அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


அறப்போரில் ஈடுபட தி.மு.க. தயங்காது!

ஆட்சியாளருக்கு அண்ணா எச்சரிக்கை

ஆட்சியிலிருப்பவர்கள் எண்ணிக்கொண்டிருப்பதெல்லாம் நமது கழகத்திலுள்ள குறிப்பிட்ட 10 பேர்களைப் பிடித்துச் சிறையில் அடைத்துவிட்டால் நமது பிரச்சாரம் தடைப்பட்டுவிடும். அப்பொழுது திறந்த வீட்டில் நுழையும் திருடனைப்போல் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்பதுதான். இப்படி அவர்கள் செய்தால் “அண்ணாதுரைக்கு ஆறுவருடம் சிறை. இப்பொழுது அலிபுரம் சிறையில் இருக்கிறார்“ என்று சொல்லும் நாளை இந்தத் துரைத்தனம் உண்டாக்கினால் அன்றைக்க மறுநாளே இங்கேயிருக்கிற மார்வாடிகள், குஜராத்திகள் எல்லாம் பம்பாய்க்கும் பிற மாநிலங்களுக்கும் இரயில் ஏற வேண்டியதாக இருக்கும் என்பதை இந்தத் துரைத்தனத்திற்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலக நாடுகள் சிலவற்றில் இப்பொழுது பயங்கரமான சம்பவஙக்ள் நடைபெற்றுவருகின்றன. மெண்டரிஸ் என்பவர் துருக்கி பார்லிமெண்டில் மெஜாரிட்டி கட்சியைச் சேர்ந்த பிரதமர். இன்று அவரின் நிலை என்ன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். நான் இதைச் சொல்லுவதற்குக் காரணம் இங்கு இருப்பவர்கள் “நாங்கள் மெஜாரிட்டி“ என்று பேசுகிறார்கள். எதிர்க்கட்சியை அலட்சியப்படுத்திவிட்டு எதனையும் செய்கிறார்கள். இந்தப் போக்கு நீடிக்காது என்பதைத் துரைத்தனத்திற்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அண்ணா சற்று ஒதுங்கியிருங்கள்

இந்த மாநிலச் சர்க்காரும், மத்தியச் சர்க்காரும் நம்மைத் துருக்கி நாட்டைப்போல – தென்கொரியா நாட்டைப் போல நடத்துகின்றன. அந்தச் சர்க்காருக்கு ஏற்பட்ட கதியே இந்தச் சர்க்காருக்கும் ஏற்பட வேண்டும் என்பதினாலே என்னவோ நம்மை வீணான வம்புக்கு இழுக்கிறார்கள். இதனால்தான் தொடர்ந்து மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களிலும் நமக்குத் தீங்கிழைத்துள்ளார்கள். இதனைக் கண்டு நமது தோழர்கள் மிகவும் ஆத்திரப்படுகிறார்கள். “அண்ணா கொஞ்சம் அனுமதி கொடுங்கள்“ என்கிறார்கள். அவர்களையெல்லாம் இப்பொழுது நான் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறேன். கட்சியிலே நான்தான் மிகுந்த பலவீனன் – கோழை ஆகையால்தான் போராட்டத்தைத் தள்ளிவைத்து மக்கள் சக்தியைத் திரட்டும் பணியிலே இருக்கிறேன்.

ஆனால் எனக்குப் பின்னால் நமது தோழர்கள் போராட்டம் துவங்கினால் இப்பொழுதே “அண்ணா நீங்கள் சற்று ஒதுங்கியிருங்கள்‘ நாங்கள் திராவிடத்தைப் பிரித்து, அமைத்து, உங்களை அழைத்துக் காட்டுகிறோம்“ என்று சொல்லும் துடிப்பான இளைஞர்கள் நடத்தும் போராட்டத்தில் கோட்டை இருக்காது. தபால்-தந்தி அலுவல்கள் நடக்காது. இரயில்கள் ஓடாது. ஆகவே என்னைப் போன்றவர்கள் வழிகாட்டிகளாக இருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் திராவிட நாட்டுப் பிரச்சினை பற்றிப் பேச நேரு ஒருப்படவேண்டுமென்று நான் இப்பொழுது அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். நேரு இங்கே வர வேண்டாம். அங்கேயே தம்பி சம்பத் இருக்கிறான். அவனைக் கேட்கட்டும். அவன் இலக்கிய வரலாற்று ஆதாரங்களுடன் நாட்டுப் பிரிவினைக்கு விளக்கம் சொல்லுவான்.

சட்டத்திற்கு உட்பட்டுச் சமரசம் பேச...

ஆகவே சட்டத்திற்கு உட்பட்டுச் சமரசம் பேசுவதற்கு இந்திய அரசை மாநில அரசு வற்புறுத்த வேண்டுமென்று தெரிவித்துக் கொள்கிறேன். இப்படி இல்லாமல் நாங்கள் அறப்போராட்டத்தில் ஈடுபடத்தான் வேண்டுமென்றால் அதற்கும் திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இருக்கிறது என்பதை ஆட்சியாளருக்குப் பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இதை மனதில் கொள்ளாமல், எங்களைப் பிடித்துச் சிறையிலடைத்து விட்டால் பின்னால் இருப்பவர்கள் – நாங்களும் நீஙக்ளும் பார்த்து ஆச்சரியப்படும் அளவில் எனது தம்பிமார்கள் செயலாற்றுவார்களே, அதற்கான பயிற்சிதான் இந்த கூட்டமும், மற்ற கூட்டங்களும்.

நாம் வாழ்ந்த இனத்தவர். பிற நாடுகளுக்குச் சென்று வாணிபம் செய்தவர்கள். தங்கமும், இரும்பும் நமது நாட்டில் ஏராளம் உண்டு. இத்தனை வளங்களையும் பெற்றிருக்கும் நமது நாடு தனி நாடாக இயங்க அதற்காக உழைக்கக் கழகத் தோழர்கள் அனைவரும் முன்வருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அண்ணா அவர்கள் சென்னை இராயபுரம் வாலிபர் முன்னேற்ற மன்ற 14ஆவது ஆண்டு விழாப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்கள், அவரின் உரையின் சுருக்கம் இங்குத் தரப்படுகிறது.

கல்லெறிந்தால் கலங்கிவிடுவோமா?

இந்த வட்டத்திற்கும் எனக்கும் பல ஆண்டுகளாகத் தொடர்பு உண்டு. நாம் முதன் முதல் கழகம் துவக்கிய நேரத்தில் பனைமரத் தொட்டியிலே அல்லது இந்தப் பகுதியிலோ இரவு 8 மணிக்கு மேல் நடமாடுவதற்குக் கூட சிலர் அஞ்சுவார்கள். அப்படிப்பட்ட இருண்ட சூழ்நிலையில் இந்தப் பகுதி இருந்தது அப்பொழுது நானும் நண்பர் ஜேசுதான், சிவசங்கரன் போன்றவர்கள் மட்டுமே இப்பகுதியில் நல்லபடி பணிகளை ஆற்றுவதற்குப் பயிற்சி பெற்றிருந்தோம். அப்படிப்பட்ட இந்த வட்டத்தில் கழகத்திற்கு இன்று பல கிளைகளும், அதற்கு உறுதுணையாகச் சார்பு மன்றங்களும் பல இடங்களில் வளர்ந்துகொண்டு வருவதைப் பார்த்து நான் மெத்த மகிழ்ச்சியடைகிறேன்.

இந்தக் கூட்டத்தில் எங்கோ நீண்ட தொலைவிலிருந்து கொண்டு யாரோ ஒருவர் தன்னுடைய கை பலமுள்ள அளவில் ஒரு கல்லை வீசியெறிந்து விடுவதால் மட்டுமே நாம் மிரண்டுவிடுவோம் என்று கருதினால் அவர்கள் இன்னும் நம்மைத் தெரிந்து கொள்ளவில்லை யென்றுதான் அர்த்தம். இந்தக் கல்லை எறிந்தவர் எங்காவது ஒரு குட்டிச்சுவரில் உட்கார்ந்திருப்பார். அந்தச் சுவரிலிருந்து சிறுகல் உடைந்து விழுந்திருக்கும். உடனே அவர் ஆத்திரப்பட்டு அந்தக் கல்லை எடுத்து “இவ்வளவு பேர் கூடியிருக்கிற கூட்டத்தில் நீயும் போய் சேர்“ என்றெண்ணித்தான் அதனை வீசியிருப்பார் என்று நான் கருதுகிறேன்.

இந்த அளவு வளருவோம் என்று எண்ணினோமா?

இதைப் போன்ற காரியங்களை மாற்றார்கள் சேர்வதைப்பார்த்து நாம் கைகொட்டிச் சிரிக்கவேண்டுமே தவிரக் கலங்கத் தேவையில்லை. திராவிட முன்னேற்றக் கழகம் இந்த 10 ஆண்டுகளில் உலகத்தில் எந்தக் கட்சியும் அடையாத வளர்ச்சியை இவ்வளவு குறுகிய காலத்தில் உலகத்தில் வேறு ஒரு அரசியல் கட்சி அடைந்திருக்கிறதா என்று நான் உலக அரசியல் கட்சிகளின் வரலாற்றைத் துரவித்துருவிப் பார்த்தபோதும் கிடைகக்வில்லை. நாம் கழகம் துவக்கிய நேரத்தில் இந்த அளவுக்கு வளருவோம் என்று யாரும் எண்ணியதில்லை.

அன்று வெட்டவெளியில் கொட்டும் மழையில் கூட்டம் போட்டவர்கள் சட்டசபையில் இடம் பெறுவார்கள் என்று யார் எண்ணினார்கள்?

சென்னை மாநகராட்சி மன்றத்தில் பெரிய சீமான்கள்தான் இருக்கமுடியும் என்ற நிலைமாறி இன்றையதினம் நமது தோழர்கள் 45 பேர் அங்கு வந்து மேயர் பொறுப்பையும், இரண்டாவது முறையாக ஏற்று நடத்தும் வாய்ப்பையும் பெற்றிருக்கிறோம்.

காமராசர் வாழ்த்தவா செய்வார்?

வெளிநாட்டுத் தலைவர்கள் இங்கு வந்தால் நமது மேயர் மிகச் சாதாரணமானவர், சின்ன வயதுள்ள இளைஞர் என்பதைப் பார்க்கிறார்கள். அவரோடு பேசும்போத நீங்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்? என்று கேட்கிறார்கள். நமது மேயர் நான் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லும் காட்சியை அமைச்சர் சுப்பிரமணியமும், காமராசரும் பார்த்து மகிழவா செய்வார்கள்?

தனக்காகப் பார்த்த பெண்ணை அடுத்த வீட்டுக்காரன் திருமணம் செய்து கொள்கிறான் என்றால் மணமக்களை அவன் வாழ்த்தவா செய்வான்?

ஐயோ பாவிகள் வந்துவிட்டார்களே என்று அவர்கள் ஆத்திரப்படுகிறார்கள். இனி இவர்கள் இதுபோன்ற மன்றங்களுக்கு வருவதை எப்பாடுபட்டாகிலும் பல கோடி ரூபாய் செலவிட்டாகிலும் தடுத்துவிட வேண்டும் என்கிற பெருமுயற்சியில் இப்பொழுது ஈடுபட்டிருக்கிறார்கள். இதனால் நம்மை எந்தெந்த வகையில் குறை சொல்லவேண்டுமெனக் கருதுகிறார்களோ, அம்மாதிரியெல்லாம் பேசிக் கொண்டுதான் வருகிறார்கள். இப்பொழுது காமராசர் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்கிறார். அவர் அங்கே பேசியதை யெல்லாம் நீங்கள் பத்திரிகையில் பார்த்திருப்பீர்கள். இந்தத் தி.மு.க. கழகத்தினர் அரசயல் தெரியாத அப்பாவிகள் கம்யூனிஸ்டுகளுடன் கூட்டு சேருகிறார்கள். ஆந்திராவும், கேரளமும் பிரிந்துவிட்ட பிறகு திராவிடநாடு ஏது? திராவிட நாட்டுப் பிரச்சினையைப் பெரியாரே கைவிட்டுவிட்டார் என்றெல்லாம் பேசியிருக்கிறார். இப்படிப்பட்ட அரசியல் பேச்சுக்களைக் காமராசர் பேசிவிட்டதால் அவருக்கு நான் சில அரசியல் விளக்கங்களை விளக்கிச் சொல்ல விரும்புகிறேன். இதற்குப் பெரிய அரசியல் படிக்க வேண்டியதில்லை, நம்முடைய கழகத்தின் சட்டதிட்டப் புத்தகத்தை வாங்கிப் படித்துப் பார்த்தால் அவர் கேட்டிருக்கும் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும். அவருக்கு அது முடியாது என்றால் நம்முடைய நாவல்ர் கூட்டத்தை ஒரு நாளைக்குக் கேட்டால் போதும். திராவிட நாட்டுப் பிரச்சனை புரிந்துவிடும்.

போராட்டத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம்!

இப்பொழுது நமது கழகம் பிரச்சாரத்தைப் பொறுத்த வரையில் அதிக அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. அதைப் போலவே போராட்டங்களில் ஈடுபட்டாலும், நமக்கு அதில் வலிவு இருக்கிறது என்பதைக் காட்டியிருக்கிறோம்.

இதனை மாற்றார்கள் அறிய வேண்டுமானால் போராட்டக் காலத்தில் தூத்துக்குடியில் கால் இழந்த தமிழ் ஆசிரியரைப் பார்க்கட்டும். நெல்லிக்குப்பம் மஜீத், சென்னைத் தோழர் பாண்டியன், திருச்சி செபஸ்டியன் இவர்கள் சிந்திய இரத்தத்தையும் பார்க்கட்டும். நமது தலையில் சிறுகல் பட்டு நாம் சிந்தும் இரத்தம் அவர்கள் சிந்திய இரத்தத்திற்கு இணை ஆகாது.

“அண்ணா, அவர்கள் கை இழந்தார்கள், நாங்கள் உயிரையில் கொடுக்கத் தயாராக இருக்கின்றோம்“ என்று கூறும் வாலிபர்கள் இலட்சக்கணக்கில் இருக்கிறார்கள். மிகச் சாதாரணமான நாம் போராட்டத்தில் நிச்சயம் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.

ஆனால் காமராசருக்கு இருக்கின்ற நம்பிக்கை என்னவென்றால் இவர்கள் கூட்டம் போடுவார்கள். இரத்தம் கொதிக்கப் பேசுவார்கள். போராட்டத்தில் உயிர் கொடுக்கத் துணிந்த வாலிபர்கள் நிறைய இருக்கிறார்கள். ஆனால் ஓட்டு வாங்குகிற எங்களுக்குத்தான் தெரியும் என்கிறார். அவர் தஞ்சையில் சுற்றுப்பயணம் செய்கிறார். அவரோடு பக்கத்தில் இருப்பவர்கள் யார்? கபிஸ்தலம் மூப்பனார், குன்னியூர் அய்யர், வடபாதிமங்கலம் போன்றவர்கள். இந்தத் துணிவினால்தான் அவர் இந்தப் பிச்சைக்காரர்களால் என்ன செய்ய முடியும்? என்கிறார். அவர் எண்ணம் அத்தனையும் தவறு என்று நான் அலட்சியப்படுத்தவில்லை. ஆனால் மக்கள் இதைப் புரிந்து கொண்டு அடுத்த தேர்தலில் நம் பக்கம் வருவார்களானால் அப்பொழுது நிலைமை தெரியும் காமராசருக்கு.

தேர்தல் காலத்தில் உங்களுக்கு அவர்கள் தரும் எட்டணா அல்லது ஒரு ரூபாய் காசு எப்படிப்பட்டது என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

சே! அந்தக் காசும் ஒரு காசா?

குழந்தையுடன் திருவிழா காணச் செல்லுகிறீர்கள். குழந்தையின் கழுத்தில் தங்கச் சங்கிலி போடப்பட்டிருக்கிறது. அதை யாரோ திருடன் ஒருவன் கத்தரித்துக் கொண்டு போய்விடுகிறான். உடனே போலிசில் புகார் செய்கிறீர்கள்? போலீசார் உனக்கேது தங்கச் செயின்? என்று கேட்கிறார். “ஐயா நாங்கள் வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி குழந்தைக்குச் செயின் செய்து போட்டோம் என்கிறீர்கள். சரி என்று அவர்கள் வழக்கு பதிவு செய்துகொண்டு அனுப்பிவிடுகிறார்கள். நீங்களும் அலுத்துப்போய் ஓட்டலில் கொஞ்சம் தண்ணீராவது கேட்டுக் குடிப்போம் என்ற போகிறீர்கள். ஆனால் பக்கத்தில் இருக்கின்றவர் உங்களைப் பார்த்து என்ன களைத்திருக்கிறீர்களே, கொஞ்சம் காப்பி சாப்பிடுங்கள் என்கிறார். நீங்கள் மறுத்தும் அவர் விடுவதாகத் தெரியவில்லை. சரியென்று போண்டாவும் காப்பியும் அவர் காசில் சாப்பிட்டுவிட்டு வருகிறிர்கள். அந்த நேரத்தில் போலீசார் அவரைப் பிடித்து நிறுத்தி அவன்தான் சங்கிலியைத் திருடியவன் என்று நிரூபிக்கிறார்கள். அப்பொழுது நீங்கள் முதலில் அவன்மேல் அனுதாபம் காட்டுவீர்கள். பிறகு அவன்தான் திருடியவன், அந்தக் காசில்தான் நமக்கு காப்பி வாங்கி் கொடுத்தான் என்பதைத் தெரிந்து கொண்டபின் அவனைச் சும்மாவா விடுவீர்கள்.

அதைப் போலத்தான் உங்களிடம் கொள்ளையடித்த காசுகளையே தேர்தலில் உங்களுக்கு எட்டணா, ஒரு ரூபாய் என்று கொடுக்கிறார்கள். அதைத்தான் முன்னேற்றக்கழகம் போலீஸ்காரன் நிலையிருந்து “அவன் திருடன்“ என்பதை உங்களுக்குக் காட்டுகிறது. இதை நீங்கள் நன்றாக மனதில் எண்ணிப் பார்த்தால் சே, அந்தக் காசும் ஒரு காசா, என்ற முடிவுக்கு வருவீர்கள்.

(நம்நாடு - 3-6-60)