அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


நமக்கென்று ஓர் அரசு இருந்தால் இந்நிலை ஏற்படுமா?

2.4.61 மாலை மாயூரம் வட்டம் பெருஞ்சேரிக்கு அண்ணா அவர்கள் வருகை தந்ததனை முன்னிட்டு அங்குப் பெருந்திரளான மக்கள் வந்து குழுமிய வண்ணம் இருந்தனர். அந்த மக்கள் மத்தியில் அண்ணா சொற்பொழிவாற்றினார். அவர் பேச எழுந்ததும் 21 வேட்டுகள் முழங்கின.

அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டு அண்ா அவர்கள் பேசியதாவது –

‘உங்களைப் பார்த்தால் நான் நீண்டநேரம் பேச வேண்டும் போல இருக்கிறது. பக்கத்திலே இருக்கிற நாராயணசாமிப் பார்த்தால் வேறு பலநிகழ்ச்சிகள் நினைவிற்கு வருகின்றன. முன்புபோல என்றால், இரவு 12 மணிக்குமேல் கூடப் பேசலாம். ஆனால் இப்போது ஆட்சியாளர் சட்டம் ‘இரவு 10 மணிக்கு மேல் நகரங்களல் பேசக் கூடாது‘ என்றிருக்கிறது. எனவே நான் மற்ற நிகழச்சிகளை நினைவு படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

தேசிய விடுதலை ஸ்தாபனம்

நான் உங்களிடத்திலே இன்றைய தினம் தி.மு.க.வைப் பற்றிப் பேச ஆசைப்படவில்லை. 1962 தேர்தல் பற்றிக் கூடப் பேச ஆசைப்படவில்லை. ஒரு காலத்தி்ல் தமிழகம் எப்படி இருந்தது என்ற வரலாற்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இந்தக் கூட்டத்திலே வந்திருக்கின்ற பெரியவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வேன் – ‘உங்கள் வீட்டுப் பிள்ளைகள் ஏதோ ஓட்டு வாங்குவதில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று நினைக்காதீர்கள். உங்கள் வீட்டுப் பிள்ளை ஈடுபட்டிருப்பது நாட்டை மீற்பதற்கும் ஆகும், இது ஒரு தேசிய விடுதலை ‘ஸ்தாபனம்‘ ஆகும்.

கூலிகளாக அனுப்புகிறோம்

ஒரு காலத்தில் தமிழகம் தரணி மெச்ச வாழ்ந்தது – உலகத்தாரால் பாராட்டப்பட்டது. ஒரு காலத்தில் உலகத்தார் தமிழர்களைப் போல வீரர்கள் இல்லை, விவேகிகள் இல்லை என்று பாராட்டியிருக்கிறார்கள்.

ரோம் நாட்டுக்கு நம்முடைய நாட்டு முத்துக்கள் விற்கப்பட்டன என்று அறிகிறோம். இப்படி முத்தையும் பவளத்தையும் பட்டு – பட்டாடைகளையும் மயில் தோகைகளையும் வெளிநாடுகளுக்கு அனுப்பிய நாம் இன்று ‘கூலி‘களை அனுப்புகிறோம். முத்து அனுப்பிய நாம் தமிழ்த் தாயின் முத்து போன்ற மக்களை, பிழைப்பதற்காகக் கூலிகளாக அனுப்புகிறோம். தாய் அழுதுகொண்டு நிற்க மகன் துடைக்க – மகனின் கண்ணீரைத் தாய் துடைத்துக் கொண்டே அனுப்புகின்ற நிலைமைகளை வளர்க்கிறோம்.

ஒருகாலத்தில் பட்டையும், பட்டாடையையும் அனுப்பிய தமிழகம், இந்த நாட்டுத் தங்கங்களை – செம்மல்களைக் கூலிகளாக அனுப்புகின்ற நிலைமைகளைப் பார்த்து நாம் வேதனைப்படுகிறோம்.

இரத்தத்தின் இரத்தம் – சதையின் சதை

தஞ்சை மாவட்டத்திற்கு வருகின்ற காவிரிக்குக் கரைகட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கரிகாற் பெருவளத்தான் சிங்களம் சென்று போரிட்டு வென்று போரிலே தோற்கடிக்கப்பட்டவர் களைக் கொண்டுவந்து காவிரிக்குக் கரை கட்டினான் என்கின்ற வரலாறு இருக்கிறது. ஆனால் இன்று தோணி தோணியாக – கப்பல் கப்பலாகப் பிழைப்புப் தேடி அங்கே சென்று கங்காணிகள் சவுக்கடிக்கும், சிங்களவர்கள் போடுகின்ற அடக்கு முறைக்கும் ஆளாகின்ற அடிமையாக நமது இரத்தத்தின் இரத்தம் – சதையின் சதை அங்கே அல்லப்படுகிறது.

இந்த ஒருமாதக் காலமாகத் தமிழ் மக்களைச் சிங்களப் போலீசார் துப்பாக்கியால் தாக்குகின்றார்கள் – தடியினால் அடிக்கிறார்கள் – தமிழர்களுக்குத் தொல்லைகள் தருகின்றார்கள் என்ற செய்தியை அறிகிறோம். அதைப் பற்றி டில்லியில் இருக்கிற நேருவுக்கு ஏன் என்று கேட்க முடியவில்லை. இத்தனைக்கும் லண்டனி்ல் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் நேருவிற்குப் பக்கத்தில் இலங்கைப் பிரதமர் சிரிமாவோ இருந்தார். அவரை ஏன் என்று கேட்கவில்லை. எங்கிருந்தோ வந்த தென்னாப்பிரிக்க அமைச்சர் இப்படிச் செய்யலாமா? என்று கேட்க முடிந்தது. சிங்களப் பிரதமரைக் கேட்க முடியவில்லை. அம்மா தமிழர்கள் உன்னுடைய நாட்டிலுள்ள காடுகளைக் கழனிகளாக்குகிறார்கள். காடுகளைத் திருத்துகையில் துஷ்ட மிருகங்களுக்குப் பலியாகிறார்கள். அவர்களைக் கொடுமைப்படுத்துகிறீர்களே இப்படி செய்யலாமா? என்று கேட்கும் துணிவு பெற்றுள்ள பண்டித நேரு கேட்க முடியுவில்லை?

மார்வாடி அடிபட்டால் கேட்கமாட்டார்களா?

பக்கத்திலே இருக்கிற மங்கநல்லூரிலே அல்லது மாயூரத்திலே இரண்டு மார்வாடி கடைகள் தீக்கிரையாக்கப்பட்டால் – அவர்கள் தொல்லைப்பட்டால் டில்லி பார்லிமெண்ட் கிடுகிடுக்கும். “மாயூரத்தில் இரு மார்வாடிகள் கொடுமைப்படுத்தப்பட்டார்களா?“ என்று கேட்டு, ஆமாம் என்றால் ஏன் அந்த கை ஒடித்தெறியப்பட வில்லை? என்று கேட்கப்பட்டிருக்கும்.

ஏழைப்பங்காளர் என்று போற்றுகிறோமே அந்தப் பச்சைத் தமிழர் காமராசர் கேட்டாரா? கேட்பாரா ஒரு வார்த்தை? வீட்டிலே இருக்கிற கொடுமைக்கார மாமியார். மருமகள் எவ்வளவு கொடுமைப்படுத்தப் பட்டாலும் அதைப் பற்றிக் கேட்காமல் அடுத்த வீதியில் நடக்கும் தகராறில் சென்று ‘இப்படி நடக்கலாமா?‘ என்று கேட்பார். அதுபோல் இவர்கள் நடந்து கொள்கிறார்கள்.

“தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்‘ என்பார்கள். அதுபோல் வடக்கே இருக்கிற நேரு சர்க்கார் நம்முடைய இனமாக இருந்தால் – நம்முடைய இரத்தமாக இருந்தால் இலங்கையில் நடக்கும் கொடுமைகளுக்கு வருந்துவார்கள்.

உணர்ச்சி அற்ற தமிழர்கள்

“திராவிட நாட திராவிடருக்கே‘ என்று ஆனால் தமிழர்களுக்கு ஒரு நாடு இருந்தால் வெளிநாட்டில் தமிழர்களுக்கு எந்தத் தொல்லையும் வராது.

தமிழர்களை அங்குக் ‘கேலிப் பொருளாகக்‘ கருதுகிறார்கள். உப்புப் போட்டுச் சோறு தின்றாலும் ‘உணர்ச்சி அற்றவர்கள்‘ என்று கருதுகின்றார்கள்.

வெறும் ஓட்டுப் பிச்சைக்காகத் தி.மு.கழகம் பணியாற்றவில்லை என்பதை அனைவரும் உணரவேண்டும்.

எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி கடையாணி இல்லாத வண்டிபோல. எதிர்க்கட்சி இல்லாவிட்டால் எங்களுக்கோ, கம்யூனிஸ்டுகளுக்கோ நஷ்டமில்லை. வரி போட்டால் கக்கன் தடுப்பாரா? தொல்லைகள் தந்தால் பக்தவத்சலம் தடுப்பாரா? எதிர்க்கட்சி இருந்தால்தான் ஏன் என்று கேட்கும்.

இது என்ன, கட்டபொம்மன் காலமா?

இப்போது போட்டுள்ள வரிகளையெல்லாம் கட்ட முடியாது என்று நீங்கள் சொல்ல முடியுமா? இது என்ன கட்டபொம்மன் காலமா? வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கேன் வரி என்று கேட்க. நீங்கள் அவர் களுக்கு ஓட்டளித்தால் அவர்கள் போடுகின்ற வரியைக் கட்டுவதற்கு ஐந்தாண்டுகளுக்குத் தயாராக இருக்க வேண்டும்.

உங்களுக்கு வரி போடத்தான் வேண்டுமென்றால் காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள். அழுகின்ற குழந்தை ஏன் அழுகிறது? பால் இல்லாமல் அழுகிறதா, நோயால் அழுகிறதா என்று கவனிக்கின்ற மருத்துவச்சி வேண்டுமென்றால் எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்.

மருந்துக்கு வரி போட்டாகிவிட்டது, மருந்து சீசாவிற்கு வரி போட்டாகி விட்டது. அதில் ஒட்டியுள்ள லேபிலுக்கு வரி போட்டாகி விட்டது. கார்க்குக்கு மட்டும் போடவில்லை. கார்க்குக்கும் வரி போட வேண்டுமென்றால் காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள்.

சைக்கிள் பெடலுக்கு வரி போட்டாகிவிட்டது. ‘ரிம்‘முக்கு வரி போட்டாகிவிட்டது. ஸ்போக்குக்கும் வரி போடவேண்டுமென்றால் காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள்.

வீட்டுக்கு வரி போட்டாகிவிட்டது. இனி வீட்டிலே உள்ள ஓட்டை எண்ணி அதற்கும் வரி போட வேண்டும் என்றால் காங்கிரசுக்கு ஓட்டளியுங்கள்.

நீங்கள் பெற்ற பலன் என்ன?

இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களிலே நீங்கள் பெற்ற பலன் என்ன? சிந்திரி எங்கே? சித்தரஞ்சன் எங்கே? பக்ரா நங்கல் எங்கே? இவ்வளவும் இங்கேயா இருக்கின்றன?

ஐந்தாண்டுத் திட்டம் எத்தனைக் குடிசை வீடுகளை ஓட்டு வீடுகளாக்கியது? எத்தனை ஓட்டு வீ்டுகளை மாடி வீடாகியது? எத்தனை இலட்சம் மக்கள் வேலை வாய்ப்பினைப் பெற்றார்கள்? எந்தெந்த வரி நீக்கப்பட்டது? என்ன இலாபம் இவர்கள் ஆட்சியாலே?

1947ஆம் ஆண்டில் வெள்ளையன் வெளியேறியபோது இங்கு ரூ.1400 கோடி மீதம் வைத்துவிட்டுத்தான் சென்றான். ஆனால் இன்று இவர்கள் நிலைமை என்ன?

தகப்பனால் சாகும்போது ஆறு வேலி நிலத்தை வைத்து விட்டுத்தான் போனான். தகப்பனார் செத்து 6 மாதத்திற்குள் பிள்ளை விளையாடிவிட்டு அண்டை அய்லை எதிர்பார்ப்பது போல இவர்கள் கடன் வாங்குகிறார்கள்.

இவர்கள் வெளிநாட்டில் வாங்கியுள்ள கடன் – உள்நாட்டில் வாங்கியுள்ள கடன் ரூ.4000 கோடி. ரூ.1400 கோடி மீதம் வைத்து விட்டுப் போனான் வெள்ளைக்காரன் – கொள்ளைக்காரன். ஆனால் இன்று நாம் 4000 கோடி கடனுடன் இருக்கிறோம்.

தென்னாட்டை வஞ்சிக்கிறார்கள்

தஞ்சை மாவட்டத்தில் கொஞ்சம் மைனர் விளையாட்டு விளையாடுகின்ற மிராசுதாரர்கள் செஞ்சியிலே இருக்கிற செட்டியாரிடத்தில் ரூ.5000 கேட்க அவர் 10 ஆயிரம் 15 ஆயிரத்திற்கப் பத்திரம் எழுதி வாங்கி் ககொண்டு கொடுப்பது போலத்தான் இவர்கள் கடன் வாங்குகிறார்கள்.

இவர்கள் வாங்குகிற கடன் வடநாட்டை வாழ்விக்க என்றால் நமக்கு என்ன பிரயோசனம்? அவர்கள் வாங்கியுள்ள கடனை அவர்களுடன் நாமும் சேர்ந்து அடைத்தாக வேண்டும்.

இப்படி வாங்குகிற கடன்களிலும் தென்னாட்டை வஞ்சிக்கிறார்கள். ஐந்தாண்டுத் திட்டங்களிலெல்லாம் வஞ்சிக்கிறார்கள். இந்த நிலைமை மாற்றியமைக்கப்பட திராவிட நாடு திராவிடருக்கே ஆகவேண்டும்“.

(நம்நாடு - 21.4.61)