அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


பொய்யுரை பரப்புபோர் பற்றி அண்ணா விளக்க அறிக்கை

திராவிட முன்னேற்றக் கழகத்தில் அமைதியும் தோழமையும் கட்டுப்பாடும் இருப்பது நமது ஆதிக்க நோக்கத்திற்குப் பெரும் ஆபத்து என்று உணர்ந்து மாற்றுக் கட்சி வட்டாரமும் இதழ்களும் வதந்திகளைப் பரப்புவதிலும் கற்பனைகளைக் கட்டி விடுவதிலும் இன்னமும் முனைந்து நிற்கின்றன.

மாற்றுக் கட்சிகளுக்கு நமது கழக அமைப்பு செம்மைப் பட வேண்டுமென்றோ செயல் முறையில் தீவிரமோ, ஜனநாயகமோ வளர வேண்டுமென்றோ அக்கரை ஏற்பட முடியும் என்று எவரும் கருதமாட்டார்கள்.

அவர்களுக்கு ஆசையும் அக்கரையும் நமது கழகத்திலே கலாம் விளைகிறது என்று கேள்விப்படுவதிலேதான் இருக்க முடியும். எனவே அத்தகைய நோக்குடைய இதழ்கள் நமக்குள் குழப்பம், மனக்கிலேசம், பிளவு ஆகியவை ஏற்படக்கூடிய விதத்தில் செய்திகளுக்கு வடிவம் கொடுத்தம் தலைப்புகளிட்டும், புனைந்துரைகளை வெளியிட்டும் வருகின்றன நாள் தவறாமல்.

கழகத்திலே செயல்முறை குறித்து மாறுபாடான கருத்துகள் ஏற்பட்டுக் கசப்புணர்ச்சி காணப்பட்டது. இதனை நீக்கவும் தோழமை உணர்வைப் பலப்படுத்தவும் நான் தோழர் சம்பத்துடன் கலந்து பேசினேன். அறிக்கைகள் மூலம் இருவரும் வன்முறைப் போக்கு கண்டித்துக் களையப்படவேண்டும் என்பதைத் தெரிவித்தவுடன் கருத்து வேற்றுமைகள் கசப்புணர்ச்சியை மூட்டாதபடி பார்த்துக் கொள்ள வேண்டுமென்பதையும் வலியுறுத்தியிருக்கிறோம்.

நல்ல சூழ்நிலை உருவாக வழிகோலப்படுவது கண்டு மனம் பொறாதார் மீண்டும் அவதூறுகளை இதழ்களில் பரப்ப முற்பட்டுள்ளனர்.

மதுரைத் தோழர் முத்து, நடிக நண்பர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர் ஆகியோர் செயற்குழுக் கூட்டத்தில் நுழைந்து கலகம் விளைவித்தனர் என்ற வதந்தியைப் பரப்புகின்றனர்.

சம்பத்தின் சட்டையைப் பிடித்து இழுந்தனர் தாக்கினர் என்று மீண்டும் மீண்டும் பொய்யுரையை அவிழ்த்துவிட்ட வண்ணம் சில ஏடுகள் உள்ளன.

செயற்குழுவில் பரபரப்பும் உரத்த குரலிலே பேச்சும் நடைபெற்றது. தவிர கைகலப்பு ஏற்படவுமில்லை கலகம் விளையவுமில்லை. நடிக நண்பர்கள் எவரையும் தாக்கவுமில்லை என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தி.மு.கழகத்திலே, ஜனநாயகத்தை வெற்றி பெறச் செய்வதற்காகவே அவதரித்து இருப்பதாகக் கோலம் காட்டி, இதழ்கள் கொட்டை எழுத்துகளுடன் வர்ண வேலைப்பாடுகளுடனும், முதல் நாள் காலை பதினோரு மணிக்கு ஏற்பட்டது. இரண்டு நிமிடப் பரபரப்பை இந்த இதழ்கள் இரண்டு கிழமைகள் புதுப்புது வடிவங்களுடன் வெளியிட்டு, நமது பன்னிரண்டு வருட உழைப்பின் சின்னமாக தி.மு.கழகத்தைச் சிதைக்கத் திட்டமிட்ட மாற்றார்களுக்குத் துணைநின்றன.

நேரிட்டுவிட்ட ‘ரசாபாசம்’ அடிதடி அளவிலோ, சட்டையைப் பிடித்திழுக்கும் முறையிலோ சென்றிருக்குமானால், செயற்குழு தொடர்ந்து நடைபெற்றிருக்குமா என்பதைக்கூடவா பொதுமக்கள் எண்ணிப் பார்க்க மாட்டார்கள்? காலை பதினொரு மணி அளவில் பொங்கிய கோப உணர்ச்சி இரண்டே நிமிடங்களில் மறைந்தது.

ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டிருந்தால் நடிக நண்பர்கள் சம்பத்தைத் தாக்கியிருந்தால் இரண்டே நிமிடங்களில் அமைதி ஏற்பட்டுவிடுமா? தொடர்ந்து செயற்குழுக் கூட்டம்தான் நடந்திருக்குமா? வெளியே இருந்த பொதுக்குழு உறுப்பினர்கள் வாளாயிருந்திருப்பார்களா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

தொடர்ந்து செயற்குழுக் கூட்டம் அமைதியாக நடைபெற்றுப் பிற்பகல் உணவுக்காக நான், தோழர்கள் சம்பத், மதியழகன் ஆகியோருடன் பொதுக்குழு நடைபெற ஏற்படாகி இருந்த இடம் சென்று திரும்பி வந்து, மறுபடியும் செயற்குழுக்கூட்டத்தை மாலை 6 மணி வரையிலும் நடத்தி இருக்கிறோம்.

அடிதடி-தாக்குதல் நடைபெற்றிருந்தால் இவ்விதமாகவா செயற்குழு தொடர்ந்து நடைபெற்றிருக்கும்?

அடிதடியும் தாக்குதலும் நடைபெற்றிருந்தால் தோழர் சம்பத் தமது பதவிவிலகல் கடிதத்தில் அது பற்றிக் கோடிட்டாவது காட்டாமலா இருந்திருப்பார்?

சம்பத்திற்கும் சரி மற்றவர்களுக்கும் சரி, அந்த இரண்டு நிமிடப் பரபரப்பு வேதனையையும் அதிர்ச்சியையும் தரத்தான் செய்தது. இத்தனை ஆண்டுகளாக உருவான பாசஉணர்ச்சி பட்டுப்போய் விட்டதோ என்று எண்ணித்தான் அனைவருமே கலங்கினோம்.

செயற்குழுக் கூட்டம் அவைத்தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர், பொதுக்குழு உறுப்பினர்களாக உள்ள நடிக நண்பர்கள் ஆகியோர் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெரிய மாடிக் கட்டிடத்திலேயே நடைபெற்றது.

பொதுக்குழுவுக்காக ஏற்பாடாகியிருந்த இடத்தருகே காலையிலேயே பொதுக்குழு உறுப்பினர்கள் வந்துவிட்டதால், அங்குச் செயற்குழுவை நடத்துவதைவிட வேறோர் இடத்தில் நடத்துவது நல்லது என்ற காரணத்தாலே செயற்குழுக் கூட்டத்தை அந்த இடத்தில் நடத்த நேரிட்டது.

செயற்குழுக்கூட்டத்திலே பரபரப்பு ஏற்பட்டதும், பக்கத்துக் கூடத்தில் தங்கியிருந்த நடிக நண்பர்கள் எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர் என்ன? என்ன? என்று கேட்டபடி பதறி ஓடிவந்தனர். அவர்களைப் போலவே செயற்குழுவுக்குத் துணைபுரிய வந்திருந்த தலைமை நிலைய அலுவலர்களும் ஓடிவந்தனர்.

நிலைமை, பொங்கி வழிந்து இரண்டு நிமிடங்களில் அமைதியாகிவிட்டது. வந்தவர்கள் தமதிடம் சென்றனர். நடைபெற்றது இதுவேயன்றி, ‘நடிகர்கள்’ தாக்கினார்கள். சட்டையைப் பிடித்து இழுத்தார்கள் என்று பரப்பப்படும் பொய்யுரைக்குத் துளியும் ஆதாரம் இல்லை. ஒரு பெரிய அமைப்புக்குள் பிளவு வெடிக்கத்தக்கவிதமான பொய்யுரையைப் பரப்புவது நேர்மையாளர்கள் மேற்கொள்ளும் முறையுமாகாது.

மேலூர் பொதுக்குழுவுக்குப் பிறகு, தோழர் சம்பத் வெளியிட்ட அறிக்கைகளிலும், பேச்சுகளிலும், எந்தச் செயற்குழு பொதுக்குழு உறுப்பினரையும் குறிப்பிட்டு அவர்கள் தாக்கினார்கள் என்று கூறவே இல்லை.

“எமக்குள் கொள்கை அளவிலே கருத்து வேற்றுமை இல்லை. கழகத்தை நடத்திச் செல்வதற்கான முறைகள் பற்றிக் கருத்து வேற்றுமைகள் எழுந்தன. இதற்காக நானோ மற்ற எவருமோ, கழகத்தை விட்டு வெளியேறப் போவதுமில்லை என்று தோழர் திட்டவட்டமாகத் தெரிவித்த பிறகு மாற்றுக் கட்சிகளுக்குத் துணை நிற்கும் இதழ்கள் பெருத்த ஏமாற்றமடைந்தன. அவையே கழகத்திலே பிளவு ஏற்படச் செய்வதற்காக ‘அடிதடி’ கற்பனையை அவிழ்த்து விடலாயின.

‘மதுரை முத்து சட்டையைப் பிடித்து இழுத்தார். நடிகர்கள் அடித்தார்கள் என்றெல்லாம் வதந்திகள் அந்த இதழ்கள் பரப்பின தோழர் சம்பத் எந்த இடத்திலும் இந்த மூவர் பற்றியோ அல்லது வேறு எந்தப் பொதுக்குழு உறுப்பினர் பற்றியோ குறிப்பிட்டுப் பேசவில்லை. நடிகர்கள் செயற்குழு நடக்கும் இடத்திலே நுழைந்தது குறித்துத் தோழர் சம்பத் தமது அறிக்கையில் குறிப்பிட்டதும் தோழர் எஸ்.எஸ்.ஆர். தானோ எம்.ஜி.ஆர் அவர்களோ எவ்விதமான வன்முறைச் செயலிலும் ஈடுபடவில்லை என்பதை விளக்கி அறிக்கை வெளியிட்டனர். தோழர் சம்பத் அந்த அறிக்கையை மறுக்கவில்லை. நடிகர்கள் தன்னைத் தாக்கினார்கள் என்றோ தாக்க வந்தனர் என்றோ குற்றம் சாட்டவில்லை.

இதுபற்றித் தெளிவளிக்க தோழர் சம்பத் 6.2.61 இல் நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற தி.மு.கழகக் கூட்டத்தில் பேசுகையில் தி.மு.கழகத்தில் உள்ள தனிப்பட்ட நபர்கள் எவர் மீதும் எந்தவிதமான குற்றத்தையும் சாட்டவில்லை. அதில் தலைதூக்கிய சில தவறான மனப்பான்மையையும், மூர்க்கத்தனமான போக்கையும் வளரவிடாமல் தடுத்துக் கழகம், கண்ணியத்துடனும், கட்டுப்பாட்டுடனும் கடமையாற்ற பாதுகாப்பு தேடவேண்டுமென்றுதான் வலியுறுத்தினேன். பொதுச்செயலாளர் திரு. அண்ணாதுரையும் தமது அறிக்கையில் இந்தத் தவறான மனப்பான்மையையும் போக்கையும் தான் கண்டித்துள்ளார் என்று விளக்க மளித்துள்ளார்.

எனவே தோழர் சம்பத் சொல்லாத ஒன்றைத் தாமாகக் கற்பனைச் செய்து கொண்டு ‘தாக்கினார்கள், சட்டையை இழுத்தார்கள்’ என்றெல்லாம் பொய்யுரை பரப்புவது நேர்மையல்ல. அத்தகைய பொய்யுரைகளைக் கேட்டுப் பொதுமக்கள் ஏமாந்து விடவும் மாட்டார்கள். கழகத்தோழர்களுக்கு மாற்றுக் கட்சிகளின் மனப்போக்குத் தெரியும். சில இதழ்களின் நோக்கத்தையும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, அவர்களும் கலக்கமோ, குழப்பமோ, அடைய மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. வன்முறைச் செயல்போக்குத் திட்டம் இவைகளைக்கண்டித்து நான் அறிக்கை வெளியிட்டேன் என்றால் ‘அடிதடி’ நடந்தது. நடிகர்கள் தாக்கினார்கள் என்று பொருள் ஆகாது.

நமது கழகத்தில் ஈடுபாடு கொண்டு கொள்கைப் பற்றோடும் நேசத் தொடர்போடும் பணியாற்றி வரும் நடிக நண்பர்கள் எம்.ஜி.ஆர் அவர்களும் எஸ்.எஸ்.ஆர் அவர்களும் எனது அறிக்கை அத்தகைய பொருள் கொள்ள இடமளிக்கும் என்ற கருத்தில், விளக்கமளிக்கும்படி நான் குமரி மாவட்டச்சுற்றுப்பயணத்தில் இருந்தபோது, தந்தி கொடுத்தனர். அவர்கள் தந்தி கண்ட பிறகு என் அறிக்கை அவ்விதமான பொருள் கொள்ள இடமளிக்கிறதோ என்று ஐயப்பாடு ஏற்பட்டதாலேயே அவர்களுக்கு விளக்கம் அளிக்கவும், பொய்யுரை கூறுவோருக்கு மறுப்பளிக்கவும் நிலைமைக்கான தெளிவளிக்கவும் இந்த விரிவான அறிக்கையை வெளியிடுகிறேன்.

கருத்து வேற்றுமைகளைக் கூடிப்பேசி நீக்கிக் கொள்ள முயலும்போது, கோபம், கொந்தளிப்பது, கடுமொழி கூறுவது, குழப்பமூட்டுவது, கூச்சலிடுவது, ஒருவருக்கொருவர் உரத்த குரலில் அறைகூவல் விடுவது போன்றவைகள் வன்முறைப் போக்காகும். விரும்பத்தகாத கண்டிக்கத்தக்க மனப்பான்மை யாகும். கட்டுப்படுத்தாவிட்டால் அந்தப் போக்கு வன்முறைச் செயலிலும் எவரையும் கொண்டு போய்த் தள்ளிவிடும்.

எனவேதான், என் அறிக்கையில் நான் வன்முறைப் போக்கைத் திட்டமிடுவதைக் கண்டித்திருக்கிறேன்.

பொதுக்குழு கூடுமுன்பே அவ்விதமான போக்கு இருந்ததாகச் சம்பந் என்னிடம் கூறினார். நான் வேதனைப் பட்டுக் கண்டித்து அறிக்கை வெளியிட்டேன்.

சம்பத் தமது நுங்கம்பாக்கம் பேச்சில் குறிப்பிட்டு இருக்கிறபடி அவரும் எவர் மீதும் எந்தவிதமான குற்றமும் சாட்டவில்லை. என் அறிக்கையும் எந்தத் தனிப்பட்டவர்களையும் குற்றம் சாட்டிக் கண்டிப்பதற்கு அல்ல. ‘வன்முறைப் போக்குக் கூடாது’ என்ற பொது நோக்குடன் அறிக்கை வெளியிட்டேன்.

செயற்குழு, பொதுக்குழு ஆகிய இரு நிகழ்ச்சிகளிலும் எவரும் எவரையும் தாக்கவில்லை. கலகமும் செய்யவில்லை என்பதை. இரு நிகழ்ச்சிகளையும் உடனிருந்து கவனித்தவன் என்ற முறையில் மறுமுøயும் பொது மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே, ‘பொய்யுரைகளுக்கு’ பிரச்சனை என்ற மதிப்பான இடமளிக்கும் தவறு செய்து. அதுகுறித்து மேடைகளில் பேசுவது அறவே ஆகாது என்பதையும் அறிவித்துக்கொள்கிறேன்.

(நம்நாடு - 13.2.61)