறையாடப்படுகின்றன. தமிழ்ப் பெண்களின் கற்பு சூறையாடப் படுகிறது. அவர்கள் கண்ணியமாக வாழ முடியவில்லை. அவர்கள் உயிருக்கு உத்தரவாதமில்லை. கொலை செய்யப்படுகிறார்கள் – சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இதைப்பற்றிக் கேட்க ஓர் ஆளாவது உண்டா? ஆனால், சைனா பசாரில் ஒரு மார்வாடி காரிலிருந்து இறங்கும்பொழுது தடுக்கி விழுந்து விட்டால், பாராளுமன்றத்தில், பண்டித நேருவைப் பார்த்து கேட்க ஆளிருக்கிறது, அவர் ‘இதைபப்ற்றி தெரியாது‘ என்று சொன்னால், ‘இதைத் தெரிந்து கொள்வதைவிட உமக்கு வேறு வேலை என்ன இருக்கிறது,‘ என்று கேட்கும் அளவுக்கு அங்கே ஆட்கள் இருக்கிறார்கள். சிங்களத் தீவிலே சீரழிந்து கிடக்கும் தமிழ் மக்களைப் பற்றிக் கேட்பதற்கு நம்மைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்?

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த புலவர்கள் மரபிலே வந்த தமிழர்கள் – ரோமம் கிரேக்கம், சாவகம் ஆகிய கடல் கடந்த நாடுகளோடு வாணிபம் நடத்திய தமிழ் மக்கள் மரபிலே வந்த தமிழர்கள் – வீரத்திற்கு விளைகளமாக இருந்த தமிழர்கள் இன்று சிங்களத் தீவிலே சீரழிந்து கிடக்கிறார்கள்! அவர்களைக் ‘கள்ளத் தோணி‘ என்று இழித்தும் பழித்தும் பேசுகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தமிழ் மக்களை விட்டுவிட்டு, ‘ஆடசி நடத்துகிறோம்‘ என்று கூறுகின்ற ஒரு ஆட்சியும் ஆட்சியா? தர்ம நியாயம் தெரியாதவர்கள் – நீதிநெறியற்றவர்கள் – பிள்ளைகுட்டி பெறாதவர்கள்தான் இந்தக் கட்சி நிலைக்கட்டும் என்று கூறுவார்களே தவிர, நீதிநெறியை உணர்ந்தவர்கள் இந்த ஆட்சியை மதிக்கமாட்டார்கள்.

(நம்நாடு - 21, 22.11.61)